26 Mar 2020

ஆளாளுக்குப் பொண்ண தேடுன கதை!

செய்யு - 399        

            ரொம்ப நாளாயும் ஈஸ்வரி பொண்ணுகிட்டேயிருந்து சேதி வரலையேன்னு வாழ்க்கைப்பட்டு பெரிம்மா நேர்ல போயி விசாரிச்சா, "ஒன்னய பெத்தத் தாய்ன்னு கூட பாக்க மாட்டேம்! ன்னா வேலயப் பாக்க வுட்டுருக்குற நீயி அசிங்கம்பிடிச்ச வேல. இந்த மாதிரிக்கிச் சேதின்னு தெரிஞ்ச ஒடனே ன்னா பேச்சு ஆவுது தெரியுமா?"ன்னு அழுகாச்சிய வெச்சிருக்கு அது.
            "ன்னாடி யக்காகாரிக்கிட்டெ சொன்னா, அவ்வே ஒரு தாலியறுத்தவள காட்டுறா? சரி தங்காச்சி நீயாச்சியும் நல்ல வழியக் காட்டுவேன்னா நீயி இப்பிடி சிலுத்துக்கிறே? நாம்ம போயி நாலு எடத்துல விஜாரிக்கலாம்ன்னா தாலியறுத்து கம்முனாட்டி நாம்ம! மங்கலம் அமங்கலம் பாப்பாங்கல்ல! என்னவோ போங்க! ஒரு நல்ல கதிக்கு வந்துப்புட்டோம்ன்னு நீஞ்ஞ நிக்குற நெல இருக்கே! தாங்கல!" அப்பிடின்னிருக்கு பெரிம்மா.
            ஈஸ்வரிக்கு வந்துச்சே கோவம். அதோட நெலமை புரியாம வாழ்க்கைப்பட்டு பெரிம்மா பேசிடுச்சு. அதுக்குப் பொண்ணு பாக்க எறங்குன நெலமை ரோம்ப மோசமா இருந்துச்சு. இதாங் வெசயம்னு சொன்னப்பவே பல பேரு வேண்டாமுன்னு தடுத்துருக்காங்க. என்னத்தெ இருந்தாலும் அம்மாக்காரி ஆசைப்படறா, அக்காக்காரி வேற போனைப் போட்டுச் சொல்லிப்புட்டா, கொஞ்சம் மெனக்கெட்டுத்தாம் பாப்பேம்ன்னு ஒரு அசட்டுத் துணிச்சல்ல எல்லாரோட சொல்வாக்கையும் மீறிக் காரியத்துல எறங்குனுச்சு ஈஸ்வரி. சங்கரி இந்த விசயத்துல விசாரிச்சு வெச்சுக்கிட்ட சங்கதிகள வெச்சு தூண்டில சரியா தூக்கிப் போட்டதுன்னா, ஈஸ்வரி இந்த விசயத்துல தூண்டில போட்டப் பிற்பாடுதாம் விசாரிச்சுக்கிட்டு எறங்குனுச்சு. அதாச்சி அங்கங்க இதாங் சங்கதின்னு சொல்லிச் சொல்லி விசாரிக்கிறது. அப்பிடி விசாரிக்கிறப்பவே ஈஸ்வரிக்கு சகுனம் சரியில்ல. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வெதமாத்தாம் மொகத்தத் திருப்பிக்கிட்டாப்புல பேசுனாங்க. அப்பவே ஈஸ்வரி இதென்னடா ரோதனையாப் போச்சுன்னு நழுவிருக்கலாம். அந்த எடத்துல சுதாரிக்காம விட்டுச்சு. அதால அது கேட்ட வார்த்தைக இருக்கே, அதெ காதால கேக்க முடியாத அளவுக்கு நாராசமான வார்த்தைகள கேக்க வேண்டியதாப் போச்சுது.
            நல்லது செய்யப் போறதா நெனைச்சி அது பண்ணக் காரியத்தாலே அது கேட்ட வார்த்தைக இருக்கே! அத அப்பிடியே சொன்னத்தாம் புரியும். "ரெண்டாம் தாரம்தான்னே! வெளியில பொண்ணப் பாத்து கட்டி வெச்சா அவ்வே ரண்டாவதா இருப்பாளோ? மாட்டாளோ? நீயே கட்டிக்கிட்டேன்னா ஒரு பெரச்சனையும் இல்ல பாரு! மாமங்கார்ரேம்தான்னே நீயி தோதா ஏத்தாப்புல நடந்துக்கிடலாம் பாரு! ஒமக்கும் ஒம் புருஷங்கார்ரேம் வருஷத்துல பல மாசம் வெளிநாட்டுலத்தாம் இருக்காம். அது வரைக்கும் மாமங்காரனெ வெச்சுக்கோ. புருஷங்கார்ரேம் வந்தா அப்ப மட்டும் புருஷங்காரனெ வெச்சக்கோ! ஒங் குடும்பமும் நல்லாருக்கும். மாமங்கார்ரேம் குடும்பமும் நல்லாருக்கு. எடுபட்ட சிறுக்கி! எவ்வேகிட்டெ வந்து என்ன மாதிரிக்கிப் போண்ண பாக்கச் சொல்றே?"ன்னு சொல்லி சனங்க கெக்கலிக் கொட்டுனதுல மேக்கொண்டு வீயெம் மாமாவுக்காக அத்து பொண்ணப் பத்தி விசாரிக்கிறதே விட்டுப்புடுச்சு.
            இதெ ஈஸ்வரி சொல்ல கேட்ட பிற்பாடு, இதென்னடா தம்பிக்காரனுக்காக பொண்ண பாக்கச் சொல்லி நம்ம பொண்ணுகளோட மானம் மருவாதி காத்துல பறக்குதுன்னே வாழ்க்கைப்பட்டு பெரிம்மாவுக்குச் சங்கடமா போச்சு. அதுக்கு எடையில நாகப்பட்டணும் ஒரு வேலையா வந்ததா, சிக்கலுக்கு ஒரு வேலையா வந்ததா, கீவளூரு ஒரு வேலையா வந்ததா சொல்லி வீயெம் மாமா வாழ்க்கைப்பட்டுக்கு மட்டும் நாலைஞ்சுத் தடவைப் போயி பொண்ணு சம்மந்தமா எதாச்சிம் வரன் அகப்பட்டுதான்னு கேட்டு வந்துச்சு. வாழ்க்கைப்பட்டு பெரிப்பா செத்த காரியத்துக்குப் பெறவு அந்தப் பக்கம் எட்டிக் கூட பாக்காத வீயெம் மாமா தனக்கு ஒரு விசயம்ன்னதும் பத்து நாளைக்கு ஒரு தடவெ அக்காக்காரி வூடுக ஒவ்வொண்ணுக்கும் அலையா அலைஞ்சிச்சு.
            ரெண்டாவது தாரமா இருக்க சம்மதிக்கிறப் பொண்ணுங்களும், மொத தாரத்தோட கூடவே ரெண்டாவது தாரம்ன்னா ரொம்பவே யோசிக்க ஆரம்பிச்சாங்க. சிப்பூரு பெரிம்மாவுக்குத் தெரிஞ்ச வகையில அப்பிடி ஒரு பொண்ணு சிப்பூர்ல இருந்துச்சு, ரொம்ப நாளா கலியாணம் ஆவாம. ஜாதக தோஷம்ன்னு கலியாணம் ஆவாம இருந்தப் பொண்ண பிடிச்சி தம்பிக்காரனுக்குக் கட்டி வெச்சிப்புடலாம்னு பெரிம்மாவுக்கு ஒரு யோசனெ. ஜாதக தோஷமா இருக்குறதாலும், கலியாணம் தட்டிட்டுப் போறதாலும், செலவெ இல்லாம கலியாணம் ஆயிடுங்றதாலும் சம்மதிச்சிப்புடுவாங்கன்னு நெனைச்சிக்கிட்டு, அதுவா ஒரு மனக்கணக்கெ போட்டுக்கிட்டு சிப்பூரு பெரிம்மா அந்த வூட்டுல போயி கேட்டதுக்கு, தகப்பங்காரரு சொல்லிருக்காரு, "பொண்ணுக்குச் சம்மதம்ன்னா நமக்கும் சம்மதம்தான்னு!"
            அதெ கேட்டதும் சிப்பூரு பெரிம்மாவுக்கு வந்த காரியம் முடிஞ்சிட்டதா ஒரு நெனைப்பு. தகப்பங்கார்ரேம் சம்மதிச்ச பிற்பாடு பெறவென்ன சோலி இருக்கப் போவுதுன்னு, பொண்ணுக்கிட்டெ போயி கேட்டதுக்கு அவ்வே மொகத்தெ ஏழூரு கெட்டாப்புல வெச்சிக்கிட்டா. சிப்பூரு பெரிம்மாவுக்கு பொசுக்குன்னு போயிடுச்சு. நாக்கெ புடுங்குற மாதிரிக்கி ஒரு கேள்விய கேட்டுப்புடணும்னு நெனைச்சி அது, "இஞ்ஞ வூட்டுல கலியாணம் ஆவாம அப்பன் ஆயிக்குப் பாரமா கெடக்கறதுக்குக் கலியாணம் ஆயி ரண்டாம் தாராமா கெடக்கறதுக்குக் கசக்குதா?"ன்னு சிப்பூரு பெரிம்மா அந்தப் பொண்ணப் பாத்துக் கேட்டப்போ, அந்தப் பொண்ணு சொல்லிருக்கு, "கலியாணம் ஆவாம மொத்துப்பட்டு, நொம்பலப்பட்டு எஞ்ஞ அப்பம் வூட்டுல கெடக்குறது வேற. அதெ வுட்டுப்புட்டு எவனோ வந்து காசில்லாம கலியாணம் கட்டிக்கிறேங்றதுக்காக மொத தாரமா ஒரு சிறுக்கி இருக்கிறப்ப, ரெண்டாவது தாராம போயி சக்களத்திச் சண்டெ பிடிச்சிக்கிட்டுக் கெடக்கணும்னு நமக்கு ன்னா தலையெழுத்தா? அப்பிடி விதிப்பாடு இருந்தா ஒம்மட ஒறவு மொறையில பாத்து வெச்சி சின்னாபின்னாபட்டுப் போ! ஏம் நம்மட வூட்டுக்கு வந்து பெராணத்தெ எடுக்குறே?"ன்னு நேரடியாவே பொட்டுல அடிச்சாப்புல.

            சிப்பூரு பெரிம்மாவுக்கு ரொம்ப அவமானப் பட்டாப்புல ஆயிடுச்சு. சிப்பூரு பெரிம்மாவுக்கு மட்டுமில்லா, சிப்பூரு சின்னம்மா, தேன்காடு சித்தி, பாகூரு சித்தி வரைக்கும் அப்பிடித்தாம் மோசமான அனுபவமா இருந்திச்சி. ஒவ்வொரு கதையா எடுத்துச் சொன்னா காதை எந்தப் பக்கம் எப்பிடி திருப்பித் திருகி வெச்சிக்கிறதுன்னு ஒங்களுக்கு ரோதனையாப் போயிடும். பொண்ணு மாப்புள்ளையப் பாத்து முடிச்சி வுடுற தரகுக்காரங்களைப் பாத்துக் கேட்டதுக்கு, "ஏம்மா! நாம்ம நல்ல வெதமா தொழிலு பண்ணி நாலு காசியப் பாக்குறது பிடிக்கலையா? இந்த மாதிரிக்கி பொண்ணு சேத்து வுடுற ஆளுன்னு தெரிஞ்சா நாளைக்கி மின்ன பின்ன எவ்வேம் நம்மள தேடி வருவாம்? இப்போ சட்டமெல்லாம் ரொம்ப வகையா இருக்கு. தெர்யும்ல. கட்டிக்கிட்டவேம் மட்டுமில்ல, கொத்து வுட்ட நாமளும் போயி கம்பிய எண்ணிட்டுக் கெடக்க வேண்டியதுதாங். மொத பொண்டாட்டி உசுரோட இருக்குறப்ப ரண்டாவது ஒண்ணுத்த கலியாணம் பண்ணா கட்டுனவேம் கன்பார்ம்மா உள்ளப் போயி கம்பிய எண்ணிக்கிட்டுக் கெடக்க வேண்டியதுதாம். ஊரு ஒலகம் தெரியாம வந்து நிக்குறீங்களே! தம்பிக்கார்ரேம் பாசம் இருக்க வேண்டியதுதாங்க. அதுக்காக கல்ல கட்டிக்கிட்டு கெணத்துக்குல குதிக்கப் படாது!"ன்னு நறுக்குன்னு சொல்லிப்புட்டாங்க.
            வீயெம் மாமாவுக்கும் கட்டுனா கன்னிப் பொண்ணா பாத்துத்தாம் கட்டணும்னு ஒரு ஆசை. மொத பொண்டாட்டி இல்லாம இருந்தாலாவது அப்பிடி ஒரு ஆசைய நிறைவேத்தலாம். மொத பொண்டாட்டிய கூட வெச்சிக்கிட்டு, ரெண்டாவது பொண்டாட்டிய அப்பிடிக் கட்டுறதுன்னா அது எப்பிடி முடியும்? பல எடங்களுக்குப் போயி சுவத்துல அடிச்ச பந்து போல திரும்புறாப்புல ஆயிடுச்சு வீயெம் மாமாவோட நெலமையும். எங்கயோ, எப்பிடியோ ஒரு பொண்ண பாத்து முடிச்சா தேவலாம்னு நின்ன வீயெம் மாமாவுக்கும், கோகிலா மாமிக்கும் வாழ்க்கப்பட்டு பெரிம்மா மூலமா சங்கரி பாத்து வெச்சப் பொண்ண பத்தின சேதி தெரிஞ்சி, அந்தப் பொண்ண போயி பாத்தா என்னாங்ற யோசனை வந்துச்சு.
            வாழ்க்கைப்பட்டு பெரிம்மாகிட்டெ சங்கரி வூட்டோட விலாசத்த விசாரிச்சுக்கிட்டு வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் அங்கப் போயி எறங்குனுச்சுக்குங்க. சங்கரி கலியாணம் ஆயி நாலு புள்ளைக பெத்த பிற்பாடு இப்பத்தாம் வீயெம் மாமா சங்கரி வூட்டுக்குப் போவுது. கொழந்தைங்க நாலு பொறந்த சேதி தெரிஞ்சும் ஒண்ணுத்தக்குக் கூட பாக்கப் போகவும் இல்ல, அதெ பத்தி விசாரிக்கவும் இல்ல. சங்கரி அதையெல்லாம் பெரிசா நினைச்சுக்கல. இப்படியாவது நம்மள வந்து மாமங்கார்ரேம் பாக்குறதுக்கு அமைஞ்சதேன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டது.
            பொண்ணு பாத்து வெச்சிருக்குங்ற சங்கதியால வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் நெறைய பழங்க, இனிப்புக, காரங்க, நாலு புள்ளையோளுக்கும் சட்டை துணி மணிகன்னு கைநெறைய பொருட்களோடத்தாம் போயி எறங்குனுச்சுக்குங்க. யாருதாம் எத்தனெ பொருட்கள வாங்கித் தந்தாலும், தன்னோட தாய்வூட்டுப் பக்கத்துலேந்து ஒரு துரும்பு வந்தாலும் அது பொண்ணுங்களுக்குத் தர்ற சந்தோஷமே தனிதாம். அப்பிடி ஒரு சந்தோஷம் வந்திடுச்சு சங்கரிக்கு. இதெ பத்தி அது வூட்டுல இருந்த மாமியா, மாமனாரு, அக்கம் பக்கத்துச் சனங்கன்ன எல்லாத்தையும் கூப்புட்டுச் சொல்லிச் சந்தோஷப்பட்டுச்சு.
            வூடு தேடி வந்த மாமங்காரனுக்கும், மாமிக்காரிக்கும் காலாங்காத்தாலேயே இட்டிலி, அதுக்குத் தொட்டுக்குற மாதிரிக்கி கொத்தூஸூ, கெட்டியான தேங்கா சட்டினி, இனிப்புக்குக் கேசரி, வாழைக்காயில பஜ்ஜின்னு காலைச் சாப்பாட்ட முடிச்சு வெச்சு காலண்டர்ல நல்ல நேரமா பாத்து, அவுங்க ரெண்டு பேரையும் நாலு தெரு தள்ளி, பஸ் ஸ்டாப்புக்கு மின்னாடி இருக்கிற பொண்ணு வூட்டுக்கு அழைச்சுட்டுப் போனிச்சு சங்கரி.
            பொண்ணு வூடு பெரிய வசதியெல்லாம் யில்ல. வூடு ரயிலு ஓடு போட்ட சுமாரான வூடுதாம். மின்னாடி திண்ணை. நடுவுல ஒரு கூடம். அதெ தடுத்து அப்பாங்கரை. அம்புட்டுத்தாம் வூடு. வூட்ட ஒட்டுனாப்புல அஸ்பெஸ்டாஸூ சீட்டெ மேலப் போட்டு, அதையே சுத்திலும் தடுப்பா வெச்சு டாய்லெட்டு பாத்ரூம்ன்னு இருக்கு வூட. பொண்ணோட அப்பங்காரரு பேரு கிட்டான் ஆசாரி. பொண்ணோட பேரு லட்சுமி. பொண்ணோட அப்பங்காரருக்கு மூணு பொம்பளெ புள்ளைக. மூணையும் கட்டிக் கொடுத்துட்டாரு. மூணுல மொத ரெண்டும் நல்லாத்தாங் குடித்தனம் பண்ணுதுங்க. மூணாவது கடைக்குட்டித்தாம் இப்பிடி தாலியறுத்து, கையில ஒத்தப் புள்ளையோட வந்து அப்பங்காரரோட கெடக்குது. அத்தோட இந்த மூணாவது பொண்ணு பொறப்புலயே ஆயாள வுழுங்கிட்டப் பொண்ணுங்ற பேரு வேற. இந்தப் பொண்ணு பொறந்த பிற்பாடு அப்பங்காரருதாம் மூணு புள்ளையையும் தனியா நின்னு ஆளாக்கி வுட்டுருக்காரு. மூணையும் நல்ல எடத்துல கலியாணம் பண்ணிக் கொடுத்ததுல தன்னோட கடமையெல்லாம் முடிஞ்சிடுச்சு, நிம்மதியா கண்ணை மூடலாம்னு நெனைச்சப்பத்தாம் மூணாவது புள்ள தாலியறுத்துகிட்டு வந்து நின்னு, சாவலாம்னு நெனைச்சவர்ர நிம்மதியில்லாம சாவ வுடாமப் பண்ணிடுச்சு. பொண்ணுக்காக உசுரைக் கையில பிடிச்சிட்டு நிக்க வேண்டிய நெ‍லெ.
            சாவ வேண்டிய வயசுல இப்பிடி ஒரு சோதனெ வந்தா, அதெ எந்தத் தகப்பங்கார்ரேம் தாங்குவாம்? நிம்மதியா சாவவும் முடியாம, நிம்மதியில்லாம பொண்ண வெச்சுக்கிட்டுப் பொண்ண பாத்துக்கவும் முடியாம ரொம்ப அல்லாடிப் போயிட்டாரு கிட்டான் ஆச்சாரி. இந்த நெலையில பொண்ண எவன் தலையில கட்டி வைக்கிறதுன்னு நொந்து நூலா போயிட்டாரு மனுஷன். இருந்தாலும் பாத்தவங்ககிட்டேயெல்லாம் ரண்டாம் தாரமா இருந்தாலும் பரவாயில்ல ஒரு ஏற்பாட்டப் பண்ணி கலியாணத்த முடிச்சி வெச்சிட்டா நிம்மதியா கண்ண மூடிடலாம்னு பேசாம இருக்க மாட்டாரு. அப்பிடி ஒரு சாவுக் காரியத்துல அவரு பேசுறதெ கேட்டுத்தாம் அந்த ஞாபவம் வந்து சங்கரிக்கு வீயெம் மாமா வூட்டோட லட்சுமிப் பொண்ண இழுத்து வுடலாம்னு யோசனை உண்டாச்சு.
            கிட்டான் ஆச்சாரி நடந்தது எதையும் மறைக்கல. நடந்ததெ அத்தனையையும் புட்டுப் புட்டு வெச்சாரு. "ஆம்பளெ தொணையில்லாம் இந்த ஒலகத்துல ஒரு பொண்ணு எத்தனெ நாளு தனியா இருந்துட முடியும்னு சொல்லுங்க. அதாங் எவனாச்சி ஒருத்தனெ பாத்து கதையெ கட்டி வுட்டுப்புட்டா தேவலாம் ஆண்டவனேன்னு வேண்டாத நாளில்ல. யாரோ ஒருத்தேம் கையில பிடிச்சி வுட்டுப்புட்டா நல்லதோ கெட்டதோ அவ்வேம் பாத்துப்பாம் பாருங்க. எத்தனெ நாளைக்கு நாம்ம உசுரோட இருந்துப் பாத்துக்க முடியும் சொல்லுங்க!" அப்பிடின்னாரு கிட்டான் ஆச்சாரி.
            "அதெ பத்தி ஏம் மாமா கவலெப்படுறீங்க? அதுக்குத்தாம் நம்ம தாய்மாமனெ கூப்டாந்து வந்தேம். மாமாவுக்குப் புள்ளீயோ இல்லே. அதுக்குத்தாம் அதுக்குக் கலியாணம் கேக்குது. மொத தாரம் எங்க மாமி அப்பிடியே தங்கம். அதுக்கும் ரண்டாவதா ஒரு பொண்ண கொண்டாந்து வெச்சுக்க எந்த அட்டியுமில்லே. தன்னோட தங்காச்சிப் போல நெனைச்சிப் பாத்துக்கிடும். கட்டி வெச்சா ரண்டு பேருமா சேந்து பொண்ண செப்புச் செலையாட்டம் பாத்துக்குமுங்க. நீங்கத்தாம் நல்ல பதிலா சொல்லணும். இந்தச் சந்தர்ப்பத்த வுட்டுப்புட்டா பெறவு நல்ல சந்தர்ப்பம் அமையும்னுல்லாம் சொல்ல முடியா!" அப்பிடின்னு பேசி நிப்பாட்டுச்சு சங்கரி ஆம்பளையப் போல ஒரு நெலையா நின்னு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...