25 Mar 2020

தம்பிக்காரனுக்கு வக்காலத்து!

செய்யு - 398        

            கஷ்ட நஷ்டத்துல கெடந்ததால என்னவோ பேச்சி பெரிம்மாவோட மூத்தப் பொண்ணு சங்கரிக்கு பல விசயங்கள கையாளுறுதுல நெறைய நெளிவு சுளிவு தெரிஞ்சிருந்துச்சு. யார்ர எப்பிடி பேசி வளைக்கணும், யார்ட்ட எப்பிடி பேசுனா பிடியக் கொடுப்பாங்கற விசயம்லாம் அதுக்கு அத்துப்படியா இருந்துச்சு. வீயெம் மாமா வந்துட்டுப் போன மறுநாளே பேச்சி பெரிம்மா கிடராங்கொண்டான்ல கட்டிக் கொடுத்திருந்த சங்கரி வூட்டுக்குப் போயி சங்கதி இன்னதுன்னு சொன்னிச்சு. "பாவம்டி ஒந் தாய் மாமேம்! ஒரு நல்ல கதிய பண்ணி வுடணும்டி. கொழந்த இல்லாம கஷ்டப்படுறாம். நேத்தி வூட்டுக்கு வந்து கால்ல வுழுந்து கதறிட்டுப் போறாம். நமக்கு மனசே ஒரு மாரியா ஆயிடுச்சு. ராத்திரி பூரா தூக்கம் பிடிக்கல. அதாங் விடியக்காலம்பர இருப்பு கொள்ளாம மொத பஸ்ஸ பிடிச்சி ஒன்னயத் தேடி வர்றேம். அவ்வே கோகிலா ரண்டாம் தாரமா ஒண்ண கொண்டாந்து வெச்சுக்க சம்மதிச்சுப்புட்டா. ஒனக்குத் தெரிஞ்ச தோதுல பொருத்தப்படுறாப்புல பொண்ணு இருந்தா சொல்லேம்! அவ்வே ஈஸ்வரிக்கும் ஒரு போனப் போட்டு சங்கதி இன்னதுன்னு சொல்லி அவளையும் கொஞ்சம் மெனக்கெடச் சொல்லேம்!" அப்பிடினிச்சு.
            பகையாளியா இருந்தாலும் அவ்வேம் வூடு தேடி வந்து ஒண்ணுத்த கொடுங்கன்னு கால்ல வுழுந்து கேட்டுப்புட்டா மனசு எறங்கித்தாம் போயிடுது. அதுலயும் வீயெம் மாமா பேச்சிப் பெரிம்மாவுக்கு பகையாளியோ, எதிராளியோ இல்லையே! கூடப் பொறந்த தம்பி. எச்சிப்பாலு குடிச்சி வளந்தப் பய. தூக்கி வளத்தப் பய இல்லியா! ஏற்கனவே அதோட மனசு ரொம்ப எறக்கம். இதுல கால்ல வேற விழுந்தா? அப்பிடித்தாம் மனசு எறங்கிப் போயி தம்பிக்காக எதாச்சிம் பண்ணணும்னு பொண்ணு வூட்டுக்கு விடிஞ்சதும் விடியாதுமா கெளம்பிப் போயி எப்படியாச்சும் கதைய கட்டி வுட நெனைச்சிச்சுப் பேச்சி பெரிம்மா.
            சங்கரி ஒரு நிமிஷம் யோசனைய ஓட வுட்டுச்சு. "ரண்டாம் தாராமான்னா... பொண்ணும் அதுக்கு ஏத்தாப்புலத்தாம் கெடைக்கும். கொண்டார பொண்ணுக்கு மொத தாலியா கட்டணும்னு நெனைக்கலன்னாத்தாம் பாக்கலாம். ஏன்னா ரண்டாம் தாரம்ன்னா அவுங்கவுங்கக் குடும்பத்துல அக்கா தங்காச்சிகளா இருக்குறதுதாங் சம்மதிக்கும்ங்க. சின்ன மாமாவுக்கு அத்து மாதிரி தோதுல இல்லங்றப்போ வேற மாதிரித்தாம் பாக்க முடியும்!" அப்பிடின்னிச்சு சங்கரி.
            "ஒங் கலியாணத்தெ எப்டி செருமப்பட்டு முடிக்கப் போறேம்ன்னு நானிருந்து நெனைச்சக் காலம் போயி, இப்போ நீயி ன்னான்னா ஊருல இருக்குற நம்ம சாதி சனத்துக்குல்லாம் கலியாணத்தெ பண்ணி வைக்கிறீயேடி! அப்பிடி ஒண்ணுத்த பிடிச்சி ஒந் தாய்மாமம்தானே பிடிச்சிப் போடேம்!"ன்னிச்சு பேச்சி பெரிம்மா.
            "அதாங் சொல்றேம்! நீயி பஸ்ஸூ எறங்கி வந்தீயே ஸ்டாப்பிங்கு. அங்கேயிருந்து வந்து திரும்புறப்போ மொனையில குத்தலா ஒரு வூடு இருக்குல்ல. அந்த வூடு நம்ம வகையறாவச் சேந்த வூடுதாங். அங்ஙன ஒரு பொண்ணு இருக்கும்மா! ஆன்னா மாமா ஒத்துக்குமான்னு தெரியலியே! ஒத்துக்கிட்டா அதெ வேணும்ன்னா நாம்ம போயிப் பேசுனா முடிச்சிப்புடலாம்!" ன்னு சங்கரி சொன்னது.
            "அட்றா சக்கனானாம்! நம்மப் பொண்ணு நம்மள தாண்டில்லா இருக்குது. சொன்ன வேகத்துக்குப் பொண்ண காட்டி வுடுறீயேடி! பெறவென்ன ஒம் மாமனயும் மாமியையும் வந்துப் பாக்கச் சொல்லுவேம். மேக்கொண்டு ஆவ வேண்டியதெ பண்ணிப்புட வேண்டியதுதாங்!" அப்பிடின்னுச்சு பேச்சி பெரிம்மா.
            "அங்கத்தாம் ஒரு சிக்கலு இருக்கும்மா!"ன்னிச்சு சங்கரி.
            "ன்னாடி கட்டி வைக்கலாம்னும் சொல்றே! சிக்கலு இருக்கும்ன்னு சொல்றே! எந் தம்பிய எடக்கு மொடக்கா மாட்டி விட்டுப்புடாதடி! பாவம்டி அவ்வேம்!" அப்பிடின்னிச்சு பேச்சி பெரிம்மா.
            "பாத்தியா! ஒந் தம்பின்னு வார்றப்போ நம்மள வுட்டுப்புட்டு ஒந் தம்பி பக்கம் நிக்குறே பாரு! அத்து நமக்கும் தாய்மாமேம்தாம். அப்பிடில்லாம் ஒரு எடத்துல கொண்டு போயி கோத்து வுட்டுப்புட மாட்டேம்! நெலமெ ன்னான்னு சொல்லிப்புடணும் இல்லியா! அதுக்காகச் சொல்றேம்! அதால வெசயத்தெ முழுசா கேட்டுக்கோ. பெறவு சொல்லு கோத்து வுடலாமா வாணாமான்னு?" அப்பிடின்னுச்சு சங்கரி.
            "அப்பிடி ன்னாடி பெரமாதமா ஊருல இல்லாத அதிசயமா என்னவோ பெரிய பீடிகையா போடுறீயே?"ன்னு கேட்டுச்சுப் பேச்சி பெரிம்மா.
            "இந்தாரும்மா! ந்நல்லா கேட்டுக்கோ. பொண்ணு தாலியறுத்த கேஸூ. ஒரு புள்ள இருக்காம். குடும்பம் கஷ்டப்படுற குடும்பம். இதெ வெச்சி சமாளிக்கிறது அப்பங்காரனுக்கு செருமமா இருக்கு. இத்த பிடிச்சி எங்காச்சித் தள்ளி வுட்டா தேவலாம்ன்னு நெனைக்கிறாங்க. தாலியறுத்தவ ஒத்த புள்ளையோட வேற இருக்காளா இவள எவ்வேம் அத்துவும் நம்ம வகையறாவுலயே கட்டி வைக்கிறதுன்னா எவ்வேம் கட்டிப்பாம்! அதாங் பெரச்சனையா இருக்கு. அந்தப் பொண்ணுன்னா நாளைக்கே முடிக்கலாம். இனுமே மேக்கொண்டு நீந்தாம் சொல்லணும்!" அப்பிடின்னு நிறுத்துச்சுப் பாருங்க சங்கரி மூச்சு வுடாம பேசி.

            பேச்சிப் பெரிம்மாவுக்கு உள்ளுக்குள்ள கோவம் வந்துப்புடுச்சு. "ன்னாடி ஒன்னய தேடி வந்தா பெரிய லப்சர்ரு பண்றே? வகையா ஒரு குடும்பத்துல வந்து குடித்தனம் பண்றோங்ற திமிருல்ல பேசுறீயா? எவளோ தாலியறுத்தவெ வந்து எந் தம்பியோட குடித்தனம் பண்ணணும்னு அவனுக்கு ன்னா தலையெழுத்தா? அத்துவும் புள்ளே வேற இருக்காங்றே! நாம்மளா வந்து கேட்டதுக்கு நக்கலு பண்றீயா ன்னான்னு தெரியலீயே! ஒங்கிட்டெ வந்து கேட்டேம் பாரு!"ன்னு சொடிஞ்சிப் போனாப்புல பேசுனுச்சு பேச்சி பெரிம்மா.
            "செகண்டஹேண்ட்லாம் அப்பிடி இப்பிடித்தாம்மா இருக்கும். சம்மதம்ன்னா வெச்சுக்கச் சொல்லு. யாரும் வந்து வாங்கிக்குங்க வாங்கிக்குங்கன்னுல்லாம் கட்டாயம் பண்ணல. விருப்பம் இருந்தா பண்ணிக்கச் சொல்லு. இல்லீயா வேற நல்ல பொண்ணா பாத்து அதையே கட்டிக்கச் சொல்லு. நாம்ம நமக்குத் தெரிஞ்சதத்தான சொல்ல முடியும். ஒந் தம்பிக்காக அளவெடுத்துப் போயி செஞ்சிட்ட வாரதுக்கு பொண்ணு ன்னா கடையில செஞ்சா விக்குது? பிடிச்சா பாக்க வேண்டியதுதாங். பிடிக்கலையா வேற எடத்தெ பாக்க வேண்டியதுதாங். நாமளா வந்து ஒங்கிட்டெ வந்து இப்பிடி ஒரு பொண்ணு இருக்கு. அதெ ஒந் தம்பிக்குக் கட்டி வையின்னு கால்ல வுழுந்தா கேட்டேம்? ந்நல்லா தளதளன்னு இருந்த நம்மளயே வாணாம்ன்னு சொன்னவம்தான்ன ஒந் தம்பி. பெறவு பேசுறே ஒந் தம்பிக்கு கச்சையக் கட்டிட்டு வந்து?" அப்பிடின்னு கேட்டிச்சி சங்கரி.
            "யோ யப்பாடி! ஒனக்கு வாயி ரொம்பத்தாம் வெச்சுப் போச்சுடி. வெளிநாட்டுக் காசில்லா வருது. வெச்சிப் போவாம ன்னா பண்ணும்? புருஷங்கார்ரேம் நீயி பேசுற பேச்சுக்கலாம் ஆடுறாம். மாமியா மாமனாரும் ஒன்னய தலையிலல்லா தூக்கி வெச்சிட்டு ஆடுறாங்க. இந்தப் பேச்சு பேசாம நீயி ன்னா பண்ணுவே? பாவம்டி எந் தம்பீ! வேற ந்நல்ல எடமா பாத்துச் சொல்லுடி நீயி ந்நல்லா இருப்பே! நம்மட வயித்துல வந்துப் பொறந்ததுக்கு பால்ல வாத்ததுப் போல இருக்கும்!" அப்பிடினிச்சு பேச்சி பெரிம்மா.
            "ந்தாரும்மா! நமக்குத் தெரிஞ்ச வகையிலத்தாம் பாத்துச் சொல்ல முடியும்! ஒந் தம்பீங்கறதுக்காக அமெரிக்காவுல, ஜப்பான்ல போயி பாத்துல்லாம் நம்மாள சொல்ல முடியாது. இதாங் நமக்குத் தெரிஞ்சிது. இஷ்டம்ன்னா சொல்லு முடிச்சி வுடறேம். இல்லன்னா அதது தோதுக்கு அததுகளே பாத்துக்கிடட்டும். எங்கிட்டெ ஒரு பண்டத்தெ கேக்குறீன்னா எங்கிட்டெ இருக்குறதததாம் கொடுக்க முடியும். அதெ வுட்டுப்புட்டுப் பக்கத்து வூட்டுல கடனா வாங்கியா கொடுக்க முடியும்? ஏத்தோ நமக்குத் தெரிஞ்சதெ சொல்றேம். அதுக்கு மேலன்ன விஜாரிச்சுத்தாம் சொல்லணும்." அப்பிடின்னுச்சு சங்கரி.
            "ஏம்டி நாம்ம சாம்புவனோடை ஈஸ்வரி வூட்டுக்குப் போயி சொல்லிட்டுப் போவவா? நீயி போன போட்டுச் சொல்றீயாடி?" அப்பிடின்னுச்சு இப்போ பேச்சிப் பெரிம்மா.
            "பாத்தியா கொழுப்பு ஒனக்கே? தம்பிக்காரன்ன ஒடனே ஊரு ஊரா அலைய நிக்குறே? நீயில்லாம் அடங்க மாட்டே. நாம்ம கஷ்டப்பட்டுட்டுக் கெடந்தக் காலத்துல யார்ரு வந்து பாத்தா? சுப்பு சித்தப்பா ஒரு ஆளுதாம் அப்பைக்கப்போ ஓடியாந்துட்டுக் கெடந்துச்சு. இவ்வேம்லாம் வந்தா பாத்தாம்? நம்மள தரித்திரம்ன்னு ஒதுக்குன்ன பயலுக்கு இன்னிக்கு நீயி பொண்ணு பாக்குறேன்னு அலைய நெனைக்குறே? ஒன்னய மாரி ரண்டு அக்கா இருந்தா அவ்வேம்லாம் எப்டி அடங்குவாம்? ஒழுங்கு மருவாதியா அன்னிக்கு நம்மளக் கட்டியிருந்தா ஒத்தப் புள்ள ன்னா? ஒம்போது புள்ளயப் பெத்துப் போட்டுட்டுக் கெடந்திருப்பேம். இன்னிக்கு நமக்கு ன்னா கொறைச்சலு? புள்ளீவோ நாலா போச்சுடுச்சுன்னு ஆஸ்பத்திரில சொன்னாங்கன்னு வேற வழியில்லாம குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டதுதாங். வருஷத்துக்கு ஒண்ணா நாலே வருஷத்துல நாலையும் பெத்துப் போடல. இத்தனைக்கும் வருஷத்துக்கு பாஞ்சு நாளு லீவுலத்தாம் வருவாக எம்மட வூட்டுக்காரு. ஊருலயே இருந்தார்ன்னு வெச்சுக்கோ மாசத்துக்கு ஒண்ண பெத்துப் போட்டிருப்பேம்!" அப்பிடின்னுச்சு அதுக்கு சங்கரி.
             "சின்ன வயசுடி அப்போ அவனுக்கு. ஊருல நாலு பேத்து, சொந்தத்துல நாலு பேத்துச் சொன்னதெ கேட்டுப்புட்டு ஏத்தோ சொல்லிருப்பாம். இப்போ எல்லாத்தையும் உணர்ந்துப்புட்டாம்டி. ரொம்ப மனசு சங்கடப்படுறாம். நேர்ல பாத்தீன்னா ஒனக்கே மனசு எறங்கிப்பூடும். பாவம்டி அவ்வேம். பாத்து எதாச்சிம் பண்ணி வுடணும்டி. ஒந் தாய்மாமேம்தானே. அவனுக்கு நம்மளயெல்லாம் வுட்டா யாருடி யிருக்கா? ஒரு கஷ்ட நஷ்ட காலத்துலத்தாம் ஒறவுங்றது. அதுக்கு உதவலன்னா பெறவு ன்னா ஒறவு சொல்லு?"அப்பிடின்னிச்சு பேச்சிப் பெரிம்மா.
            "அதத்தாம் நாமளும் சொல்றேம்! நாம்ம கஷ்ட நஷ்ட காலத்துல இருந்தப்போ அத்து வந்துப் பாத்துச்சான்னு கேக்குறேம்? அதுக்குப் பதிலையே காணுமே?"ன்னு கேட்டிச்சி சங்கரி.
            "ஆமாம்டி போடி! அவ்வேம்தான் வெளங்காதப் பயலா இருந்துட்டாம்ன்னா நீயி அதுக்கு மேல வெளங்காதவள இருப்பே போலருக்கு. அவந்தாம் கூறு கெட்டத்தனமா நடந்துக்கிட்டாம்ன்னா நாமளும் கூறுகெட்டத் தனமா நடந்துக்கணுமா சொல்லு! ஒங்கிட்ட பேச நமக்கு பிராணம் யில்லே. நாம்ம கெளம்புறேம்!" அப்பின்னு எழும்பிடுச்சு பேச்சிப் பெரிம்மா.
            "யம்மா! நில்லு. ரவ்வ சோத்தச் சாப்புடமா, ஒரு வாயி டீத்தண்ணிய கூட ஊத்திக்காம பொண்ணு வூட்டுக்கு வந்து திரும்பு. ஊருல நம்மள நல்ல மாரியா நாலு பேரு சொல்லுவாங்க பாத்துக்கோ. குந்துறீயா இல்லியா இப்போ! தம்பிக்கார்ரன்ன ஒடனே பொசுக்குன்னுல்ல கோவம் வருது. ஒன்னய மாரி ஆளுக இருக்குற வரைக்கும் ஒந் தம்பிய எவனும் அசைச்சிக்க முடியா. ஒனக்கு அவ்வேம் மாதிரி ஒரு தம்பி கெடைக்கலன்னா நீயும் இப்பிடில்லாம் அடங்கி ஒடுங்கி இருக்க மாட்டே. தலையில தூக்கி வெச்சிக்கிட்டு ஒரே ஆட்டமல்லா ஆடுவே! ஆட்டுக்கு வால ஆண்டவேம் அளந்து வெச்சாம், ஒனக்கு ஒந் தம்பிய இந்தக் கதியில வெச்சாம்! வந்ததிலேந்து நம்மள ஒரு வார்த்தெ விசாரிக்கிறீயா? யில்ல நம்மட வூட்டுக்காரர ஒரு வார்த்தெ விசாரிச்சியா? ஒம்மட பேரப் புள்ளைக எப்பிடி இருக்குன்னு ஒரு வார்த்தெ கேட்டீயா? எம்மட மாமியாரு மாமியாளப் பத்திக் கேட்டீயா? வந்தே! ஒந் தம்பியப் பத்திச் சொன்னே. இன்னிக்கே முகூர்த்தம் இருந்தா பொண்ணப் பாத்துக் கலியாணத்தெ முடின்னா... நாம்ம ன்னா பொண்ணு செஞ்சி வெச்சி முந்தானையில முடிஞ்சா வெச்சிருக்கேம்?" அப்பிடின்னிச்சு சங்கரி.
            "ச்சும்மா பெலாக்கணம் பாடாதடி! ஒந் நல்ல மனசுக்கு நீயி குடியும் குடித்தனமா நல்லாத்தாம் இருப்பே. அதெ பத்திக் கேக்கணும்னு அவசியம் யில்லே பாத்துக்கோ. அதெ வுடு. இப்போ சாம்புவானோடைக்குப் போனப் போட்டுச் சொல்லுதீயா? யில்ல நாம்ம கெளம்பி அஞ்ஞப் போவவா? அதெச் சொல்லு மொதல்ல?" அப்பிடின்னிச்சு பேச்சிப் பெரிம்மா கொஞ்சம் காட்டமா.
            "ஆம்மா ஒரு ரூவாயிக்குப் போன போட்டுச் சொல்றதுல கொறைஞ்சிப் போயிடப் போறோம் பாரு! ச்சும்மா குலுக்காதே! குந்து அப்பிடி! போனப் போட்டுச் சொல்றேம்! தம்பியாம் பெரிய தம்பி! ஊருல யில்லாத தம்பி! தானாடாட்டாலும் சதெ ஆடும்பாங்களே. அந்தக் கதையால்லா யிருக்கு! இதெ வெச்சு வெச்சே அந்தப் பயலுக ரண்டு பேரும் ந்நல்லா தலையில வெச்சி மெளவாயா அரைக்கிறானுங்க. பின்ன மண்டையில எரியுதே கொடையுதேன்னா எரியத்தாம் செய்யும், கொடையத்தாம் செய்யும்!" அப்பிடின்னு முணுமுணுத்துக்கிட்டே சாம்புவனோடையில இருக்குற தங்காச்சி ஈஸ்வரிக்குப் போன போட்டிச்சு சங்கரி.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...