24 Mar 2020

பெரியவங்க சின்னவங்கன்னு யாருமில்லே!

செய்யு - 397        

            வாழ்க்கைப்பட்டு பேச்சி பெரிம்மாவப் பத்தித்தாம் ஒங்களுக்குத் தெரியுமே! வைத்தி தாத்தாவுக்கு மூத்த பொண்ணு. வெங்குவுக்கு மட்டுமில்லாம வைத்தி தாத்தா வாரிசுக எல்லாத்துக்கு அதுதாம் மூத்தது. அதுக்கு மூணு பொண்ணு, ஒரு மவ்வேன். அது ரண்டு பொண்ணுகள கட்டி வெச்சி, மூணாவது பொண்ணுக்கு மாப்புள்ள தேடிக்கிட்டு இருந்துச்சு. பேச்சி பெரிம்மா வாழ்க்கையப் பொருத்த வரைக்கும் பெரிப்பா இருந்த வரைக்கும் அதோட வாழ்க்கை பெரிசா சோபிக்கல. அது வாழ்க்கப்பட்டு போனப்போ இருந்த செழிப்பை பெரிப்பா குடிச்சு குடிச்சு அழிச்ச கதையெல்லாம் புதுசா சொல்றதுக்கு ஒண்ணுமில்லே. பெரியப்பாவ போல நயமா பேச, நயமா நடந்துக்க ஆளு கெடையாது. ஆனா அது மட்டும் வாழ்க்கைக்குப் போததில்லே. அதால பெரிப்பா இருந்த காலம் வரைக்கும் பெரிம்மா மூணு பொண்ணு, ஒரு புள்ளைய வெச்சி செருமத்துக்கு மேல செருமமா பட்டுக்கிட்டு இருந்துச்சு. என்னிக்கு பெரிப்பா தூக்கை மாட்டிட்டுத் தொங்கிச் செத்துப் போனாரோ, அன்னிலேந்துதாம் பேச்சி பெரிம்மாவோட வாழ்க்கையில ஒரு விடிவு பொறந்துச்சு. சில குடும்பங்க அப்பிடித்தாம்! குடும்பத் தலைவனா இருக்குறவேம் போயித் தொலைஞ்சாத்தாம் குடும்பமே விடியுது.
            பெரிப்பா உசுரோட இருந்த காலம் வரைக்கும் பேச்சி பெரிம்மா ஒரு வய வேலைக்குப் போயி நாலு காசிய சம்பாதிக்க முடியாது. ஏம் வேலைக்குப் போனேன்னு பெரிப்பா வுட மாட்டாரு. அவருக்கு அம்மாம் பாசம் பெரிம்மா மேல. அதுக்கு ஏத்தப்படி அவராவது சம்பாதிச்சிப் போடணுமுல்ல. அதுவும் போட மாட்டாரு. வூட்டுல இருக்குற வித்துக் குடிக்குறதுல மன்னனா இருந்தாரே தவுர குடும்பத்துக்கு ஒரு நாளும் மனுஷனா கூட அவரு நடந்துக்கிட்டது இல்ல. ரொம்ப கஷ்டப்பட்டுத்தாம் காலத்தெ அவரு கூட தள்ளுனுச்சு பேச்சி பெரிம்மா. அதுக்குப் பெரிப்பாவ எதுத்துப் பேச வாயி வாராது. அவர தெய்வம் போல நெனைச்சாதல அவரு செய்யுறதுல்லாம் சரின்னு ஒண்ணுமே சொல்லாம எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு அவரு கூடவே காலத்த தள்ளிச்சு.
            பெரிப்பா செத்த பிற்பாடுதாம் பேச்சி பெரிம்மா வய வேலைகள எறங்கி செய்ய ஆரம்பிச்சி, வயலுகள ப்ளாட்டு பிடிக்க ஆரம்பிச்சு கொஞ்சம் முன்னேத்துக்கு வந்துச்சு. அது முன்னேத்துக்கு வர்ற காலம் வரைக்கும் சுப்பு வாத்தியாரு தன்னால முடிஞ்ச உதவியா இருக்கட்டும்னு ரண்டு மாசத்துக்கு ஒரு தடவே நெல்லவிச்சு அரிசிய கொண்டு போயி போட்டுட்டு வருவாரு. அதெ இப்பையும் ஞாபவத்துல வெச்சிக்கிட்டுச் சொல்லும் பேச்சி பெரிம்மா. அதெ சொல்றப்ப பெரிம்மா கண்ணுல தண்ணி வந்துப்புடும். "பசின்னு அப்போ நின்னப்போ வெங்கு வூட்டுக்காரரு கொண்டாந்த அரிசித்தாம் பசியாத்துச்சு. தொணைக்கு யாருமில்லன்னு நெனைச்சப்போ அவரு அரிசிய கொண்டாந்து போட்டுப்புட்டுப் பேசிட்டுப் போற ரண்டு வார்த்தைதாம் ஆறுதலா இருந்துச்சு. ஏத்தோ தெய்வம் போல அப்ப அவருதாம் இருந்தாரு! இன்னிக்கு நல்ல நெலையில நிக்குறேம்ன்னா அன்னிக்கு அவரு செஞ்சத மறக்க முடியாது! கடவுள்ன்னு ஒண்ணு இல்லாமலா போயிடும்! அத்து யாரையாவது அனுப்பி வெச்சி பாத்துக்காமலா போயிடும்!" அப்பிடின்னு அது சொல்றப்ப கேக்குற நமக்கும் கண்ணுல தண்ணி வந்துப்புடும்.
            அதோட மூத்தப் பொண்ணு சங்கரிய கிடாரங்கொண்டான் பக்கத்துல கட்டி வெச்சிச்சு. அதோட அத்தனை தங்காச்சிகளும், தம்பிகளுமா பணத்தையும், நகையையும் போட்டுத்தாம் மொத பொண்ணு சங்கரிய கரை சேத்தாங்க. அத்து சேந்த எடம் நல்ல எடமா அமைஞ்சிப் போயி, அத்து புகுந்த வூடு போன நேரம் நல்ல நேரமா அமைஞ்சிப் போயி, புருஷங்கார்ரேம் வெளிநாடு போயி இப்போ நல்லா இருக்கு. பேச்சிப் பெரிம்மாவுக்கு மொத பொண்ணை கரை சேக்குறதுக்கு எல்லாத்தோட தயவும் வேண்டியதா இருந்துச்சு. ஆனா ரண்டாவது பொண்ணு ஈஸ்வரிய கரை சேக்குறதுக்கு கொஞ்சம் கொஞ்சம் ஒத்தாசைத்தாம் அதுக்குத் தேவைபட்டுச்சு. அதுக்குள்ள சுதாரிச்சி நகை, நட்டுன்னு வாங்கிச் சேத்து சாம்புவனோடையில ஒரு மாப்பிள்ளைக்கிப் பாத்துக் கட்டி வெச்சுச்சு. அவரும் வெளிநாட்டுல வேலை பாக்குற மாப்புள்ளையா அமைஞ்சிப் போனதுல பொண்ணுங்கக்குன்னு மேக்கொண்டு எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாம போயிடுச்சு பேச்சிப் பெரிம்மாவுக்கு. பொண்ணுங்க பேச்சி பெரிம்மாவுக்குப் போட்டிப் போட்டுக்கிட்டு அது இதுன்னு செய்ய ஆரம்பிச்சிச்சுங்க.
            பேச்சி பெரிம்மாவோட ரெண்டு பொண்ணுங்களும் நல்ல வெதமா இப்போ குடும்பத்தெ நடத்திக்கிட்டு இருக்குதுங்க. மூணாவது பொண்ணுக்குக் கல்யாணத்தெ முடிக்கணும்னா ரண்டு போண்ணுங்களுமே ஆளுக்கு ஒரு கைய கொடுத்து தூக்கி வுட்டுற அளவுக்கு தோது ரண்டுக்கும் பெருந்தோதா அமையுறாப்புல காலம் ஆயிடுச்சு. அத்தோட பேச்சி பெரிம்மாவோட பையன் பிரபாகரனும் பெங்களூர்ல வேலைக்குப் போயி அவ்வேம் வேற சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாம். அவ்வேம் சம்பாதிக்க ஆரம்பிச்சப் பின்னாடி பெரிம்மாவ வேலைக்கு எங்கயும் போவக் கூடாதுன்னு சொல்லி, ஒண்ணுக்கு நாலு ப்ளாட்டா வயலப் பிடிச்சிக் கொடுத்து அதுல மட்டும் ஆளுகள வெச்சி வெவசாயத்தெ பாருன்னு சொல்லிட்டாம். ஆளு பெரிம்மா பாக்க இப்போ எலும்பும் தோலுமா இல்லாம நல்லாவே சதையெல்லாம் போட்டு மினுக்கா இருக்கு. கழுத்துலயும், காதுலயும் நகை நெட்டு வேற போட்டிருக்கு.
            பேச்சி பெரிம்மாவோட ரண்டு பொண்ணுக்கும் இப்போ ஒறவு முறையில நல்ல செல்வாக்கு உண்டாயிப் போச்சு. அதுக்குக் காரணம் ஒறவு முறையில நெறைய கலியாண தோதுகளுக்கு ரெண்டும் அங்க மாப்புள்ள இருக்கு, இங்க பொண்ணு இருக்குன்னு தகவலச் சொல்லி கலியாணத்தெ பண்ணி வைக்கிறதெ ஒரு சோலியாவே பண்ணிக்கிட்டுக் கெடக்குதுங்க அதுங்க. வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் மறுகலியாணத்துக்கு ஏற்பாட்ட பண்ணுற முயற்சியில ஒவ்வொரு அக்காக்காரிக வூட்டுக்கா போயி அழுகாச்சி வெச்சதோட மொத அத்தியாயம் பேச்சி பெரிம்மா வூட்டுலத்தாம் ஆரம்பிச்சிச்சு. பேச்சி பெரிம்மா வூட்டுக்குப் போயி வீயெம் மாமா அழுகாச்சி வெச்சதெ பெரமாதம் பண்ணி இப்பிடிச் சொல்றதுக்குப் பின்னாடி ஒரு பெரிய கதை இருக்கு. அதெ கடைசியில சுருக்கமா பாக்குறதுக்கு மின்னாடி பேச்சிப் பெரிம்மாவ பாத்ததும் வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் வெச்ச அழுகாச்சியப் பாத்துப்புடலாம்.

            "நம்ம அப்பங்கார்ரேம் பேரப் புள்ளைகள பாத்துட்டு கண்ண மூடுனாம். நம்ம அம்மாக்காரி ஒம்மட மவளுக்குப் பொறந்த கொள்ளுப் பேரப் புள்ளை வரைக்கும் பாத்துட்டு கண்ண மூடுனுச்சி. நாம்ம இருக்குற நெலமைக்கு எம் புள்ளைய கூட பாக்க முடியாது போலருக்கே யக்கா! எம் நெலமெ எப்பிடி ஆயிடுச்சிப் பாருக்கா யக்கா! ஒம்மட வயசுக்கு நீயி கூட பேரப் புள்ளைய பாத்திட்டீயே! நமக்குப் புள்ளையப் பாக்கக் கூட கொடுப்பனை யில்லாம போச்சுதே! நீங்க எல்லாம் புள்ளக் குட்டிகளோட நெற வாழ்வு வாழுறீங்க. நாம்மளப் பாரு. ஒண்ணுத்துக்கும் ஆவாம ஒத்தையில நிக்குறேம்னே! ஒரு நாளு சாவு வந்தா எடுத்துப் போட்டுக் கொள்ளிய போடக் கூட ஒரு வாரிசு இல்லயே யக்கா!"ன்னு அழுகாச்சிக் காவியத்தோட மொத அத்தியாயத்தெ  வீயெம் மாமா துவங்கி வெச்சதும் பேச்சிப் பெரிம்மாவுக்கு சர்வ நாடியும் எறங்குனாப்புல ஆயிடுச்சு. பேச்சி பெரிம்மா வெங்குவப் போல அடிச்சிப் பிடிச்சில்லாம் பேசாது. ரொம்ப எறக்க மனசு. புருஷங்காரனையே போன் போக்குக்கு வுட்டுப்புட்டு நின்ன ஆளு இல்லியா அது. தம்பிக்காரனுக்கு ஒரு வாரிசு இல்லையேன்னு மனசு நெரங்கிப் போயிடுச்சு அதுக்கு.
            சின்னபுள்ளையப் போல நெனைச்சுக்கிட்டு அத்து வீயெம் மாமாவோட கன்னத்துல வழிஞ்ச கண்ணுத் தண்ணிய முந்தானையால தொடச்சி வுட்டுப்புட்டு, "அழுவாதடா யம்பீ! நம்ம சங்கரிக்கு நாலு புள்ளைவோ. அதுல ஒண்ணுத்தெ கேட்டு வாங்கித் தர்றேம். ஆம்பளெ புள்ள வாணுமா? பொம்பள புள்ள வாணுமா?" அப்பிடின்னு கேட்டிச்சி பேச்சிப் பெரிம்மா.
            "யய்யோ யக்கா! நீயி தெய்வம்! நீந்தாம் சாமி! எம் பெரச்சனெ ஒனக்குப் புரியலீயே! ஊருல ஒருத்தனும் நம்மள ஆம்பளன்னு மதிக்க மாட்டேங்றாம். பாக்குறவேம் எல்லாம் பொட்டப் பயன்னு நெனைச்சிக்கிட்டு கெடக்கறாம். ஒரு பொண்ண கட்டி கலியாணத்தப் பண்ணி புள்ளைய பெத்துக்கிட்டாத்தாம் நமக்கு இருக்குற ஏச்சுப் போவும். நீந்தாம் யக்கா ஒரு நல்ல பொண்ணா பாத்துக் கலியாணத்தெ பண்ணி வைக்கணும்!" அப்பிடின்னிருக்கு வீயெம் மாமா.
            "இத்து ன்னடா கூத்தா யிருக்கு? பொண்டாட்டிக்காரிய கூட அழைச்சாந்து வெச்சிக்கிட்டு யக்காகாரிகிட்டெ ஒரு கலியாணத்தெ பண்ணி வையின்னா... ஊரு ஒலகத்துல இத்து அடுக்குமா? இத்து ஞாயமா போவுமா? நாலு பேத்துக்கு சேதி தெரிஞ்சா காறில்லா துப்புவாம்! ஏம்டாம்பீ ஒம் புத்தி இப்பிடிப் போவுது?"ன்னு பேச்சி பெரிம்மா ஆரம்பிச்ச ஒடனே, கூட போயிருந்த கோகிலா மாமி அழுகாச்சிக் காவியத்தோட ரண்டாவது அத்தியாத்தெ எடுத்து வுட்டுருக்கு, "அப்பிடியில்லாம் நெனைச்சுப்புடாதீங்க அத்தாச்சி! எம் புருஷன ஊருல்ல நாலு பேத்து நாலு வெதமா பேசுனா அத்து நமக்குத்தாம்னே! அந்த அசிங்கம் நமக்கு வாணாம். நம்மாலத்தாம் கொழந்தெ யில்லாம போச்சு. நீஞ்ஞ ஒரு பொண்ண பாத்துக் கட்டி வெச்சா, அதெ கண்ணுக்குக் கண்ணா பாத்துப்பேம். அந்தப் பொண்ணுக்குப் பொறக்குற கொழந்தைய எம்மட கொழந்தை போல நெனைச்சி வளப்பேம். எஞ் எல்லா சொத்துக்கும் அதாங் வாரிசு! நீஞ்ஞத்தாம் இதெ கொஞ்சம் பாத்துச் செய்யணும்! ஒங்கள நம்பித்தாம் புருஷனும் பொண்டாட்டியுமா வந்திருக்கோம். நீஞ்கத்தாம் எங்க கொலசாமி! நீஞ்ஞ நெனைச்சா செஞ்சு வைக்கலாம். ஒத்த பொம்பளையா இருந்துக்கிட்டு ரண்டு பொட்டெ புள்ளைகள கரை சேத்த ஒங்களால எம் புருஷனுக்கு ஒரு பொண்ண பாத்தா கட்டி வைக்க முடியாது? நீஞ்ஞத்தாம் பாத்துப் பண்ணணும்!" அப்பிடின்னிருக்கு. அப்பிடிச் சொன்னதும் ரண்டு பேருமே பேச்சிப் பெரிம்மா கால்ல சாஷ்டாங்க வுழுந்தாங்க பாருங்க.
            பேச்சி பெரிம்மாவுக்கு ஒரு நிமிஷம் ஒலகமே நின்னு சுத்துறாப்புல ஆயிடுச்சு. அத்து மூத்தப் பொண்ண கட்டி வைக்குற நேரத்துல ஒரு பேச்சு வீயெம் மாமாவையும் கேட்டுச்சி, "எம் பொண்ண கட்டிக்கடா! யக்கா ரொம்ப செருமத்துல இருக்கேம். கை கொடுத்தா ஆயுசுக்கு மறக்க மாட்டேம்." அப்பிடின்னு. ஆனா வீயெம் மாமா, "யக்காக்காரின்னு இருக்குற ஒருத்தியோட பொண்ணயும் கட்டிக்க மாட்டேம். கட்டிக்கிட்டா செய்யுறதுக்கு ன்னாத்தா வெச்சிருக்கீங்க. காலம் பூராவும் ஒண்ணுமில்லாம நயா பைசாவுக்குப் பிரயோசனம் இல்லாமலே ஒஞ்ஞள மாதிரிக்கே தரித்திரமா வாழணுமா? ஒம் பொண்ணுக்கு எவன கட்டிக்க விதியிருக்கோ அவனெ கட்டிக்கட்டும்! நாம்மதாம் அதுக்குக் கெடைச்சேமா?" அப்பிடின்னு எளக்காரமா பதிலச் சொன்னுச்சு. அதெல்லாம் இப்போ பேச்சிப் பெரிம்மாவுக்கு ஞாபவத்துக்கு வந்தாலும், தம்பியோட இப்போதைய பொலம்பலுக்கு மத்தியில அன்னிக்குப் பேசுனது பெரிசா தெரியல. பேச்சி பெரிம்மா மனசுக்குள்ள ஒரு முடிவுக்கு வந்துச்சு, எப்படியாச்சும் தம்பி கேக்குற மாதிரியே தம்பிக்கு ஒரு கதையெ கட்டி வுடணும்னு.
            காலம்தான் எப்பிடி மாறி மாறிச் சொழலுது பாருங்க. இதைத்தாம் அவுங்க பேசுன பிற்பாடு சொல்றதா சொல்லியிருந்தேம். யாரோட தயவு அன்னிக்குத் தேவையில்லன்னு வீயெம் மாமா நெனைச்சுச்கோ அதுகளோட தயவு தேவைன்னு இன்னிக்குப் போயி நிக்குறாப்புல ஆயிடுச்சு. காலத்துக்கு முன்னாடி மனுஷங்க யாரும் பெரியவங்களும் இல்ல, சின்னவங்களும் இல்ல. காலம் நெனைச்சா யார வாணாலும் பெரியவங்களா மாத்திப் போடும். யார வாணாலும் சின்னவங்களப் பொரட்டிப் போடும். காலத்துக்கு அப்பிடி ஒரு சக்தி இருக்கு. அதால யாரையும் பெரியவங்கன்னும் நெனைக்க வாணாம், சின்னவங்கன்னும் நெனைக்க வாணாம். ஒவ்வொரு பெரிய மனுஷனும், சின்ன மனுஷனும் காலத்துக்கிட்ட கட்டுப்பட்டுத்தாம் ஆவணும். ஏன்னா கால்ல வுழுந்து கிடக்குறவங்க தலைநிமுந்து நிப்பாங்க, தலைநிமுந்து நிக்குறவங்க கால்ல வுழுந்துக் கெடப்பாங்க. ஓடம் வண்டியில ஏறுமா? வண்டி ஓடத்துல ஏறுமாங்றது காலத்தோட கையில இருக்குற முடிவு.
            வீயெம் மாமா இந்த மேனிக்கி சிப்பூரு பெரிம்மா, சிப்பூரு சின்னம்மா, தேன்காடு சித்தி, பாகூரு சித்தின்னு எல்லாரு வூட்டுக்கும் பொண்டாட்டிச் சகிதமா போயி அழுகாச்சிக் காவியத்தோட ஒவ்வொரு அத்தியாத்தையும் அரங்கேத்துனுச்சு. அதோட அழுகாச்சிக் காவியத்தெ கேட்டு ஒவ்வொண்ணும் தம்பிக்காரனுக்கு ரெண்டாவது தாரத்துக்குப் பொண்ணு தேடுனுச்சிப் பாருங்க கடல்ல கொட்டுன கடுக தேடுறாப்புல. ஒவ்வொண்ணும் பல எடங்கள்ல தேட தேட வெளக்கமாத்தாலயும், செருப்பாலயும் அடி வாங்காத கொறையா திரும்புற மாதிரி ஆயிடுச்சு. மொத தாரமா பொண்ணு தேடி கட்டி வைக்குறதே செருமமா இருக்குற நெலையில ரண்டாவது தாரமா ஒரு பொண்ண பாத்துக் கட்டி வைக்குறதுங்றது அம்புட்டுச் சாதாரணமா? சாதாரணமோ, சாதாரணம் இல்லையோ, அது எப்படியோ தேட ஆரம்பிச்சப் பின்னாடி அதுக்கு ஒரு முடிவு வாரத்தானே செய்யுது.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...