23 Mar 2020

அத்தாங்கிட்டே முறையீடு!

செய்யு - 396        

            விகடுவோட கலியாணத்துக்குப் பீரோ, கட்டிலு செஞ்சதுல திரும்பதியில்லாமப் போயி பேச்சு வார்த்தை நின்னுப் போயிருந்துச்சு சுப்பு வாத்தியாருக்கும், வீயெம் மாமாவுக்கும். அதுக்குப் பெறவு ரெண்டு பேருமே எதார்த்தமா எங்கயாவது பாத்தாலும் பதார்த்தமா ஒதுங்கிப் போயிட்டு இருந்தாங்க. இப்போ இருந்த நெலையில வீயெம் மாமாவே வலியக்கப் போயி சுப்பு வாத்தியார்கிட்ட பேச்சக் கொடுத்துச்சு.
            "யத்தாம்! கொழந்த யில்லாம இருக்குறது அவ்வே வூட்டுக்காரிக்கு ரொம்ப மனக்கொறையா இருக்கு! அந்த மனக்கொறையில நாயி, பூனை, மாடுன்னு வளக்க ஆரம்பிச்சு வூடே நாறிப் போயிடுச்சு! எல்லாத்தையும் புடிச்சி விக்குறாப்புல ஆயிப் போயிடுச்சு நெலமெ. இப்போ வூடெ வெறிச்சோடிக் கெடக்கு. அவ்வே மனசும் ஓன்னு இருக்கு போல. ரொம்ப விரக்தியா இருக்கா! அத்தாம் ன்னா பண்றதுன்னே தெரியல யத்தாம்?"ன்னு பேச்ச ஆரம்பிச்சிது. வீயெம் மாமா பேசுறதுல எது உண்மை? எது பொய்?ன்னு கண்டுபிடிக்கிறது ரொம்ப சிரமம். அதுக்குப் பொய்யை உண்மை மாதிரியும், உண்மையைப் பொய் மாதிரியும் பேசுறது பழகிப் போயிருந்துச்சு.
            "கொழந்தை இல்லங்றது ஒரு எடைஞ்சல்ன்னா, கொழந்தை இருந்து அதுக்குப் பாத்துப் பாத்து ஆயிரத்தெட்டுப் பங்கீடுக பண்றது அத்து வேற ஒரு எடைஞ்சல். தீவாளி, தேவை திங்க, கலியாணம்ன்னு நடக்குறப்போ கொழந்தெ இல்லாதவங்களோட நெலமெ தேவலன்னு கொழந்தைங்க இருக்குறவங்க நெனைச்சிப்பாங்க. கொழந்தை இல்லாதவங்க அப்பிடியில்லாம் செஞ்சிப் பாக்கக் கொழந்தெ இல்லையே ஒண்ணாவது இருந்தா தேவலாம்ன்னு நெனைச்சிப்பாங்க. இருக்குறவங்களுக்கு இருக்கேங்ற தாங்கலும், இல்லாதவங்களுக்கு இல்லேங்ற தாங்கலும் இருக்கத்தாம் செய்யுது. இதெல்லாம் நாம்ம சரி பண்ணுக்கிற விசயமா ன்னா? ஆண்டவனா பாத்து அமைக்கிறது. நாம்ம ன்னா பண்ண முடியும். கொழந்தெ இல்லியா? நீயி நமக்குக் கொழந்தெ, நாம்ம ஒமக்குக் கொழந்தென்னு இருந்துட்டுப் போயிடுறது எவ்வளவோ நல்லது. ரண்டு பேர்தானே. மெனக்கெட்டுச் சம்பாதிச்சிச் சொத்து சேக்கணும்னுங்ற அவசியமில்லே. சம்பாதிச்சோமா, தின்னமா, ஒறங்குனமா, எழுந்திரிச்சமான்னு போயிட்டே இருக்கலாம். எத்து எப்பிடி இருக்கோ, அத்தெ அப்பிடியே வுட்டுட்டுப் போங்கம்பீ! இதுக்காக இன்னொண்ண மெனக்கெட்டு, அத்து ஒரு புதுப்பெரச்சனையாயி அதெல்லாம் தேவையில்ல. எத்து அமைஞ்சிருக்கோ அதெ ஏத்துக்கிட்டுப் போங்கம்பீ!" அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு.
            "இல்லத்தாம்! நாம்ம ஆம்பளெ! வெளிய தெருவ போவோம் வருவோம். நமக்கு ஆத்திக்கிறதுக்கு ஆயிரத்தெட்டு வழிக இருக்கு. பொம்பளெ வூட்டுலயே கெடக்குறவ்வே. அவளுக்கு ஒரு தாங்கலா இருக்குமில்லே. தவிச்சிப் போறா. ஒரு புள்ளையத் தூக்கிக் கொஞ்சணும்னு ரொம்பவே ஆசைப்படுறா. நம்மள கட்டிக்கிட்டதுக்கு வேறென்னத்துக்கு அவ்வே ஆசைப்படுறா? புள்ளைக்கித்தாம்ன்னே ஆசைப்படுறா!" அப்பிடின்னு அதுக்கு ஒரு பதிலே சொல்றாப்புல சொன்னிச்சு வீயெம் மாமா.
            "அப்பிடின்னா ஒங்க ஒறவுல யாராச்சியும் புள்ளைய கொடுக்க தயாரா இருந்தா வாங்கி வளருங்க. யில்லன்னா தத்துதாம் எடுக்கணும். கொழந்தைய வளக்க முடியாம செருமப்படுறவங்ககிட்டெ காசியக் கொஞ்சம் கொடுத்துப்புட்டு செல பேரு வாங்கியும் வளக்குறாங்க. எனக்கென்னவோ எதுயெது அதுவா ‍அமையுதோ அதெ ஏத்துக்கிறதுதாங் சரி. நாம்மளா அமைச்சிக்கிறது நமக்குப் பெரும்பாடாத்தாம் போவுது."ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "நம்ம மூலமா ஒரு கொழந்தைய எதிர்பாக்குறா அவ்வே!" அப்பிடின்னிச்சு வீயெம் மாமா.
            "அப்பிடின்னா டாக்கடருங்களத்தாம் பாத்தாவணும். அவுங்கத்தாம் வழி சொல்லியாவணும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "பாக்காத டாக்கடருங்க இந்த ஒலகத்துல யில்லே. அத்தனெ டாக்கடருங்கக் கால்லயும் வுழுந்துப்புட்டேம் யத்தாம்! ஒண்ணும் கதைக்கு ஆவல. காசி த்ணணியா செலவானதுதாங் மிச்சம். அதாங் இன்னொரு பொண்ணப் பாத்து கலியாணத்தெ கட்டிக்கிடலாம்னு நெனைக்கிறேம்! அவளும் அதாஞ் சரின்னு சொல்றா!" அப்பிடின்னிச்சு வீயெம் மாமா.

            "ஒரு காலத்துல அப்பிடில்லாம் பண்ணாங்க. இப்ப யாரு அதெ மாதிரிக்கிப் பொண்ண தர்ற தயாரா இருக்காங்கன்னு புரியலயே. புதுசா பொண்ணு எடுக்குறதே கஷ்டமாயிருக்கு. பொண்ணக் கொடுக்குறவேம் ஆயிரம் யோஜனையே பண்றாம். இதுல ரண்டாம் தாராம்னா... அதுவும் மொத தாரம் உசுரோட இருக்குறப்ப ரண்டாவது தாரமா வந்துக் குடித்தனம் பண்ணுறதுக்கு எந்த ஊருல தாயித் தகப்பம் தயாரா இருப்பாம்ன்னு தெரியலயே! அப்பிடியே ரண்டாவது தாரமா ஒரு பொண்ணு அமைஞ்சி வந்தாலும் மொத தாரம் அதெ எப்பிடி எடுத்துக்கும்? ரண்டு ஆம்பளைய சமாதானம் பண்ணிப்புடலாம். ரண்டு பொம்பளைங்கள சமாதானம் பண்ண முடியாதும்பாங்க. பெறவு குடும்பத்த நடத்துறதுங்றது இந்த ரண்டு பொம்முனாட்டிகள சமாதானம் பண்றதுலயேல்ல ஓடிப் போயிடும். அதுவுமில்லாம கட்டிக்கிட்டு வர்ற ரண்டாவதுக்கும் கொழந்தை யில்லாம போயிட்டா மூணாவதா ஒண்ணுத்த கொண்டாந்து வெச்சிக்கவா முடியும்? இதல்லாம் வாணாம்பீ! இருக்குறதெ பாத்துப்புட்டு, அமைஞ்சதெ ஏத்துக்கிட்டுப் போவீங்களா? அதெ வுட்டுப்புட்டு போங்க. இத்தெல்லாம் தேவையில்லாத வேல!" அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு.
            வீயெம் மாமாவுக்குக் கோவம்ன்னா கோவம் மனசுக்குள்ள. வெளியில காட்டிக்க முடியல. இருந்தாலும் சுப்பு வாத்தியார்ர பாத்துச் சொன்னிச்சு, "ஒங்களால நாலு எடம் அலைஞ்சி ஒரு பொண்ண பாத்து வைக்க முடியாட்டியும் பரவாயில்ல யத்தாம். நல்லதா ரண்டு வார்த்தெ சொல்ல முடியாட்டியும், கெட்டதா ஒரு வார்த்‍தெ பேசணும்னு அவசியமில்லே. எல்லாந் எந் தலையெழுத்து! இப்பிடி ஒஞ்ஞகிட்டெ வந்து நிக்கணும்! நீஞ்ஞ சொல்றதெ கேக்கணும்"ன்னு அப்பிடின்னிது வீயெம் மாமா.
            "இந்தாருப்பாடி! நாம்ம நடைமொறையச் சொன்னேம். ரண்டாவதா நீயி கலியாணத்தெ கட்டிக்கிறதும், கட்டிக்காம போறதும் ஒம்மட, ஒம்மட வூட்டுக்காரியோட சம்பந்தப்பட்ட விசயம். யோஜிக்கிறதுன்னா மின்னாடியே யோஜிச்சிக்கணும். பின்னாடி யோஜிச்சுப் பிரயோஜனப்படாது. வூட்டைக் கட்டுறது, பொண்ண கட்டுறதுல்லாம் ஒரு மொறைத்தாம். கட்டுறதுக்கு மின்னாடியே ந்நல்லா யோஜிச்சிக் கட்டிப்புடணும். வூட்ட கட்டுறதுக்கு மின்னாடி யோஜிக்காம, பின்னாடி யோஜிச்சுக்கிட்டு இடிச்சி இடிச்சி மாத்தி மாத்திக் கட்டிக்கிட்டுக் கெடக்க முடியாதுல்லா. வூட்டக் கூட வேற வழியில்லன்னு இடிச்சிக் கூட கட்டிக்கிடலாம்ன்னாலும் பொண்ணு விசயத்துல அத்து மாதிரில்லாம் முடியாதுல்லா. அதெல்லாம் கோஞ்சம் யோஜிச்சித்தும் பண்ணணும். ச்சும்மா எடுத்தேம் கவித்தேம்னு பண்ணிக்கிட்டு பின்னாடி குத்துதே, கொடையுதேன்னு நிக்க முடியாது பாரும்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "ஒஞ்ஞளால முடிஞ்சாப் பொண்ண பாருங்க. இல்லீயா பொண்ண பாத்துட்டு வந்துச் சொல்றேம். கலியாணத்துக்கு வந்து பந்தியில உக்காந்து தின்னுப்புட்டுப் போங்க! ரண்டு பந்திப் போடுற அளவுக்கு நமக்குத் தெம்பு இருக்கு!" அப்பிடின்னு சொல்லிப்புட்டு வேகமா சுப்பு வாத்தியார்ர வுட்டு அந்தாண்ட போனிச்சு வீயெம் மாமா. சுப்பு வாத்தியாருக்கு இந்த விசயத்துல சுத்தமா உடன்பாடு இல்ல. வேண்டாங்றதெ நாசுக்கா சொல்லிப் பாத்தாரு. அப்பிடிச் சொன்னதுக்கு வீயெம் மாமா கடைத்தெருவுல பாக்குறவங்ககிட்டெல்லாம் வேற வெதமா பேசி சுப்பு  வாத்தியார்ர கடுப்பேத்தினுச்சு.
            "அதாங்! ஒஞ்ஞ அத்தாம் இதுக்குல்லாம் ஒத்துக்கிட மாட்டேரே!"ன்னு பாக்குறவங்க வீயெம் மாமாவ, கேட்டப்போ அத்து சொன்னிச்சி, "ஆமா பெரிய நியாயஸ்தரு மாரி பேசுவாரு. அவரோட அப்பாங்காரரே ரண்டு பொண்டாட்டிக்காரருதானே. மொத தாரத்துக்குப் புள்ளீங்கோ கெடையாது. அவரே அவரோட அப்பாங்காரரோட ரண்டாம் தாரத்துக்குப் பொறந்தவர்தாம். அன்னிக்கு அவரோட அப்பாங்காரரு ரண்டாம் தாரத்தெ கட்டிக்கிடலன்னா வெச்சிக்குங்க இன்னிக்கு எஞ்ஞ அக்காவுக்கு இவரு ஒண்ணும் அத்தானாவ முடியாது. அதெ வுடுங்க! இவரு அவரோட மவ்வனுக்கு பொண்ணு எடுத்துருக்காரே கொல்லம்பட்டியில. சங்கதி தெரியும்ல. அந்தப் பொண்ணு ரண்டாம் தாரத்தோட பொண்ணுதாம். அன்னிக்கு அவரோட சம்பந்தி ரண்டாம் தாரமா ஒருத்திய கட்டிக்கிடலன்னா இவரோட மவ்வனுக்கு கட்டி வைக்க பொண்ணு கெடையாது தெரியுமா? அவருல்லாம் நமக்கு ஒரு அத்தானா? அவரு ஒரு மனுஷனா? ஊருக்கு ஒரு ஞாயம் வைப்பாரு. தன்னோட வூட்டுக்கு ஒரு ஞாயம்ன்னு நிப்பாரு. அவர்ரப் பத்தியெல்லாம் நம்மடகிட்டே பேசாதீங்க! மனுஷனா அவரு?" அப்பிடின்னிருக்கு வீயெம் மாமா.
            வீயெம் மாமா பேசுன சங்கதிக தெரிஞ்ச பிற்பாடு சுப்பு வாத்தியாருக்கு எரிச்சலா போச்சு. "அவ்வேம் கலியாணத்தெ பண்ணணும்னா போயி பண்ணிக்க வேண்டித்தான. எதுக்கு நம்மகிட்டெ வந்து நாளு நேரம் குறிச்சிக் கேக்குறாம்? எவ்வேம் சுழி எப்பிடி இருக்குன்னு தெரிய நமக்கு ன்னா சோசியமா தெரியும்? அவனுக்குப் பொண்ணு பாத்து கட்டி வைக்க எம்மட மாமனாருகிட்டெ நாம்ம பட்ட பாடு நாயி படுமா? அவரு ஒரு தீர்க்கதரிசிதாம் போலருக்கு. சரியாத்தாம் இந்தப் பயலெ பத்தி கணிச்சி வெச்சிருந்திருக்காரு. நாம்மத்தாம் இவ்வேம் மேல எறக்கப்பட்டு அவனுக்காக அவருகிட்டே பேசுனேம் அப்போ. நாம்ம கலியாணத்தெ பண்ணி வைக்க முடியான்னும், வேணும்னா நீஞ்ஞளா பாத்து எதாச்சிம் பண்ணி வெச்சுக்கோங்கண்ணும் சொன்னாரு மாமானாரு அப்பவே. அதுவும் மொத கலியாணத்துக்கே. இப்போ அவரு இருந்திருந்தார்ன்னா செருப்பெ கழட்டித்தாம் அடிச்சிருப்பாரு. இந்தப் பயலுக்கு ஓரிடத்துல, ரண்டு எடத்துலயா பொண்ண பாத்து அலைஞ்சேம்? கடைசியில அவனா ஓரிடத்துல பொண்ண பாத்துட்டு வந்து அதைத்தாம் கட்டுவேம்ன்னு ஒத்தக் கால்ல நின்னாம். வேண்டான்னு சொன்னதெ காதுல போட்டுக்கவே இல்லியா. சரின்னு அந்தப் பொண்ணை நிம்மதியா கட்டி வைக்கத்தாம் முடிஞ்சிதா? கலியாணத்துல அம்மாம் கொறை வழக்கா போனுச்சி. இப்பிடி அவ்வேம் மொத கலியாணத்துலயே தலை தப்பிச்சிது தம்பிராம் புண்ணியம்னு ஓடி வந்தாக்கா, ரண்டாவது ஒரு பொண்ண பாத்துக் கலியாணத்தெ பண்ணி வையுன்னா என்னத்தெ பண்ணி வைக்கிறது? பயலுக்குக் கொழுப்பு சாஸ்தியாப் போயித் தொலைஞ்சிடுச்சி. அவனவனுக்கும் மொத கலியாணமே ஆவாம கெழடு தட்டிப் போயி நிக்குறாம். கெழடு தட்டப் போற வயசுல இவனுக்கு ரண்டாவது கலியாணம்னா அவனவனும் சூத்தால்லாத்தாம் சிரிப்பாம்!"ன்னு சுப்பு வாத்தியாரும் பதிலுக்கு அந்தச் சங்கதியப் பத்திச் சொன்னவங்ககிட்டே குத்தலும், கொடைச்சலுமா பேசியனுப்பி வுட்டாரு. அந்தச் சேதி வீயெம் மாமா காதுக்கு போவாம இருந்திருக்காது.
            வீயெம் மாமாவுக்கு மனசுக்குள்ள ரெண்டவதா ஒருத்தியெ கட்டி அவளைக் கொழந்தைய பொறக்க வெச்சு, நாம்ம ஒரு பொட்ட பய இல்லேங்றதெ காட்டணுங்ற வெறித்தனம் உண்டாயிப் போச்சு. அதுக்காக அது எந்த எல்லைக்கு எறங்கவும் தயாரா இருந்துச்சு. அதுக்கு ஏத்த மாதிரி பொண்ணைப் பாக்க பொண்டாட்டியும் வீயெம் மாமாவும் நாயலைச்சல், பேயலைச்சல் அலைஞ்சிட்டுக் கெடந்ததுங்க.
*****


2 comments:

  1. Replies
    1. தங்களது வாசிப்புக்கும், நேசிப்புக்கும் மிகுந்த நன்றிகள் ஐயா!

      Delete

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...