22 Mar 2020

புருஷங்காரனுக்குப் பொண்ணு பாக்குற பொண்டாட்டி!

செய்யு - 395        

            வீயெம் மாமா பொண்ணு பாத்துக்கிட்டு இருக்குறதா ஊருக்குள்ள பேச்சா கெடந்துச்சு. அதெ வுட வேடிக்கையா புருஷங்காரனுக்குப் பொண்டாட்டியே அலைஞ்சு திரிஞ்சிச் சக்களத்திய தேடிக்கிட்டு இருக்கான்னும் பேசிக்கிட்டு இருந்தாங்க சனங்க.
            என்ன நடந்துச்சுன்னு விசாரிக்க விசாரிக்க கைய தூக்கி கன்னத்துல வெச்சிக்கிறதா? கன்னத்துல அடிச்சிக்கிறதான்னு கொழம்பமா போயிடுச்சு.
            "நாம்ம கண்ணால பாத்து சுன்னிய ஊம்பிக்கிட்ட அம்மணக்குஞ்சா நின்ன பயலுக எல்லாம கலியாணமாயி புள்ள குட்டிகளோட வண்டியில டுர்டுர்ருன்னுப் போயிட்டு இருக்காம். எங் கதெயெ பாரு ஊருல நாலு பேத்து நாலு வெதமா சொல்றாப்புல ஆயிடுச்சு! ஒனக்குப் பாக்காத வைத்தியம் ன்னான்னு சொல்லு? ஒமக்குப் பாத்த வைத்தியக் காசியே ரெண்டு லட்சத்து எழுபதாயிரத்துக்கு மேல ஆயிடுச்சு. இந்தா இருக்கு டாக்கிமெண்டுக அத்தனையும். ஒண்ணு இதுக்கு ஆன காசிய எடுத்து வெச்சிட்டு ஓடிப் போயிடு. இல்லாட்டி நீயே ஒனக்கு ஏத்த மாதிரி ஒரு சக்களத்தியப் பாத்து வெச்சி கலியாணத்தெ கட்டி வையி. இல்லன்னா நாம்ம பாட்டுக்கு எவ்வே கூடயாவது படுத்து எழுந்திரிச்சி வந்து அவளுக்குப் பொறக்குற கொழந்தைக்கி சொத்தெ எழுதி வெச்சிட்டுப் போயிட்டே இருப்பேம். ஒங் கருப்பையில இருக்குற நீருகட்டிகளுக்கு நாம்ம ன்னா பண்ணுவேம்? ஒம்மட வயித்துக்குக் கொழந்தெ உருவாம போனதுக்கு நாம்ம ன்னாடி பண்றது? ஊருல நாம்ம பாட்டு வாங்கிக் கட்டிக்கணும்னு நம்ம தலையில ன்னா எழுதிருக்கு? மருவாதியா இன்னிக்குச் சொல்றதுதாங் நீயே ந்நல்ல பொண்ணா பாத்து கட்டி வெச்சிப்புடு. அதாங் ஒனக்கு நல்லது. இல்லன்னா வூட்டெ வுட்டு வெரட்டி அடிச்சிப்புட்டு இன்னொரு கல்யாணத்தெ பண்றாப்புல ஆயிடும்!" அப்பிடின்னிச்சு வீயெம் மாமா.
            "அடப் போடா! புத்திக்கெட்ட மனுஷா! ஒமக்கு இன்னொருத்திய கட்டி வெச்சிப்புட்டு நாம்ம நடுரோட்டுலயா நிக்க முடியும்? இதுக்குத்தாம் எஞ்ஞ அப்பம் ஆயி ஒனக்குக் கட்டி வெச்சாங்களா? ஏங்கிட்டெ ஒரு கொறைய கண்டுப்புட்டே! அதால இன்னொருத்தியெ கட்டிக்கிறேம்னு நிக்குறே! இதெ ஒம் மேல ஒரு கொறையிருந்துச்சுன்னா வெச்சுக்கோ! இதெ மாதிரிக்கி நமக்கு ஒரு ஆம்பிளைய ரெண்டாவது புருஷனா கொண்டாந்து வெச்சு நீயி மொத புருஷனா இருந்துப்பீயா? ன்னடா இத்து ஆம்பிளைக்கு ஒரு ஞாயம்? பொம்பிளைக்கு ஒரு ஞாயம்? நீயி எவள வேணாலும் இழுத்து வெச்சிக் கட்டிக்கிட்டுப் போ! நாசமா போயி நில்லு! ஆனா ஒரு பொண்ணோட வவுத்தெரிச்சலு ஒன்னய சும்மா வுடாது பாத்துக்கோ. ஒன்னய நாம்ம ஒண்ணும் கொறைச் சொல்லல. கட்டுன நாளு இன்னிய வரைக்கும் நம்ம மேல கைய வெச்சதில்லெ. கொணமாத்தாம் பாத்துக்கிட்டே. ரோட்டுல போற நாலு நக்கிப்பொறுக்கி நாயிங்க பேசுனதிலேந்துத்தாம் நீயி இந்த நெலையா நிக்குறே. நீயி எந்த நெலையில வாணாலும் நில்லு. ஒன்னால எம்மட குடும்பத்துக்கு கலியாணத்துக்கு ஆன செலவு, பண்ணிப் போட்ட நகை நட்டுக, செஞ்ச சீரு சனத்திக, பட்டறைப் பொடுறதுக்குன்னு வாங்குன காசி, வூட்ட பூசணும்னு எங்கப்பனுகிட்டே வாங்குன காசின்னு அத்தனையையும் எடுத்து வையி. கலியாணத்தெ பண்ணிக்கிட்டு ந்நல்லா வாழ வைப்பேன்னு தாலிய கட்டிப்புட்டே. நீயி இனுமே நம்மள வாழ வைக்கப் போறதில்லே. அதுக்காக நாம்ம கொளத்துல கெணத்துல ஆத்துல வுழுந்தா சாவ முடியும்? யில்லே கயித்துல தொங்கவா முடியும்? அதெல்லாம் நம்மகிட்டெ நடக்காது. சொச்ச காலம் ஓடணும்ல்ல. அதெ நாம்ம ஓட்டியாவணும்ல்ல. எல்லாத்தோடயும் அதுக்கு ஒரு பத்து லச்சத்தெ சொளையா எடுத்து வையி. நீயி நீட்டுற பத்தரத்துல ஒமக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு கையெழுத்த போட்டுக்கிட்டு நாம்ம பாட்டுக்கு போயிட்டே இருக்கேம்!"ன்னு ஒரு போட போட்டிருக்கு கோகிலா மாமி.
            "ன்னாடி மெரட்டுறீயா? அடிச்சித் தெருவுல போட்டாக்கா ஏம் ஏதுன்னு கேக்க நாதியில்லாத நாயீ நீயீ! பீலா காட்டுறீயா நம்மடகிட்டே! செவுளு பேந்துடும் பாத்துக்கோ! உரிச்சி அள்ளிப்புடுவேம்!" அப்பிடின்னிருக்கு வீயெம் மாமாவும் வுடாம.
            "இந்தாரு ஒன்னய மெரட்ட நாம்ம யாரு? அடிச்சி வெளியில தள்ளுறீயா தள்ளு! நாம்ம நாலு பேருகிட்டெ ஞாயம் கேக்குறேம்! ஞாயம் கெடைக்கலையா கூப்புடு தூரத்துல போலீஸ் ஸ்டேஷன் இருக்கு. அஞ்ஞப் போயி நின்னு மண்ணெண்ணெய ஊத்திக்கிட்டுக் கொழுத்திக்கப்போறேம்னு நிக்குறேம்! பெறவு பொறக்கும்ல ஒரு ஞாயம்! ஒம்மட பாச்சால்லாம் நம்மகிட்டெ நடக்காது. ஒழுங்கு மருவாதியா ந்நல்லா யோஜனையெ பண்ணிட்டச் சொல்லு. இருக்கவா? கெளம்பவா? கெளம்புனேன்னா வெச்சுக்கோ நேர்ரா அப்பம் ஆயி வூட்டுல‍ போயில்லாம் நிக்க மாட்டேம். போலீஸ் ஸ்டேஷன்லத்தாம் மண்ணெண்ணெ டின்னோட நிப்பேம். ஏன்னா அதாம் பெறவு ஒனக்கு மாமியாரு வூடு. போயி அஞ்ஞயே கெடக்க வேண்டியதுத்தாம் பின்னாடி. பாத்துக்க ஒமக்கு எத்து வேணும்னு?" அப்பிடின்னு தெனாவெட்டா கேட்ட பிற்பாடுதாம் வீயெம் மாமாவுக்கு கொஞ்சம் யோசனை வந்திருக்கு.

            "இப்ப ன்னா பண்ணுலாம்னு நெனைக்கிறே? ஒன்னய இஞ்ஞயே போட்டு அடிச்சிக் கொல்லுறதுக்கு நமக்கு ரண்டு நிமிஷம் ஆவாது! அடிச்சிக் கொன்னுப்புட்டு கயித்துல தொங்க வுட்டுப்புட்டு தூக்கெ மாட்டிக்கிட்டான்னு போவ நேரமாவாது தெரிஞ்சிக்கோ! ன்னாடி பண்ணலாம்னு நின்னிக்கிட்டு இருக்குறே?" அப்பிடின்னிருக்கு வீயெம் மாமாவும் கொஞ்சம் தெனாவெட்ட வுடாம.
            "செய்யி! தூக்குல தொங்க வுட்டுப்புட்டுப் போயி ஜெயில்ல கெட. எஞ்ஞ அப்பம் ஆயி சொந்தக்கார சனங்க ஒண்ணும் பொண்ணு செத்துப் பூட்டுன்னு ச்சும்மா வுட்டுப்புட மாட்டாங்க பாத்துக்கோ. காசிய எம்மாம் செலவெ பண்ணி என்னத்தெ பண்ணணுமோ அதெ பண்ணித்தாம் மறுவேல பாக்குமுங்க தெரிஞ்சிக்கோ. ஒனக்குச் சமைச்சிப் போடுற சாப்பாட்டுல வெசத்த கலக்க எம்மா நேரமாவும் நமக்கு? வெஷம் ‍கெடைக்கலையா நாலு பல்லிய அடிச்சிப் போட்டு சமைச்சிப் போட்டு ஒன்னய சாப்புட வைக்க முடியான்னு நெனைச்சிக்கிட்டு இருக்கீயா? அப்பிடில்லாமா பண்‍ணேம் பாவி மனுஷா! நீதாம்னே கதின்னு வந்து நின்னேம்ல. இன்னிய வரைக்கும் எம்மட பெத்த அப்பம் ஆயி வூட்டுக்கு எத்தனெ தடவே போயிருப்பேம். நீதாம்னே உசுருன்னு நின்னு வாழ்ந்துட்டு நிக்குறேம். நம்மளப் போயி ன்னா பேச்சுப் பேசுறே? கொழந்தெ இல்லன்னா ஒரு கொழந்தைய வெலைக்கு வாங்கி வளப்போம். காசியக் கொடுத்தா பெத்துத் தர்றதுக்கு ஆளுவோ இருக்காளுவோ தெரியும்ல!" அப்பிடின்னு அழுகாச்சிய வெச்சிருக்கு கோகிலா மாமி.
            வீயெம் மாமாவுக்கு மனசு இப்போ கொஞ்சம் எறங்கிப் போயிடுச்சு. "ஊர்ல அவனவனும் கண்ட மேனிக்கில்லா பேசுறாம்? நம்மள ன்னாடிப் பண்ணச் சொல்றே?‍கொழந்தெ ஒண்ணே தத்தெடுத்துப்புட்டா... சரியாப் போயிடுமா ன்னா... பாக்குறவேம்லாம் பொட்டப் பய பொட்டப் பயங்றாம். முகத்துக்கு மின்னாடி சொல்லாட்டியும் போனதுக்குப் பெறவு முதுவுக்குப் பெறவு சொல்றாம். நாண்டுகிட்டு சாவலாம் போலருக்கு. அப்பிடின்னா சாவட்டா? சொல்லு! திருப்தியா போயிச் சேந்துடுறேம். பெறவு நீயி இஷ்டப்படி நடத்துற ராசாங்கத்தெ நடத்து!" அப்பிடின்னு வீயெம் மாமாவும் அழுது அழுகாச்சிய வெச்சிருக்கு.
            "ஆம்பள அழுகாச்சிய வைக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ச்சும்மா பொட்டச்சி மாதிரிக்கி பிலாக்கணம் வைக்காதே. இப்போ ன்னா ஒன்னய பொட்டப் பயெ இல்லன்னு சொன்னாக்கா சரிதான்னா?"ன்னிச்சு கோகிலா மாமி.
            வீயெம் மாமா ஒண்ணும் பதிலெச் சொல்லாம கொழந்தையப் போல மொகத்த ஆட்டினுச்சு.
            "நாமளே பொண்ணப் பாத்துக் கலியாணத்தெ பண்ணி வைக்கிறேம். ஆனா வூடு நம்ம கண்டிஷன்லத்தாம் போவணும். நாம்ம சொல்றப்படித்தாம் நீயா இருந்தாலும் கேக்கணும், வர்ற சக்களத்தியா இருந்தாலும் கேக்கணும். ஒரு வேள இதுக்குச் சம்மதப்பட்டேன்னு இப்போ தலைய ஆட்டிப்புட்டு பின்னா நீயி வர்றவளோட சேந்து மனசு மாறிப்பூட்டீன்னா வெச்சுக்கோ, எங் கதெ கந்தக் கோலமா போயிடும்! அதுக்கு எடங் கொடுக்க முடியா. இந்தாப்பாரு இந்த வூடு, பட்டறை, வயலுங்க அத்தனையும் எம் பேர்ல மாத்தி எழுதி வெச்சிப்புட்டு நீயி ன்னா வாணாலும் பாத்துக்கோ. பூரா நமக்குப் போட்டிருக்குற நகை நெட்டுக அத்தனையையும் வர்ற பொம்பளைக்குப் போடுறேம். நாம்ம எம் பேர்ல பாங்கியில போட்டு வெச்சிருக்கேம் யில்ல லச்ச ரூவாயி. அதையும் வர்றவ பேர்ல மாத்திப் போடுறேம். ஆன்னா அதுக்கு இந்த வூடும் செரி, நீயும் செரி நாம்ம சொல்றபடித்தாம் கேக்கணும். நெல நீச்சு அத்தனையும் நம்ம பேருக்கு மாறணும். நமக்கென்னப்பா கொழந்தையா குட்டியா? அத்த யாரு பேர்ல எழுதி வைக்கப் போறேம்? பூராவும் நமக்குப் பின்னாடி ஒம்மட வாரிசுக்குத்தாம் வர்றப் போவுது. இதுக்குச் சம்மதம்ன்னா சொல்லு மேக்கொண்டு ஆவுறதெ பாக்கலாம். ஒமக்கு நாமளே பொண்ணப் பாத்து, அதாங் எஞ் சக்களத்தியே கொண்டு வந்து கட்டி வைக்கிறேம்!" அப்பிடின்னிச்சு கோகிலா மாமி.
            கொஞ்ச நேரம் வீயெம் மாமா அப்பிடியும் இப்பிடியுமா யோசிச்சுப் பாத்துச்சு. "நீயி சொல்றதுங் ஞாயம்தாம். ஒனக்குன்னா யாரு இருக்கா நம்மள வுட்டா? ஒமக்கும் ஒரு பிடிப்பு வேணும்தாம். ஒன்னய நம்பலாமா?"ன்னு கேட்டிச்சி வீயெம்  மாமா.
            "அட கிறுக்குப் பிடிச்ச பாவி மனுஷா! நாம்ம மலட்டுச் சிறுக்கிடா! நம்மள எவ்வேம் வந்து கொத்திக்கிட்டுப் போவப் போறாம்? ஒடம்பு வேற பேரல்லு கணக்கா இருக்கு. இதெ சொமந்துக்கிட்டு நாம்ம எவ்வேம் கூட ஓடப் போறேம்? இந்தாருடா மனுஷா நமக்குன்னு இருக்குறது ஒரே ஒறவுன்னா அத்து ஒம்மட ஒறவுதாம். ஒன்னய வுட்டா வேற கதியில்ல நமக்கு. சக்களத்திக்குப் பொறக்கப் போற கொழந்தைத்தாம் நமக்கு. வேற வழியுமில்ல. வேற கதியுமில்ல. நம்புறதும் நம்பாம போறதும் ஒம்மட தலையெழுத்து. அதெப் பத்தி நாம்ம ஒண்ணும் சொல்றதுக்கில்ல." அப்பிடினிருக்கு கோகிலா மாமி.
            இந்தப் பேச்சு வார்த்தைக்குப் பின்னாடிதாம் வீயெம் மாமாவும், கோகிலா மாமியும் பொண்ணு தேடுற படலத்துல எறங்கியிருக்குங்க. "தாலியறுத்தவ, வெவாகரத்து ஆனவ, வயசு ஆயியும் கலியாணம் ஆவாம கெடக்குறவ, கருவ கலைச்சிட்டுக் குடும்பத்தோட ஆகாம கெடக்கறவன்னு எவ்வே இருந்தாலும் சொல்லுங்க! எம் புருஷனுக்குப் பிடிச்சி கட்டி வைக்கிறேம்!"ன்னு ஒவ்வொரு சொந்தக்கார, சாதிக்கார சனங்க வூடா போயி ஒக்காந்து ஒப்பாரி வெச்சுது கோகிலா மாமி. "இதென்னடா ஒலகத்துல யில்லாத புதுக்கதையா இருக்கு!"ன்னு அதெ கேட்ட சனங்களும் மூக்கு மேல வெரல வெச்சி தெகைச்சிப் போனுச்சுங்க.
            வீயெம் மாமா ஒவ்வொரு அக்காக்காரி வூட்டுக்காகப் போயி அதுவும் தம் பங்குக்கு ஒப்பாரி வெச்சு பொட்டச்சிக் கணக்கா அழுகாச்சிய வெச்சுது. அய்யோ தம்பிக்கார்ரேம் இப்பிடி வாரிசில்லாம கண்கலங்கி நிக்குறானேன்னு அதுகளும் கூட உக்காந்து அழுகாச்சிய வெச்சிதுங்க.
            ரொம்ப நாளைக்கு வர்ராம போவாம கொள்ளாம இருந்த திட்டையில இருக்குற அக்காக்காரியான வெங்குவோட வூட்டுக்கும் வந்து அழுகாச்சிய போட்டுச்சு வீயெம் மாமா. "நாம்ம ன்னடா பண்ணுவேம்? நாம்ம பெத்தது ரண்டு. ரண்டுல ஒண்ணு கொடுக்கலாம்ன்னா, அதுல ஒண்ணு கலியாணம் ஆயி கொழந்தையப் பெத்துட்டாம். இன்னொண்ணு கலியாணத்துக்கு நிக்குது. கொழந்தையப் பெத்துட்ட மவ்வேம்கிட்டெயிருந்து ஒண்ண கொடுக்கலாம்னு அவ்வேம் ன்னான்னா ஒத்தப் புள்ளையப் பெத்துக்கிட்டு இதாங் நாட்டுக்கு நல்லதுன்னு இன்னொண்ணுத்த பெத்துக்கக் கூடாதுன்னு நிக்குறாம் கிறுக்குப்பயெ மவ்வேன். அவனெ பிடிச்சக் கிறுக்குப் போயித் தொலையணும்னு போவாத கோயிலு யில்லே. அங்க இருக்குற செலைக மீது ஊத்தாத தண்ணியில்ல. நாம்ம அள்ளி ஊத்துன தண்ணிய கணக்குப் பண்ணா சமுத்திரம் வத்திப் போவும். கண்ணுல தண்ணி இல்லாம போவும். ஒரு ஆம்பளெ புள்ளயப் பெத்து எம்மட மடியில போட்டாம்ன்னா வெச்சுக்க எங் கொறை தீந்துப் போவும். பேரப் பயலப் பாக்கணும்னு தவிப்பா இருக்கு நமக்கு. எங் கதையெ நாம்ம எஞ்ஞடா போயிச் சொல்லித் தொலைவேம்? எங் கதை‍யே யிப்பிடி இருக்கு! இதுல நீயி ஒரு கதையோட வந்து நிக்குறீயேடா பாவிப் பயலே!" அப்பிடின்னிச்சு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...