18 Mar 2020

பீரோ கலைஞன்

செய்யு - 391        

            கிராமத்துல வேலைன்னா வேலை பாக்க வர்றவங்களுக்கு நெறைய பங்குடுகளெ பண்ணியாவணும். அவுங்களுக்கு ஒரு பாத்திரத்துல தண்ணிய கொண்டு போயி வெச்சி மூடியப் போட்டு, அதுக்கு மேல ஒரு தம்பளரை வெச்சிப்புடணும். அப்பதாம் வேலையப் பாக்குறவங்களுக்குத் தாகம் வந்துப்புட்டா அவுங்க பாட்டுக்கு தண்ணியக் குடிச்சிப்புட்டு வேலையப் பாத்துக்கிட்டே இருப்பாங்க. இல்லன்னா அதுக்கு ஒரு சத்தத்தெ கொடுத்து ஆவுற வேலைய ஆவாம பண்ணிப்புடுவாங்க. பதினோரு மணி ஆயிட்டுன்னா வடையோ, பஜ்ஜியோ போட்டு டீத்தண்ணிய கொண்டு போயி அவுங்க முன்னால வெச்சிப்புடணும். அதெ முடிச்சிட்டு மத்தியான சாப்பாட்டெ தயாரு பண்ணிப் போட்டா, நாலு மணி வாக்குல திரும்ப பட்சணத்தையும், டீத்தண்ணியையும் தயாரு பண்ணிக் கொடுத்தாவணும்.
            அஞ்சரை ஆறு மணி வாக்குல அவுங்க வேலைய முடிச்சிட்டுப் போன பிற்பாடு அவுங்க வேல செஞ்ச எடத்தை மெனக்கெட்டு சுத்தம் பண்ணியாவணும். வேலைய முடிச்சிட்டுப் போற அலமலப்புல அவுங்க போட்டதைப் போட்ட எடத்துல போட்டுட்டுப் போயிருப்பாங்க. அதையெல்லாம் கொஞ்சம் பாத்துத்தாம் கவனிச்சி செஞ்சாவணும். வூட்டுல வேலை நடக்குதுன்னா வேலைக்கு வர்றவங்க மட்டும் வேலை பாக்குறதா அத்து இருக்காது. வூட்டுல இருக்குற எல்லாருமே அந்த வேலைக்காக கூட மாட ஒத்தாசையப் பண்ணியாவணும். அப்பிடிப் பாத்து வூட்டுக்குள்ள பாக்குற கொத்து வேலையோ, மர வேலையோ முடிஞ்சாத்தாம் வூடு வூடா இருக்கும். அது வரைக்கும் அலமலப்பத்தாம் இருக்கும்.
            வூட்டுல எதாச்சிம் வேலைன்னு ஆரம்பிச்சிட்டா வெங்குவுக்கும், சுப்பு வாத்தியாருக்கும் தாங்கலா போயிடும். வேலைன்னு ஆரம்பிச்சா தொடர்ச்சியா நடந்து முடிஞ்சிட்டா அதோட செரமம் புரியாது. மின்னாடி ஒரு காலத்துல அப்பிடித்தாம் கொத்து வேலையோ, தச்சு வேலையோ அந்த வேலைய முடிச்சிட்டுத்தாம் இன்னொரு வூட்டு வேலைக்குப் போவாங்களாம் மக்கா. இப்போ அப்பிடில்லாம் இல்ல, வேலையப் பிடிக்கிறதா சொல்லிக்கிட்டு ஒரே நேரத்துல நாலு வூட்டு வேலைய இழுத்துப் போட்டுக்கிடுறாங்க. அப்பிடி இழுத்துப் போட்டுக்கிட்டு நாலு வூட்டுல எந்த வூட்டுக்கும் வேலைய முடிக்காம நாலு வூட்டையும் சந்தியில நிக்க வுட்டுப்புடுறாங்க.
            ஒரு நாலு நாளு ஒரு வூட்டுல வேலையப் பாக்குறது. அஞ்சாவது நாளு இன்னொரு வூட்டுல முக்கியமான வேலெ இருக்கு, அதெ முடிச்சிக் கொடுக்கச் சொல்லி அவசரம் பண்றாங்கன்னு சொல்லிட்டு அங்க வேலைக்கிப் போயிடுறது. இப்பிடியே ஒரு வூடு மாத்தி இன்னொரு வூடுன்னு போயிப் போயி எல்லா வூட்டுலயும் வேல அரையும் கெறையுமா நின்னுகிட்டுக் கெடக்குறது இப்போல்லாம் சகஜமாப் போயிடுச்சி. அதுக்காகக் கோவப்பட்டா வர்ற வேலையாளுங்க வராமப் போயிடுவாங்க. ரொம்ப சாமர்த்தியமாப் பேசி தாஜா பண்ணித்தாம் அவுங்களை வேலைக்குக் கொண்டு வர வேண்டியதாயிருக்கு.
            சித்துவீரன் நம்மட பொண்ணு மேல இம்மாம் அக்கறையாப் பேசுறாம்லேங்றதால அவ்வேம் வேலைக்கிச் சரியா வந்து முடிச்சிக் கொடுத்துப்புடுவாம்ன்னு நெனைச்சுக்கிட்டு மிதாப்பா இருந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. நாலு நாளைக்கு நல்லா வேலைக்கி வந்து சித்துவீரன் அஞ்சாவது நாளு வேலையக் காட்ட ஆரம்பிச்சிதுல நொந்துட்டாரு சுப்பு வாத்தியாரு. அதுக்கு பிற்பாடு ஒரு ரண்டு நாளைக்கி வேலைக்கி வர்றது, மூணாவது நாளு அங்க வேல, இங்க வேலன்னு எதாச்சிம் சொல்லிக் கெளம்பிடறதுன்னு ஆரம்பிச்சாம் சித்துவீரன். அதுக்காக வாங்கிப் போட்ட சாமானுங்க வேற அங்க, அறுத்துப் போட்ட மரச்சட்டங்களும், பலவைகளும் இங்கன்னு ஒதுங்க வைக்க முடியாம கெடந்துச்சுங்க.
            ஏம்டா இந்த வேலைய ஆரம்பிச்சோம்னு சுப்பு வாத்தியாரு நொந்துப் போற அளவுக்கு ஆறு மாச காலத்துக்கு பின்னாடி விரிவாக்கம் பண்ணுன தகரக் கொட்டாயிக்கான வேலையோட பீரோ செய்யுற வேலையும் நடந்துச்சு நடந்துச்சு நடந்துகிட்டே இருந்துச்சு. வாரத்துல ஒரு நாளு, ரெண்டு நாளுன்னு வேல பாத்துக்கிட்டு இருந்த சித்துவீரன் அதெ கொஞ்சம் மாத்தி பத்து நாளுக்கு ஒரு தபா ஒரு நாளு, ரெண்டு நாளுன்னு ஆரம்பிச்சி, மாசத்துக்கு ஒரு தபா ரண்டு நாளுங்க வரைக்கும் போயிட்டாம். சுப்பு வாத்தியாரால ஒண்ணும் சொல்ல முடியல. ஏம் இவ்வேம் இப்பிடி பண்ணுறாம்ன்னு இந்த விசயத்தைக் கொடைய ஆரம்பிச்சப்பத்தாம் சித்துவீரனுக்குச் சரியா வேல தெரியாதுங்ற விசயமே அவருக்குப் புலனாச்சு.
            வேலை தெரியாத சித்துவீரன் எப்பிடி வெளிநாட்டுல போயி வேல பார்த்தாம்? வெத வெதமா நவீனமான கருவிகளெ வெச்சிக்கிட்டு அலம்பல் விடுறாம்?ன்னு அடுத்தடுத்தா கேள்விகளா வந்துப் போச்சுது சுப்பு வாத்தியாரு மனசுக்குள்ள. மரச்சாமானுங்க விக்குற கடையிலயும்தாம் எல்லா சாமானுங்களும் இருக்கு. அதுக்காக அந்தக் கடைய வெச்சிருக்கிறவருக்கு அந்தச் சாமானுங்கள வெச்சி செய்யுற எல்லா வேலையும் தெரியும்னு அர்த்தமாயிடுமா? வெளிநாட்டுல போயி அப்பிடி இப்பிடின்னு கூட மாட வேலை செய்யுறவங்களை வெச்சி எப்பிடியோ ஒப்பேத்திருக்காம் சித்துவீரன். நாடு திரும்புறப்போ நவீனமான சாமானுங்கள கொஞ்சம் வாங்கிப் போட்டுக்கிட்டு திரும்பியிருக்காம். அதெ பாத்துப்புட்டு நம்ம பய மக்கா இப்பிடி சாமானுங்களோட வந்தவவேம் அங்க எப்பிடி வேலையப் பாத்திருப்பாம்னு ஆகா ஓகோன்னு அளக்க ஆரம்பிச்சிட்டுங்க.
            வடவாதி பஸ் ஸ்டாண்டுங்றது பஸ்ஸூ நிப்பாட்டுற அளவுக்கு பெரிய பஸ் ஸ்டாண்டு கெடையாது. பஸ்க யூ டேர்ன் போட்டு திரும்புற ஒர எடம் அவ்வுளவுதாங் வடவாதி பஸ் ஸ்டாண்டுங்கிறது ஒங்களுக்கு நல்லாவே தெரியும். வர்ற பஸ்ஸூங்க ஒரு யூ டேர்னெ போட்டுட்டு அஞ்சு நிமிஷமோ, பத்து நிமிஷமோ நின்னுக்கிட்டு போயிக்கிட்டே இருக்கிறதைதாங் வடவாதி பஸ் ஸ்டாண்டுன்னு சொல்லிட்டு இருக்காங்க சனங்க. பஸ் ஸ்டாப்புலன்னா ஒரு நிமிஷம், ரெண்டு நிமிஷம் நிக்குற பஸ்ஸூங்க, இத்து பஸ் ஸ்டாண்டுங்கற கெளரவத்தெ கொடுக்கணும்னு அஞ்சு நிமிஷமோ, பத்து நிமிஷமோ நிக்குமுங்க. பஸ்ஸூ யூ டேர்ன் போடுற எடத்துலேந்து மூணு வூடு தள்ளிப் போனா சித்துவீரனோட வூடு. யூ டேர்ன் போடுறதுக்கு திரும்புறதுக்கு மின்னாடி நாலு கடை தள்ளி நின்னா அதுதாங் சித்துவீரனோட பட்டறை. அங்க வெச்சித்தாம் பீரோக்கள கோத்து வித்துட்டு இருக்காம் சித்துவீரன். அங்க அப்பிடி நின்னுகிட்டு இருந்த பீரோக்கள்ல ரண்டுப் பாத்து மயங்கிப் போயித்தாம், சித்துவீரன் அபாரமான வேலைக்காரனா இருப்பாம் போலருக்குன்னு நெனைச்சி வேலையத் தூக்கிக் கொடுத்துப்புட்டாரு சுப்பு வாத்தியாரு. சின்ன வயசுல அப்பிடி இப்பிடின்னு இருக்குறவங்க, பின்னாடி பெரிய வேலைக்கார ஆளுகளா ஆயிடறது இல்லையா, அப்பிடி நெனைச்சுப்புட்டாரு அவரு.

            அதாச்சி, ஊருல அலைஞ்சித் திரிஞ்ச காலத்துல சித்துவீரன் ஒரு வெத்துப் பயங்கறது சுப்பு வாத்தியாரு அறிஞ்ச ரகசியம்தான்னாலும், வெளிநாடு போயிட்டு வந்ததுல வித்தைகளக் கத்துட்டுப் பெரிய ஆளாயிருப்பாம்னு நெனைச்சிப்புட்டாரு. வேல தெரியாதப் பயெ எப்பிடி பட்டறைக்கு மின்னாடி பீரோவக் கோத்து வைக்க முடியுங்றதுலதாங் நெறைய விசயங்கள் உள்ளார வந்துச்சு. பட்டறைக்குப் பக்கத்துல இருக்குறவங்களுக்குத்தாம் பீரோக்க எப்பிடிப் பெறப்பெடுக்குதுங்ற ரகசியம் தெரியுமே தவிர, போறப்புயம் வாரப்பயும் பட்டறையப் பாக்குறவங்களுக்கு அது எப்பிடித் தெரியும்? அப்பிடித்தாம் சுப்பு வாத்தியாரு பட்டறைப் பக்கமா டிவியெஸ்ல வர்றப்பயும், போறப்பயும் பாத்து ஏமாந்துப் போனாரு.
            சித்துவீரனோட பட்டறையில இருக்கற பீரோக்க ஒவ்வொண்ணும் பாக்குக்கோட்டையிலேந்து செஞ்சு வாரது. அதெ அங்க ஒரு வெலைக்கி வாங்கி டாட்டா ஏஸ்ல வெச்சி இங்கக் கொண்டு வருவாம். இந்த வேலையெல்லாம் ராவோட ராவாவோ, விடியுறதுக்கு மின்னாடியோத்தாம் நடக்கும். அப்பிடி வாங்கி வெச்ச பீரோவுலத்தாம் சித்துவீரன் வேலப் பாக்குறாப்புல ஒரு நடிப்பெ கொடுப்பாம். அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் போறவங்களுக்கு அத்து ரொம்ப பெரமிப்பா தெரியும். பக்கத்துலயே கொஞ்சம் மரச்சட்டங்களையும், பலவைகளையும் அடுக்கி வேற வெச்சிருப்பாம் அவ்வேம்தாம் வேலை செஞ்சி பீரோவ செஞ்சது போலவும், இத்து மாதிரிக்கி இன்னும் நெறைய வேலைய செய்யப் போறதெ காட்டுறது போலவும். வாங்கி வெச்ச பீரோவ பட்டச்சீலைய வெச்சி மேலுக்கு மேல இவ்வேம் ஒரு தேய்ப்புத் தேய்ப்பாம். கொஞ்சம் வார்னிஷை வாங்கி வெச்சிக்கிட்டு நாலு பேரு பாக்குறாப்புல பீரோ மேல தடவிக்கிட்டுக் கெடப்பாம். அப்போ பாக்குறப்போ பீரோ பளபளான்னு இருக்குமா, அதே பாத்தவங்க மெரண்டுத்தாம் போவாங்க, "இம்மாம் பெரிய பீரோவ செய்யுறவேம், எம்மாம் பெரிய வேலைக்காரனா இருக்கணும்!"ன்னு. பாக்குக்கோட்டையிலேந்து வாங்கியாந்த பீரோவ இவ்வேம் செஞ்சதா சொல்லி, அங்க வாங்கிட்டு வந்ததிலேந்து கூட கொஞ்சம் வெலைய வெச்சி இவ்வேம் வித்துப்புடுவாம். அந்த எடைப்பட்ட கமிஷம் காசுலத்தாம் அவ்வேம் வாழ்க்கை ஓடிட்டுக் கெடந்துச்சு.
            பாக்குக்கோட்டையிலேந்து அப்பிடிப் பீரோவ வாங்கிட்டு வாரதுலயும் நெறைய விசயங்கள் இருந்துச்சி. பீரோவ வாங்கப் போற மொத நாளு சித்துவீரனுக்கும் சுந்தரிக்கும் வூட்டுல பெரிய சண்டையே நடக்கும். சுந்தரியைப் போட்டு நாயடி பேயடி அடிப்பாம். "எவ்வங்கிட்டயோ படுத்துக்கிட்டு புள்ளையப் பெத்துக்கிட்டு எம் புள்ளேன்னு சொல்றீயேடி குச்சிக்காரி?"ன்னு டாஸ்மாக்குல போயி திரவத்தெ ஊத்திக்கிட்டு வந்து சுந்தரியப் போட்டு பொரட்டிப் பொரட்டி எடுப்பாம். "ஒன்னய ஒஞ்ஞ அப்பம் வூட்டுலக் கொண்டு போயி வுட்டத்தாம் சரிபெட்டு வருவே!"ன்னு தூக்கிப் போட்டு மிதிமிதின்னு மிதிப்பாம். அப்பிடிப் போட்டு மிதி மிதின்னு மிதிச்சிப்புட்டு சுந்தரியோட பொட்டிப் படுக்கையெல்லாம் டாட்டா ஏஸ்ஸ ஒண்ணு பிடிச்சி அதுல போட்டுக்கிட்டு, புள்ளைங்களையும் தூக்கி அதுல போட்டுக்கிட்டு ராத்திரியோட ராத்திரியா பாக்குக்கோட்டைக்குப் போவாம்.
            சித்துவீரன் வந்துட்டான்னு தெரிஞ்சால பாக்குக்கோட்டை ராஜாமணி தாத்தாவுக்கு ஈரக்கொல நடுங்கிப் போயிடும். சரசு ஆத்தாவுக்கு நெஞ்சு பொளந்து போனது மாதிரி இருக்கும். பாக்குக்கோட்டை போயி எறங்குனதுமே டாட்டா ஏஸ்ஸோட டிரைவரோட போயி டாஸ்டாக்குத் திரவத்தெ ஊத்திக்கிட்டு ராத்திரி முழுக்க ராஜாமணி தாத்தா வூடு இருந்த சிங்கப்பூரு காலனிக்கு மின்னாடி சத்தம் போடுவாம்ன்னா அப்பிடிச் சத்தம் போடுவாம். அதுல சிங்கப்பூரு காலனியே கதி கலங்கிப் போயிடும். வூட்டுல எல்லாரும் கதவச் சாத்திக்கிட்டு ஒண்ணுத்தையும் சொல்ல முடியாம சிவராத்திரிக் கொண்டாடுறாப்புல ஆயிடும். பொழுது விடிஞ்சதும் பஞ்சாயத்து ஆரம்பிக்கும். அப்பத்தாம் ரண்டு பீரோல வாங்கிக் கொடுத்தா பொண்டாட்டியையும், புள்ளையையும் அழைச்சிக்கிட்டு ராவோட ராவா ஊரு திரும்புறேம்பாம் சித்துவீரன். ஒடனே ராஜாமணி தாத்தாவும், பாலாமணியும் கடன ஒடன வாங்கி ரண்டுக்கு மூணு பீரோவ வாங்கிக் கொடுத்து டாட்டா ஏஸ்ல ஏத்தி ராவோட ராவா கெளப்பி வுட்டுப்புடுவாங்க. ஏன்னா ராத்திரி சித்துவீரனெ தங்க வைக்குறதுங்றது வூட்ட கொளுத்தி விட்டுப்புட்டு வீட்டுக்குள் உக்காந்திருக்கிறது போல.
            ரண்டு பீரோலுக்கு ஏம் மூணு பீரோலுன்னா ரண்டு பீரோன்னா ரண்டு மாசத்துல பாக்குக்கோட்டைக்குத் திரும்புவாம் சித்துவீரன், மூணு பீரோலுன்னா மூணு மாசத்துல திரும்புவாம் சித்துவீரங்றது ஒரு கணக்கு. ரண்டு மாசத்துக்கு ஒரு தபா இவனோட லோளு படுறதெ வுட மூணு மாசத்துக்கு ஒரு தபா படுவோம் அந்த லோளைன்னுத்தாம் மூணு பீரோலா வாங்கி ஏத்தி வுடுறது. மூணு பீரோ வித்தக் காசிய ஒண்ணுக்குப் பாதியாவோ, பாதிக்குப் பாதியாவோ ராஜாமணி தாத்தாகிட்டெ கொடுப்பாம் சித்துவீரன் ரொம்ப யோக்கியம் மாதிரி. அப்பிடிக் கொடுக்குறப்ப ஒரு வார்த்தெ சொல்லுவாம் பாருங்க, "எவ்வேம் வூட்டுக் காசியும் நமக்கு வாணாம். நாம்ம ஒழைச்சக் காசியில நாம்ம குடும்பத்தெ நடத்திப்பேம். ஒவ்வொரு வூட்டுலயும் மருமவ்வேனுக்கு எம்மாம் பண்ணுறாங்க. இந்த நாதியத்த வூட்டுல மூணு பீரோல வாங்கிக் கொடுக்குறதுக்கு எம்மாம் பிசாத்து வேலைகப் பாக்குதுங்க!" அப்பிடின்னு சவுண்ட வேற வுடுவாம். ஒரு லச்சத்துக்கு மேல ரூவாயப் போட்டு வாங்கிக் கொடுத்த பீரோலு மூணுக்கும் அறுபதாயிரமோ, எழுவதாயிரமோத்தாம் சித்துவீரன் பணமா கொடுப்பாம். பாக்கிக் காசியெல்லாம் ஸ்வாகாத்தாம். அதெ பத்தி அவ்வேங்கிட்ட ஒண்ணும் கேக்க முடியாது.
            ஒரு தபா அப்பிடித்தாம் வெவரம் புரியாம இத்துச் சம்பந்தமா கேட்டுப்புட்டாம் பாலாமணி. அதுக்குச் சித்துவீரன் சொன்னாம், "எவங்கிட்டேயே படுத்துக் கெடந்துப்புட்டு ஒந் தங்காச்சிப் பெத்த புள்ளீயோளுக்கு நம்மள அப்பங்றீங்களடா! அதுக்கு எவ்வேம்டா காசியக் கொடுக்குறது. நொங்கத் திங்குறவேம் ஒருத்தேம். அதெ நோண்டி திங்குறவேம் இன்னொருத்தேம். பழிய மட்டும் ஊம்பிக்கிட்டு நின்னவேம் மேல போட்டுப்புடுவீங்களாடா தாயோளிப் பயலுவோளா?"ன்னு. அதுலேந்து பாலாமணி ஒண்ணும் கேக்குறதில்ல. சித்துவீரனோட பேச்சை வுட்டும் நாளாச்சி.
            பீரோல வாங்கி ஏத்திக்கிட்டு ஊருக்கு வர்றவேம் பொண்டாட்டிப் புள்ளைய அதே டாட்டா ஏஸ்ல ஏத்திட்டு வரலாம்ல. அதாங் வர மாட்டாம். அவுங்கள சரசு ஆத்தாத்தாம் பஸ்ல அழைச்சாந்து மறுநாளு கொண்டாந்து வுடணும். மூணு பீரோலயும் வித்து முடிக்கிற வரைக்கும் எந்தப் பெரச்சனையும் இருக்காது. மூணு பீரோ வித்து முடிச்சதும் திரும்பவும் டாட்டா ஏஸ்ஸோட பாக்குக்கோட்டைக்குப் பறப்பாம் சித்துவீரன்.
*****


2 comments:

  1. சிறந்த படைப்பு

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாசித்து நேசிக்கும் ஐயாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

      Delete

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...