17 Mar 2020

ஆண்டவன் அறியாத ரகசியங்கள்!

செய்யு - 390        

            ஆர்குடி கமலாம்பாள் தாயார் மகளிர் கல்லூரிக்குப் போறதுன்னா வடவாதிக்குப் போய்தாம் பஸ்ஸப் பிடிச்சிப் போயாகணும். இந்த ஊருக்கு மொத்தமா ஓடுறதே நாலஞ்சு பஸ்ஸூதாங்ற நெலமை கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வருது. நெறைய பஸ்ஸூக ஓடுது. ஆனா அந்த பஸ்கள்ல எல்லாரும் ஏறிப் போயிட முடியாது. ஆர்குடிக்குப் பக்கத்துல இருக்குற கர்ணாவூரு பீர் பேக்கடரிக்குன்னே ஒரு பஸ்ஸூ ஓடுது. அதுல பீர் பேக்கடரிக்குப் போயி வேலை பாக்குறவங்க மட்டும்தாம் ஏறிப் போவ முடியும். திருவாரூர்ல இருக்குற ஒரு பள்ளியோடத்துக்கு ஒரு பஸ்ஸூ, அங்க இருக்குற காலேஜூக்கு ஒரு பஸ்ஸூ, அதே போல கூத்தாநல்லூர்ல இருக்குற பள்ளியோடத்துக்கு ஒரு பஸ்ஸூ, ஆர்குடியில இருக்குற கமலாம்பாள் தாயார் மகளிர் காலேஜூக்கு ஒரு பஸ்ஸூன்னு ஊருக்குள்ள பல பஸ்கள ஓடிட்டு இருக்கு.
            சுத்துப்பட்டு கிராமங்கள்ல இருந்து எத்தனையோ மொறை, எத்தனையோ பேரு ஆர்குடியிலயும், திருவாரூர்லயும் இருக்குற கவர்மெண்டு பஸ் டெப்போவுக்குப் போயி ஊருக்குக் கூடுதலா ஒரு பஸ்ஸூ வுடணும்னு கையில காலுல வுழுவாத கொறையா மனு செஞ்சிப் பாத்தாச்சி. அங்க எழுதிக் கொடுத்த மனுவெல்லாம் எந்தக் காயிதக் கெடங்கோட குப்பைக் கூடத்துக்குப் போனிச்சோ தெரியல. எழுதிக் கொடுத்த அம்மாம் காயிதத்தையும் சேர்த்தா அதுக்கு நாலு கப்பலு வாங்கி வுடணும். அப்பிடிக்கி நடையா நடந்திருக்காங்க சனங்க, பஸ்ஸ ஒண்ணு வுடுங்கன்னு கெடையா கெடந்திருக்காங்க சனங்க. அப்பிடிப் போன சனங்களப் பாத்து, இருக்குற ஊருக்கே பஸ்ஸூ வுட முடியலன்னும், இன்னும் பஸ்ஸூ போவாத ஊரு எத்தனையோ இருக்குன்னும், ஒங்க ஊருக்குத்தாம் ஒரு பஸ்ஸூ ஓடுதுல்லன்னும் சொல்லி அதிகாரிங்க என்னென்னவோ சொல்லி அனுப்பிச்சிருக்காங்க.
            கவர்மெண்டாலயே கூடுதலா ஒரு பஸ்ஸூ வுட முடியாத ஊருகளுக்கு இன்னிக்கு அஞ்சாறு பஸ்ஸூங்க பள்ளியோடத்துக்கும், காலேஜூக்குன்னும், பீர் பேக்கடரிக்குன்னும் ஓடிட்டுக் கெடக்குது. கவர்மெண்டு பண்ண முடியாததெ தனியாரு பள்ளியோடங்களும், தனியாரு காலேஜூங்களும், பீர் பேக்கடரிகளும் செய்யுதுன்னா அதுங்க எல்லாமும் கவர்மெண்ட வுட அதிகமா சம்பாதிக்குதா? யில்ல நாம்ம கவர்மெண்டுக்குச் சரியா ஒத்துழைக்காம தனியாருல்ல இப்பிடில்லாம் நடக்குதுன்னாங்றது வெளங்காத விசயம்தாம். இப்பிடி தனியாரு பள்ளியோடங்களுக்கும், காலேஜூகளுக்கும், பேக்கடரிகளுக்கும் பஸ்களுக்கு கொறைச்சல் இல்லாம ரோடு தளும்பிக் கெடக்குது.
            கவர்மெண்டு ரோட்டுல இந்த மேனிக்கி தனியார் பஸ்களா ஓடுதுன்னு நெனைக்கறதா? யில்லே, இப்பிடிப் பஸ்க ஓடாட்டி கவர்மெண்டு பஸ்ல கூட்டாம் தாங்காம பிதுங்கிப் போயி வெடிச்சிக் கெடக்கும்னு நெனைக்குறதா? விகடு படிச்சக் காலத்துலேந்து செய்யு படிக்குற ஏழெட்டு வருஷத்துல நெறைய மாற்றங்கத்தாம் உண்டாயிருக்கு. இதே விகடு படிச்ச காலத்துல செய்யு படிச்சிருந்தா அவ புளிமூட்டைக்குள்ள திணிச்ச புளியாங்கொட்டை பொடியாயிப் போன கதையாத்தாம் கவர்மெண்டு பஸ்ல பிரயாணம் போயிருக்கணும். சுப்பு வாத்தியாரு தலைமொறையில கவர்மெண்டு பஸ்ஸூ, கவர்மெண்டு டிரெய்னிங் காலேஜூல படிச்சு வெளியில வந்த கடெசி ஆளு விகடுதாம். அவரோட மவனோட முடிஞ்சிப் போற அளவுக்கு அந்த நெல‍ம மாறுறதுக்கு இடையே இருவது வருஷமோ, முப்பது வருஷமோ கால வித்தியாசம் யில்ல, ஒரு ஏழெட்டு வருஷத்துக்குள்ள எல்லாமே மாறிப் போச்சு.
            விகடு படிச்சக் காலத்துல தனியாரு பள்ளியோடத்தையும், தனியாரு காலேஜையும் தேடித்தாம் கண்டுபிடிக்கணும். இப்போ நெலமெ அப்பிடியே தலைகீழா ஆயிப் போச்சுது. இப்போ கவர்மெண்டு பள்ளியோடத்தையும், கவர்மெண்டு காலேஜையும் தேட வேண்டியதா இருக்கு. டவுனுக்கு பத்து பாஞ்சு தனியாரு பள்ளியோடம் இருக்கு, நாலஞ்சு தனியாரு காலேஜூ இருக்கு. தனியாரு பள்ளியோடமும், தனியாரு காலேஜூம் இல்லாத டவுன தமிழ்நாட்டுல தேடினாலும் கெடைக்காது. ஆனா, கவர்மெண்டு காலேஜூம், பள்ளியோடமும் இல்லாத டவுனு நெறைய இருக்கும்.
            இப்போ புள்ளைகளும் நெறைய படிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு காலத்துல படிக்க வெச்சா காசுல்ல செலவாவும்னு நெனைச்ச நெனைப்பு மாறிப் போயி, இப்போ காசில்லாட்டியும் கடன ஒடன வாங்கி காச செலவு பண்ணிப் படிக்க வெச்சாத்தாம் அத்து படிப்புங்ற நெனைப்பு உண்டாயிப் போச்சு. சனங்களோட நெனைப்பு மாறிப் போச்சு. காச செலவு பண்ணிப் படிக்க வெச்சத்தாம் அத்து படிப்புங்ற மாதிரிக்கி மனப்பான்மை மாறிப் போச்சு. ஓசிக்கு எதெ கொடுத்தாலும் அதெ வாங்குறதுக்கு கூட்டத்துல நின்னு நசுங்கிச் சாவுற சனங்ககிட்டெ படிப்பெ மட்டும் ஓசியில கொடுக்குறோம்னு சொல்லிக் கொடுத்தாலும் அதெ ஏத்துக்குற மனப்பக்குவம் எந்த சனத்துகிட்டேயும் இல்ல. படிப்புன்னா கடன்பட்டு, சின்னாபின்னப்பட்டு, வட்டியில வதையழிஞ்சிப் போயி புள்ளைகள படிக்க வெச்சத்தாம் சனங்களுக்கும் மனசுக்குள்ள ஒரு ஆத்ம திருப்தி வருது. அது என்னவோ தெரியல, ஏன்னும் தெரியல ஒவ்வொரு சனமும் தன்னோட புள்ளைய இத்தனெ ஆயிரம் செலவு பண்ணிப் படிக்க வெச்சேன்னும், இத்தனெ லட்சம் செலவு பண்ணிப் படிக்க வெச்சேன்னும் சொல்றது ஒரு சமூக கெளரவமால்லா ஆயிடுச்சு. அதுக்காவே சனங்க புள்ளைகள இப்போ கடன வாங்கி கடன்பட்டாரு நெஞ்சத்தெ போல படிக்க வைக்குதுன்னு சொன்னாலும் அதுல பெரிய குத்தம் ஒண்ணுமில்ல.

            ஒரு காலேஜூக்கு ஒரு படிப்பெ படிக்கணும்னு எழுதிப் போட்டு அது கெடைக்கலன்னா அதெ வுட்டுப்புட்டு வேற சோலிய பாக்குற காலமெல்லாம் மலையேறிப் போயிடுச்சு. என்ன படிப்ப படிக்க புள்ளெ படிக்க நெனைக்குதோ, அதெ படிக்க காசிருந்தா போதும், அந்தப் படிப்பெ படிக்க வைக்கலாங்ற கால கட்டத்துல செய்யு படிச்சிட்டு இருந்தா. காசிருந்தா எந்தப் படிப்பெ வேணாலும் யாரு வேணாலும் படிக்கலாங்ற நெலமைக்கு ஒரு கால கட்டம் மாறிப் போச்சு ரெண்டாயிரத்து பத்துக்குப் பிற்பாடு.
            செய்யு படிக்குற கமலாம்பாள் தாயார் காலேஜூக்கான பஸ்ஸூ வடவாதி வரைக்கும்தாம் வருது. அதால திட்டையிலேந்து வடவாதி வரைக்கும் சைக்கிள்ல போயி அங்கயிருந்து பஸ்ஸப் பிடிச்சிப் போறாப்புல ஒரு நெலமெ. பியெஸ்ஸிய படிச்சு முடிக்குற வரைக்கும் வடவாதியில இருக்குற சைக்கிளு ஸ்டாண்டுலத்தாம் சைக்கிளப் போட்டுட்டு காலேஜூ பஸ்ஸப் பிடிச்சிப் போயிட்டு இருந்தா செய்யு.
            என்னைக்கிச் சுப்பு வாத்தியாரு வூட்டுக்குப் பின்னாடி விரிவாக்கம் பண்ணி வேலைய ஆரம்பிச்சு அதுல மரவேலைக்கு சித்துவீரனெ வெச்சிக்கிட்டாரோ, அன்னிலேந்து ஒரு வாரத்துல செய்யு சைக்கிள சித்துவீரனோட வூட்டுக்கு மின்னாடி போடுறாப்புல ஆயிடுச்சு. சித்துவீரன் ஒரு உணர்ச்சிகரமான ஆளு. நல்லதுன்னாலும், கெட்டதுன்னாலும் உணர்ச்சிவசப்படாம சித்துவீரனால பேசவோ, நடந்துக்கவோ முடியாதுங்றது நீங்க அறிஞ்சதுதாம். சுப்பு வாத்தியாரு வேலையக் கொடுத்து கை நெறைய கூலிய கொடுக்குதுலயும் பெருங்கையிக்காரர போல நடந்துப்பாருல்ல. அதுல சொக்கிப் போன சித்துவீரன் சுப்பு வாத்தியாருகிட்டே கேட்டாம், "அத்து ன்னா நம்ம வூட வெச்சிக்கிட்டுப் பாப்பாவ சைக்கிளு ஸ்டாண்டுல சைக்கிள போட வைக்கிறீங்க? நம்ம வூட்டுக்கு மின்னாடிப் பாத்தீங்கள்ல. எத்தனெ புள்ளைங்க சைக்கிளப் போட்டுட்டுப் போவுதுங்க. ஒண்ணுத்துகிட்டேயும் காசிய வாங்குறதில்ல. ஊராம் வூட்டுப் புள்ளைக்கே காசிய வாங்குறதில்லங்றப்போ, நம்ம வூட்டுப் பொண்ணு காசியக் கொடுத்து ஸ்டாண்டுல போடுறதாவது? ஸ்டாண்டுல போயி போடுறப்போ நாலு பயெ மேல பாப்பாம், கீழெ பாப்பாம். நம்ம வகையறா பொண்ண அப்பிடி நாலு பேத்துப் பாக்கறதுக்கு வுடுறதா ன்னா? பாப்பாவ நம்ம வூட்டுக்கு மின்னாடியே சைக்கிள போடச் சொல்லுங்க!" அப்பிடின்னாம் சித்து வீரன்.
            சித்துவீரனோட பேச்சுல இப்போ சுப்பு வாத்தியாரு சொக்கிப் போனாரு. இப்பிடி ஒரு ஆளா நம்ம வகையறாவுல இருக்கானேன்னு செய்யுவோட சைக்கிள வூட்டுக்கு மின்னாடிப் போடச் சொன்னதெ பத்திச் சொல்லிச் சொல்லி மாஞ்சுப் போனாரு சுப்பு வாத்தியாரு. என்னா பயெ கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவாம், மித்தபடி நல்ல பயதாம்னு வேற பாக்குறவங்ககிட்டெல்லாம் சொல்றாரு. பாவம் அவம்தாம் என்ன பண்ணுவாம்? பொண்டாட்டிக்காரி அவனுக்கு ஏத்தவளா இருந்தா அவ்வேம் ஏம் அசிங்கம் அசிங்கமா பேசப் போறாம்? மனுஷனோட வாயில நல்ல வார்த்தையும், கெட்ட வார்த்தையும் வாரதுங்றது அவனோட கையில மட்டுமா இருக்கு? சுத்தி இருக்குறவங்களும் நல்ல வெதமா நடந்துக்கிட்டாத்தானே நல்ல வார்த்தைக ஒரு மனுஷனோட நாக்குலேந்து வரும்? நுனி நாக்குல பச்சை மொளகாய அரைச்சுத் தடவி வுட்டுப்புட்டு ருசிச்சுச் சாப்புடுன்னா எவ்வேம் சாப்புடுவாம்? உஷ் இஷ்ன்னு சொல்லிக்கிட்டு அடிக்கத்தான பாயுவாம்? அப்பிடித்தாம் இருக்குது சித்து வீரனோட நெலமென்னு மேலும் மேலும் நெனைச்சிக்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. சித்து வீரன் அசிங்கமா பேசுறதுங்றதெ அகராதி வெச்செல்லாம் அர்த்தம் கண்டுபிடிச்சிட முடியாது.
            பொண்டாட்டிக்காரிய வருஷத்தேவிடியாம்பாம், கண்டாரோலிம்பாம், சொம்புநக்கிம்பாம், சும்முனாச்சி படுத்து எழுந்திரிச்சாலும் எவ்வேங் கூட படுத்து எழுந்திரிச்சி வந்தேம்பாம், கூதி அரிப்பெடுத்த நாயிம்பாம், அவ்சாரிம்பாம், நாடுமாறிம்பாம், பச்சத் தேவிடியாம்பாம், ஒலக்கைய எடுத்துக் குத்துனாலும் அடங்தேவம்பாம், ஒருத்தனெ கட்டிக்கிட்டு ஒம்போது பேர்ர வெச்சிருக்கிறவம்பாம், குச்சிக்காரிம்பாம். அப்பிடி அசிங்கமா பேசுறதெ நாலு சுவத்துக்குக் கேக்குற மாதிரிக்கும் பேச மாட்டாம். நாலு ஊரே கேக்கற மாதிரிக்கித்தாம் பேசுவாம். அப்பிடி ஒரு கொணம் சித்து வீரனுக்கு உண்டாயிப் போச்சுது.
            ஒரு ஆம்பிளைக்கு அவனோட பொண்டாட்டி எவனோடயே படுத்து நாலு தடவெக்கு மேல கருவெ கலைக்குறாப்புல நெலமெ வந்தா அப்பிடித்தாம் பேச்சு வரும்ன்னு அக்கம் பக்கத்துலயும் இப்போ பேச்சாயி அவ்வேம் அப்பிடிப் பேசுறதெ யாரும் பெரிசா கண்டுக்கிடறதில்ல. மொத்தத்துல சித்து வீரன் நல்லதா பேசுறதும், குத்தமா பேசுறதும் ரெண்டும் ஒண்ணுதாம். அவனுக்கு நல்ல வார்த்தைகப் போலவே கெட்ட வார்த்தைகளும் வரும், கெட்ட வார்த்தைக போலவே நல்ல வார்த்தைகளும் வரும். எந்த நேரத்துல எந்த வார்த்தைக வருங்றது அவ்வேம் மட்டும் அறிஞ்ச ரகசியம். ஒரு மனுஷன் நல்லவனா இருக்குறதும், கெட்டவனா இருக்குறதும் அவ்வேம் வாயில வர்ற வார்த்தைகள்ல இருக்குன்னு சொல்லுவாங்க. சித்துவீரன் வாயில வர்ற வார்த்தைகள வெச்சி அவ்வேம் நல்லவனா இருக்கான்னா, கெட்டவனா இருக்கான்னு கணிச்சிட முடியாது. சில பேரு ரண்டுமால்ல இருப்பாங்க. அவுங்கள எப்பிடிக் கணிச்சிட முடியுங்றது அவனெ படைச்ச ஆண்டவனே அறிய முடியாத ரகசியம்தாம்.
*****


1 comment:

  1. சிறப்பு
    பாராட்டுகள்

    கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
    http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

    ReplyDelete

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...