16 Mar 2020

பொட்ட புள்ளெ மேல்படிப்புப் படிக்குறதுன்னா சாமானியமா?

செய்யு - 389        

            ஒரு பொம்பளப் புள்ளெ துணி மணிக்கு ஆசைப்படுறாளா? நகை நட்டுக்கு ஆசைப்படுறாளா? படிக்கத்தானே ஆசைப்படுறா! அதெ செஞ்சு வைக்க பொம்பளப் புள்ளைகளுக்கு வயசு ஒரு தடையா போவுது. காலா காலத்துல அதுகளுக்கு ஒரு கல்யாணத்தெ முடிக்கணும்னா அந்த வயசுக்குள்ள என்னத்தெ படிக்க வைக்க முடியுமோ அதத்தானே படிக்க வைக்க முடியும், அதைத்தாண்டி படிக்க வைக்கிறதுன்னா வயசும் தள்ளிப் போவுது, படிக்குற படிப்புக்கேத்த மாப்புள்ளையாவும்ல தேட வேண்டியாவுது. கல்யாணங் காட்சின்னு கதையெ கட்டி வுட்டுப்புட்டா பெறவு பொம்பளைப் புள்ளைக படிக்கிறதுங்றது காளை மாட்டுக்கு மடியிருந்து அதுல பால கறக்குறாப்புலத்தாம். எதெ படிக்கிறதா இருந்தாலும் அப்பங்காரருக்கு மவளா இருக்குறப்பவே பொம்பளப் புள்ளைங்க படிச்சிக்கிட்டாத்தாம், புருஷங்காரனுக்குப் பொண்டாட்டியா ஆயிப் படிக்கிறதெல்லாம் ஆயிரத்துல ஒரு பொம்பளப் புள்ளைக்கி வாய்ச்சா அதிசயம்தாம்.
            ஊருலயும் சொந்தப் பந்தத்துலயும் ஒரு பேச்சு வரத்தாம் செய்யும், மவனுக்குக் கலியாணம் ஆயி கொழந்தையாயிடுச்சி, மவளுக்கு ஒண்ணும் ஆவலேன்னு. அத்தோட வுடாம நாக்கெ இன்னும் பெரட்டிப் போட்டு, கலியாணத்தெ பண்ணி வைக்க முடியாம பொண்ணெ படிக்க வெச்சிக்கிட்டு இருக்காங்கன்னும் பேசறதுக்கும் சனங்க யோசிக்க மட்டாங்க. வெத வெதமா கலைடாஸ்கோப்புலச் சொழட்டி டிசைன்ன பாக்குறாப்புல, வெத வெதமா நாக்கெ சொழட்டி ஆழம் பாக்குறதுல மனுஷனுங்களப் போல சென்மங்க இந்தப் பிரபஞ்சத்துல வேற எதுவும் கெடையாது.
            கல்யாணம் ஆயிப் போயிட்டா பொம்பளைப் புள்ளைகளுக்கு ஆயிரத்தெட்டுப் பொறுப்புக வேற வந்துச் சேந்துப்புடும். அந்தப் பொறுப்புகளப் பாக்குறதுக்கே நேரம் போயிடும். பெறவு எங்க அதுங்க படிக்கிறது? அதே நேரத்துல தங்காச்சிச் சொல்றதுங் சரித்தாம், பியெஸ்ஸி, எம்மெஸ்ஸியல்லாம் ஒரே ஓட்டத்துல முடிச்சாத்தாம் சரிப்பட்டு வரும். இதுல கால இடைவெளி வுட்டுப் படிக்குறதுங்றது கொஞ்சம் செரமத்தத்தாம் உண்டு பண்ணிப்புடும். ஒரு ஊஞ்சலு இப்பிடியும் அப்பிடியுமா ஆடும் பாருங்க அதெ போல அப்பங்காரரு பக்கமும் கொஞ்சம் யோசிச்சுப் பாக்குறாம், தங்காச்சிப் பக்கமும் கொஞ்சம் யோசிச்சுப் பாக்குறாம் விகடு. ஊஞ்சலு ஆடிட்டே இருக்கே தவிர நிக்குறாப்புல தெரியல. ஒரு முடிவுக்கும் அவனால வர முடியல.
            விகடுவுக்கு இன்னொரு யோஜனையும் ஓடிச்சு. வேலங்குடி சின்ன மாமாவோட பையேம் தாசு அத்தாம் கலியாணத்துக்குத் தயாரா இருக்குறப்போ அப்பங்காரரு எதுக்குக் கல்யாணத்தெ பண்ணி வைக்கிறதெ பத்தி அலட்டிக்கணும்னு. கலியாணத்தெ பண்ணிக் கொடுக்குறதுதாங் கொடுக்குறோம், நல்ல வெதமா படிக்க வெச்சி அதாங் சீர்சனத்தின்னு சொல்லிக் கலியாணத்தெ பண்ணிக் கொடுக்குறதா வேலங்குடி சின்ன மாமாகிட்டெ பேசிட்டே, ஒரு தீர்க்கமா கலியாணத்தெ பண்ணிக் கொடுக்கலாமேன்னு இந்தப் பிரச்சனைக்கு ஒரு வழியக் கண்டுபிடிச்சிட்டதா நெனைச்சிக்கிட்டு அப்பங்காரர்கிட்டே அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தைக்குப் போனாம் விகடு.
            இப்போ அப்பங்காரர்ட்ட பேசப் போனப்போ அவரு பைப்படியில துணிய வெளுத்துக் காயப் போட்டுக்கிட்டு இருந்தாரு. "யப்பா கொஞ்சம் உள்ளார வாஞ்ஞ!"ன்னாம் விகடு.
            "எதுக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு.
            "முக்கியமான வெசயம்ப்பா!"ன்னாம் விகடு.
            "வேல கெடக்கு. வுட்டுப்புட்டு வார முடியாது! நீயி வேலயத்த வேலயப் பத்தி வெலாவாரியா பேசிட்டு நிப்பே. ஏம்டா ஒமக்கு வேலையில்லன்னா நமக்குமாடா வேலையில்ல?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "உள்ளாரப் போயி பேசுனா ந்நல்லா யிருக்கும்!"ன்னாம் விகடு.
            "இஞ்ஞயே சொல்லு. அப்பிடி ன்னா பெரிய சமாச்சாரம்ன்னு கேட்டுப்புடுவேம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "தங்காச்சி எம்மெஸ்ஸிப் படிக்கட்டும் பாத்துக்கிடலாம்!"
            "முடிஞ்ச கதையெ திரும்ப திரும்ப ஆரம்பிக்காதடாம்பீ! நாம்ம ஒண்ணுந் உந் தங்காச்சிய படிக்க வைக்க முடியான்னு சொல்லல. நம்மாள முடிஞ்சதெத்தாம் படிக்க வைக்க முடியும்னு சொல்றேம்!"
            "கல்யாணங் கட்டி வைக்குறதுன்னா பெரச்சினைன்னா நம்ம தாசு அத்தாம்தாம் இருக்கே. அதுகிட்டெ சொல்லிப்புட்டுப் படிக்க வைச்சிப்புடலாம். ஆசப்படுது தங்காச்சி அதாங்!" அப்பிடின்னாம் விகடு.
            சுப்பு வாத்தியாரு தொவைச்சிக் கொடியில துணியக் காயப் போட்டுக்கிட்டு இருந்ததெ நிறுத்துனாரு. "படிச்சவம்தானடா நீயி? நெருங்குனச் சொந்தத்துல பொண்ணு புள்ளய கட்டிக் கொடுத்தா நாளைக்கிப் பொறக்குறப் புள்ளைக் குட்டிக முடியாம கொள்ளாம போறந்தா ன்னடா பண்ணுவே? அதாம்லா ஒமக்கே தூரமா போயிப் பொண்ண எடுத்துக் கட்டி வெச்சிருக்கேம். ஒனக்குச் சொந்தத்துல பொண்ணு தர்ற நாம் நீயின்னு நெறைய பேரு நின்னாம் பாத்துக்கோ. வேலங்குடி பெரியவரோட பொண்ணுக்கு அப்பிடித்தாம்லா ஆயிடுச்சி. நெருங்குனச் சொந்தத்துல கட்டிக் கொடுத்து மூத்தப் புள்ளைக்கி காது கேக்க மாட்டேங்குது, பேச்சு வார மாட்டேங்குது. அந்தப் பொண்ணு நாம்ம கட்டிக்க மொறையுல்ல பொண்ணு. நாம்ம அப்பவே வேணாம்னு ஆயிப் போயி அத்து ஒரு மன வருத்தமா ரொம்ப காலம் நீடிச்சிப் போச்சு. அத்தோட சொந்தத்துல கட்டுனா ஆயிரத்தெட்டு மனவருத்தம் வந்துத் தொலையும். கண்ணு காணாத எடத்துல கட்டிக் கொடுத்துப்புட்டு அப்பாடான்னு ஒக்காந்துப்புடணும். பெறத்தியானுக்குக் கட்டிக் கொடுத்தா அவ்வேம் பொண்ண பொன்னா பாத்துப்பாம், ஒறவுக்காரனுக்குக் கட்டிக் கொடுத்தா அவ்வேம் பொண்ண புண்ணாக்கிப்புடுவாம்ப்பா. நெறையக் கதையப் பாத்தாச்சி."ங்றாரு சுப்பு வாத்தியாரு ரொம்ப வெளக்கமா.
            "யப்பா ரசா அத்தெ வேற தங்காச்சிய கட்டி வைக்கணும்னு ஒத்தக் கால்ல நிக்குதுப்பா!"ங்றாம் விகடு.
            "அதெ அப்பப்ப பாத்துக்கிடலாம். மொகத்தெ முறிக்கிற மாதிரிக்கி பதில எதையும் சொல்ல முடியா. பியெட்ட ஒரு வருஷத்துக்குள்ள முடிக்கட்டும். பெறவு அப்ப உள்ள நெலமைக்குத் தகுந்தாப்புல பாத்துக்கிடலாம். முங்கூட்டியெல்லாம் எதையும் சொல்ல முடியா. சொல்லவும் வாணாம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "யில்லப்பா ஆசெப் படுது! பியெஸ்ஸியோட அப்பிடியே எம்மெஸ்ஸிய தொடந்தாப்புல படிக்குறது சுலுவா இருக்குமுன்னு தங்காச்சி பிரியப்படுது!"ன்னு வார்த்தைய மென்னு முழுங்குனாம் விகடு.
            "யேலே! ஒம்மட பொண்டாட்டி ஆயி என்னத்தெ படிச்சிருக்கு? டிகிரிய படிச்சது, பியெட்ட முடிச்சி வெச்சிருக்குது. அம்மாம்தான்னே. அதாஞ் செரி. ஒரு வேல கெடைச்சா கெடைக்குறப்ப வேலயாவுது. ஒந் தங்காச்சி மட்டும் ன்னாடா? எத்து சரியோ அதெ செய்யணும்டா மவனே! எத்து செளரியம்ன்னு பாத்துப்புட்டு அதெ பண்ணக் கூடாது! நீயி சொல்றதுல்லாம் அப்பிடித்தாம் யிருக்கு!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "அத்து வந்து... நாமளும் ஒங்ககிட்டெ எதையும் கேட்டதில்லே. இதெ செஞ்சிக் கொடுங்க, அதெ செஞ்சிக் கொடுங்கன்னு நின்னதில்லே. அதால கேக்குறம்னு நெனைச்சிக்கிட்டாலும் சரிதாங். இதெ தங்காச்சிக்காகப் பண்ண வாணாம். மவ்வேம் கேக்குறாம்னு நெனைச்சி ஆமாஞ் சொல்லுங்க! தங்காச்சி வேறென்னதுக்கு ஆசெப்படுது. அதெ செய்யுறதுல குத்த ஒண்ணுமில்லே! " அப்பிடின்னாம் விகடு.

            "குத்தம்ன்னு யாருப்பா சொன்னது ஒங்கிட்டே! ஆளாளுக்கு முடிவு பண்ணுற நெலையில வந்து நிக்குதீங்க!"ங்றாரு சுப்பு வாத்தியாரு காட்டமாயி.
            "அப்பிடில்லாம் ஒண்ணுமில்லப்பா! நீஞ்ஞளா கற்பனெ பண்ணிக்காதீங்க!"ங்றாம் விகடு.
            "செரி ஒம் பேச்சுக்கே வர்றேம்! எம்மெஸ்ஸிய படிக்க வைக்கிறேம்னு வெச்சுக்கோ, அதெ வெச்சி என்ன வேலைய வாங்குவே?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            விகடுவுக்கு என்ன பதிலெ சொல்றதுன்னு தெரியாம முழிக்க ஆரம்பிச்சிட்டாம்.
            "நோக்கம் பாக்கமில்லாம காரியத்தெ பண்ணக் கூடாது. ஆசைக்குச் செஞ்சுப்புட்டு பின்னாடி யோசிச்சுக்கிட்டு நிக்கக் கூடாது. படிப்புங்றது டிகிரியோட முடிஞ்சிப்புட்டுன்னுத்தாம் சொல்லுவாம். ஏம்டா அந்த டிகிரிய வெச்சுக்கிட்டு நீயி கலெக்டரு வரைக்கிம் ஆவலாம். கலெக்டரு வேலைக்கே தகுதி அதாங். அந்த அளவுக்கு ஒந் தங்காச்சிய படிக்க வெச்சுட்டேம். அதுக்கு மேல அதோட சாமத்தியம், தெறமெ. அதெ வுட்டுப்புட்டு இன்னும் படிக்கணும் படிக்கணும்னு நின்னா... ஏம்டா கொஞ்சமாவது பொது அறிவு வாணாமா? அத்து சொல்லுதுன்னு மண்டெய மண்டெய ஆட்டிக்கிட்டு வந்து நிக்குதீயே! இப்பிடில்லாம் இருந்தா எப்பிடிடா காலத்தெ தள்ளுவே? ஒரு காரியத்துல எறங்குறதுக்கு மின்னாடி ஒண்ணுக்கு நாலு தடவெ யோஜனெய பண்ணித் தொலைடா. எடுத்தேம் கவித்தேம்ன்னு வந்து நிக்காதே! ஒரு கொழந்தெ ஆயிட்டு. இன்னும் அதுக்கான புத்தி வாரல."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            விகடுவுக்கு ஏம்டா மறுக்கா வந்து கேட்டோம்னு ஆயிடுச்சு. சுப்பு வாத்தியார்ர எப்பிடிப் பூந்து மடக்கி, எப்பிடி வழிக்குக் கொண்டு வாரதுன்னும் புரிபடல. இது மாதிரியான சந்தர்ப்பங்கள்ல சம்பந்தம் சம்பந்தம் இல்லாம ஒண்ணு கெடக்க எதாச்சிம் பேசித்தாம் காரியத்தெ சாதிச்சாவணும்னு மனசுல லேசா ஒரைக்குது.
            "சாதகத்துல கலியாண தெச பாப்பீங்களேப்பா! தங்காச்சிக்குப் பாத்தாச்சா?"ன்னு சுப்பு வாத்தியாரு வழியிலயே போயி அடிச்சி வுட்டுப் பார்த்தாம் விகடு.
            "பெரியாரு கட்சி! பெரியாரு ஆளுன்னு சொல்லிக்கிட்டு இப்பிடித்தாம் ஏமாத்திக்கிட்டு நிக்குதீயா நீயி?"ன்னு பொட்டுல அடிச்சாப்புல கேக்குறாரு சுப்பு வாத்தியாரு இப்போ.
            "அந்தக் கருமத்தெ பத்தி நமக்கு ன்னா கவலே? நாம்ம தடுத்தாலும் கேக்கவா போறீங்க? ஒஞ்ஞ திருப்திக்குப் பாத்துப்புட்டுத்தானே பண்ணுவீங்க! அதாங் கேட்டேம்!"ங்றாம் விகடு.
            சுப்பு வாத்தியாரு மொகத்துல இப்பத்தாம் ஒரு சொணக்கம் உண்டாவுது. இது வரைக்கும் கேட்ட கேள்விக்கு துப்பாக்கியிலேந்து குண்டச் சுடுறாப்புல பதிலெச் சொன்னவரு, நெத்தியச் சுருக்குறாரு, என்னத்தெ பேசுறதுன்னு உள்ளுக்குள்ள அசை போடுறாரு. அவரு பேசத் தயங்குறது நல்லாவே தெரியுது. அவரோட மனம் போன போக்கு, வார்த்தெ வராம தயங்கி நிக்குற நெலை ரெண்டையும் நல்லா பிடிச்சிக்கிட்ட விகடு, இந்த எடத்துல வுடாம தாக்குனாத்தாம் உண்டுன்னு டக்குன்னு பேச ஆரம்பிச்சிட்டாம்.
            "யப்பா பியெஸ்ஸி முடிக்கிறப்ப பதினெட்டு வயசுன்னா, எம்மெஸ்ஸி முடிக்கிறப்ப இருவது, பியெட்டு முடிக்கிறப்ப இருபத்து ஒண்ணு. அதுக்கு மேல எப்ப வாணாலும் கலியாணத்தெ முடிச்சிக்கிடலாம். இந்தக் காலத்துல பாத்தீங்கன்னா பொண்ணுகளுக்கு இருவத்து ஒண்ணுல்லாம் பெரிய வயசேயில்ல. ஒஞ்ஞ கணக்குப்படிப் பாத்தாலும் எம்மெஸ்ஸிப் படிக்ககுற கூடுதலான ரெண்டு வருஷத்துல ஒண்ணும் கொறைஞ்சிப் போயிடாது. பாத்துப் பண்ணி வுடுங்கப்பா! ரொம்ப ஆசைப்படுது தங்காச்சி."ங்றாம் விகடு.
            சுப்பு வாத்தியாரு ஒண்ணும் பேசல. அவரு சாதகக் கணக்குல ஆழ்ந்துட்டாங்றது அவரோட யோசனெ போற போக்குல தெரியுது. இதெ இத்தோட வுட்டுப்புடக் கூடாதுன்னு புரியுது விகடு. ஒடனே வூட்டுக்குள்ளார இருக்குற செய்யுவ, "ந்தா செய்யு! கொஞ்சம் வந்துட்டுப் போ!"ன்னு கொரல கொடுக்குறாம் விகடு. அவ்வேம் கொரலு கேட்ட வேகத்துக்கு ஓடியாந்து நின்ன செய்யுக்கிட்டே, "யப்பாகிட்டே பேசிட்டேம்! எம்மெஸ்ஸிய முடிச்சிட்டுப் பியெட்டப் பண்ணலாம்ன்னு!" விகடு சொன்னதுதாங் தாமசம், "ண்ணே! நம்மால பியெட்டுல்லாம் படிக்க முடியா. எம்மெஸ்ஸிய முடிச்சிப்புட்டு எம்பில்தாம் பண்ணுவேம்!"ங்றா செய்யு.
            எம்மெஸ்ஸிக்கே சுப்பு வாத்தியாரு யோசனெ பண்ணிக்கிட்டு இருக்குறதெ காட்டிக்காம, எப்பிடியாவது காரியத்தெ முடிச்சி சம்மதத்தெ வாங்கிக் கொடுத்துப்புடலாம்னு விகடு போட்டு வாங்குனது புரியாம செய்யு பேசுன எடத்துல சுப்பு வாத்தியாரு நெதானிச்சிட்டாரு.
            "பாத்தீல்லடாம்பீ! கதெ போற போக்கெ? எம்மெஸ்ஸிய முடிச்சிப்புட்டு எம்பில்ன்னா அதுக்கு ன்னடா வேல யிருக்குன்னு தெரியலயே! ஒஞ்ஞப் போக்குக்கு வுட்டா இப்பிடித்தாம் போவும். எம்மெஸ்ஸில்லாம் வாணாம். எம்மெஸ்ஸின்னா அத்து அப்பிடித்தாம் எம்பில் அத்து இத்துன்னுப் போவும். ஒரே முடிவுதாங். பியெட்டோட முடிச்சிக்கோ சொல்லு. சட்டுப்புட்டுன்னு காரியம் முடிஞ்சாப்புல ஆயிடும்."ன்னு சுப்பு வாத்தியாரு சொன்னப்பத்தாம் செய்யுவுக்கு சுப்பு வாத்தியாரோட மனவோட்டம் மாறலங்ற உண்மெ புரியுது. விகடு கண்ண ஒரு உருட்டு உருட்டுறாம் செய்யுவப் பாத்து. அதெ புரிஞ்சிக்கிட்ட மாதிரிக்கி, "யில்லே யில்லே! எம்பில்லாம் வாணாம்! அண்ணஞ் சொல்ற மாதிரிக்கி எம்மெஸ்ஸிய முடிச்சிப்புட்டு பியெட்டே பண்ணிப்புடறேம்ப்பா! அண்ணஞ் சொல்றதுதாங் செரி!"ங்றா செய்யு.
            "அதாங் தங்காச்சியே சொல்லிட்டே எம்மெஸ்ஸிய முடிச்சப்புடனே பியெட்டுன்னே! அப்பிடியே பண்ணிக்கிடலாம்!"ங்றாம் விகடு.
            "செரி! சொன்னத்தெ கேக்குறாப்புல யில்லே. எதாச்சிம் பண்ணித் தொலைங்க போங்க!" அப்பிடின்னாரு இப்போ சுப்பு வாத்தியாரு.
            சரிதாம்ன்னு எப்பிடியோ ஒரு வழியா குந்தா கூறா பேசிக் காரியம் கூடுன சந்தோஷத்துல விகடுவும், செய்யுவும் கெளம்பி அந்தாண்ட வர்றப்ப செய்யு கேக்குறா, "எம்மெஸ்ஸியோட பெறவு பியெட்டா? எம்பில் கெடையாதா?"ன்னு.
            "எம்மெஸ்ஸிய இப்போ முடி. அதுக்கு ரண்டு வருஷம் இருக்கு. பெறவு நெலமெ எப்பிடி வாணாலும் மாறிப் போவலாம். அப்போ எதாச்சிம் பேசி சமாளிச்சிக்கிடலாம். இப்போ ஆவ வேண்டிய கதையெ, ஆவுற கதையெ பாரு தங்காச்சி. ஒட்டுமொத்தமா எதையும் செஞ்சிட முடியா. கொஞ்சம் கொஞ்சமாத்தாம் செலத நவர்த்தியாவணும்!"ங்றாம் விகடு.
            சரித்தாம்ங்ற மாதிரிக்கி தலையாட்டிட்டுப் போறா செய்யு. இப்பிடித்தாம் அவ்வே எம்மெஸ்ஸிய பியெஸ்ஸி படிச்ச அதே ஆர்குடி கமலாம்பாள் தாயார் காலேஜூல்ல படிக்க ஆரம்பிச்சா.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...