15 Mar 2020

கதையைக் கட்டி விடணும்!

செய்யு - 388        

            மவனுக்கு ஒரு கதையெ கட்டி விட்டாச்சி. மவளுக்கு ஒரு கதையெ கட்டி விடணுமேங்ற கவலெ சுப்பு வாத்தியாருக்கு இருந்துச்சு. செய்யு ஆர்குடி கமலாம்பாள் தாயார் கல்லூரியில பியெஸ்ஸி மேதமடிக்ஸ் படிச்சப்பவே சுப்பு வாத்தியாரு செய்யுக்கிட்டெ சொன்னாரு, "இதெ முடிச்சிட்டு பியெட்டெ படிச்சிட்டா படிப்புங்றது போதும். ஒன்னய ஒரு நல்ல எடத்துல கல்யாணத்தெ கட்டிக் கொடுத்துட்டேன்னா எங் கடமெ முடிஞ்சிடும்!"ன்னு. ஆனா அவ்வே பியெஸ்ஸிய முடிச்சதும் எம்மெஸ்ஸி மேதமடிக்ஸ் படிக்கணும்ன்னு ஒத்தக் கால்ல நின்னா. "நீயி இப்பிடி மேல மேல படிச்சிட்டுப் போனாக்கா நாம்ம ஒமக்கேத்த மாப்புள்ள பயல எஞ்ஞ தேடுவேம். நம்ம வகையறாவுல படிச்சப் பொண்ணுகளா இருக்கீங்களே தவுர, படிச்சப் பயலுக எவ்வேம் இருக்காம்? நீயி பாட்டுக்கு பெரிய படிப்புல்லாம் படிச்சிப்புட்டு நின்னா, ஒம் படிப்புக்கேத்த மாப்புள்ளய நாம்ம எஞ்ஞப் போயி தேடுவேம்?" அப்பிடின்னாரு.
            "நாம்ம பியெட்டுல்லாம் படிச்சிப்புட்டு வாத்திச்சியால்லாம் போவ முடியா. பெரிய வேலைக்கித்தாம் போவேம்!"ன்னா செய்யு.
            "பொழைப்புக்கு ஒரு வேல. அவ்வளவுதாங். இதுல சின்ன வேல, பெரிய வேலல்லாம் யில்ல. ஆம்பளப் பயெ அவனெயெ வாத்தியாரு டிரெய்னிங்குப் படிக்க வெச்சி வாத்தியார்ரத்தாம் ஆக்கியிருக்கேம். நீயி பொம்பளப் புள்ளே. அவனெ விட ஒரு படி மேல படிக்க வெச்சி பிட்டி வாத்திச்சியாத்தாம் போவச் சொல்றேம். நாமளும் டிகிரி படிக்கலே. அவ்வேம் பயலும் டிகிரி படிக்கலே. நம்ம குடும்பத்துல மொதொ டிகிரி படிச்சது பொம்பளப் புள்ளே நீத்தாம். அத்துப் பத்தாதா? இப்போ எம்மெஸ்ஸி படிக்கப் போறேம்ன்னா அதுக்கு ன்னா அர்த்தம்? நமக்கு ன்னா எத்தனெ காலத்துக்கு சர்வீஸூ இருக்கு? இத்தோ ரிட்டர்யர்டு ஆவப் போறேம். ஒஞ்ஞ அண்ணேம் செகண்ட்ரி கிரேட் வாத்தியாத்தாம் இருக்காம். அவனுக்கும் பொண்ணு புள்ள பொறந்து குடும்பம் குட்டின்னு ஆயிட்டு. ஒம் படிப்புக்கு யாரு செலவ பண்றது? காலா காலத்துல பியெட்ட முடிச்சிப்புட்டுக் கல்யாணத்தெ செஞ்சி வுட்டுப்புடணும். பொண்ணு புள்ளையோளே ஒரு டிகிரி வரைக்கும்தாம் அப்பங்கார்ரவேங்றவேம் படிக்க வைக்க முடியும். அதுக்குப் பிற்பாடு அதுஅதுக அதெ வெச்சி ஒரு வேலையத் தேடிக்கிட்டுச் சம்பாதிச்சிக் கொண்டாந்து அப்பாங்காரங் கையில தர்ரணும். அதெ வுட்டுப்புட்டு நாம்ம காலாகாலத்துக்குப் படிப்பேம், அதுக்கு எல்லா செலவையும் நீதாங் பண்ணி படிக்க வைக்கணும்ன்னா யாருகிட்டெ இருக்கு காசி?" அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு. செய்யுவுக்குக் கண்ணு கலங்க ஆரம்பிச்சிடுச்சி. கண்ண கசக்கிக்கிட்டு வந்து அண்ணங்கார்ரேம் விகடுகிட்ட நின்னா.
            விகடு என்ன செய்வாம்? சுப்பு வாத்தியாரு மென்மையான ஆளுதாம். ஆனா முடிவுல ரொம்ப பிடிவாதமான ஆளு. இப்பிடியிப்படி இருந்தாத்தாம் கெளரவமா வாழ்க்கைய ஓட்ட முடியும்னு ஒரு கோட்டைப் போட்டுக்கிட்டு அந்தக் கோட்டுக்குள்ள வாழ்ற மனுஷம் அவரு. அந்தக் கோட்டைத் தாண்டி அவரும் வெளியில வர மாட்டாரு, யாரும் அந்தக் கோட்டைத் தாண்டி அவர்ர இழுத்துக்கிட்டு வெளியிலயும் கொண்டு வந்துப்புட முடியாது. இந்தக் கோடு தாண்டுற விசயத்துல அவரு யாரு பேசுறதையும் கேக்க மாட்டாரு. அத்தோட அந்த விசயத்துல யாரும் அவருக்குக் கருத்துச் சொல்றதும் பிடிக்காது. கல்யாணம் ஆயி விகடுவும் ஒரு குடும்பஸ்த்தனா ஆயிட்டாலும் குடும்ப விசயத்துல முடிவுன்னா அது சுப்பு வாத்தியாரோடதுதாம். ரெண்டு பேருமே அப்பன் மவன்னு இருந்தாலும் எடைஎடையே எதாச்சிம் ஒரு சம்பவம் நிகழ்ந்துப் போயி ரெண்டு பேருக்கும் பேச்சு வேற அறுந்துப் போயிடும்.
            இப்போ சமீபத்துலன்னா பவ்வுப் பாப்பாவ சைக்கிள்ல அழைச்சிட்டுப் போயி, அத்து சைக்கிளு சக்கர போக்ஸ்ல கால விட்டு, அதுக்காக விகடுவ வாங்கு வாங்குன்னு வைஞ்சு வெச்சிருந்தாரு சுப்பு வாத்தியாரு. அதுலேந்து ரெண்டு பேருக்கும் ரொம்ப பேச்சுக் கெடையாது. அப்பங்காரரு வாசல் பக்கம் நிக்குறார்ன்னா இவ்வேம் கொல்லைப் பக்கம் வந்துடுவாம். அவரு கொல்லைப் பக்கம் வந்தார்ன்னா இவ்வேம் வாசல் பக்கம் வந்துடுவாம். அப்பிடி ஒரு பொருத்தப்பாடு அப்பாருக்கும் மவனுக்கும். இவுங்க ரெண்டு பேருக்கும் பாலம்ன்னா அத்து ஆயிதாம். வெங்கு மவ்வேம் பக்கம் சாஞ்சிக்கிட்டுப் பேசுமே தவுர புருஷங்கார்ரேம் பக்கம் பேசாது. இந்த விசயத்தெ எப்பிடிப் பேசுறதுன்னு விகடுவுக்கு யோசனெ ஓடுது.
            செரி இந்த விசயத்தெ அம்மாரிக்கிட்டெ சொல்லி அப்பங்காரர் காதுல போடலாம்ன்னு பாத்தாக்கா, "புள்ளைக்கிக் கல்யாணத்தெ முடிச்சிட்டு பொண்ண வூட்டுல வெச்சிருக்கேம்டா! படிப்புல்லாம் வாணாம். கல்யாணத்தெ முடிச்சிக் கதையெ கட்டி வுடுற வழியப் பாருங்கடா!"ன்னு அத்து காலு கட்டை வெரல்ல நிக்குது. அம்மாக்காரி பண்ணுற அலம்பலுக்கு அப்பங்காரரே பரவாயில்ல, அவராவது பியெட்டு வரைக்கும் படிச்சி முடிச்ச பிற்பாடுதாங் கல்யாணங்றாருன்னு நெனைச்சிக்கிட்டாம் விகடு.
            விகடுவுக்கு என்னா ஒரு நெனைப்புன்னா, "நாம்மத்தாம் டிகிரி அது இதுன்னு படிக்கலே. காலேஜூக்குப் போயி படிச்சு வைக்க கொடுப்பினை இல்லாம வாத்தியாரு டி‍ரெய்னிங்கோட எல்லாம் முடிஞ்சிப் போயிடுச்சி. தங்காச்சிக்காவது அப்படியொரு சந்தர்ப்பம் கெடைச்சி, இப்போ மேல மேல டிகிரி படிக்க இன்னும் சந்தர்ப்பம் கெடைக்குதுன்னா அது கெடைக்கட்டுமே!"ன்னு நெனைச்சாம்.

            என்னவோ அதிசயம் நடக்குறாப்புல, கொல்லையில வெறகெ அடுக்கி வேலையப் பாத்துக்கிட்டு இருந்த சுப்பு வாத்தியாருகிட்டெ, "யப்பா! ஒரு நிமிஷம் உள்ள வாங்களேம்!"ன்னாம். அவனெ அப்பிடியே நிமுந்துப் பாத்தாரு சுப்பு வாத்தியாரு. இந்த மாதிரில்லாம் கூப்புடுற பய கெடையாதேன்னு நெனைச்சுக்கிட்டு, இப்போ கொஞ்ச நாளா சரியான பேச்சு வார்த்தெ வேற இல்லையா, அதால சுப்பு வாத்தியாரு ஏதோ ரொம்ப முக்கியமான விசயம்தாம் போலருக்குன்னு உள்ளார வூட்டுக்குள்ள கூடத்துக்கு ஓடியாந்தாரு.
            விகடு சுத்தும் முத்துப் பாத்துப்புட்டு, "அத்து வந்துப்பா! தங்காச்சி எம்மெஸ்ஸி படிக்கணுங்றா! படிக்கட்டுமே!" அப்பிடின்னாம்.
            ஏதோ ரொம்ப முக்கியமான விசயம்ன்னு வந்த சுப்பு வாத்தியாருக்கு சப்புன்னுப் போயிடுச்சி. அதே நேரத்துல பேசி முடிச்ச ஒரு விசயத்தெ மவ்வேன் கெளறுரானேன்னு மொகத்துல ஒரு கோவமும் எட்டிப் பாக்குது. "எலே புள்ளைக்கிக் கல்யாணத்தெப் பண்ணி, வயசுக்கு வந்தப் பொண்ணுக்குக் கல்யாணத்தெ முடிக்காம வூட்டுல வெச்சிருக்கேம். எத்தனெ நாளு அப்பிடி வெச்சிருக்க முடியும்னு நெனைக்கிறேங்றேம்? ஊருல எவனாச்சிம் இதெ பேசுறதுக்கு நாக்கெ தூக்குறதுக்கு மின்னாடி கதையெ கட்டி முடிச்சாவணும். ஒரு வருஷம் பியெட்டு அதெ முடிச்சிப்புட்டா எஞ்ஞனாச்சும் ஒரு மேனேஜ்மென்ட்லயாவது காசியக் கொடுத்து வேலய வாங்கிக் கொடுத்துப்புட்டு, அத்தோட கல்யாணத்தெ முடிச்சி கதையக் கட்டி விட்டுப்புடுவேம். பொம்பளப் புள்ளடாம்பீ! காலா காலத்துல முடிக்க வேண்டியதெ முடிச்சாவணும். இப்பயே வயசாயிக்கிட்டுப் போவுது. ஆம்பளப் புள்ளயா இருந்தாலும் சரித்தாம், பொம்பளப் புள்ளையா இருந்தாலும் சரித்தாம், பெரிய படிப்புல்லாம் ஒத்து வாராது. காலயில வேலைக்கிப் போனோமா, சாயுங்காலம் வூடு வந்தோமோ, குடும்பத்தோட பேசிச் சிரிச்சிச் சந்தோஷமா இருந்தோமோ அதுக்குச் சரியான வேல எதுவோ அந்த வேலைக்கித்தாம் போவணும். அதாஞ் சரியானெ வேல. நாம்ம சரியாத்தாம் முடிவெடுத்திருக்கேம். நீயி குறுக்குச் சாலு ஓட்டி காரியத்தெ கெடுதுதுப்புடாதே!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "நம்ம குடும்பத்துல யாரு போஸ்ட் கிராஜூவேட் பண்ணிருக்கா? தங்காச்சியாவது பண்ணட்டுங்றேம்!"ன்னாம் விகடு.
            "அதாம்டாம்பீ வேணாங்றேம். பியெட்ட முடிச்சா ஒரு வேலையில சேத்து வுட்டுப்புட்டா அதது கரஸ்ல படிச்சிக்கி வேண்டியதுதாங் அதையெல்லாம். படிப்புன்னா அப்பங்காரனா ஒரு வேலைக்குத் தோதான படிப்பையோ, யில்லே ஒரு டிகிரி படிப்பையோத்தாம் படிக்க வைக்க முடியும். அதுக்கு மேல முடியா. ஒங் கதையெ எடுத்துக்கிட்டீன்னா ஒனக்கும் ஒரு கொழந்தை ஆயிட்டு. நீயிப் பாக்குற வேலைக்கி ஒங் குடும்பத்தெ பாக்கத்தாம் சரியா இருக்கும். அதால இதுல தலையிடாத. நாம்ம சரியாத்தாம் யோஜனெ பண்ணிக்கிட்டுப் போயிட்டிருக்கேம்! படிக்க வைக்காமத்தாம் இருக்கக் கூடாது. அதுக்காக ரொம்பல்லாம் படிக்க வைக்க முடியா. அதுக்கு நம்மகிட்டெ தெம்பு யில்ல. நம்மள யாரு படிக்க வெச்சா சொல்லு. நாமளே வேலப் பாத்துச் சம்பாதிச்சி அதுலத்தாம் படிச்சேம் பாத்துக்கோ." அப்பிடின்னாரு சுப்பு வாத்தியாரு. அவரு அழுத்தமா பேசுறதெ பாத்தாக்கா அவரோட முடிவுல மாத்தம் இல்லேங்ற மாதிரித்தாம் தெரியுது.
            "செலவுல்லாம் ரொம்ப ஆயிடப் போறதில்ல. பாத்துக்கிடலாம். படிக்கட்டுமே!"ங்றாம் விகடு.
            "யேலே சொல்றேம்லாம்டாம்பீ! புரிஞ்சிக்கிடா! அதாஞ் சொல்லுதுன்னா நீயி நம்மகிட்டெ வந்து நிக்கிறே? செலவு ரொம்ப ஆயிடாது சரிதாங். வயசு ஆயிடும்லா. சமூகஞ் சரில்லடாம்பீ! ஆளாளுக்கு நாக்குல நரம்பு யில்லாம பேசுவாம்டாம்பீ! ஒம்மட வயசு, அனுபவத்துக்கு அதெல்லாம் புரியா பாத்துக்கோ. படிச்சிட்டு இருக்குறப்பே நல்ல வரனா வருதுன்னு வெச்சுக்கோயேம். ன்னா பண்ணுவே. படிப்பே பாதியில நிப்பாட்டிப் புடுவியா? அதாம்டாம்பீ சொல்றேம்! பியெட்டுன்னா ஒரு வருஷம். பல்ல கடிச்சிட்டுப் படிக்க வெச்சிப்புட்டுக் கதையெ கட்டி விட்டுப்புடலாம். நமக்கும் வயசாயிட்டேப் போவுது. ரிட்டையர்டு ஆவப் போறேம். அதுக்குள்ள எல்லாத்துக்கும் கதையெ கட்டி விட்டுப்புடலாம்னு பாக்குறேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு. அதுக்கு மேல அவருகிட்டெ என்ன பேசுறதுன்னு புரியல விகடுவுக்கு. தேமேன்னு அவரு முன்னால நிக்குறாப்புல ஆயிடுச்சு அவனுக்கு நெலமெ.
            நல்ல வெதமா அப்பங்காரர்கிட்ட பேசிட்டு வந்து நல்ல சேதியா சொல்லுவாம்ன்னு எதிர்பாத்த தங்காச்சிக்கு அண்ணங்கார்ரேம் சொல்லுற சேதி மொகத்த கோணிக்க வெச்சிடுச்சு. "இதல்லாம் ஒரு ஓட்டத்துல படிச்சாத்தாம் உண்டுண்ணே. பியெஸ்ஸிய படிச்சா, எம்மெஸ்ஸியா படிச்சிப்புடணும். எடையில ஒரு வருஷம்ன்னு படிக்கப் போற பியெட்டு ரண்டு வருஷத்த ஆக்கி வுட்டுப்புடும். பியெஸ்ஸியில இருக்குற ஓட்டம் போச்சுன்னா எம்மெஸ்ஸியில அந்த ஓட்டத்தெ கொஞ்சம் செரமப்பட்டுத்தாம் பிடிக்கணும். பியெஸ்ஸியப் படிச்சிட்டு ஒடனே எம்மெஸ்ஸியப் படிச்சா சுலுவா இருக்கும். அதெ விட்டுப்புட்டு ரண்டு வருஷத்தெ பியெட்டுல காலி பண்ணிப்புட்டு எம்மெஸ்ஸியில போயி நின்னா பெறவு அந்த ஓட்டத்தெ பிடிக்குறது செரமம்ண்ணே!" அப்பிடிங்கிறா செய்யு.
            பேசுறதுல விகடு ஒரு மண்ணு முட்டுத்தாம். இந்தப் பக்கம் போயிப் பேசுறப்ப இந்தப் பக்கம் பேசுறது சரின்னு படும். அந்தப் பக்கம் போயிப் பேசுறப்ப அந்தப் பக்கம் பேசுறது சரின்னு படும். அப்போ அவனுக்கு அப்பங்காரர்கிட்டே பேசுனப்போ அவரு பேசுறது சரின்னு பட்டிச்சி, இப்போ தங்காச்சிக்கிட்டெ பேசுறப்போ இவ்வே பேசுறது சரின்னு பட்டிச்சி. இந்தப் பக்கம் சரித்தாம், அந்தப் பக்கமும் சரித்தாம், ஆனா ரெண்டுப் பக்கமும் எதிரெதிரால்ல இருக்கு. யாருக்கு என்னத்தெ சொல்றதுன்னு கொழம்ப ஆரம்பிச்சிட்டாம் விகடு.
            "ஒங்கிட்டெ என்னத்தெ ஆசையா கேட்டிருக்கேம் நாம்ம? கேட்டாத்தாம் நீயி என்னத்தெ வாங்கிக் கொடுத்திருக்கே? படிப்பு விசயத்தைத்தாம்ண்ணே கேக்குறேம். இதெ கூட செஞ்சிக் கொடுக்கலன்னா எப்பிடிண்ணே? நீயிப் பேசுனா யப்பா ஒத்துப்பாங்க. நீயி கொஞ்சம் எறங்கித்தான்னே பேசணும். அடிச்சிப் பேசுனாத்தாம்ண்ணே காரியம் ஆவும். நீயி ஒண்ணும் நம்ம கலியாணங் காட்சிக்குல்லாம் செலவு பண்ண வாணாம். படிப்பு விசயம் இதுல மட்டும் பாத்துச் செய்யுண்ணே!"ன்னு செய்யு சொல்றப்ப வேற என்னத்தாம் பண்றதுன்னு மறுக்கா ஒருவாட்டி அப்பங்காரர்ட்ட பேசிப் பாக்குறதுன்னு முடிவுக்கு வந்தாம் விகடு.
*****


No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...