14 Mar 2020

வேதாளத்தால முருங்கெ மரம் ஏறாம இருக்க முடியாது!

செய்யு - 387        

            சுப்பு வாத்தியாருக்கு வூடு சம்பந்தமா எதாச்சிம் வேலையப் பாத்துக்கிட்டே இருக்கணும்ங்றது ஒங்களுக்கே நல்லா தெரிஞ்ச சங்கதிதாம். இம்மாம் காலமாயிடுச்சே அவரு வூட்ட விரிவாக்கம் பண்ற வேலைய ஒண்ணும் பண்ணலேன்னு நீங்களே நெனைக்கலாம். அப்பிடி யாரும் நெனைச்சிடக் கூடாதுன்னு அதுல ஒரு தொடர்ச்சிய கடைபிடிக்கிற ஆளாயிடுச்சே சுப்பு வாத்தியாரு. அவரு எந்தக் காலத்துல வூட்டுல எதாச்சிம் பண்ணாம சும்மா இருந்திருக்காரு? நெல, சன்னலு, சன்னலோடு கிரில்ன்னு அவரு பாட்டுக்கு பெய்ண்ட வாங்கியாந்து அடிச்சிக்கிட்டு இருப்பாரு. "வேலையத்த அம்பட்டேம் பூனைக்குட்டிய செரைச்ச மாதிரிக்கி ஒங்க தாத்தனுக்கு எதாச்சிம் பண்ணிட்டே இருந்தாத்தாம் பொழுது போவும்!"ன்னு வெங்கு அவரு பண்றதப் பாத்துட்டு அதெ பத்திப் பவ்வு பாப்பாகிட்டே சிரிச்சிக்கிட்டே சொல்லும்.
            சுப்பு வாத்தியாரோட பார்வையில வூடு சின்னதா இருக்குறதா தோணுமோ என்னவோ! வூட்ட அவரு விரிவாக்கிக்கிட்டே இருக்கிறாரு. டாய்லெட்ட தாண்டி இருந்த கூரைக் கொட்டாய்ய தகர சீட்டுப் போட்டு மாத்தலாமான்னு ஒரு யோசனை அவருக்குள்ள ஓட ஆரம்பிச்சிடுச்சி. அத்தோட வூட்டுல கேஸூ அடுப்பு இருக்குன்னாலும், வெங்குவுக்கு மீன் கொழம்பு, கறிக்கொழம்புன்னா அதெ வெறவு அடுப்புல சமைச்சாவணும். அதுக்குன்னே அது கூரைக் கொட்டாயோட ஓரத்துல ஒரு தடுப்ப வெச்சி அதுல ஒரு அடுப்பைப் போட்டு அதுல சமைச்சிக்கிட்டு இருந்தது. "இதென்ன இப்பிடி அடுப்ப வெச்சிக்கிட்டு இதுல சமைச்சிக்கிட்டு? அடுப்பு நல்ல வெதமான ஒரு எடத்துல இருக்க வாணாமா?"ன்னு பேச்ச ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு. வெங்குவுக்குப் புரிஞ்சிப் போச்சு. சுப்பு வாத்தியாரு வூட்டு வேலையில எறங்குறாருன்னு. வூட்டு வேலையில எறங்குறதுக்கு மின்னாடி இப்பிடித்தாம் அவரு சூசகமா பேச்ச ஆரம்பிப்பாரு. அப்பிடியே ஆரம்பிச்சி மடமடன்னு வேலையில எறங்கிடுவாரு. வேதாளத்தால முருங்கெ மரம் ஏறாம இருக்கத்தாம் முடியுமா? சுப்பு வாத்தியாரால வூட்ட விரிவாக்கம் பண்ணுற வேலைய செய்யாம இருக்கத்தாம் முடியுமா?
            "ஏம் மாமா! இம்மாம் பெரிய வூடு பத்தாதா? இதெ கூட்டிப் பெருக்கி நிமுறதுக்குள்ள பெண்டு கெழண்டுப் போயிடுது!" அப்பிடின்னு ஆயியும் சொல்லிப் பாத்தாச்சு.
            "பொழங்க கொள்ள விசாலாமா எடம் வாணாமா? இருக்கட்டும் வுடு!" அப்பிடின்னு பட்டுன்னு பதிலெ சொல்லிட்டு கோதாவுல எறங்கிட்டாரு சுப்பு வாத்தியாரு.
            எதுலயும் முஸ்தீப்ப போடுறதுல பெரிய ஆளு சுப்பு வாத்தியாரு. வூட்டுல இருக்குற நெல்லுக்கான பத்தாயமும், வெதை நெல்லுக்கான பத்தாயமும் எடத்தெ பெரிசா அடைச்சிக்கிட்டு இருக்குறதாவும், வூட்டுக்குப் பின்னாடி இருக்குற கூரைக் கொட்டாய விரிவாக்கம் பண்ணி அதுல கொண்டு போயி வெச்சிட்டா நல்லா இருக்கும்னு வூட்டுல எல்லாத்துகிட்டேயும் கலந்துகிட்டாரு சுப்பு வாத்தியாரு. இந்த விசயத்துல அப்பங்காரரு சொல்லிக் கேக்குற ஆளில்லன்னுகிட்டு அதெ பத்தி விகடுவும், செய்யுவும் வாயைத் தொறக்கல.
            கூரைக் கொட்டாய்ய பிரிக்கிற வேலையில எறங்கிட்டாரு சுப்பு வாத்தியாரு. அந்தக் கூரைக் கொட்டாயிக்கு தடுப்புங்கற பேர்ல பேருக்கு ஒத்தக்கல்லு சுவரு இருந்திச்சி. அந்தச் சுவத்த எடுத்துப்புட்டு முழு உசரத்துக்கும் சுவர்ர வைக்காம முக்கா உசரத்துக்குச் சுவத்த வெச்சி அதுக்கு மேல மரச்சட்டத்துல தட்டியச் செஞ்சி அடைச்சிடலாமுன்னு சொன்னாரு சுப்பு வாத்தியாரு. பத்தாயம் இருக்குற எடம் அப்பிடித்தாம் கொஞ்சம் காத்தோட்டமாவும், வெளிச்சமாவும் இருக்கணும்னு அதுக்கு ஒரு காரணத்தையும் சொன்னாரு.
            சுப்பு வாத்தியாரு வாங்கிப் போட்ட இந்த மனைக்கட்டு இருக்கே, இதெ வேப்பந்தோப்புன்னே சொல்லலாம். அம்மாம் வேப்ப மரங்க கொல்லை முழுக்க. சூரியரோட வெளிச்சம் இந்தக் கொல்லையில விழணும்னா அதுக்கு வேப்ப மரம் வழிய வுடணும். அம்புட்டு வேப்ப மரமும் சேர்ந்து சூரியரோட வெளிச்சத்த வாங்கிக்கிட்டு கொல்லைய குளுகுளுன்னு நெழலாவே வெச்சிருக்கும். அந்த நெழல்ல இருக்குற பம்படியில நீங்க தண்ணிய அடிச்சிக் குடிக்கணுமே! பிரிட்ஜில வெச்ச தண்ணியெல்லாம் தோத்துப் போயிடும், அப்பிடி சில்லுன்னு இருக்கும். குடிக்க குடிக்க ஆசெ தீராது. இந்த மேனிக்கிக் கொல்லை நெழலா இருந்ததால ஒரு செடி, கொடிய போட முடியல கொல்லையில. போட்டாலும் எந்தச் செடி, கொடியும் கொல்லையில புடிக்கல. மரத்தோட நெழல் பட்டா மனுஷனுக்கு நல்லதுதாங். ஆனா செடி கொடிக்கு அந்த நெழல் பிடிக்காது. அந்த நெழல்ல வளராது. அதுக்கு சூரியரோட வெளிச்சம் தேவை. 

            வெங்கு சொல்லிச்சி, "ஒரு ரெண்டு வேப்ப மரத்தெ கூட பிடிச்சி வெட்டிப்புடலாம். மரமும் நாள்பட்ட மரமாச்சி. வெட்டுனா கொல்லைக்குக் கொஞ்சம் வெயிலு கெடைக்கும். கீரெ, கத்திரி, வெண்ட, கொத்தவர்ரன்னு நாலு கறிகாயிச் செடிய போட்டு வைக்கலாம்.இருக்குற நெழலுக்கு எதெ போட்டாலும் கெளம்ப மாட்டேங்குது!" அப்பிடின்னுச்சு சுப்பு வாத்தியாரு நின்ன நெலை புரியாம. சுப்பு வாத்தியாரு இதையெல்லாம் கணக்குல வெச்சிக்கிட்டு, வூட்டு வேலையோட வேப்ப மரத்தெ ரெண்ட வெட்டி அதையும் வேலையா பண்ணிப்புடலாம்னு தீர்மானிச்சாரு.
            கொல்லையில இருக்குற வேப்ப மரமாச்சே! அதெ வித்துக் காசாக்கவா முடியும்? அதெ ஞாபவார்த்தமால்ல வெச்சிக்கணும். அதெ என்ன பண்றதுங்ற யோசனையில, கொல்லையில மரமா நின்னதெ வூட்டுக்குள்ள பீரோவா நிக்க வைக்குறதுன்னு முடிவெ பண்ணாரு சுப்பு வாத்தியாரு. இப்போ பீரோவ கோக்கணும், அத்தோட வூட்டுக்குப் பின்னாடி போடுற தகர செட்டுக்கு வைக்குற முக்கா உசரத்துக்கு மேல மரச்சட்டத்துல தட்டிய வைக்கணும், அதுக்கு கதவெ போடணும்னு வேலையச் செய்யணுமே. யார்ர செய்ய வைக்கலாமுன்னு பலவெதமா யோசிக்க ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு.
            மவனோட கலியாணத்துக்கு பீரோ, கட்டிலு செஞ்சிக் கொடுத்த வகையில வீயெம் மாமாவோட வேலையில திருப்தி இல்லாமப் போயிடுச்சி சுப்பு வாத்தியாருக்கு. குமரு மாமாவப் பத்திச் சொல்லணும்னா, சுப்பு வாத்தியாரோட மவனுக்குப் பொண்ணு பாக்குறதிலேந்து, ஓலை எழுதி, கலியாணம் நடந்த வரைக்கும் எதுக்கும் வந்து தலையக் காட்டலேங்றதுக்காக அத்தோட தொடர்பே அந்துப் போயிருந்துச்சு. சரிதாம் பொண்ணு பாக்குறதுக்கு வராட்டியும், கலியாணத்துக்காவது வரட்டுமேன்னு சுப்பு வாத்தியாரும், வெங்குவும் போயி குமரு மாமாவுக்குப் பத்திரிகைய வெச்சாங்க. அப்பிடி பத்திரிகைய வைக்கிறதுக்குப் போனப்பவும் வூட்டத் தொறக்க வெச்சி உள்ளார போறதுங்றது, அண்டாக்க கசம், அபுக்கா கசம் திறந்திடு சீசேன்னு ரொம்ப மெனக்கெட்டுப் பிரயத்தனப்பட்டுத்தாம் உள்ளார போறாப்புல இருந்திச்சி.
            அப்பிடி வூட்டைக் கஷ்டப்பட்டு தெறக்க வெச்சி உள்ளார போனவங்ககிட்டே, "அத்து ன்னா பொண்ணு பாக்குறதுக்கு மட்டும் தாய்மாமேம் வார வாணாம். ஆன்னா கலியாணத்துக்கு மட்டும் வந்து நிக்கணுமா?"ன்னு கேட்டிச்சி குமரு மாமா.
            "ன்னாடா பேச்சு பேசுறே நீயி! வேனைக் கொண்டாந்து ஒம்மட பட்டறைக்கு மின்னாடி நிப்பாட்டிக்கிட்டு ஒனக்குப் போனைப் போட்டா நீயி எடுக்க மாட்டேங்றே. சரிதாம்னு அத்தானே கெளம்பி வந்து வூட்டுக்கு மின்னாடி நின்னு கூப்புட்டா வூட்டைத் தொறக்க மாட்டேங்றே! அவ்வேம் சின்னம்பியும் வந்துக் கூப்புட்டுப் பாத்தாம். அதுக்கு மேல ன்னடா பண்றது?"ன்னுச்சி வெங்கு.
            "கதவெ தொறக்கலன்னா கதவெ ‍ஒடைச்சிக்கிட்டு வந்துத்தாம் கூப்புட்டுப் போவணும். அதுக்குல்லாம் தாய்மாமேம் முக்கியமில்லே, இப்போ கலியாணம்னு வாரப்ப தாய்மாமேம் முக்கியமா போயிடுறேனா?" அப்பிடினிச்சி குமரு மாமா. அவ்வளவுதாங், சுப்பு வாத்தியாருக்கு வந்ததே வேகம். அந்த வேகத்துல, "அப்பிடில்லாம் கதவெ ஒடைச்சிட்டு வந்து கூப்புட்டுப்புட்டுப் போணும்னு அவசியமில்லே. ன்னா பேசுறேம்னு தெரிஞ்சித்தாம் பேசுறீயா நீயி? நீயி வந்து எம் மவ்வேம் கலியாணத்துக்கு ஒண்ணும் ஆவப் போறதில்லே. தாய்மாமனே யில்லாம எப்பிடிக் கலியாணத்தெ முடிக்கிறேம்னு பாரு!" அப்பிடின்னு சொல்லிட்டு வெங்குவப் பாத்து, "ந்தா கெளம்பு! இஞ்ஞ வந்ததே தப்பு!"ன்னுட்டாரு சுப்பு வாத்தியாரு.
            "வந்தது வந்தாச்சி. பத்திரிகையெ ஒண்ண வெச்சிட்டுப் போயிடுவேமே!"ன்னிருக்கு வெங்கு.
            "பத்திரிகையும் கெடையாது, ஒண்ணுங் கெடையாது."அப்பிடின்னு வேகத்தோட கெளம்பி குமரு மாமா வூட்டை வுட்டு வெளியில வந்தருவதாம். அன்னியோட குமரு மாமாவோட ஒறவு முறிஞ்சாப்புல ஆயிடுச்சி. இந்தச் சேதிய கேள்விப்பட்டு ஆயியோட அப்பங்காரரு சாமிமலெ ஆச்சாரி, "அப்பிடில்லாம் மாப்புள்ளையோட தாய்மாமனே வுட்டுப்புட முடியுமா? நல்லதோ கெட்டதோ நாம்ம ஒரு பத்திரிகைய வெச்சிப்புடுறேம்!"ன்னு சொல்லி வேல மெனக்கெட்டுப் போயி அவரு கடமைக்கு அவரு ஒரு பத்திரிகைய வெச்சிப் பாத்தாரு. கொஞ்சம் செரமப்பட்டுத்தாம் அவரும் குமரு மாமாவோட வூட்டை தொறக்க வெச்சி, தன்ன அறிமுகம் பண்ணிக்கிட்டுப் பத்திரிகைய வெச்சாரு.
            அப்போ பத்திரிகைய வாங்குனப்போ குமரு மாமா சொல்லிருக்கு, "அத்து எஞ்ஞ அக்கா மவ்வேம் கலியாணம். எஞ்ஞ அத்தாம்! அவரு பத்திரிகையெ வெச்சா ன்னா? வைக்காட்டியும் ன்னா? நாம்ம வந்து நிப்பேம். அத்தோட நீஞ்ஞ வேற பத்திரிகைய வெச்சிட்டீங்களா! இனுமே நாம்ம யில்லாமலா கலியாணம்? ஆனா பாருங்க பெரியவரே! கலியாண நேரத்துக்குச் சரியா வருவேம். கலியாணம் முடிஞ்சதும் ஒரு சொட்டு தண்ணிய தொண்டையில நனைக்க மாட்டேம். பச்சத் தண்ணிப் பல்லுல படாம வந்துடுவேம். ஏன்னா நமக்கு அவுங்க கொடுத்த மருவாதி அவ்வளவுதாங்!"ன்னு.
            "அத்துப் போதும்! அத்துப் போதும்! நீஞ்ஞ வந்திருந்து பொண்ணு புள்ளைய ஆசிப் பண்ணிட்டுப் போனா போதும். அதாங் பெருந்தன்மெ." அப்பிடின்னு சொல்லிட்டுச் சாமிமலெ ஆச்சாரியும் வந்துட்டாரு. ஆனா சொன்னா படிக்கு குமரு மாமா வரணுமுல்ல கலியாணத்துக்கு. அத்து வரலே, வரவே இல்லே. எல்லாம் சும்மா ஒப்புக்குச் சப்புக்குப் பேச்சுக்குன்னு ஆயிடுச்சு.
            நெலமெ இப்பிடி ஆயி குமரு மாமாவ கலியாணத்துக்கே வார வேணாம்னு துணிஞ்சிச்  சொன்ன சுப்பு வாத்தியாரு பீரோல செய்யவா கூப்புடுவாரு. வேற உள்ளூர்ல ஆசாரிகன்னுப் பாத்தா சொந்தத்துல இருக்குறவங்கள வுட்டுப்புட்டு பிறத்தியார்ர கூப்புடுறாப்புல ஆயிடக் கூடாதுன்னு நெனைச்ச சுப்பு வாத்தியாருக்கு முருகு மாமாவோட மவ்வேன் சித்துவீரனோட ஞாபவம் வந்திச்சி. சித்துவீரன் வெளிநாட்டுல வேலை பாத்த ஆளுங்றதோட, வேலையையும் வெளிநாட்டுலேந்து வாங்கியாந்த ரொம்ப நவீனமான கருவிகள வெச்சி பெரமாதமா பாக்குறதா பேச்சாயிக் கெடந்துச்சு. அதெல்லாம் வெச்சிக் கூட்டிக் கழிச்சிப் பெருக்கி வகுத்து என்னென்னவோ கணக்கப் போட்ட சுப்பு வாத்தியாரு, சுவத்துக்கு மேல மரச்சட்டத்துல தட்டிய செஞ்சி வைக்கிறதுக்கும், அந்தத் தகர கொட்டாயிக்கு கதவெ போடுறதுக்கும், அத்தோட பீரோவ செஞ்சி வைக்கிறதுக்கும் தோதான ஆளு சித்துவீரன்தான்னு முடிவெ பண்ணிட்டாரு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...