13 Mar 2020

பேரப் புள்ளைக பெத்தவங்ககிட்ட வளர்றதில்ல!

செய்யு - 386        

            எப்போதுமே மாமியாருக்கும், மருமவளுக்கும் ஒரு சில விசயங்கள்ல ஏழாம் பொருத்தம்னு ஒண்ணு இருக்கவே செய்யும். மாமியாருகிட்டெ எதித்துப் பேச முடியலேங்ற ஆதங்கமும் மருமவளுக்கு இருக்கும். இதெ பொதுவா மருமவளுங்க வெளியில காட்டிக்கிடறது இல்லே. ஆயிக்கும் பல நேரங்கள்ல மாமியாரு வெங்கு மேல விருப்பு, வெறுப்புன்னு எல்லா உணர்வுகளும் மாத்தி மாத்தித்தாம் வருது. ஒரு கூட்டுக் குடும்பம்ன்னா அப்பிடித்தாம். எல்லா நேரத்துலயும் எல்லாரையும் பிடிச்சிருக்கும்ன்னு சொல்ல முடியாது, பிடிக்காம இருக்குன்னும் சொல்ல முடியாது. கோவ தாவங்களுக்குக் கொறைச்சல் கெடையாது கூட்டுக் குடும்பத்துல. அதுக்காக அந்தக் கோவ தாவங்கள அப்பிடியே விட்டுக்கிடறதும் கெடையாது. அந்தக் கோவ தாவங்கள வேடிக்கையா ஆத்திக்கிறதும் உண்டு.
            பவ்வு பாப்பா வளர வளர கல்லு புல்லு கல்லு புல்லுன்னு எதையாச்சிம் பேச ஆரம்பிச்சா. பேச்சுல அவுக ஆத்தாளப் போல ஒரு அழுத்தம் வேற. எப்பிடிப் பேசுறதா இருந்தாலும் அதுல ஒரு தோரணையும் வேற இருந்துச்சி. பாட்டியாளோட எந்நேரத்துக்கும் இருந்ததால பேச்சுப் பழக்கமெல்லாம் அவளுக்குப் பாட்டியாள போலவே வந்திடுச்சு. வூட்டுல யாரும் சுப்பு வாத்தியாரு உட்பட வெங்குவ எதித்து எதுவும் சொல்லவும் முடியாது, எதித்து எதையும் கேக்கவும் முடியாது. வெங்கு வைத்தித் தாத்தா வூட்டுல வளந்த காலத்துலயே, வைத்தி தாத்தா வெங்குவ ஒண்ணுத்த மட்டுந்தாம் எதுனாச்சும் கேக்கணும்னா யோசன பண்ணிக் கேப்பாரு. அந்த அளவுக்கு வெடுக்கு வெடுக்குன்னு எதையாச்சிம் கேட்டுப்புடும் வெங்கு. எதெ பேசுனாலும் அது வெச்சதுதாங் சட்டம் மாதிரிக்கித்தாம் பேசும். மித்தபடி மனசுல எதையும் வெச்சுக்காது. ஆனா அப்பிடிப் பேசுறதெ பின்னாடி நெனைச்சா சிரிப்பா இருந்தாலும், பேசுற நேரத்துல அத்து கொஞ்சம் மனசெ காயப்படுத்திப்புடத்தாம் செய்யும்.
            வெங்கு பேசுறது சில நேரங்கள்ல ஆயிக்குக்குப் பிடிக்காமப் போயிடும். அப்படிப்பட்ட நேரங்கள்ல மாமியாக்காரியான வெங்குவப் பத்தி சில மனக்கொறைகள விகடுகிட்டெ சொன்னாலும், "ஆமாங், அது கெடக்குப் போ!"ன்னு சலிச்சிக்கிட்டே சொல்லிட்டுப் போயிடுவாம். ஆயிக்கும் மாமியாக்காரிய எதுத்து ஒரு வார்த்தெ சொல்லணும்னு தோணாது. ஆனா மனசுக்குள்ள ஒரு வார்த்தையாவது கேட்டுப்புடணுங்ற ஆதங்கம் மட்டும் தீரவே தீராது. அப்படிக் கேக்கறதுக்குன்னா அதுக்கான்ன தெகிரியம் மட்டும் வாராது. அதெ புருஷங்கார்ரேம் விகடுகிட்டெ மட்டும் பேசி ஆத்திப்பா ஆயி. அதே நேரத்துல தன்னோட மாமியாக்காரியா யாராவது பிடிச்சி வெச்சி வசமா வைஞ்சி வைக்கணும்ங்ற ஆசெ வேற அவ்வே மனசுல வந்துப்புடும். வெங்கு வூட்டுக்குள்ளத்தாம் அதிகாரம், தோரணைய எல்லாம் வெச்சுக்குமே தவுர, வெளியிலயோ, ஒறவுலயோ எந்தப் பிரச்சனையையும் வெச்சுக்காது. ரொம்பச் சரியா நடந்துக்கும். அதால வெங்குவ யாரு ஊருலயோ, ஒறவுலயோ திட்டப் போறா?
            வல்லவனுக்கு வல்லவேம் பூமியில பொறப்பாங்ற மாதிரிக்கி, வெங்குவ திட்டுறதுக்குன்னே ஒண்ணு பொறக்காமலா போயிடும்? அப்பிடி வெங்குவப் பிடிச்சி திட்டுறதுக்குன்னும் வையிறதுக்குன்னும் பவ்வு பாப்பா பொறந்தா. அத்து என்னவோ யாரு திட்டுனாலும் கோவம் பொசுக்குன்னு வந்துடுற வெங்குவுக்குப் பேத்தியா திட்டுனாலும் சரித்தாம், வைஞ்சாலும் சரித்தாம் சிரிப்புத்தாம் வருது. அப்பிடி அவ்வே சின்ன புள்ளத்தனமா திட்டுறதெ ரசிச்சிப் பாக்குது வெங்கு. "நமக்கு மாமியாக்காரி யில்லாத கொறைய இவ்வே பேத்தியா பொறந்து வந்து தீத்து வைக்குறா போல! எம்மாம் பேச்சுப் பேசுறா கெழவி மாதிரிக்கி?"ன்னு அத்து சிரிச்சிக்கும். அதெ கேக்குறதுல ரொம்ப சந்தோஷப்பட்ட ஆளு ஆயித்தாம். "நம்மாளத்தாம் மாமியாக்காரிய ஒரு வார்த்தெ‍ கேக்க முடியல. அதால ன்னா நமக்குப் பொண்ணு பொறந்து வந்து மாமியாக்காரிய ஒரு வார்த்தெ ன்னா, ஆயிரம் வார்த்தெ கேக்கணும்னு இருந்திருக்கு!"ன்னு அது மனசுக்குள்ள சந்தோஷப்பட்டுக்கும்.
            "டிஸ்டர்ப் பண்ணாத. போத்தா அந்தாண்ட!"ங்றதுதாம் பவ்வு பாப்பா பாட்டியா எப்ப கூப்புட்டாலும் அதுக்கு சொல்ற பதிலு. "யேய் யப்பாடி! எம் பேத்தி ரண்டு வயசுலயே இங்கிலீபீஸ்லாம் பேசுறா!"ன்னு அதுல ஒரு பெருமெ வெங்குவுக்கு. இப்பிடித்தாம் மாமியாக்காரிய அலட்சியமா அந்தாண்ட போன்னு பேசணும்னு அதுல ஒரு அல்பத்தனமான சந்தோஷம் ஆயிக்கு. "சுதந்திரமான சுட்டிப் பொண்ணு பவ்வு. ஆத்தாளையே எதுத்துப் பேசும் வீரப்பொண்ணு பவ்வு!"ன்னு அதெ பத்தி விகடுகிட்டெ சொல்லிச் சிரிச்சுப்பா ஆயி. அத்தோட விட மாட்டா. "இன்னிக்கு பாப்பா சரியான கேள்வியெல்லாம் கேட்டுப்புடுச்சி. அத்தையால ஒரு பதிலயும் சொல்ல முடியல. எஞ்ஞ அம்மாத்தான எப்பப் பாத்தாலும் சமைக்குது! நீயி எப்ப சமைக்கப் போறே? அப்பிடின்னு கேட்டுப்புட்டா பாப்பா. பாவம் அத்தைக்கு அப்போ மூஞ்சிப் போன தெச இருக்கே. அதெ நீஞ்ஞ நேர்ல பாத்திருக்கணும். சிரிச்சி சிரிச்சி வவுத்து வலி வந்திடும் போஞ்ஞ. ஒண்ணுஞ் சொல்ல முடியாம அத்தே நிக்குறாங்க. பவ்வு மேல மேல கேள்விய கேக்குறா. அதெ கேட்டுப்புட்டுச் சிரிச்சிக்கிறாங்களே தவிர அத்தே ஒண்ணுஞ் சொல்ல மாட்டேங்றாங்க. சின்ன புள்ளத்தானே பேசுனா பேசிட்டுப் போவட்டும்! நம்மட திட்டத்தாம் ஊருல யாரு இருக்கா? இவ்வே ஒருத்தியாவது இப்பிடி நம்மள போட்டு கேள்விய கேக்கட்டுங்றாங்க அத்தே!" அப்பிடின்னு நடக்குறதப் பத்தி ஒரு கதா காலட்சேபத்‍தையே பண்ணி முடிக்கிது ஆயி.
            பேத்தியா எந்நேரமும் இருக்குறதெல்லாம் பாட்டியாளோடத்தாம். ஆனா பெருமெ பேசுறதெல்லாம் அப்பன் ஆயியப் பத்தித்தாம். நொட்டாரம் சொல்றதெல்லாம் பாட்டியாளப் பத்தித்தாம். அதையெல்லாம் ரசிச்சுக் கேட்டுக்கிட்டே வெங்கு பவ்வுப் பாப்பாகிட்டே கேக்கும், "அதாங் இம்மாம் கொறையச் சொல்றீயேடி? பேயாம ஒஞ்ஞ அப்பம் ஆயி மடியிலயே போயி குந்திக்க வேண்டித்தான்னே. இஞ்ஞ ஏம்டி வந்துக் குந்திக்கிறே?"ன்னு வெங்கு கேட்டாக்காப் போதும் அப்ப மட்டும் பொசுக்குன்னு கோவம் வந்த மாதிரிக்கிக் கொஞ்ச நேரத்துக்கு ஆயிகிட்டெ வந்து நின்னுப்பா. சித்த நேரத்துல என்னாவுமோ ஏதாவுமோ தெரியாது, அதெல்லாம் எங்க எப்பிடி மறந்துப் போவுமோ தெரியாது "ஆத்தா!"ன்னு சத்தத்தப் போட்டுக்கிட்டே பாட்டியாளப் பாக்க ஓடிப் போயிடவா.

            பாட்டியாளா அடுத்து தாத்தாவாயிட்ட சுப்பு வாத்தியார்ர அந்தாண்ட இந்தாண்ட நகர வுட மாட்டேங்றா பவ்வு பாப்பா. அவரு டிவியெஸ்ஸ எடுத்துட்டா போதும், அதுல ஏறிப் போயாவணும் அவளுக்கு. விகடு சின்ன புள்ளையா இருந்தப்போ எப்பிடி அப்பங்காரரு வேட்டியப் பிடிச்சிக்கிட்டே அவரு போற எடமெல்லாம் திரிஞ்சானோ, அப்பிடிக்கி இப்போ தாத்தவோட வேட்டியப் பிடிச்சிட்டே திரியுறா பவ்வுப் பாப்பா.
            புள்ளைங்கள வளக்குறதுக்குன்னா பக்குவம் அப்பன் ஆயிய வுட தாத்தா பாட்டிக்குத்தாம் அதிகம் இருக்குமோ என்னவோ, யாருக்குத் தெரியும் சொல்லுங்க? புள்ளைங்களும் அப்பன் ஆயிய வுட தாத்தா பாட்டிகிட்டத்தாம் அதிகம் போயி ஒட்டிக்கிதுங்க. அப்பனுக்கும் ஆயிக்கும் கொழந்தைப் பெத்துக்கிடற வயசு வந்துட்டதாலயே அவுங்களுக்குக் கொழந்தைய வளக்குற மனசும் வந்துட்டுன்னு சொல்லிட முடியாது போலருக்கு. கொழந்தைய வளக்குறதுக்கான்னா மனசுங்றது அவுங்களுக்குத் தாத்தா பாட்டியா ஆவுறப்பத்தாம் வருது போலருக்கு. ஏன்னா கொழந்தைகளோட மனசுங்றது அம்மாம் மென்மையானது, அம்மாம் நுணுக்கமானது. அதெ புரிஞ்சிக்கிறதுக்கு அதே மாதிரிக்கி ஒரு கொழந்தை மனசுதாம் வேணும். அந்தக் கொழந்தைத்தனமான மனசெ காலம் தாத்தா பாட்டியாள ஆவுறப்பத்தாம் கொண்டாந்து சேக்குது போல.
            தாத்தா பாட்டிக இருக்குற வூட்டுல கொழந்தையப் பெக்குறதுதாங் பெத்தவங்களோட வேலையா இருக்கும். அதெ வளக்குறது தாத்தா பாட்டியத்தாம் இருக்கும். அது மாதிரியான வூடுகள்ல தாத்தாவும் பாட்டியும்தாம் கொழந்தைகளோட மொ‍தோ பெத்தவங்களா இருக்காங்க. பெத்தவங்க பேருக்குத்தாம் பெத்தவங்களா இருக்காங்க. கொழந்தைங்களும் அப்பன் ஆயிகிட்ட வளர்றத விரும்பாதோ என்னவோ! அது பாட்டுக்குத் தாத்தா பாட்டிக்கிட்டெ போயித்தாம் வளர்ருது. அதெ ஒண்ணுஞ் செய்ய முடிய மாட்டேங்குது. திங்குறதுலேந்து, வெளையாடுறதுலேந்து, தூங்குறதுலேந்து, பேசுறது, பழகுறது வரைக்கும் கொழந்தைகளோட ஒலகமே தாத்தா பாட்டித்தாம். பவ்வு பாப்பா அப்பிடித்தாம் வளர்றா.
            தாத்தாவும் பாட்டியும் பவ்வுப் பாப்பாவ கவனிச்சுக்கிறதெ வுட, பவ்வுப் பாப்பா தாத்தாவையும் பாட்டியையும் கவனிச்சிக்கிறது வேடிக்கையா இருக்கு. தாத்தாவுக்கோ, பாட்டியாளுக்கோ ஒடம்பு சரியில்லன்னா போதும் மருந்து மாத்திரைகள வாங்கி வெச்சுக்கிட்டு வேளா வேளைக்கு அவதாம் கொடுக்குறா. இத்தே இப்பிடிச் சாப்பிடு, அதெ அப்பிடிச் சாப்பிடுன்னு சாப்பிட வெச்சிட்டுத்தாம் மறுவேல பாக்குறா. அடிக்கடி நெஞ்சுலயும், தலையிலயும் கைய வெச்சிப் பாத்துக்கிடுறா. ஆயிகிட்டே ஓடியாந்து வெந்நித் தண்ணி கொடுன்னு வாங்கிக் கொண்டு போயி அதத்தாம் குடிக்கணும்னு குடிக்க வைக்குறா. அவளுக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லன்னாலும் தாத்தாவும் பாட்டியாளும்தாம் டாக்கடருகிட்டே தூக்கிக்கிட்டு ஓடுறாங்க, பாத்துக்கிடறாங்க, கவனிச்சிக்கிறாங்க. 
            ஒரு தடவெ இப்பிடித்தாம், சைக்கிள எடுத்துக்கிட்டு கடைப்பாக்கத்துக்குக் கெளம்புனாம் விகடு. பொதுவா அப்பங்கார்ரேம் பக்கமே எட்டிப் பாக்காத பவ்வு அன்னிக்கு என்ன நெனைச்சாளோ ஓடியாந்து, "நானும் வர்றேம்ப்பா!"ங்றா. வாழ்க்கையில மொதோ மொறையா மவ ஓடியாந்து அப்பங்காரங்கிட்ட கூட வர்றேன்னு சொன்னது அப்பத்தாம். அவனுக்குச் சந்தோஷம் தாங்கல. பவ்வத் தூக்கி கேரியர்ல உக்கார வெச்சிக்கிட்டாம். இவ்வேம் கால தூக்கிப் போட்டுக்கிட்டு ஏறி உக்காந்து பவ்வோட கையப் பிடிச்சி இடுப்புல பிடிச்சிக்கச் சொல்லிட்டாம். பவ்வு பாப்பா சரியா பிடிச்சிக்கிட்டு உக்காந்துகிட்டா. விகடுவுக்குச் சந்தோஷம்னா சந்தோஷம். அந்தச் சந்தோஷத்துல கால கவனமா பிடிச்சி‍ வைக்க மறந்துட்டாம். கெழக்கால சைக்கிளுப் போயி பரமு வூட்டத் தாண்டுது, வீல்ன்னு சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டா பவ்வு. சைக்கிள ஒடனே நிப்பாட்டிட்டாம் விகடு. சுத்தி நின்னவங்க எல்லாம் ஓடியாந்துட்டாங்க சைக்கிளு மின்னாடி.
            கால சைக்கிளு சக்கரத்துல வுட்டுப்புட்டா பவ்வு. கணுக்காலு தோலு முழுக்க வயட்டி எடுத்துப்புட்டு சைக்கிளு சக்கரத்தோட போக்ஸ்ஸூ கம்பிக. சைக்கிள அப்பிடி‍யே நிப்பாட்டிப்புட்டு பரமுவோட அப்பாவோட டிவியெஸ்ஸூ எக்ஸெல் சூப்பர்ர எடுக்க, அப்பிடியே அவருக்குப் பின்னாடிப் புள்ளையத் தூக்கி வெச்சிக்கிட்டு டாக்கடருகிட்டே தூக்கிட்டுப் போறாப்புல ஆயிடுச்சு. கால்ல கட்டெல்லாம் போட்டு வூட்டுக்குக் கொண்டாந்தா, சுப்பு வாத்தியாருக்குக் கோவம்னா கோவம் தாங்க முடியல. மவன்னுன்னும் பாக்காம கண்ட மேனிக்குத் திட்டிப்புட்டாரு. வெங்கு, ஆயி, செய்யுன்னு வந்து எல்லாரும் திட்ட வேணாம்னு சொல்லிப் பாக்குறாங்க. அவரால நிறுத்த முடியல. பெறவு கால்ல காயம் குணமாவுற வரைக்கும் சுப்பு வாத்தியாருதாம் பவ்வுவ தோள்ல போட்டுக்கிட்டே கெடந்தாரு. தோள்ல போட்டுக்கிட்டுக் கெடந்தார்ன்னா கீழேயே எறக்கி வுடுறது இல்லே. ராத்திரிக்கிம் தோள்லயே போட்டுக்கிட்டுத்தாம் படுத்துக் கெடப்பாரு சுப்பு வாத்தியாரு. பவ்வு முழிச்சிக்கிட்டா தோள்லயே போட்டுக்கிட்டுக் கூடத்துல வடக்காலயும், தெக்காலயும் அவ்வே தூங்குற வரைக்கும் நடந்துகிட்டு கெடப்பாரு. அந்தச் சம்பவத்தோட பவ்வுப் பாப்பா விகடுவோட வெளியில போறதெ விட்டுட்டா. மக ஆசையா அப்பங்காரனோட வந்த அந்த ஒரு சந்தர்ப்பமும் இந்தப் படியா பெறவு சந்தர்ப்பமே அமையாதபடிக்கு ஆயிடுச்சு. 
            ஒரு கல்யாணங் காட்சி தேவைன்னு போனாலும் சுப்பு வாத்தியாரு, வெங்கு, பவ்வு பாப்பா, செய்யுன்னு நாலு பேரும் ஒண்ணா போறதும், விகடுவும் ஆயியும் ஒண்ணா போறதுங்ற மாதிரி ஆயிடுச்சு. பெரும்பாலான தேவைகளுக்கு சுப்பு வாத்தியாரு, வெங்கு, பவ்வுன்னு மூணு பேருதாம் போறாங்க. சுப்பு வாத்தியாரு டிவியெஸ்ஸூ வண்டிய ஓட்டுறாரு, பின்னால வெங்கு மடியில பவ்வுவ உக்கார வெச்சிக்கிட்டுப் போறாங்க.
            கொஞ்ச நாளைக்கு விகடுவுக்கும், ஆயிக்கும் ன்னாடா இத்து நம்ம கொழந்‍தெ நம்மகிட்டெ வளர மாட்டேங்குதேன்னு ஒரு ஏக்கம் இருக்கத்தாம் செஞ்சுது. நாளாவ நாளாவ அது பழகிப் போச்சுது. பெறவு கொழந்தையப் பத்தின ஞாபவமே ரெண்டு பேருக்கும் இல்லாமப் போயிடுச்சு. வூட்டு வேலைகளும் அதிகமா இருந்ததால அவுங்களுக்கு அதெ கவனிக்கவே நேரம் சரியா இருந்துச்சு. சுப்பு வாத்தியாருக்கும், வெங்குவுக்கும் பேத்தியோட பேசுறதுக்கும், வெளையாடுறதுக்கும், தேவை திங்கன்னு வெளியில கெளம்புறத்துக்குத்தாம் நேரம் சரியா இருந்துச்சு. செய்யுவுக்குக் காலேஜூ போய்ட்டு வரவும், படிக்கவுமே நேரம் சரியா இருந்துச்சு. காலம் அது பாட்டுக்கு உருண்டு ஓடிக்கிட்டு இருந்துச்சு. 
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...