12 Mar 2020

பாட்டியாளும் பேத்தியாளும் இணைஞ்ச கதை!

செய்யு - 385        

            காலையில ஆறு மணி வாக்குல ஆயி எழுந்திரிச்சிப் பாத்தாக்கா நடுவுல படுக்கப் போட்டிருந்த பவ்வு பாப்பாவக் காணும். அசந்துத் தூங்கிட்டு இருந்த விகடுவெ எழுப்புறா ஆயி. அவ்வேம் எழுந்திரிக்க மாட்டேங்றாம். அவனால எழுந்திரிக்க முடியல.
            "யய்யே கொழந்தயக் காணும்ங்க! எழுந்திரிச்சித் தொலைங்க!"ன்னு சத்தத்தெ கொடுக்குறா ஆயி. விகடு எழுந்திரிக்கிறாப்புல தெரியல. ஒடனே ரூமெ வுட்டு வெளியில வந்து கூடத்துல படுத்துக் கெடக்குற மாமனார்ர எழுப்புறா. அவரும் சட்டுன்னு எழும்புற பாடா தெரியல. எல்லாருக்கும் தூக்கம்னா தூக்கம் அப்பிடி ஒரு தூக்கம். அசந்துப் போயித் தூங்குறாங்க. புள்ளையக் காணாத தவிப்புப் பெத்தத் தாய்க்குத்தானே தெரியும். மறுக்கா ரூமுக்குள்ள ஓடியாந்து தூங்கிக்கிட்டு இருக்குற விகடுவெ அடிச்சி எழுப்புறா. உருட்டிப் பெரட்டி வுட்டு எழுப்பப் பாக்குறா. அப்பத்தாம் விகடு லேசா கண்ண முழிச்சி எழும்ப எத்தனிச்சிப் பாக்குறாம்.
            ராத்திரிக்கித் தூக்கம் பிடிக்காத ஒருத்தெம் நடுராத்திரிக்கு மேலத்தாம் தன்னையுமறியாம தூங்குவாம். அப்பிடிக்கித் தூங்குறவனெ அந்தத் தூக்கத்துலேந்து அவ்வளவு சுலுவா எழுப்பிட முடியாது. வானமே இடிஞ்சி அவ்வேம் மேல விழுந்தாலும் எழுந்திரிக்க மாட்டாம். அப்படிப்பட்டவேம் அதிகாலையிலயும் எழுந்திரிக்க மாட்டாம். எழுந்திரிக்க நெனைச்சாலும் அவனால எழுந்திரிக்க முடியாது. அடிச்சிப் போட்டது மாதிரிக்கித் தூக்கம் தன்னோட கட்டுபாட்டுல அவனெ வெச்சிருக்கும்.
            பவ்வு பாப்பா ராத்திரி நெடுநேரம் முழிச்சிக்கிட்டுச் சிரிச்சிக்கிட்டுக் கையி கால ஆட்டிக்கிட்டு கெடப்பா. அவ முழிச்சிக்கிட்டு தூங்குற நேரம் வரைக்கும் விகடுவும், ஆயியும் முழச்சிக்கிட்டுக் கெடப்பாங்க. கட்டிலு ஓரமா ஆயிப் படுத்துக் கெடப்பா. நடுவுல பவ்வு பாப்பா படுத்துக் கெடப்பா. அதுக்கு அந்தாண்ட விகடு படுத்துக் கெடப்பாம். பவ்வு பாப்பா பெரண்டு கெரண்டு அந்தாண்ட விழுந்துடக் கூடாதுன்னு இந்த ஏற்பாடு. அப்பிடிக்கி ரெண்டு பேருக்கும் இடையில படுத்துத் தூங்குனாலும் தூங்குவா, இல்லன்னா தொட்டில்ல போட்டு ஆட்டோ ஆட்டோன்னு வுட்டுப்புட்டுத் தூங்குனாலும் தூங்குவா. சரித்தாம் பாப்பா தூங்குறாளேன்னு தொட்டில ஆட்டுறத நிப்பாட்டிட முடியாது. தொட்டில ஆட்டுறதெ எந்த கணத்துல நிப்பாட்டுறாமோ, அந்தக் கணத்துல டக்குன்னு முழிச்சிக்கிட்டு ஆழுவ ஆரம்பிச்சிடுவா.
            சுப்பு வாத்தியாரு பேத்திக்குத் தொட்டி கட்டி வெச்சிருந்தே வேடிக்கையாத்தாம் இருந்துச்சு. மாடி வூட்டுல நீட்டிட்டு இருக்குற கொக்கியில பொடவையப் போட்டு தொட்டிக் கட்டி வெச்சிருப்பாக பொதுவா. சுப்பு வாத்தியாரு கட்டுன வூட்டுல நடுக்கூடத்துல பேன் போடுறதுக்குப் போட்ட மூணு கொக்கியும் மூணு தெசையில போனதுல கூடத்துக்கு உள்ளார மேற்காலப் போன ஒரு கொக்கியல மட்டுந்தாம் பேன் தொங்குனுச்சி. மித்த ரெண்டு கோக்கியும் வடக்கால ஒண்ணும், தெக்கால ஒண்ணுமா தேமேன்னு இருந்துச்சு. அந்தக் கொக்கிய ரெண்டையும் இணைக்குறாப்புல மூங்கில வெச்சி நடுக்கூடத்துல கட்டுனாரு சுப்பு வாத்தியாரு. அந்த மூங்கில்ல ரெண்டு கயித்தக் கட்டி அழுத்தமா இருக்குற போர்வையோட ரெண்டு முனையையும் கயித்துல கட்டி தொட்டிய கெழக்கும் மேக்குமா ஆடுறாப்புல பண்ணாரு சுப்பு வாத்தியாரு. உக்காந்தபடிக்கு அதெ ஆட்டுறாப்புல ஒரு கயித்தையும் வேற கட்டி வெச்சிருந்தாரு. பாப்பா தொட்டில்ல கெடந்தா அதெ ஆட்டிக்கிட்டுக் கெடக்குறதுதாங் சுப்பு வாத்தியாருக்கு வேல. அவரு பாட்டுக்கு ஆட்டிக்கிட்டு பேத்தி கூட என்னவோ பேசிக்கிட்டுக் கெடப்பாரு. அவரு பேசுறதெல்லாம் சின்ன பாப்பாவுக்குப் புரியமான்னுல்லாம் யோசிக்க மாட்டாரு. பேசிகிட்டே கெடப்பாரு.
            பாட்டியாக்காரி பேத்திய வந்துப் பாக்கல, தூக்கலங்ற மனக்கொறை வேற சேந்ததுல விகடு, ஆயி ரெண்டு பேருக்குமே தூக்கம் பிடிக்கல. ஒருவேளை பவ்வு பாப்பா சில நாட்கள்ல சீக்கிரமே தூங்கிப்புட்டாலும் அவுங்க ரெண்டு பேருக்கும் தூக்கம் பிடிக்காது. நெடுநேரம் வரைக்கும் ரெண்டு பேருக்கும் பேச்சு ஓடிட்டுக் கெடக்கும். அந்தப் பேச்சு எப்போ முடியுது, அவுங்க எப்போ தூங்குறாங்கன்னு அவுங்களுக்கே தெரியாது. ராத்திரிக்கி பன்னெண்டு மணிக்குத் தூங்குனாலும் தூங்குனாதுதாம், நடுராத்திரிக்கி ஒரு மணி, ரெண்டு மணி வாக்குல தூங்குனாலும் தூங்குனதுதாம். சுப்பு வாத்தியாரும் பல நாட்கள்ல நெடுநேரம் பவ்வு பாப்பாவுக்காக முழிச்சிக்கிட்டுக் கெடப்பாரு. என்னத்தாம் இருந்தாலும் பள்ளியோடமும் போயிக்கிட்டு, நடுராத்திரி வரைக்கும் இப்பிடி முழச்சிக்கிட்டுக் கெடக்குறதுல சில நாட்கள்ல அடிச்சிப் போட்டது போல தூங்கிடறதும் உண்டு. அப்பிடி ஒரு நாளு எல்லாரும் அசந்துத் தூங்கிப்புட்டாங்க. 
            விகடுவும், ஆயியும் அவுங்க ரூமுல படுப்பாங்கன்னா, சுப்பு வாத்தியாரு கூடத்துலயோ, திண்ணையிலயோ தோதுக்குத் தகுந்தாப்புல படுத்துப்பாரு. வெங்குவும், செய்யுவும் பாத்ரூமும், டாயிலெட்டும் கட்டுறப்ப அதுக்கு மேற்கால ஒரு ரூமைக் கட்டுனாருல்ல சுப்பு வாத்தியாரு அந்த ரூமுல படுத்துப்பாங்க.
            பவ்வுப் பாப்பாவக் காணோங்றதெ அடிச்சிப் பிடிச்சி விகடுவெ எழுப்பி ஆயி விசயத்தெ சொன்னாக்கா அவனுக்குப் பகீர்ன்னு இருக்குது. அவ்வேம் மூளை பல வெதமா யோசனையப் பண்ணுது. ரூமுல படுக்கப் போட்டுருந்த பாப்பவ காணும்ன்னா அத்து எப்பிடி இருக்கும்? வூட்டுக்கு வெளியில கேட்டுப் போட்டு பூட்டிக் கெடக்கும். காலையில வாசல்ல கூட்டுறப்ப தொறக்குறதுதாங். பின்னால கொல்லைக்கட்டுலயும் கதவெ தாழ்ப்பாள்ள போட்டுப் பூட்டியிருக்கும். பூட்டியிருக்குற வூட்டுக்குள்ள யாரு வந்து தூக்கியிருக்க முடியும். கொழந்தை அழுது தூக்குனா சுப்பு வாத்தியாரு தூக்கியிருக்கணும். தூக்கிக் கொண்டு போயி தொட்டில்ல போட்டு ஆட்டியிருக்கணும், இல்லாட்டி பக்கத்துலு அணைச்சிப் படுக்கப் போட்டிருக்கணும். தொட்டில்லயும் கொழந்தையக் காணும், சுப்பு வாத்தியாரு பக்கத்துலயும் பாப்பாவக் காணும்னா வேற யாரு வந்து பாப்பாவத் தூக்கியிருக்க முடியும்? நிச்சயம் வெங்குவுக்கு பாப்பவ பாக்கவோ, தூக்கவோ பிடிக்காதுங்றதால அத்து தூக்கியிருக்க வாய்ப்புல்லன்னு நெனைச்சிக்காறம் விகடு. செய்யு வந்து தூக்கியிருந்தாலும் சொல்லிட்டுத்தாம் தூக்குவா. பாப்பாவ காணும்னு அலமலந்து தேடுவாங்கன்னு அவளுக்குத் தெரியும்.
            வேகமா ரூமெ வுட்டு வெளியில வந்த விகடு சுத்திலும் பாக்குறாம். சுப்பு வாத்தியாரு கூடத்துல படுத்துக் கெடக்குறாரு. பாப்பா இப்போ மல்லாந்துக்கிறா, தவழ்றா, மண்டியப் போட முயற்சிப் பண்றாளே தவிர அவளால ரொம்ப தூரத்துக்கு அதுவும் கட்டில்ல நடுவுல இருக்குற பாப்பா ஆயியத் தாண்டி நகர்ந்து வர்றதுக்கோ, போறதுக்கோ வாய்ப்பே இல்லே. விகடுவுக்கு ஒண்ணும் புரியல. திண்ணைக்கும் ‍கொல்லைக்கட்டுக்குமா ஒண்ணுக்கு நாலு தடவையா நடந்தவேம் அதுக்கு மேல பொறுக்க முடியாம சுப்பு வாத்தியார்ர எழுப்பிட்டாம். அவரும் ஒடம்ப போட்டு குலுக்குன பெற்பாடுதாம் எழுந்திரிக்கிறாரு. ஆயி இதெல்லாம் பாத்துப்புட்டுத் துடிச்சிப் போயி நிக்குறா.
            "யப்பா! பாப்பாவக் காணும்!"ன்னு அவ்வேம் சொன்னதுதாம் தாமசம். அவரு துடிச்சி எழுந்திரிச்சி அந்தாண்டயும் இந்தாண்டயும் ஓடுறாரு. அங்கயும் இங்கயும் தேடிப் பாக்குறாரு. மல்லாந்துக்கிட்டு தவழ்ற பாப்பா ரூமெ வுட்டு அந்தாண்ட போறதுக்கு வாய்ப்புல்ல. அதுவும் வெளியில பூட்டு, தாழ்ப்பாளு போட்டிருக்குற வூட்டுல யாரு வந்து தூக்க முடியும்? அவருக்கும் என்னப் பண்றதுன்னு புரியல. இருந்தாலும் ஒரு சந்தேகத்துக்கு வேக வேகமா பாத்ரூமுக்குப் பக்கத்துல இருக்குற ரூமுல படுத்துக் கெடக்குற செய்யுவ சத்தம் போட்டு எழுப்புறாரு. கண்ணெ கசக்கிக்கிட்டு எழுந்திரிச்ச வர்ற செய்யு,  "என்னாங்றா?"

            "பாப்பாவ தூக்குனீயா?"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
            "இல்லீயேப்பா!"ங்றா செய்யு.
            "பாப்பவ காங்கலயே?"ன்னு பதற்றமா சொல்லுறாரு சுப்பு வாத்தியாரு. எல்லாரு மொகத்துலயும் அதிர்ச்சியாப் போவுது, இதென்னடா ஊர்ல இல்லாத அதிசயமா கட்டில்ல அப்பம் ஆயிக்கிடையிலத் தூங்கிட்டு இருந்த பாப்பாவ காணும்னா அதெ என்ன சொல்றதுன்னு.
            அப்பத்தாம் வெங்குகிட்டேயிருந்து ஒரு சத்தம் வருது, "ந்நல்லா இருக்குக் கொழந்தயப் பாத்துக்கிடற லட்சணம்? அல்லாரும் ஆளாளுக்குக் கொழந்தையப் போட்டுக்கிட்டுக் கொறட்டைய வுட்டுத் தூங்கிட்டுக் கெடங்க. கொழந்தெ அது பாட்டுக்கு அழுதழுது அலமலந்துப் போவட்டும். அத்துப் பாவம்தானே. அழுகெ சத்தம் காதெ கிழிக்கிது. பக்கத்துல படுத்துக் கெடக்குற ஆயாளும் தூங்றா அந்த மேனிக்கி, அப்பங்காரனும் தூங்குறாம் இந்த மேனிக்கி. சர்த்தாம் தாத்தங்காரருக்குத்தாம் பொறுப்பு இருக்குன்னா அவரு அதுக்கு மேல கொறட்டெ வுட்டுத் தூங்குறாரு. அஞ்ஞ கொழந்த அழுவுற சத்தங் கேட்டு நாம்ம இஞ்ஞயிருந்து கெளம்பி வந்து அதெ தூக்கிட்டு வந்த அதெ அசமடக்கி பக்கத்துலத்தாம் போட்டு வெச்சிருக்கேம்! யேய் யம்மாடி கொழந்தையப் பெத்த மட்டும் போதாதுடி ஆயி! ஒறங்குறப்பவும் ஒரு கண்ணு கொழந்தெ மேல இருக்கணும்."ங்குது வெங்கு.
            ஆயி அந்த ரூமுக்குள்ள புகுந்து உள்ளார பாக்குறா. அங்க பாட்டியா கட்டில்ல இந்தப் பக்கத்துல படுத்துக் கெடக்க, அந்தப் பக்கத்துல பாட்டியாளோட சேலையப் பிடிச்சிக்கிட்டு, அதெயே மேல போத்திக்கிட்டுப் படுத்துக் கெடக்கறா பவ்வு பாப்பா.
            ஆயிக்கு இப்போ கொழந்தயப் பாத்ததோட, பாட்டியா பேத்தியாளைப் பாத்துட்டாங்க, தூக்கிட்டாங்க சந்தோஷம் மொகத்துல தெரியுது. அப்பிடியே படுத்துக் கெடக்கற மாமியாக்காரிய கட்டிப் புடிச்சிக்கிட்டு அழுவுறா.
            "ஏம்மா லூசாம்மா நீயி! கொழந்தயத் தூக்குனா சொல்றதில்ல? இப்பிடியா பண்ணுவாங்க?"ங்றா செய்யு.
            "ஆமாம்டி. நடுராத்திரிக்கிக் கடந்து மூணோ நாலோ மணி இருக்கும். ஒண்ணும் எழும்ப மாட்டேங்கது. நாமளும் என்னென்னவோ பண்ணிப் பாக்குறேம். இப்பிடியா நம்ம வூட்டு செட்டுங்க ஒவ்வொண்ணும் கும்பகர்ணம் கணக்கா தூங்குறது? பெறவு நாம்ம ன்னாடிப் பண்றது? செரி அவுங்கத்தாம் ராத்திரி நேரத்துக் கண்ணு முழிப்புன்னுப் பாத்தாக்கா ஒன்னய வந்து இஞ்ஞ எழுப்புனா நீயி அவுங்களத் தாண்டி தூங்குறே. ஒன்னய அடிச்சிம் எழுப்பிப் பாக்குறேம். நீயித் திரும்பித் திரும்பி படுத்துக்கிறீயே தவுர எழுந்திரிக்கிற பாடாயில்ல. பெறவு நாம்ம என்னத்ததாம்டி பண்றது? அழுதவளெ தூக்கி வெச்சிக்கிட்டா சிரிக்கிறா. சரித்தாம் சிரிக்கிறாளேன்னு மறுக்கா கட்டில்ல போட்டா அழுகையப் பிடிக்கிறா. நாம்மத்தாம் ராத்திரிக்கி அவ்வே தூங்குற வரைக்கும் தோள்ல போட்டுக்கிட்டு கூடத்துல அஞ்ஞயும் இஞ்ஞயுமா நடந்துக்கிட்டே இருந்தேம். எம்மாம் நேரம் நடக்குறது? காலு நோவு கண்டுப் போயிடுச்சி. சரித்தாம்னு இஞ்ஞ கொண்டாந்து கட்டில்ல போட்டுக்கிட்டு அணைச்சிக்கிட்டா நம்மள பிடிச்சிக்கிட்டே சிரிச்சிக்கிட்டே படுத்துக் கெடக்குறா. கையப் பிடிக்கிறா, மொகத்தப் பிடிக்கிறா, மயித்தப் பிடிச்சி இழுக்குறா. ரொம்ப நேரத்துக்குத் தூங்காம நம்ம கூட வெளையாடிட்டு இருக்குறா. பெறவு அவ்வே தூங்கிப்புட்டா. நமக்குத் தூக்கம் வாரல. அந்நேரத்துலேந்து இந்நேரம் வரைக்கும் தூங்கமாத்தாம் கெடக்குறேம் புள்ளயப் பக்கத்துல போட்டக்கிட்டு! புள்ளயப் பெத்து வளக்குறதுன்னா ச்சும்மா? நாம்ம ரண்டுக் கொழந்தையப் பெத்து வளத்தேம்னா அம்மாம் பாடு பட்டேம். இதுங்க ன்னான்னா ஒத்தைக் கொழந்தைக்கே அதெ பாக்காமா தூங்கிட்டுக் கெடக்கதுங்க!"ங்குது வெங்கு.
            அன்னிக்கு அப்பிடி வெங்கு பேத்தியாளைத் தூக்க ஆரம்பிச்சித்துதாம். அன்னியிலேந்து பேத்தியா பக்கம் யாரும் நெருங்க முடியல. ‍எந்நேரத்துக்கும் பேத்தியாளோடத்தாம் பொழுது கழியுது வெங்குவுக்கு. அத்து மட்டுமில்லாம ராத்திரியில ஆயி அப்பனோட தூங்குற பவ்வு பாப்பவெ அது பாட்டுக்கு வந்துத் தூக்கிட்டும் போயிடுது வெங்கு. பாப்பாவாக் காணும்னு இப்போல்லாம் தேட வேண்டியதில்லெ, அது பாட்டியா பக்கத்துல படுத்துக் கெடக்குது.
            பவ்வு வளர்ந்து நடக்க ஆரம்பிச்சப் பிற்பாடு அவளும் வெங்குவோடத்தாம் இருக்கா. ஆத்தாளும் பேத்தியும் நிமிஷ நேரம் பிரியுறது இல்லே. இதுல ரொம்ப வேடிக்கையா நடுராத்திரியில பாலு குடிக்கணும்னு பவ்வுப் பாப்பாவுக்குத் தோணுனா அவ்வே பாட்டுக்கு ரூமுக்கு வந்து ஆயிக்கிட்ட பால குடிச்சிப்புட்டுத் திரும்பவும் பாட்டியாளா நோக்கி ஓடிப் போயிடறா. இப்பிடிக்கி அவ்வே நாலு வயசு வரைக்கும் தாய்ப்பால்ல குடிச்சா. அப்பன் ஆயி வூட்டுல இருந்தாலும் அவ்வே என்னவோ பாட்டியா கூடயே வளர ஆரம்பிச்சா. பாட்டியாவான வெங்கு பவ்வுப் பாப்பாவுக்கு குருவியக் காட்டுறது, பூவெ காட்டுறது, கதைகளெ சொல்லுறது, பாட்டெ சொல்றது, தொட்டில்ல போட்டு ஆட்டிக்கிட்டெ கெடக்குறது, நேரா நேரத்துக்கு சோத்த ஊட்டி வுறதுன்னு பேத்தியாளுக்கு ஏத்த மாதிரி மாறிப் போயிடுச்சு. இந்த மாத்தமெல்லாம் எப்பிடி வந்திச்சி, ஏம் வந்திச்சின்னு எதுக்கும் காரணம் தெரியல.
            ஆயியோட நெலமைத்தாம் இப்போ பாவமா இருந்திச்சி. ஒரு நேரத்துல, "அத்தே பாப்பாவ தூக்க மாட்டாங்களா?"ன்னு ஆத்தாமையில அழுது பொலம்புனவ, இப்போ, "ஏம்ங்க நம்ம பாப்பா நம்மகிட்டயே வளராதா? அதெ தூக்கியே நாளாச்சுங்க! பால குடிக்கிறதுக்கு மட்டுந்தாம் பூனையப் போல வர்றா பாப்பா. அத்துவும் குடிச்ச சொவடே தெரியாம மறுக்கா அத்தேகிட்டே ஓடிப் போயிடுறா"ங்றா அழுகையோட. விகடுவுக்கு இதெ கேட்டுச் சிரிக்கிறதா? அழுவுறதா?ன்னு தெரியல. கொஞ்ச நாளு வரைக்கும் இதையே பொலம்பிக்கிட்டுக் கெடந்த ஆயி ஒரு கட்டத்துல சலிச்சிப் போயி சர்தாம் போன்னு விட்டுப்புட்டா. பாட்டியாளும், பேத்தியும் அப்பிடி ஒண்ணுக்குள்ள ஒட்டிக்கிட்டாங்க. அத்தோட பேத்தியோட பேசுறப்ப, "ஒனக்கு வெளயைாடுறதுக்கு ஒரு தம்பிப் பாப்பா வாணாமா?"ன்னு கேக்குறதயும் வுடுறதில்ல வெங்கு. அத்து இப்போ கோயிலு கோயிலா போயி அங்க இருக்குற அத்தனெ செலைக்கும் தண்ணிய வேற ஊத்திக்கிட்டுக் கெடக்கு, மவனுக்கு ஆம்பள புள்ளே பொறக்கணும்னு வெங்கு.
            அதெ பாக்குறப்ப ஆயி சிரிச்சா சிரிப்பா. "கோயிலு கோயிலா போயி தண்ணிய ஊத்துனா ஆம்பளெ புள்ள பொறந்துடுமா? இதுல நம்மள வேற செல நாட்கள்ல அழைச்சிட்டுப் போயி பெண்டிக் கெழட்டிடுறாங்க அத்தெ. நீஞ்ஞ என்னான்னா நாட்டோட மக்கள்தொகை நம்மால பெருகிடக் கூடாதுன்னுட்டு இன்னொரு கொழந்தெ முடியாதுன்னுகிட்டு நிக்குறீங்க! இதெ ஒஞ்ஞ யம்மாகிட்டெ எம்மட மாமியாக்காரிக்கிட்டெ சொன்னாக்கா அவ்வேம் அப்பிடித்தாம் இருப்பாம். நாம்ம இப்பிடிக்கித் தண்ணிய கொடம் கொடமா ஊத்துனாத்தாம் கடவுளு போயி அவ்வேம் மனசுல மாத்தத்தெ உண்டு பண்ணுவாருங்றாங்க தெர்யுமா?"ன்னு சொல்லிக்கிட்டு வாயைப் பொத்திகிட்டுச் சிரிப்பா ஆயி.
            சிரிச்சிக்கிட்டெ, "ஏம்ங்க நாம்ம இன்னொரு ஆம்பளெ சிங்கத்தெ பெத்துகிட்டா ன்னா?"ம்பா ஆயி.
            "நாம்ம இருவரு நமக்கு இருவருங்றது அப்போ. நாம்ம இருவரு நமக்கு ஒருவர்ங்றது சித்தெ மின்னாடி. நாம்ம இருவர் நமக்கேன் ஒருவர்ங்றதுதாங் இப்போ. தெர்யுமா ஒனக்கு? நமக்கு நம்மக் கொழந்தையும் சர்த்தாம், பள்ளியோடத்துல பாடத்தெ நடத்திக் காட்டுற கொழந்தையோளும் சர்த்தாம் எல்லாம் ஒண்ணுத்தாம். எல்லாம் நம்ம கொழந்தைக மாதிரித்தாம். இம்மாம் கொழந்தைங்க நாட்டுக்குப் போதும். இதுக்கு மேல வாணாம்!"ம்பாம் விகடு.
            "இந்தப் பேச்சுக்கு ஒண்ணும் கொறைச்சல் யில்ல. வாயி இல்லன்னாலும் ஒஞ்ஞள நாயித் தூக்கிட்டுப் போயிடும்! ம்ஹூக்கும்!"ன்னு மூஞ்சைச் சுழிச்சிக்கிட்டுப் போவா ஆயி.
            ஒத்தப் புள்ளெ, அந்த ஒத்த புள்ளையையும் பொட்டப் புள்ளயா பெத்து வெச்சிருக்கிறாம் விகடுன்னு ஊருல பேச்சாயிக் கெடக்குது.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...