செய்யு - 384
பாப்பாவும், ஆயியும் வூட்டுக்கு வந்து
ரெண்டு மூணு நாளாவுது. பள்ளியோடம் கெளம்புறதுக்கு முன்னாடியும் சரித்தாம், பள்ளியோடம்
விட்டு வந்த பின்னாடியும் சரியத்தாம் பேத்திய தூக்கி வெச்சிக்கிறது, அத்தோட கொஞ்சுறதுதாம்
சுப்பு வாத்தியாரோட வேலையாப் போச்சி. பாப்பாவோட ஆயி பொறந்த வூட்டுல இருந்தப்பவும்
சனிக் கெழமையோ, ஞாயித்துக் கெழமையோ அங்கக் கொல்லம்பட்டிக்குப் போயி கொஞ்சிட்டு
வரலேன்னா சுப்பு வாத்தியாருக்குத் தூக்கம் பிடிக்காது. அப்பிடி ஆறு மாசமா அலைஞ்சி அலைஞ்சிப்
பாத்தவரு. இப்போ பேத்தி வூட்டுக்கே வந்துப்புட்ட பிற்பாடு சும்மா இருப்பாரா? அப்பைக்கப்போ
பேத்தியத் தூக்கிக்கிட்டு வெங்கு இருக்குற பக்கமாப் போவாரு. அத்து மூஞ்சியத் திருப்பிக்கிட்டு
பாப்பாவோட முகத்தெ பாக்கக் கூடாதுன்னு ரூமுக்குள்ள ஓடிப் போயிடும். எங்க ஒருவேளைக்கி
பேத்தியோட முகத்தெப் பாத்தாக்கா மனசு மாறிடுமோ என்னவோன்னு அதுக்கு ஒரு நெனைப்பு
போல.
சுப்பு வாத்தியாரு இப்பிடின்னா செய்யு
அதுக்கு மேல. காலேஜூ போய்ட்டு வர்ற நேரம் தவுர மித்த நேரமெல்லாம் செய்யுவுக்குப் பாப்பவோடத்தாம்
கழியுது. அவ்வே வெத வெதமா மணி, வளையலு, கிலுகிலுப்பெ, பொம்மென்னு வாங்கிட்டு வந்து
குமிக்குறா. சில நாளு அவ்வே படிக்கிறது கூட இல்லே. பாப்பவ தூக்குறது, கொஞ்சுறதுதாம்
அவ்வே வேலன்னு கெடக்குறா. வெங்கு மட்டும் பேத்திய வந்துப் பாக்கவுமில்லே, தூக்கவுமில்லே.
இத்து வூட்டுல எல்லாத்துக்கும் பெரிய மனக்கொறையாவே போவுது. கொழந்தையப் பாத்தாக்கா
எல்லாம் சரியாப் போயிடுமுன்னுப் பாத்தாக்கா வெங்கு வந்து கொழந்தையப் பாத்தாத்தான்னே?
அத்து வந்து கொழந்தையப் பாக்க முடியாதுங்றதுல அம்மாம் பிடிவாதமா இருக்கு. செய்யுவும்
அவ்வ பங்குக்குத் திட்டித் தீத்துப்புட்டா. "நீயும் ஒரு பொம்பளதானே? பொம்பளப்
புள்ளப் பொறந்துட்டுன்னு இப்பிடி மூஞ்சத் தூக்கி வெ்ச்சிட்டு இருக்கே? ச்சேய்!"ன்னு
சொல்லியும் பாத்துட்டு.
"ஏஞ்ஞ அத்தே வந்துப் பாப்பாவ பாக்க
மாட்டாங்களா? தூக்க மாட்டாங்களா? நமக்கு ரொம்ப பயமா இருக்குங்க!" அப்பிடிங்கிது
ஆயி விகடுகிட்டே.
"கொஞ்சம் பொறுமையா யிரு. எல்லாஞ்
சரியாயிடும்!"ங்றாம் விகடு.
"ஆடி மாசத்துல கொழந்தெ பொறந்தா
இப்பிடித்தாம் குடும்பத்தெ ஆட்டி வைக்கும்னு சொல்லுறாங்களே?"ன்னு ஆயி வேற பீதியா
பேசுறா.
"எந்த மாசத்துல பொறந்தா ன்னா? எல்லாம்
மாசம்தாம். எந்தப் புள்ள பொறந்தா ன்னா? எல்லாம் புள்ளத்தாம்!"ங்றாம் விகடு.
"பொம்பள புள்ள பொறக்குறதுக்கு பொம்பளைங்க
காரணமில்லையாமே தெர்யுமா? என்னவோ எக்ஸூன்னு ஒய்யுன்னு சொல்லுறாங்க, குரோசோம்ன்னு
சொல்றாங்க. அத்து ஆம்பளெ கிட்டதான இருக்காம். கொழந்தெ ஆம்பளையாவும், பொம்பளையாவும்
பொறக்குறதுக்கு ஆம்பளேதானே காரணம். கொழந்தெ பாப்பாவ பொறந்ததுக்கு நீங்கத்தான காரணம்.
அதுக்கு ஒஞ்ஞகிட்டே கோவப்படாம அத்தே ஏம் நம்மடகிட்டே கோவப்படுறாங்க?"ங்றா செய்யு.
இதெ கேக்குற விகடுவுக்குச் சிரிப்புத்தாம்
வருது. அந்தச் சிரிப்பு மாறுறாப்புல அடுத்தச் சேதியச் சொல்லுறா ஆயி.
"நீஞ்ஞளும் பள்ளியோடம் போயிடுறீங்க!
மாமாவும் பள்ளியோடம் போயிடுறாங்க. செய்யுவும் காலேஜூ போயிடுதா! வூட்டுல நாமளும்
அத்தே மட்டும்தான இருக்கேம். ஒரு பேச்சுத் தொணைக்குக் கூட வந்து எட்டிப் பாக்க மாட்டேங்றாங்க
அத்தே. நம்மள பாத்தாவே மூஞ்சத் திருப்பிக்கிட்டு அவுங்க பாட்டுக்கு வேறொரு தெசைக்குப்
போயிடுறாங்க. வூட்டுல ரொம்ப தனிமையா இருக்குறாப்புல இருக்குதுங்க. நீஞ்ஞளாவது மத்தியானதுக்குச்
சாப்பாட்ட எடுத்துட்டுப் போவாம, பள்ளியோடத்துலேந்து வூட்டுக்கு வந்து சாப்புட்டுப்
போறீங்களா?"ங்றா செய்யு. அவ்வ அப்பிடிக் கேக்குறப்ப பாவமா இருக்கு விகடுவுக்கு.
சரிதான்னு பள்ளியோடத்துல மதியானத்துல
பன்னெண்டு நாப்பதுக்கு மணி அடிச்சி வுட்டுப்புட்டு அஞ்சாப்பு பையனெ ஒருத்தனெ வர்ற வரைக்கும்
பள்ளியோடத்துப் புள்ளைகளப் பத்திரமா பாத்துகிடணும்னு சொல்லிப்புட்டு வேக வேமாக கோட்டகத்துலேந்து
திட்டைக்குச் சைக்கிள மிதிச்சிட்டு வருவாம் விகடு. வர்றதுக்கு மூணு கிலோ மீட்டரு,
திரும்புறதுக்கு மூணு கிலோ மீட்டரு அந்த மத்தியான வெயில்ல சைக்கிள மிதிச்சிட்டு வர்றாப்புல
ஆயிடுச்சு விகடுவுக்கு.
"இந்த யம்மா ஏம் இப்பிடிப் பண்ணுது?
அத்து மாறுனா எந்தப் பெரச்சனையும் யில்ல. இப்பிடி அழிச்சாட்டியம் பண்ணுதே!"ன்னு
நெனைச்சிக்கிட்டுத்தாம் சைக்கிள மிதிச்சிட்டு வருவாம் விகடு. அப்பிடி அதெ நெனைக்கிறப்பவே
கண்ணுலேந்து தண்ணித் தண்ணியா ஊத்தும் அவனுக்கு. யாருமில்லாத அத்துவான காட்டுக்குள்ள
உலாத்துறாப்புலத்தான கோட்டகத்திலேந்து திட்டைக்கு களிமங்கலத்து ரோட்டு வழியா வர்றதுங்றது.
அதால அவனோட கண்ணுத் தண்ணி அங்க இங்க இருக்குற ஈ, காக்காவுக்குக் கூட தெரியாம போச்சுது.
கீழே சிந்துற கண்ணுத் தண்ணியும் விழுவுறதுக்குள்ள அந்த வெக்கையில பொசுங்கி ஆவியா வானத்துக்குப்
போயிடுதே தவுர பூமியில விழுந்து இந்த மண்ணுக்குத் தெரிய மாட்டேங்குது.
இப்பிடித்தாம் ஆயி வந்ததுலேந்து ஒரு நாலைஞ்சு
நாளு அரக்கப் பரக்க மத்தியான நேரத்துல சைக்கிள மிதிச்சிட்டு வூட்டுக்கு வர்றது, ஆயியையும்
பாப்பாவையும் பாத்துப்புட்டு கொஞ்ச நேரம் இருந்துப்புட்டு, சரியா சாப்புடாம கொள்ளாம
மறுபடியும் சைக்கிள மிதிச்சிக்கிட்டு ஓடுறதுன்னு கெடந்தாம் விகடு.
எதுவும் மாறும்! இதுவும் மாறும்! அப்பிடின்னுல்லாம்
சொல்றாங்களே! இது மாறாதா? மாறாமலே போயிடுமா?ன்னு கேள்வி மேல கேள்வியா விகடுவோட மனசுக்குள்ள
அலை பாயுது.
இந்த நெலமைய மாத்துறதுக்கு சுப்பு வாத்தியாரும்
அவரால முடிஞ்ச சில வேலைய பண்ணித்தாம் பாத்தாரு. அத்து எதுவும் வேலைக்கு ஆவல. பாப்பாவுக்குப்
பதினாறு பண்ணுன நாளுல பேரு வைக்கணுமே. பாப்பாவுக்கு என்ன பேரு வைக்குறதுன்னு கேட்டாக்கா
விகடு கொஞ்ச நேரம் யோசிச்சுப் பாத்துட்டு, "வாசுகி"ங்றாம்.
வள்ளுவரப் பத்திச் சரியான தகவல்கள் கெடைக்காட்டியும்,
அவரோட மனைவிப் பேரு வாசுகின்னுத்தானே சொல்றாங்க. அதால அந்தப் பேரை வைக்கணும்னு விகடுவுக்கு
ஒரு ஆசை. விகடு அந்தப் பேரைச் சொன்னதும், சுப்பு வாத்தியாருகிட்டயும் ஒரு வார்த்தெ
கேக்குறாங்க, "அந்தப் பேரையே வெச்சிப்புடலாமா?"ன்னு. அவரு அதுக்கு, "அந்தப் பேரு வாணாம், பவ்வுன்னு வைப்பேம்!"ங்றாரு.
அதென்ன பவ்வுன்னுச் சுத்தி இருக்குறவங்க
கேட்டப்போ, "பவ்வுங்றது பவதாரணிங்ற அம்மனோட பேரு. நாஞ்ஞ எங்க வகையில பவதாரணி
அம்மன பவ்வுன்னுத்தாம் அழைப்பேம். அந்த அம்மனோட பேரைத்தாம் பேத்திக்கு வைக்கலாம்னு
நெனைக்கிறேம்!" அப்பிடிங்கிறாரு சுப்பு வாத்தியாரு.
"ன்னா மருமவ்வேம் ஒரு பேர்ர சொல்றாரு?
சம்பந்தி ஒரு பேர்ர சொல்றாரு? எதெ வைக்கிறது?"ன்னு ஊருக்காரவுகளும், ஒறவுக்காரவுகளும்
கேக்குறாங்க.
"பவ்வுன்னே வையுங்க!"ன்னு அழுத்தமா
சொல்றாரு சுப்பு வாத்தியாரு.
"ஏம்ப்பா! வாசுகிங்ற பேரும் நல்லாத்தானே
இருக்கு! அதெ வைக்கலாம்ப்பா!"ங்றாம் விகடு.
"அவுங்கவங்க புள்ள பெத்துக்கிறாங்க.
அவுங்கவுங்க பேர்ர வெச்சிக்கிறாங்க. அவ்வேம் சொல்றபடிக்கே வெச்சுக்குங்க!"ங்றாரு
சுப்பு வாத்தியாரு காட்டமா.
விகடுவுக்கு ஒரு மாதிரியாப் போயிடுச்சு
மனசு. எதுக்கு இப்பிடி திடீர்ன்னு மூஞ்செ முறிக்குற மாதிரிக்கி அப்பங்காரரு பேசுறார்ன்னு
தெகைப்பாவும் இருக்கு விகடுவுக்கு.
"வாசுகி வாணாம். பவ்வுன்னே இருக்கட்டும்!"ன்னு
சொன்னப்போ விகடுவோட கொரலு ரொம்பவே தழுதழுத்துப் போச்சுது.
ஏம் இப்பிடி அப்பங்காரரு பேசுனார்ன்னு
அது வேற மண்டையப் போட்டு கொடையுது. அதுக்கான காரணத்தெ சில நாட்களுக்குப் பின்னாடி
செய்யுத்தாம் விகடுவுக்குச் சொன்னா. "யம்மாவுக்கு அம்மஞ் சாமிதானே ரொம்ப பிடிக்கும்.
யம்மாவுக்கு வேற பாப்பாவா போறந்தது பிடிக்கலயில்ல. அதால அம்மஞ் சாமி பேர்ரா வெச்சா
அதுக்குப் பிடிச்சிப் போவும்ணுத்தாம் யப்பா அப்பிடி வெச்சிருக்கு" அப்பிடின்னு
சொன்னா செய்யு. இப்பிடி கொழந்தைகளுக்குப் பேரு வைக்கிறதுலயும் சில சூட்சமங்க இருக்கத்தாம்
செய்யுது. அத்தோட பாட்டம் பேரு, பாட்டியா பேரையும் வைக்குறது உண்டு அவங்கள ஞாபவத்துல
வெச்சிக்கிறாப்புல. அப்பிடி பேரு வைக்குறதுல உள்ள முக்கியமான வெசயமே அவுங்களே மறுக்கா
வந்து கொழந்தையா பொறக்குறதா நெனைச்சிக்கிற நம்பிக்கேதாம் அதுக்குக் காரணம்.
பவ்வுன்னு இப்பிடியா பேரு வெச்சதுல, பாப்பா
பாப்பான்னு கூப்புட்டு இருந்த நெலமெ முடிவுக்கு வந்து பவ்வு பவ்வுன்னு கூப்புடற நெலமே
உண்டாச்சி. சமயத்துல பவ்வுப் பாப்பான்னு கூப்புடுறதும் உண்டு.
வூட்டுல எல்லாரும் பவ்வு பவ்வுன்னு பாப்பாவ
கொஞ்சுறாங்க, உருகுறாங்க. அதுக்கு ஏத்தாப்புல அவ்வே பண்ற அலும்பும், சேட்டையும் பாக்குறதுக்கு
ரொம்ப ரசனையாத்தாம் இருக்கு. ஊருல இருக்குற அத்தனெ சுடுகுஞ்சியிலேந்து கெழடு கட்ட
வரைக்கும் வூட்டுக்கு வந்து பவ்வுவத் தூக்கிப் பாத்திடுச்சிங்க. ஆனா பவ்வுக்கு அப்பாயி
ஆசையோட தூக்கிக் கொஞ்சுற நேரம் மட்டும் அவ்வளவு சீக்கிரத்துக்கு வரல. பவ்வுவோட மூஞ்சி
எப்பிடி இருக்குன்னு கூட பாக்காம அலும்புப் பண்ணிக்கிட்டு இருக்கு வெங்கு.
சில விசயங்களுக்கு நாம்ம என்ன பதிலெச்
சொல்றது சொல்லுங்க? காலம்தாம் அதுக்கான பதிலெச் சொல்லணும். காலத்துக்குத்தாம் அந்தச்
சக்தி இருக்கு. அதுதாங் பிடிவாதத்தெ மறக்கடிச்சி, அது கெடக்குப் போங்ற நெனைப்ப ஞாபவத்துல
கொண்டு வந்தாவணும். இங்க யாரோட மனச யாரு மாத்த முடியுங்றீங்க? ஒவ்வொரு மனசும் கல்லு
மாதிரிக்கி. எறும்பு ஊர ஊர கல்லும் தேயும்ங்ற மாதிரிக்கி, காலம் ஊர ஊரத்தாம் கல்லு
மனசும் தேயும் போலருக்கு. அதுக்குள்ள அந்தச் சங்கடமான நாட்கள கடத்துறது இருக்குப்
பாருங்க. அத்து நரகத்துல இருக்குறாப்புல ஒரு பெருங்கொடுமையால்லா இருக்கு. வூட்டுல
நாலைஞ்சு பேரு இருந்துகிட்டு ஒருத்தரு மட்டும் ஒண்ணுலயும் கலந்துக்கிடாம ஒதுங்கிக்
கெடந்தா அத்து அந்த ஒருத்தர மட்டுமா பாதிக்கிது. மித்தவங்களத்தாம் ரொம்ப அதிகமா பாதிக்குது.
சரியோ, தப்போ ஒரு வார்த்தெ பேசிப்புட்டா அத்து அத்தோட சரியாப் போயிடும். பேசாட்டியும்
திட்டிப்புட்டா கூட போதும். அதெ கூட மனசு ஒரு வகையில ஏத்துக்கும். பேசாம ஒதுங்கிப்
போறது இருக்கே, அதெ மட்டும் மனசால தாங்க முடியாது. மனசு அப்பிடியே தவிச்சிப் போயிடும்,
துடிச்சிப் போயிடும்.
*****
No comments:
Post a Comment