செய்யு - 353
வானத்துல இருக்குற மேகத்துக்கு ஒரு குணம்
இருக்குது. ஒண்ணு பெய்யாம போட்டு பூமிய காய வெச்சு மனுஷன பழி வாங்கும். இல்லாட்டி
ஒரே அடியா பெய்ய வெச்சு பூமிய வெள்ள காடாக்கி மனுஷன பழி வாங்கும். இப்போல்லாம் இங்க
மழை பேஞ்சா ஒரே அடியா பெய்யுது. சாத்து சாத்துன்னு சாத்துது. ரெண்டு மூணு மாசத்துக்கு
நெதானமா பெய்ய வேண்டிய மழை மூணு நாலு நாள்ல மூத்திரத்த அடக்க முடியாதவம் பேஞ்சு முடிக்கிறாப்புல
பேய் மழையா பேஞ்சு முடிச்சிடுது. அப்பிடி மழை பெய்யுறப்பத்தாம் ஆத்துல தண்ணி அள்ளிக்கிட்டுப்
போயி ஊரே வெள்ளக்காடா போயிடுது.
இங்க திட்டையில ஓடுற வெண்ணாத்துக்கும்,
ஓகையூரு, கோட்டகத்துப் பக்கம் ஓடுற வெள்ளையாத்துக்கும் வித்தியாசம் இருக்கு. வெண்ணாறு
மாதிரி தண்ணி நெதானமா போற ஆறு வெள்ளையாறு கெடையாது. தண்ணி போனாக்கா போவும். இல்லாட்டி
தண்ணியே இல்லாத ஆறு போல கெடக்கும். வெண்ணாறு குளம் மாதிரிக்கி அரையாறு அளவுக்கு எப்ப
பாத்தாலும் தண்ணி கெடக்கும். தண்ணி பெருகுறப்ப முக்காலு ஆறு அளவுக்கு ஓடும். வெள்ளையாத்துல
தண்ணி போறப்ப முழு ஆறாத்தாம் போவும். தண்ணி போவாதப்ப ஆத்துல எறங்கி சின்னக் கொழந்தையும்
அந்தாண்ட இந்தாண்ட போயிடலாம் வெச்சா குடுமி, செரைச்சா மொட்டைங்ற மாதிரிக்கி ஓடும்.
நாலஞ்சு வருஷத்துக்குப் பெறவு பெருமழை,
பெருவெள்ளம்ன்னா இப்போத்தாம். இந்த மழையையும், ஆத்துல ஓடுற தண்ணியையும் ஊரு தாங்குமான்னு
தெரியல. டிவியெஸ்ஸ ஓட்டிட்டுப் போறவரு சொல்றாப்புல எங்கேயாச்சிம் ஒடைப்பெடுத்து ஒரு
ஊரு அழிஞ்சாத்தாம் மித்த ஊர்க தப்பிக்கும் போலருக்கு. அத்து எந்த ஊர்ல ஒடைப்பெடுக்கப்
போவுதுங்றதுதாம் தெரியல. ஆத்துக்கரையோராமா இருக்குற ஒவ்வொரு ஊருகாரங்களும் இப்போ
தங்களோட ஊருல ஒடைப்பெடுக்கக் கூடாதுன்னு போராடிட்டு இருப்பாங்க. ஊருல ஒரு சுடுகுஞ்சி
இருக்காது. எல்லாம் ஆத்துக் கரையில அடைப்பை அடைக்கப் போறோம்னுத்தாம் போயி நிக்கும்.
போவப் போவ கரை கொஞ்சம் பலவீனமா இருக்குற
எடங்கள்ல மரத்துல இருக்குற கிளைகள வெட்டி கரைக்கு பந்தோபஸ்தா அணைச்சி அதெ கயித்துல
கட்டி அப்படியே கரையோரத்துல முளை அடிச்சிக் கட்டுறாங்க ஆளுங்க. ஆத்துத் தண்ணி இப்போ
கரைய ரொம்ப அரிச்சிக்கிட்டு ஓட முடியாம கரையில தொங்குற மரக்கிளைய அணைச்சிக்கிட்டு
ஓடுது. கரை ஒடைச்சா ஊருக்குள்ள வெள்ளந்தாம். அது பத்தின பயமும், கவலையும் மனசுக்குள்ள
இருக்கான்னு தெரியல சனங்களுக்கு. எல்லாரும் ஆத்துக் கரையோராமா வேடிக்கைப் பாத்துக்கிட்டும்,
கரையை அணைச்சி மூட்டைகள அடுக்குறதுமா கொண்டாட்டமும், கும்மாளமுமா சத்தம் போட்டுக்கிட்டு
இருக்காங்க. டிவியெஸ்ல போயிட்டு இருக்குற விகடுவெ பாத்து, "பாத்து வாத்தியாரே!
சூதானமா ஊருப் போயி சேருங்க!"ன்னு விகடுகிட்டயும், "யேய் யப்பா! வாத்தியாரம்பீய பாத்துக் கொண்டு
போயி விட்டுட்டு வாடாப்பா!"ன்னு வண்டிய ஓட்டிட்டுப் போயிட்டு இருக்கிறவருகிட்டயும்
சொல்றாங்க கரையில இருக்குற சனங்க.
வெள்ளையாத்துக் கரையிலேந்து மணலி திரும்புற
பாதையில வடக்கால திரும்பி போறப்ப அங்கங்க ஆத்துல போற தண்ணியப் பத்தித்தாம் சனங்க
பேசிட்டு இருக்காங்க. அவுங்களுக்கும் ஆத்துக்கும் கொஞ்சம் தூரங்கிறதால எங்காச்சிம்
ஒடைப்பெடுத்து அது அவுங்க ஊருக்கு வந்துடுமோங்ற மாதிரி பேசிக்கிறாங்க. இதுவரைக்கும்
வெறிச்சிக்கிட்டுக் கெடந்த வானமும் சன்னமா இப்போ தூறல போட ஆரம்பிக்குது. மூலங்கட்டளை
ரோட்டைப் பிடிச்சி ஓகையூரு வழியா வடவாதி வரைக்கும் வந்து, "இனுமே ஒண்ணும் பெரச்சனையில்ல
வாத்தியார்ரே! நீஞ்ஞ இப்பிடியே கெளம்பிப் போங்க. அஞ்ஞ நமக்கு வேலை நெறையக் கெடக்கு.
பெரசிடன்ட்டு நம்மள எதிருபாத்துட்டுக் கெடப்பாரு."ன்னு சொல்லிட்டு வண்டியில அழைச்சிட்டு
வந்தவரு சொல்லிட்டுக் கெளம்புறாரு.
வடவாதியிலேந்து திட்டைக்கு வெண்ணாத்துக்
கரையிலத்தாம் நடந்து போவணும். வெண்ணாத்துக் கரையிலத்தாம் தாரு ரோடு. நடந்து போனாக்கா
வெண்ணாத்துல பாக்காத தண்ணிய பாக்குறாம் விகடு. இம்மாம் தண்ணி வெண்ணாத்துலயும் வந்ததில்ல.
ஒரு சில மணி நேரத்துல எங்கெங்கயோ பேஞ்ச மழையில்லாம் ஆத்துல கலந்து ஆறு செம்பழுப்பா
ஓடுது. ஒலகத்துல பேஞ்ச அத்தனை மழையையும் சேகரம் பண்ணிகிட்டு இந்த ஆறு ஓடுதான்னு சந்தேகமா
இருக்கு. இந்நேரத்துக்கு வெண்ணாத்துக்கே இந்த கதின்னா வெள்ளையாத்தப் பத்திச் சொல்ல
வேண்டியதில்ல. எவ்ளோ தண்ணி வந்தாலும் வெண்ணாறு கொஞ்சம் தணிவா வாங்கிக்கும். வெள்ளையாறு
கொஞ்சத் தண்ணிக்கே படம் எடுத்து ஆடுற பாம்பாட்டமில்ல சீறும்.
ஆத்துக்கரையில ஆத்தைப் பார்த்து நடக்க
பயமாத்தாம் இருக்கு. அந்த பயம் மனசுல கொஞ்சம் கூட இல்லாம சில இளந்தாரிப் பசங்க அந்த
ஆத்துலயும் வுழுந்து சொருவு நீச்சலு அடிக்கிதுங்க சில எடத்துல. ஆத்துல அடிச்சிட்டு
வர்ற மர மட்டைக, வித்தியாசமான பொருட்கள எடுத்துக் கரையில போடுறதும், பாம்ப பிடிச்சி
கரை மேல நிக்குறவங்க மேல போட்டு பயம் காட்டுறதுன்னும் அழிச்சாட்டியும் பண்ணுதுங்க
அந்த இளந்தாரிங்க. வெண்ணாத்துக்கு வடக்குக் கரை எப்பயும் ஒடையாது. தாரு ரோடு போறது
அந்தக் கரையிலத்தாங்றதால அது எப்பவும் பலமா இருக்கும். தெக்குக் கரை அப்பிடிக் கெடையாது.
அது சில எடங்கள்ல மெலிஞ்சும், சில எடங்கள்ல பலமாவும் இருக்கும். வெண்ணாத்துல ஒடைப்புன்னா
அது அநேகமா தெக்குக் கரையிலத்தாங்றது எல்லாத்துக்கும் தெரியும்ங்றதால வடக்குக் கரையில
இருக்குற சனங்க பூராவும் ஆத்துத் தண்ணிய பாக்குறதுல ஆர்வமா நிக்குதுங்க. அப்பிடி நிக்குறதுல
சில சனங்க, "இம்மாம் தண்ணிய இனிமே எப்ப பாக்கப் போறேம்? இப்பிடி வர்றப்ப பாத்துக்கிட்டத்தாம்
உண்டு!"ன்னு வேற எகத்தாளம் பேசிக்கிட்டு நிக்குதுங்க.
விகடு நடந்து வாள்பட்டறைக்கிட்ட வந்தா
அங்க இருக்குற வெண்ணாத்துக் கரை பொழிஞ்சி ஊருக்குள்ள வரட்டுமான்னு தண்ணி எட்டிப் பாக்குது.
ஊர்ல உள்ள ஆளுங்க எல்லாம் அங்க நின்னுகிட்டு மம்புட்டியும், சாக்குமா மூட்டையில மண்ணைக்
கொட்டி அணைச்சுக்கிட்டு இருக்குறாங்க. ஊரே வெள்ளமா ஆயிடுமா என்னான்னு அவனவனும் தவிச்சிகிட்டு
இருக்கிறப்ப இவ்வேம் ஒருத்தம் சம்பந்தமில்லாம எங்க போயிட்டு இப்போ இங்க வர்றாங்ற
மாதிரிக்கி ஊரு சனங்க வித்தியாசமா பாக்குதுங்க விகடுவெ. விகடு வூடு வந்தா வூட்டுல எல்லாரும்
இவனெ எதிர்பாத்துட்டு இருக்காங்க.
"இன்னிக்கி ஒரு நாளு பள்ளியோடம்
போவலன்னா குடியா முழுகிடும்! இவனோட பெரிய ரோதனையா போயிடுச்சி! அப்பங்காரரே பள்ளியோடம்
போவாமா வூட்டுக்குள்ள உக்காந்திருக்காரு. அதிசயமான ஊருல பள்ளியோடம் நடத்துறாப்புலல்ல
பள்ளியோடம் நடத்துறேம்னு கெளம்புறாம். அது
ஒரு ஊரு? அதுக்கு ஒரு பள்ளியோடம்னுல்ல போயிட்டுக் கெடக்குறாம். இவரு ஒருத்தரு ஊருல
பள்ளியோடமே இல்லாதங் காட்டில்ல இவனெ கொண்டு போயி அந்தப் பள்ளியோடத்துல சேத்து வுட்டுருக்காரு!
என்னத்தெ சொல்றது? அதது பண்றதத்தாம் பண்ணுது! எத்துச் சொன்னத்தெ கேக்கது?"ன்ன
சத்தம் போடுது அவனோட அம்மா வெங்கு. இவ்வேம் வூடு வந்து சேர்றதுக்கு பன்னெண்டு மணி
ஆயிடுச்சு. வூட்டுக்குள்ள நொழைங்ச ஒடனே வெளியில மழை ச்சோன்னு பிடிச்சிக்கிது. இப்போ
ஆத்துல வர்ற தண்ணிக்கே ஊரு தாங்காதுன்னா, அடிச்சிட்டு ஊத்துற இந்த மழைக்கு ஒலகமே தாங்காது.
பூமிக்கும் ஆகாசத்துக்கும் இடைவெளியே இல்லாம
பொழியுறாப்புல பெய்யுது மழை. மழையில நிக்குற ஒடம்புல வுழுவுற மழைத்துளி ஒவ்வொண்ணும்
கும்மாங் குத்தா வுழுவுறாப்புல வுழுவுது. இந்த மழையில குடைய பிடிச்சிட்டுப் போனாக்கா
குடையப் பிய்ச்சிட்டு மழை உள்ளார ஊத்தும் போலருக்கு. பன்னெண்டு மணி வாக்குல பிடிச்ச
மழை மூணு மணி வாக்குலத்தாம் கொஞ்சம் வுடுது. இந்த மூணு மணி நேர மழையே போதும் ஊர வெள்ளக்காடா
ஆக்க. இதுல ஆத்துல வர்ற தண்ணியும் சேந்தா என்னாவுறதுன்னு பாத்தாக்கா, வேற்குடிப் பக்கமா
ஒடைப்பு எடுத்துட்டதாவும், வாளைக்காவெட்டி மதகுக்கு எதுத்தாப்புல கரை ஒடைஞ்சிட்டதாவும்
பேசிக்கிறாங்க சனங்க. இது வெண்ணாத்தோட கதி. வேற்குடியிலத்தாம் விநாயகம் வாத்தியாரு
இருக்காரேன்னு அவருக்குப் போனைப் போட்டுக் கேட்டாக்கா, வெள்ளம் வயக்காட்டுப் பக்கமா
போறதாவும், இன்னும் ஒரு எரநூறு அடி தள்ளி ஒடைச்சிருந்தா ஊருக்குள்ளத்தாம் வந்திருக்குமுன்னும்,
வயக்காடு இந்த வருஷம் சுத்தமா தேறாதுன்னும் சொல்றாரு.
கரையில ஒரு எடத்துல ஒடைப்பு எடுத்துகிட்டா
போதும், ஆறு அதுக்குப் பெறவு காத்துப் போன பலூனு மாதிரித்தாம். சர சரன்னு தண்ணி எறங்கிடும்.
வெண்ணாத்துல தெக்குப் பக்கம் ஒடைப்பு எடுத்துட்டதால ஆறு கொள்ளாம ஓடிட்டு இருந்த தண்ணி
முக்காலு ஆறுக்குக் கொறைய ஆரம்பிச்சிடுச்சு. வெண்ணாத்தால இனுமே ஊருக்குள்ள பெரச்சனை
இல்லன்னு ஊருல உள்ள ஆளுங்க பெருமூச்சு வுட்டுக்கிட்டே, வெளியில மித்த ஊர்லகள்ல எப்பிடி
நெலமைன்னு பாத்துட்டு வரலாமுன்னு கெளம்புறாங்க. விகடுவும் அவுங்களோட கெளம்புறாம்.
திட்டையிலேந்து கெளம்பி இளமங்கலம், நெடுங்கரைன்னு நடந்து ஊட்டியாணிக்கு வந்தா அங்கத்தாம்
வெள்ளையாத்த பாக்கலாம். அதோட நெலவரம் என்னான்னு தெரியணும்னு நெனைக்கிறாம் விகடு.
ஊட்டியாணிய நெருங்குறப்பவே ஏகப்பட்ட கூட்டம்.
ஊட்டியாணிக்கு வடக்கால வெள்ளையாத்துக்கு அந்தப் பக்கம் இருக்குற ஆத்தூரு பக்கமா கரை
ஒடைப்பு எடுத்துக்கிட்டதா பேசிக்கிறாங்க. ஆத்துரே வெள்ளத்துல மெதக்கிறதாவும் கரைக்கு
அந்தாண்ட இருக்கிறவங்க, இந்தாண்ட வர முடியாம தவிக்கிறதாவும் பேசிக்கிறாங்க.
கூட்டத்துல அங்க இங்க முண்டியடிச்சு ஆத்தூரு
பாலத்துக்கு நெருக்கமா வந்து பாத்தா வெள்ளையாறும், ஆத்தூரும் ஒண்ணா இருக்கறாப்புல இருக்குது.
வெள்ளையாறு கரை ரெண்டுக்கும் இடையில ஓடுதா, ஆத்தூருக்குள்ள ஓடுதான்னு தெரியாத அளவுக்கு
ஆத்தூர்ர கெரகம் கட்டி நிக்குது. ஆறுகள்லயே தண்ணிய இழுத்து வாங்குறதுல வெள்ளையாத்துக்கு
அடக்கந்தாம் மித்த ஆறுங்க. வெள்ளையாறு பாட்டுக்கு வர்ற தண்ணிய எல்லாத்தையும் இழுத்து
வாங்கி வாங்கி ஆத்தூருக்குள்ள வுட்டுக்கிட்டு இருக்குது. ஆத்தூருங்ற ஒரு ஊரையே தண்ணிய
வெச்சி அழிச்சாப்புல இருக்குது நெலவரம்.
இப்போ ஊரை தண்ணிச் சுத்திக்கிட்டப் பெறவு
சனங்க ஒண்ணுக்கொன்னு இப்பிடிப் பேசிக்கிறாங்க, "வயக்காட்டுப் பக்கமா கரைய ஒடைச்சி
வுடுறதெ விட்டுப்புட்டு இப்பிடி ஊருப் பக்கமா ஒடைப்பெடுக்க வுட்டுப்புட்டானுங்களே!"
அப்பிடின்னு ஒருத்தரு சொல்றாரு.
"அடப் போடா! எந்தப் பக்கம் எந்த
ஊருல ஒடைப்பெடுக்கும்னு அவனவனும் இருக்காம்! இதுல நம்ம ஊரு கரைதாம் ஒடைப்பெடுக்கும்னு
எவனுக்குடா தெர்யும்? அப்பிடித் தெரிஞ்சத்தாம் ஒடைச்சி வுடலாமே! அவனவனும் அடுத்த ஊருக்கார்ரேம்
கரைதாம் ஒடைப்பெடுக்கும்னு நின்னுகிட்டு இருக்காம். அவனுங்ககிட்டப் போயி ஊருப்பக்கத்தெ
விட்டுப்புட்டு வயக்காட்டுப் பக்கமா ஒடைச்சி வுடுவோம்னு சொல்லிப் பாரு மூஞ்சைப் பேத்து
ஒடைப்புல போட்டுப்புடுவாம்!"ங்றாரு அதெ கேட்டுப்புட்டு இன்னொருத்தரு.
ஆத்தூருல ஒடைப்பெடுத்து, இப்போ ஆத்தூர்ர
பாக்க பரிதாபமாத்தாம் இருக்கு. இருந்தாலும் விகடுவுக்கு அவ்வேம் வேலை பாக்குற கோட்டகத்து
இனுமே பாதிப்பு இல்லங்றதுல மனசுக்குள்ள ஒரு நிம்மதி வந்துப் போவுது. மனுஷப் பய குணம்
அப்பிடித்தாம், அவனவன் ஊரு அவனவனுக்கு முக்கியம். எந்த ஊர்லயாவது ஒடைப்பெடுத்துட்டுப்
போவட்டும், தன்னோட ஊரு தப்பிச்சிடணும்னுத்தாம் நெனைக்கிறாம். தன்னோட ஊரு தப்பிச்சுதுங்கற
திருப்தியில, ஒடைப்பெடுத்த ஊருக்காகக் கொஞ்சம் பரிதாபப்படத்தாம் முடியுது மனுஷப் பயலால.
அதுக்கு மேல மனுஷப் பயலால என்னா முடியுது சொல்லுங்க!
*****
No comments:
Post a Comment