செய்யு - 352
மனுஷன் சோர்ந்து போகுற நேரங்கள்ல உற்சாகத்தெ
உறிஞ்சி எடுத்துக்குறதுக்கு ஒரே வழி புள்ளைங்கத்தாம். புள்ளைங்க எப்பயும் சோர்ந்து
போகுறது இல்ல. எப்ப பாத்தாலும் துறுதுறுன்னு எதையாவது பண்ணிகிட்டே இருக்குமுங்க. அதுங்க
அப்பிடி பண்ற அளவுக்கு வேலைகள கண்டுபிடிச்சிக் கொடுக்குறது ஒரு சவாலுதாம். எந்த ஒண்ணுக்கும்
புள்ளைங்க கலங்கி நிக்குறது இல்ல. அழுதாலும் அந்த நேரத்துல அழுகை அவ்வளவுதாம். அடுத்தாப்புல
சிரிக்கிறாப்புல ஒரு சூழ்நிலை வந்தா சிரிச்சுப்புட்டுப் போய்கிட்டே இருக்குமுங்க.
அவ்வளவு வேகமா புள்ளைங்களுக்கு மனசு மாறிப் போயிடும். வயசு ஆகுற பிற்பாடுதாம் கவலைன்னா
அதெ பிடிச்சிட்டு அதுல மட்டும் தொங்கிட்டு இருக்குறதும், சோகம்னா அதெ மட்டும் நெனைச்சிகிட்டு
முகத்தெ தொங்கப் போட்டுக்கிறதும் வந்துடுது.
பிள்ளைங்களுக்கு எப்பவும் அடுத்தது என்னா?
அடுத்தது என்னா?ன்னு போய்ட்டு இருக்குற மனசுதாம் அவங்களோட சுபாவம். அப்படி ஒரு மனசு
இருக்கு புள்ளைங்களுக்கு. புள்ளைங்களோட பழகுறப்போ அப்பிடி ஒரு மனசு பழகுறவங்களுக்கும்
வந்துபுடும். விகடுவுக்கும் புள்ளைங்களோட பழகிப் பழகி அப்பிடி ஒரு மனசு வந்துப்புடுச்சி.
அவ்வேம் அதிகெம் பேசுறதுன்னா அது புள்ளைங்களோட மட்டுந்தாம். வூட்டுலயும் பெரிசா பேச்சு
கெடையாது. அவ்வேம் அம்மா வெங்குகிட்ட நாலு வார்த்தெ பேசுனா அதிகெம். மித்தபடி அப்பங்காரரு
சுப்பு வாத்தியார்கிட்டே பேச்சு வார்த்தையெ கெடையாது. எதாச்சிம் வெவகாரம்ன்னாத்தாம்
அவரு விசாரிப்பாரு. இவ்வேம் அதுக்கு எப்பவும் எகனைக்கு மொகனையா பதிலச் சொல்லுவாம்.
தங்கச்சிக்காரி செய்யுவுக்கும், அவனுக்கு
வயசு வித்தியாசம் ரொம்பவே அதிகெங்றதால அதோட அதிகம் பேச்சுக் கிடையாது. ஏன்ன்னா என்னா,
என்னான்னா என்னா அவ்வளவுதாம் பேச்சு. ஊருலயும் அவனோட படிச்ச செட்டுங்க யாரும் அதிகெம்
இல்ல. எல்லாம் ஓசூரு, திருப்பூரு, சென்னை, வெளிநாடுன்னு திக்குக்கு ஒண்ணா செதறிப் போயிட்டானுங்க.
அவனுங்க ஊருக்குள்ள இருந்தப்பயும் இவ்வேம் சேணத்தெ கட்டுன குதிரைய மாதிரித்தாம் இந்தப்
பக்கம், அந்தப் பக்கம் பாக்காம போயிட்டு இருந்தாம். அவனோட சோக்காளிங்களா இவ்வேம்
வூட்டுக்கு வந்தா பேசுனாத்தாம் உண்டு.
மனுஷப் பயல் ஒரு பேச்சு மிருகம். அவனால
பேசாம இருக்க முடியாது. வூட்டுலயும், ஊருலயும் சரியா பேசாத ஒருத்தெம் எங்காச்சிம் அதிகமா
பேசித் தொலைவாம். விகடு பள்ளியோடத்துல புள்ளைங்களோட மணி கணக்கா உக்காந்து பேசிட்டு
இருப்பாம். புள்ளைங்க அதெ ரொம்ப எதிர்பார்க்குமுங்க. புள்ளைங்களுக்கு மனசுல எது பட்டாலும்
அதெ ஒடனே பேசித் தீத்துப்புடணும். அப்பிடி பேசித் தீக்குறதுக்கு ஒரு ஆளு கெடைச்சிட்டா
அந்த ஆள புள்ளைங்க வுடாது. விகடுவெ அப்பிடித்தாம் புள்ளைங்க விடாம பாத்துக்கிட்டதுங்க.
பள்ளியோடம் வருஷத்துக்கு சூன் மாசத்துலேந்து ஏப்ரல் மாசம் வரைக்கும் கணக்கு பண்றப்போ
எரநூத்து இருவது நாளுக வெச்சாவணும். இந்த எரநூத்து இருவது நாளும் ஒரு நாளு கூட விகடுவும்
செரி, புள்ளைங்களும் செரி பள்ளியோடம் வராம இருக்காதுங்க. எல்லா நாளும் எல்லாரும் ஆஜராயிடுவாங்க.
விகடு வேலையில சேந்த புதுசுல நெலமை இப்பிடியில்ல.
ஊருல ஒரு விஷேசம்னா பள்ளியோடத்துக்கு ஒரு புள்ளை கூட வராது. ஒத்த ஆளா இவ்வேம் மட்டும்
நாற்காலிக்கும், மேசைக்கும் தொணையா உக்காந்திருப்பாம். ஊருல ஒரு காது குத்தி நடந்திடக்
கூடாது, ஊருல ஒரு கல்யாணம் நடந்துடக் கூடாது, ஊருல ஒரு திருவிசாவும் நடந்திடக் கூடாது,
ஊருல ஒரு வளைகாப்பு நடந்திடக் கூடாது, சாவு, கருமாதின்னு எது நடந்தாலும் அன்னிக்கு
ஒரு புள்ளைங்க கூட வராது. எல்லாம் புள்ளைங்களும் அங்த்தாம் நிக்குமுங்க.
ஆனா நெலமை இப்போ அப்படியில்ல. ஊருல எது
நடந்தாலும் புள்ளைங்க பள்ளியோடத்துக்கு வந்துடுதுங்க. கல்யாணம், காது குத்தல்ல கெடைக்குற
சந்தோஷத்தெ வுட அதிக சந்தோஷம் அதுகளுக்குப் பள்ளியோடத்துல கெடைக்குறதால உண்டான மாத்தம்
இது. புள்ளைங்களுக்குத் தகுந்தாப்புல யாரு நடந்துகிறாங்களோ அவங்ககிட்டத்தாம் புள்ளைங்க
எந்நேரத்துக்கும் இருக்கும். அதாலத்தாம் குடும்பத்துல குழந்தை குட்டிங்க அப்பன் ஆயிகிட்ட
இருக்கிறதோட, தாத்தா பாட்டிகள்கிட்டெ அதிகம் இருக்குமுங்க.
விகடு என்னவோ பேச்சுத் தொணைக்குப் ஆளுங்க
கெடைச்ச மாதிரியும், வெளையாடுறதுக்கு சோக்காளிங்க கெடைச்ச மாதிரியும், பாட்டு பாட,
ஆட்டம் போட, நாடகம் பண்ண ஒரு கூட்டம் கெடைச்ச மாதிரியும், கூடி கும்மாளம் போட செட்டு
சேந்த மாதிரியும் புள்ளைங்கள நெனைச்சிக்கிட்டு நடந்துகிட்டா எந்த புள்ளைங்களுக்கு வூட்டு
ஞாபவம் வரும்? பள்ளியோடம் கெளம்பிப் போவலன்னா இவனுக்கு ஒரு மாதிரியும், பள்ளியோடத்துக்குக்
கெளம்பி வரலேன்னா புள்ளைங்களுக்கு ஒரு மாதிரியும் ஆயிப் போனதுல சனிக் கெழமையும், ஞாயித்துக்
கெழமையும் ஏம்டா வருதுன்னு ஆயிப் போச்சு.
விகடுவுக்கு வெளிப் பழக்கம் அறவே கெடையாது.
செரியான அம்மணாமூஞ்சி. கல்லுளிமங்கெம் மாதிரி உக்காந்து கெடக்குறவேம். யாருகிட்டயும்
சரியா பேசிப் பழகாத அவனோட சுபாவம் புள்ளைங்களோட பேசிப் பழகுறதுல சமமாச்சு. லீவு நாள்ல
வூட்டுல உக்காந்து சலிச்சுப் போச்சுன்னா எதையாவது புத்தகத்தெ தூக்கிட்டுப் பள்ளியோடத்துக்குக்
கெளம்பிடுவோம். இவ்வேம் வர்றதப் பாத்துப்புட்டா புள்ளைங்க, "டேய் வாத்தியாரு
வந்திட்டாருடோய்! கெளம்பி வாங்கடோய் பள்ளியோடத்துக்கு!"ன்னு இவ்வேம் கூடவே
ஓடி வந்துடுமுங்க. பள்ளியோடத்துல வந்து குதியாளம் போடுறதும், வெளையாடுறதும், படிக்கிறதும்னு
ஒவ்வொரு புள்ளைகளும் ஒவ்வொரு மாதிரியா நடந்துக்குமுங்க. இவ்வேம் பாட்டுக்குப் புத்தகத்தெ
படிச்சிட்டுக் கெடப்பாம். இவ்வேம் கெளம்பணும்னு தோணி கெளம்புற வரைக்கும் எந்தப் புள்ளைகளும்
அந்தாண்ட இந்தாண்ட நகராதுங்க. காச் மூச்சுன்னு சத்தம் போட்டுகிட்டு ரகளைப் பண்ணிக்கிட்டு
கெடக்குமுங்க.
ஊருகார மக்களும் இப்போ காதுகுத்தி, கலியாணம்,
திருவிசான்னா ஞாயித்து கெழமையா பாத்து வைக்குற மாதிரி நெலமை ஆகிப் போச்சு. பசங்களும்,
பொண்ணுகளும் "ஒரு காது குத்திதானே விஷேஷ வூட்டுல இரு!"ன்னா இருக்குறதில்ல. பெத்தவங்களுக்கும் ஒரு நல்ல நாளு, நல்ல வெதமா சாப்புட
வேண்டிய எடத்துல புள்ளைங்கள வுட்டுப்புட்டு அவங்க மட்டும் சாப்புட எப்பிடி மனசு வரும்?
பள்ளியோடத்தெ லீவு அடிச்சிப்புட்டு விஷேசத்த நடத்தவும் முடியாது. புள்ளைங்க இல்லாமலும்
விஷேசத்த பண்ண முடியாது. பாத்தாங்க அவுங்க எந்த விஷேசமா இருந்தாலும் ஞாயித்துக் கெழமைன்னு
முடிவே பண்ணிப்புட்டாங்க. அத்தோட ஞாயித்துக் கெழமைங்றதால அவுங்க அவுங்க உறவுக்கார
சனங்களும் வந்துட்டுப் போறதுக்கு அந்த நாளு ரொம்ப வசதியா போனதால கோட்டகத்துல விஷேசம்னா
அது ஞாயித்துக் கெழமைதான்னு ஆயிப் போச்சு. அதாலயே கோட்டகத்துக்காரங்களுக்கு ஞாயித்துக்
கெழமெ விசேக்காரனுவோன்னு பேரும் உண்டாயிடுச்சு.
மழைக்காலம் வந்துப்புட்டா மழை எக்குத்தப்பா
பெய்யுறதுல வெள்ளையாத்துல வெள்ளம் கரை பொரண்டு ஓடும். ரெண்டு நாளு மழை வுட்டா போதும்.
வெள்ளையாறு அப்பிடியே வடிஞ்சி தண்ணி போன ஆறா இதுங்ற மாதிரி ஆயிடும். அதெ சரியா சொல்லணும்னா,
குண்டா இருந்த ஒருத்தனெ ரெண்டே நாள்ல எலும்பும் தோலுமா பாத்தா எப்பிடி இருக்குமோ
அப்பிடி ஆயிடும். அப்பிடித்தாம் ஒரு ஐப்பசி மாசத்துல பிடிச்ச அடைமழையில வெள்ளையாத்துல
தண்ணி கரை பொரண்டு ஓடுது. எப்பிடியோ களிமங்கலத்துலேந்து மரப்பாலத்துல சைக்கிள தள்ளிக்கிட்டு
கோட்டகத்துக்கு வந்துட்டாம் விகடு. புள்ளைங்களும் அவ்வேம் கூட சேந்துகிட்டு ஆத்துல
ஓடுற தண்ணிய கொண்டாட்டமா பாத்துக்கிட்டு பள்ளியோடம் போனாக்கா அடுத்த ஒரு மணி நேரத்துல,
பிரசிடெண்டு உதயச்சந்திரன் வந்து நிக்குறாரு பள்ளியோடத்துல.
"ன்னா வாத்தியார்ரே! ஊரே வெள்ளத்துல
போயிடும் போலருக்கு! ஆரு ஒங்கள பள்ளியோடத்தெ வைக்கச் சொன்னது? மொதல்ல பள்ளியோடத்தெ
வுட்டுப்புட்டு கெளம்புங்க? அக்கம் பக்கத்தெ சித்தே பாருங்க! இப்பிடியா கொச கெட்ட
தனமா நடந்துக்கிறது?" அப்பிடிங்கிறாரு.
அப்பத்தாம் பள்ளியோடத்துநே்து வெளியில
வந்து பாத்தாக்கா, ஆத்துக்கரையிலேந்து தண்ணி பொழிஞ்சி ஊருக்குள்ள வர ஆரம்பிச்சிடுச்சி.
பள்ளியோடத்து காம்பெளண்டுக்கு மின்னாடி காலு நனையுறாப்புல தண்ணி நிக்குது.
"வாத்தியாரோட சைக்கிள இஞ்ஞயே கெடக்கட்டும்.
அவர்ர இப்பிடியே வடக்கால மேலமணலிக்குக் கொண்டு போயி அஞ்ஞயிருந்து மூலங்கட்டளைக்குக்
கொண்டுகிட்டுப் போயி திரும்ப ஓகையூரு வழியா வடவாதியில கொண்டுப் போயி விட்டுப்புட்டீங்கன்னா
ஊருப் போயி சேந்துக்குவாரு. புள்ளைங்க ஆரும் வூட்டுக்குப் போவ வாணாம். ஊருள்ள சனங்கள
எல்லாத்தியும் பள்ளியோடத்துக்கு வாரச் சொல்லிட்டேம். புள்ளைங்களோட தாயி தகப்பம்லாம்
சித்த நேரத்துல வந்துச் சேந்துப்புடும்ங்க. தெருவுல பாக்குற எடுத்துல எல்லாம் அரையடிக்கு
தண்ணி நிக்குது. சித்த நேரத்துல இஞ்ஞ ஆர்.ஐ., தாசில்தாருல்லாம் வந்துப்புடுவாங்க!"ங்றாரு
உதயச்சந்திரன்.
விகடுவுக்கு என்ன பண்றதுன்னு தெரியாம தயங்கி
நிக்குறாம்.
"கெளம்புங்க வாத்தியார்ரே! சொணங்கிகிட்டு
நிக்காதீங்க! ஆளுங்க வருவாங்க. கொண்டாந்து வடவாதி வரைக்கும் வுடுவாங்க. ஒண்ணும் பயமில்ல.
தண்ணி கொஞ்சம் வடிஞ்சா ஒரே நாள்ல தண்ணிய உள்ள இழுத்துப்புடும் ஆறு. அது வரைக்கும்
ஒண்ணுத்தையும் பண்ணுறதுக்கில்ல. பள்ளியோடந்தாம் கொஞ்சம் மேட்டுல இருக்கு. சுத்திலும்
காம்பெளண்டு இருக்குங்றதால தண்ணி உள்ள வார வழியில்ல. பாத்துக்கிடலாம். கேட்டுக்கு மின்னாடி
மட்டும் மூட்டைகள போட்டு ரண்டு அடிக்கு உசரத்துக்கு அடுக்கிப்புட்டா தண்ணி உள்ள வாராது!"ங்றாரு
உதயச்சந்திரன்.
அப்பயும் கெளம்புறதா? வேண்டாமாங்ற தயக்கத்துலயே
நிக்குறாம் விகடு. "யோஜிக்கிறதுக்கு நேரமில்ல. இன்னும் சித்த நேரம் இருந்தீங்கன்னா
நீஞ்ஞ ஒஞ்ஞ வூட்டுக்குப் போவ முடியுமா என்னான்ன தெரியல. பெறவு ஒஞ்ஞ வூட்டுல நீஞ்ஞ
எஞ்ஞ இருக்கீங்கன்னு நெனைச்சிக்கிட்டு இருப்பாங்க. சித்த நேரத்துல தாசில்தாரே வந்துப்புடுவாரு.
நாங்கப் பாத்துக்கிடுவோம். நாம்ம இஞ்ஞயே தங்குறாப்புல முடிவு பண்ணிட்டேம். தேங்கி
நிக்காம கெளம்புங்க. யேய் வாத்தியார்ர நம்ம டிவியெஸ்ல வெச்சி கெளப்பிக்கிட்டு மேல மணலி
பக்கமா சட்டு புட்டுன்ன வடக்கால கெளம்புற வழியப் பாருங்க. மிச்சத்தெ பாக்க வேண்டியது
நெறைய கெடக்கு. ஆளுகள கெளப்பிக் கொண்டா."ங்றாரு உதயச்சந்திரன்.
விகடு உதயச்சந்திரன் சொன்ன ஆளோட போயி
டிவியெஸ்ல ஏறிக்கிறாம். ரோடெல்லாம் தண்ணியா நிக்குது. "இந்தாருங்க்பபா! சட்டு
புட்டுன்னு மூட்டையில மண்ண அள்ளிப் போட்டு கேட்டுக்கு மின்னாடி அணைய கட்டுங்கப்பா.
காம்பெளண்டுக்குள்ள தண்ணி பூந்துடப் போவுது!"ன்னு உதயச்சந்திரன் சத்தம் போடுறது
கேக்குது. ரோடுல போற வழியெங்கிலும் ஒரு சாண் அளவுக்காவது தண்ணி நிக்குது. அந்தத்
தண்ணியிலத்தாம் டிவியெஸ் போவுது. அதுலத்தாம் விகடு பின்னாடி உக்காந்திருக்காம். கோட்டகத்துக்கு
களிமங்கலத்திலேந்து திரும்புற மரப்பாலத்தெ காணல. தண்ணியில அடிச்சிட்டுப் போயிருக்கணும்
அது. அந்தாண்ட களிமங்கலத்தப் பாத்தா தண்ணிக்காடா தெரியுது. ஒரு மணி நேரத்துல நெலமை
இப்பிடியா மாறும்னு அதிர்ச்சியா இருக்கு விகடுவுக்கு. ஆத்துக்கரையோரமா வந்துகிட்டே
இருந்தா ஒரு எடத்துல முழங்காலு அளவுக்கு தண்ணிப் போவுது. அங்க ஆளுங்க கையில கெடைச்சதையெல்லாம்
வெச்சும், மூட்டையில மண்ண அள்ளிப் போட்டுக் கொட்டியும் அடைச்சிட்டு இருக்காங்க. ஆத்துக்கரை
எல்லா எடத்துலயுமா மேடா உசந்து இருக்குது. சில எடங்கள்ல கொஞ்சம் தாழ்வாவும் இருக்குது.
அந்த மாதிரி எடங்கள்லத்தாம் பொழியுறது அதிகமா பொழிஞ்சு தண்ணி ஊருக்குள்ள வருது. கரையிலேந்து
தண்ணிப் பொழியுதே தவிர எங்கயும் ஒடைச்சிக்கிடல.
அப்ப வண்டிய ஓட்டிக்கிட்டுப் போறவரு சொல்றாரு,
"எங்கனாச்சிம் கரை ஒடைச்சத்தாம்ங்க வாத்தியார்ரே இஞ்ஞ தண்ணி உக்காரும். இல்லன்னா
பொழியுற தண்ணிய ஒண்ணும் பண்ண முடியாது. கெழக்கால ஆத்தூர்ல ஒடைச்சிக்கும்னு எதிர்பாக்குறோம்.
ம்ஹூம் ஒடைச்சிக்க மாட்டேங்குது. அஞ்ஞ ஒடைச்சிக்கிட்டத்தாம் இஞ்ஞ கிராமம் தப்பிக்கும்.
இல்லன்னா ஊருக்குள்ள இடுப்பளவு தண்ணி பூந்தாலும் ஒண்ணும் பண்ணுறதுக்கில்ல!"ங்றாரு.
*****
No comments:
Post a Comment