செய்யு - 354
வெள்ளமா வந்த தண்ணியெல்லாம் வடிஞ்சி ஊரு
ஒரு நெலைமைக்கு வாரதுக்கு பத்து நாளுக்கு மேல ஆயிடுச்சு. அந்தப் பத்து நாளும் பள்ளியோடங்கத்தாம்
இந்தச் சுத்துப்பட்டுல நிவாரண முகாமுங்களா இருந்துச்சு. பாதிக்கப்பட்டு பள்ளியோடத்துல
இருக்குறவங்க கெளம்புற வரைக்கும் பள்ளியோடங்க நிவாரண முகாமுங்களா செயல்படணும்னும்,
அதுவரைக்கும் பள்ளியோடத்துக்கு விடுமுறை விட்டுப்புடணும்னும் கலெக்டரு ஆர்டரே போட்டுப்புட்டாரு.
எந்த வாத்தியாராவது பள்ளியோடத்துல இருக்குற சனங்கள கெளப்பி வுட்டு பள்ளியோடத்தெ தொறந்தா
நடவடிக்கை எடுக்கப்படும்னும் சொல்லிப்புட்டாரு.
வெள்ளையாத்துல தண்ணி வடிய ஆரம்பிச்சுதுன்னா
ஆத்துல எறங்கி சின்ன புள்ளையும் நடக்கலாங்றது தெரிஞ்ச கதெதானே. மூணாம் நாளுக்குப் பெறவு
வெள்ளையாத்துல தண்ணிப் போன எடம் தெரியல. வெண்ணாத்துலத்தாம் தண்ணி முக்கா ஆறு அளவுக்குப்
போயிட்டே இருந்துச்சு. மூணாம் நாள்லேந்து கோட்டகத்துச் சனங்க வெள்ளையாத்துல எறங்கி
களிமங்கலத்து ரோடு வழியா நடந்து திட்டைக் கடைத்தெருவுக்கு வர ஆரம்பிச்சாங்க. அவுங்களுக்குக்
கொஞ்சம் பெரிய கடைத்தெருவுன்னா அது திட்டையோட கடைத்தெருதாம். ஆனா களிமங்கலத்து ரோடு
பூரா முட்டிக்காலு அளவுக்குத் தண்ணி நின்னுச்சு. அது வேற களிமண்ணுல பூட்ஸ்காலு போடுற
ரோடா இருந்ததால ரொம்ப கஷ்டப்பட்டுத்தாம் வந்தாங்க. அப்பிடி வந்தவங்க விகடுவோடு வூட்டுப்பக்கமும்
வந்து ரொம்ப தயவு பண்ணதாச் சொல்லி நன்றியச் சொன்னாங்க. பள்ளியோடமும், பள்ளியோடத்துக்
காம்பெளண்டு சுவரும் இல்லன்னா ஊரே நாறிப் போயிருக்குமுன்னு சொன்னாங்க.
விகடுவும் அதுக்குப் பிற்பாடுதாம் அவ்வேம்
தங்காச்சி செய்யுவோட பச்சை நெறத்து கட்டை சைக்கிள எடுத்துக்கிட்டு வடவாதி, ஓகையூரு
சுத்தி கோட்டகத்துக்குப் போயிட்டு வந்தாம். பெரசிடெண்டு உதயச்சந்திரன் கோட்டகத்துப்
பள்ளியோடத்துலத்தாம் கெடந்தாருன்னு சொல்லணும். அவரு விகடுவப் பாத்ததும், "பள்ளியோடத்தெ
எல்லாம் இப்போ தொறக்க முடியாது. கெளம்புங்க வாத்தியார்ரே! நாஞ்ஞ ஆளு சொல்லி அனுப்பி
வுடறேம். அப்போ வந்து தொறந்தாக்கப் போதும்!" அப்பிடின்னாரு சிரிச்சிக்கிட்டே.
"நம்ம புள்ளீயோள பாக்கத்தாம் வந்தேம்.
அவுங்க வூடுங்க தோது படுற வரைக்கும் பள்ளியோடத்தெ தொறக்குறாப்புல யில்ல!" அப்பிடின்னாம்
விகடு. அதெ கேட்ட சனங்களுக்கு ரொம்ப சந்தோஷமாப் போச்சு.
வேற்குடி ஒடைப்பால வெண்ணாத்தாங்கரையில
இருந்த ஊருங்க தப்பிச்சுன்னு சொன்னாக்கா, ஆத்தூரு ஒடைப்பால கோட்டகம் மாதிரி வெள்ளையாத்தாங்கரையில
இருந்த ஊருங்க தப்பிச்சிச்சு. கோட்டகத்தெ பொருத்த வரையில தண்ணிப் பொழிஞ்சி வந்ததுதாம்.
பொழிஞ்சி வந்த தண்ணி ஊரு முழுக்க நனைச்சுப்புட்டு. அது நனைக்க முடியாத ஒரே எடம் பள்ளியோடம்
மட்டுந்தாம். பள்ளியோடத்த சுத்தி இருந்த காம்பொளண்டுதாம் அதுக்குக் காரணம். ஆத்தூர்ல
ஒடைப்பெடுத்த மறுநாளே கோட்டத்தெ சுத்தி நின்ன தண்ணியெல்லாம் வடிஞ்சிப் போயிடுச்சு.
இருந்தாலும் ஒரு வார காலத்துக்கு கோட்டகத்து சனங்க பள்ளியோடத்துலதாம் இருந்தாங்க.
ஒரு வூடு பாக்கியில்லாம கோட்டகத்துல இருந்த வூடுங்கள்ல தண்ணி புகுந்திடுச்சு. கோட்டகத்துல
பெரும்பாலான வூடுங்க மண்சுவத்தால ஆன கூரை வூடுங்கத்தாம். வூடுகளுக்கு உள்ளார தண்ணி
பூந்ததால சுவர்ல ஈரம் ஏறி அது வுழுந்தாலும் வுழுந்திடலாமுன்னு தரை நல்லா காயுற வரைக்கும்
எல்லா சனமும் பள்ளியோடத்துலத்தாம் இருந்தாங்க.
பள்ளியோடத்துக்குக் காம்பெளண்டு வெச்சதப்
பத்தி அவங்க இப்போ ரொம்ப சிலாகிச்சிப் பேசுனாங்க. "இந்த காம்பெளண்ட மட்டும்
வைக்கலன்னா பள்ளியோடத்தச் சுத்தியும் தண்ணி நின்னிருக்கும். நாம்ம நிக்க கதியில்லாம
நின்னிருப்பேம்!"ன்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. புள்ளைங்க படிக்கிறதுக்கு மட்டுமில்ல
பள்ளியோடம், ஊருல இது மாதிரியான சந்தர்ப்பங்கள்ல பள்ளியோடம்தாம் புகலிடங்றதையும்
சனங்க புரிஞ்சிக்கிட்டாங்க. ஊருக்கு ஏன் ஒரு பள்ளியோடம் வேணும்னா அது இருக்குத்தாம்.
ஊர்ல இருக்குற கோயில்ல கூட சில பேரு வாரலாம், சில பேரு வாரக் கூடாதுன்னு ஆயிரத்தெட்டு
பேதக் கணக்குல்லா இருக்கு. ஆனா பள்ளியோடம் அப்பிடியில்லையே. யாரு வேணாலும் வாரலாம்,
ஒரு ஆபத்துன்னா தங்கிக்கலாம்ன்னுல்லா இருக்கு. ஊருக்கு ஒரு நல்லவன் இருந்தா அந்த ஊருல
மழை தண்ணிக்கு கொறைவு இருக்காதுன்னு கிராமத்துல சொல்லுவாங்க. அதெ போல ஊருக்கு ஒரு
நல்ல வெதமா ஒரு பள்ளியோடம் இருந்தா அந்த ஊருக்கு எந்த கொறை வந்தாலும் அதெ சமாளிச்சிக்கிடலாம்.
பள்ளியோடம்னா அதுல புள்ளைங்க படிக்க மட்டுமா
செய்யுது? அந்தப் பள்ளியோடம்தான தேர்தலு வந்தா ஓட்டுப் போடுறதுக்கு வாக்குச்சாவடியா
ஆவுது. ஒரு ஆபத்து நேரத்துல முகாமா ஆவுது. அரசாங்கத்தோட நலதிட்ட முகாம், மருத்துவ
முகாம்னா அதுதானே எடம் தருது. ஊருல இருக்குற அத்தனெ சனங்க பத்தின மக்கள் தொகை கணக்கெப்
பள்ளியோடம்தான பராமரிச்சிக்கிது. ஊருல ஒரு புள்ளை பொறந்தா உடனே அந்த விவரத்தெ குறிச்சிக்கிட்டுப்
பள்ளியோடத்துல அஞ்சு வயசுல சேக்கணுங்றதெ பள்ளியோடம்தானே போயிச் சொல்லிட்டு வருது.
போலியோ சொட்டு மருந்து, தடுப்பூசின்னு போடுறதெ எல்லாத்தையும் பள்ளியோடம்தானே உறுதி
பண்ணுது. அதால ஊருக்கு ஒரு அரசாங்கப் பள்ளியோடம் இருக்க வேண்டியது கட்டாயம்தாம். கோயிலு
இல்லாத ஊருல குடியிருக்கக் கூடாதும்பாங்களாம். உண்மையச் சொல்லணும்னா அரசாங்கப் பள்ளியோடமும்,
அரசாங்க ஆஸ்பத்திரியும் இல்லாத ஊர்லத்தாம் குடியிருக்கக் கூடாது. எல்லாத்துக்கும் கல்வியும்
சுகாதாரமும் பாரபட்சம் இல்லாம கெடைச்சாத்தான்ன அது ஊரு. அதுக்கு அரசாங்க பள்ளியோடமும்,
ஆஸ்பத்திரியும் இருந்தாவணும். அது ரெண்டும் இல்லாத ஊர்ல கல்வியும், சுகாதாரமும் யாருக்குக்
கெடைக்குமுங்றீங்க? பணத்தெ வெச்சிக்கிறவனுக்கு மட்டுந்தாம் கெடைக்கும். மித்தவங்க கல்வியும்,
சுகாதாரமும் கெடைக்காம நொம்பலப்பட்டுத்தாம் கெடக்கணும்.
கஷ்ட காலத்திலயும் ஒரு நல்ல காலமுன்னு
பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா. அப்படி ஒரு நல்ல காலம் கோட்டகத்துப் பள்ளியோடத்துக்கு
வாரக் காரணமே வெள்ளையாத்துல வந்த வெள்ளம்தான். அந்த வெள்ளம் வாராம போயிருந்தா நம்ம
ஊர்லயும் ஒரு பள்ளியோடம் இருக்குங்ற அளவுக்குத்தாம் கோட்டகத்து சனங்க நெனைச்சிருப்பாங்க.
வெள்ளந்தாம் பள்ளியோடம் ஊருக்கு எம்மாம் முக்கியம்ங்றதெ அவுங்களுக்குப் புரிய வெச்சிச்சுன்னு
சொல்லணும். அதெ விட முக்கியமா கோட்டகத்துக் கீழத்தெரு சனங்ககிட்ட ஏற்பட்ட மாத்தம்
இருக்கே அதெ சொல்லியாவணும்.
பள்ளியோடத்துக்குக் காம்பெளண்டு வைக்கிறாம்னு
கீழத்தெரு ரோட்டைக் காலி பண்ணிட்டாத விகடு மேல அந்தத் தெருகாரங்களுக்கு ஒரு கோவம்
இருந்திச்சி. இவனைப் பாக்குறப்ப அந்தத் தெருகாரங்க கடுகடுன்னுத்தாம் இருந்தாங்க. ஒடனே
விகடுவ அடிச்சா பெரச்சனை ஆயிடும்னு, இந்த விவகாரத்தெ ஆறப் போட்டு ஒரு நாளு குறிச்சி,
அந்த நாள்ல சைக்கிள்ல வர்ற விகடுவெ அடிச்சி வெள்ளையாத்துல தள்ளி வுட்டுப்புடறதுன்னு
முடிவே பண்ணி வெச்சிருந்திருக்காங்க அவுங்க. இந்த வெள்ளம் மட்டும் வரலன்னா வெள்ளையாறு
வெள்ளத்தெ அடிச்சிட்டுப் போயிருக்காது, விகடுவத்தாம் அடிச்சிட்டுப் போயிருந்திருக்கும்.
அதுக்குள்ள வெள்ளத்தெ வெள்ளையாறு அடிச்சிட்டு வந்ததால, கோட்டகத்துல அதிகமா தண்ணி பூந்த
எடமா கீழத்தெரு ஆயிப் போயிடுச்சு. பொதுவா இந்தப் பகுதியில மேக்கேயிருந்து கிழக்கால
போவப் போவ கொஞ்சம் எடம் தாழ்வாத்தாம் போவும். மேற்குத்தாம் எப்பவும் மேடாவும்,
கெழக்கு எப்பவும்ம் கொஞ்சம் பள்ளமாத்தாம் இருக்கும். அதால மித்த மித்த தெரு ஆளுங்க
நாலைஞ்சு நாள்ல வூடுகளுக்குத் திரும்புனாலும் கீழத்தெரு ஆளுங்க ஒரு வாரம் வரைக்கும்
பள்ளியோடத்துல தங்கியிருந்துத்தாம் கெளம்புனாங்க. அப்பிடி அவுங்க கெளம்புறப்ப விகடுவெ
கையெடுத்துக் கும்புட்டாங்க. அப்பத்தாம் இந்தச் சங்கதியெ எல்லாம் அவுங்க விகடுகிட்டச்
சொல்றாங்க.
"எங்க ஊர காக்க வந்த சாமிங்கய்யா
சாமி நீஞ்ஞ! அத்துப் புரியாம உங்கள அடிச்சி வெள்ளையாத்துலப் போடுறதுன்னு நெனைச்சுப்புட்டோம்.
அதுக்கு அந்த வெள்ளையாத்தே நல்ல தண்டனெயா வழங்கிப்புடுச்சுங்க! எந்த தெருவுக்குள்ள
குறுக்கால வரணும்னு பள்ளியோடத்த மறிச்சி ரோட்ட போட வெச்சோமோ, அந்த பள்ளியோடத்துலயே
வந்தக் கெடக்குற மாதிரி பண்ணிப்புடுச்சி. பொல்லாத ஆறுங்க வெள்ளையாத்து!" அப்பிடின்னப்ப
விகடுவுக்கே கண்ணு கலங்கிடுச்சி.
அத்தோட கீழத்தெரு சனங்களோட அத்தனை நெல்லு
மூட்டைகளும் பள்ளியோடத்து வராந்தாவுலத்தாம் அடுக்கியிருந்துச்சி. கீழத்தெருவுல தண்ணிப்
பூரப் பூர அவுங்க மூட்டைகள இஞ்ஞ கொண்டாந்து அடுக்கிப்புட்டாங்க. வெச்சி வேலிய பறக்க
விட்டு உண்டான பிரச்சனைய மனசுல வெச்சுக்கிட்டு
விகடு அதையெல்லாம் ஒடனே எடுக்கச் சொல்லிடுவானோன்னுங்ற பயம் வேற அவுங்களுக்கு இருந்திச்சி.
பள்ளியோடத்துக்குச் சம்பந்தமில்லாத எதுவும் அவனுக்குப் பள்ளியோடத்து எல்லையில கூட
இருக்கக் கூடாது. விகடு பாத்தாம், "ஒஞ்ஞ ஓஞ்ஞ வூடுகள சரிப்பண்ணிட்டு நீஞ்ஞ எடுத்துட்டு
போற வரைக்கும் மூட்டைக இஞ்ஞயே இருக்கட்டும். மொதல்ல வூடுகளப் பாருங்க. பெறவு பாத்துக்கலாம்
மூட்டைகளத் தூக்கிட்டுப் போறதெ பத்தி!" அப்பிடின்னிட்டாம். அதுல அவுங்களுக்கு
ஒரு தனி நிம்மதி மனசுக்குள்ள.
பத்து நாளுக்குப் பெறவு பிரசிடெண்டு உதயச்சந்திரன்,
வியேவோ எல்லாம் வந்து ரேஷன் அட்டைகள கணக்குப் பண்ணி ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்து
கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு, ரண்டு லிட்டரு சீமெண்ணெய், வேட்டிச் சேலை அத்தோடு
ஐநூத்து ரூவா ரொக்கப் பணமா நிவாரணம் கொடுத்தாங்க. அதெ கொடுக்குறதுக்கு உதவியா இருக்கட்டும்னு
விகடுவெயும் பள்ளியோடம் வாரச் சொன்னாங்க.
ஐநூத்து ரூவா ரொக்கப் பணத்தெ வாங்குன
சனங்க அப்பத்தாம் சொன்னாங்க, "அரிசி, பருப்பு, சீமெண்ணெ, வேட்டிச் சேலைய எடுத்துகிடுவோம்.
ரொக்கத்தெ எல்லாமும் சேந்து பள்ளியோடத்துக்குக் கொடுத்துப்புடுவேம். வாத்தியாரும்
பெரசண்டும் சேந்து பள்ளியோடத்துக்கு எதாச்சிம் செஞ்சி இன்னும் நல்லா வெச்சிக்கிடட்டும்.
ஒரு ஆபத்து கீபத்துன்னா இஞ்ஞத்தான வார வேண்டிக் கெடக்கு. பள்ளியோடம் கரண்டும் இல்லாம
ஒண்ணுமில்லாம கெடக்கு. தரையும் அஞ்ஞ இஞ்ஞ பொக்கப் பொறையா இருக்கு. பள்ளியோடத்துக்குப்
பெயிண்டு வைக்கணும். எஞ்ஞ வூடு சரியில்லாம போனாலும் பள்ளியோடம் நல்லாயிருந்தா நாஞ்ஞ
சந்ததியோட பொழைச்சிப்பேம்!" அப்பிடின்னாங்க பாருங்க. அதெ கேட்டதும் விகடுவுக்குக்
கண்ணுல ஆத்துல போன வெள்ளத்தெ போல பொள பொளன்னு தண்ணி வந்திடுச்சி.
"ஒஞ்ச ஒஞ்ச வூடுங்க இருக்கற நெலமையில
வூட்டச் சரி பண்றதுக்குல்லாம் ஐநூத்து ரூவா பணம் பத்தவே பத்தாது. அதெ வெச்சி வூட்டப்
பாருங்க. பெறவு நீஞ்ஞல்லாம் சேர்ந்து அறுவடையாவுறப்ப பணத்தெ போட்டுத் தாரலாம்!"ங்றான்
விகடு தழுதழுத்தாப்புல. சனங்க ஒத்துக்கிறாப்புல இல்ல.
"ன்னா வாத்தியார்ரே! இந்த வெள்ளம்
வாரலன்னு வெச்சுக்குங்க! கவர்மெண்டுக்கார்ரேம் பணத்தெ எஞ்ஞ தர்றப் போறாம்? நாஞ்ஞ இந்த
வெள்ளமும் வாரல, எஞ்ஞளுக்குப் பணமும் வாரலன்னு நெனைச்சிக்கிறேம். இந்த ரூவா பள்ளியோடம்
தந்த ரூவா. பள்ளியோடத்துல நாஞ்ஞ வந்து தங்கலன்னா இந்தப் பணம் வாரப் போறதில்ல. பள்ளியோடம்
நல்லா இருக்கணும் வாத்தியார்ரே! தட்டைக்கழிக்காம வாங்கிக்குங்க! இல்லாட்டி நாஞ்ஞ அரிசி,
பருப்பு, வேட்டி, சேலை, சீமெண்ணன்னு எதெயும் வாங்கிக்குறாப்புல இல்ல!"ங்றாங்க
சனங்க.
விகடுவுக்கு என்ன முடிவு பண்றதுன்னுப்
புரியாம அப்படியே நாற்காலியில உக்காந்துப்புட்டாம். யோசிக்கிறாம், யோசிக்கிறாம் நெத்திய
சுருக்கிக்கிட்டு யோசிக்கிறாம். அவனால ஒரு முடிவுக்கு வர முடியல.
"இவனுங்க இப்பிடித்தாம் வாத்தியார்ரே!
செய்யணும்னு நெனைச்சுப்புட்டா அலும்புப் பண்ணியாவது செய்யுவானுங்க. இல்லாட்டி எனக்கென்ன
மசுருன்னுப் போட்டுட்டுப் போயிடுவானுங்க. எதாச்சிம் சட்டு புட்டுன்னு முடிவு பண்ணுங்க
வாத்தியார்ரே. வர்ற லட்சுமிய வேணாமின்னுச் சொல்லிப்புடக் கூடாது. எதா இருந்தாலும்
வளவள கொழகொழன்னே இருக்கீங்களே? ஒஞ்ஞ வாலிபத்துலல்லாம் நாம்ம இருந்த வேகமென்ன? பணத்தெ
வாங்கிப் போட்டு பள்ளியோடத்தெ சரிபண்ணுங்க! இப்பத்தாம் இந்த ஊருக்கார பெயலுவோளுக்குப்
புத்தி வந்திருக்கு. இனுமேதாம்டா மக்கா ஒஞ்ஞ ஊரு உருப்பட போவுது. எந்த ஊர்ல அரசாங்கத்துப்
பள்ளியோடத்த நெனைச்சுப் பாக்குறானுவோளோ அந்த ஊருதாம்டா உருப்புடும். பெறவு ன்னா
வாத்தியார்ரே?"ங்றாரு பெரசிடெண்டு உதயச்சந்திரன்.
"அடுத்த மொறையும் நீஞ்ஞத்தாம் பெரசண்டு.
கோட்டகத்து ஓட்டுப் பூரா ஒஞ்ஞளுக்குத்தாம்!" அப்பிடிக்குதுங்க இப்போ சனங்க உதயசந்திரனெ
பாத்து.
"ஓஞ்ஞ சங்கநாத்தமே வேணாமுங்கடா! இத்தாம்
கடெசீ. இனுமே நாம்ம தேர்தல்ல நிக்குறாப்புல யில்ல!"ங்றாரு உதயச்சந்திரன்.
"பெரசண்டுத்தாம் அடுத்த தேர்தலயும்
நிக்கோணும். வாத்தியாரு பணத்தெ வாங்கிக்கோணும்." அப்பிடிகிதுங்க சனங்க இப்போ
சத்தமா கோரஸ் பாடுறாப்புல.
"ஒரு நல்லதுன்னா ஆகா ஓகோமிம்பீங்க.
ஒரு பெரச்சனைன்னா ஆள அடிச்சி வெள்ளையாத்துல போடணும்பீங்க. ஏம்டா ஒஞ்ஞ கூட வெனெ. இத்தாங்க
கடெசீ. ஊருக்கார பயலுகளப் பாத்துட்டுக் கெடந்தா எங் குடும்பத்தெ யாரு பாக்கறது? இனுமேல்லாம்
நம்மள பெரசண்டா எதிருபாக்காதீங்க. நம்மள ஆள விடுங்க. வாத்தியார்ரே நீஞ்ஞளும் மாத்தல
வாங்கிகிட்டு இந்தப் பயலுகள வுட்டுக் கெளம்புங்க."ங்றாரு சிரிச்சிக்கிட்டு பிரசிடெண்டு
உதயச்சந்திரன்.
"இந்த ஊர்ர வுட்டுப்புட்டு வாத்தியாரு
கால அந்தாண்ட எடுத்து வைக்கட்டும் பாத்துப்பேம். அவருக்கு இத்தாங் ஊரு. இத்தாங் பள்ளியோடம்.
பணத்தெ சட்டு புட்டுன்னு வாங்கி வெச்சுக்கிற வழிய பாப்பீயளா?" அப்பிடின்னு சனங்க
சொன்னதும் விகடுவுக்கு இப்போ ரொம்ப தடுமாற்றமா இருக்குது. கஷ்டக்காலத்துல கவர்மெண்டு
கொடுக்குற காசை வாங்கியா பள்ளியோடத்துக்குச் செய்யுறதுன்னு யோசனையா இருக்கு.
"ன்னா யோஜனெ? வாத்தியார்ரைல்லாம்
கேட்டுப்புட்டு நிக்கக் கூடாது. இந்தாரு ஆளாளுக்குப் பணத்தெ கொண்டாந்து டேபிள்ல வையி!"
அப்பிடிங்கிறாரு கூட்டத்துல ஒருத்தரு.
"யாரும் அப்பிடில்லாம் பண்ணாதீஞ்ஞ.
இத்து அரசாங்கம் ஒஞ்ஞளுக்காகக் கொடுத்த பணம். அதெ நாஞ்ஞ பிடுங்கிகிட்ட மாரில்லா ஆயிடும்.
சித்தெ பொறுங்க. கொஞ்சம் யோஜிக்க வுடுங்க!"ங்றாம் விகடு.
"வாத்தியாரம்பீ! நீஞ்ஞளா பணத்தெ கேட்டாத்தாம்
தப்பு. அத்து புடுங்குன மாதிரி. நாஞ்ஞளா கொடுக்குறது தப்பு கெடையாது. அரசாங்கம் எஞ்ஞளுக்குக்
கொடுக்குது. அத்தே நாஞ்ஞ எதுக்கு வாணாலும் செலவு பண்ணிக்கிவேம். வூட்டுக்கும் செலவு
பண்ணிப்பேம். பள்ளியோடத்துக்கும் செலவு பண்ணிப்பேம். அத்து எஞ்ஞ விருப்பம். அத்துல
வந்துல்லாம் அரசாங்கம் தலையில முடியாது பாத்துக்குங்க. அரசாங்கம் கொடுத்துப்புட்ட
பின்னால அத்து எஞ்ஞ பணம். அத்த நாஞ்ஞ என்ன வாணாலும் பண்ணுவேம். கிழிச்சிக் கூட போடுவேம்.
நீஞ்ஞ வாங்கலன்னா அத்தாம் நடக்கப் போவுது!" அப்பிடிக்குதுங்க இப்போ சனம்.
*****
No comments:
Post a Comment