7 Feb 2020

சந்தோஷத்தெ உறிஞ்சி எடுத்துக்குற பொழுதுகள்!

செய்யு - 351

            சுருக்கமா சொல்லணும்னா கணக்குங்றது நம்பர்தாம். அந்த நம்பர்ர கூட்டுறதும், கழிக்கிறதும், பெருக்குறதும், வகுக்குறதுதாம் கணக்கு. அதுல அஞ்சாப்பு வரைக்கும் சாதாரண நம்பர், பின்ன நம்பர், தசம நம்பர்தாம் வரும். அதுல அதுகள எப்பிடிக் கூட்டுறது, கழிக்கிறது, பெருக்குறது, வகுக்குறதுங்றதாம் மொத்த கணக்குமே. மொத்தமா வேணும்னா கூட்டிக்கணும், வித்தியாசமோ வேறுபாடோ வேணும்னா கழிச்சிக்கணும், மடங்கா வேணும்னா பெருக்கிக்கணும், சமமா பிரிச்சிக் கொடுக்கணும்னா வகுத்துக்கணும். இதெத்தாம் விகடு அடிக்கடி புள்ளைங்ககிட்ட சொல்லுவாம். இத்து அப்பிடியே புள்ளைங்க மனசுல பதிஞ்சிப் போயி அதெ அப்பிடியே புள்ளைங்க விகடு சொல்லுற அதெ மாதிரி சொல்லுமுங்க என்னவோ அதுங்கத்தாம் வாத்தியார்ரு மாதிரி.
            லாவம், நட்டம், வாங்குன விலை, வித்த விலைங்றது நம்பர்ல கூட்டல் கழித்தல் சமாச்சாரங்கத்தான. அதுல சதவீதங்றது பின்னப் பெருக்கல்ல உள்ள சமாச்சாரம்தான. கணக்குங்றதெ கேள்விதாம், அந்தக் கேள்விக்கு விடைய கண்டுபிடிக்கிறதுதாம். "நாம்ம பத்து ரூவா வெச்சிருக்கிறப்ப ரண்டு ரூவா கொடுத்தா, இருவது ரூவா வெச்சிருக்கிறப்ப எம்மாம் கொடுப்பேம்? முப்பது ரூவா வெச்சிருக்கிறப்ப எம்மாம் கொடுப்பேம்? நாப்பது ரூவா வெச்சிருக்கிறப்ப எம்மாம் கொடுப்பேம்?"ன்னு கேட்டுக்கிட்டே போயி, "நூறு ரூவா வெச்சிருக்கிறப்ப எம்மாம் கொடுப்பேம்?"ன்னு கேட்டு சதவீதத்தெ அறிமுகம் பண்ணிட்டு, "எதெ நூத்துக்குக் கணக்குப் பண்ணாலும் அதாங் சதவீதம்"ன்னு சொல்லுற ஒத்த வாசகம் புள்ளைங்க மனசுக்குள்ள சுகரா பதிஞ்சிரும். அதுக்குப் பெறவு சதவீதங்ற வார்த்தையச் சொன்னாலே புள்ளைங்க எல்லாம் சேந்துகிட்டு கோரஸா "நூத்துக்கு"ன்னு கத்துமுங்க.
            "வகுக்குறப்ப மீதியில்லாம வகுபடமா போயி ஏதோ ஒரு நம்பரு மீதி வருதுன்னா என்னா பண்றது?"ன்னு ஆரம்பிச்சி பின்னம், கலப்புப் பின்னம், தசம பின்னத்தெ அறிமுகம் பண்ணி வெச்சா அதுக்குப் பெறவு புள்ளைங்க "இருவது தோசையெ முப்பது பேத்துக்கு எப்பிடிக் கொடுக்குறது?"ன்னு கேட்டாக்கா பதிலெ டாண் டாண்ணுன்னு சொல்லுமுங்க. அதுலயும் பின்னத்தெ தசம பின்னமா மாத்துறதும், தசம பின்னத்தெ பின்னமா மாத்துறதும் ஒரு வேடிக்கையான வெளையாட்டாவே போயிடும். அப்பிடியே தெனமும் கேக்கற மன கணக்கும் "நாலே காலேயும், அஞ்சே முக்காலேயும் கூட்டுனா எம்மாம் வரும்? பத்தே முக்காலேந்து நாலைரய கழிச்சா எம்மாம் வரும்?"ன்னு திசை மாறும். அதெ கணக்குப் பண்ணி மொதல்ல யாரு சொல்றதுங்றதுல ஒரு பெரிய போட்டியே புள்ளைங்ககிட்ட நடக்கும். "நாஞ் கணக்குப் பண்ணி சொல்ல வெச்சிருந்த பதிலே அவ்வேம் சொல்லிட்டாம், இத்து சொல்லிப்புட்டு"ன்னு அதுல ஒண்ணுக்கொண்ணு சண்டே வேற ஆரம்பிச்சிப்புடும்.
            படிக்குறது எதுவா இருந்தாலும் அது புரிஞ்சிட்டா அதுல வர்ற ஆர்வமே தனிதாம். அதே போல படிக்கிறது எதுவா இருந்தாலும் அது புரியாம போயிட்டா அதுல வர்ற வெறுப்பும் எரிச்சலும் தனிதாம். இதுல இன்னொரு விசயமும் இருக்கு, புரியாத பாடமா இருந்தாலும், வாத்தியார்ர புள்ளைங்களுக்குப் பிடிச்சுப் போயிட்டா அந்த பாடமும் பிடிச்சிப் போயிடும் புள்ளைங்களுக்கு. பாடம் பிடிச்சிப் போனா அந்தப் பாடம் புரிஞ்ச மாதிரித்தாம்.
            விகடுவுக்கு இதுல அவ்வேம் அளவுலயே நல்ல அனுபவம் இருந்திச்சு. அவ்வேம் நரிவலத்துல படிக்கிறப்போ கெமிஸ்ட்ரி வாத்தியாரு பிடிச்சவர்ரா இருந்தாரு. அவரு புள்ளைங்கள ரொம்ப திட்ட மாட்டாரு, கண்டிக்க மாட்டாரு. சகஜமாக பழகுவாரு. பாடத்தையும் அலட்டிக்காம கொள்ளாம சாதாரணமாத்தாம் நடத்துவாரு. அவரு பாடத்துல புள்ளைங்க டபுள் சென்டம்லாம் அசால்ட்டா அடிக்கும். அப்போ விகடு படிச்ச காலத்துல பதினொன்னாவது, பன்னெண்டாவதுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் எரநூத்து மார்க்கு இருந்ததால புல் மார்க்கு எடுக்கறதெ டபுள் சென்டம்னு சொல்லுவாங்க.
            ஆனா பாருங்க, நரிவலத்துல பிசிக்ஸ் வாத்தியாரு ரொம்ப கெட்டிக்காரரு. பாடங்கள அவரு அளவுக்குப் புரிய வைக்குறதுக்கு ஆளு கெடையாது. ஆனா ஆளு கொஞ்சம் கடுகடுன்னு இருப்பாரு. புள்ளைங்க எதாச்சிம் தப்பு பண்ணிட்டா அவரால தாங்கிக்க முடியாது. காச் மூச்சுன்னு கத்திப்புடுவாரு. அதால புள்ளைங்களுக்கும் அவருக்கும் இடையில ஒரு இடைவெளி எப்பயும் இருக்கும். பாடத்தெ நடத்துறதுன்னா அவரு உசுர்ர கொடுத்துத்தாம் நடத்துவாரு. ஆனா அவரு பாடத்துல எந்தப் புள்ளையும் டபுள் சென்ட்டம்லாம் அதிகமா அடிக்காது.

            பாடத்தெ நடத்துற வாத்தியார்ர பிடிச்சுப் போச்சுன்னா அதுக்குன்னே படிக்குற புள்ளைங்கல்லாம் இருக்குதுங்க. பாடத்தெ பெரிய பிரமாதமா நடத்தணும்னெல்லாம் அவசியமெல்ல. புள்ளைங்களோட மனசுக்கு நெருக்கமா பேசணும், அப்பிடி பேசிக்கிட்டே நடத்தணும். அவுங்களோட உணர்வுக்கும், கருத்துக்கும் மதிப்புக் கொடுத்து அவங்க பேசுறதெ கேக்கணும். இதெ தவுர புள்ளைங்க வேற எதையும் எதிர்பார்க்காதுங்க. அவுங்க வூட்டுல நடக்குற சின்ன சின்ன விசயங்களையெல்லாம் மனசு வுட்டுப் பேசணும்னு புள்ளைங்க எதிர்பார்க்குமுங்க. அதெ சொல்ல அனுமதிக்கிறதுலத்தாம் புள்ளைங்களுக்கும், வாத்தியாருக்கும் இருக்குற இடைவெளிங்றது குறையுது.
            பொதுவா மனுஷப் பயலுக்கு மனசுல உள்ளதையெல்லாம் யாருகிட்டயாவது பேசணும். அப்பிடி பேச கிடைக்குற ஒரு மனுஷம்தான் அந்த மனுஷனுக்கு எல்லாமுமே. அப்பிடிப் புள்ளைங்களுக்குப் பேச கிடைக்கிறவர்ர வாத்தியாரு இருந்துட்டா, அந்த வாத்தியாருதாம் புள்ளைங்களுக்கு அப்பா, அம்மா, சோக்காளி எல்லாமும். அவரு புள்ளைங்களப் பாத்து கெணத்துல குதின்னாலும் புள்ளைங்க கண்ண மூடிட்டுக் குதிக்குமுங்க. அப்பிடி ஒரு கண்மூடித்தனமான பாசத்தெ புள்ளைங்க வாத்தியாரு மேல வெச்சிப்புடும்ங்க.
            பொதுவா புள்ளைங்களுக்கு வெளையாட்டுத் தனமா இருக்கறதும், கொண்டாட்டமா இருக்குறதும்தாம் ரொம்பப் பிடிக்கும். அப்பிடி ஒரு ஆளு புள்ளைங்களுக்குக் கெடைச்சிட்டா அந்த ஆளு சொல்ற படியெல்லாம் புள்ளைங்க ஆடும். அதனால பாடத்தெ எப்பயும் வெளையாட்டுத் தனமாவும், சிரிப்பும் கொண்டாட்டமுமாத்தாம் கொண்டு போவணும். இதுல விகடு ரொம்ப தெளிவா இருந்தாம். இதுக்குல்லாம் அவனுக்கு முன்னோடின்னா அது லாலு மாமாத்தாம். அவரு புள்ளைங்களோட புள்ளைங்களா எப்பவும் ஒரு ஜோக்கரு மாதிரித்தாம் நடந்துப்பாரு. பாடத்தையும் அப்பிடித்தாம் புள்ளைங்க மனநிலையில சொல்லுவாரு. அவனுக்கு அவருதாம் நாலாப்பு வாத்தியாருங்றது ஒங்களுக்குத் தெரிஞ்ச சங்கதித்தாம். அவரு பாடம் நடத்துன விசயங்களும் ஒங்களுக்குத் தெரிஞ்சதுதாம். அவரு பாடம் நடத்துன பல விசயங்களெ இப்பவும் விகடுவால நெனைச்சுப் பாக்க முடியுது.
            ரொம்ப வித்தியாசமான அனுபவங்கள எல்லாம் கொடுத்தவரு லாலு மாமா. பாட்டுன்னு வந்துட்டா அவருக்கு இருக்குற கனத்த ஒடம்புக்கு ஆடிட்டுத்தாம் பாடுவாரு. அதுவும் குதிச்சிக் குதிச்சித்தாம் ஆடுவாரு. அப்பிடி ஆடுறப்போ அவரோட ஒடம்பு சதைக குலுங்கறதெ பாக்கணுமே. குறிப்பா கன்னத்துல சதைக வரைக்கும் ஆடும். அத்தோட அந்த ஒடம்புக்கு அவரு ஆடுறதெ பாக்க சிரிப்புச் சிரிப்பாத்தாம் இருக்கும். ஆட்டத்தெ பெரிய பிரமாதமால்லாம் ஆட மாட்டாரு. ஆனா புள்ளைங்களுக்கு எப்பிடி ஆடுனாலும் பிடிக்கும்ங்றதுதாம் இதுல இருக்குற சூட்சமம். திடீர்னு பாடத்தெ நடத்திட்டு இருக்குறவரு ஒரு படத்தெ கொடுத்து இதெ வரைஞ்சிட்டு வாங்கம்பாரு. வரையறதுன்னா புள்ளைங்களுக்கு தனி சந்தோசமே வந்துப்புடும். ஒரு நாளு என்ன பண்ணுவார்ன்னா பேப்பர்ல கப்பலு, மயிலு, ராக்கெட்டு, ஏரோப்ளான்னு செய்யக் கத்து தருவாரு. இன்னொரு நாளு புள்ளைங்க எல்லாத்தையும் வெளியில அழைச்சிட்டுப் போயி சுத்தி இருக்குற செடி, கொடிங்க, மரங்க எல்லாத்தையும் காட்டுவாரு. அன்னாடம் பாத்த மரங்கன்னாலும் அதெ வாத்தியாரோடு போயி பாக்குறப்ப அதுல உண்டாவுற குஷியே அலாதித்தாம்.
            தமிழ்ப் பாடத்துல நாடகமா இருக்கற பாடம் வந்துட்டா, அதெ புள்ளைங்கள வெச்சி நாடகமாத்தாம் போட்டுக் காட்டுவாரு லாலு மாமா. இங்கிலீஷா படிக்கிறதுக்கு தமிழ்ல எழுதி எழுத்துக் கூட்டிப் படிக்கச் சொல்லுவாரு. அதாச்சி எப்பிடின்னா Ka ன்னா 'கா', Ma ன்னா 'மா' ன்னு அவரு சொல்லிக் கொடுக்கறதுலயே நாலாப்புலயே புள்ளைங்க இங்கிலீஷ இஷ்டத்துக்குப் படிக்க ஆரம்பிச்சிடும்ங்க. நாலாப்புலயே அவரு மேப்புகள கொண்டு வெச்சி பாடத்தெ நடத்துவாரு. மேப்புல குறிக்கச் சொல்லி ஆளுக்கொரு மேப்ப கொடுப்பாரு. பூமி உருண்டைய சுத்த வுட்டு பாடத்தெ கொண்டு போவாரு. அறிவியல்ல எலும்பு மண்டலம், உறுப்பு மண்டலம் வந்துச்சுன்னா ஒல்லியா இருக்குற ஒரு பையனெ சட்டைய கழட்டச் சொல்லி அவரு பாடம் நடத்துறது ரொம்ப வேடிக்கையாவும், சிரிப்பாவும் இருக்கும்.
            லாலு மாமாவப் பொருத்த மட்டில ஒரு கொறைன்னா எப்பப் பாத்தாலும் வகுப்புக்கு வர மாட்டாருங்றதுதாம். எப்பயாச்சியுதாம் வருவாரு. வந்துப்புட்டா பாடம் தூள் பறக்கும். அவரு வாய்க்கா, வரப்பு, வயலு, கொடுக்கல், வாங்கல், அண்ணங்காரரோட யேவார கூட்டுன்னு நெறைய வேலைகள்ல இருந்ததால அதுக்கு இடையிலத்தாம் பள்ளியோடம் வர்றதும், பாடத்தெ கொண்டு போறதும். அத்தோட சில நேரங்கள்ல பாடத்தெ நடத்திட்டு இருக்குறப்பவே உக்காந்து அவரு பாட்டுக்கு நோட்ட எடுத்து வெச்சி எதாச்சிம் கணக்கு எழுதிட்டுக் கூட்ட ஆரம்பிச்சிடுவாரு. எப்பிடி இருந்தாலும் லாலு மாமா வகுப்புன்னா புள்ளைங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். மித்தபடி கள்ளு குடிக்குற ஞாபவமும் வந்துப்புடக் கூடாது அவருக்கு. வந்துட்டுன்னா வகுப்புல கள்ளுப்பானை பொங்கிப் பொங்கி நுரையக் கக்கிட்டுத்தாம் இருக்கும்.
            லாலு மாமா நாலாப்புல எப்பிடியெல்லாம் பாடத்தெ கொண்டு போனாரோ அது எல்லாமும்தாம் விகடுவுக்குப் பாடமா இருந்துச்சு. மாசத்துல ஒரு நாளு பேப்பரு, களிமண்ணு வெச்சி எதையாச்சிம் செய்யுறதுதாம் வேல. அன்னிக்கு பாடமெல்லாம் கெடையாது. இதுக்குன்னே பழைய தினசரி பேப்பர்ர ரெண்டு கட்டு, மூணு கட்டு கட்டிட்டுப் போவாம் விகடு. புள்ளைங்கள்ட்ட சொல்லி ஆளாளுக்குக் களிமண்ணையும் கொண்டுட்டு வரச் சொல்லிடுவாம். கோட்டகத்துல களிமண்ணுக்கா கொறைச்சல்! புள்ளைங்க ஒவ்வொண்ணும் களிமண்ண குண்டு குண்டா கட்டிட்டு வருமுங்க.
            புள்ளைங்க ஒவ்வொண்ணுத்துக்கும் பேப்பர்ர கொடுத்தா அதெ மடிக்கிறதெ வெச்சி சதுரம், செவ்வகம், முக்கோணம்னு நெறைய சொல்லிக் கொடுக்குறதோட, கப்பல் செய்யுறது, கத்திக் கப்பல் செய்யுறது, மயிலு செய்யுறது, விமானம் செய்யுறது, காகிகத்துல நறுக்கி பொம்மை செய்யுறது, டிசைன் வெட்டுறது, வித விதமா குல்லா செய்யுறதுன்னு நேரம் போறது தெரியாம அன்னிக்குப் பள்ளியோடம் ஓடும். வித விதமா குல்லா செஞ்சிட்டா அந்தக் குல்லாவ போட்டுக்கிட்டுத்தாம் புள்ளைங்க அன்னிக்குப் பூராவும் அலையுமுங்க. அத்தோட அதெ போட்டுக்கிட்டு 'குல்லானா குல்லானா' பாட்ட பாடிட்டு அன்னிக்கு ரொம்ப ரகளையா இருக்கும் பள்ளியோடம். மத்தியானத்துக்கு மேல களிமண்ண வெச்சி பொம்மை செய்யுறது, வண்டிக செய்யுறதுன்னு ஓடும். அப்பிடிப் புள்ளைங்க செய்யுறதையெல்லாம் அழகா பள்ளியோடத்துல அடுக்கி வெச்சிக்கிறது. அதெ புள்ளைங்க ஒவ்வொண்ணும் இத்து நாஞ் செஞ்சது, அத்து நாஞ் செஞ்சதுன்னு அவுங்களோட அப்பா, அம்மா யாராச்சிம் பள்ளியோடம் வர்றப்ப காட்டிக்கிட்டு ரொம்ப சந்தோஷப்படுமுங்க. இப்பிடிச் சந்தோஷத்துக்கு எடையிலத்தாம் பாடமே. அதால புள்ளைங்களுக்குப் பாடத்தெ படிக்கிறாப்புலயே பள்ளியோடம் இருக்காது. அதுவும் ஒரு வெளையாட்டுப் போலவும், கொண்டாட்டம் போலவுமாத்தாம் இருந்துச்சி.
            ஆடு, மாடு, கோழி, கொக்கு, சிங்கம், புலின்னு, நரி, யானை, கழுதை, தென்னை மரம், மாமரம், ராஜா, ராணி, மந்திரி, கோமாளி, விவசாயின்னு அந்தப் படங்கள வெட்டி எடுத்துக்கிட்டு அதெ அட்டையில ஒட்டி அந்த அட்டையோட அட்டையா ஐஸ் குச்சிய பிடிக்கறாப்புல ஒட்டிப்புட்டா அதெ வெச்சி வெத வெதமா கதையச் சொல்லலாம். இன்னொரு வகையில கதைக்குத் தகுந்தாப்புல அந்தந்த படத்தெ வெச்சிக்கிட்டு அதெ ஆட்டி ஆட்டி ஒவ்வொண்ணும் பேசுறாப்புல கதையச் சொல்றப்ப புள்ளைங்க அம்புட்டு ஆர்வமா கேக்குமுங்க. அதுகளும் அதே மாதிரி கதையச் சொல்றதெ கேக்கணுமே. அதுகளோட மழலை மொழியில பெரியவங்க மாதிரி அதுங்க கதை சொல்றதெ தனிதாம். ரொம்ப சுவாரசியமா இருக்கும் அந்த அனுபவம். புள்ளைங்ககிட்டேயிருந்து சந்தோஷத்தெ உறிஞ்சி உருவி எடுத்துக்குறாப்புலத்தாம் இருக்கும் அந்த மாதிரியான நேரங்க ஒவ்வொண்ணும்.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...