6 Feb 2020

கணக்கெல்லாம் பிணக்குமில்ல, ஆமணக்குமில்ல!

செய்யு - 350

            புள்ளைங்கல பொதுவா களிமண்ணு மாதிரின்னும், ‍அதெ நாம்ம எப்பிடி அச்சுல வாக்குறோமோ அப்பிடித்தாம் அது அமையும்னு கல்வித் தத்துவத்துல வாத்தியாரு படிப்புக்குப் படிக்கிறப்ப சொல்வாங்க. அந்தப் புள்ளைங்கள நாம்ம எப்பிடி நெனைக்கிறோமோ அப்பிடி வார்த்து எடுத்துட முடியும். அதுவும் அந்தப் புள்ளைங்க சின்ன புள்ளைகளா கெடைச்சிட்டா நெனைச்சபடி கொண்டாந்துடலாம். அப்பிடிக் கொண்டாரதுக்கு அந்தப் புள்ளைங்களோட நமக்குப் பேச தெரிஞ்சிருக்கணும். அதாச்சி புள்ளைங்களோட புள்ளைங்களா பேசத் தெரிஞ்சிருக்கணும். அதுகளோட மனசெ ஊடுருவ தெரிஞ்சிருக்கணும். சின்ன புள்ளைங்களோட சின்ன புள்ளைங்களா மாற தெரிஞ்சிருக்கணும். சுருக்கமா சொல்லணும்னா சின்ன புள்ளைங்கள ரசிக்க தெரிஞ்சிருக்கணும். நாம்ம யார்ர ரசிக்கிறோமோ அவுங்களுக்கு நாம்ம அடிமையா மாறிடுவோம். அவுங்க என்ன செஞ்சாலும் அதெ ஏத்துக்குற மனப்பக்குவம் நம்மள அறியாமலே வந்துப்புடும். அவுங்க வெளையாட்டுத்தனமா தப்பே பண்ணாலும் கோவம் வராது. பண்ற சேட்டைகள நெனைச்சி நெனைச்சி சிரிக்க ஆரம்பிச்சிடுவோம். குழந்தைகளோட பழகுறதுல இதுதாங் விசயம்.
            அப்பிடிப் பழக ஆரம்பிச்சிட்டா அதுகளோட கள்ளங் கபட இல்லாத மனசு இருக்கே அது நம்மள அப்பிடியே சுண்டி இழுத்து கட்டிப் போட்டுப்புடும். அப்பிடிக் கட்டிப் போட போட நாம்ம புள்ளைங்களோட அடிமையா ஆயிட்டதா நெனைச்சிக்கிட்டு இருப்போம். ஆனா புள்ளைங்கத்தாம் நம்மளோட அடிமையா ஆயிருக்குமுங்க. இதெ நீங்களே சோதிச்சுப் பார்க்கலாம். எப்பிடின்னா அப்பிடி ஒரு நெலமை ஆயிப்புட்டா நாம்ம சொல்லுற ஒவ்வொண்ணுத்தையும் புள்ளைங்க கேக்க ஆரம்பிச்சிடும். நாம்ம இப்பிடி போன்னு சொன்னாக்கா இப்பிடித்தாம் போவும். அப்பிடி போன்னு சொன்னாக்கா அப்பிடித்தாம் போவும். அதால மாத்திப் போவ முடியாது. பெறவு அதெ பெத்த அப்பம் ஆயி சொல்றதையும் கேக்காது. வாத்தியாரு ன்னா சொல்றாரோ அதெத்தாம் கேக்கும். அப்பிடி ஒரு வசியம் ஆயிப்புடும். நாம்ம ஒரு வேலை செஞ்சிட்டு வரச் சொல்லி, அதெ செஞ்சிட்டு வர முடியாமப் போச்சின்னா அதுக்காக நம்ம முன்னால வந்து மூசு மூசுன்னு அழ ஆரம்பிச்சிடும். அதெ சமாதானம் பண்ணி முடிக்கிறதுக்குள்ள நமக்குக் கண்ணுல தண்ணி வந்துடும்.
            மனசுக்குள்ள ஒரு விசயத்தெ ஆணி அடிச்சாப்புல திணிக்கிறதெ விட, மனசுக்குள்ள வாசத்த போல நொழையுறது இருக்கே அது ஒரு சந்தோஷம். பாடம் சொல்லிக் கொடுக்குற வாத்திமாருக செல பேர பாத்தீங்கன்னா, என்னவோ தேவலோகத்துல இருக்குறாப்புல அம்புட்டு சந்தோஷமா இருப்பாங்க. அப்பிடிப்பட்ட வாத்திமாருக எல்லாம் புள்ளைங்களோட மனசுக்குள்ள வாசத்த போல நொழையுற அசாமிங்க. புள்ளைங்க மனசெ சாவி வெச்சு தெறக்குறாப்புல தெறக்க தெரிஞ்ச வித்தைக்காரங்க. இதெ பத்தியும் வாத்தியாரு டிரெய்னிங்கல சொல்லித் தருவாங்க.
            அத்து என்னான்னா... சுத்தியும் பூட்டைத் தொறக்கும், சாவியும் பூட்டைத் தொறக்கும். ரெண்டும் தொறக்குற முறை வேற. சுத்திப் பூட்டைத் தொறந்தா பெறவு அந்தப் பூட்டு எதுக்கும் உபயோகப்படாது. ஏன்னா அது பூட்டோட தலையில தட்டி அதெ உருப்படாம செஞ்சு தொறக்க வைக்கும். ஆனா சாவி இருக்கே, அது தொறந்தா எத்தனெ தடவ வேணாலும் பூட்டைத் தொறந்து, பூட்டி உபயோகப்படுத்திக்கிட்டே இருக்கலாம். ஏன்னா சாவிங்றது பூட்டோட மனசுக்குள்ள நொழைஞ்ச அதெ தொறக்க வைக்குது. ஒரு வாத்தியார்ங்றவரு சாவி மாதிரி இருக்கணும். சுத்தி மாதிரி இருக்கக் கூடாது. புள்ளைங்கள பூட்டு மாதிரி நெனைச்சுக்கிட்டா வாத்தியாருங்றவரு சுத்தி மாதிரி இல்லாம சாவி மாதிரி இருந்து அவுங்களோட மனசுக்குள்ள நொழைஞ்சு காரியத்தெ பண்ணணும். அவருதாம் சரியான வாத்தியாரு. அப்பிடி சாவி மாதிரி புள்ளைங்களோட மனசுக்குள்ள நொழைஞ்சு வசியம் பண்ற வாத்தியாரைத்தாம் புள்ளைங்களுக்குப் பிடிக்கும். அதெ வுட்டுப்புட்டு சுத்தி மாதிரி அடிச்சும், மெரட்டியும் பாடத்தெ நொழைக்குற வாத்தியாருமாருகள புள்ளைங்களுக்குப் பிடிக்காது. இப்பிடில்லாம் வாத்தியாரு டிரெய்னிங்ல சொல்லிக் கொடுப்பாங்க.
            பாடஞ் சொல்லிக் கொடுக்குறதுல பெரிய பெரிய வித்தை இருக்குறதா நெறைய நுட்பங்கள சொல்லுவாங்க. அந்த நுட்பங்களையல்லாம் தாண்டுன நுட்பங்றது புள்ளைங்களோட புள்ளைங்களா கலந்துடுறதுதாம். அப்பிடிக் கலந்துட்டா எந்த நுட்பம் இல்லாம சொல்லிக் கொடுத்தாலும் புள்ளைங்க அதெ கப்புன்னு பிடிச்சுக்குமுங்க. புள்ளைங்கள பொருத்த வரை அதுகளுக்குப் பிடிச்சுப் போயிட்டா, பிடிச்சவங்க சொல்றதெ அப்பிடியே கேக்க ஆரம்பிச்சிடுமுங்க. பிடிக்காம போயிட்டா கம்ப்யூட்டரு, புரஜெக்டருன்னு வெச்சி என்னத்தெ சொல்லிக் கொடுத்தாலும் கேக்காம போயிடுமுங்க. இதுதாங் மனுஷனோட இயல்பே. மனசுக்குப் பிடிச்சதெ செய்வாம். பிடிக்காததெ செய்ய மாட்டாம். புள்ளைங்களுக்கும் அதாங் இயல்பு.
            கஷ்டமான பாடத்தை நடத்த கஷ்டப்பட்டெல்லாம் தயார் பண்ண வேண்டிய அவசியமேயில்ல. புள்ளைங்களோட புள்ளைங்களா சித்த நேரம் பந்து வெளையாடிட்டு வந்து அந்தப் பாடத்தெ நடத்துனாலே போதும். புள்ளைங்க அந்தக் கஷ்டமான பாடத்தெ என்னமா வாங்கிக்குமுங்றீங்க. நமக்கே ஆச்சரியமா போவும். எப்பிடி இம்மாம் கஷ்டமான பாடத்தெ புள்ளைங்க டக்குன்னு புரிஞ்சிக்கிட்டுன்னு நெனைக்க நெனைக்க அதியமா இருக்கும். மனசோட ஒரு சினேக பாவம் இருந்துட்டா போதும், புரிய வைக்க முடியாத வெசயமுன்னு ஒண்ணுமேயில்ல. அந்தச் சிநேகபாவம் இருந்தாத்தாம் புள்ளைங்க வந்து சகஜமா பேசுமுங்க. புள்ளைங்க சகஜமா பேசுனாத்தாம் அதுக மனசுல உள்ள சந்தேகங்கள கேக்குமுங்க. சந்தேகங்கள கேட்டாத்தாம் அங்க சிந்தனை பொறக்கும். சிந்தனைக பொறந்தாத்தாம் ஆர்வம்ங்றது படிப்புல உண்டாவும். அப்பிடி உண்டாயிட்டா அடுத்தடுத்த பாடத்தெ நடத்த வேண்டியதேயில்ல. புள்ளைக பாட்டுக்கு அதுகளா படிச்சிட்டு வந்து இது என்னா? அது என்னா?ன்னு கேட்டு கேட்டு அதுகளாவே படிச்சிட்டுப் போயிடுமுங்க.

            விகடுவும் புள்ளைகளும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆன பிற்பாடு பாடம் போற வேகம் பயங்கரமான வேகமா இருந்துச்சி. அட்டைகளையும் புள்ளைங்க விறுவிறுன்னு முடிச்சிட்டு அடுத்தது என்னா என்னான்னு கேக்க ஆரம்பிச்சிட்டுங்க. பாடம் படிக்கிறது என்னவோ வெளையாடுறது போல ஆயிடுச்சிப் புள்ளைங்களுக்கு.
            விகடுவுக்கு அஞ்சாப்பு வரைக்கும் அஞ்சு வகுப்புங்க. இதுல ஒண்ணாப்புக்கும், ரெண்டாப்புக்கும்தாம் நாலு பாடம்ங்க. மூணாப்புலேந்து அஞ்சாப்பு வரைக்கும் ஒவ்வொண்ணுத்துக்கும் அஞ்சு பாடம்ங்க. ஆக மொத்தம் இருபத்து மூணு பாடம் கணக்குக்கு வரும். புள்ளைங்க அட்டைகள்ல ஒரு பக்கம் போயிட்டு இருந்தாலும் புத்தகத்தையும் வெச்சி சொல்லிக் கொடுத்து முடிச்சிடுவாம் விகடு. புத்தகத்துல இருக்குறதுதாம் அட்டைகள்ல இருக்குது, அட்டைகள்ல இருக்குறதுதாம் புத்தகத்துல இருக்குறதுன்னாலும் புத்தகத்தெ வெச்சிச் சொல்லிக் கொடுக்குறப்ப ஒரு புத்தகத்தெ படிச்சி மூணு நாளு நாளைக்குள்ளயே அதுல உள்ளதெ அத்தனையையும் சொல்லிக் கொடுத்துடுவாம் விகடு. புள்ளைங்களோட வேகம் அந்த அளவுக்கு ஆயிப்புடுச்சி. தமிழ் புத்தகம், அறிவியல் புத்தகம், சமூகவியல் புத்தகத்தையெல்லாம் புள்ளைங்க உக்காந்து ஒரே மூச்சில படிச்சி முடிச்சிப்புடும்ங்க. இங்கிலீஷ் புத்தகத்தையும் போகப் போக அர்த்தம் புரியுதோ இல்லையோ அதுங்க பாட்டுக்கு படிக்க ஆரம்பிச்சதுங்க. இங்கிலீஷையும், கணக்கையும் உக்காந்து கொஞ்சம் சொல்லிக் கொடுக்க வேண்டியது இருந்துச்சே தவிர மத்த பாடங்களெ புள்ளைங்களே படிச்சி அதுக்கு ஒரு விளக்கத்தெ சொல்ல ஆரம்பிச்சிடுச்சிங்க.
            புள்ளைங்ககிட்ட ஒரு கொணம் என்னான்னா வாத்தியாரு எப்பிடி பாடத்தெ நடத்துறாரோ அதெ மாதிரியே அதுகளும் செஞ்சிப் பாக்குமுங்க. மொத பாடத்தெ எப்பிடி நடத்துறோங்றதெ பாத்துப்புட்டு அதெ மாதிரியே அடுத்த பாடத்தெ அதுகளும் நடத்துறாப்புல நடிச்சிப் பாக்குமுங்க. அது ரொம்ப வேடிக்கையா இருக்கும். வாத்தியாரு மாதிரியே குரல மாத்திக்கிட்டு, வாத்தியார்ர போலவே நடைய நடந்துகிட்டு, அவரு எந்த எடத்துல செருமுவாரு, இருமுவாருங்ற வரைக்கும் கணக்கு வெச்சிக்கிட்டு அதுக பண்ற அட்டகாசம் இருக்கே, அதெ கண்டுக்கிடாம விட்டுப்புட்டா வாத்தியாருக்குப் பாடம் நடத்துற வேலை மிச்சம்.
            கணக்குலத்தாம் புள்ளைங்களுக்குக் கொஞ்சம் செரமம் வரும். விகடு அதுக்கும் ஒரு வழிய வெச்சிருப்பாம். குறிப்பா பின்னம்ங்ற பாடம் வந்துப்புட்டா புள்ளைங்க தடுமாற ஆரம்பிச்சிடும். இவ்வேம் பின்னம்ங்ற வார்த்தைய‍ சொல்லாம பாடத்தெ நடத்திட்டு இருப்பாம். எப்பிடின்னா அஞ்சு தோசைய நாலு பேத்துக்கு எப்பிடிச் சரிசமமா பிரிச்சிக் கொடுக்கறது? பத்து ரொட்டியை நாலு பேத்துக்கு எப்பிடிச் சரிசமமா பிரிச்சிக் கொடுக்குறது? இப்பிடித்தாம் ஒரு வாரத்துக்கு கேள்வி மேல கேள்வியா மனக்கணக்கா ஓடும். புள்ளைங்க மண்டெய பிய்ச்சுக்கிட்டு வகுத்தல் மேல வகுத்தல் கணக்கா மனசுக்குள்ளயும், நோட்டுலயும் போட்டு பாத்துப்புட்டு விடையச் சொல்லச் சொல்லி அடம் பண்ணும்ங்க. விகடு சாமானியத்துல விடையச் சொல்லிட மாட்டாம். அப்பிடியே கணக்கெ ஒரு தோசைய நாலு பேத்துக்கு எப்பிடிச் சரிசமமா பிரிச்சிக் கொடுக்கறது? ஒரு தோசைய ரெண்டு பேத்துக்கு எப்பிடிச் சரிசமமா பிரிச்சிக் கொடுக்கறது? மூணு தோசைய நாலு பேத்துக்கு எப்பிடிச் சரிசமமா பிரிச்சிக் கொடுக்குறது?ன்ன ஆரம்பிச்சி அந்த வாரம் முழுக்க விடை சொல்லாமலே கணக்கு ஓடிட்டு இருக்கும்.
            புள்ளைங்க இதுக்கான பதிலெ கணக்கா சொல்லாம படத்தெ வரைஞ்சி இப்பிடியிப்படிப் பிரிச்சிக் கொடுக்கலாமுன்னு பதிலச் சொல்லும் பாருங்க. அப்பப் பிடிச்சிப்பாம் விகடு. இதெ எப்பிடி நம்பர்ல சொல்றதுன்ன கேட்பாம் பாருங்க. அப்பத்தாம் புள்ளைங்க தலையச் சொரியுமுங்க. "எப்பிடிங்கய்யா சொல்றது?"ன்னு அவ்வேங்கிட்டயே எதிரு கேள்விய கேக்குமுங்க. "எனக்கும் தெரியலையே ன்னா பண்றது?"ம்பாம் விகடு. எதாச்சிம் பண்ணணுமேங்கய்யான்னு புள்ளைங்க சொல்றப்பத்தாம் விகடு சொல்லுவாம். செரி இதுக்குன்னு ஒரு முறைய உண்டுப் பண்ணிப்பமாம்பாம். பண்ணிக்கலங்கய்யான்னு புள்ளைங்க சொல்றப்பத்தாம் நாலுல ஒண்ணு, ரெண்டுல ஒண்ணு, நாலுல மூணுன்னு நம்பர்ர மேலயும், கீழயும் போட்டு இப்பிடி வெச்சிக்கிடலாமான்னு கேப்பாம். அதெ என்னவோ புள்ளைங்களே அப்பிடி வெச்சிக்கிட அனுமதி கொடுத்தாப்புல நெனைச்சுக்கிட்டு அப்பிடியே வெச்சிக்கிடலாம்னு சொல்லும் பாரும்ங்க. அதுக்குப் பெறவு அப்பிடி வெச்சிக்கிட்ட நம்பர்ல எப்பிடிக் கூட்டுறது? கழிக்கிறது? பெருக்கறது? வகுக்குறது?ன்னு கேள்வி மேல கேள்விய கேட்டுப்புட்டே இருப்பாம் விகடு.
            புள்ளைங்களும் அதாம்ங்கய்யா எப்பிடிக் கூட்டுறது? எப்பிடிக் கழிக்கிறது? எப்படிப் பெருக்குறுது? எப்பிடி வகுக்குறது?ன்ன திரும்ப நச்சரிக்க ஆரம்பிச்ச பிற்பாடு அதுல கணக்கு ஓடும் பாரும்ங்க. அப்பத்தாம் விகடு இன்னொரு காரியத்தெ பண்ணுவாம். "இந்தாருங்க புள்ளைங்களா! நீஞ்ஞளே ஆளுக்கு ஒரு கணக்கெ உண்டு பண்ணி அதெ கூட்டிக் காட்டுங்கம்பாம்!" புள்ளைங்களுக்கு அதுல ஒரு சந்தோஷம் வந்துப்புடும். ஆளாளுக்கு ஒரு கணக்கெ உண்டு பண்ணி அதெ போட்டுக்கிட்டுக் கொண்டு வரும். அதுல தப்பு இருந்தா சரி பண்ணி வுடுவாம். சரியா இருந்தா, "கெட்டிக்கார பய புள்ளே!"ன்ன புடிச்சி முதுகுல தட்டுவாம் பாருங்க. அதுல அந்தப் புள்ளைக்கு ஒலகத்தையே ஜெயிச்சது போல அதோட முகத்துல ஒரு சந்தோஷம் வர்றதப் பாக்குறப்போ செமையா இருக்கும்.
            சதுரத்தோட சுத்தளவு, செவ்வகத்தோட சுத்தளவு, அதுகளோட பரப்பளவு கணக்கும் இப்பிடித்தாம் ஓடும். தரையில சாக்குபீஸால சதுரத்த போட்டுடுவாம். "இந்தாருடப்பா! தரையில அஞ்சடிக்கு அஞ்சடி சதுரம். இதெ சுத்தி வர்றேம் பாருங்க. எத்தனெ அஞ்சடி சுத்தி வந்தேம்?"ம்பாம் விகடு. புள்ளைங்க சேந்துகிட்டு நாலு தபான்னு சொல்லும். "அப்போ மொத்தச் சுத்து எம்மாம்?"பாம் விகடு. நாலஞ்சு இருவதும்ங்க புள்ளைங்க. "அப்போ இதோட சுத்தளவு இருவது அடி. நாலாம் வாய்ப்பாட்ட சொன்னாக்கா அது சதுரத்தோட சுத்தளவுல‍ கொண்டாந்து விட்டுப்புடும்ல"ம்பாம் விகடு. "ஹய்யோ! ஆமாங்கய்யா!"ன்னு புள்ளைங்க சொல்லும். அப்பிடியே செவ்வகத்து படத்தெ தரையில சாக்பீஸ்ல போட்டுக்காட்டி சுத்துறப்ப ரண்டு நீளம், ரண்டு அகலம் வர்றதக் காட்டி, நீளத்தையும் அகலத்தையும் கூட்டி அதெ ரண்டாம் வாய்பாட்டுல கொண்டாந்து நிறுத்துனா அதாங் செவ்வகத்தோட சுத்தளவும்பாம். அதுக்கும் புள்ளைங்க ஓன்னு ஒரு சத்தத்தெ போட்டுத்தாம் நிறுத்தும்.
            அப்பிடியே பரப்பளவையும் அதே மாதிரிக்கி, "இதோட உள்ளுக்குள்ள ஒத்தைக்கு ஒத்தை அடி வர்றாப்புல சதுரக் கட்டங்களா பாவி வுட்டாக்க எத்தனெ வரும்பாம்?" விகடு. புள்ளைங்க ஒரு முழி முழிக்குமுங்க. ஒடனே விகடு சாக்குபீஸால சதுரத்தை ஒத்த ஒத்த அடியா பிரிச்சி உள்ளுக்குள்ள கோட்டைப் போட்டு விட்டுடுவாம். இப்போ சதுரத்துக்குள்ள சதுரம் அதாவது அஞ்சுக்கு அஞ்சு சதுரத்துக்குள்ள ஒத்தைக்கு ஒத்த அடி சதுரமா குட்டிக் குட்டிச் சதுரமா உண்டாயிருக்கும். குட்டிச் சதுரத்தெ எண்ணிச் சொல்லச் சொல்லுவாம். புள்ளைங்க எண்ணி இருபத்தஞ்சுன்னு சொல்லுமுங்க. "இதுக்கு எதுக்கு எண்ணிப்புட்டு? இந்தப் பக்கத்துல அஞ்சு, அந்தப் பக்கத்துல அஞ்சு. அஞ்சஞ்சு இருபத்தஞ்சு எண்ணாமலயே சொல்லலாமுல! அப்போ வாய்பாடுல்ல ரெண்டிரண்டு நாலு, மும்மூணு ஒம்போது, நன்னாங்கு பதினாறு, ஐயஞ்சு இருபத்தஞ்சுன்னு வரதுல்லாம் என்னாவாம்?"ன்னு சொன்னாக்கா புள்ளைங்க சந்தோஷத்துல ஓன்னு அதுக்கும் சத்தம் போடுமுங்க.
            "ஆக வாய்பாடுதாம் சுத்தளவும் பரப்பளவும். அதாங் ஒங்களுக்கு தண்ணிபட்ட பாடாச்சே. மேலயிருந்து கீழ, கீழேயிருந்த மேல, ஒண்ணு விட்டு ஒண்ணு எப்பிடி வேணாலும் சொல்லுவீங்கள! அது செரி ரெண்டிரண்டு நாலு, மும்மூணு ஒம்போது, நன்னாங்கு பதினாறு போவ மிச்சமிருக்குல்ல வாய்ப்பாடுல ரெண்டி மூணு ஆறு, நாலிரண்டு எட்டுன்னு. அதெல்லாம் என்னாவாம்?"ன்னு அடுத்த கேள்வியப் போட்டு செவ்வகத்தோட பரப்பளவுல கொண்டாந்து நிறுத்திப்புடுவாம். செவ்வகத்துக்கும் அதெ போல உள்ள சதுரக் கட்டத்தெ போட்டுக் காட்டி அதெ எண்ணச் சொல்லி வாய்பாட்டுல கொண்டாந்து நிறுத்துனாக்கா, அதுக்குப் பிறவுதாம் புள்ளைங்களுக்கு ஒரு வேலையக் கொடுப்பாம் விகடு.
            புள்ளைங்களப் பாத்து, "ரெண்டு இலக்கத்துல வர்ற மாதிரி சதுரத்தோட பக்க அளவு எடுத்துக்கிட்டு சுத்தளவு, பரப்பளவு கண்டுபிடிச்சிட்டு வா"ம்பாம். அதே போல செவ்வகத்துக்கும் ரெண்டு இலக்கத்துல வர்ற மாதிரி நீள அகலம் எடுத்துக்கிட்டு சுத்தளவு, பரப்பளவு கண்டுபிடிக்க வைப்பாம். ரெண்டு இலக்கம் முடிஞ்சதுன்னா மூணு இலக்கத்துல, நாலு இலக்கத்துல, அஞ்சு இலக்கத்துலன்னு கணக்குப் போவும். இது முடிஞ்சி பிற்பாடு விகடு கேப்பாம், "நீஞ்ஞ போட்டது பெருக்கலு கணக்குதானே?"ன்னு. அதுக்குப் பிள்ளைங்க, "யில்லங்கய்யா! சுத்தளவு, பரப்பளவு கணக்குங்கய்யா!"ன்னு சொல்லும். "எனக்கென்னவோ பெருக்கலு கணக்கு மாதிரில்ல தெரிஞ்சிது!"ன்னு கண்ணடிச்சா, புள்ளைங்க கோவத்துல மூஞ்சைத் திருப்பிக்குமுங் பாருங்க, அதெ பாக்குறதுக்கும் சேட்டையாத்தாம் இருக்கும்.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...