செய்யு - 349
பள்ளியோடத்துக்குக் காம்பெளண்டு சுவரு,
கேட்டு எல்லாம் அமைஞ்ச பிற்பாடுதாம் பள்ளியோடமே ஒரு அமைப்புக்கு வருது. பள்ளியோடத்துக்கான
அந்த மனைகட்டு நல்ல சதுரமான பெரிய மனைகட்டு. அதுக்குக் குறுக்கால ரோட்டை வுட்டாக்கா
முக்காவாசி எடத்தெ அந்த ரோடு முழுங்குனது போக காலுவாசி எடந்தாம் மிஞ்சினுச்சு அப்போ.
இப்போ எல்லா எடமும் கெடைச்ச பிற்பாடு பள்ளியோடத்துக்கு மின்னாடியும், வடக்காலயும்
நல்லா எடம் கிடைக்குது. அந்த எடத்தைப் பொக்கைப் பொறை இல்லாம நாலு ஆளுகள வெச்சு வேலை
பாத்து சமன் பண்ணிப் போட்டதுல அதுல புள்ளைங்க கொண்டாட்டமா ஓடுறது என்னா, விளையாடுறது
என்னா! பாக்குறதுக்கு மனசுக்குள்ள ஒரு குதூகலம் வந்துப் போவுது.
பள்ளியோடத்துக் கட்டடத்தெ சுத்திலும்
அங்கங்க கணக்குப் பண்ணி புங்கை மரங்களையும், வேப்பங்கண்ணுங்களையும் நட்டு, ஒவ்வொரு
கண்ணுக்கும் ரெண்டு புள்ளைங்கள பொறுப்பா போட்டாச்சு. வேற தென்னை மரத்தையோ, காட்டுத்தீ
மரத்தையோ வைக்கலாம்னு ஊர்ல சில பேர பள்ளியோடத்துக்கு வரும் போது யோசனையச் சொல்றாங்க.
மரத்துல இந்த மரத்தை வைக்கணும், அந்த மரத்தை வைக்கக் கூடாதுன்னு பாகுபாடு ஒண்ணுமில்ல.
எந்த மரத்தை வேணாலும் வைக்கலாம். அப்பிடி வைக்கிற மரம் பள்ளியோடத்துக்கு ஏத்த மரமா
இருந்தா நல்லா இருக்கும்ங்றதுக்காகத்தாம் வேப்ப மரத்தையும், புங்கை மரத்தையும் தவுர
வேற மரம் வேண்டாம்னு சொல்லிப்புட்டாம் விகடு.
வேப்பமரமும், புங்கை மரமும் தர்ற குளிர்ச்சியையும்,
நிழலையும் வேற எந்த மரத்தாலும் தந்துட முடியாது. அந்த மரத்தடிக்குக் கீழே வந்துட்டாலே
மனசுக்குக் கிடைக்கிற குளுமையையும், நிறைவையும் வார்த்தையால சொல்ல முடியாது. இந்த
ரெண்டு மரத்தைப் பொருத்த வரையில தேங்காயப் போல பொட்டுன்னு புள்ளைங்க தலையில எதுவும்
விழுந்துடுமோன்னோ, கிளை முறிஞ்சி வர்றவங்க, போறவங்க மேல விழுந்துடுமோன்னோ பயப்பட
வேண்டியதில்ல. வேற விதமா அந்த மரங்கள்ல பூச்சிப் பொட்டுக அண்டுமோன்னு யோசிக்கவும்
வேண்டியதில்ல. வேப்ப மரம், புங்கை மரம் ரெண்டுமே மருந்து மாதிரியான மரங்க. அது தர்ற
காத்தே மருந்து. அதோட இலைக விழுந்து மக்குனா மண்ணுக்கு அதெ விட உரம் வேற எதுவும் இல்ல.
அத்தோட அந்த மரங்க வளர வளர தலையில தட்டி வுட்டதுல எல்லாம் பம்பலா வளந்து நின்னு பாக்குறதுக்கு
நிழற்குடைங்க மாதிரியே இருந்துச்சுங்க.
எப்ப பாத்தாலும் கட்டடத்துக்கு உள்ளாரயே
உக்காந்து பாடம் படிக்கிறது கெடையாது. சாயுங்காலம் மூணு மணிக்கு மேல மரத்தடிக்கு வந்திடறது.
மரத்தடியில உக்காந்துகிட்டுத்தாம் கோரஸா படிக்கிறதெ படிக்கிறது, பாட வேண்டிய பாட்ட
பாடுறது, சொல்ல வேண்டிய கதைகள சொல்றதுன்னு ஆனதுல புள்ளைங்களுக்கு மரத்து மேல ஒரு
தனிப்பிரியமே வந்துப் போச்சு. ஒவ்வொரு நாளுமே புள்ளைங்க எப்போ மூணு மணி ஆகுமுன்னு
எதிர்பார்க்க ஆரம்பிச்சிதுங்க.
சாயுங்காலம் நாலு பத்துக்கு மணியடிச்சா
இந்தப் புள்ளைங்க சட்டுன்னு வூட்டுக்குப் போகாதுங்க. விகடு எப்ப வூட்டுக்குக் கெளம்புறான்னோ
அப்பத்தாம் கெளம்புங்க. செயல்வழிக் கற்றல் நடைமுறையால நாலு பத்துக்குப் பள்ளியோடம்
வுட்டு கெளம்ப முடியாது. பொதுவா அந்த நடைமுறையில புள்ளைங்க ஏணிப்படியில ஒவ்வொரு கட்டமா
முடிக்க முடிக்க அதெ ரிஜிஸ்தர்ல குறிச்சிக்கணும். அதெ அப்பவே குறிக்க மாட்டாம் விகடு.
சாயுங்காலமாத்தாம் உக்காந்து குறிப்பாம். பாடம் போயிட்டு இருக்குறப்ப ரிஜிஸ்தர்ல கைய
வைக்கிறது அவனுக்கு எரிச்சலா இருக்கும். பாடம்னா புள்ளைங்களோட புள்ளைகளா கலந்து அவங்ககிட்ட
பேசிக்கிட்டும், விளக்கத்த சொல்லிக்கிட்டும், வெளையாடிகிட்டும் இருக்கணும் அவனுக்கு.
அதால அன்னனைக்கு நடந்ததெ நாலு பத்துக்கு மேல உக்காந்து குறிக்க ஆரம்பிச்சான்னா அதெ
முடிக்க அஞ்சு மணியும் ஆவும், அஞ்சரையும் ஆவும். அது வரைக்கும் இந்தப் புள்ளைங்களும்
உக்காந்துகிட்டு, "நாந் இந்த கட்டம் வரைக்கும் முடிச்சிட்டேங்கய்யா! அவ்வேம் அது
வரைக்கும் முடிச்சிட்டாங்கய்யா!"ன்னு சொல்லிட்டு அதெ சரியா விகடு குறிக்கிறானாங்றதையும்
உக்காந்து பாத்துக்கிட்டு கெடக்குமுங்க.
வாத்தியாரு சைக்கிள எடுத்துக்கிட்டு கெளம்புனாத்தாம்
வூட்டுக்குப் போகணும்ங்ற நெனைப்பே வரும் அந்தப் புள்ளைகளுக்கு. பள்ளியோடத்தைப் பூட்டிட்டு
சைக்கிள எடுத்துட்டு அதுல ஏறிக் கெளம்பிடவும் முடியாது. சைக்கிளு பின்னாடியே புள்ளைங்க
ஓன்னு சத்தத்ததெ போட்டுட்டு ஓடி வரும்ங்க. களிமங்கலத்து மரப்பாலம் வரைக்கும் நடைதாம்.
மரப்பாலம் வந்தாத்தாம் புள்ளைங்க ரோட்டு வழியா நேரா போவும்ங்க, விகடு சைக்கிள்ல மரப்பாலத்துல
ஏத்திக்கிட்டு பாதை மாறலாம். சைக்கிள்ல ஏறலாம்.
காலையில வர்றப்பயும் புள்ளைங்கள்ல பாதித்தாம்
பள்ளியோடத்துல போயி உக்காந்துக்கும். மிச்சதுங்க மரப்பாலத்துக்குப் பக்கத்துலயே நிக்கும்ங்க.
விகடு சைக்கிள்ல வர்றதப் பாத்துப்புட்டு அவ்வேங் கூடயே போகுறதுல அதுங்களுக்கு ஒரு
சந்தோஷம். சில நேரங்கள்ல ஊருகாரங்க அப்பிடி நிக்குற பசங்கள, "ஒஞ்ஞ வாத்தியார்ர
யாரும் வந்து தூக்கிட்டுப் போயிட மாட்டாங்க. கெளம்பி போயிட்டே இருங்க. அவருக்கு ன்னா
வழியா தெரியாது. வந்துடுவாரு போங்க. போயி பள்ளியோடத்துல நில்லுங்க!" அப்பிடின்னுச்
சொல்லி சத்தத்தெ போட்டுக் கெளப்பி வுடுவாங்க. நின்னுகிட்டு இருக்குற புள்ளைங்க அரை
மனசோடயும், கொறை மனசோடயும் கெளம்பிப் போவும்ங்க.
வூடு, பள்ளியோடம் இந்த ரெண்ட தவுர ஒலகத்துல
வேற எதுவும் இல்லேங்ற மாதிரி ஓடிட்டு இருந்த காலகட்டம் அது விகடுவுக்கு. வூட்டை வுட்டா
பள்ளியோடம்,பள்ளியோடத்தை வுட்டா வூடு. பள்ளியோடத்துல புள்ளைங்களுக்குப் பாடஞ் சொல்லிக்
கொடுத்தா, வூட்டுக்கு வந்தா அவ்வேம் பாட்டுக்குப் படிக்க ஆரம்பிச்சிடுவாம். புள்ளைங்களுக்கு
ஏத்த மாதிரி பாட்டுக, கதைகள, நகைச்சுவை துணுக்குகள சேகரம் பண்ணி வெச்சிக்கிறதுல விகடுவுக்கு
தனிப்பிரியம்.
'காட்டுப்பாக்கம் தாத்தாவுக்கு காடு போல
தாடியாம்'னு பாட ஆரம்பிச்சா போதும் அதுக்குப் புள்ளைங்க பண்ணுற அலும்பும், சேட்டையும்
தாங்க முடியாது. அதெ பாத்துப் பாத்துச் சிரிச்சு சிரிச்சே வவுறு புண்ணா போயிடும்.
அத்தோட 'பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்' பாட்டையும் பாடாம முடியாது. 'இந்தப் பெட்டி
தெரியுமா? இந்தப் பெட்டி தெரியுமா?'ன்னு ஆரம்பிக்கிறது மட்டுந்தாம் விகடு. அதெ புள்ளைங்க
வேக வேகமா பாடி முடிச்சிப்புடும்ங்க. இப்பிடி செம ஜாலியா போயிட்டு இருக்குற பாட்டுக்
கச்சேரியில, 'எங்கள் தேசம் இந்திய தேசம்'ன்னு ஒரு பாட்டை ஆரம்பிச்சு வுட்டாக்கா புள்ளைங்க
உணர்ச்சிமயமா பாடி முடிக்குங்க. அப்பிடி புள்ளைங்க உணர்ச்சிகரமா பாடி முடிக்கிறதோட,
'மண்ணில் வாழும் மனிதர்களே! மரங்களைக் காப்போம் வாருங்களேன்'ன்னு ஆரம்பிச்சுத் திரும்பவும்
உணர்ச்சிகரமான நெலைய உண்டு பண்ணிட்டு, 'குல்லானா குல்லானா பலே பலே குல்லானா'ன்னு ஆரம்பிச்சா
மறுபடியும் அலும்பும், சேட்டையும் வந்துப்புடும் பிள்ளைங்களுக்கு. இந்தப் பாட்டுகளையெல்லாம்
நித்தமும் பாடியாவணும். செரி இன்னிக்கு ஒரு நாளு பாட்டே இல்லாம பாடமாவே பாப்போம்னா
எதாச்சிம் ஒரு புள்ளை பாடம் போயிட்டு இருக்குற எடையில ஒரு பாட்டு வரியைக் கெளப்பி
விட்டுட்டு வரிசையா எல்லா பாட்டையும் பாடுறாப்புல பண்ணிப்புடும். அதெ தடுக்க முடியாது.
அப்பிடியே போயிட்டு இருக்குற பாடத்தெ நிறுத்தி வெச்சிப்புட்டு பாட்டுகள முடிச்ச பிற்பாடுதாம்
பாடத்தெ தொடருறாப்புல இருக்கும்.
அத்தோட புள்ளைங்க கதெ கேக்க ஆரம்பிச்சதுன்னா
நேரம் காலம் போறது தெரியாம கதை கேக்குமுங்க. "யய்யா! ஒரே ஒரு கதெய மட்டும் சொல்லிட்டு
அட்டைகளப் பாக்கலாமுங்கய்யா!"ங்றதுதாம் அதோட ஆரம்பம். "செரி! ஒரு கதெதான்னே!
அதெ சொல்லிப்புட்டா புள்ளைகளும் ஆர்வமா அட்டைகள படிக்கும்!"ன்னு ஆரம்பிச்சா போதும்.
ஒரு கதெ ஒம்போது கதையில போயி நிக்கும். ஒரு கதெய முடிச்ச ஒடனே, "இன்னும் ஒரே
ஒரு கதெ! அது மட்டுந்தாம்"ன்னு புள்ளைக கெஞ்சுறத பாக்க விகடுவால சும்மா இருக்க
முடியாது. "செரி! ஒண்ணுதானே!"ன்னு ஆரம்பிச்சி சமயத்துல அது பத்து பதினைஞ்சி
வரைக்கும் போயி நிக்கும். அதுல சில கதைங்கள்ல புள்ளைங்களுக்குத் திரும்ப திரும்ப சொல்லியாவணும்.
அதெ எத்தனெ தடவெ கேட்டாலும் புள்ளைங்களுக்கு ஆசை அடங்கவே அடங்காது.
குறிப்பா தெனாலிராமன் கதைகள்ல திருடனுங்கள
வெச்சி தோட்டத்துக்குத் தண்ணிப் பாய்ச்சுன கதெ, புரோகிதர்களுக்கு சூடு போட்ட கதெ,
அரண்மனையில கத்திரிக்கா திருடுன கதெ இதையெல்லாம் புள்ளைங்க திரும்ப திரும்ப சொல்லச்
சொல்லி நச்சரிக்குமுங்க. அதே போல பரமார்த்த குரு குதைகள்ல வர்ற குதிரை முட்டைக் கதெ,
ஆற்றைக் கடந்த கதெ இதையும் வாரத்துக்கு ஒரு தடவே சொல்லியாவணும். பஞ்ச தந்திர கதைகள
சொல்லிச் சொல்லி அடுத்தாப்புல இத்து என்னா கதைச் சொன்னீச்சுன்னா... அப்பிடின்னு
நிறுத்தி வெச்சிப்புட்டா போதும், மறுநாளு வந்த ஒடனே அந்தக் கதைய சொன்னாத்தாம் போச்சுன்னு
நிக்குமுங்க புள்ளைங்க.
சரியா மூணு மணி ஆச்சுன்னா புள்ளைங்க மரத்தடிக்குப்
போகுறதுலயே குறியா நிக்குமுங்க. அந்த நேரத்துலத்தாம் விகடு ஒரு கண்டிஷனெ வைப்பாம்.
வாய்பாட அவ்வேம் சொல்றபடியெல்லாம் சொன்னாத்தாம் மரத்தடிக்கு போவலாம்பாம். அதுக்காக
புள்ளைங்க அவ்வேம் சொல்றபடியெல்லாம் சொல்லும். வாய்பாட்டைத் தலைகீழா சொல்லணும்,
ரெட்டைப் படையில சொல்லிக்கிட்டே கீழெ எறங்கிக்கிட்டு, ஒத்தப் படையில சொல்லிக்கிட்டு
மேல ஏறணும், அஞ்சுல ஆரம்பிச்சி ஒண்ணுக்குப் போவணும், பத்துல ஆரம்பிச்சி ஆறுக்குப்
போவணும், பதினைஞ்சில ஆரம்பிச்சி பதினொண்ணுக்குப் போவணும்னு வாய்பாட பிரிச்சி மேயுறாப்புல
பண்ணிப்புடுவாம். இந்தப் பயிற்சியால புள்ளைங்க வாய்பாட்ட எந்த எடத்துல கேட்டாலும் டக்
டக்குன்னு சொல்லுமுங்க. கணக்குப் போடுறதுல புள்ளைங்க ஒவ்வொண்ணும் இதால கில்லிகளா
இருக்குமுங்க.
அதோட வுடாம திடீர்ன்னு கதை சொல்லிட்டு
இருக்கிறப்பவும், பாட்டே பாடிட்டு இருக்கிறப்பவும் அதெ நிறுத்திப்புட்டு "நூத்துல
ஒண்ண கழிச்சா எம்மாம்?" அப்பிடிம்பாம் விகடு. அதுக்கு விடையச் சொன்னாத்தாம் கதெம்பாம்,
பாட்டும்பாம். புள்ளைங்க சரியா விடையச் சொல்ற வரைக்கும் வுட மாட்டாம். அதெ சரியா சொன்னா
கொஞ்சம் நேரம் பாட்டையும், கதையையும் ஓட வுட்டு, "ஆயிரத்துல எத்தனெ நூறு?"ம்பாம்.
அதுக்குப் பதிலச் சொன்னாத்தாம் கதையும், பாட்டும் தொடரும்பாம். அதுக்கு விடை தெரியலைன்னா,
"பத்து நூறு ஆயிரம்! பறந்து வா சீக்கிரம்!"ன்னு அதுக்கு ஏத்தாப்புல சொல்லிட்டு
இருக்குற பாட்டையும், கதையையும் விட்டுப்புட்டு ஒரு பறவை கதைய ஆரம்பிச்சிச் சொல்லிப்புட்டு,
"இப்போ சொல்லுங்க ஆயிரத்துல எத்தனெ நூறு?"ம்பாம்.
அத்தோட காலையில வகுப்பை ஆரம்பிக்கிறப்ப
அஞ்சு வார்த்தைக தமிழ்லயும், ஆங்கிலத்திலயும், ரெண்டு வாக்கியம்ங்க தமிழ்லயும் ஆங்கிலத்திலயும்
அஞ்சு தடவெ சொல்லுவாம். அதெ புள்ளைங்களும் அஞ்சு தடவெ திருப்பிச் சொல்லணும். அதெ
வார்த்தைகளையும், வாக்கியங்களையும் மதியானம் சாப்பாட்டு பெல்லுக்கு முன்னாடி அஞ்சு
தடவே, சாப்புட்டு வந்து ஒண்ணேகாலுக்கு அஞ்சு தடவே, பள்ளியோடம் வுட்டு போறதுக்கு மின்னாடி
அஞ்சு தடவென்னு சொல்ல வெச்சிடுவாம். அந்த வார்த்தைகள மறுநாளு மத்தியானம் ஒண்ணரை மணி
வாக்குல டிக்டேஷனா எழுத வெச்சி திருத்திப்புடுவாம்.
மூணு மணிக்கு மரத்தடி வகுப்புல பாட்டும்,
கதையும் போயிட்டு இருக்கிறப்பவே மூணரை மணிக்கெல்லாம் ஒவ்வொரு புள்ளையா எழுந்திரிச்சி
அது அன்னைக்கு அட்டையில என்ன படிச்சதுவோ அதெ எல்லாருக்கும் பின்னூட்டம் மாதிரி சொல்லியாவணும்.
அப்பிடி ஒரு பயிற்சியும் தெனமும் நடக்கும். நாலு மணி ஆச்சுன்னா திங்கட் கெழமைன்னா ஒளவையாரோட
ஆத்திசூடி, செவ்வாய் கெழமைன்னா பாரதியாரோட ஆத்திசூடி, புதன் கெழமைன்னா பாவேந்தரோட
ஆத்திசூடி, வியாழக் கெழமைன்னா ஒளவையாரோட கொன்றை வேந்தன், வெள்ளிக் கெழமைன்னா உலகநாதப்
புலவரோட உலகநீதிய சொல்லியாவணும். இதெ தெனமும் பயிற்சி பண்ணதுல ஒளவையாரு ஆத்திசூடின்னு
எடுத்து வுட்டா போதும் புள்ளைங்க எல்லாத்தையும் கடகடன்னு சொல்ல ஆரம்பிச்சு உலகநாதரோட
உலகநீதியல வந்து முடிச்சிடும்ங்க. அவ்வளவையும் எப்பிடி புள்ளைங்க ஞாபவம் வெச்சுக்குதுன்னு
நெனைக்கிறப்ப விகடுவுக்கு ஆச்சரியமா இருக்கும். அவனெ கேட்டாலும் எடையில ஒண்ணு நிச்சயம்
வுட்டுப்புட்டுத்தாம் சொல்லுவாம். இல்லேன்னா மாத்தி மாத்தித்தாம் சொல்லுவாம். புள்ளைங்க
அப்பிடிய அச்சரம் பிசகமா சொல்லும் பாருங்க. அதெல்லாம் ஒலக அதிசயந்தாம். எதெ சொன்னாலும்
கப்புன்னு பிடிச்சிக்கிற புள்ளைங்க மனசோட கம்ப்யூட்டரு மெமரி கூட போட்டி போட முடியாதுதாம்.
*****
No comments:
Post a Comment