4 Feb 2020

வலுத்தவன் சொல்றதெல்லாம் வேதவாக்கு!



செய்யு - 348

            பள்ளியோடத்தச் சுத்தி காம்பெளண்டு சுவரு தரைமட்டதிலேந்து ஆறடி உசரத்துக்கு நிக்குது. ரெண்டே நாள்ல பைல் பெளண்டேஷன போட்டு பில்லரை எழுப்பி கல்ல வெச்சு கட்டி பூச்சு மட்டும் பூசாமா முளைச்சு நிக்குறாப்புல நிக்குது, நேத்து பேஞ்ச மழையில இன்னைக்கு மொளைச்ச காளான் கணக்கா. காத்தால எட்டே முக்காலுக்கு விகடு வர்ற நேரத்துல பிரசிடெண்டு உதயச்சந்திரன் நிக்குறாரு. "என்னம்பீ! இப்ப சந்தோஷந்தானே?"ன்னு கேக்குறாரு.
            எப்பிடி இது நடந்துச்சுங்றது மாதிரி பாக்குறாம் விகடு.
            "எல்லாம் பீடீவோட ஏற்பாடு. இதெ பத்தி ரண்டு மாசமா பேசிட்டுத்தாம் இருந்தாரு. கொஞ்சம் ஆறப் போட்டு டக்குன்னு முடிக்கணுங்றதுக்காகத்தாம் ஒண்ணுமே சொல்லாமலே இருந்தாரு. சேர்மனுங்க, எம்.எல்.ஏ.க்க எல்லாரும் பள்ளியோடத்து வெவகாரத்துல எந்தத் தலையீடும் இல்லாம சரியா செஞ்சுப்புடுங்கன்னு சொல்லிருக்காங்க. பாத்தாரு பீடீவோ வேலய முடிச்சுக் கொடுத்துட்டாரு!"ங்றாரு உதயச்சந்திரன்.
            "ரண்டே நாள்ல எப்பிடின்னு ஆச்சரியமாத்தாம் இருக்கு. வழக்கமா இந்த மாதிரி வேலைய எல்லாம் இழுத்துப் போட்டுல்ல கான்ட்ராக்ட்காரவுங்க செய்வாங்க. அதாங் யோஜனையா இருக்கு!"ங்றாம் விகடு.
            "கவர்மெண்டு ஆளுங்க நெனைச்சா ரண்டு நாளு என்னாம்பீ சித்த நேரத்துல காரியத்தெ முடிச்சிடுவாங்க. அததுக்குன்னு ஆளுங்க தெரிஞ்சவங்க அவங்களுக்கு இருக்காங்க. ஆர்குடியில சிந்தாமணி ரெடிமிக்ஸ் தெரியுமுங்களா? காங்கிரீட் போடுறதுக்குல்லாம் லாரி மேரி வெச்சுக்குட்டு அதுல கலவையெ சுத்த வெச்சுகிட்டு போகுமுங்களே. அப்பிடி வண்டிக சிந்தாமணி ரெடிமிக்ஸ்னு போட்டு இருவதுக்கு மேல ஓடுது. அதெ வெச்சிருக்கிறவரு மாப்பைய்யா. ஆளு பெருங் கையி. பெரிய பெரிய பாலமுல்லாம் கான்ட்ராக்ட் எடுத்து பண்ணுறவரு. அவருகிட்ட எந்நேரத்துக்கும் ஆளுங்க இருந்துகிட்டே இருக்கும். அவர்ரத்தாம் பிடிச்சிருக்காரு பீடீவோ. இன்ன மாரி இன்ன மாரி பிரச்சனென்னு அவருகிட்ட பேசி இன்ன மாரி இன்ன மாரி சட்டு புட்டுன்னு செஞ்சிப்புடணும்னு சொல்லிருக்காரு. ஆளுங்க மொதக்கொண்டு சாமாஞ் செட்டுக வரைக்கும் அதாச்சி கல்லு, மணலு, சல்லி, கம்பி, சிமிண்டுல்லாம் ரண்டு லாரில வந்து எறங்குனதுதாங். எடத்தெ மார்க் பண்றதுக்கு இருவது நிமிஷம், ரண்டே மணி நேரத்துல அங்கங்க எட்டடி எட்டடி கணக்கு பைல் பெளண்டேஷனு முடியுது. அதுக்கு எடையிலயே டக்குன்னு கடவு பறிச்சி பெல்ட்ட போட்டு உடனே கல்ல வெச்சி அடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆளுங்க சுதாரிச்சி வர்றதுக்குள்ள வேல ஆயிடுச்சி. அதுக்குப் பெறவுதாம் என்னன்னு பாக்குறதுக்கு ஒண்ணுந் தெரியாதது போல நாம்ம வர்றேம். வந்தா கீழத்தெரு ஆளுங்க சுத்திக்கிட்டாங்க."ன்னு சொல்லி நிப்பாட்டுறாரு உதயச்சந்திரன்.
            "ஒண்ணும் பெரச்சனையாயிடலல்ல?"ங்றாம் விகடு.
            "எல்லாம் நம்ம ஏற்பாடு மேரி ஆளாளுக்கு நம்ம மேல பாயுறானுங்க. நாம்ம சொல்லிப்புட்டேம். பீடீவோ சேர்மேனுங்க, எம்.எல்.ஏ.கிட்ட கலந்துகிட்டு செய்யுறாரு. கான்டராக்ட் மாப்பைய்யான்னு சொன்னதுமே ஆளாளுக்குப் பம்மிட்டானுங்க. அவுனுங்க கட்சி ஆளாச்சே மாப்பைய்யா. நாளைக்கி எதாச்சிம் காரியம்னா, சிபாரிசுன்னா அவருகிட்டல்ல போயி நிக்கணும். இவனுங்கோ நடக்குற வேலைய தடுக்குறானுவோன்னு மாப்பையாவுக்குத் தெரிஞ்சா போதும் நடக்குற கதெ வேற. பீடீவோ அஞ்ஞத்தாம் பாத்து போட்டுருக்காரு முடிச்சே. பயலுங்க மெல்லவும் முடியாம, துன்னவும் முடியாம அவனுங்க மொகம் போன போக்க பாக்கணுமே! யம்பீ! நாம்ம ஒங்களுக்கு ஆளு வுட்டு வரச் சொல்லலாம்னுத்தாம் பாத்தேம். ஒங்களப் பாத்து விகாரஸ் ஆயிடுவானுவோளோன்னு விட்டுப்புட்டேம்."ங்றாரு உதயச்சந்திரன்.

            "நாம்ம கூட அவ்வளவுதாம். காரியம் ஆகாதுன்னு நெனைச்சிட்டு இருந்தேம். ஆன வரைக்கும் சந்தோஷமுங்க!"ன்னு கையெடுத்துக் கும்புடுறாம் விகடு.
            "அதெப்பி யம்பீ! அதத நேரம் பாத்துச் செய்யணும். அததுக்கு உள்ள ஆளுகள வெச்சிச் செய்யணும்பீ! இவனுங்க ஆளுக்குத் தகுந்தாப்புல பேசுவானுங்க. ஒஞ்ஞகிட்டயும், நம்மகிட்டயும் ன்னா சீறு சீறு சீறுனாங்க. மாப்பைய்யான்னு பேர்ர கேட்டதுமே பம்மிட்டானுங்க. ஒரு பயலும் ஒண்ணுஞ் சொல்லல. எஞ்ஞ வூட்டுக்குக் குறுக்கால வேணும்னாலும் சுவத்த வையுங்கன்னு சொல்லுவானுங்க போலருக்குப் படுபாவிப் பயலுங்க. வலுத்தவங் சொல்றதுதாங் யம்பீ எடுபடுது. சாதிச்சுப்புட்டீங்க யம்பீ!" அப்பிடிங்கிறாரு உதயச்சந்திரன்.
            "செஞ்சது நீஞ்ஞ, பீடீவோ. இதுல நாம்ம ன்னா சாதிக்கிறது? ஒங்களோட சாதனைத்தாம் இது. வுட்ட எடத்தெ மீட்குறதுங்றது சாமானியப்பட்ட காரியமில்லே. நாமளே அந்நியங் கையில நாட்டைக் கொடுத்துட்டு மீட்குறதுக்கள்ள எரநூறு வருஷத்துக்கு மேல ஆயிடுச்சும்பாங்க. நம்ம பள்ளியோடத்துக்குப் பரவாயில்ல. ரொம்ப சீக்கிரமே மீட்டாச்சு."ங்றாம் விகடு.
            "அப்பிடில்லம்பீ! பீடிவோ சொன்னாரு! சின்ன பையன்னுனாலும் நீஞ்ஞ உறுதியாவும், தெடமாவும் நின்னதாவும், கோவமோ வேகமோ காட்டாம எது செஞ்சிக் கொடுத்தாலும் சரிதாம்னு நீஞ்ஞ அவர்ர நம்புனதெ ரொம்ப சிலாகிச்சுச் சொன்னாரு. எல்லாத்துக்கும் மேல பள்ளியோடத்து எடம்னா பீடிவோல்ல பொறுப்பு. அவருல்லா அதுக்குச் சொந்தக்காரரு. எடத்தே அப்பிடிச் சமானியமா வுட்டுப்புடுவாரா? ஆனா நீஞ்ஞ பத்திரத்தெ கண்டுபிடிச்சிச் சொல்லிப்புட்டீங்க. நெறைய பள்ளியோடத்துல கொடுத்த பத்திரம் யில்ல. எடமும் எதுவும் தெரியலன்னு நிக்குறாங்கன்னு பீடீவோ சொல்லிட்டு வருத்தப்படுறாரும்பீ! இனுமே எதுனாச்சி பெரச்சனைன்னா மாப்பையாங்கற பேர்ர சொல்லுங்க. பயலுங்க தெறிச்சி ஓடிப்புடுவானுவோ!"ங்றாரு உதயச்சந்திரன்.
            மாப்பைய்யா பெரிய ஒப்பந்தக்காரரு. இத்து மாதிரி சின்ன சின்ன வேலையிலல்லாம் எறங்க மாட்டாரு. பீடீவோ சொன்னதுக்காக எறங்கியிருக்காரு. அத்தோட கட்டப்பஞ்சாயத்துக்காரரு வேற. எத்தனையோ பெரச்சனைகள வம்படியா முடிச்சிருக்காரு. அவரு மேல ஏகப்பட்ட கேஸூங்க கோர்ட்டுல இருக்கிறதாவும் பேசிப்பாங்க. இத தவித்து ரெண்டு மூணு பள்ளியோடத்த வேற நடத்திக்கிட்டுக் கல்வித்தந்தைங்ற பேர்ர வேற வாங்கி வெச்சிருக்காரு. இப்போ சமீபத்துல ஒரு காலேஜைக் கட்டிக்கிட்டு இருக்கிறதாவும் கேள்வி.
            "அது செரி! நீஞ்ஞ ஒரு கட்சி. மாப்பையா ஒரு கட்சி. ரண்டு கட்சியளும் எதிரும்புதிருமால்ல நிப்பீங்க! ஒங்களுக்கு ஒண்ணும் குத்தலு இல்லீங்களே!"ங்றாம் விகடு.
            "அதெல்லாம் ச்சும்மா மக்களுக்காகம்பீ! யாரு ஆட்சிக்கு வந்தா ன்னா? மாப்பையாவுக்கு வர்ற கான்ட்ராக்டு வந்துகிட்டுத்தாம் இருக்கும். எல்லா கட்சியிலயும் அவரோட சாதி ஆளுங்க இருக்காங்கம்பீ! அதெ வெச்சிப் பிடிச்சிடுவாரும்பீ! அதெல்லாம் ச்சும்மா பேருக்கு அரசியலுக்குத்தாம்பீ! பணம் வெச்சிருக்கிறவேம்லாம் ஒரு சாதிம்பீ! அவனுங்களுக்கு ஆளுங்கட்சி எதிர்கட்சின்னுல்லாம் வித்தியாசமில்ல. எந்தக் கட்சி வந்தாலும் அவனுங்களுக்கு வர்ற கான்ட்ராக்ட் வந்துகிட்டுத்தாம் இருக்கும். பெருங்கையீங்க. எந்த கட்சிக்கார்ரேம் எம்மாம் காசிய கேட்டாலும் ச்சும்மா தூக்கி வுட்டு எறிவானுங்கம்பீ! இதுல ஆளுங்கட்சி, எதிர்கட்சின்னு ரண்டுக்குமே பணத்தெ வாரி எறைக்குற ஆளுங்கல்லாம் இருக்காங்கம்பீ! அதெ பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருக்கலாம்பீ! நாறில்லா போயிடும். நாளு கணக்குப் பத்தாது அதெ பேசி முடிக்க."ங்றாரு உதயச்சந்திரன்.
            "ரொம்ப நன்றீங்க!"ங்றாம் விகடு.
            "பரவால்லம்பீ! நமக்குத்தாம் இனுமே இஞ்ஞ ஒத்த ஓட்டுக் கூட விழாத அளவுக்கு ஒரு காரியத்தெ பண்ண வெச்சப்புட்டீங்க. பாத்துக்கிடுவோம் வுடுங்க. அது செரி! இந்தக் காரியத்தெ பண்ணாம இருந்தாலும் ஓட்டைப் போட மாட்டானுவோங்றது வேற விசயம். நல்ல காரியம் நடந்த வரைக்கும் சரித்தாம் போங்க!"ங்றாரு உதயச்சந்திரன்.
            "வேற ஊர்ல ஒண்ணும் கொதிப்பு யில்லல்ல?"ங்றாம் விகடு.
            "ன்னா கொதிப்பு போங்க! எத்துவா இருந்தாலும் சரித்தாம் மாப்பைய்யான்னு அவரோட பேர்ரச் சொல்லுங்க. கதெ முடிஞ்சிது. எவனாச்சிம் வந்து கேட்டாக்கா, மாப்பையாவப் போயி பாத்தேன்னு ஒரு பிட்ட போட்டு வுட்டுப் பாருங்க. ஒரு பயெ கிட்டக்க நேருங்க மாட்டாம். ஒங்களுக்கும் மாப்பையாவுக்கும் ஏதோ ஒரு லிங்கு இருக்குன்னு நெனைச்சிகிட்டு இருக்கானுவோ கீழத்தெருகார பயலுவோ. அப்பிடிக்கே நெனைச்சிகிட்டு கெடக்கட்டும் வுடுங்க!"ன்னு சொல்லிட்டு சிரிக்கிறாரு உதயச்சந்திரன்.
            "நாம்ம அவர்ர நேர்ல கூட பாத்ததது இல்லீயே! அவர்ர பத்தி கேள்விப்பட்டிருக்கேம். அவ்வளவுதாங்!"றாம் விகடு.
            "அதுக்கில்ல. இப்பிடில்லாம் செல ஷோக்க பண்ணித்தாம் காரியத்தெ பண்ண வே்ணடிக் கெடக்கு. பெறவு, ரண்டு வாரத்துக்குள்ள இதுக்குப் பூச்செல்லாம் பூசி பெயிண்டுல்லாம் அடிச்சிக் கொடுத்துப்புடுவாங்க. மின்னாடி இருக்கிற வழிக்கு கேட்டையும் போட்டுக் கொடுத்துப்புடுவாங்க."ங்றாரு உதயச்சந்திரன்.
            "மெதுவா பண்ணட்டும். ஒண்ணும் அவசரமில்ல. இவ்வளவு பண்ணவங்க. அதெ பண்ண மாட்டாங்களா?"ங்றாம் விகடு.
            "மெலுவால்லாம் யில்ல. ரண்டு வாரத்துக்குள்ள முடிஞ்சிடும் எல்லாம். செரி நமக்கும் ஆவ வேண்டிய காரியம் கொஞ்சம் கெடக்கு. அதாங் ஒங்களப் பள்ளியோடத்துலப் பாத்து சொல்லிப்புடுவேம், அப்பிடியே ஒரு மேம்பார்வையும் பாத்துப்புடுவேம்னு வந்தேம். கெளம்புறேம்பீ!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புறாரு உதயச்சந்திரன்.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...