செய்யு - 362
மாலிக்கோட முன்னவங்க ராமநாதபுரத்து ஆளுங்க.
அப்போ ஒரு காலத்துல அங்க உண்டானப் பஞ்சத்தத் தீக்க தஞ்சாவூரு ஜில்லா பக்கம் வந்தவங்க.
பெறவு இங்கயே நெரந்தரமா தங்கிட்டாங்க. இருந்தாலும் அவங்ககுள்ள கல்யாணம் காட்சின்னா
அது ராமநாதபுரத்துலத்தாம். இங்க அடியக்கமங்கலம், கூத்தாநல்லூருன்னு அவருக்குச் சொந்தப்
பந்தங்க இருந்தாலும் பூர்வீக சொந்தங்க எல்லாம் ராமநாரபுரத்து வகையறாத்தாம்.
சத்யம் கம்ப்யூட்டர்ஸால மார்க்கெட்டுல
வுட்ட ஒண்ணேகால் கோடிக்கு இருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பங்கையெல்லாம் வித்தா அது
முப்பது லட்சம் சொச்சத்துக்குத்தாம் தேறிச்சு. அந்த அளவுக்கு அவரு வாங்குன வெலையிலேந்து
அடி வாங்கிடுச்சிப் பங்கு. பங்குச் சந்தையில டெலிவரி எடுக்குற பங்கெ T+2 ங்கற முறையில
கணக்குத் தீர்த்தாவணும். அதாவது டிரேட் நடந்த நாள்லேந்து ரண்டு நாளு அவகாசம் உண்டு.
அதுக்குள்ள பணத்தெ பொரட்டிக் கட்டியாவணும். இல்லன்னா சட்டப்படியான நோட்டீஸ் வந்தாயிடும்.
ஆயிஷா நாச்சியா மெளத் ஆன துக்கம் ஒரு பொறம்னாலும், நோட்டீஸ விட்டுப்புட்டா அது வேற
அசிங்கங்ற நெனைப்பு இன்னொரு பொறம். மாலிக்குக்கு மைனர் அட்டாக்கா மறுக்கா மறுக்கா
வர ஆரம்பிச்சிடுச்சு. கெழக்குக் கோட்டையாருக்கு மாலிக் ஒரு முக்கியமான ஆளு. கெழக்குக்
கோட்டையாருக்கு ஒரு ஆள பிடிச்சிப் போயிட்டா அதுக்காக எந்த அளவுக்கு வேணாலும் எறங்கி
வந்து உதவிப் பண்ணுவாரு. கடைசியில கெழக்குக் கோட்டையாருதாம் மிச்ச சொச்சம் கட்ட வேண்டிய
தொண்ணூத்து லட்சத்துக்கு மேல இருந்த பணத்தெ கட்டுனாரு.
மாலிக்கோட மருமவ்வேம்ங்க ரண்டு பேரு துபாயில்
இருக்காங்களே, சிங்கப்பூர்ல இருக்காங்களே சூப்பரு மார்க்கெட்டுல்லாம வெச்சிக்கிட்டுன்னு
கேக்காத ஆளுங்கக் கெடையாது. ஒரு மனுஷனுக்குக் கெட்ட நேரம் மட்டும் ஒண்ணு சேந்துகிட்டு
வரும்னு சொல்லுவாங்களே அப்பிடியாடிச்சி மாலிக்கோட நெலமை. அவரோட நேரம் பாருங்க துபாய்லயும்,
சிங்கப்பூர்லயும் சூப்பர் மார்கெட்டு வெச்சிருந்த அவுங்களோட மருமவ்வேங்களோட நெலமை
திடீர்னு நொடிச்சிப் போயிடுச்சு. அதென்ன திடீர்னு நொடிச்சிப் போயிடுச்சின்னா காரணம்
உலகப் பெரு மந்தம்னு ஏதேதோ பொருளாதார விசயங்களா சொல்றாங்க. இதுக்கு மேல அவுங்க அங்க
இருந்தா தோதுபட்டு வாராதுன்னு அவுங்க கெளம்பி வந்து ராமநாதபுரத்துல தங்கிட்டதா கேள்வி.
அவரோட மருமவ்வேனுங்க ரண்டு பேரும் ராமநாதபுரத்து ஆளுங்க. எத்தனெ நாளு ராமநாதபுரத்துல
ச்சும்மா தங்கிக் கெடக்க முடியும்? அதால இங்க கூத்தாநல்லூருக்குக் கெளம்பி வந்து மாமனாரோட
தங்கி எதாச்சிம் யேவாரத்தெ ஆரம்பிச்சிப் பாக்கலாம்னா, நெலமையப் பாருங்க, இங்க மாமியாக்காரவுங்க
மெளத்தாயி, மாமனாரு உசுருக்குப் போராடிட்டுக் கெடக்கறாரு. அவங்களால ஒதவ முடியாத நெலையிலத்தாம்
கெழக்குக் கோட்டையாரு உதவுறாரு.
மாலிக் ரொம்ப பெரிய மனுஷம். சின்ன ஒதவிக்கே
பெரிசா பண்ணுவாரு. துரும்ப கிள்ளிக் கொடுத்தாலும், அதெ மனசுல வெச்சிக்கிட்டு நேரம்
வர்றப்போ தங்கமா அள்ளிக் கொடுப்பாரு. அவரோட மருமவ்வேங்காரங்களும் அவர விட பெரிய
மனுஷங்களா இருந்தாங்க. கஷ்டத்துல ஒதவியா இருந்த கெழக்குக் கோட்டையாருக்குத் தங்களோட
பேர்ல இருந்த பங்களாக்கள எழுதிக் கொடுத்ததோட, அவுங்க மனைவிமாருகிட்ட கெடந்த அத்தனெ
நகைகளையும் அவருகிட்டயே கொடுத்துச் சமம் பண்ணப் பாத்தாங்க பாருங்க, கெழக்குக் கோட்டையாரு
கண்ணுல தண்ணி வந்திடுச்சு. சாதாரண ஆளா கெழக்குக் கோட்டையாரு, பேருக்கு ஏத்த மாதிரி
கூத்தாநல்லூர்ல கோட்டைக் கட்டிட்டு ராசா மாதிரிக்கி இருக்குற ஆளு. அவரு கண்ணுலயே தண்ணி
வந்திடுச்சுன்னா நம்மள வுட ஒரு படி உசத்தியா போயிட்டிங்களடா மக்கான்னு அதுக்கு அர்த்தெம்.
ஒரு வழியா மருமவ்வேனுங்க, மகளுங்க எல்லாத்தும் சேர்ந்து கொஞ்ச நாளு கூத்தாநல்லூர்ல
இருந்து மாலிக்கைச் சரிபண்ணிக்கிட்டு ஜாகையா அவுங்க எல்லாரும் ராமநாரபுரத்துக்கே போயிட்டாங்க.
கெழக்குக் கோட்டையாரு எவ்வளவோ தடுத்துப் பாத்தாரு, "நாம்ம நெஞ்ச நிமுத்தி வாழ்ந்த
மாவட்டம் திருவாரூ. வாழ்ந்து கெட்ட மனுஷப் பயலா நம்மாள வாழ முடியா. எஞ்ஞ பஞ்சம் பொழைக்கன்னு
ஊர வுட்டு வந்தோமோ, அதெ விட்டுப்புட்டு எங்ஞ பொழைக்க முடியாம போச்சுன்னு வுட்டுப்புட்டு
வந்தோமே அதே ராமநாதரத்துக்குப் போயிடுறேங்"ன்னு பிடிவாதமா நின்னு கெளம்பிட்டாரு.
இது ஒரு கதெ இப்பிடியாச்சா. இன்னொரு கதெ
கூத்தாநல்லூரு சின்னபள்ளிவாசல் தெருவுல சாகிப் தாளகம் வெச்சிருந்தாரே விகடுவோட சோக்காளிகள்ல
ஒருத்தரான காதர் பாட்ஷா. அவரு கூத்தாநல்லூர்ர வுட்டே காலியாவுற அளவுக்கு நெலமெ ஆகிப்
போயிடுச்சு. அவரும் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பங்குகள வாங்குன பெருங்கையில ஒருத்தரா இருந்தாரு.
அவரு பாஞ்சு லட்ச ரூவாய்க்கு வரைக்கும் வாங்கிப் போட்டிருந்திருக்காரு. வெலை எறங்கிப்
போயிருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸ வித்த பிற்பாடும் அவரு பன்னெண்டு லட்ச ரூவாய் வரைக்கும்
கட்ட வேண்டியதா இருந்துச்சு. செட்டில்மெண்ட்டு நாளெ கடந்த பின்னும் அவரு பணத்தெ கட்டாம
கெடந்தாரு. அந்த நாளைக் கடந்து யாருக்கும் மாப்புக் கொடுக்க மாட்டாங்க தொண்டாமுத்தூரு
ஹெட் ஆபீஸ்ல. அதெ கடந்தும் ஒரு வாரம் வரைக்கும் அவருக்கு மாப்புக் கொடுத்துப் பாத்தாங்க.
காதர் பாட்ஷா அப்டில்லாம் எதுலயும் அகலக்காலு
வெச்சி மாட்டிக்கிற ஆளு கெடையாது. ரொம்ப நெதானமான ஆளு. ரொம்பச் சரியா சிந்திக்கிறவரு.
ஆனா பங்குச் சந்தையில தெனசரி யேவாரம் பண்ண ஆரம்பிச்சா இருக்குற நெதானமும், சரியா சிந்திக்குற
சிந்தனையும் போற எடம் தெரியாது. விகடு இருந்த வரைக்கும் அப்படி தெனசரி யேவாரம் பண்ணாம
அப்பிடி இப்பிடின்னு சமாளிச்சிட்டாம். அப்பிடி ஒரு சங்கதி இருக்குற சேதியே தொண்டாமுத்தூரு
கேப்பிட்டல்ல வாடிக்கை பண்ற யாருக்கும் தெரியாம பாத்துக்கிட்டாம். எப்போ அபீஸூ அவ்வேம்
கைய விட்டப் போனுச்சோ அப்பயே நெலமை மாறிடுச்சு. அடிக்கடி மீட்டைப் போட்டு தொண்டாமுத்தூரு
கேப்பிட்டல்ல எல்லாரையும் தெனசரி யேவாரிங்களா மாத்திப்புட்டாங்க. தெனசரி யேவாரத்தெ
பத்தி நாம்ம அளவுக்கு அதிகமாவே பாத்துட்டோம் இல்லையா. அத்து மொதல்லா லாவத்த கொஞ்சம்
கொஞ்சமா கொடுத்து பெறவு பெரிய அளவுல பிடுங்கிப்புடும்.
தெனசரி அம்பது, நூறுன்னு அதுல சம்பாதிக்க
ஆரம்பிச்சி, ஐநூத்து, ஆயிரம்னு சம்பாதிக்க ஆசெ வந்து, அதுவும் பத்தாதுன்னு பத்தாயிரம்
லட்சம்னு ஆசெ பெரிசாயி, அதுவும் பாத்ததுன்னு லட்சம் கோடிய நோக்கிப் போயிடும். அப்பிடி
பாக்க நெனைக்குற லாவம் பெரிசா போவப் போவ பண்ற யேவாரத்தோட அளவும் பெரிசாவணும். தெனசரி
யோவரத்துல லட்ச ரூவாயிக்கு பங்கெ வாங்கி வித்தாத்தாம் ஆயிரத்துல லாவத்தப் பாக்க முடியும்.
கோடி ரூவாயிக்கு பங்கே வாங்கி வித்தாத்தாம் லட்சத்துல லாவத்த பாக்க முடியும். அதுக்கு
பேருக்கு ஒரு தொகைய மார்ஜினல் லிமிட்டுக்காக வாங்கிக்கிட்டு ஆபீஸ்லேயும் தெனசரி யேவாரத்த
இஷ்டத்துக்கு பண்ண லிமிட்டைக் கொடுப்பாங்க. தெனசரி யேவாரம் அதிகமா நடக்க நடக்கத்தானே
அவுங்களுக்குக் கமிஷன் கெடைக்கும். நெலமை எப்பயும் தெனசரி யேவாரத்துல லாவத்த மட்டுமே
கொடுக்கும்னு சொல்லிட முடியாது. லேமன் பிரதர்ஸ் திவாலு, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு
மாதிரி எதாச்சிம் நடந்தா போதும் பங்குச் சந்தையை சில மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்குற
அளவுக்கு சந்தை சரிய ஆரம்பிச்சிடும். இது எந்த நாளுல்ல எந்த விடியல்ல நடக்கும்னு யாருக்குத்
தெரியும்? இது தெரியாம புரியாம மொத நாளு பெரிய அளவுல பங்கெ வாங்கிப் போட்டு மறு நாளு
விப்போம்னு நெனச்சா அவ்வளவுதாங். நடுவானத்துல கோளாறு ஆயிப் போன விமானத்துல பயணிக்கிறாப்புல,
நடுக்கடல்ல ஓட்டை வுழுந்த கப்பல்ல பிரயாணிக்கிறாப்புல ஆயிடும்.
காதர் பாட்ஷாவுக்குக் கொடுத்த செட்டில்மெண்ட்
நாளு பத்து நாளு கடந்த பிற்பாடு அவரு ஒரு நாளு செக்கைப் போட்டுக் கொண்டு கொடுத்திருக்காரு.
கொடுத்தவரு அவ்வளவுதாங் அத்தோட ஊரைக் காலி பண்ணிட்டாரு. அவரு போட்டுக் கொடுத்த
செக்குல இருந்த பணம் எப்பிடி வந்துச்சுன்னா சாகிக் தாளகத்தெ வித்து, அவரு குடியிருந்த
எடத்தெ வித்து, அவரோட வூட்டுக்காரவுங்க கழுத்துல, கையில கெடந்த நகைய வித்து வந்தது.
அவரு கையில இருந்த பொழப்பு போயிடுச்சு. கையில இருந்த காசு, நகை எல்லாம் போயிடுச்சு.
அவரு பெரியாரு ஆளுங்றதால ஊருக்குள்ள எதிர்ப்பு வேற. ஜமாத்துக்கு எதிரான ஆளுன்னு வேற
அவருக்கு ஒரு மொகம் உண்டாயிப் போயிடுச்சி. அதால அவருக்கு யாரும் மொகங் கொடுத்து
உதவல. அவரு ஊரைக் காலிப் பண்றதே ஒரு கொண்டாட்டத்தெ போல கொண்டாடினாங்றதுதாம் உண்மை.
அவரு குடும்பத்தோட திருச்சிப் பக்கம் துவாக்குடியில குடியேறுனதா கேள்வி.
இத்து ரெண்டு கதை ஆச்சா! மூணாவது கதெ லெனினோடது.
அவருதான தொண்டாமுத்தூரு கேப்பிட்டலு கூத்தாநல்லூர பிராஞ்சோட மேனேஜர். தலைமறைவா ஆனவரு
நாலைஞ்சு நாளு கழிச்சுத்தாம் தலையக் காட்டுனாரு. அதாங் அவரு கடைசியா தலையக் காட்டுனது.
கலியாணத்துல பொண்டாட்டிக்காரிப் போட்டுக்கிட்டு வந்த அத்தனை நகையையும் வித்து, நாகர்கோயிலுக்குப்
போயி அங்க கொஞ்சம் பணத்தெ பொரட்டி ஆறு லட்சத்துக்கு செக்கைப் போட்டுக் கொண்டாந்துக்
கொடுத்தாரு லெனின். லெனின் நாகர்கோயில்காரரு. அங்க கலியாண கொடுப்பினை, கொள்வினை,
டெளரில்லாம் அதிகெம். அதுல நல்ல நகைநெட்டு டெளரியாடத்தாம் அவரோட பொண்டாட்டிக்காரவுங்க
வந்தாங்க. இப்போ அதையெல்லாம் வித்து, அதுவும் பத்தாம பூர்விகமா அவருக்கு இருந்த எடத்தை
வித்து, பணத்தெ கொண்டாந்தாரு அவரு. அவரும்லா சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஒம்போது லட்சத்துக்கு
வாங்கிப் போட்டு, அதெ வெலை கொறைஞ்சி வித்தது போவ ஆறு லட்சத்துக்குப் பணத்தெ செட்டில்மெண்ட்டு
பண்ண வேண்டியதாப் போயிடுச்சு.
லெனின் திரும்பவும் நாகர்கோயிலுக்கே போயிட்டாரு.
இப்போ அவரு அங்க சிசிடிவி கேமரா வெச்சுக் கொடுக்குற நிறுவனத்தெ ஆரம்பிச்சி நடத்துறதா
கேள்வி. எப்பவாச்சும் நெனைச்சுக்கிட்டா விகடுவுக்குப் போன அடிப்பாரு. அப்போ விகடு
வேடிக்கையா கேப்பாம், "ன்னா சந்தையில்லாம் பாக்குறதுண்டா?"ன்னு. "அப்பைக்கப்போ
கொஞ்சம் கொஞ்சம்! வூட்டுக்குத் தெர்யாமத்தாம். வூட்டுக்குத் தெரிஞ்சா செருப்புல்லா
பிஞ்சிடும்!"ன்னு சொல்லிட்டுச் சிரிப்பாரு. அத்தோட இன்னமும் அவருகிட்ட டிப்ஸ்
கேட்டு பல பேரு போன் பண்றதாவும், அவுங்களுக்கு டிப்ஸ் கொடுக்குறதாவும் சொல்வாரு
லெனின். "எல்லாம் நேரந்தாம்! காலக் கொடுமெதாம்!"பாம் விகடு.
இப்பிடி சில கதைக ஆச்சுதா! இன்னும் பல
கதைக இருக்கு கூத்தாநல்லூரு தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்லு ஆபீஸச் சுத்தி. அதெச் சொல்லப்
பூந்தாக்கா சொல்லி மாளாது. எல்லாம் அழுகாச்சிக் காவியங்கதெம். நல்லா வாழ்ந்துகிட்டு
இருந்த பல பேருங்க அதால வாழ்ந்து கெட்ட மனுஷங்களா ஆனாங்க. பல பேரு விசத்தெ குடிச்சி
செத்துப் போனாங்க. தூக்குல தொங்குனவங்களும் கணிசமா இருக்காங்க. ஊரைக் காலி பண்ணிட்டு
ஓடுனவங்க, தலைமறைவா ஆனவங்க, பொண்ணு புள்ளைக்கி கலியாணத்தெ வெச்சி அதெ நடத்த முடியாம
நிர்கதியா நின்னவங்கன்னு பல பேத்தோட கதெ அதெ தோண்ட தோண்ட வந்துகிட்டேத்தாம் இருக்கும்.
தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட கூத்தாநல்லூரு பிராஞ்சையே இழுத்து மூடுறாப்புல ஆயிடுச்சு.
அத்தோட கெழக்குக் கோட்டையாரு ஸ்டேஷன்ல கொடுத்த கம்ப்ளாய்ண்டால அது வேற பொகைச்சால
கெடந்துகிட்டு இருந்துச்சு.
*****
No comments:
Post a Comment