செய்யு - 361
பங்குச் சந்தையில யேவாரம் ஆகுற பங்குக
என்னிக்கும் ஆகிக்கிட்டேதாம் இருக்கும் ஆத்துல போற தண்ணியாட்டம். ஆத்துல போற தண்ணி
யாராச்சிம் அடிச்சிட்டுப் போயி கரையொதுங்க வைக்காத வரைக்கும் யாரும் அதெப் பத்தி
நெனைக்கப் போறதில்ல, பேசப் போறதில்ல. அப்பிடி ஒரு வேலைய ஆறு செஞ்சிட்டுன்னா அதெ பத்தித்தாம்
ஊர்ல பேச்சா கெடக்கும். அப்பிடித்தாம் பங்குச் சந்தையப் பத்தி அதெ தெரிஞ்சவங்க, தெரியாதவங்க
வரைக்கும் இப்போ பேச்சா கெடக்குது. அப்படிப் பேச்சா கெடக்குற அளவுக்கு சில சம்பவங்க
நடந்துப் போச்சி.
பங்குச் சந்தையில யேவாரம் பண்ணாதவங்களுக்கு
அது ஒரு பொருட்டே இல்ல. அவுங்க அதெ கண்டுக்கிடவே போறதில்ல. சந்தை மேல ஏறுனாலும் சரித்தாம்
கீழே எறங்குனாலும் சரித்தாம் அவங்களுக்கு அது ஒரு விசயமே இல்ல. அதே போல பங்குகள வாங்காம
ஒதுங்கி நின்னு அதெ வேடிக்கைப் பாக்குறவங்களுக்கு அதோட போக்கப் பத்தி எந்தக் கவலையும்
இல்ல. அதுல பங்க வாங்கி அது வெலை எறங்கிப் போனாக்கா அன்னிக்கு ராத்திரியிலேந்து மறுநாளு
சந்தையில யேவாரம் நடக்க ஆரம்பிக்கிற வரைக்கும் கம்ப்யூட்டரு ஸ்கிரீன்னு கண்ணுலயே அது
ஓடிட்டே இருக்கும். அதுவும் சத்யம் கம்ப்யூட்டர்ஸோட
பேரிடியில மாட்டிக்கிட்டவங்களுக்கு அன்னிக்கி முழுக்க தூக்கமே வந்திருக்காது. அரசாங்கம்
எதாச்சிம் அறிவிப்ப தராதா? எதாவது ஒரு பெரிய கம்பெனி அதெ வாங்க முயற்சிப் பண்ணாதா?
எதாச்சிம் பேங்கு அதுக்குக் கடன் உதவி பண்றதா சொல்லி அந்த நிறுவனத்தெ மீட்டுடாதா?ன்ன
பல வெதமா சிந்தனைங்க போயிட்டே இருந்திருக்கும். அப்பிடிச் சிந்தனெ போறதோட இல்லாம
மறுநாளு எப்பிடியும் பங்கோடவெலை ஏறிடும்னு ஒரு நம்பிக்கெ வேற உண்டாவும். அந்த நம்பிக்கெ
உடையுற எடம் இருக்குப் பாருங்க, அந்த எடத்துல மனுஷன் எந்த முடிவை வேணாலும் எடுப்பாம்.
வாழ்க்கையில அதீதமா நம்பிக்கை வைக்குறவேம்
அந்த அதீத நம்பிக்கையாலயே அழிஞ்சுப் போவாம். அழிஞ்சிப் போவாம்னு சொல்றதெ விட அதீத
நம்பிக்கை பொய்ச்சுப் போற எடத்துல தன்னைத் தானே அழிச்சுக்குவாம்னு சொல்றதுதாம் சரியா
இருக்கும். மறுநாளு மார்கெட்டு தொடங்குனா முப்பத்தாறு சொச்சத்துல இருந்த சத்யம் கம்ப்யூட்டர்ஸோட
பங்கு ஆறு ரூவாய்க்கி எறங்குனது பாருங்க அப்போ மாரைப் பிடிச்சி ஒருத்தரு உக்காந்தவர்தாம்.
உசுர வுட்டுட்டாரு. கூத்தாநல்லூர்ல அன்னிக்கு ஒரு நாள்ல மட்டும் மாரைப் பிடிச்சிகிட்டு
உக்காந்து உசுர வுட்டவங்களோட எண்ணிக்கை நாலு.
இந்தச் சேதி ஊருக்குள்ள பரவுறதுக்குள்ள
அஞ்சாவதா மாலிக்கோட வூட்டுக்காரவங்க ஆயிஷா நாச்சியாவும் மாரடைப்பு வந்து மெளத் ஆயிட்டாங்க.
பங்குகள வாங்கிப் போட்டவரு மாலிக். ஆனா செத்துப் போனவங்க ஆயிஷா நாச்சியா. பாவம் ஒரு
பக்கம், பழி ஒரு பக்கம்னு ஆயிடுச்சு. ஆறு ரூவாய்க்கி வெலை எறங்குன சத்யம் கம்ப்யூட்டர்ஸ்
அதுக்குப் பெறவு கொஞ்சம் கொஞ்சமா வெலை ஏறி இருபத்து நாலு ரூவாய் சொச்சத்துக்குத்தாம்
போயிடுச்சு. அதுக்கு மேல ஏறல. அதுல மனசொடிஞ்சி உக்காந்திருக்காரு மாலிக். அப்படி
உக்கார்ற ஆளு இல்ல அவரு. அதெ பாத்துப்புட்டு ஆயிஷா நாச்சியா கேட்டிருக்காங்க,
"ஏம் இப்டி கப்பலு கவுந்தாப்புல உக்காந்திருக்கீங்க? ரோஸ் மில்க்க ஒரு வாயி குடிக்கப்படாதா?"
அப்பிடின்னு. மாலிக்குக்கு இருந்த மன உளைச்சல்ல என்ன பேசுறதுன்னு தெரியாம, "இதுல
ரண்டு சொட்டு வெசத்த ஊத்து. ஏக் தம்ல குடிச்சி முடிச்சிட்டுப் போயிச் சேந்துடறேம்!"
அப்பிடின்னிருக்காரு. இப்பிடில்லாம் பேசுற ஆளு இல்லையே, இப்பிடி பேசிப்புட்டாரேன்னு
நெஞ்சுல கையப் பிடிச்சிட்டு உக்காந்தவங்கத்தாம் ஆயிஷா நாச்சியா. போயிச் சேந்துட்டாங்க.
"யாயீ நாச்சியா! நமக்கு வெஷத்தெ ஊத்துனு
சொன்னதுக்கு, நாம்ம வார்த்தையில வெஷத்த ஒமக்கில்லா ஊத்திப்புட்டேம்! போயிச் சேந்துட்டீயா?"ன்னு
சத்தம் போட்டிருக்காரு மாலிக். அவருக்கும் நெஞ்சு அடைக்குறாப்புல ஆயிடுச்சு. சத்தம்
கேட்டு அக்கம் பக்கத்துல இருந்த சனங்க ஓடியாந்து அவரைக் கொண்டு போயி ஆஸ்பத்திரியில
சேக்குறாப்புல ஆயிடுச்சு நெலமை.
விசயத்தெ கேள்விப்பட்டு கிழக்குக் கோட்டையாரே
நேர்ல வந்திருக்காரு. வந்துக் கேட்டாக்கா, "நாம்ம ன்னா பண்ணுவேம் கோட்டையார்ரே!
பண்ணக் கூடாத காரியத்தெ பண்ணிப்புட்டேம். வெலை எறங்குதுன்னு ஒரு பங்குல முதலீடு பண்ணிப்புட்டேம்.
ஒண்ணேகாலு கோடிக்கு வாங்குன பங்கெ இப்ப வித்தா இருவது லட்சத்துக்குக் கூட தேறாது போலருக்கு.
மிச்சத்தெ நாளைக்கிகுள்ள ஒரு கோடி ரூவாயி பணத்தெ தர்ற மாதிரி இருக்கு நெலமை. அம்மாம்
பணத்துக்கு நாம்ம எஞ்ஞ போவேம். இருக்குற சொத்த வித்தா அதுல எழுவது லட்சமோ, எம்பது
லட்சமோ தேர்றது கஷ்டமாயிடுச்சே. எங் குடும்பத்தெ இப்பிடி நடுத்தெருவுல நிறுத்திப்புட்டேனே!"ன்னு
கதறியிருக்காரு மாலிக்.
இதே மாதிரிக்கி ஏகப்பட்ட பேருக்குப் பாதிப்பாயி
போயி, நாலு ஒண்ணும் அஞ்சு பேரு மெளத்தாயி, இன்னும் எத்தனெ பேரு நெஞ்ச பிடிச்சிக்கிட்டு
சாவப் போறாம்னு தெரியலையேன்னு பாத்தாரு கெழக்குக் கோட்டையாரு, கூத்தாநல்லூரு போலீஸ்
ஸ்டேஷன்ல தொண்டாமுத்தூரு கேப்பிட்டலு மேல ஒரு கம்ப்ளெய்ண்ட பண்ணிப்புட்டாரு. கெழக்குக்
கோட்டையாரு வலுத்த கையாச்சே, நடவடிக்கெ எடுக்காம இருக்க முடியாது. நடவடிக்கெ எடுக்காம
இருந்தா அவரு விசயத்தெ பெரிய அளவுல கொண்டு போவாரு. யாரையாவது பிடிச்சி இப்போ உள்ள
போட்டாத்தாம் அவரோட மனச தணிக்க முடியும். யாராச்சிம் பிடிச்சி உள்ளே போடலாமான்னு
பாத்தாக்க தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட அத்தனெ பேரும் எஸ்கேப்பு. லெனின் நம்பருக்கு
அடிச்சா ஸ்விட்சுடு ஆப். நேரா ஹெட் ஆபீஸ் பிராஞ்சுக்கே அடிச்சா அங்கயும் யாரும் போன
எடுக்க மாட்டேங்றாங்க.
அப்பிடி இப்பிடின்னு விசாரிச்சி பாக்குறப்போ
விகடுவோட பேரு தட்டுப்படுது, மின்னாடி அங்க ஆபீஸ் மேனேஜரா இருந்தது விகடுதான்னு சொல்லி
யரோ அவனெப் பிடிச்சி கோத்து விட்டுப்புட்டாங்க. அவனோட போன் நம்பரையும் போட்டு
வுட்டுட்டாங்க. அவனோட நம்பர்ர பிடிச்சிட்ட போலீஸ்காரவங்க இப்போ போனை அடிக்கிறாங்க.
அப்போ விகடு கோட்டகத்துப் பள்ளியோடத்துல பாடம் நடத்திட்டு இருக்காம்.
"யார்ரு விகடபாரதிய்யா? எந்த ஏரியாவுல
இருக்குற நீயி?" அப்பிடின்னு மெரட்டலான குரலு வருது செல்போன்ல.
"அய்யா யாருன்னு நாம்ம தெரிஞ்சிக்கிலாமா?"ங்றாம்
விகடு.
"கூத்தாநல்லூரு போலீஸ் ஸ்டேஷன்லேந்து
ஸ்பெஷல் எஸ்.ஐ. பேசுறேம். நீந்தாம் விகடபாரதிய்யா? அதெச் சொல்லு மொதல்ல!"ங்குது
செல்போன்ல குரலு.
"ஆமாங்கய்யா!"ங்றாம் விகடு.
"கொஞ்சம் ஸ்டேஷன் வரைக்கும் வரணுமே!
வெசாரிக்க வேண்டிக் கெடக்கு!"ங்றாரு எஸ்.ஐ. அதெ கேக்குறப்பவே விகடுவுக்கு ஒடம்பெல்லாம்
நடுங்கிடுச்சி.
"அய்யா! ன்னா சமாச்சாரம்னு சொன்னீங்கன்னா..."ன்னு
இழுக்கிறாம் விகடு.
"நீயி இஞ்ஞ வர்றீயா? யில்லே நாம்ம
நீயி இருக்குற எடத்துக்கு வாரட்டுமா? நாம்ம அஞ்ஞ வந்தேம்னா நாயி அடிக்கிற மாதிரிக்கி
அடிச்சி இழுத்துப்புட்டுத்தாம் வருவேம் பாத்துக்கே!"ங்றாரு எஸ்.ஐ.
விகடுவுக்கு களிமங்கலத்து ரோட்டைப் போட்டு
அரெஸ்ட் ஆன ரகுநாதெம் கதெ ஞாபவத்துக்கு வந்துப் போவ, அது சம்பந்தமாத்தாம் யாரோ புகாரு
கொடுத்துப்புட்டாங்களோன்னு உதறலு வந்திடுச்சு. அப்பங்காரரு சுப்பு வாத்தியாரு எதெ
நெனைச்சிப் பயந்துட்டுக் கெடந்தாரோ அத்து இப்ப நடந்திடுச்சேன்னு நெனைச்சி மனசு தடுமாறுது.
அத்து பத்திரம் சத்தியமா பள்ளியோடத்து எடம்ங்கய்யா!
"அய்யா நாம்ம எந்தத் தப்பும் பண்ணலங்கய்யா!
பள்ளியோடத்து எடத்துக்குக் குறுக்கால ரோடு ஒண்ணு ஆயிப் போச்சிடுங்கய்யா! அதெ பள்ளியோடத்து
எடத்துல சேத்தேம்யா. அத்து பத்திரம் சத்தியமா பள்ளியோடத்து எடம்ங்கய்யா! மின்னாடித்தாம்
ஊருக்குள்ள அதெப் பத்தி கரைச்சலாச்சுங்கய்யா. இப்போ ஊருல எல்லாத்தோடயும் ராசியாயிடுச்சுங்கய்யா!
அப்பிடி யாராச்சிம் எம் மேல புகாரு கொடுத்தாலும் அத்த வடவாதி ஸ்டேஷன் லிமிட்டுலத்தாம்
வரும். கூத்தாநல்லூரு வரைக்கும் வராதுங்கய்யா!"ங்றாம் விகடு.
"ன்னா லா பாய்ண்டு பேசுறீயா? யாரு
நீயி? சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசுறே?"ங்றாரு எஸ்.ஐ.
"ஐயா நாம்ம வாத்தியாருமாருய்யா! இஞ்ஞ
ஓகையூரு பக்கத்துல கோட்டகம் இருக்குங்களே! அஞ்ஞ வேலை பாக்கிறேம்யா!"ங்றாம் விகடு.
"இந்தத் தொண்டாமுத்தூரு கேப்பிட்டலு
அதுக்கும் ஒனக்கும் ன்னா சம்பந்தம்?"ங்றாரு எஸ்.ஐ.
"அதுக்கும் நமக்கும் இப்போ எந்தச்
சம்பந்தமில்லங்கய்யா! ரண்டு வருஷத்துக்கு மின்னாடி அதுல மேனேஜரா இருந்தேம். பெறவு ரீஸ்தரு
ஆபீஸ்ல வெச்சி அதுக்கும் நமக்கும் சம்பந்தமில்லன்னு பத்திரம் வரைக்கும் பதிவு பண்ணிக்கிட்டு
நம்மள வெளியில அனுப்பிச்சி வுட்டுப்புட்டாங்கய்யா. அந்த ரீஸ்தரு நம்பரு கூட ஞாவத்துல
இருக்குங்கய்யா. அந்த நெம்பரு வந்து..."ன்னு விகடு சொல்றதுக்குள்ள,
"ஓ வாத்தியார்ரா! இதெ மின்னாடிச்
சொல்ல வேண்டித்தானே. இப்போ ஒங்களுக்கும் தொண்டாமுத்தூரு கேப்பிட்டலுக்கும் சம்பந்தம்
இல்லீங்களா?"ங்றாரு எஸ்.ஐ.
"கெடையாதுங்கய்யா! நீஞ்ஞ எதுக்குக்
கேக்குறீங்கன்னு புரியலங்கய்யா?"ங்றாம் விகடு.
"அத்து வந்து ஒண்ணுமில்லே. இஞ்ஞ கூத்தாநல்லூர்ல
ஏத்தோ பங்குச் சந்தெ வெவகாரத்துல அஞ்சு பேரு அவுட்டு. ன்னா வெவகாரம்னு வெசாரிக்கலாம்னுப்
பாத்தாக்கா ஆபீஸ்ஸ இழுத்து மூடிப்புட்டு ஆளாளுக்கு ஓடிப் போட்டானுங்கோ. கம்ப்ளெய்ண்டு
கெழக்குக் கோட்டையார்ட்டேருந்து வந்திருக்கு. அதாங். ஒங்களுக்கு லெனின்னு யாராச்சியும்
தெர்யுமா?"ங்றாரு எஸ்.ஐ.
விகடுவுக்குத் தொண்டை வறண்டுப் போச்சு.
லெனினைத் தெரியும்னு சொன்னா அதெ வெச்சு நோண்டி நொங்கெடுத்து பெறவு கெழங்கெடுப்பாங்களேம்னு
பயமா வேற இருக்கு. தெரியும்னு சொல்லி சம்பந்தமில்லாம எதுலாச்சியும் போயி மாட்டிக்கக்
கூடாதுடா விகடுன்னு அவனோட மனசுல எச்சரிக்கெ மணி அடிக்கிது. கொஞ்சம் எச்சில முழுங்குனா
தேவலாம் போல இருக்கு. வாயில எச்சிலே சுரக்க மாட்டேங்குது.
"தெரியாதுங்கய்யா!"ன்னு கம்முன
குரல்ல சொல்றாம்.
"இப்பிடி ஆளாளுக்கு யார்ர கேட்டாலும்
தெர்யல தெர்யலன்னாக்கா நாஞ்ஞ ன்னா பண்றது? செரி! இத்தான்னே ஒஞ்ஞ நெம்பரு. கொஞ்சம்
எப்ப கூப்புட்டாலும் அட்டெண்ட் பண்ணுங்க. ஒங்களப் பத்தி வெசாரிச்சிட்டேம். நல்ல வெதமாத்தாம்
சொல்றாங்க. எப்ப கூப்டாலும் லைனுக்கு வாங்க. பயப்பட வாணாம்!"ன்னு சொல்லிட்டு
போனை வெச்சிடுறாரு எஸ்.ஐ.
*****
No comments:
Post a Comment