16 Feb 2020

மாபெரும் சூதாட்டத்தின் ரெண்டாம் கட்டம்

செய்யு - 360

            குடிகார்ரேம் சத்தியம் இருக்கே அது விடிஞ்சாப் போச்சு. கடங்கார்ரேம் சத்தியம் இருக்கே அது கடனெ வாங்குறதோட போச்சு. பங்குச் சந்தையில நட்டமாயி, இனுமே இந்தப் பக்கமே தலை வெச்சு படுக்க மாட்டேம்னு பண்ற சத்தியம் இருக்கே அது பண்ணி முடிச்ச பத்து நாளோட போச்சு. லேமன் பிரதர்ஸ் திவாலால சந்தையில நட்டம் பண்ணவங்க திரும்பவும் வர ஆரம்பிச்சாங்க. யாரும் அவுங்க தப்புலேந்து சரியான பாடத்த கத்துக்கிட்டதா தெரியல. உழைக்காம ஒடம்பு நோகமா சம்பாதிக்க வாய்ப்பு இருக்குன்னா அதுல மனசு போகுமா? யில்ல உழைச்சு ஒடம்பு நொந்து சம்பாதிக்கிறதுல மனசு போகுமா?
            சொகமா சம்பாதிக்கிற ஒவ்வொண்ணுலயும் சுரண்டலோ, சூதாட்டமோ இருக்கும். ஒரு வகையில பங்குச் சந்தையில சுரண்டல் கெடையாதுன்னாலும், இது மாபெரும் சூதாட்டக் களம் மாதிரிதாம். சூதாட்டத்திலயும் ஜெயிக்கிறதுக்குன்னு சில விசயங்கள் இருக்கு, அதுவும் ஒரு வகையான அறிவியலுதாம், அது தெரிஞ்சா ஜெயிக்கலாம்னு இங்க வர்றவங்க அடிக்கடி சொல்லுவாங்க. சூதாட்டத்துல ஜெயிக்கிறதுக்கு சில விசயங்கள் இருக்குங்றது எந்த அளவுக்கு உண்மைங்றது தெரியல. ஆனா சூதாட்டத்துல ஜெயிக்கிறதுக்கு நிச்சயமான ஒரு விசயம் இருக்கு. அது என்னான்னா அந்தச் சூதாட்டத்தையே விட்டுப்புடுறதுதாம். சூதாட்டத்தை விட்டுப்புடறதுதாம் சூதாட்டத்தை ஜெயிக்கிறதுக்கான மாபெரும் பாதைன்னு சொல்லலாம். ஏன்னா சூதாட்டத்துல ஜெயிக்கிறதுங்றது காசியச் சுண்டி விட்டு பூவா, தலையா போடுறது மாதிரி. பூவும் வுழலாம், தலையும் வுழலாம். ரண்டுக்குமே அம்பது அம்பதுன்னு அம்பது சதவீத வாய்ப்புக நிச்சயமா இருக்கு. அதெ சாத்தியப்பாடு பங்குச் சந்தையிலயும் லாபம், நட்டம்னு ரெண்டுக்கும் அம்பது அம்பதுன்னு அம்பது சதவீத சாத்தியக்கூறுக இருக்கு. 
            சந்தையில நட்டம் பண்ணி அக்கெளண்ட்ட முடிச்சிக்கிட்டு போனவங்க பல பேரு, விட்ட எடத்துலேந்து பிடிக்கிறேம் பாருன்னு, பண்ண தப்புலேந்து மறுபடியும் தப்பு இல்லாம எப்பிடி தப்பு பண்ணலாங்றதெ கண்டுபிடிச்ச மாதிரி வந்து நிப்பாங்க. போன முறை இந்தந்த விசயங்கள்ல கோட்டை விட்டாச்சு, இந்த முறை அந்த மாதிரி நடக்க விட்டுடக் கூடாதும்பாங்க. மூவிங் ஆவரேஜை சரியா பாக்காமா வுட்டதுதாம் தப்பு, ஆர்.எஸ்.ஐ. இன்டிகேட்டர்ர கவனிக்கமா விட்டுட்டதுதாம் தப்பு, வால்யும் கொறையுறதெ கவனிக்காம இருந்துட்டேம் பாருங்க அதாங் தப்புன்னு ஆளாளுக்கு ஒரு காரணத்தைச் சொல்லி மறுபடியும் குளோஸ் பண்ண அக்கெளண்ட்ட மறுக்கா மறுக்கா துவக்குவாங்க. அக்கெளண்ட முடிச்சிக்கிறதும், முடிச்ச பத்து நாள்ல மறுக்கா அக்கெளண்ட துவக்கிக்கிறதும் அவுங்களுக்குப் பழக்க தோஷமாவே போயிடும். அப்பிடி துவக்குனவங்களுக்கு மறுக்காவும் தலையில இடி வந்து விழுந்தா எப்பிடி இருக்கும்? சுனாமியில ஸ்விம்மிங் போடுறவங்களா இருந்தாலும், வெடிச்சு வர்ற எரிமலைக் குழம்புல ன்னா பண்றது? குழம்புங்றதால எடுத்து சோத்துக்கா ஊத்திக்க முடியும்? அப்பிடி ஆகிப் போற நெலமை ஒண்ணு உண்டாயிடுச்சு.
            வரலாறிலேந்து மனுஷன் பாடம் கத்துகிட்டா மனுஷனோட வரலாறு ஒரே மாதிரியாத்தாம் இருக்கும். ஆனா வரலாறுங்றது ஒரே மாதிரியா இருக்கப் போறதில்ல. அது எத்தனை விதமான சாத்தியக்கூறுக இருக்கோ, அத்தனை விதமான சாத்தியக்கூறுகளாலும் எழுதப்பட்டுக்கிட்டே இருக்கப் போவுது. அதெ தடுக்க முடியாது. லேமன் பிரதர்ஸ்ல சந்தை சரிஞ்ச அனுபவம் ஒண்ணு போதும் பங்குச் சந்தையில எப்பிடி இருக்கணும்னு பாடம் கத்துக்கிறதுக்கு. ஆனா கத்துக்கணுமே? அதாங் இங்க பிரச்சனை. பாடம் கத்துக்கிறதுல மனுஷன் ஒரு மக்குப் பயன்னுத்தாம் சொல்லணும். சுலபமா பணத்தெ சம்பாதிக்கணும்ங்ற மனுஷனோட பேராசை எந்தப் பாடத்தையும் கத்துக்க விடாது.
            உலகச் சந்தையில ஒண்ணுன்னா அதுக்கே இந்தியாவுல இருக்குற பங்குச் சந்தை சலங்கை கட்டிக்கிட்டு ஆடும்னா, இந்தியாவுல ஒண்ணுன்னா தலைவிரிச்சில்லா எகுடுதகுடால்லா ஆடும். ரெண்டாயிரத்து ஒம்போதுல அந்தச் சம்பவம் நடந்துச்சு. இப்படி ஒரு சம்பவம் பங்குச் சந்தையில பட்டியலிட்டிருக்குற எந்தப் பங்குல வேணாலும் நடக்கலாம்னாலும் நிப்டியில இருக்குற அம்பது பங்குகள்லயோ, சென்செக்ஸ்ல இருக்குற முப்பது பங்குகள்லயோ நடக்க கூடாது. நாம்ம நடக்கக் கூடாதுன்னு சொல்றதுக்காக நடக்குறது நடக்காமலயா போயிடுது. ஆமா அது நடந்துச்சு. சத்தியம் கம்ப்யூட்டர்ஸ்ங்ற பங்கு வகை தொகையில்லாம சந்தையில மரண அடி வாங்குனுச்சு. ஒரு பங்கு பத்து சதவீதம், இருவது சதவீதம் எறங்குறதையே சந்தையில பயங்கரமா பாப்பாங்க. சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் பங்கு எம்பது சதவீதம் வரைக்கும் வெலை எறங்கி இந்திய பங்குச் சந்தையையே ஆட்டம் காண வெச்சுச்சு. எறங்குனது ஒரு பங்குதான்னாலும் ஒட்டு மொத்த பங்குச் சந்தையும் அந்தச் செய்தியால சரிய ஆரம்பிச்சது. பங்குச் சந்தை மட்டும் சரியல. உலக அளவுல இந்தியாவோட பேரும் சத்யம் கம்ப்யூட்டர்ஸால சரிய ஆரம்பிச்சிது.
            சத்யம் கம்ப்யூட்டர்ஸ்ங்றது இந்தியாவுல இன்போஸிஸ், விப்ரோ மாதிரி பெரிய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கம்பெனி. வெளிநாடு பலதுல அதுக்கு கம்பெனிக இருக்கு. அதோட மொதலாளின்னா அது ராமலிங்க ராஜூங்றவரு. அவரு பிரைஸ் வாட்டர்ஸ் கூப்பர்ங்ற ஒரு வெளிநாட்டு தணிக்கைக் கம்பெனிய வெச்சு தப்பு தப்பா கணக்கு காட்டுனதாவும், கம்பெனிக்காக திரட்டுன முதலீடு, கம்பெனிய அடமானம் வெச்சு வாங்குன கடனையெல்லாம் அவுங்க கம்பெனியோட தொடர்புள்ள தகவல் தொழில்நுட்பத்துல முதலீடு செய்யாம ரியல் எஸ்டேட்டுல முதலீட செஞ்சதாவும், இப்போ அதுவும் சரியில்லன்னும் சேதிக ஒவ்வொண்ணா வெளியில வர ஆரம்பிச்சிது. ராமலிங்க ராஜூ முறைகேடு பண்ணிட்டாரு, கையாடல் பண்ணிட்டாருன்ன சேதிக மேல சேதிகளா வர ஆரம்பிச்சிது. இந்தியாவோட தகவல் தொழில்நுட்ப கம்பெனிகன்னா அது இப்பிடித்தாம் பிராடுகளா இருக்கும் போலருக்குன்னு நெனைச்சு வெளிநாட்டு முதலீட்டாளர்க பல பேருங்க வெளியேற ஆரம்பிச்சிட்டாங்க. அவுங்க சந்தையிலேந்து வெளியேற வெளியேற சந்தை இன்னும் அடி வாங்குது. எரநூத்து இருவது ரூவாயிலேந்து எறங்குன பங்கு நூத்து அறுவதுக்கு வருது.
            சத்யம் கம்ப்யூட்டர்ஸ் பங்கை வாங்குறதுக்கு இதாம் சரியான சந்தர்ப்பம்னு நெனைச்சு அப்போ நெறைய பேரு வாங்கிப் போடுறாங்க. வாங்கிப் போட்டாக்கா அதோட வெலை தொண்ணூத்துக்குக் கீழே எறங்குது. எல்லாம் ஒரு சில நிமிஷங்கள்ல நடக்குது. சரி பரவாயில்ல இதுவும் நல்ல வெலைதாம்னு நெனைச்சு அப்பயும் வாங்கிப் போடுதுங்க மக்கா. அப்பிடி வாங்கிப் போட்டாக்கா அதுவும் கொறைஞ்சு வெலை அறுவதுல வந்து நிக்குது. அப்பிடி வெலை எறங்குறப்பத்தாம் லெனின் விகடுவுக்குப் போனைப் போடுறாரு. இந்த ரெண்டு வருஷத்துல விகடுவுக்கும் சந்தைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாம போயிடுச்சு. சந்தை என்னா நெலவரத்துல இருக்கு. எது எந்த வெலையில போயிட்டு இருக்குன்னு எதுவும் தெரியல.

            "வெகடு! ஒஞ்ஞ யம்மா பேர்ல சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நூத்து அம்பது இருக்கு. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் வெச்சிருக்குற எல்லாத்தையும் வித்துப்புட்டு வெளியில வரச் சொல்லி ஹெட் ஆபீஸ்லேந்து போன். அதாங் பண்றேம்!" அப்பிடிங்கிறாரு லெனின்.
            "சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நல்ல பங்குல்லா. விக்கணும்னு அவசியமில்லையே!"ங்றாம் விகடு.
            "இப்போ அத்தோட வெலை ன்னா தெர்யுமா?"ங்றாரு லெனின்.
            "நாம்ம வாங்குனப்போ முந்நூத்து அறுவது. இப்போ எங் கணக்குச் சரியா இருந்தாக்கா நானூத்து அம்பதுலேந்து ஐநூத்து அம்பதுக்கு மேல போயிட்டு இருக்கலாம்னு நெனைக்கிறேம்"ங்றாம் விகடு.
            "கிழிஞ்சிது லம்பாடி லுங்கி. யப்பா வெகடு ஒமக்குப் போனைப் போட்டப்ப வெலை அறுவது, இப்போ வெலை நாப்பத்தி மூணு!"ங்றாரு லெனின்.
            "ஷேர் ஸ்பிலிட் ஆயிருக்கா யில்ல ரைட் இஷ்யூ ஏதுச்சும் நடந்திருக்கா?"ங்றாம் விகடு.
            "அட ஒப்பந்த தன்னானே! கம்பெனியெ காலியாவப் போவுது. வித்துட்டு எக்ஸிட் ஆவச் சொல்லி ஹெட் ஆபீஸ்லேந்து போனு அலறிட்டு இருக்குது!"ங்றாரு லெனின்.
            "நீஞ்ஞ சொல்றது ஒண்ணும் புரியல. அத்து நல்ல கம்பெனிப்பா. ஐரோப்பால அதுக்கி நெறைய கிளையெண்ட்ஸ் இருக்காங்கப்பா.அந்தக் கம்பெனிய சுலுவுல அசைக்க முடியாதுப்பா!"ங்றாம் விகடு.
            "ஒங்கிட்ட கதெ கேக்க நேரமில்லே. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நூத்தி அம்பதெ விக்கவா? வேணாவா? அதெ சொல்லு! வித்தா சாயுங்காலம் யம்மாவெ அழைச்சிட்டு வந்து டெபாசிட்டரி ஸ்லிப்புல் சைனை வெச்சிட்டுப் போயிட்டே யிரு. இஞ்ஞ ஆபீஸே ரண களமா இருக்கு. ரொம்ப பேச நேரமில்ல."ங்றாரு லெனின்.
            விகடு ரொம்ப தீர்க்கமா சொன்னாம், "விக்க வாணாம்! நமக்கு நெலவரம் புரியல. சட்டு புட்டுன்னுல்லாம் முடிவெடுக்க முடியா. யோஜனெ பண்ணித்தாம் விக்குறதா வாணாம்னு முடிவு பண்ணியாவணும். சத்யம் கம்ப்யூட்டர்ஸ்னு ஒரு பங்கு இல்லாமலேயே போனாலும் அதெ விக்க வாணாம். வெச்சிடறேம்!"ன்னு சொல்லி போனை‍ வெச்சிட்டாம் விகடு.
            சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அறுவது ரூவாய்க்கு எறங்குன பிற்பாடுதாம் ஹெட் ஆபீஸ்லேந்து அதுக்கு எக்ஸிட் கால் கொடுத்திருக்காங்க. அது வரைக்கும் வெலை எறங்க எறங்க வாங்கலாம்னு பையிங் கால் கொடுத்திக்காங்க. எப்பிடியும் அதிகமா விழுவுற பங்கு அதிகமா மேல எழும்புங்ற நம்பிக்கையில வேற கூத்தாநல்லூரு தொண்டாமுத்தூரு கேப்பிட்டல் பிராஞ்சுல ஆளாளுக்குச் சத்யம் கம்ப்யூட்டர்ஸ்ல பூந்து வெளையாடியிருக்காங்க. லெனின் மட்டுமே அவரோட அத்தை பேர்ல வெச்சிருந்த அக்கெளண்ட்ல ஒம்போது லட்ச ரூவாய்க்கு அதெ வாங்கியிருக்காரு. ஓரளவுக்கு நெதானமான தினசரி யேவாரம் பண்ற அவரே ஒம்போது லட்ச ரூவாய்ன்னா மித்தவங்களப் பத்திச் சொல்ல ன்னாயிருக்கு?
            இந்த இடைப்பட்ட காலத்துல புரபஸர் மாலிக்கை வேற ஆபீஸூக்கு வரவழைச்சு அவரக்கு தினசரி யேவாரம் பண்றதுல ஆசைய உண்டு பண்ணி அவரு ஒண்ணே கால் கோடிக்கு அதெ வாங்கிப் போட்டிருக்காரு. யாரும் அன்னிய தேதிக்கு சத்யம் கம்ப்யூட்டர்ஸ்ஸ ஆயிரம் பத்தாயிரம் ரூவாயி அளவுக்குல்லாம் வாங்கிப் போடல. எல்லாம் லட்சம் கோடி ரூவாய்ன்னு யேவாரம் பண்ணியிருக்காங்க. இப்பிடி சத்யம் கம்ப்யூட்டர்ஸ் அடி வாங்கி எறங்குனதுல அன்னிக்கு அபீஸ் முழுக்கவே அழுகாச்சியா ஆயிருக்கு. லெனின்தாம் தேத்தியிருக்காரு. பி.டி.எஸ்.டி.ன்னு சொல்ற பை டுடே, செல் டுமாரோ டெக்னிக்கில்ல இன்னிக்கு வாங்குனதெ நாளைக்கி வித்துப்புடலாம்னு நம்பிக்கையா சொல்லிருக்காரு. "இம்மா அளவுக்கு பங்கோட வெலை எறங்கியிருக்கதால் நாளைக்கி நெறைய பேரு இந்தப் பங்கை வாங்குவாங்க. பங்கோட வெலை நிச்சயம் ஏறிடும்"னு வாங்குனவங்க மனசுல எல்லாம் தெகிரியத்தெ உண்டு பண்ணிருக்காரு. அன்னிக்கு ஆபீஸ மூடுறதுக்கு ராத்திரி பன்னெண்டு மணி ஆயிருக்கு.
            மறுநாளு எட்டரைக்குத் தொறக்குற ஆபீஸூக்கு மக்கா ஒவ்வொண்ணும் காலாங்காத்தாலயே ஏழரைக்கெல்லாம் வந்து பூட்டியிருக்குற ஆபீஸூக்கு மின்னாடி உக்காந்துட்டுங்க. ஆபீஸ்லேந்து ஆர்டர் போட்டவங்க, போன்ல சொல்லி ஆர்டர் போட்டவங்கன்னு எழுவது பேருக்கு மேல முப்பது பேருக்கு மேல உக்கார முடியாத ஆபீஸூக்கு மின்னாடி கூட்டமா நிக்குறதெப் பாத்து லெனினுக்குப் பயம் வேற வந்துப் போச்ச. ஏற்கனவே லேமன் பிரதர்ஸ் திவாலப்ப ஆபீஸோட கண்ணாடிய ஒடைச்சி, டெர்மினல் சிஸ்டத்துல ரண்டைக் காலி பண்ணி அதெ நெனைச்சுப் பார்க்கவே லெனினுக்குப் பயமா போயிடுச்சு. தூரத்துலயே இந்தக் கூட்டத்தைப் பாத்தவரு, ஹெட் ஆபீஸூக்குப் போனைப் போட்டு தகவலச் சொல்லிட்டு, ஆபீஸூக்கு வர்ற ஆபரேட்டருங்களுக்குப் போனைப் போட்டு யாரும் வர வேணாம்னு சொல்லி அவரும் அந்த எடத்துலேந்து ஜகா ஆயிட்டாரு.
            பத்து மணி ஆகியும் ஆபீஸைத் தொறக்காததால ஆபீஸூ மின்னாடி கூடி நின்ன மக்கா ஒவ்வொண்ணும் கல்லெடுத்து அடிக்க ஆரம்பிச்சா ஆபீஸூக்கு மின்னாடி போலீஸூ வந்து நிக்க வேண்டியதாப் போச்சு.
*****


3 comments:

  1. சிறப்பு.. வட்டாரவழக்கில்..பங்குசந்தபங்குசந்தையைப்படிக்கையில் ஒருவிதமானகிறக்கம் வருகிறது.நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கும், அன்புக்கும், வாசிப்புக்கும் நன்றிகள் ஐயா.

      Delete
  2. சிறப்பு.. வட்டாரவழக்கில்..பங்குசந்தபங்குசந்தையைப்படிக்கையில் ஒருவிதமானகிறக்கம் வருகிறது.நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...