15 Feb 2020

சுனாமியில ஸ்விம்மிங் போடுறவங்க!

செய்யு - 359

            புரோக்கிங் ஆபீஸ்ல ஒவ்வொரு நாளு சந்தை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அன்னைய சந்தையோட நெலவரத்தெ ஓரளவுக்குக் கணிச்சி அதெ பத்தின விவரங்கள மேனேஜருக்கு மின்னஞ்சல் மூலமா அனுப்பிடுவாங்க. உலக நிலவரம், உலகத்துல இருக்குற முக்கியமான பங்குச் சந்தைகளோட போக்கு, இந்தியாவோட நிலவரம், பங்குச் சந்தையப் பாதிக்குற விசயங்கள்னு எல்லாத்தையும் ஒரு கணக்குப் பண்ணி வானிலை அறிக்கைய வழங்குற மாதிரி அந்த விவர அறிக்கை இருக்கும்.
            வானிலை அறிக்கைன்னு அதைச் சொல்றப்பவே ஒங்களுக்கு ஒரு விசயம் புரிஞ்சிருக்கும். சில நேரங்கள்ல வானிலை அறிக்கைச் சொல்றது அப்பிடியே தலைகீழா நடக்கும் பாருங்க. அதாச்சி என்னான்னா மழை பெய்யும்னு சொல்றப்ப பல்ல இளிச்சிக்கிட்டு வெயிலு அடிக்கிறதும், வறண்ட வானிலை நிலவும்னு சொல்றப்ப நல்லா மழையடிக்குமில்லா? அப்பிடி ஆயிடும் அந்த விவர அறிக்கையோட நெலைமையும் சில நேரங்கள்ல. இன்னிக்கு சந்தை எறங்கு முகத்துல போவும்னு சொல்றப்ப எகிற அடிச்சிக்கிட்டு ஏறும், இன்னிக்குச் சந்தை ஏறுமுகத்தல போவும்னு சொல்றப்ப மார்க்கெட்டு விழுந்து அடிச்சிக்கிட்டுச் சரியும். அப்படி ஆயிடுச்சின்னா அதெ சொல்ற மேனேஜரு அன்னிக்குக் காமெடியனா ஆயிடுவாரு. இருந்தாலும் அதையெல்லாம் மேனேஜரு நல்லா படிச்சி வெச்சிக்கிட்டு அதெ நல்லா மனசுக்குள்ள ஏத்திக்கிட்டு பங்குச் சந்தையில தினசரி யேவாரம் பண்றவங்களுக்கு சொல்ல வேண்டிய சங்கதிகள சொல்லித்தாம் ஆவணுங்றது அவரோட கடமெ.
            லேமன் பிரதர்ஸ் திவாலான அன்னிக்கும் லெனின் தினசரி யேவாரம் பண்றவங்களுக்கு இந்தச் சங்கதிகள இன்னின்ன மாதிரின்னு சொல்லி முடிஞ்ச வரைக்கும் இன்னிக்கு யேவாரம் பண்ண வேணாம்னுத்தாம் சொல்லிருக்காரு. எதாச்சிம் பங்குகள விக்கணும்ங்ற மாதிரி இருந்தா வித்துப்புடுங்க, கொஞ்ச நாளைக்கி சந்தை எறங்குமுகமாத்தாம் இருக்கும்னு எவ்வளவோ எடுத்தும் சொல்லிருக்காரு. இதுல ஒரு வேடிக்கை என்னான்னா மேனேஜரு அன்னன்னிக்கிக் கொடுக்குற விவரத்தெ மாத்தி செஞ்சு சந்தையில பணம் பாக்குறவங்க இருக்காங்க. அவுங்களுக்கு அந்த உத்தி சில நேரங்கள்ல நல்லாவே வேலையும் செய்யும். ஏன்னா சந்தைங்றது ரண்டு வெதமாவும் போவும். எறங்குனாலும் எறங்கும், ஏறுனாலும் ஏறுமில்லையா. ஓரளவுக்கு அதெ கணிக்கலாமே தவிர, நூத்துக்கு நூத்து சரியா கணிக்க முடியாது. அதுவுமில்லாம கணிப்புங்றது நடக்கலாம், நடக்காமலும் போவலாம் இல்லியா. அதாங் கணிப்புல உள்ள பிரச்சனையே.
            லெனின், "இன்னிக்குப் பாத்து கவனமா யேவாரம் பண்ணணுங்க, யில்ல யேவாரமே பண்ண வேண்டாம்"னு சொன்னதெ கேட்ட வாடிக்கை பண்றவங்க, "இதென்ன பெரிய சங்கதி! நீஞ்ஞ சந்தை ஏறும்னு சொல்ற அன்னிக்குத்தாம் எறங்குது. எறங்கும்னு சொல்ற அன்னிக்குத்தாம் ஏறுது. நாங்கல்லாம் சுனாமியிலயே ஸ்விம்மிங்கப் போட்டு எழுந்திரிச்சி வர்ற ஆளுங்க!" அப்பிடின்னுட்டு ஏறுக்கு மாறா சொல்லி யேவாரத்தப் பண்ணியிருக்காங்க. அவங்களோட கணிப்பு சந்தை நல்லா எறங்குற நாட்கள்ல, திரும்பவும் சந்தை கொஞ்சம் மேல எழும்பும்ங்றது. அதெ பெளன்ஸ் பேக் அப்பிடின்னு சொல்லுவாங்க. அப்பிடித்தாம் ரொம்ப ஓவரா சரிஞ்சிட்டுப் போற சந்தை திடீர்னு மேல எழும்பும். பங்குகளோட வெலை ரொம்ப எறங்கிப் போறப்ப, அது பங்குகளுக்கான சரியான வெலைன்னு நெனைச்சி நெறைய பேரு வாங்க ஆரம்பிச்சா அப்பிடி பெளன்ஸ் பேக் ஆவுறது உண்டுதாம். ஆமா அப்பிடி ஆவுறதும் நடக்கும், ஆவாம போறதும் நடக்கும்.
            ஆனா அன்னிக்கு சந்தை பெளன்ஸ் பேக் ஆகும்னு நெனைச்சி வாங்குனவங்களுக்கு சந்தை ‍‍டிமிக்கிக் கொடுத்துட்டு அது பாட்டுக்கு விழுந்துகிட்டே இருக்கு. பங்குகளோட வெலை படுபாதாளத்துக்கு எறங்குனப்பத்தாம் தொண்டாமுத்தூர் கேப்பிட்டல்லோட கூத்தாநல்லூரு கிளையில புயலு அடிக்க ஆரம்பிச்சிருக்கு. சந்தையில நல்லா லாபம் கெடைக்கிறப்ப சந்தோஷத்துல துள்ளிக் குதிக்குற மனுஷன் நட்டம் ஆவுறப்போ அதெ தாங்கிக்க முடியாம எகிறி அடிப்பாம்.  தொண்டாமுத்தூர் கேப்பிட்டலோட டெர்மினல் சிஸ்டம் ஒடைஞ்சதும், கண்ணாடி ஒடைஞ்சதும் இப்பிடித்தாம்.
            சுனாமியோ, புயலோ, பூகம்பமோ, எரிமலை வெடிப்போ அடிக்கடி நடக்குறதில்லே. எப்பயோ ஒரு வாட்டித்தாம் நடக்குது. அப்பிடி நடக்குறப்போ அதோட பாதிப்பு பல வருஷங்களுக்கு இருக்கும். அப்பிடித்தாம் சந்தையிலயும் இது மாதிரியான திவால் சங்கதிங்க அடிக்கடி நடக்கிறதில்ல. அப்பிடி நடக்கறப்ப கொஞ்ச நாளைக்கி சந்தைய விட்டு கொஞ்ச நாளைக்கி ஓடிப் போனாலும் நல்லதுதாங். ஆனா தினசரி யேவாரங் பண்றவங்களால அப்பிடி ஓடிப் போக முடியாது. அவுங்க விட்டதெ பிடிக்குறோம் பாருன்னு சொன்னதெயே சொல்லிக்கிட்டுத் தினசரி யேவாரத்துக்கு அடிமையா ஆயிருப்பாங்க. போதைக்கி அடிமையாகிட்டவங்க மாதிரித்தாம் அவங்களோட நெலமை இருக்கும். அவங்களால ஒரு நாளு கூட தினசரி யேவாரம் பண்ணாம இருக்க முடியாது.

            சந்தை இல்லாத சனிக் கெழம, ஞாயித்துக் கெழமையிலயும் ஆபீஸ்ஸ தொறக்கச் சொல்லி வந்து உக்காந்துக்கிற ஆளுங்க இருக்காங்க. சந்தை இல்லாத நாளுல ஆபீஸ தொறக்கச் சொல்லி என்ன பண்ணுவாங்கன்னு கேட்டாக்கா? எந்தப் பங்கெ எந்த வெலைக்கு வாங்கலாம், எந்த வெலைக்கு விக்கலாம்னு ரொம்ப தீவிரமா ஆராய்ச்சிப் பண்ற மாதிரி விவாதிச்சுக்கிட்டுக் கெடப்பாங்க. அதெல்லாம் நல்லாத்தாம் பண்ணுவாங்க. நல்லாத்தாம் யோஜனைப் பண்ணி முடிவு கூட எடுப்பாங்க. ஆனா பண்றப்பத்தாம் தப்புத் தப்பா பண்ணுவாங்க.
            டிவியில கிரிக்கெட்‍ மேட்ச் பாக்குறவெம் இப்பிடி ஆடணும், அப்பிடி ஆடணும்னு ஆயிரத்தெட்டு யோஜனையெ சொல்லுவாமில்ல! அவனெ தூக்கி அப்பிடியே மைதானத்துலப் போட்டாக்கா மொத பந்துலயே டொக் அவுட்டு ஆயி வருவாமில்லா. அப்பிடித்தாம் அவங்களோட நெலைமையும் இருக்கும். அதாச்சி, விக்க வேண்டியதெ வாங்கியும், வாங்க வேண்டியதெ வித்தும் நட்டத்தெ சேத்துப்பாங்க.
            சந்தைய அவ்வளவு துல்லியமா முன்கூட்டியே கணிச்சிச் சொல்றதுக்கு இல்ல. ஓரளவுக்குக் கணிச்சிச் சொல்றப்ப கொஞ்சம் முன்னெச்சரிக்கையா இருந்திக்கிறது நல்லதுதாம். சுனாமி வரப் போகுதுன்னு சொல்றப்ப அது வருதோ, இல்லியோ கடலெ வுட்டு தூரமா ஓடிப் போயிடுறதால ஒண்ணும் குடி முழுகிப் போயிடப் போறதில்ல. அப்பிடி ஓடாம, "இப்பிடித்தாம் அடிக்கடி சொல்றானுவோ! போன முறையும் சொன்னானுவோ, இந்த மொறையும் சொல்றானுவோ! சுனாமியும் வர மாட்டேங்குது, சிவகாமியும் வர மாட்டேங்குது. ஒண்ணு இன்னிக்கு அது வரணும். இல்ல நாம்ம அதுகிட்ட போவணும். என்னத்தாம் நடக்குதுன்னு பாத்துப்புடறேம்"ன்னு தெனாவெட்டா பேசிட்டு நின்னு, நெசமாவே அன்னிக்குக் கணிச்சி சொன்னபடி, சுனாமி வந்துப்புட்டா நெலமைய நினைச்சுப் பாருங்க.
            சந்தையில எறங்கி தினசரி யேவாரம் பண்றதுங்றது கிட்டதட்ட நல்ல பாம்போடு சிநேகிதம் வெச்சுகிட்டு அதோட வெளையாடிட்டுக் கெடக்குற மாதிரித்தாம். என்னிக்கு வேணாலும் அந்தப் பாம்பு ஒரு போடு போடலாம். ஒரு போடு போட்டா போதுமே. எறங்குறது விஷமில்லையா! ஒரு நாளு நாம்ம கணிச்ச கணிப்பு மாறுனாலும் தலையில துண்ட போடுற மாதிரியும் நெலமெ வரலாம், தலையில தூக்கப் போடுற மாதிரியும் நெலமெ வரலாம், ஊர வுட்டே ஓடிப் போவுற மாதிரியும் நெலமெ வரலாம், ஒலகத்தெ வுட்டே ஓடிப் போவுற மாதிரியும் நெலமெ வரலாம். அப்பிடி சந்தையில இருக்குறவங்களுக்கு ஆயிரத்துல ஒருத்தருக்காவது நெலமை ஆவும். அந்த ஆயிரத்துல ஒருத்தெம் யாருங்றது நடந்து முடியுறப்பத்தாம் தெரியும்.
            கூத்தாநல்லூரு தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோடு மாபெரும் சூதாட்டத்தின் மொத கட்டம் இவ்விதமா ஒருத்தரு விஷத்தெ குடிச்சிட்டு உசுர விட்டதுல முடிஞ்சிது. அதாங் ஒருத்தரு செத்துட்டாரே, நெறைய பேரு பங்குச் சந்தைய விட்டே போயிட்டாங்களே! இனுமே அந்த மாபெரும் சூதாட்டத்தோட ரெண்டாவது கட்டம் நடக்காதுன்னு மட்டும் நெனைச்சிட முடியாது. குடியெ விட்டுப்புடறேம்ன்னு சொல்றவேம் பத்து நாளுக்கு குடிய விட்டுப்புட்டு இருந்தா பெரிய விசயம். ஏலே குடிச்சிக் குடிச்சே ஒருத்தம் செத்துப் போயிட்டாம்டான்னு சொன்னாக்கா அதெ கெட்டுப்புட்டு அவ்வேம் ரெண்டு நாளிக்கி குடிக்காம இருந்தா பெரிசு. பெறவு குடிக்க ஆரம்பிச்சிடுவாம். ஏன்னா குடியோட பழக்கம் உண்டு பண்ணி வெச்சிருக்கிற போதை அப்பிடி. சந்தையில தினசரி யேவாரம் பண்ற போதையும் அப்பிடித்தாம்.
            லேமன் பிரதர்ஸ் திவாலால சந்தை சரிஞ்சி ஒரு பத்து நாளுக்குக் காத்தடிச்சு, ஈயோட்டிக்கிட்டுக் கெடந்த தொண்டாமூத்தூரு கேப்பிட்டலோட கூத்தாநல்லூரு பிராஞ்சு கூடிய சீக்கிரமெ கலை கட்ட ஆரம்பிச்சிடுச்சு. ஆயிரத்து இருநூத்துலேந்து ஐநூத்துச் சொச்சமா கொறைஞ்ச வாடிக்கை பண்றவங்களோட எண்ணிக்கையும் கூடிய சீக்கிரத்துல தொள்ளாயிரம் சொச்சத்துக்கு வந்திருக்கு. அதாங் சந்தையில இருக்குறவங்களோட மனநிலை. இது வுட்டாலும் அது வுடாது, அது வுட்டாலும் இது வுடாது, எது வுட்டாலும் அது இதுன்னு எதுவும் வுடாதுன்னு திரும்ப வந்துடுவாங்க. அப்பிடி வந்துத்தானே ஆவணும். அப்பத்தானே மாபெரும் சூதாட்டத்தோட ரெண்டாவது கட்டம் நடக்க முடியும். மாபெரும் சூதாட்டத்தோட முதல் கட்டம் ரெண்டாயிரத்து எட்டாவது வருஷத்துல நடந்துச்சுன்னா, அதோட ரெண்டாவது கட்டம் ரெண்டாயிரத்து ஒம்போதுல நடந்துதாங் கொடுமெ. கொடுமென்னு கொடுமென்னு இங்க விட்டு அங்கப் போனா அங்க ஒரு கொடுமெ தலைய விரிச்சி ஆடுன கதெத்தாம்.
            குடிக்குறவேம் இருக்குற வரைக்கும் சாராயக் கடையெ மூடணும்னு நெனைச்சாலும் மூட முடியாது. சூதாடுறவேம் இருக்குற வரைக்கும் சூதாட்ட கிளப்புக்குப் பூட்டெ போடணும்னு நெனைச்சாலும் போட முடியாது. திருடணும்னு நெனைக்குற நெனைப்பு மனுஷனோட மனசுல இருக்குற வரைக்கும் திருட்டையும் ஒழிக்க முடியாது. பங்குச் சந்தையில தினசரி யேவாரம் பண்றவங்க இருக்கற வரைக்கும் ஆபீஸ்ஸப் போட்டு சம்பாதிக்கிறவங்களையும் கொறைக்க முடியாது. கால சுத்துன பாம்பு கடிக்காமலும் வுடாது. தோள சுத்துன கயிறு இறுக்காமலும் வுடாது. ஒத்த மனுஷனோட மனசு கோளாறு கொடுக்க ஆரம்பிச்சிட்டா அதெ நாலாறு மனுஷம் சேந்தாலும் தடுக்க முடியாது.
*****


No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...