14 Feb 2020

மாபெரும் சூதாட்டத்தின் முதல் கட்டம்

செய்யு - 358

            உழைச்சுச் சம்பாதிக்கிற காசே ஒடம்புலயும் ஒட்ட மாட்டேங்குது, கையிலயும் நிக்க மாட்டேங்குது. இதுல ஏமாத்திச் சம்பாதிக்கிற காசு, சூதாடிச் சம்பாதிக்கிற காசு எங்க ஒட்டும்? அது ஒரு நாளைக்கி வர்ற எடம் தெரியாம வந்து, இன்னொரு நாளைக்கிப் போற எடம் தெரியாம போயிடும். என்னத்தாம் ஒரு ஆளு பங்குச் சந்தையில கில்லினாலும் அவரு கண்ணுல வெளக்கெண்ணெய்ய விட்டுட்டுத்தாம் உக்காந்துக்கணும். ஒவ்வொரு நாளு பொழுது விடியறப்பயும் என்ன மாதிரியா சேதி வருதுன்னு பாத்துக்கிட்டே கிடக்கணும். அவுங்களால நிம்மதியா தூங்க முடியுமா? சாப்பிட முடியுமா?ன்னா கேட்டாக்கா அது கொஞ்சம் கஷ்டந்தாம்னு சொல்லணும். ஒரு நாட்டுல இன்னொரு நாடு குண்டு போட்டாக்கா அது பங்குச் சந்தையிலயே குண்டு போடுற மாதிரி. எல்லா நாட்டுப் பங்குச் சந்தைகளோட எல்லா பங்குகளும் சீட்டுக்கட்டுக மாதிரி சரியும்.
            பங்குக ஏம் சரியுது? ஏம் ஏறுது?ங்றதுக்கு பலவெதமான காரணங்கள் இருக்கு. ஒரு பெரிய பலூன்ல எந்த எடத்துல குத்துனாலும் பாலூனு காலிங்ற மாதிரித்தாம் ஒரு பங்கு எறங்குறதுக்கான காரணத்தெ சொல்லணும். சம்பந்தப்பட்ட பங்கோட நிறுவனத்துல எந்த எடத்துல தப்பு நடந்தாலும் அது அந்தப் பங்கோட வெலையைத்தாம் பாதிக்கும். ஒரு பங்கோட வெலை எறங்காம இருக்கணும்னா எந்த எடத்திலயும் எந்த கோளாறும் இல்லாம இருக்கணும். எந்த எடத்துல குத்துனாலும் காலியாயிட பலூனுக்கு ஊதுறதுக்கு மட்டுமே ஒரே ஒரு எடம் இருக்குற மாதிரி ஒரு பங்கு வளந்துகிட்டே போறதுக்கு ஒரே காரணம் சம்பந்தப்பட்ட பங்கோட நிறுவனத்தோட நம்பிக்கைத்தாம். நம்பிக்கையான நிறுவனத்தோட பங்கு ஏறுமுகத்துலத்தாம் இருக்கும். ஒரு நிறுவனத்தோட நம்பிக்கை மேல சந்தேகம் வந்துச்சுன்னா அந்தப் பங்கைச் சந்தையில போட்டு சாத்து சாத்துன்னு சாத்திடுவாங்க. அதாவது காத்த ஊதுன பலூனோட வாயிலேந்தே காத்தைத் தொறந்து விடுற மாதிரி அது. கடைசியில பலூனு புஸ்னு போயிடுமில்ல.
            வாழ்க்கையில சில விசயங்கள எப்பிடிப் புரிஞ்சிக்கிறது, எந்த மாதிரி புரிஞ்சிக்கிறதுன்னு தெரியல. அதுக்கு ஒரு தர்க்க ஞாயமே இருக்க மாட்டேங்குது. சம்பவங்க ஏதோ நடக்குது. அதுக்கு ஏதோ ஒரு வகையில எதையாச்சும் செஞ்சு தொலைக்க வேண்டியதா இருக்கு. அப்படி எதையாச்சிம் செஞ்சித் தொலைக்கலன்னா சுத்தி இருக்குற மனுஷங்க தொலைச்சிக் கட்டிப்புடுறாங்க. அதுக்குப் பயந்தோ, நயந்தோ, அனுசரிச்சுப் போவணுமேங்ற நெலமைக்குக் கட்டுப்பட்டோ பிடிச்சதோ, பிடிக்கலையோ ஏதோ ஒண்ணைச் செய்யுறாப்புல ஆயிடுது.
            சுப்பு வாத்தியாரு விகடுவைப் பங்குச் சந்தை புரோக்கிங் ஆபீஸ்லேந்து வெளியில கொண்டு வந்த சம்பவம் நடந்த ஒரு சில மாசங்கள்ல பங்குச் சந்தையே பணால் ஆவுற அளவுக்குச் சம்பவங்க நடக்க ஆரம்பிச்சிச்சு. சினிமா படத்துல வில்லன்மாருக ஒரு வசனம் சொல்லுவாங்க பாருங்க, இங்க அடிச்சா அங்க வலிக்கும்னோ, அங்க அடிச்சா இங்க வலிக்கும்னோ. அப்பிடித்தாம் அமெரிக்காவுல எங்க அடிச்சாலும் அது அங்க இங்கன்னு கணக்கு இல்லாம உலகத்துல இருக்குற அத்தனெ பங்குச் சந்தையிலயும் மரண அடியா விழுவும். ஆடிக் காத்துல அம்மியே பறக்குறப்ப துரும்பு ன்னா தெனாவெட்டா நிக்கவா முடியும்? உலகப் பொருளாதாரத்துல அமெரிக்காங்றது அம்மி மாதிரி. ரொம்பப் பெரிய பொருளாதாரம் அதுதாம். மித்த மித்த நாடுக அதுக்குக் கொஞ்சம் கம்மித்தாம். அதுவும் இந்தியப் பங்குச் சந்தை இருக்கே, அது எப்பிடின்னா அமெரிக்காவுக்கு ஜலதோசம் பிடிச்சா, இந்தியா இங்க தும்ம ஆரம்பிச்சிடும். நெலமை அப்பிடித்தாம் ஆகிப் போச்சு.
            அமெரிக்காவுல லேமன் பிரதர்ஸ்ங்றது ஒரு பெரிய பேங்கு. கடன உடன வாங்கி வூட்டைக் கட்டுறோம் பாருங்க. அப்பிடி வூடு கட்டுற சனங்களுக்கு எல்லாம் கடனெ வாரி வாரி வழங்குன பேங்கு அது. கட்டுன வூடு மேல மறுக்கா மறுக்கா கடன உடன போட்டு அந்தப் பேங்கு இஷ்ட கதிக்கு என்னென்னவோ வேலையப் பண்ணி கடன் மேல கடனா அள்ளிக் கொடுத்ததுல, கடைசியில கடனெ வசூலிக்க முடியாத நெலைக்குப் போயிடுச்சி அந்தப் பேங்கு. அமெரிக்காவுல இப்பிடிச் சம்பவங்க நடக்குறது சர்வ சாதாரணம். அப்பிடி ஒரு முடியாத நெலமைக்கு ஒரு நிறுவனம் போயிடுச்சின்னா அவுங்க பாட்டுக்கு திவால் நோட்டீஸ்ஸ கொடுத்துட்டு ஹாயா போயிட்டே இருப்பாங்க. இந்தச் சேதிய கேள்விப்படுற மித்த மித்த நாட்டுப் பங்குச் சந்தைகத்தாம் பேதியா போயிட்டு இருக்கும்.
            அமெரிக்காவுல லேமன் பிரதர்ஸ்ங்ற பேங்கு திவாலாயிடுச்சுங்ற சேதிகெடைச்சதுமே இந்தியப் பங்குச் சந்தையோட நிப்டியும், சென்செக்ஸூம் வரலாறு காணாத அளவுக்கு விழ ஆரம்பிச்சிடுச்சி. அமெரிக்கப் பங்குச் சந்தையே ஆட்டம் காணுற அளவுக்கு வந்துப்புடுச்சி. அமெரிக்காவுக்கே இந்த நெலமைன்னா மித்த மித்த நாடுகளோட நெலமைய சொல்லவா வேணும். எல்லா நாட்டுப் பங்குச் சந்தையும் அந்தச் சேதி கெடைச்ச நாளு அன்னிக்கு மரண அடி வாங்குனுச்சுங்க. இந்தியப் பொருளாதாரம் வலுவா இருக்குறதா அரசாங்கத்துலேந்து அறிக்கையே கொடுத்துப் பாக்குறாங்க. ஆனா சரியுற இந்தியாவோட பங்குச் சந்தைய நிறுத்த முடியல. ஊர்ல ஒருத்தம், ரெண்டு பேருக்கு காலராவோ, டெங்குவோ, சிக்கன்குனியாவோ வந்தா பரவாயில்ல. ஊருக்கே வந்துடுச்சுன்னா பீதி எப்பிடி இருக்குமோ அப்பிடி ஆயிடுச்சுச் சந்தையில இருந்த அத்தனெ பங்குகளோட நெலமையும். அன்னிக்கு ஒரு நாளுக்கு மட்டும் சரியாத பங்குகளே இல்லைங்ற அளவுக்கு ஆகிப் போச்சு நெலமை.

            அதெ விடவும் அமெரிக்காவுல அடுத்தடுத்தாப்புல வேற எந்தெந்த நிறுவனங்க திவாலு ஆகுமோன்னு பயம் வேற தொத்திக்க ஆரம்பிச்சிடுச்சு. ஒரு நாட்டுல எது திவாலு ஆனாலும் சமாளிச்சிப் புடலாம். ஒரு பேங்கு திவாலு ஆயிடுச்சின்னா அதெ சமாளிக்க முடியாது. ஒரு பேங்குங்றது அந்த நாட்டோ அத்தனெ யேவாரத்தோடயும், பணப் பொழக்கத்தோடயும் சம்பந்தப்பட்டதா இருக்கும். வூட்டுக்கடன், காருக்கான கடன், தனிநபர் கடன் இப்பிடி கடன்னு மட்டுமில்லாம இன்ஷ்யூரன்ஸ், பல பேரோட டெபாசிட்டு, பேங்க் பேலன்ஸ், டிரான்ஸாக்ஸன்னு ஏகப்பட்ட விசயங்க ஒரு பேங்கோட பின்னிப் பெணைஞ்சில்லா இருக்கும். நல்லா வளந்து நிக்குற ஒரு மரத்தெ பட்டுப் போக வைக்க வேற எங்கயும் ஆசிட்ட ஊத்த வேண்டியதில்ல, அதோட ஆணி வேர கண்டுபிடிச்சி அங்க மட்டும் ஊத்துனா போதுங்ற மாதிரித்தாம், நல்லா இருக்குற ஒரு நாட்ட குட்டிச் சுவராக்க அந்த நாட்டோட ஒரு பேங்குல கைய வெச்சால போதும். லேமன் பிரதர்ஸங்றது அமெரிக்காவோட ரொம்பப் பெரிய பேங்கு. அந்தப் பேங்கோட நெலமையே இப்பிடி ஆயிடுச்சுன்னா மத்த பேங்குகளோட நெலமையில்லாம் என்னாவுறது? போற போக்கைப் பாத்தா நாளைக்கு அமெரிக்காவே இருக்குமா? இருக்காதாங்ற அளவுக்குப் பங்குச் சந்தையில பேச்சு உண்டாயிப் போயிடுச்சு.
            அந்த ஒரு நாள்ல மட்டும் பங்குச் சந்தையில யாராச்சியும் ‍தினசரி யேவாரம் பண்றேம்னு பங்குகள வாங்கிப் போட்டிருந்தா அவ்வேம் நூறாவது மாடியிலேந்து கண்ணைக் கட்டிக்கிட்டுக் குதிக்க வேண்டியதுதாம். தினசரி யேவாரங்றது காலையில பங்குச் சந்தை ஆரம்பிக்கிறப்ப வாங்கியோ, வித்தோ செஞ்சிருந்தா, சாயுங்காலம் சந்தை முடியுறப்போ வாங்கியிருந்தா வித்தோ, வித்திருந்தா வாங்கியோ கணக்கெ நேர் பண்ணிப்புடணும். இதுல பங்கெ வாங்கியிருந்தா வெலை ஏறியிருக்கணும். பங்கெ வித்திருந்தா வெலை எறங்கியிருக்கணும். இது மாறி நடந்திருந்தா தலையில துண்டப் போட்டுட்டுத்தாம் போவோணும். அதலயும் வித்தெ பங்கெ வாங்கித்தாம் ஆவணும். அதுக்கு வேற வழியே யில்ல. ஆனா வாங்குன பங்கெ மட்டும் மறுநாளு வரைக்கும் வெச்சிருந்து ‍வெலை ஏறுதான்னு பாத்து விக்கலாம்.  மறுநாளும் வெலை ஏறமா போயிடுச்சுன்னா ஒண்ணும் பண்ண முடியாது. ஒண்ணு வித்துட்டு வெளியில வரணும், இல்லே அந்தப் பங்குகளுக்கு எம்மாம் காசிய கொடுக்கணுமோ அம்மாம் காசிய கொடுத்து டெலிவரியல்லோ எடுக்கணும்.
            அமெரிக்காவோட லேமன் பிரதர்ஸ் திவாலான அன்னிக்கு ஒரு நாளு பங்குச் சந்தையப் பாக்குறவேம் அதெ ஆயுசுக்கும் மறக்க மாட்டான். அடிச்ச அடியில ஆளு இன்னிக்கே உசுரு பொழைப்பானா, மாட்டானான்னு நெலமை இருக்குறப்போ, எவானச்சிம் அடி வாங்குன ஆளுக்கு நாளைக்கி மூச்சு ஓடுமான்னு கேப்பானா சொல்லுங்க. அதால அன்னிக்குப் பங்குகள வாங்குனவங்க நாளைக்கு ஒரு நாளு பொறுத்துப் பாப்போம்னு நெனைக்கல. அன்னிக்கே எம்மாம் நட்டம் வந்தாலும் வரட்டும்னு வித்துப்புட்டாங்க. அத்தோட விட்டுச்சா சங்கதி? அதாங் யில்ல. நீண்ட கால நோக்கத்துல சந்தையில முதலீடு பண்ணவங்களும் அன்னிக்குப் பங்குகளெ விக்க ஆரம்பிச்சாங்கப் பாருங்க, அதுல வேற பங்குச் சந்தை சரியோ சரின்னு சரியுது. பங்குச் சந்தையில நிஜமான நெலவரம் ரெண்டு அடிக்கு காலை வாரி விட்டுச்சுன்னா, பயமும் வதந்தியும் இருக்குப் பாருங்க அது நாப்பது அடிக்கு வாரி வுடும். அன்னிக்கு சந்தைச் சரஞ்சதெ பாத்தவங்க இத்தோட பங்குச் சந்தையே காலிங்ற முடிவுல, ஆட்டம் காலி படுதா மிச்சம்னு எடத்தெ காலி பண்ணிட்டுப் போயிட்டே இருக்காங்க.
            அதுக்கு அடுத்தடுத்த நாள்லயும் சந்தை சரியுதுன்னா மணல்ல கட்டி வெச்ச கோட்டை சரியும் பாருங்க அப்பிடிச் சரியுது. பங்குகள வாங்க சந்தையில ஆளுங்களே இல்ல. எல்லாரும் விக்குறதுக்கு நிக்குறாங்க. பங்குச் சந்தையில பங்கு இருக்குறவேம், இல்லாதவேம்னு ஆளாளுக்கு விக்குறாம். பங்கு இல்லாட்டியும் வித்து வித்து வெலை எறங்குறப்ப வாங்கி வாங்கி தினசரி யேவாரத்துல கணக்கெ நேர் பண்ணிடலாம். அதெ ஷார்ட் செல்லிங்ம்பாங்க. அப்பிடி வேற நடக்குது. வாங்குறதுக்கு கிராக்கி இருந்தாத்தானே பொருளோட வெலை ஏறும். வாங்குறதுக்கு ஆளே இல்லங்றப்ப பொருளோட வெலை அடிமாட்டு வெலைக்குச் சரிஞ்சிடும் இல்லையா. அதால பங்குகளோட வெலை மலை உச்சியிலிருந்து குத்துவாட்டமா சறுக்கிக்கிட்டு வர்றவேம் நெலைமை போல ஆயிடுச்சு. இனுமே பங்குச் சந்தைன்னே ஒண்ணு இருக்காதுங்ற மாதிரில்லா அன்னிக்குப் பல பேரு பேசிக்கிட்டாம்.
            கூத்தாநல்லூர்ல தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்ல விகடு கடைசியா எல்லாத்தையும் சேத்து விட்டுக் கொடுத்துட்டு வந்தத்துக்குப் பெறவு லெனினை திருவாரூர்லேந்து இங்க அவரை மேனேஜராக்கி வாடிக்கைப் பண்றவங்களெ ஆயிரத்து எரநூத்து பேரு வரைக்கும் கொண்டு வந்துப்புட்டாங்க. தொண்டாமுத்தூரு கேப்பிட்டலுக்கு இருந்த பிராஞ்சிலேயே அதிகம் வாடிக்கையாளரு உள்ள பிராஞ்சா மட்டுமில்லாம, அதிகம் தினசரி யேவாரம் பண்ற பிராஞ்சாவும் அதெ மாத்திப்புட்டாங்க குஞ்சு கவுண்டரும், ரித்தேஸூம் சேர்ந்துகிட்டு. மாசத்துக்கு ஒரு மீட்டைப் போட்டு பங்குச் சந்தையில எப்பிடில்லாம் சம்பாதிக்கலாம்னு ஆசையெ காட்டுனதுல கூத்தாநல்லூரு பிராஞ்சுல யேவாரம் பிய்ச்சிகிட்டுப் போவ ஆரம்பிச்சிடுச்சு. விகடு இருந்த வரைக்கும் தினசரி யேவாரம் நடக்காத பிராஞ்சுல இப்போ தினசரி யேவாரம் நடக்காத நாளே கெடையாதுங்ற அளவுக்கு நெலமை ஆயிப் போயிடுச்சு. ஒரு புரோக்கிங் ஆபீஸூக்கு மூணு டெர்மினலே அதிகம்ங்ற நெலையில கூத்தாநல்லூரு ஆபீஸ்ல ஏழு டெர்மினல போட்டு நெலமைய சமாளிக்குறாப்புல ஆயிடுச்சு நெலமை.
            லெனினோட காட்டுல பணமழையா கொட்ட ஆரம்பிச்சுது. ஆபீஸ்ல எந்த அளவுக்கு கிளையண்ட்ஸ் தினசரி யேவாரம் அதிகம் பண்றாங்களோ அந்த அளவுக்கு மேனேஜருக்குத் தனி கமிஷம் போவும்ல்லா. அதுல கொட்டுன பணமழை லெனினுக்கு. லெனினுக்குக் கூத்தாநல்லூர் பிராஞ்ச்ல மேனேஜர் ஆனது ஜாக்பாட் கெடைச்சது போல ஆயிடுச்சு.
            குஞ்சுக் கவுண்டருக்குச் சந்தோஷம்னா சந்தோஷம். "பொழைக்கத் தெரியா கொசகெட்டப் பயெ வெகடு! அவ்வேம் இருந்துகிட்டு அவனும் சம்பாதிக்கலல்லோ, நம்மளயும் சம்பாதிக்க வுடலல்லோ. ஒரு வழியா பயல தொலைச்சிப் போட்டுப் போட்ட பெறவல்லோ ஆபீஸூ வெளங்குதாக்கும்!"ன்னு சொல்லியிருக்காரு. 
            ஒடனே உப்புற பலூனு ஒடனே உடையும்னு சொல்லுவாங்க இல்லே. லேமன் பிரதர்ஸ் திவாலான அன்னிக்கு கூத்தாநல்லூர்ல தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட ஆபீஸூ கண்ணாடி உடைஞ்சிச்சு. ரண்டு டெர்மினலோட கம்ப்யூட்டரு சிஸ்டம் தரையில சுக்கு நூறாயி கெடந்துச்சு. கூத்தாநல்லூர்ல எட்டு தற்கொலை முயற்சிக நடந்திச்சு. அதுல ஒருத்தரு செத்துப் போனாரு. அடுத்தடுத்த நாட்கள்ல ஆயிரத்து எரநூத்து இருந்த வாடிக்கைப் பண்றவங்கள்ல முந்நூத்து அம்பதுக்கு மேல அக்கெளண்ட்ட ஒரே நேரத்துல குளோஸ் பண்ணாங்க. பெறவும் படிப்படியா அக்கெளண்ட முடிச்சிக்கிறவங்களோட எண்ணிக்கை கொறையல. கூடிட்டே போவ ஆரம்பிச்சிடுச்சு.
*****


No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...