செய்யு - 357
ஒரு தகப்பன் தன்னோட புள்ளையாண்டனப் பத்தி
நல்ல வெதமா நெனைச்சிட்டு போறதுக்குள்ள, கெட்ட விதமா நெனைக்க வைக்குற மாதிரி ஒரு சம்பவம்
நடந்துப் போயிடும். காலங்காலமா தகப்பன்மாருகளுக்கும், புள்ளைமாருகளுக்கும் எழுதப்படாத
தலையெழுத்து அதுதாம். சுப்பு வாத்தியாரு மனசுல நல்ல வெதமா மகனெப் பத்தி நெனைச்சுக்கிட்டு
வர்றாரு, பரவாயில்ல பயலுக்குப் புத்தி வந்திட்டு, வேலையப் பொறுப்பா பாத்திருக்கான்னு.
அவரு அப்பிடி நெனைச்சுக்கிட்டு வூட்டுக்கு வந்து சேர்ந்தா வூட்டுக்கு முன்னாடி போலீஸூ
வந்து நிக்குது. அவரோட அனுபவத்துல இப்பிடி வூடு தேடி போலீஸூ வந்து நின்னதில்ல. அத்தோட
போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு இந்த எடங்களுக்கெல்லாம் போயி நிக்கக் கூடாதுன்னு நெனைக்கிற
ஆளு அவரு.
காக்கி உடுப்புல வந்த போலீஸ்காரரு,
"இஞ்ஞ யாரு வெகடு?"ங்றாரு. நல்ல வேளையா அவரு வூட்டுக்குள்ள நொழையுறதுக்கு
மின்னாடி வாசலுக்கு வெளியே பாத்துட்டாரு சுப்பு வாத்தியாரு. இப்போ சுப்பு வாத்தியாரு
என்ன சொல்வாரு? அந்தப் பெருமைக்குரிய மகனெப் பெத்தெடுத்த மவராசன் நாந்தான்னா புளங்காகிதத்தோட
சொல்லுவாரு? அவரோட முகம் வாடிச் போயிடுச்சு. மனசுக்குள்ள மகனெப் பத்தி நெனைச்சிருந்த
பெருமிதமான நெனைப்புச் சுண்டிப் போச்சு. இந்தப் பயலப் பத்தி மட்டும் நல்ல வெதமாவே
நெனைக்கக் கூடாதுன்னு ஒரு வெறுப்பு அவரோட மனசுல வந்துப் போச்சு. அவரு பேசுறாரு. குரலு
கம்மிப் போச்சு. "எம் மவ்வேந்தாம்!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"கொஞ்சம் ஸ்டேசன் வரைக்கும் வந்துட்டுப்
போவணும்!"ங்றாரு போலீஸ்காரரு.
"எதாச்சிம் தப்பு நடந்துப் போச்சுங்களா?
அவ்வேம் வூட்ட வுட்டுக் கூட வெளியில போக மாட்டாங். வெளியில போனாக்கா பள்ளியோடந்தாம்
போவாங்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"நாம்ம வடவாதி ஸ்டேஷன் ஆளு. ஹெட்
கான்ஸ்டபுளு. என்ன விசயம்னு தெரியல. இன்ஸ்பெக்டரு அய்யாவுக்கு கூத்தாநல்லூரு ஸ்டேசன்லேந்து போனு வந்திருக்கு
ஆள கொண்டாரச் சொல்லி. இருந்தா கையோட கொண்டுட்டுப் போவலாமுன்னு வந்தேம்!"ங்றாரு
போலீஸ்காரரு.
"அவ்வேம் அஞ்சரை ஆறு மணி வாக்குலத்தாம்
வருவாம்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"செரி! வந்தோன்னா வடவாதி ஸ்டேஷனுக்கு
அழைச்சிட்டு வந்தீங்கன்னா... அஞ்ஞயிருந்து கூத்தாநல்லூரு ஸ்டேஷனுக்குப் போயிக்கலாம்!"ங்றாரு
போலீஸ்காரரு.
"வெவகாரம் ன்னான்னு சொன்னீங்கன்னா..."ன்னு
இழுக்குறாரு சுப்பு வாத்தியாரு.
"ஸ்டேசன்ல வெச்சிப் பேசிக்கிடலாம்.
அஞ்ஞ வந்திருங்க. மறுக்கா ஒரு தடவெ ஒஞ்ஞ வூட்டுக்கு வர வுட்டுறாதீங்க!"ன்னு சொல்லிட்டுப்
போறாரு போலீஸ்காரரு.
சுப்பு வாத்தியாருக்கு ஒடம்பு வெடவெடத்துப்
போயிடுச்சு. அப்பிடியே உள்ள வந்தவரு, "வெங்கு! வெங்கு!"ன்னு செளண்ட வுடுறாரு.
கொல்லைக் கடைசியில நிக்குற அதெ செளண்ட வுட்டுக் கூப்புட்டு வுட்டு, "பயெ எவளாச்சிம்
பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருக்கானா? ஒஞ்ஞளுக்குத் தெர்யாமா இருக்காதே!"ங்றாரு
வந்த கோவத்துல.
வெங்குவுக்கு ஒண்ணும் புரியல. "ஏஞ்ஞ
அவனே வயசுக்கு வந்த பொண்ணு கணக்கா வூட்டுக்குள்ளயே அடைஞ்சிக் கெடக்குற பயெ. அவ்வேம்
எஞ்ஞ எந்தப் பொண்ணு பின்னாடி சுத்தப் போறாம்? கூறு கெட்ட தனமா கேள்விய கேட்டுகிட்டு!
அவனெ கொறை சொல்லன்னா தூக்கம் வராது மனுஷனுக்கு! என்ன சென்மமோ!" அப்பிடிங்கிது
வெங்கு.
"இந்தாரு! அவனுக்குப் பிடிச்சா பிடிச்ச
பொண்ண கல்லாணம் பண்ணிட்டுப் போவட்டும். நமக்கு ஒண்ணுமில்ல. ஆனா அவ்வேம் அதுக்குப்
பின்னாடி இஞ்ஞ வூட்டுல இருக்கக் கூடாது. ஒரு பொண்ண பெத்து வெச்சிருக்கேம். அதுக்குக்
கெளரவமா கல்யாணத்த பண்ணி வுட்டாவணும்."ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"இத்தென்ன மொட்டத் தலையன் குட்டையில
வுழுந்தாங்ற மாதிரிக்கி ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசிக்கிட்டு. இத்தினி நாளும் அவனெப் பத்தி
பேசாததுக்குச் சேத்து வெச்சுப் பேசுதீயளோ? ன்னா ஏதுன்னு சொல்லிட்டுப் பேசோணும்.
அவனெ ஒத்த ஆம்பளப் புள்ள. மனுஷா நீயிச் சொல்றதெல்லாம் கேட்டுப்புட்டு வூட்டோட அடங்கிக்
கெடக்குறாம். ஊர்ல எந்தப் பயெ அப்பிடிக் கெடக்கறாம்? அவனெ போயி அத்து இத்துன்னு ஒண்ணு
கெடக்க ஒண்ணு சொல்லிக்கிட்டு? அப்பிடி அவ்வேம் எவளாச்சியும் இழுத்திக்கிட்டு வந்தா
நாம்ம வெச்சிப் பாத்துக்கிறேம். மனுஷனுக்கு இஷ்டமில்லையா. அவனெ அழைச்சிக்கிட்டுப் பொண்ணோட
நாம்ம போயிருக்கிறேம். நீயி ஒம்ம பொண்ணோட இஞ்ஞ இருந்துகிடுங்க!"ங்குது வெங்கு.
சுப்பு வாத்தியாருக்கு போலீஸ்காரரு வந்த
வெவகாரத்தை வெங்குகிட்ட சொல்ல யோஜனையா இருக்கு. நாம்ம ஒண்ணு சொல்லப் போயி, அத்து
ஒண்ணு நெனைச்சிக்கிட்டா என்னா பண்றதுன்னு அதுக்கு மேல ஒண்ணும் பேசாம வெளியில வந்து
டிவியெஸ்ஸ எடுத்தவரு நேரா விநாயகம் வாத்தியாரு வூட்டுல போயி நிக்குறாரு. "இதென்ன
கூமுட்டைகளா இருக்குங்களா? என்னவோ மனுஷம் வந்தாரு பேசுனாரு. ஒண்ணுஞ் சொல்லாம கொள்ளாம
வண்டிய எடுத்துட்டுக் கெளம்புறாரு. இப்பிடில்லாம் பண்ணா வூட்டுல இருக்குற பொம்முனாட்டிக
எப்டி நிம்மதியா இருக்குறதாம்?"ன்னு சுப்பு வாத்தியாரு கெளம்ப கெளம்ப வெங்குச்
சொன்னது அவரோட காதுல இன்னும் கேட்டுக்கிட்டுத்தாம் இருக்கு. அந்த வார்த்தைக காதை
விட்டு அகலாம சன்னமா ஒலிச்சிக்கிட்டு இருக்குறாப்புல படுது சுப்பு வாத்தியாருக்கு.
அவரு இப்போ நடந்ததெ சொல்லி விநாயகம் வாத்தியார்கிட்ட யோசனை கேக்குறாரு. சுப்பு வாத்தியாரு
சொல்ல கவனமா கேட்டுக்கிறாரு விநாயகம் வாத்தியாரு.
"பையனெ அஞ்ஞ அழைச்சிக்கிட்டுப் போயி
நாமளே வெவகாரத்தெ வெலைக்கு வாங்கிடக் கூடாது. கெளம்புங்க. நாம்ம ரண்டு பேரும் போயி
வடவாதி ஸ்டேசன்தான விஜாரிச்சிப்பிட்டு வந்துப்புடுவோம். அப்டி வெவகாரம் பெரிசுன்னா
நம்ம சங்கத்து ஆளுங்கள வாரச் சொல்லிப்புடுவோம். அவுங்கப் பேசிக்கிடட்டும். நாம்ம
ஒண்ணு கெடக்க ஒண்ணு வார்த்தைய வுட்டுப்புட்டு மாட்டிக்கக் கூடாது பாருங்க வாத்தியாரே!"ங்றாரு
விநாயகம் வாத்தியாரு.
"அதுவும் வாஸ்தவம்தான்! அதுவும் செரிதாம்!"ங்றாரு
சுப்பு வாத்தியாரு.
"வூடு தேடி ஸ்டேஷன்லேந்து கூப்ட்டு
வுட்டு இருக்காங்கன்னா... பொண்ணு வெவகாரமோ இருக்குமோன்னு மனசுக்குள்ள கொஞ்சம் பதட்டமா
இருக்குங் வாத்தியார்ரே!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"ம்ஹூம்! ஒஞ்ஞ மவ்வேம் எந்தப் பொண்ண
இழுத்துட்டு போவப் போறாம். எதாச்சிம் பொண்ணு வந்து அவ்வனெ இழுத்துட்டு ஓடுனாத்தாம்.
அப்டியும் அவ்வேம் அந்தாண்ட இந்தாண்ட நகர மாட்டாம். அந்தப் பொண்ணு இவ்வனெ தலை மேல
தூக்கி வெச்சிட்டுப் போனாத்தாம்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
"அப்பிடிச் சொல்லாதீங்க! இந்த மாதிரிப்
பயலுகள நம்ப முடியாது. மனசுக்குள்ள வெச்சிக்கிரத வெளியில வுட மாட்டோனுவோ. கமுக்கமா
இருந்து காரியத்தெ முடிச்சிப்புடுவானுவோ!"ங்றாரு சுப்பு வாத்தியாரு.
"ச்சும்மா இருங் வாத்தியார்ரே! நம்ம
பயல நாம்ம நம்பலன்ன வேற எவ்வேம் நம்புவாம்? அப்டில்லாம் ஒண்ணும் இருக்காது. ஒஞ்ஞளுக்கு
இப்பிடி ஒரு சந்தேகம் வந்துப்புட்டதால அவ்வனெயும் ஒருக்கா மின்னாடியே பாத்து, நாம்ம
சிலதெ பேசித் தீத்துக்கணும். இந்நேரத்துக்கு வூட்டுக்கு வந்திப்பானா?"ங்றாரு விநாயகம்
வாத்தியாரு.
"பள்ளியோடம் வுட்டு வூட்டுக்கும்
வெள்ளனமே வாரவும் மாட்டேங்றாம். அதெ வேற நெனைச்சா சந்தேகமால்ல இருக்குங்"றாரு
சுப்பு வாத்தியாரு.
"செரி! வாஞ்ஞ நேரா வூட்டுக்கு வண்டிய
வுட்டுப்புட்டு, அஞ்ஞ இல்லன்னா கோட்டகத்துக்கு வண்டிய வுட்டுப்புடுவேம்!"ங்றாரு
விநாயகம் வாத்தியாரு.
அப்பிடியே ஏற்பாடாவுது. வூட்டுக்கு வந்தா
வூட்டுக்கு இன்னமும் வரல விகடு. அதுவும் நல்லதுதாங், வூட்டுல வெச்சிப் பேசுறதெ வுட
வெளியில வெச்சி விசாரிக்க வசதின்னு சுப்பு வாத்தியாரும், விநாயகம் வாத்தியாரும் ரண்டு
பேருமா கெளம்பி விநாயகம் வாத்தியாரோட மேக்ஸ் ஹன்ட்ரட் ஆர் வண்டியில வடக்குத் தெரு
வழியா கோட்டகத்துக்குப் போற களிமங்கலத்து ரோட்டுல போறாங்க. போனாக்கா அப்போ விநாயகம்
வாத்தியாரு சொல்றாரு, "இந்த ரோட்டுல எப்பிடி நம்ம பயெ போறாம்ன்னே தெரியலயே?
இதுல போயிட்டு வாரதுக்கே அவனுக்கு அவார்டு கொடுக்கணு"ங்றாரு. களிமங்கலத்துக்குத்
திரும்புற பாலத்தக் கடந்தா எதுத்தாப்புல சைக்கிள்ல வர்றாம் விகடு.
இதென்னடா இது! மொதல்ல பள்ளியோடத்தப்
பார்க்க அப்பங்காரரு மட்டும் தனியா வந்தாரு, இப்போ போயி விநாயகம் வாத்தியாரையும்
அழைச்சிட்டு வாராரே, அவ்வளவு பிரமாதமா நாம்ம பள்ளியோடத்த வெச்சிருக்கிறோம்ன்னு நெனைச்சிக்கிறாம்
விகடு. அவுங்க ரண்டு பேரையும் எதுத்தாப்புல பாத்தவுடனே சைக்கிள்லேந்து எறங்கி நின்னுட்டாம்
விகடு. விநாயகம் வாத்தியாரும் வண்டிய நிப்பாட்டி எறங்கிட்டாரு.
விகடுவோட கிட்டக்க வந்த விநாயகம் வாத்தியாரு
சுத்திலும் ஒரு பார்வையப் பாத்துப்புட்டு, "சைக்கிள திருப்பு. பள்ளியோடத்துக்கு
ஒரு எட்டுப் போயிட்டு வந்துடலாம்!"ங்றாரு. விகடு ஒரு நிமிஷம் யோசிச்சவேம் தன்னடக்கமா
பேசுறதா நெனைச்சுக்கிட்டு, "அப்டில்லாம் ஒண்ணும் பெரமாதமா நாம்ம பள்ளியோடத்த
வெச்சிருக்கல்ல. சுமாராத்தாம் இருக்கும்."ங்றாம்.
"அத்தெ அஞ்ஞ வெச்சுப் பேசிக்கிடலாம்.
இஞ்ஞ வழியில வாணாம். நாலு பேத்து வருவாம் போவாம். சுத்தப்படாது!" அப்பிடின்னு
விநாயகம் வாத்தியாரு சொல்றப்பத்தாம் ஏதோ வெவகாரம்னு புரியுது விகடுவுக்கு. பள்ளியோடம்
போறதுக்குத் திரும்புனா ரோட்டுல நிக்குற ஒரு சுடுகுஞ்சுக்குத் தெரிஞ்சாலும் போச்சு.
வாத்தியார்ரு வந்திட்டார்டோய்ன்னு சத்தத்தப் போட்டு பத்து பாஞ்சு பேரையாவதுல்ல பள்ளியோடத்துலக்
கொண்டாந்துடுவானுவோ. அதால விகடு ஒரு தபா சுத்திலும் பாத்தாம். யாரும் மக்கா பெரிசா
வரக் காணும்.
"இஞ்ஞயே யாருமில்லயே! சுருக்கா வெவகாரம்
ன்னான்னு சொல்லிப்புடலாமே?"ங்றாம் விகடு.
ஒரு சுத்து அப்பிடியும் இப்பிடியும் தலைய
திருப்பிப் பாத்துக்கிட்டு, தொண்டைய ஒரு கனைப்புக் கனைச்சிக்கிட்ட விநாயகம் வாத்தியாரு,
"ஒண்ணுமில்ல. அத்து வந்து... சித்த நேரத்துக்கு மின்னாடி வூட்டுக்குப் போலீஸூ
வந்திருக்கு. அதாங் அப்பா அலறி அடிச்சிக்கிட்டு அஞ்ஞ வேற்குடிக்கு நம்ம வூட்டுப் பக்கம்
வந்துட்டு. ஏத்தோ வெவகாரம்னு புரியுது. என்னான்னு புரியல. வூட்டுல வெச்சி ஒம்மடகிட்ட
கேக்குறதெ வுட தனிக்கி இப்பிடி வெச்சிக் கேக்கலாம்னுத்தாம் அப்பார்ர அழைச்சிட்டு வந்திட்டேம்."ங்றாரு.
"அதாங்! நாம்ம வார முடியாதுன்னு சொல்லிட்டேமே.
பெறவு ஏம் போலீஸைல்லாம் அனுப்புறாங்க?" அப்பிடிங்கிறாம் விகடு.
"எலே வெகடு! நீயிப் பேசுறதெ பாத்தா
வெவரம் தெரிஞ்சவேம் மாரில்லா இருக்கு! ன்னா வெவகாரம்? எத்தா இருந்தாலும் சொல்லிப்புடு.
பெரிசா போறதுக்கு மின்னாடி முடிச்சாவணும். புகையறப்பவே தண்ணிய அள்ளி ஊத்தியாவணும்!
"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
"அதல்லாம் ஒண்ணுமில்லங்கய்யா. அத்து
ஒண்ணுமில்ல. கண்டுக்கிட வாணாம்."ங்றாம் விகடு.
"ஒண்ணுமில்லன்னா ஏத்தோ இருக்கிறதாங்
அர்த்தெம். ச்சும்மா சொல்லு. எத்தா இருந்தாலும் பாத்திப்புடுவேம்! ஒலகத்துல எவனும்
பண்ணாத தப்ப நீயி பண்ணிப்புட முடியாதுங்! எத்தா இருந்தாலும் சொல்லிப்புடு! இனுமே புதுசா
தப்பு எதையும் கண்டுபிடிச்சி நீயிச் செய்யப் போறதில்ல. நாஞ்ஞ எதாச்சிம் நெனைச்சுக்குவேம்னு
நெனைச்சிக்க வாணா"ங்றாரு விநாயகம் வாத்தியாரு. இவ்வளவையும் கேட்டுக்கிட்டு பக்கத்துல
நிக்குறாரே தவிர சுப்பு வாத்தியாரு எதையும் பேசல, கேக்கல. அவருக்கும் சேர்த்து விநாயகம்
வாத்தியாருதாம் கேக்குறாரு.
*****
No comments:
Post a Comment