12 Feb 2020

கேள்வியின் நாயகரு வந்துட்டாரு!

செய்யு - 356

            கோட்டகத்துப் பள்ளியோடத்துல வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் ஆகிப் போச்சு. இந்த ரெண்டு வருஷம் போனது தெரியாம வேலை பாத்துட்டுக் கெடந்தாம் விகடு. ரெண்டு வருஷத்துல விகடு இருந்த நேரத்தெ ரெண்டு பாதியா பிரிச்சா அது பள்ளியோடத்துல இருந்த நேரம் பாதி, வூட்டுல இருந்த நேரம் மீதின்னுத்தாம் வரும். அதிகபட்சமா அவ்வேம் வெளியூரு போனதுன்னு கணக்கு பண்ணாக்கா அது ஆர்குடி ஆபீஸூக்குப் போனதும், திருவாரூ நூலகத்துக்குப் போனதுதாம். சொந்தக்காரங்களோட விஷேச தேவைன்னா சுப்பு வாத்தியாரும், வெங்குவுதாம் போயி வருவாங்க.
            திருவாரூக்கும் வடவாதிக்கும் போயி வர்ற எட்டாம் நம்பர் பஸ்ஸூ அது ரண்டுக்கும் எடையிலத்தாம் போயி வரும். ஆர்குடிக்கும், வடவாதிக்கும் போயி வர்ற ரெண்டாம் நம்பர் பஸ்ஸூ அது ரண்டுக்கும் இடையிலத்தாம் போயி வரும். அந்த பஸ்ஸூங்களப் போலத்தாம் விகடுவும் இருந்தாம். பள்ளியோடம், வூடு இந்த ரெண்டுக்கும் இடையிலத்தாம் போயிட்டும் வந்துட்டும் கெடந்தாம். எட்டாம் நம்பரு பஸ்ஸூ, ரண்டாம் நம்பரு பஸ்ஸூன்னு பேரு கொடுத்த மாதிரி விகடுவுக்கும் நம்பர்ல பேர கொடுக்கணும்னா ரண்டாம் நம்பரு வாத்தியாருன்னு பேரு கொடுக்கலாம். ஏன்னா அவ்வேன் கோட்டகத்துல இருக்குற வூடு, திட்டையில இருக்குற வூடுன்னு இந்த ரண்டுக்கும் இடையிலத்தான ஓடிட்டுக் கெடந்தாம். அத்தோட கோட்டகத்துப் பள்ளியோடத்துல ரண்டு வாத்தியாருங்க பாக்க வேண்டிய வேலைய இவ்வேன் ஒத்த வாத்தியார்ர வேற பாத்துட்டக் கெடந்தாம்ல.
            ஆர்குடி ஆபீஸ்ஸப் பொருத்த மட்டில கோட்டகத்துப் பள்ளியோடத்திலேந்து எந்தப் பிரச்சனையும் இல்லாம இருந்தா போதும்னு நெனைச்சிட்டாங்க. விகடு வேலையில சேர்ந்த பிற்பாடு கோட்டகத்துப் பள்ளியோடத்துல ஒரே பிரச்சனைன்னா வேலி வைக்குறதுல ஆரம்பிச்ச பிரச்சனைத்தாம். வேலி வைக்கப் போயி அது காம்பெளண்ட்டு சுவர்ரா மாறும்னு விகடுவே எதிர்பார்க்கல. அது அப்பிடி, இப்பிடின்னு எப்படியோ மாறிப் போயி கடைசியில அப்பிடிக் காம்பெளண்டு சுவரா மாறிப் போனதுல பள்ளிக்கூடமே ஒரு அமைப்பா ஆயிடுச்சு. அப்போ ஆர்குடி பீடியோவா இருந்தவரும், பிரசிடெண்டு உதயச்சந்திரனும் மனசு வைக்கலன்னா அது நடந்துருக்குமான்னா நடந்திருக்காது. ரண்டு பேருமே அதால பேரு கெடைக்கணும்னுலாம் நெனைக்கல. கமுக்கமா இருந்து காரியத்தெ முடிச்சுக் கொடுத்துட்டு, அப்பிடியே அந்த விசயமும் வெளியில தெரியாத மாதிரிக்கி கமுக்கமா இருந்துகிட்டாங்க. விகடுவும் அப்படியே இருந்துகிட்டாம்.
            ஆர்குடி ஒன்றியத்துல இவ்வேம் பள்ளியோடம் இப்படி இருக்குங்றதுல்லாம் யாருக்கும் தெரியாது. யாருக்கும் அவ்வேம் தெரிவிக்கிறதும் இல்ல. பொதுவா வாத்தியார்ர இருக்குறவங்க அப்பிடி இருக்கக் கூடாது. வாத்தியார்ர இருக்குறவரு அறிவுப் பரவலுக்கு உடந்தையா இருக்கணும். ஆனா விகடு அப்பிடி இல்ல. அவ்வேம் என்னவோ இரும்புத்திரை பள்ளியோடம் மாதிரி பள்ளியோடத்த நடத்திக்கிட்டுக் கெடந்தாம். அதெ விடவும் கோட்டகத்துப் பள்ளியோடத்த வந்துப் பாக்குறதுங்றது சாதாரணபட்ட காரியமும் இல்ல. ஏழு கடல், ஏழு மலை தாண்டி வர்ற அதியத்தெ செய்யத் தெரிஞ்சவங்கத்தாம் கோட்டகத்துப் பள்ளியோடத்த வந்து பாக்கலாம். ஒரு வகையில கோட்டகமும் தனித்தீவு மாதிரி இருக்குற கிராமம்தாம். இன்னொரு வகையில கோட்டகம் மலை மேல இருக்குற ஒரு கிராமம் மாதிரித்தாம். அதால ஏழு கடல், ஏழு மலைன்னு சொல்லிக் கோட்டகத்தெ சொல்றதுல எந்த தப்பும் வந்துப்புடாது.
            ஒரு தகப்பங்காரரு நாட்டுல இருக்குற அப்பிடி எல்லாரையும் மாதிரி இருந்திட முடியாது. பயலோட போக்கு எப்பிடி இருக்கு? அவ்வேம் எந்த மாதிரிக்கி நடந்துகிட்டு இருக்காம்? சரியாத்தாம் இருக்கானா? யில்ல சரியா இருக்குற மாதிரி பாசாங்குப் பண்ணிட்டு இருக்கானா? இப்பிடியில்லாம் பல கேள்விக பிள்ளைகளப் பெத்த தகப்பமாருகளுக்கு வந்துகிட்டே இருக்கும். தப்பு பண்ண வாய்ப்புக் கெடைக்காத இடத்துல தப்பே பண்ணாம இருக்குறது ஒரு பெரிய விசயம் இல்ல. தப்பு பண்ண வாய்ப்புக் கெடைக்குற எடத்துல தப்பு பண்ணாம இருக்குறதுலதான எல்லாமும் இருக்கு. கோட்டகத்துப் பள்ளியோடத்துக்கு இவ்வேம் போனாலும், போவாம இருந்தாலும் அதெ கேக்க நாதியில்ல. அப்பிடிப் பள்ளியோடத்துல போயி இவ்வேம் படுத்துக் கெடந்தாலும் சரிதாம், பாடஞ் சொல்லிக் கொடுக்காம கெடந்தாலும் அதெ கேக்கவும் அங்க ஒரு சீவனும் இல்ல. கோட்டகத்துச் சனங்களப் பொருத்த வரைக்கும் பள்ளியோடத்த ஒரு கொடோன்னு மாதிரி அவங்ககிட்ட கொடுத்திட்டா போதும். அவுங்க அதுக்குப் பெறவு பள்ளியோடம் தொறந்து கெடந்தாலும் ஏன்னு கேக்க மாட்டாங்க, பள்ளியோடம் மூடிக் கெடந்தாலும் எதுக்குன்னு கேக்க மாட்டாங்க. அப்பிடி ஒரு சனங்க அவுங்க.

            இப்பிடிப்பட்ட ஒரு பள்ளியோடத்துல வேலை பாக்குற மவ்வேம் ரண்டு வருஷத்துல எப்பிடி இருக்காம்? பள்ளியோடத்த என்ன கதிக்கு வெச்சிருக்காம்? அப்பிடின்னு உரசிப் பாக்கணும்னு சுப்பு வாத்தியாருக்கு மனசுக்குள்ள ஒரு எண்ணம் இருந்திச்சோ என்னவோ! ஆரம்பத்துல சுப்பு வாத்தியாரும் பய பள்ளியோடத்துக்கும், வூட்டுக்கும் எந்தப் பிரச்சனையில்லாம ஓடிட்டுக் கெடந்தா தேவலாம்னு பட்டதால அவரும் விகடுவெ பெரிசா கண்டுகிடல. அதுக்குன்னு அப்பிடியே இருந்திட முடியுமா? ஒரு நாளு கெளம்பி அவரு பாட்டுக்குக் கோட்டகம் பள்ளியோடத்துக்கு வந்து நிக்குறாரு. இப்பிடி திடுதிப்புன்னு வந்து நின்னா அதெ எப்பிடிப் புரிஞ்சிக்கிறது? மவ்வேன் எப்பிடி பள்ளியோடத்த வெச்சிருக்கிறாம், எப்பிடி வேலை பாக்குறாம்னு பாக்குறதுக்கா வந்தாரா? வேற எதுக்கு வந்தாருன்னு சரியா தெரியல.
            அவரு வந்துப் பாத்தா டிரேக எல்லாம் பழக்கடையில பழங்க அடுக்கி வெச்சிருக்கிறாப்புல அழகா அடுக்கி வெச்சிருக்கு. புள்ளைங்க எல்லாம் சின்ன சின்ன சேர்களப் போட்டு அதுல உக்காந்துகிட்டு நடுவுல ஒரு சின்ன மேசைய வெச்சுக்கிட்டு அதெ சுத்தி உக்காந்து படிச்சிக்கிட்டு இருக்குதுங்க. வாத்தியாரும் நாற்காலியலத்தாம் உக்காந்துருக்காரு. புள்ளைங்களும் நாற்காலியிலத்தாம் உக்காந்துருக்குங்க. வாத்தியாருக்கும் மேசை இருக்கு. அதே போல புள்ளைங்களுக்கும் மேசை இருக்கு. பள்ளியோடத்துல புள்ளைங்க சத்தந்தாம் தாங்க முடியல. குய்யோ முய்யோன்னு ஒரே சத்தமா கெடக்கு. புள்ளைங்க பேசிட்டுக் கெடந்தா அந்தப் புள்ளைகளப் பாத்து பேசாதீகன்னு சொல்ல மாட்டாம் விகடு. புள்ளைக சிரிச்சிக்கிட்டுக் கெடந்தால அதுகளப் பாத்து சிரிக்காதீங்கன்னு சொல்ல மாட்டாம் விகடு. புள்ளைங்க இஷ்டத்துக்குப் பேசணும், சிரிக்கணும்னு நெனைப்பான் விகடு. அதான புள்ளைகளோட இயல்பு. அதுகளோட இயல்போட அதுகள வளர விட்டாத்தாம் அத்து சரியான வளர்ச்சியா இருக்கும்னு நெனைப்பாம் விகடு.
            அத்தோட பள்ளியோடத்துல பதிவேடுகள வைக்குறதுக்கு ரெண்டு பீரோ அழகா இருக்குது. ஒரு கட்டடம்தான் பள்ளியோடம். அதுக்குள்ள நாலு மின்விசிறிங்க சுத்திக்கிட்டு இருக்குது. கட்டடத்துக்கும் வெளிர் நீல நிறத்துல பெயிண்ட அடிச்சி பாக்குறதுக்கு வித்தியாசமா இருக்கு. வெளி வராந்தா மரச்சட்டத்தால அழகா அடைச்சி இருக்கு. அதுக்கும் நீல நெறத்துல பெயிண்ட அடிச்சி பக்காவா இருக்கு.
            வெளியில விளையாடுறதுக்கு எடம் பாக்க அம்சமா இருக்கு. அங்கங்க பச்சை பச்சையா குடைய விரிச்சு வெச்சாப்புல புங்க மரமும், வேப்ப மரமும் பம்பல் வுட்டுகிட்டு நிக்குதுங்க. சுத்திலும் காம்பெளண்டு. அது ஒரு கம்பீரத்தெ கொடுக்குது. பள்ளி மானியம், பராமரிப்பு மானியம்னு அரசாங்கத்துல கொடுத்து காசுல செஞ்சது, ஊருல உள்ளவங்களெ பிடிச்சி பள்ளியோடத்துக்கு செய்ய வெச்சதுன்னு பள்ளியோடத்துல இப்பிடி ஒரு மாத்தம் உண்டாயிடுச்சு.
            ஒரு பத்து நிமிஷம் அப்படியும் இப்படியும் சுத்திப் பாத்தவரு, அஞ்சாப்பு பய ஒருத்தனெ கூப்புட்டு தமிழ் புத்தகத்தெ எடுத்துப் படிக்கச் சொல்றாரு சுப்பு வாத்தியாரு. அவ்வேம் பாட்டுக்கு கட கட கச்ன்னு படிச்சி நிப்பாட்டுறாம். செரின்னுட்டு இங்கிலீஷ் புத்தகத்தெ எடுத்து படிக்கச் சொல்றாரு. அதுலயும் பய பொளந்து கட்டுறாம். அவ்வேம் சரியான உச்சரிப்போட படிக்கிறானோ இல்லையோ, அவனுக்குத் தெரிஞ்ச மொறையில எழுத்தக் கூட்டி இங்கிலிபீஸ்ல படிக்கிறாம். இப்போ ஒம்போதுல எத்தென முக்கால்டா இருக்கும்ங்றாரு சுப்பு வாத்தியாரு. அவ்வேம் ஒரு நிமிஷம் யோசனெ பண்ணிப்புட்டு பன்ணெண்டாங்றாம்.
            சுப்பு வாத்தியாரு அவனெ விடல. "நேராக்கா போனாக்கா ஒரு அடி, ரண்டு அடின்னு அளப்பே. இப்பிடிக்கி நின்னு அப்பிடிக்கிச் சுத்திறேய்ன்னா அத்‍தெ எப்பிடி அளப்பே?"ங்றாரு. பய திருதிருன்னு முழிக்கிறாம். சுப்பு வாத்தியாரு இப்போ விகடுவெ பாக்கறாரு. விகடு இப்போ அவ்வேங்கிட்ட, "எலே கதவெ சுத்தி விட்டாக்கா அதெ எப்பிடி அளப்பேன்னு கேக்குறாங்கடா!"ங்றாம். ஒடனே பய சுதாரிச்சிக்கிட்டுச் சொல்றாம், "அத்து வந்து பாகையில அளப்பேம். பாகெமானிய வெச்சு அளப்பேம்!" அப்பிடின்னு. விகடு கோணங்கள்ற பாடத்தெ பள்ளியோடத்துல இருக்குற கதவச் சுத்தி விட்டுத்தாம் நடத்துவாம். அரசாங்கப் பள்ளியோடத்துக் தகரக் கதவு அதுக்குத் தோதா இருக்கும். கதவு சுத்துற தரைக்குக் கீழே அப்பிடியே பாகைமானியை சாக்குபீஸால வரைஞ்சுப் புடுவாம். வரைஞ்ச பிற்பாடு கதவெ கொஞ்சம் கொஞ்சமா நகத்தி பூச்சிய பாகையிலேந்து நூத்து எம்பது பாகை வரைக்கும் நடத்தி முடிச்சிடுவாம். புள்ளைங்களுக்கு எந்த வெதத்துல பாடத்தெ சொல்லிக் கொடுக்குறோமோ அதெ லேசா ஞாபவத்துக்குக் கொண்டு வந்தாத்தாம் அதெ டக்குன்னு பிடிச்சிக்கிட்டு புள்ளைங்க பதிலச் சொல்லும். சுப்பு வாத்தியாரு ஏம் அப்பிடி கேள்விக் கேட்டாருன்னா அவரு புள்ளைகள நிப்பாட்டி வெச்சு சுத்த விட்டுத்தாம் கோணத்த நடத்துவாரு. விகடு கதவெ வெச்சித்தாம் கோணத்த நடத்துவாம். பதிலு இப்போ சரியா வந்ததுல சுப்பு வாத்தியாரு ஒண்ணுஞ் சொல்லல. அவரு பாட்டுக்குக் கெளம்பிப் போயிட்டே இருக்காரு. எதுக்கு இப்பிடிச் சம்பந்தம் இல்லாம சுப்பு வாத்தியாரு வந்தாரு? ஒரு பயல பிடிச்சிக் கேள்வியக் கேட்டாரு? அவரு பாட்டுக்கு இப்பிடி கெளம்பிப் போயிட்டு இருக்காருங்றதெல்லாம் அவரு மட்டுமே அறிஞ்ச ரகசியம்.
            இதுக்குப் பெறவு சுப்பு வாத்தியாரு தங்கிட்டெ எதாச்சிம் பேசுவாருன்னு எதிர்பார்த்தாம் விகடு. அவரு ஒண்ணும் பேசல. விகடுவும் ஒண்ணும் கண்டுகிடல. அதெ அப்பிடியே விட்டுப்புட்டாம்.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...