11 Feb 2020

கொடுக்குறதுல எது பெரிசு தெரியுமா?

செய்யு - 355

            சனங்களோட மனசுல ஒரு நம்பிக்கை வாரதுதாம் கஷ்டம். அந்த நம்பிக்கை வந்துப்புட்டா அதுக்காக எதெ வேணாலும் செய்வாங்க. சனங்களுக்குப் பள்ளியோடத்து மேல ஒரு நம்பிக்கை வந்திடுச்சி.
            இப்போ இருக்குற நெலையில அவுங்களுக்குப் பணங்றது அவசியம் தேவை. இங்க இருக்குற பெரும்பாலான சனங்க அன்னாடம் உழைச்சிச் சம்பாதிக்கிறவங்க. அவுங்க எல்லாரும் விவசாய கூலிங்கத்தாம். பழைய டெல்டாவுல விவசாயங்றது வருஷத்துக்கு முந்நூத்து அறுபத்து அஞ்சு நாளும் நடக்கிறதில்ல. ஆத்துல தண்ணி வந்தா நடக்கும். மின்னாடியெல்லாம் ஆத்துல ஆடி மாசத்துக்கு மின்னாடியே தண்ணி வந்து குறுவை, சம்பான்னு ரெண்டு போகம் நடந்த விவசாயம் இப்போ சம்பான்னு ஒரு போகமா சுருங்கிப் போச்சு. சில வருஷங்கள்ல ஆடிப் பதினெட்டாம் பெருக்குக் கொண்டாட முடியாத அளவுக்கு வெண்ணாறும், வெள்ளையாறும் வறண்டுக் கெடக்கு. ஒரு போகமா சுருங்கிப் போயிடுச்சு விவசாயம்னு நெனைச்சா அந்த ஒரு போகமும் இல்லாம போயிடுமோங்ற மாதிரி ஒரு பயமும் இருக்கத்தாம் செய்யுது.
            விவசாயம் நடக்குறப்பத்தாம் ஊரே ஜேஜேன்னு இருக்கும். கடைத்தெரு களை கட்டும். டீக்கடைக காலையில மூணு நாலு மணிக்கெல்லாம் கண்ணு முழிச்சி ஓயாமா பேச ஆரம்பிச்சிட்டுக் கெடக்கும். சம்பா ஒரு போகம் முடிஞ்சா அதுலயே உளுந்தோ, பயிறோ தெளிச்சி எடுக்கறதுதாம் அடுத்த விவசாய வேலை. வேற ஒண்ணும் பெரிசா இங்க விவசாய வேலைங்றது கெடையாது. அதை விட்டா வேலி கட்டுறது, வேலிக்கு மூங்கிலு முள்ளு கழிக்கிறது, கருவ மரம் வெட்டுறது இப்பிடித்தாம் வேலைக. இந்த வேலைகள்லத்தாம் விவசாய கூலிகளா இருக்குறவங்க சம்பாதிச்சாகணும். அந்தச் சம்பாத்தியத்துலத்தாம் அவுங்க வாழ்க்கைய ஓட்டியாவணும். இப்பிடி இருக்குறவங்க வயித்துப் பாட்ட பாப்பாங்களா? அவுங்க புள்ளைக் குட்டிகளோட படிப்ப பாப்பாங்களா? புள்ளைங்க பள்ளியோடம் போயிட்டு வாராங்கங்ற ஒரு சேதியைத் தவிர அவுங்களுக்குப் படிப்ப பத்தியோ, பள்ளியோடம் பத்தியோ வேற எதுவும் தெரியாது. அவுங்கத்தாம் இப்போ அவுங்களுக்கு நிவாரணமா வர்ற ஐநூத்து ரூவாயையும் முழுசா கொடுக்க தயாரா இருக்கிறாங்கன்னு நெனைக்கிறப்போ விகடுவுக்கு ஒடம்பெல்லாம் சிலிர்க்க ஆரம்பிச்சுச்சு. பணம் வேண்டாமுன்னு சொன்னாலும் அவுங்க விடுறாப்புல இல்ல.
            "அம்பது ரூவாய மட்டும் வேணும்னா பள்ளியோடத்துக்குக் கொடுங்க. மிச்சத்தெ ஒஞ்ஞ செலவுக்கு வெச்சிக்குங்க. அதுக்கு மேல வாணாம்!" அப்பிடின்னாம் இப்போ விகடு.
            "எஞ்ஞகிட்டல்லாம் எப்பவாச்சிம் பணம் வாரும். வர்றப்போ தர்றோங்றதெ வேணாமுங்றீங்களே ஞாயமா? அதாங் பொங்கவும் திங்கவும் அரிசி, பருப்புல்லாம் இருக்குல்ல. பெறவென்ன காசி வேற?" அப்பிடிங்கிறாங்க கூட்டத்துல.
            "யே யப்பா! வாத்தியாரம்பீ சொல்றதுங் செரி! சொல்றத கேளுங்கப்பா. இப்போ இத்து போதும். அறுப்பு ஆன பிற்பாடு கொடுக்குறதெ கொடுங்க. பாத்துச் செய்யலாம் பள்ளியோடத்துக்கு!"ங்றாரு பெரசிடெண்டு உதயச்சந்திரன்.
            "அறுப்பு ஆனாக்க நெல்லு மூடைத்தாம் வூட்டுல கெடக்கும். காசியா கையில வர்ருது? அதெ கொண்டாந்தா பள்ளியோடத்துல போடுறது?" அப்பிடிங்கிறாரு இப்போ கூட்டத்துல ஒருத்தரு.
            "நீஞ்ஞ நெல்லாவே கொண்டாந்து போடுங்க. அதெ நாம்ம காசியாக்கி வாத்தியாரம்பீக்கிட்ட கொடுக்கிறேம். நெல்லு மூடையென்ன காசியா ஆகாமல போவேங்குது? அப்பல்லாம் இப்பிடித்தானப்பா நெல்ல கொடுத்து மாறு வாங்கிக்கிறது. இப்போ வரைக்கும் ஊருக்குள்ள வர்ற  உப்புச் செட்டி உப்புக்கு மாத்தா நெல்லத்தாம் வாங்கிக் கட்டிக்கிட்டுப் போறாரு."ங்றாரு உதயச்சந்திரன்.
            "அதுக்கு வாத்தியார்ர நெல்லு மூட்டைய தூக்கி வுட்டு காசிய பாத்துக்கங்கன்னு சொல்றதா?"ங்றாரு கூட்டத்துல இன்னொருத்தரு.
            "பள்ளியோடத்துக்குச் செய்யணும்னு நெனைக்குற மனசுதாங் பெரிசு. அத்து அஞ்சு காசியா இருந்தாலும், ஒரு பிடி நெல்லா இருந்தாலும் சந்தோஷமா வாங்கிக்கிறேம்."ங்றாம் விகடு.
            "இந்தாருங்க! ஏம் பங்கு வருஷத்துக்கு ரண்டு மரக்கா நெல்லு. அவ்வளவுதாம் நம்மால ஆவும்."ங்றாரு ஒடனே கூட்டத்திலேந்து ஒருத்தரு.
            "ஏம் கணக்கெயும் கேட்டுக்குங்க. நாம்ம ஒரு கல நெல்லு தர்றேம்."ங்றாரு ஒருத்தரு.

            இப்பிடி ஒவ்வொரு குரலா எழும்ப ஆரம்பிச்சதும், உதயச்சந்திரன் சொல்றாரு, "ஒடனே ஒரு நோட்ட போட்டுக் குறிச்சுக்குங்கப்பா. பெறவு பெரண்டுட்டா, சொல்லலண்ணு சொல்லிப்புட்டா சுத்தப்படாம போயிடும். பேர்ர எழுதி எம்மாம்னு எழுதுங்க வாத்தியாரம்பீ!"ங்றாரு உதயச்சந்திரன்.
            பீரோல தொறந்து ஒரு பழைய நோட்டை எடுத்து சொல்றவங்களோட பேரை எழுதி அவுங்க சொல்ற அளவு குறிச்சாவுது. சொன்னபடியே கோயிலுக்கு நெல்ல அளக்குறதெ போல பள்ளியோடத்துக்கு நெல்ல அளக்குறாங்க கோட்டகத்துச் சனங்க. பேரு கொடுத்தவங்கள்ல எப்படியும் எம்பது சதவீதத்துக்கு மேல சொன்னபடி கொடுத்துடுவாங்க. அப்படி கொடுக்க முடியாதவங்களும் அடுத்த வருஷம் எப்படியும் தந்திடுறதா பள்ளியோடத்துக்கு வந்துச் சொல்லிட்டுப் போயிடுவாங்க. வருஷத்துக்கு அப்படி ஆறெழு மூட்டை நெல்லு சேரும். அதுல வர்ற காசிய பள்ளியோடத்துக்கான சீரா வெச்சி அதுல புள்ளைக அத்தனை பேருக்கும் பேனா, பென்சில், அளவுகோலு, லப்பர், வாய்பாடு, ஆயிரம் வார்த்தைக உள்ள இங்கிலீஷ் புக்கு, சாப்புட ஒரு எவர்சில்வரு தட்டுன்னு எல்லா பிள்ளைகளுக்கும் வாங்கிக் கொடுத்துடறது. மிஞ்சுற காசுல ஆண்டு விழாவ நடத்தி முடிக்கிறது.
            இதெல்லாம் சின்ன சின்ன விசயங்கள்தாம். ஆனா ரொம்ப பெரிய மாத்தம். ஏன்னா மாசத்துக்கு பத்தாயிரம் ரூவா சம்பாதிக்கிறவேம் அதுலேந்து நூறு ரூவாய தர்மம் பண்றதுக்கும், மாசத்துக்கு ஆயிரம் ரூவா சம்பாதிக்கிறவேம் அதிலேந்து நூறு ரூவாய தர்மம் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. ரெண்டு பேர்ரு பண்ற தர்மத்தோட ரொக்க அளவு ஒண்ணா இருந்தாலும் மாசத்துக்கு ஆயிரம் ரூவா சம்பாதிக்கிறவேம் பண்ற நூறு ரூவா தர்மங்றது ரொம்ப ஒசத்தி இல்லையா. அப்பிடித்தாம் கோட்டகத்து சனங்க பண்ற பள்ளியோடத்துச் சீரும். இதெ படிக்கிற நீங்க பள்ளியோடத்துக்கு நாங்கல்லாம் எம்மாம் ரூவாயத் தர்றோம்னு தெரியுமான்னு கேக்கலாம். நீயென்னான்னா ரெண்டு மரக்கா நெல்லையும், கல நெல்லையும் பெரிசா எழுதிகிட்டு கெடக்குறேன்னு நெனைக்கலாம். கோட்டகத்து மக்களோட நெலையில இருந்து பார்க்கும் போதுதாம் அவங்களோட சீருங்றது எம்மாம் பெரிசுங்றது புரியும். கிராமத்துல இதுக்கு ஒரு கதையையும் சொல்லுவாங்க.
            ஓர் ஊர்ல கோயில் கட்டுறோம்னு எல்லாருகிட்டயும் பணம் கேட்டாங்களாம். அந்த ஊர்ல கோடீஸ்வர பணக்காரர்ர இருந்தவரு ஆயிரங் காசிய கொடுத்தாராம். அந்த ஊர்ல இருந்த ஒரு பாட்டியம்மா தங்கிட்ட இருக்குறது இதுதாங்ன்னு ஒத்த காசிய கொடுத்துச்சாம். கோயிலு கட்டி முடிஞ்ச பிற்பாடு கோயிலு கட்ட யாரு கொடுத்த காசிய கடவுளு பெரிசா நினைக்குறார்னு ஊரு மக்கா எல்லாம் கடவுளுகிட்டேயே கேட்டுச்சாம். அதுக்குக் கடவுள் சொன்னாராம், "இந்த ஊர்ல ஒத்த காசிய கொடுத்துச்சே ஒரு வயசான பாட்டி! அத்து கொடுத்த காசியத்தாம் பெரிசா எடுத்துக்கிறேம்"ன்னு கடவுள் சொன்னாராம். இதெ கேட்டதும் ஆயிரம் காசிய கோயிலு கட்ட கொடுத்த கோடீஸ்வர பணக்காரர்க்குக் கோவம் வந்துடுச்சாம். ஒடனே அவரு, "இந்தாரு கடவுளே! இந்தக் கோயிலு கட்டுறதுக்கு ஆன செலவுல முக்காவாசிக் காசியான்ன ஆயிரம் காசிய கொடுத்தது நாம்ம. நாம்ம கொடுத்த காசிய பெரிசா சொல்லாம, ஒத்தக் காசியக் கொடுத்த கெழவிய பெரிசா சொல்றீயே? நாம்ம காசிய கொடுக்கலன்னா ஒமக்கு இந்தக் கோயில்லே கெடையா தெரியுமா?"ன்னுருக்காரு. இதெ கேட்ட கடவுளு கெக்கெ பெக்கென்னு சிரிக்க ஆரம்பிச்சிட்டாராம். "ஏங் கடவுளே! ஒமக்கு ன்னா பைத்தியமா பிடிச்சிடுச்சி. ஒண்ணு கெடக்க ஒண்ணு பேசிக்கிட்டு சிரிக்கிறீயே? ஒமக்கு எப்டி ஆயிரங் காசிய கொடுத்த நாம்ம சின்னதாவும், ஒத்தக் காசியக் கொடுத்த கெழவி பெரிசாவும் தெரியுறாங்க?"ன்னு கேட்டாராம்‍ கோடீஸ்வர பணக்காரரு. அதுக்குக் கடவுளு சிரிக்கிறதெ நிப்பாட்டிப்புட்டுச் சொன்னாராம், "ஒங்கிட்ட கோடி காசி இருக்குன்னு நமக்குத் தெரியும். அதுலேந்து ஆயிரங் காசியத்தாம் கொடுத்தே. அது ஒண்ணும் பெரிசு இல்ல. ஆனா அந்த பாட்டிகிட்ட இருந்ததே ஒத்த காசித்தாம். அதெ எடுத்து அப்பிடியே கொடுத்துச்சே அதாங் பெரிசு. அதுக்குச் சமானா நீயி ஆகணும்னு நீயி ஒங்கிட்ட இருக்குற கோடிக் காசியையும் கொடுக்கணும். இப்போ சொல்லு கோடிக் காசிய வெச்சுக்கிட்டு அதுலேந்து ஆயிரங் காசிய கொடுத்த நீயி பெரிய ஆளா? இருந்த காசியே ஒத்தக் காசித்தாம். அதெ அப்பிடியே எடுத்துக் கொடுத்து ஆண்டவனே எல்லாம் ஒனக்குத்தாம்னு கொடுத்த அந்தப் பாட்டி பெரிய ஆளா?"ன்னு இப்போ கடவுளு கேட்டிருக்கிறாரு பணக்காரர்ர பார்த்து. "கடவுளே! நீயி சொல்றதாங் செரி. இருக்குறதெ அப்படியே எடுத்துக் கொடுக்க ஒரு பெரிய மனசு வேணும். அத்து அந்தக் கெழவிகிட்ட இருக்கு. எங்கிட்ட யில்ல. கெழவிதாங் பெரிய ஆளு!"ன்னு பணக்காரரும் ஒத்துகிட்டாராம்.
            இங்க கோட்டகத்திலேந்து கேரளாவுக்குப் போனவங்க, ஓசூருக்குப் போனவங்க, திருப்பூருக்குப் போனவங்க கணிசமா இருக்காங்க. அவுங்க ஊருக்கு வர்றப்போ பள்ளியோடத்தப் பத்தின சேதிகள கேள்விப்பட்டுட்டு பள்ளியோடத்துக்கு வர்றாங்க. வந்து பாக்குறாறங்க. அப்படி வந்து பாத்துட்டப் போனவங்க மறுக்கா வர்றப்போ வெறுங்கையுமா, வீசுன கையுமா வர்றதில்ல. கையில பத்து பென்சிலோ, ஒரு சாக்குபீஸூ டப்பாவா, பத்து பதினைஞ்சி நோட்டோ, அஞ்சு பேனாவோ, ஒரு பாக்கெட் முட்டாயோ, ஒரு பத்து வாய்பாட்டையோ, அஞ்சு சிலேட்டையோ, ஒரு பல்பக் குச்சிப் பாக்கெட்டையோ வாங்கிட்டுக் கொண்டாந்து கொடுத்துட்டுத்தாம்  பாக்குறாங்க. திருப்பூர்லேந்து வர்றவங்கள்ல சில பேரு அவுங்க வேலை பாக்குற கார்மெண்ட்ஸ்ல ஒதுங்குன உடுத்துற மாதிரியான துணி பீஸூகள கூட கொண்டாந்து தருவாங்க. அதையும் சந்தோஷமா வாங்கி புள்ளைகளுக்குக் கொடுக்குறது. இப்பிடி அவுங்களால என்னென்ன முடியுமோ அதெ எடுத்துக்கிட்டுத்தாம் பள்ளியோடத்துக்கு வருவாங்க. வெறுங்கையோட வர்ற ஆளுங்களும் ஒரு பத்து ரூவாயையாவது கையில திணிச்சி இதுக்கு எதுனாச்சிம் புள்ளைங்களுக்கு வாங்கிக் கொடுங்கன்னு விகடுகிட்ட சொல்லிட்டுத்தாம் போறாங்க.
            கோட்டகத்திலேந்து பெரிய பள்ளியோடத்துக்குப் போற புள்ளைங்க எட்டாப்புல, ஒன்பதாப்புல பெயிலாயி படிப்ப அத்தோட முடிச்சிக்கிட்டுத் திருப்பூருக்கோ, ஓசூருக்கோ போயிடுறாங்க. இனுமே அப்பிடி ஒரு நெலமை வர்றக் கூடாதுங்றதுன்னு மனசுல நெனைச்சிக்கிறாம் விகடு. இனுமே கோட்டகத்திலேந்து பெரிய பள்ளியோடத்துக்குப் போற புள்ளைங்க பத்தாவத முடிக்கணும். அதுக்குத் தகுந்தாப்புல அவுங்கள தயாரு பண்ணணும்னு மனசுக்குள்ள முடிவு பண்ணிக்கிறாம். சரியா படிக்கத் தெரியாம, எழுதத் தெரியாம, கணக்குப் போட தெரியாமா பெரிய பள்ளியோடத்துக்குப் போயி எத்தனெ நாளுங்க புள்ளைங்க அங்க தாக்குப்பிடிக்கும் சொல்லுங்க. பாதியிலயே படிப்பெ வுட்டுப்புட்டு ஓடுன புள்ளைங்களும் இருக்காங்க. இனுமே அப்பிடி ஒரு நெலமை வராது. இனுமே அப்பிடி ஒரு நெலையும் வாராது. கோட்டகத்துப் புள்ளைங்க இப்போ நல்லா படிக்கிறாங்க, எழுதுறாங்க, கணக்கப் போடுறாங்க. அவுங்ககிட்ட பத்தாப்பு புத்தகத்தெ கொடுத்தாலும் அத்து தமிழா இருந்தாலும், இங்கிலீஷா  வாசிச்சுக் காட்டிடுவாங்க. அத்தோட புள்ளைகளும் ரொம்ப பதிவிசுங்களா இருந்துச்சுங்க. பள்ளியோடத்துலத்தாம் எல்லா சேட்டை மூட்டைகளையும் பண்ணுங்களே தவிர வெளியில ரொம்ப சரியா இருக்குமுங்க. பள்ளியோடத்துல செல்ல புள்ளைங்க, வெளியில நல்ல புள்ளைங்கன்னு அப்பிடித்தான் இருந்துச்சுங்க புள்ளைங்க ஒவ்வொண்ணும்.  
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...