23 Jan 2020

கைமாத்த நடந்த பேரம்!



செய்யு - 336

            வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பிச்சிது. குஞ்சு கவுண்டருக்கு ஏக கொண்டாட்டம். அவரு ரித்தேஸ்ஸ அனுப்பி காரியத்தெ கனகச்சிதமா முடிக்கிறதுல குறியா இருந்தாரு. மறுநாளே ரித்தேஸ் மாலிக் வூட்டுல வந்து நின்னு யேவாரத்த பேச ஆரம்பிச்சிட்டாரு. யேவாரம் பேசுறதுங்றது எப்பவும் சீப் ரேட்டுல கைமாத்தி விடுறதுதாம். மாலிக் விட்டுக் கொடுக்கல. அவருக்கு விகடுவோட முடிவு பிடிக்காட்டியும், ஒரு நல்லதெ அவனுக்குச் செஞ்சு வுடணும்னு பாத்தாரு. கணிசமா ஒரு தொகைய விகடுவுக்குக் கொடுக்கணுங்றதுல குறியா இருந்தாரு. மாலிக் அடிச்சுப் பேசலன்னா இருக்குற கிளையெண்டுக்கு கம்மியா கணக்கெப் போட்டு தீர்த்து வுட்டுருப்பாரு குஞ்சு கவுண்டரு. போனுல பேசுறப்ப ஒரு கிளையெண்டு தலைக்கு ஐநூத்து ரூவாய் தர்றதா சொன்னவரு, ரித்தேஸ்ஸ வுட்டு பேசுறப்ப அதெ நானூத்துக்கு கொறைச்சிட்டாரு.
            மாலிக் அப்ப நல்லாவே கேட்டாரு, "இதென்ன கூத்து? எரியுற வூட்டுல புடுங்ற வரைக்கும் ஆதாயம்னு நெனைச்சிப்புட்டீங்களா? அவ்வேம் இதுக்காக கஷ்டப்பட்டிருக்காம். இதெ வுட்டுப்புட்டு தலெ முழுகுனா போதும்னு இருக்காம்ங்றதுக்காக அடிமாட்டு வெலைக்கா கேப்பீக? ஞாயம்னு ஒண்ணு வேணும். தலைக்கு ஆயிரம்ன்னு போட்டுக் கணக்கெ தீர்த்து வுடறதா இருந்தா சொல்லுங்க! இல்லாட்டி நாம்ம அந்த ரேட்ட அவனுக்குப் போட்டுக் கொடுத்து பிராஞ்சைஸ்ஸ எடுத்துக்கிடறேம்!" அப்பிடின்னு ஒரு போட போட்டாரு.
            மாலிக் அப்பிடிக் கேட்டதுமே ரித்தேஸ் நெத்தியைச் சுருக்கி யோசிக்க ஆரம்பிச்சாரு. செல்போனுல குஞ்சு கவுண்டருக்கு போனைப் போட்டு கேக்குறாரு. "நீஞ்ஞ தலெக்கு ஐநூத்த தர்றதா பேசிப்புட்டு, நம்மள வுட்டு நானூத்துக்குப் பேசுனா எப்பிடி ஒத்துப்பாங்க? அவுங்க ஆயிரத்துல வந்து நிக்கறாங்க! என்ன பண்ணலாம்?" அப்பிடிங்கிறாரு.
            "ஒண்ணு அவுங்க நடத்தோணும். இல்லாட்டி நாம்மத்தாம் நடத்தோணும். இத்து ரண்டுத்த தவுர வேற வழி கெடையாதாக்கும். அவுங்க நடத்தோலன்னா அவுங்களால நானூத்து சொச்சம் கிளையெண்ட்ஸ்ஸ வெச்சு ஒண்ணுத்தையும் பண்ண முடியாதாக்கும். நம்மகிட்டத்தாம் ஓசிக்கு கைமாத்தி வுடணுமாக்கும். அவுங்க ன்னா முடிவு இருக்காங்கோ?" அப்பிடிங்கிறாரு போன்ல குஞ்சு கவுண்டரு.
            "தலைக்கு ஆயிரத்து ரூவாயா தர்றலன்னா அவுங்களே ஏத்து நடத்துறாப்புல இருக்காங்க!" அப்பிடிங்கிறாரு இப்போ போன்ல ரித்தேஸ்.
            "எண்ணூத்துக்குக் கேட்டுப் பாத்து மசிஞ்சா முடிச்சப் போடுங்கோ பாத்துப்பேம்! இல்லாட்டி யாராச்சிம் என்ன வேணாக்க பண்ணிக்கோட்டும்! நமக்கென்ன? நம்மகிட்ட இருக்கற நூத்துக்கு மேல பிராஞ்சையே பாத்துக்க முடியலையாக்கும்"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            கவுண்டரு சொன்னதைக் கேட்டு ரித்தேஸ், "எண்ணூத்த தாண்டி மொதலாளி முடியாதுங்றாரு!" அப்பிடின்னாரு.
            மாலிக் அதுக்கு ஒத்துக்கிட்டு அப்படியே பண்ணலாம்னு சொன்னதும், ரித்தேஸ் அக்ரிமென்ட ரெடி பண்ண ஆரம்பிச்சாரு. அவரு அப்படி பண்ணிக்கிட்டு இருக்குறப்பவே விகடு மாலிக்கை ஓரமா அழைச்சிக்கிட்டு வந்து, "ஏம் இவுங்ககிட்ட வுட்டுக்கிட்டு? நீஞ்ஞளே எடுத்து நடத்திக்கிடலாம்!"ங்றாம்.
            "நமக்கு இருக்குற சோலிக்கு இதையெல்லாம் பாக்க நேரம் கெடையாதுடாப்பா! நாம்ம ஏத்து நடத்துறதா இதெ சொல்லலன்னா ஒனக்கு ஒண்ணுமே இல்லாம போயிடுமேன்னுத்தாம் அப்பிடி ஒரு போட போட்டேம். அப்பிடிப் போட்டவாச்சித்தாம் நானூத்துலேந்து எண்ணூத்துல வந்து நிக்குறாங்கடப்பா!"ங்றாரு மாலிக்.
            "நாம்ம லெனின்ட்ட பேசி வுடறேம். மாசம் இம்மாம்னு ரேட்டு பேசி வுட்டா ஆளெ போட்டு நடத்த ஏற்பாடு பண்ணி வுடுவாரு. நீஞ்ஞ சமாளிச்சிக்கலாம். இது ஒரு வருமானமா போவும்!"ங்றான் விகடு.
            "இந்தாருடா! நீயுந் இனுமே ஆபீஸூ பக்கம் எட்டிப் பாக்க மாட்டேனுட்டே! நமக்கு இதுல இருக்குற நெளிவு சுளுவெல்லாம் புரியாதுடாப்பா! ஆபீஸ்ஸ அவுங்க பிராஞ்சு ஆபீஸாவே போட்டுக்கிடட்டும். எடத்த வேணுன்னா வழக்கம் போல வுட்டுப்புடலாம். அதெ தவுர இதுல வேற எதுவும் நாம்ம செய்யுறதுக்கில்ல. நமக்கு நம்பிக்கையான ஆளுதாம் முக்கியம். நீயி பண்றதில்லன்னு ஆனதுக்குப் பிற்பாடு இதுல எறங்க நமக்குத் துணிச்சல் இல்ல. அதுவும் இல்லாம மவளுங்க வேற துபாயிக்கு வா வான்னு கூப்டுட்டு இருக்காளுக. அப்பிடியே அஞ்ஞ போயி தங்கிப்புடலாமான்னும் ஒரு யோஜனெ ஓடிட்டு இருக்கு. அதால இதெயெல்லாம் போட்டு இழுத்துக்கிட்டு கெடக்க மனசுல ஒறுப்பு யில்ல." அப்பிடினிட்டாரு மாலிக்.
            அதுக்கு மேல இதுல பேசுறதுல அர்த்தமில்லன்னு விகடுவுக்குப் புரிஞ்சுப் போச்சு. அதுக்குள்ள ரித்தேஸ் இருவது ரூவா பத்திரத்துல அக்ரிமெண்ட் போட்டு ரெடியா வந்து நின்னாரு. மூணு லட்சத்து பதினோராயிரம் ரூவாய்க்கு ஆபீஸ்ஸோட பிராஞ்சைஸ்ஸ முடிச்சி வுட்டுப்புட்டு கைமாத்திக்கிறதா அதுல எழுதியிருந்தாரு. இந்த அக்ரிமெண்டு முடிஞ்ச பிற்பாடு இந்த ஆபீஸ்க்கு வேறெந்த வகையில உரிமெ கொண்டாட முடியாதுன்னும் அதுல தெளிவா எழுதியிருந்தாரு. "டீல் ஓ.கே. ஆர் நாட் ஓ.கே.?" அப்பிடின்ன ரித்தேஸ் இப்போ கைய தம்ஸ் அப்ப மேலயும் கீழேயும் காட்டிக் கேக்குறாரு.
            விகடு தலைய அசைச்சதோட சரி. ஒரு வார்த்தையும பேசல. இதுல அவனுக்காக மாலிக் பேசுற அளவுக்கு அவனோட அப்பங்காரரு பேசல. எல்லாத்தையும் விட்டுப்புட்டு ஒரு தரியா வாத்தியாரு வேலையப் பாத்துட்டு வந்துப்புடறேம்னு சொன்னதுக்குப் பிற்பாடு, ஆபீஸ்ஸ முடிச்சி வுடுற விசயத்துல இப்பிடி ஒரு பேரம் நடக்குங்றதெ பத்தி அவனோட அப்பங்காரரான சுப்பு வாத்தியார்ட்ட பேச வாயெடுத்தாம், அவ்வளவுதாம் சுப்பு வாத்தியாரு, "அந்தக் கருமெத்த தலைய முழுகிட்ட வாடாம்பீ! அதுலேந்து ஒண்ணும் வாணாம். அதாங் வேல பாத்தத்துக்கு மாசா மாசம் சம்பளெம் போட்டு எடுத்துக்கிட்டீல்ல. அவ்ளோதாம் அதுல ஒனக்கு ஒறுப்பு. அத்தோட வுட்டுப்புடு. நாலு காசிய கொடுத்தாவது அதெ விட்டுப்புட்டு வந்துப்புடு. அத்து நமக்குச் சுத்தப்பட்டு வராதுடாம்பீ!"ன்னு எங்கயோ விட்டத்தெ பாத்து பேசுனவரு மேக்கொண்டு அதெ பத்தி பேச விருப்பமில்லாத ஆளெ போல அந்தாண்ட நகர்ந்துப் போயிட்டாரு.

            விகடுவோட மனநிலை கிட்டதட்ட எது நடந்தாலும் நடந்துட்டுப் போவணும்னு ஆகிப் போச்சு. அவ்வேம் எடையில புகுந்து எந்த கத்திரிக்காயி யேவாரத்துக்கான பேரமும் பேச விரும்பாம போனதுக்கு அது ஒரு காரணம். கொஞ்சம் பேசியிருந்தாலோ, லெனின யோசனைக் கேட்டிருந்தாலோ விசயம் வேற மாதிரி கூட போயிருக்கலாம். ஆனா அதுக்கான முயற்சிகள ஒண்ணுத்தையும் அவ்வேம் பண்ணல. அதுக்கான ஆர்வமெல்லாம் வடிஞ்சிப் போன ஒரு ஆளு போல அவ்வேம் நின்னுகிட்டு இருந்தான். இதெல்லாம் குஞ்சு கவுண்டருக்கு சாதமாக போயிடுச்சு. அந்த நேரத்துல அவரோட ஜாதகத்துல சுக்கிரன் புகுந்து வெளையாடணும்னு விதி இருந்துருக்கும் போல. சுக்கிரன் அடிச்சாம் பாரு லக்கிப் பிரைஸ்னு புகுந்து வெளையாடிட்டு இருந்தான்னுத்தாம் சொல்லணும்.
            "கையெழுத்தாயிடுச்சன்னா காரியம் முடிஞ்சிடும்!"ன்னு ரித்தேஸ் பொடிய தூவுனப்பத்தாம் விகடு ஒரு நெலைக்கு வந்தாம். இதுல கையெழுத்து அவ்வேம் போட முடியாது. அவ்வேம் அம்மா பேர்லல்ல எல்லாத்தையும் எடுத்து வெச்சிருக்கிறாம். அவனோட அம்மாகிட்ட கையெழுத்து வாங்க வேண்டியதா இருந்துச்சு.
            மாலிக் உடனடியா காரை எடுத்துக்கிட்டு விகடுவோட வந்து வீட்டுல இருந்த வெங்குகிட்ட கையெழுத்து வாங்கிட்டுப் போயி கொடுக்க உதவி பண்ணாரு. அதுக்கு அடுத்த வாரத்துல ஒரு நாள்ல கூத்தாநல்லூரு சப் ரிஜிஸ்தர் ஆபீஸ்ல எல்லா வேலையும் முடிஞ்சி கூத்தாநல்லூரோட தொண்டாமுத்தூர் கேப்பிட்டலோட ஆபீஸ்ஸூ ஹெட் ஆபீஸ்ஸோட நேரடி கிளையா மாறிடுச்சி.
            குஞ்சு கவுண்டரே நேரடியா வந்து மூணு லட்ச ரூவாயையும் விகடுவோட அம்மா வெங்குவோட கணக்குல அக்கெளண்ட் ட்ரான்ஸ்ரா பணத்தெ பண்ணி வுட்டாருரு. அதிலேந்து ஒரு லட்சத்து ரூவாயா எடுத்து விகடு மாலிக்கிட்டே அவரு பிராஞ்சைஸ் எடுக்க, ஆபீஸ்ஸ போடன்னு பண்ண செலவுக்காகக் கொடுத்தாம். மிச்சம் இருந்தது ரெண்டு லட்சத்து பதினோராயிரம் ரூவா. அதுக்கு விகடு அவனோட அம்மா பேர்லயே ஒரு டீமேட் அக்கெளண்ட ஆரம்பிச்சி பங்குகளா வாங்கிப் போட்டாம்.
            அப்போ ஐ.பி.செக்யூரிட்டீஸங்ற பங்கு ஏழு ரூவாயி ரேட்டுல போயிட்டு இருந்துச்சு. அதுல ஒரு நாலாயிரத்த வாங்கிப் போட்டாம். இன்டியா இன்போலைன்ங்ற பங்கு அறுபத்து நாலு ரூவாயி ரேட்டுல போயிட்டு இருந்துச்சு. அதுல ரெண்டாயிரத்த வாங்கிப் போட்டாம். சத்யம் கம்ப்யூட்டர்ஸ்ங்ற பங்கு எரநூத்து பத்து ரூவாயி ரேட்டுல போயிட்டு இருந்துச்சு. அதுல இருநூத்துப் பங்குகள வாங்கிப் போட்டாம். மொத்தத்துல எல்லா காசுக்கும் கிட்டத்தட்ட பங்குகளாவே வாங்கிப் போட்டாம்.
            "பரவால்லடா வெகடு! மார்கெட்டுல எடுத்த பணத்தெ மார்கெட்டுலயே போடுறீயாக்கும். நம்ம ஆளுகள்ல எவம்டா இதுல சம்பாதிச்சதெ இதுல போடுறாம்? நீயி ஒரு ஆளுத்தாம் இதுல சம்பாதிச்சி இதுல போடுறே! மார்க்கெட்டு அவ்வளவு லவ்வு பண்றீயாக்கும் கருமெத்த!" அப்பிடின்னு விகடுவ இப்படிப் பண்ணதெ பாத்து நக்கல் பண்ணாரு குஞ்சு கவுண்டரு.
            "ஒஞ்ஞ வூட்டுக்கார அம்மாவோட அக்கெளண்ட்டு ஒண்ணு இஞ்ஞ நம்ம ஆபீஸ்லத்தாம், இப்பத்தாம் இது ஒஞ்ஞ ஆபீஸாச்சே, நீஞ்ஞ சொல்லி அப்போ ஆரம்பிச்சி அதுவும் இப்போ இதுலத்தாம் இருக்கு மொதலாளி! அதுக்கு கமிஷம் டீல்லாம் பேசிருக்கோம் மொதலாளி!" அப்பிடின்னாம் விகடு.
            "அட எங் கருமெத்த! ஆமாமுல்ல! அத்தே மறந்தே போயிட்டேம் பாருடா! எம்மாம் லாவத்த சம்பாதிச்சிப் போட்டுருக்கே அதுலே!" அப்பிடின்னாரு குஞ்சு கவுண்டரு.
            "முப்பது பெர்சண்டுக்கு மேல இருக்கும் மொதலாளி"ன்னான் விகடு அதுக்கு.
            "அதுக்கு கமிஷன் ஏதும் கொடுக்கணுமாக்கும்?" அப்பிடிங்கிறாரு குஞ்சு கவுண்டரு சிரிச்சிக்கிட்டே.
            "ஆபீஸே ஒஞ்ஞ ஆபீஸ்ஸா போயிடுச்சே! ஒஞ்ஞ ஆபீஸூக்கு நீஞ்ஞளே கமிஷம் கொடுத்துப்பீங்களா மொதலாளி! ஆபீஸ்ஸ கைமாத்தி விட்டதுக்கே நெறையத்தாம் கொடுத்திருக்கீங்க மொதலாளி!"ங்றான் விகடு.
            "அதெல்லாம் நேரமுடா! யோகக்காரனுக்கு எல்லாமே யோகமாத்தாம் நடக்கோம்டா!"ன்னு சிரிச்சிட்டுப் போனாரு கவுண்டரு.
            ஆக மொத்தத்துல குஞ்சு கவுண்டருக்கு இதுல அவரு நெனைக்கிற மாதிரியெல்லாம் நடக்குறாப்புல இருந்ததால ஏக குஷியா இருந்தாரு. யாருக்காவது ஒருத்தருக்குப் பிரான்சைஸூ கொடுத்தா அதுல ஒரு கமிஷன் போயி மிச்ச சொச்ச கமிஷன்தாம் அவருக்குப் போவும். இப்போ ஆபீஸ்ஸூ நேரடியா தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட பிராஞ்சு ஆபீஸ்ன்னா மொத்த கமிஷனும் அவருக்குத்தாம் போவும். அத்தோட ஆபீஸ்ஸோட ஒட்டுமொத்த கட்டுபாடும் அவுங்க கட்டுப்பாட்டுலயே இருக்கும்.
            அடுத்த வேலையா குஞ்சு கவுண்டரு இன்னொரு வேலையையும் பண்ணாரு. மாலிக் வூட்டுல போட்டுருந்த ஆபீஸ்ஸயும் குஞ்சு கவுண்டரு அதிரடியா தூக்குனாரு. "இதென்ன ஆருக்கும் தெரியாம ஆபீஸ்ஸூ ஒரு சந்து பொந்துக்குள்ள இருக்கோதுன்னா எவம்லாம் வரும்வாம் டிரேட் பண்ண கருமத்தெ? வர்றவும் போறவனுக்குச் செளரியமால்லோ இருக்கோணும். அதுக்கு மெயின் ரோட்டுல அல்லோ இருக்கோணும்! இஞ்ஞயிருந்து ஒரு டீ, காபின்னாக்கா கூட பத்து பாஞ்சு மைலு அல்லோ போவோணும் போலருக்கு!" அப்பிடின்னு சொல்லிப்புட்டு ஆபீஸ்ஸ ஆஸ்பிட்டல் ரோட்டுல போட்டாரு.
            கூத்தாநல்லூருக்கு ஆஸ்பிட்டலு ரோடு முக்கியமான எடம். அந்த ரோட்டுலேந்துதாம் கிழக்காலயும், மேற்காலயும் பஜார் ஆரம்பமாகுது. அங்கேயிருந்துதாம் நகராட்சி ஆபீஸூக்குப் போயாகணும். சனங்க ஆஸ்பிட்டலுக்கு வர்றதும், போறதும்னு கூட்டம் அலைமோதும். மொத்த கூத்தாநல்லூரு டவுனும் அந்த எடத்துல நெலை கொள்ளுறாப்புல அது ஒரு எடம். முக்கியமான மெடிக்கல் ஸ்டோரு, ஜவுளிக் கடைங்க, பலகார கடைங்க, பலசரக்குக் கடைங்க, அத்தோட ரெண்டு பேங்குகளும் பக்கத்துப் பக்கத்துலயே இருக்குறதால அந்த எடம்தாம் ஆபீஸூக்குப் பொருத்தமான எடமாவும் போயிடுச்சு.
            ஆபீஸ்ஸ எடத்த மாத்தி லெனின அங்க மேனேஜராவும் மாத்திப் போட்டுட்டாரு. லெனினுக்கு ஆபரேட்டரா ரெண்டு டெர்மினலுக்கு ஒரு ஆம்பளை, ஒரு பொம்பளைன்னு ரண்டு பேரையும் போட ஏற்பாட்ட பண்ணிட்டாரு குஞ்சு கவுண்டரு.
            ஆபீஸ்ஸ எடத்த மாத்துன பிற்பாடு ஏற்கனவே அவரு வூட்டுல ஆபீஸ்ஸ போடுறதுக்காக கொடுத்திருந்த அட்வான்ஸ்ஸ விகடுகிட்ட திருப்பிக் கொடுக்க முன்வந்தாரு மாலிக். அதெ வாங்குறதுக்கு விகடு மறுத்துட்டாம். அவரும் எவ்வளவோ மல்லுக்கட்டித்தாம் பாத்தாரு. இவ்வேம் அதுக்கு மேல மல்லுக்கட்ட அதெ அப்பிடியே விட்டுப்புட்டு, அவரு பேசி வாங்கிக் கொடுத்த வகையில வந்தப் பணமே போதும்னுட்டாம்.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...