செய்யு - 337
திட்டையிலேந்து கோட்டகம் வடக்கால இருக்கு.
ரெண்டு மைலு தூரம் இருக்கும். சைக்கிள்லயும் போவலாம். நடந்தும் போவலாம். அதுலதாம்
இருக்கு சேதி. மழை பெய்யாம இருந்தா சைக்கிள்ல போவலாம். மழைப் பெஞ்சுட்டுன்னா நடந்துத்தாம்
போயாகணும். சைக்கிள்ல போவணும்னு அடம் பிடிச்சா போயிட்டு வந்த பிற்பாடு சைக்கிள்ல
கழுவுறதுக்கு அரை நாளு ஆயிடும். அம்மாம் சேத்துக் களிமண்ணு சைக்கிள்ல ஒட்டிக்கிறத பாத்தா,
சைக்கிளு காந்தம் மாதிரி சேத்துக் களிமண்ண இழுத்துக்கிட்டா, சேத்து களிமண்ணு நாயுருவி
ஒட்டிக்கிறாப்புல சைக்கிள ஒட்டிக்கிடுச்சான்னு சந்தேகம் வந்துப்புடும்.
பழைய டெல்டாவா ஆயிப் போன திருவாரூ மாவட்டத்தோடு
கெழக்குப் பகுதிக்கு எப்படி இப்பிடி ஒரு களிமண்ணு வந்துப் போச்சுங்றதெ நீங்க கோட்டகத்துக்கு
வந்தா பார்க்கலாம். எல்லா எடத்திலயும் இங்க களிமண்ணத்தாம் இருக்குதுன்னாலும் அதுல கோட்டகமும்,
ஓகையூரும் களிமண்ணுக்குன்னே பொறப்பெடுத்த ஊருங்க போலருக்கு. திட்டையிலேந்து வடக்குத்
தெரு போற வரைக்கும் பெரிசா பிரச்சனை இருக்காது. வடக்குத் தெருவத் தாண்டி களிமங்கலத்துக்குப்
போறதுள்ள காலுக ரெண்டும் புதைகுழியில புதைஞ்சு போறாப்புல ஆயிடும். முழங்காலுக்குக்
கொஞ்சம் கீழே வரைக்கும் சேறு அப்பிக்கும். என்னவோ வூடு கட்டுறதுக்கு மண்ணை பெசைஞ்சு
போட்டு வெச்சிருப்பாங்க பாருங்க அப்படித்தாம் இருக்கும் ரோடு முழுக்க. களிமங்கலத்த
தாண்டுனா வெள்ளையாறு குறுக்கால ஓடும். அந்த ஆறுதாம் ரெண்டு ஊரையும் பிரிவினைப் பண்ணுது.
அங்கேருந்து வடக்கால கோட்டகம். தெக்கால களிமங்கலம். மத்தபடி நடந்தா பூட்ஸ் கால்ல உண்டு
பண்ணுற களிமண்ணு இந்த ஊருக்கும் பொது, அந்த ஊருக்கும் பொது.
பொதுவா இதெ பத்தில்லாம் அறியாத சனங்க
நெனைக்கலாம் இப்பிடிப்பட்ட ஊருல சனங்க இருக்குமான்னு. எல்லா ஊருலயும் சனங்க இருக்கத்தாம்
செய்யுறாங்க. இந்த ஊர்ல களிமங்கலத்துலயும் நூத்துக்கு மேல சனங்க இருக்கு. அங்க அந்தாண்ட
கோட்டகத்துல இருநூத்துக்கு மேல சனங்க இருக்கு. எல்லாம் அந்தந்த ஊர்ல இருந்து, பொழங்கி
பழகிப் போறதுதாம். யாரும் அதுக்காக இந்த மண்ணை கொறை சொல்றது கெடையாது. இந்த மண்ணை
விட்டுக் கொடுக்குறதும் கெடையாது. அப்படி இந்த மண்ண வுட்டுக் கொடுக்க மாட்டோம்னு
வடக்குத் தெருவுலேந்து, களிமங்கலம் போற ரோட்டு வரைக்கும் உள்ள வயலுகாரங்க மல்லுகட்டுனதுல
கவருமெண்டுலேந்து வர வேண்டிய தாரு ரோட்டையே போட முடியாம போச்சு. பாத்தீங்கன்னா ஒரு
நாலடி அகலத்துக்குத்தாம் அந்த ரோடு போவுது. கொஞ்சம் அகலப்படுத்திக்கலாமுன்னு பாத்தா
அந்தாண்டயும், இந்தாண்டயும் இருக்குற வயலுக்காரங்க சண்டைக்கி நிக்குறாங்க.
அங்க இருந்த பூரா நெலங்களும் மூணு கிராம
ஆளுங்களுக்குச் சொந்தமான வயலுங்க. திட்டையில இருக்குற ஆளுங்க, களிமங்கலத்துல இருக்குற
ஆளுங்க, இங்க தென்கெழக்கால இருக்குற நெடுங்கரையில இருக்கற ஆளுங்கன்னு மூணு ஊருக்கும்
சொந்தமான நெலங்க அங்க இருக்கு. இந்த மூணு ஊருக்கார ஆளுங்களும் ரோட்டுக்கு தம்மாம்துண்டு
நெலத்த கொடுக்க முடியாதுங்றதுல ரொம்ப ஒத்துமையா இருக்காங்க. ஏம்ப்பா ரோட்ட போட்டாக்கா,
"ஊரு கரைக்கும், வயக் கரைக்கும் போய்ட்டு வர வசதியா போவுமப்பா! வெள்ளனமே போயிட்டு
வெள்ளனமே வந்திர்லாம்ப்பா!"ன்னா, "அதுக்கு எஞ்ஞட வூட்டு நெலந்தாம் கெடைச்சுதா?
சொல்லுற நீயி ஒம்மட வூட்டு நெலத்த கொடுக்க வேண்டியதான்ன?"ன்னு மல்லுக்கு நிக்குறதுல
தோளு மேல கைய போட்டுக்கிட்டு தெனாவெட்டா நிக்கறாங்க. நாம்ம ஏம் எம்மோட நெலத்துல
எடத்தெ கொடுக்கணும், நீயி ஏம் ஒம்மோட வயல்ல எடத்தக் கொடுக்கக் கூடாதுன்னு ஆளாளுக்குச்
சலம்பிக்கிட்டுத் திரிஞ்சதுல பாத்தாங்க கவருமெண்டு ஆளுங்க, நீஞ்ஞ இப்பிடியே ரோடு இல்லாமலே
கெடங்கன்னு வுட்டுப்புட்டாங்க. அட என்னப்பா ஊரே மனுஷன் நொழைய முடியா களிமண்ணு பூமியா
இருக்கு! அதுக்கு இப்பிடி ஒரு அலம்பலான்னு கேட்டாக்கா, எந்த ஊருல பொது காரியத்துக்கு
மனுஷங்க இத்துனோண்டு எடத்தெ வுட்டுக் கொடுக்குறாங்க. அதெ கொடுக்குறதெ தங்களோட உசுர
கொடுக்குறாப்புலல்ல பாக்கறாங்க.
மூலங்கட்டளை சிலம்பு வாத்தியாரோட சிஷ்யப்
புள்ள ரகுநாதனெ ஒங்களுக்கு ஞாபவம் இருக்கும்னு நெனைக்கிறேன். சாமி. தங்கமுத்து வெவகாரத்துல
கூட அடிதடின்னு எறங்கி போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டுன்னு அவரோட தம்பி கிள்ளிவளவனுக்காக
அலைஞ்ச ஆளாச்சே. இப்போ ஞாபவம் வந்திருக்கும்னு நெனைக்கிறேன். இல்லைன்னா அவர்ர பத்தி
நீங்க கொஞ்சம் முன்னால போயித்தாம் படிச்சாவணும். அவரு கிராம பெரசிடென்டா இருந்த காலத்துல
இந்த ஊருக்கு ரோட்டப் போடுவோம்னு ஒரு முயற்சியப் பண்ணாரு. ஆளு ஞாயமான ஆளுன்னாலும்,
கொஞ்சம் மொரட்டுப் பேர்வழிங்றது எல்லாருக்கும் தெரிஞ்ச சங்கதிதான. இந்த ரோடு போடுற
காரியத்துல ரகுநாதன் எறங்கிட்டார்னு தெரிஞ்சதுமே வயல வெச்சிருக்கிற நெலத்துக்காரங்க
உஷாராயிட்டாங்க. ரகுநாதன் எறங்குன காரியத்திலேந்து முன்ன வெச்ச கால்ல பின்ன வைக்க மாட்டார்ங்றது
அவங்களுக்குத் தெரிஞ்சிப் போச்சு.
கையடி, காலடி அடிச்சுச் சாய்க்குறதுக்குச்
சாதாரண ஆளா ரகுநாதென். மூலங்கட்டளெ சிலம்ப வாத்தியாரோட சிஷ்யப் புள்ளே, அத்தோட ஊரோட
பெரசிடெண்டு வேறயா. எதுத்து எத்தனெ ஆளு வந்தாலும் கம்பெ எடுத்து வூடு கட்டுனார்ன்னா
நாயடி, பேயடி, மரண அடித்தாம் விழும். கம்பு இல்லாட்டியும் சலாம் வரிசெயப் போட்டு
எறங்கிட்டார்ன்னா எதுக்க வர்ற ஆளுங்களுக்கு வுழுவுற குத்து ஒவ்வொண்ணும் மரண குத்தாத்தாம்
வுழும். குத்து வாங்குன எடத்துலயே சுருண்டு வுழுந்து செத்துப் போறதெ தவுர வேற வழியில்ல.
எல்லாம் மூலங்கட்டளெ வாத்தியாரோட வேல. ரகுநாதெம் ஆளு ஞாயமான பேர்வழிங்றதாலயும், விசுவாசமான
சிஷ்யப் புள்ளெங்றதாலயும் அத்தென ரகசிய வித்தைகளையும் கத்துக் கொடுத்து வெச்சிப்புட்டாரு.
ரகுநாதென் போடுற கட்டெ ஒடைச்சி அடிக்கணும்னு அதுக்கு மூலங்கட்டளெ வாத்தியாருதாம் வந்தாவணும்.
அவரும் ஞாயமான ஆளுங்றதால வர மாட்டாரு. அதெ வுட சிஷ்டப் புள்ளைக்கிட்ட எந்த வாத்தியாரு
வந்து சண்டெ போடுவாரு. அதால காசிய கொடுத்த அவர்ர கொண்டாந்து நிப்பாட்டவும் முடியாது.
அதால நெலத்துக்காரங்க வேற ஒரு கணக்கெ போட்டு வெச்சாங்க.
ரோட்டுக்கான வேலயெ பஞ்சாயத்துலேந்து ரகுநாதெம்
ஆரம்பிச்சதுமே நெலத்துக்காரங்க வடவாதி போலீஸ் ஸ்டேஷன்ல போயி, ரகுநாதெம் பெரசிடெண்டுங்ற
கோதாவுல அவுங்களோட நெலத்த ஆக்கிரமிக்கிறதா ஒரு கம்ப்ளெய்ண்ட கொடுத்துப்புட்டாங்க.
கொடுத்ததோட இல்லாம ஒரு வக்கீலையும் பாத்து விசாரிச்சு என்னென்ன சோலிகளப் பாக்கணுமோ
அத்தனையையும் பாத்து ரகுநாதனெ உள்ளார கொண்டுப் போயி வைக்குறாப்புல வேலையையும் பாத்துப்புட்டாங்க.
நாட்டு மக்கா நல்லா இருக்கணும்னு ரோட்டை போடப் போயி ரகுநாதெம் ஜெயிலுக்குள்ள போயி
உக்கார்றாப்புல ஆயிடுச்சு. அதுக்காக மித்த சனங்க வுடல. ஊரே தெரண்டுப் போயி போலீஸ்
ஸ்டேஷன் வாசல்ல உக்காந்துப்புட்டு. போலீஸ்காரவுகளுக்குத்தாம் தர்ம சங்கடமா போயிடுச்சு.
ஒரு பக்கம் பக்கவான வக்கீலு தயாரு பண்ணிக் கொடுத்த கம்ப்ளெய்ண்டு, இன்னொரு பக்கம்
ஊரு சனங்கன்னதும் மண்டெயப் பிய்ச்சிக்கிட்டாங்க.
இதென்னடா வம்பாப் போச்சுன்னு போலீஸ்காரங்க
வெவகாரத்த மன்னார்குடி கோர்ட்டுல கொண்டு போயி நிப்பாட்டிட்டாங்க. அது ஒரு வழக்கா
கொஞ்ச காலம் நடந்துகிட்டுக் கெடந்துச்சு. நெலத்துக்காரங்களும், ரகுநாதெம் குரூப்பும்
கோர்ட்டுக்கு அலையோ அலையோன்னு அலைஞ்சிக்கிட்டு கெடந்து அலுத்துப் போயி அதெ கொஞ்சம்
சுலுவா வுட்ட நேரம் பார்த்து, ரகுநாதெம் ரோட்டுக்கு இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும்
அப்பிடி இப்பிடின்னு அக்கப் ஒக்கப் பண்ணி அவசர அவரசமா ஒரு ரோட்டைப் போட்டு கடமெய
முடிச்சாரு. அதுவும் ஒரு கேஸாப் போயி நடந்தது தனிக் கதெ. அதெ பேச ஆரம்பிச்சா ரோட்ட
வுட பெரிசா நீண்டுப் போவும். அப்போ ரொம்ப காலத்துக்கு மின்னாடி போட்ட ரோடு இந்த
ரோடு. அதுக்குப் பெறவு நமக்கு ஏம் பெரச்சனைன்னு அந்த ரோட்டைக் கையில எடுத்துப் போட
யாரும் முன் வராமல போயிட்டாங்க.
எப்பவோ போட்ட அந்த ரோட்டுல தாரு காங்காமப்
போயி நாளாயிடுச்ச. வசதி இல்லாத முடியாதவம் செய்யுற கலியாணத்துல போடுற பாயாசத்துல
எங்கனயோ ஒரு எடத்துல ரெண்டு எடத்துல முந்திரிப் பருப்பு கெடக்கும் பாருங்க, அதெ போல
அங்ஙன ஒண்ணு இங்ஙன ஒண்ணுன்ன கப்பிக் கல்லு கெடக்கு. மிச்சதெல்லாம் பேந்துப் போயி வயலுக்குள்ள
கெடக்கோ, வாய்க்காலுக்கள கெடக்கோ யாருக்குத் தெரியும். எந்த பய மக்கா அள்ளிக்கிட்டு
வூட்டுக்குப் போச்சோ யாருக்குத் தெரியும். எந்தக் களிமண்ணு ரோட்டுல தாரு ரோட்டப்
போட்டாங்களோ, அந்த தாரு ரோடு தாரு கழண்டுப் போயி, கப்பி காணாமப் போயி மறுபடியும்
இப்போ களிமண்ணு ரோடாவே ஆயிப் போயிடுச்சு. அந்த ரோடு இப்பவும் எப்பவும் அப்படியேத்தாம்
கெடக்குது. ரோடுன்னா வயலுகளுக்கு நடுவே போற வரப்புகள்ல கொஞ்சம் அகலமான வரப்புன்னு
சொல்ற அளவுக்கு இருக்கு. அவ்வளவுதாம். அத்த ரோடுன்னு சொல்றதா, ரோடுகளுக்கெல்லாம்
சாபக் கேடுன்னு சொல்றதான்னு தெரியல. அப்பிடி ஒரு ரோடு அது.
கோட்டகத்து ரோடுன்னா அது களிமண்ணு ரோடுதாம்,
பூட்ஸ் கால்லு ரோடுதாம். அந்த ரோட்டு வழியத்தாம் வடக்குத் தெருவத் தாண்டி களிமங்கலம்
போயாவணும். வடக்குத் தெருவ தாண்டி களிமங்கலத்துக்கு போறதுக்கு இடையில ஒரு வாரி வரும்
பாருங்க. அதுல கட்டியிருக்கிற பாலம் மட்டும் பெரிசா இருக்கு. நல்ல வேளையா அந்தப் பாலத்துக்குப்
பக்கத்துல வயலுங்க வர்றாம வாரிக்கரை கொஞ்சம் பெரிசா இருந்ததால அதெ நல்ல வெதமா கட்டி
முடிச்சிக் கெடக்கு. இல்லாட்டியும் வயலுக்காரங்க அது இதுன்னு பெரச்சனைப் பண்ணி, என்னோட
நெலத்துல பாலம் வருதுன்னு ரோட்டப் போட்டது போல, பாலத்தையும் கட்ட முடியாம கண்டமாக்கிப்
போட்டிருப்பாங்க. களிமங்கலத்தக் கடந்தா, அப்பிடியே வெள்ளையாத்தத் தாண்டுனா கோட்டகம்தாம்.
வெள்ளையாத்த தாண்டனுமே!
*****
No comments:
Post a Comment