9 Jan 2020

வந்தேன்னா பாத்துக்கோ!



செய்யு - 322
            விகடு காலையில எட்டரை மணி வாக்குல வந்து ஆபீஸத் தொறந்தான்னா தனியாளாத்தாம் ரொம்ப நேரம் உக்காந்திருப்பான். எப்பவாச்சும் மாலிக் வருவாரு. கொஞ்ச நேரம் பேசிட்டு உக்காந்துப்புட்டு வருவாரு. இடையிடையே பணத்தை முதலீடு பண்ணவங்க வருவாங்க. முதலீடு என்ன நெலையில இருக்குன்னு கேட்டுட்டுப் போவாங்க. இதுல நேரம் ரொம்ப கெடைச்சது. எவ்வளவு நேரந்தாம் சும்மா உக்காந்திருக்க முடியும். கிடைச்ச நேரத்துல இஷ்டத்துக்குப் புத்தகங்களப் படிச்சிட்டு உக்கார ஆரம்பிச்சான் விகடு. குறிப்பா நாவல்கள் படிக்கிறதுல அவனோட ஆர்வம் அதிகமா இருந்துச்சு. ஒரு எழுத்தாளர எடுத்துக்கிட்டா அவரு எழுதுன எல்லா நாவல்களையும் படிக்கிறதுன்னு ஆரம்பிச்சிட்டான். ஒரு எழுத்தாளரோட நாவல்களை முடிச்சிட்டா அடுத்துச் சிறுகதைத் தொகுப்புகளா படிக்க ஆரம்பிச்சான். நாவல்கள்தான் சிறுகதைகளா சுருங்குறதாவும், சிறுகதைகள்தாம் நாவலா விரியுறதாவும் அவனுக்குள்ள ஒரு தோற்ற மயக்கம் ஏற்பட்டுச்சி.
            வாசிக்கிற ஒவ்வொரு நாவல்களயும், சிறுகதைகள்ளயும் எங்கோ ஓர் எடத்துல அவன் இருக்குற மாதிரியே அவனுக்குள்ள இன்னொரு தோற்ற மயக்கம் ஏற்பட ஆரம்பிச்சிடுச்சு. அதெப்படி இன்னொருத்தரோட எழுத்துல நாம்ம இருக்கோம்ங்ற கேள்வி அவனுக்குள்ள எழும்ப ஆரம்பிச்சிச்சு. அடிப்படையில எல்லாரும் மனுஷங்கத்தானே. ஒவ்வொருத்தரோட அனுபவத்துலயும் இன்னொருத்தரு இருக்கவே செய்யுறோம். ஒவ்வொருத்தரோட அனுபவங்கள் தனித்தனியானதுன்னாலும் சில விசயங்கள் பொதுவானதுத்தாம். யாரும் புதுசா ஒரு வாழ்க்கையை வாழ்ந்து புதுசா ஒரு அனுபவத்தைச் சுகிச்சிட முடியாது. எல்லாரும் அனுபவிச்சி அனுபவிச்சித் தேய்ஞ்சுப் போன அனுபவத்தைத்தாம் நமக்குன்னு நடக்குறப்போ புதுசுங்ற மாதிரி அனுபவிக்கிறோம்.
            இந்தப் பூமியில பொறந்த எத்தனையோ மனுஷங்க அழுதிருப்பாங்க. நாம்ம அழுறப்ப என்னவோ நாம்ம மட்டுந்தாம் அந்த கஷ்டத்த அனுபவிக்கிறாப்புல அது நமக்குப் புதுசா தோணும். ஆனா அழுகை பழசு. எவ்வளவோ பேரு அழுதிருப்பாங்க. எத்தனையோ பேத்தோட கண்ணீர்த் துளிகள இந்தப் பூமி தன்னோட மடியில ஏந்திருக்கும். இப்படித்தாம் ரத்தம், வெறி, வேகம், கொலைன்னு எவ்வளவையோ இந்தப் பூமிப் பாத்திருக்கும். அது இதையெல்லாம் பாத்துப் பாத்து அலுத்துக் கூட போயிருக்கும். புதுசா பாக்குற நமக்கு மிரட்சியாத்தாம் இருக்கு. மனுஷங்க எல்லாருக்கும்தாம் ரேகை இருக்கு. ஆனா ஒவ்வொரு ரேகையும் ஒவ்வொரு மாதிரிங்ற மாதிரித்தாம், எல்லாருககும் அனுபவம் இருக்கு. ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு மாதிரித்தாம். அதுல பொதுவான தன்மையும் இருக்கு. பொதுவான தன்மையிலேந்து ரேகையப் போல தனித்துப் போற தன்மையும் இருக்கு. அந்த அளவுலத்தாம் ஒவ்வொரு நாவலும் சரி, சிறுகதையும் சரி ஒவ்வொருத்தரோடயும் பொருந்திப் போகிற மாதிரியும் அதே நேரத்துல கொஞ்சம் வேறுபடுற மாதிரியும் இருக்குது.
            ஜோசியம் சொல்றப்ப கவனிச்சீங்கன்னா தெரியும், ஜோசியக்காரரு பொத்தாம் பொதுவாத்தாம் அடிச்சி விடுவாரு. அது எல்லாத்துக்கும் பொதுவா பொருந்துதுங்றதால அதெ கேக்குறவங்களுக்கு அந்தப் பொதுவான விசயங்கள் அப்படியே பொருந்திப் போவும். ஒலகத்துல எந்த மனுஷனுக்குக் கவலையில்ல? ஒலகத்துல எந்த மனுஷனுக்குச் சங்கடங்கள், கஷ்டங்கள் இல்ல? ஒலகத்துல எந்த மனுஷன் இன்னொரு மனுஷனால ஏமாத்தப்படல? சுரண்டப்படல? ஒலகத்துல எந்த மனுஷன் நிர்கதியா நிக்கல? ஒலகத்துல நன்றிகெட்ட தனத்தையும், நாடுமாறித் தனத்தையும் அனுபவிக்காத மனுஷங்களே இருக்க முடியாது. இதெல்லாம்தாம் ஜோசியத்தோட அடிப்படை. இதையெல்லாம் வெச்சுச் சொல்றப்போ அது எல்லா மனுஷங்களுக்கும் பொருந்திப் போவும். இதைக் கேட்டு அப்படியே தனக்குன்னு நெனைச்சுக்குற மனுசங்களும் இருக்கத்தாம் செய்யுறாங்க.
            எழுதுறவங்களும் அப்படி ஒரு ஜோசியக்காரங்கத்தாம். அவுங்க எதுக்கே இருக்குறவங்களோட ஜோசியத்தச் சொல்லல அவ்வளவுத்தாம் வித்தியாசம். அவுங்க கண்ணால கண்ட மனுஷங்களப் பத்தின ஜோசியத்தச் சொல்றாங்க. உண்மையில அவுங்க சொல்ற ஆளுங்க நூத்துக்கு நூறு அப்படியே இருந்திருக்கவும் மாட்டாங்க, நூத்துக்கு நூறு அப்படியே இல்லாமலும் இருந்திருக்க மாட்டாங்க. ஒரு ஜோசியக்காரரோட வசியச் சொற்கள கவனிச்சீங்கன்னா தெரியும். அதுல உண்மை இருக்குற மாதிரியும் தெரியும். இல்லாதது மாதிரியும் தெரியும். கேக்குற மனுஷன் அதெ தனக்கானதா உள்வாங்கிக்கிறாம் இல்லையா! அப்படித்தாம் வாசிக்கிற எழுத்தையும் வாசகனும் உள்வாங்கிக்கிறாம். இதெ எழுத்துக்குப் பின்னாடி நின்னு பார்த்தாத்தாம் தெரியும். அப்படி பின்னாடி நின்னு பாக்குறப்போ அந்த எழுத்துல உண்மை எவ்வளவு, புனைவு எவ்வளவுங்றதையும் கணிச்சிட முடியும். படிக்க படிக்க அதெ கண்டுபிடிக்கிறது ஒரு வெளையாட்டாப் போயிடும். அந்த வெளையாட்டுக்காவே படிச்சிக்கிட்டே இருப்பீங்க. அப்படித்தாம் விகடு படிச்சிக்கிட்டே இருக்க ஆரம்பிச்சான்.
            எவ்வளவு நேரந்தாம் படிச்சிக்கிட்டு இருக்கிறதுன்னு எழுதவும் ஆரம்பிச்சான். கதை, கவிதை, கருத்து, நகைச்சுவை, பத்தி வகையறான்னு மனசுல தோணுறது எதுவோ அதை எழுத ஆரம்பிச்சான். எழுதுனதெ பொழுது போகாமா பத்திரிகைகளுக்கும் அனுப்ப ஆரம்பிச்சான். அப்படி அனுப்புனதுல எப்பவாச்சும் எதாச்சும் பிரசுரம் ஆவும். அது பிரசுரம் ஆவுறப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும். மித்தபடி ஒரு அம்மாக்காரி புள்ளை சாப்பிடுமேன்னு ஒரு பலகாரத்தை நெறைய செஞ்சு வெச்சா அதிலேந்து இத்துனூண்ட மட்டும் தின்னுட்டு ஓடுற கொழந்தையப் போலத்தாம் பத்திரிகையில ஆவுற பிரசுரங்களும். நெறைய எழுதி அனுப்புனா ஏதோ கொஞ்சம் பிரசுரம் ஆவும். அதிலயும் விகடு தனக்குத் தோணுன அனுபவங்கள மட்டுந்தாம் எழுதினான். இன்னொரு அனுபவத்துக்காக முயற்சிக்க இல்ல. தன்னைத் தாண்டி அவன் முயற்சித்துப் பாக்கல. இப்பவும் அவனோட எழுத்துல அதுதாம் ஒரு பிரச்சனையா இருக்கு. எழுத்துல அவனுக்கு முயற்சிங்றதே கெடையாது. அதுவா வர்றதை மட்டுந்தாம் எழுதுறான். அப்படி எழுதுறதெல்லாம் பத்திரிகைக்கப் பொருத்தமா இருக்காதுதாம். அவுங்க எதிர்பார்க்குற வடிவத்துக்கும் ஏத்து வராதுதாம். யாரோ ஒரு சிலருக்கு இந்த எழுத்துப் புடிக்கலாம். எல்லாருக்கும் புடிக்கும்னுலாம் சொல்லிட முடியாது. யாரோ சில பேத்துக்குப் பிடிக்கிற எழுத்துகள எல்லாரும் படிக்கிற பத்திரிகையில போடுறது சிரமந்தாம்ன்னு ஒரு கட்டத்துக்கு மேல அவனும் புரிஞ்சிக்கிட்டாம்.
            பல நேரங்கள்ல ஆபீஸப் போட்டது சம்பாதிக்காவா? படிக்கவா?ங்ற குழப்பம் கூட அவனுக்கு வரும்.  அது மாதிரியான நேரங்கள்ல எப்படியும் குஞ்சு கவுண்டர்கிட்டேயிருந்து போன் வரும். கமிஷன் காக்காசுக்குக் கூட தேறலன்னு திட்டுற மாதிரி திட்டாமப் பேசுவாரு. "பேசாம இந்த ஆபீஸ விட்டுப்போட்டு திருவாரூ ஆபீஸ்ல போயி வேலயப் பாருடா. இதெ வுட நல்லா சம்பாதிக்கலாம். மாசத்துல நாலு நாளுத்தாம் டிரேடே ஆவுது. இதுக்கு எதுக்குடா ஒரு ஆபீஸூ? இஞ்ஞ உள்ளவங்களெ அஞ்ஞ கொண்டு போயிட்டேன்னா இதுக்கு ஆவுற செலவும் மிச்சமாவுமடா. மாசத்துல நாலு டிரேடுக்கும், எட்டு டிரேடுக்கும் ஆவுறத்துக்கெல்லாம் ஆபீஸப் போட்டா நமக்கும் நூத்தியெட்டு பிராஞ்சு இருக்குன்னு வெளியில சொல்லிப் பீத்திக்கோவாடா? பிரயோசனம் இல்லாம ஏம்டா தண்டமா ஆபீஸப் போட்டுக்கிட்டு உக்காந்திருக்கேடா?" அப்பிடிம்பாரு.
            அவரு அப்பிடித் திட்டுற மாதிரி திட்டுறது கூட விகடுவுக்கு ஏதோ ஒரு நாவல்லேர்ந்து ஒலிக்கிற குரலு மாதிரி தெரிய ஆரம்பிச்சது. தன்னோட மொத்த வாழ்க்கையே ஒரு நாவல் மாதிரி தெரிய ஆரம்பிச்சிது அவனுக்கு. அந்த நாவல்ல தானும் ஒரு பாத்திரம் மாதிரி ஒணர ஆரம்பிச்சாம் அவன். ஏதோதோ புத்தகங்கள்ல படிக்க இருக்கிறதெ வுட தன்னோட வாழ்க்கையில படிக்கிறதுக்கே நெறைய இருக்குறது அவனுக்குப் புலப்பட ஆரம்பிச்சி. எதையெதையோ எழுதிக்கிட்டு இருக்குறது புலப்பட ஆரம்பிச்ச பின்னாடி அதெ விட எழுதுறதுக்கு தன்னோட வாழ்க்கையில நெறைய இருக்கிறது அவனுக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சி. அதெ எழுதி மாளவே நாட்கள் போதாதுன்னு புரிய ஆரம்பிச்சப் பின்னாடி அவன் தன்னையே தன்னோட வாழ்க்கையையே எழுத ஆரம்பிச்சான். ஒரு நாட்குறிப்பு எழுதுறதெல்லாம் எழுத்தாகுமா? ஆகாது. இரு நிகழ்வுச் சொல்லல்தாம். நடந்ததெ பகிர்ந்துக்கிற உணர்வுதாம். எப்பிடி நடந்துச்சோ அதெ அப்பிடியே பகிர்ந்து நாம்ம பேசிக்கிறோம். அவ்வளவுதாம்.
            உண்மையைச் சொல்லணும்னா இதுல எழுத என்ன இருக்கு? நடந்தது. அப்படியே இன்னொருத்தருகிட்ட சொல்றப்போ அதுவாவே தன்னைச் சொல்லிக்கும்ல. அப்படித்தாம் அது பாட்டுக்கு அது தன்னைத் தானே சொல்லிட்டுப் போறதெயும் உணர ஆரம்பிச்சான் விகடு. இதெ அவன் எழுதுறதாவும் சொல்றது தப்புத்தாம். என்ன நடந்ததோ அது தன்னைத் தானே எழுதிக்கிறதுங்றதுதாம் உண்மை. இதுக்குன்னு என்ன திட்டமிடல் இருக்குச் சொல்லுங்கோ? இதுக்குன்னு என்ன யோசிக்க வேண்டி இருக்கு சொல்லுங்கோ? அந்தந்தக் கணத்துக்குத் தெரியுது முன்னாடி ஒரு கணத்துல நடந்தது என்னான்னு. அதெ அப்படியே அது பாட்டுக்குத் தனக்குத் தானே ஒரு கதையப் போல சொல்லிக்கிது.
            இப்படியே இந்த ஆபீஸ்லேந்து இந்த மாதிரியே வாழ்க்கைய படிச்சிக்கிட்டும், எழுதிக்கிட்டும் ஓட்டிக்கிட்டா தேவலாமுன்னு தோண ஆரம்பிச்சிடுச்சி அவனுக்கு. அவ்வேன் ஆபீஸூ வர்றதே படிக்கிறதுக்கும், எழுதுறதுக்கும்னு ஆகிப் போச்சு. எதெப் பத்தியும் கவலையில்லாம ஆபீஸூக்கு வர்றதும், போறதுமுன்னு இருந்தா கைச்செலவுக்காவது காசு வேணுமில்லே. அவனோட அப்பங்காரரு கொடுத்த எண்பதினாயிரத்துலேந்து ரண்டாயிரத்துக்கு எடுத்துக் கொடுத்து மாலிக்கிட்டேயிருந்து செல்போன வாங்கிக்கிட்டவேன் அதிலேந்து இன்னும் ஒரு மூவாயிரத்து எடுத்துக்கிட்டு மிச்சத்தெ எழுபதஞ்சாயிரத்த அப்பிடியே சுப்பு வாத்தியார்கிட்டேயே திருப்பிக் கொடுத்து கடனா வாங்குனதையெல்லாம் திருப்பிக் கொடுத்துப்புட்டு, மிச்சத்தைச் செலவுக்கு வெச்சிக்குங்கன்னு சொல்லிப்புட்டான்.
            கையில இருந்த மூவாயிரத்த வெச்சி மூணு மாசத்துக்கு வாடகை, கரண்டு பில்லுன்னு சமாளிச்சி முடிச்சவன் நாலாவது மாசத்திலேந்து கைச்செலவுக்குப் பணமும் இல்லாம, குஞ்சு கவுண்டரோட சொல்லாடலுக்கு சரியான பதிலையும் சொல்லாம ஓட்டிக்கிட்டு இருந்தான். ஆபீஸ்ல அக்கெளண்ட் ஆரம்பிச்ச பதினேழு பேத்துக்கும் சேர்த்து பன்னெண்டு லட்சத்துக்கு வாங்கிப் போட்ட ஷேர்கள்லேந்து ஆறாயிரம் கமிஷன்ல ஹெட் ஆபீசுக்குச் சேர வேண்டிய ஆயிரத்து எரநூறுப் போவ நாலாயிரத்து எண்ணூறு இவனோட அம்மாவோட அக்கெளண்ட்ல வந்து சேந்திருச்சு. அதெ எடுத்து மிச்ச மீதியிருந்த செலவுகள சமாளிச்சு அடுத்த ரெண்டு மாசத்தச் ஓட்டுனவனுக்குக் குஞ்சு கவுண்டரு கடைசி எச்சரிக்கைய கொடுக்க ஆரம்பிச்சாரு.
            "இந்தாருடா வெகடு! மாசம் ஆற நெருங்கப் போவுது. உம்மட ஆபீஸூலேந்து ஆயிரத்துச் சொச்சம் காசு தேறல. பீசாத்துக் காசு மாசத்துக்கு எரநூறு கூட வாராத ஆபீஸூ ஒரு ஆபீஸாடா. ஒண்ணு ஆபீஸ இழுத்து மூடிப் போடுடா. இல்லன்னக்கா நம்மகிட்ட ஒப்படைச்சிட்டு ஒதுங்கிப் போடா. நாம்ம ஆளுகளப் போட்டு எப்பிடி நடத்துறேம் பாருடா. இந்த மாசத்துலேந்து இந்த மாதிரி பீசாத்து காசுக்கெல்லாம் ஆபீசு நடத்த முடியாதடா! திங்குறவேம்தாமடா பேள முடியும். ஒண்ணுத்தையும் திங்கவும் மாட்டேங்றே, ‍அட இத்துனூன்னு போட்டு மெள்ளவும் மாட்டேங்ற. பின்னாடி எப்பிடிடா பேள முடியும்? ஆபீசுக்கு வந்தேன்னா பாத்துக்கோ... நடக்குறதே வேற!" அப்பிடின்னிட்டாரு.
            குஞ்சு கவுண்டரு போன் போட்ட மறுநாளே ரித்தேஸோட போனும் வந்திடுச்சி. "ஒங்கிட்டே ன்னாத்தா சொன்னேம்? லெனின வெச்சி பத்து நாளு கிளையண்ட்ஸ வரச் சொல்லி நடத்துன்னு சொன்னேம்ல? நீயி பண்ணல. சொன்னதெ கேக்கவே மாட்டேங்றே. இத்து சரியாப் படலே! நாம்ம ஆபீஸூக்கு வந்துட்டுப் போனேன்னா பீஸ் நமக்கு பத்தாயிரம் கொடுத்தாவணும் பாத்துக்கோ!" அப்பிடிங்றாரு ரித்தேஸ். அவரு சொன்னதெக் கேக்கலேங்ற கோபம் அவரோட குரல்ல நல்லாவே தெரிஞ்சிச்சு.
            "லெனினுக்குப் பத்து நாளைக்கு அய்யாயிரம் கொடுக்க எங்கிட்ட பணம்லாம் இல்ல. பெறவு எப்பிடி லெனின வாரச் சொல்றது?  நீஞ்ஞ வந்தா ஒங்களுக்குப் பத்தாயிரம் கொடுக்கவும் நம்மகிட்ட பணமும் இல்ல. அதால தயவு பண்ணி வந்துப்புடாதீங்க!" அப்பிடிங்றான் விகடு.
            "அப்பிடின்னா ஆபீஸ இழுத்து மூடிட்டுக் கெளம்பு." அப்பிடிங்கிறாரு ரித்தேஸூம் கோபமா.
            "இந்த மாசத்துக்கு எம்மாம் டேர்ன் ஓவர் ஆவணும்? ஒங்களுக்கு எம்மாம் சேரணும்?" அப்பிடிங்றான் விகடு.
            "ன்னா பண்ணப் போறே?" அப்பிடிங்றார் ரித்தேஸ். அப்பிடிக் கேட்டுப்புட்டு, "அட்லீஸ்ட் மினிமம் ரண்டாயிரமாவது ஹெட் ஆபீஸூக்கு கமிஷன் வந்தாவணும்!"ங்றாரு ரித்தேஸ்.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...