"...உங்கள் ஹீரோவைப் பற்றி நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்? அவன் அடிப்படையில் பலவீனமானவன். அவனைப் பலமானவனாக உருவாக்குபவன்
வில்லன்தான்.
நீங்கள் புகழ வேண்டுமானால் வில்லனைத்தான்
புகழ வேண்டும். உங்கள் ஹீரோவைப் பலமாக உருவாக்கிய வில்லனைத்தான் புகழ வேண்டும்.
உங்கள் ஹீரோ வில்லனலிருந்து, வில்லனால்
பிறந்தவன். வில்லன் இல்லையென்றால் உங்கள் ஹீரோ இல்லை.
நல்லதைச் செய்வதாகச் சொல்லி உங்கள் ஹீரோ
உங்களிடம் அரசியல் பண்ணுகிறான். ஒரு வில்லனோ தன்னோட இயல்பான குணங்களோடு இருக்கிறான்.
அவன் தன்னுடைய தீய குணத்துக்காக எந்த அரசியலையும் செய்வதில்லை. உங்கள் ஹீரோ அப்படியா?
அவன் தீய குணத்தை நய வஞ்சமாக அழிக்கும் மோசக்காரன் என்பதைக் காட்டாமல் மறைத்து தன்னை
நல்லவனாக நிலைநிறுத்தும் அரசியலைச் செய்கிறான்.
உங்கள் ஹீரோவை விடுங்கள். உங்கள் தெய்வங்கள்
என்ன? துஷ்ட சக்திகள் இல்லையென்றால் உங்கள் தெய்வங்கள் இல்லை. துஷ்ட சக்திகளுக்கு எதிராக
நீங்கள் படைத்தவைகளே உங்கள் தெய்வங்கள். அசுரர்கள் உங்கள் தேவர்களை உருவாக்குகிறார்கள்.
பாதுகாப்பின்மை உங்களை கோயில்களை, ஆலயங்களைக் கட்ட வைக்கின்றன. தப்பான நானே சரியான
உங்களை உருவாக்க சரியானவன்.
உங்கள் தெய்வங்கள் எல்லாம் கொலைகாரர்கள்.
எந்தத் தெய்வமாவது உங்கள் கதைகளில் புராணங்களில் கொலை செய்யாமல் இருக்கிறதா என்ன?
கொலைகாரர்களைத்தாம் நீங்கள் தூக்கிக் கொண்டாடுகிறீர்கள். உங்கள் தெய்வங்கள் அனைத்தும்
கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் எனத் தண்டித்தவை. உங்கள் சார்பாக உங்கள் தண்டனைகளை,
நீங்கள் தண்டிக்க நினைப்பவைகளைச் செயல்படுத்த உங்களுக்கு ஒரு ஆள் தேவை. அந்த ஆளைத்தான்
நீங்கள் கடவுளாகப் படைத்துக் கொள்கிறீர்கள்.
உங்கள் ஆசைகளை நிறைவேற்றித் தர, உங்களுக்கான
தடைகளை அழித்துத் தர, உங்களுக்கான எதிர்ப்புகளை ஒழித்துக் கட்ட மனரீதியான ஒரு சக்திக்காக
உங்களுக்குக் கடவுள் தேவைப்படுகிறார். அந்தக் கடவுளைப் பயன்படுத்தியே உங்களது ஆசைகளை
நியாயம் என்று எல்லாரையும் நம்ப வைக்கிறீர்கள். அந்தக் கடவுளைப் பயன்படுத்தியே உங்களுக்கு
எதிரான தடைகள் அனைத்தையும் துஷ்ட சக்தி என நிறுவி வைக்கிறீர்கள். அந்தக் கடவுளைப் பயன்படுத்தியே
உங்களை எதிர்ப்பவர்களையெல்லாம் மனித சமூகத்தின் விரோதியெனச் சித்தரித்து அழிக்கிறீர்கள்.
உங்கள் வன்மம், வன்முறை, அக்கிரமம், அநியாயம்
அனைத்தையும் காட்ட உங்கள் கடவுள் உங்களுக்குப் பயன்படுகிறார். அவரைப் பயன்படுத்திக்
காட்டி உங்கள் அநியாயங்களுக்கு நீங்கள் நியாயம் தேடுவதையும், வன்முறையை சரியானதென நிறுவவும்
நீங்கள் பிரயத்தனம் படுகிறீர்கள்.
நான் சொல்கிறேன் உங்கள் மனதின் துஷ்ட
சக்திதான் உங்கள் கடவுள் என்று. உங்கள் கடவுளும் உங்கள் உற்பத்தித்தான். ஒரு காலத்தில்
அவர்களில் ஒரு சிலர் நான் ஆரம்பத்தில் சொன்ன ஹீரோக்களாக இருந்திருக்கலாம். ஹீரோவாக
இருந்தாலென்ன அவரும் அடிப்படையில் ஒரு கொலைகாரர்தான். நீங்கள் கொலைகாரர்களைக் கொண்டாடும்
சமூகத்தைச் சார்நதவர்கள். கொலை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் கொலையைக்
கூடி நின்று தடுக்க யோசிப்பீர்கள். உங்களுக்காக யாரையவாது கொலை செய்யும் ஆட்களைப்
பிடிப்பதில் நிற்பீர்கள். அந்தக் கொலையையும் எந்தப் பிரதி உபகாரமும் உங்களிடம் எதிர்பார்க்காமல்
உங்களுக்காகச் செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள்..." என்று எஸ்.கே. பேசப் பேச கூச்சலும், கரைச்சலும் அதிகமாகத் தொடங்கின.
*****
No comments:
Post a Comment