9 Jan 2020

27.0



            எஸ்.கே. பேச பேச கூட்டத்தில் சலசலப்பு உண்டாகிறது. இலக்கியத்தின் அடிப்படையான நோக்கத்துக்கு எதிராகப் பேசுவதாக தமிழய்யா தம்முடைய முதல் கண்டனத்தை முன் வைக்கிறார்.

            "இலக்கியம் என்பது இலக்கை இயம்புவது. அது சரியான இலக்கை இயம்புவது. தவறான இலக்கை இயம்புவது அன்று. உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு. கயவர் மாட்டு அன்று. தவறான சான்றுகளை நிறுவுவது அகல் இலக்கியக் கூடலுக்கு சிறப்பாகாது." என்கிறார் தமிழய்யா.
            "வாழ்க்கையில தப்பே நடக்கலைன்னு சொல்ல வரல. தப்பான மனுஷங்களும் உலகத்துல இல்லேன்னு சொல்ல வரல. அதுக்காக அதையே நாம்ம நியாயம் பண்ணிட்டு இருக்க முடியாது. சரியானதைப் பேசி, சரியான திசையில மனசைத் தயார் பண்ணியாகணும். அதுக்குத் தகுந்தாப்புல நம்மோட பேச்சும், எழுத்தும் அமையுறதுதாம் சரியா இருக்கும்!" என்கிறார் வில்சன் அண்ணன்.
            "தம்பி விகடு வாலிப வயதில் இருக்கிறார். அந்த வாலிப முறுக்கு இது போன்று வித்தியாமானவர்களைக் கொண்டு வந்து பேச வைக்க வேண்டும் என்று ஆர்வ கோளாறில் தப்புத் தப்பான முடிவுகளை எடுக்க வைக்கிறது என நினைக்கிறேன்!" என்கிறார் சிம்மக்குரலோன் கவிஞரான வேலு.
            "விகடு ஆட்களை இங்கு பேச கொண்டு வருவதற்கு முன் அது சம்பந்தமாக கலந்தாலோசித்து விட்டு பிறகு கொண்டு வருவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்." என்கிறார் கவிஞர் மாணிக்கம்.
            மேலும் பலரும் ஒவ்வொருவராக எழுந்து தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஆயத்தமாகிறார்கள்.
            அகல் கலை இலக்கியக் கூடலில் இது போன்று ஒருமித்து ஒவ்வொருவராக எழுந்து எதிர்ப்பு தெரிவிப்பது இதுவே முதன் முறை என்றாகிறது. ஒவ்வொருவராக எழுந்து எஸ்.கே.வின் பேச்சிற்கு எதிராக தங்களது எதிர் வாதங்களை முன்வைக்க ஆரம்பிக்க முனைகிறார்கள்.
            எஸ்.கே. முந்திக் கொள்கிறார்.
            "... இதற்குத்தான்... இதற்குத்தாம் இது மாதிரியான கூட்டங்களில் பேச நான் யோசிக்கிறேன். நீங்கள் உண்மையின் ஆழத்தைக் காண யோசிப்பவர்கள். உண்மையின் ஆழம் என்பது பொய்யின் அடி மடியில் இருக்கிறது. பொய்யின் அடி மடியை அவிழ்க்காமல் அதை நீங்கள் காண முடியாது. அதைத்தான் நான் செய்கிறேன். நீங்கள் சரியானவற்றில் சரியானதைத் தேடுகிறீர்கள். உண்மையில் சரியான ஒன்று உலகில் இருக்கிறதா என்ன? அதற்கான அளவுகோல்தான் என்ன? தவறான ஒன்றுதான் சரியான ஒன்றை உருவாக்குகிறது. தவறுதான் சரியானது என்பதன் அளவுகோல். தவறான ஒன்று இல்லாமல் சரியான ஒன்று இல்லை. உங்கள் சரியான அளவுமுறைகள் அனைத்தும் தவறான அளவுமுறையிலிருந்து அளந்தெடுக்கப்பட்டு செய்யப்பட்டவைகளே. உங்கள் சட்டம், நீதி, நியாயம், நேர்மை அனைத்தும் மாபெரும் அநீதி, அக்கிரமம், வன்முறைகளினின்று உருவானவை. அதிதவறுகளிலிருந்து பயந்துப் போய் நீங்கள் மனிதக் குலத்தைக் காக்க முயல்கிறீர்கள். அந்தப் பயம்தான் உங்களை நீதியை நிலைநாட்டச் செய்கிறது. சட்டத்தைத் துணைக்கு அழைக்க சொல்கிறது. உங்களுக்கான நியாயத்தை, நேர்மையை உருவாக்குகிறது. குற்றங்கள் அன்றோ உங்களுக்கான சட்டத்தையும், நீதியையும் பிரசவித்திருக்கிறது. இதை உங்களால் மறுக்க முடியுமா?..." என்கிறார் உரத்த குரலில் எஸ்.கே.
            "நீங்கள் என்னை அவமதித்து விட்டதாக உணர்கிறேன். இந்த அவமதிப்புத்தாம் என் பேச்சின் மையம். நீங்கள் என்னை கூடுதலாகப் பேச வைக்கிறீர்கள். என் பேச்சை முடித்து விட்டு... முடித்து விட்டுத்தாம் இடையில் அல்ல... நான் நிச்சயம் வெளிநடப்பு செய்வேன். என்னளவில் நான் காட்ட வேண்டிய எதிர்ப்பு அது. என் எதிர்ப்பை நிச்சயம் இந்தக் கூட்டத்தில் பதிவு செய்து செயல்படுத்துவேன். ஆம் செயல்படுத்துவேன்!" என்கிறார் மேலும் எஸ்.கே.
*****


No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...