8 Jan 2020

கமிஷன கொட்டுனா கருணையைக் காட்டுற உலகம்!



செய்யு - 321

            புரோக்கிங் ஆபீஸைச் சாமார்த்தியமா நடத்த முடியாத நெலையில விகடு இல்ல. ஆனா சாமர்த்தியமாக நடத்த முடியாத மனநெலையில அவ்வேன் இருந்தான். அவனோட அப்பங்காரரான சுப்பு வாத்தியாரோட வார்த்தைங்க அவனோட மனசுல எதிரொலிச்சிக்கிட்டே இருந்ததால தினசரி வர்த்தங்கற இன்ட்ரா டே டிரேடிங்கை அவ்வேன் ஆரம்பிக்காமலே இருந்தான். மாலிக் பதி‍னேழு பேரை வாடிக்கையாளருங்களா சேத்து விட்டாரு. அந்த பதி‍னேழு பேர்ல மாலிக் அய்யாவைத் தவிர மித்த பதினாறு பேருக்கும் ஷேர் மார்க்கெட்டுன்னா என்னான்னே தெரியாது. மாலிக் அய்யாவை நம்பி எல்லாரும் சேர்ந்திருந்தாங்க.
            ஒரு டிரேடர்ஸ் மீட்டைப் போட்டு விளக்கம் கொடுத்தா அவுங்க எல்லாரும் மறுநாளே டிரேடர்ஸ்ஸா மாறிப்புடுவாங்கறது வேற விஷயம். டிரேடிங்க்ல லாபம் பாக்குறவங்கள நூத்துல ஒருத்தர பாக்குறதே அதிசயங்றதால அது விகடுவுக்குப் பிடிக்கல. நிச்சயம் அவுங்க டிரேடிங்கைக் கத்துக்கிட்டு நட்டம் பண்ணிட்டுத்தாம் போவாங்க. நட்டம் பண்ணிட்டுப் போறதோட ஆபீஸ் வாசல்ல மண்ணள்ளி இறைச்சிட்டுத்தாம் போவாங்க. அதால டிரேடிங்ற ஒரு விசயம் இருக்கறத் சொல்லாம பதினேழு பேருக்கும் அவுங்கவங்க கணக்குக்கு நல்ல வெதமா பங்குகளப் பாத்து வாங்கிப் போட்டுருந்தாம் விகடு. ஒவ்வொருத்தருக்கும் அவுங்கவங்க கட்டுன அம்பதாயிரம், ஒரு லட்சம், ரெண்டு லட்சம், அஞ்சு லட்சம்னு பெரிய தொகையிலத்தாம் வாங்கிப் போட்டிருந்தாம். அப்பிடி வாங்கிப் போட்டதுதாம். அதுக்குப் பெறவு எந்த ஆர்டரையும் அவ்வேன் கம்ப்யூட்டர்ல போடல. இதுல ஒரு நல்ல விசயமும் இருக்குது. கொடுக்குற காசுக்கு வாங்கிப் போட்டா போதும். வேறெந்த பிரச்சனையும் இல்ல. இதே டிரேடிங்னா பத்தாயிரத்தக் கட்டிப்புட்டு ஒரு லட்ச ரூவாய்க்கு மார்ஜின் லிமிட்டே வாங்கி இருபதாயிரத்துக்கு நஷ்டத்துப் பண்ணிட்டு மிச்ச பத்தாயிரத்த கட்டாம எஸ்கேப்பு ஆவுறதுக்கு எல்லாம் நெறைய வாய்ப்புங்க இருக்கு. அந்த வகையில இந்த மொறைங்றது ஆபீஸ நடத்துற விகடுவுக்கும் சரி, பங்குகள வாங்கிப் போடுற வாடிக்கைக்காரவங்களுக்கும் சரி நல்லது. அத்தோட பாதுகாப்பானது.
            தினமும் ஆபீஸ்க்கு வர்றது. கம்ப்யூட்டரு ஸ்கிரீன்ல ஓடுற பங்குகளோட வெலையப் பாக்குறது, மூணரைக்கு மார்கெட் முடிஞ்சதும் நாலு மணிக்கெல்லாம் கடையைக் கட்டிட்டுக் கெளம்புறதுன்னுப் போய்ட்டு இருந்தான் விகடு. கிட்டதட்ட அவனுக்கு ஆபீஸ்ல பெரிசா வேலைங்றது இல்ல. வர்றதும் போறதும் ஆபீஸத் திறந்து வைக்கிறதும், மூடிட்டுப் போறதும்தான் வேலை. இந்த வேலைக்கு ஏன் தேவையில்லாம ஆளப் போட்டுக்கிட்டுன்னு அவ்வேன் யாரையும் வேலைக்குப் போடல. ஆனா ஒரு புரோக்கிங் ஆபீஸ்ங்றது இப்படி இருக்காது. டெர்மினல்ல அதிகம் பண்ணிட்டே போகணும். ஒவ்வொரு டெர்மினல்லயும் ஆபரேட்டர்ஸைப் போட்டு யேவாரத்தை அதிகம் பண்ணிட்டு இருக்கணும். தெனந்தோறும் தின வர்த்தங்ற டே டிரேடர்ஸ் வந்துகிட்டும் போய்கிட்டு நெறைய பங்குகள வாங்கிகிட்டும், வித்துக்கிட்டும் போய்கிட்டே இருக்கணும். அப்படி இருந்தாத்தாம் ஒவ்வொரு மாசமும் ஆபீஸை நடத்துறதுக்கான செலவுக்குக் கட்டுபடியாகி லாபமும் பாக்கலாம்.
            பங்குகள வாங்கிப் போட்டு காத்திருந்து விக்குறதுக்கு ஒரு புரோக்கிங் ஆபீஸைப் போட வேண்டியதே இல்ல. ஏன்னா வாங்குறதும், விக்குறதும் எப்பயாவது நடக்கறது. அதாவது ஆடிக்கொரு தடவே அமாவைச்கொரு தடவே நடக்குறது. அப்படி எப்பவோ ஒரு மாசத்துக்கு நடக்குற யேவாரத்துக்கு ஆபீஸைப் போட்டா யேவாரம் நடக்காத மித்த மாசங்கள்ல ஆபீஸ நடத்துறதுக்கான செலவுக்கு என்ன பண்றது? ஆகவே ஒரு ஆபீஸ்ன்னா அதுல வாடிக்கைப் பண்றவங்கள்ல டிரேடர்ஸ்ங்ற தின யேவாரம் பண்றவங்க அதிகமாவும், இன்வெஸ்டர்ங்ற மொதலீடு பண்றவங்க கம்மியாவும் இருக்கணும். இது விகடுவோட ஆபீஸ்ல தலைகீழா இருந்துச்சு. இங்க மொதலீடு பண்றவங்க மட்டுந்தாம் இருக்குற மாதிரி விகடு பண்ணிருந்தாம். தின யேவாரம் பண்ற ஆளுங்க இல்லாத அளவுக்கப் பண்ணி வெச்சிருந்தாம். இதெத்தாம் ரித்தேஸ் தற்கொலைக்குச் சமமான முடிவுன்னு சொல்லியிருந்தாரு.
            அதாவது எல்லாத்தையும் ஒரு விதமா யோசிச்சுத்தாம் விகடு ஆபீஸப் போட்டிருந்தாம். அவனோட அப்பங்காரரு சுப்பு வாத்தியாரு சொன்னது போல யாரும் ஆபீஸூக்கு வந்து பணத்தை விட்டுப்புட்டோம்னு போயிடக் கூடாதுங்றதுல ரொம்ப உறுதியா அவன் இருந்தான். முதன் முதலா புரோக்கிங் ஆபீஸூ போடுறவங்க பங்குகள வாங்கி விக்குறதுக்கான கமிஷன அதிகம் போட மாட்டாங்க. தின வர்த்தகம் பண்ற யேவாரத்துக்கு 0.03 சதவீதமும், டெலிவரி எடுத்து வாங்கி விக்குறதுக்கு 0.3 சதவீதமும் கமிஷனப் போடுவாங்க. விகடு தன்னோட ஆபீஸ்ல தின வர்த்தகம் கெடையாதுங்றதுல உறுதியா இருந்ததால டெலிவரி எடுத்து விக்குறதுக்கான கமிஷன 0.5 சதவீதம்னுதாம் ஒப்பந்தத்தப் போட்டான். ஆரம்பத்துல குஞ்சு கவுண்டருக்கு இது பிடிக்கல. ஆபீஸப் போட்டு வாடிக்கைக்காரங்க அதிகமா வந்தப் பெறவு இந்த வேலையைப் பண்ணலாம்னு சொன்னாரு. விகடு அதெ கேக்கல.
            "நம்மளோட ஆபீஸ்ல வாடிக்கைப் பண்றவங்களுக்கு லாபம் மட்டுந்தாம் வரும். அப்படி வர்ற மாரித்தாம் யேவாரத்தப் பண்ணுவேம். அப்படி லாபத்தப் பண்ணிக் கொடுத்துட்டுத்தாம் கமிஷனெ கூடுதல வாங்கிக்கிறேம். மித்த ஆபீஸ்ல லாபம் பண்ணாலும், நட்டம் பண்ணாலும் சரித்தாம் எல்லாத்துக்கும் கமிஷன்தாம். நம்ம ஆபீஸ்ல லாபத்துக்குப் பண்றதுக்கு மட்டும்தாம் கமிஷன். இஞ்ஞ நட்டங்றது கெடையாது!" அப்பிடின்னான் விகடு.

            "எனக்கு ன்னா? நீயி எத்தினி பெர்சென்டேஜ் வாணாலும் கமிஷனப் போட்டுக்கோடா. சம்பாதிச்சிக்கோடா. யேவாரம் நல்லா நடக்கோணும். அதாங் நமக்கு முக்கியம். அதுல சொணக்கம் ஆயிடாமப் பாத்துக்கோணும். நம்மட ஆபீஸ்கள்ல ஒண்ணுத்துல கூட இந்த அளவுக்கு கமிஷன் கெடையாது புரிஞ்சுக்கோணும். அதாலத்தாம் மித்த ஆபீஸ்ங்கள்ல யேவாரம் பண்றவனும் நம்ம ஆபீஸ்ல ஒரு கணக்கு வெச்சிக்க நெனைக்கிறாம். கமிஷனெ நெறைய வெச்சிக்கிறதுல ஒரு புண்ணியமும் இல்ல. நெறைய கமிஷன வெச்சி யேவாரம் கம்மியா நடக்குறதும் ஒண்ணுத்தாம். கமிஷனெ கொறைச்சி நெறைய யேவாரத்தைப் பண்றதுதாம் ஒண்ணுத்தாம். ரண்டுலயும் ஒரே மாதிரித்தாம் லாபம் வரும். இன்னும் சொல்லப் போனா கமிஷனெ கொறைச்சாத்தாம் வாங்கி வித்தா கமிஷன் கம்மின்னு டிரேட்டு பண்றவ்யங்க நெறைய பண்ணுவானுங்கோ! சொல்ல வேண்டியதெ சொல்லிட்டேம். யேவாரம் கொறைஞ்சா ஒன்னய ச்சும்மா வுட்டுட்டுத் தேட மாட்டேம் பாத்துக்கோ!"ன்னு அப்பவே குஞ்சு கவுண்டரு சொல்லிட்டாரு.
            குஞ்சு கவுண்டரு அவ்வளவு சொல்லியும் விகடு கமிஷனெ கொறைக்கிறது இல்லேங்றதுல தெடமா நின்னான். அவனோட ஆபீஸ்ல நூறு ரூவாய்க்கு பங்க வாங்குனா அம்பது காசும், அதெ வித்தா அம்பது காசும் ஆக ஒரு ரூவா கொடுத்தாகணும். இதே மித்த தொண்டாமுத்தூர் கேப்பிட்டல் ஆபீஸ்கள்ல இந்த ஒரு ரூவாய் கமிஷன் காசுங்றது அறுவது காசுதாம் வரும். மொத்தத்துல விகடுவோட ஆபீஸ்ல கமிஷன்ங்றது நூத்துக்கு நாப்பது பைசா அதிகம். இப்பிடி நூறு ரூவாய்க்கு கமிஷனா வர்ற ஒரு ரூவாய்ல இருபது பைசா ஹெட் ஆபீஸூக்குப் போயிடும். மிச்ச ‍எண்பது பைசா விகடுவோட கணக்குக்கு வரும். இப்படி வர்ற கமிஷன் காசுலத்தாம் அவ்வேன் ஆபீஸோட செலவு, தனக்கான சம்பளம்ன்னு எல்லாத்தையும் சமாளிச்சிக்கணும்.
            ஆக மொத்தத்துல நூறு ரூவாய்க்கு எண்பது பைசான்னா யேவாரம் நெறைய நடக்கறப்ப அதோட லெவல்ல வேற. அது எப்பிடின்னா... மொத்தத்துல நூறு ரூபாய்க்கு வாங்கி விக்குறப்ப கமிஷன் ஒரு ரூவாய்னா எம்பது பைசா விகடுவோட கணக்குக்கு வரும். ஆயிரம் ரூவாய்க்கு பத்து ரூவாய் கமிஷன்ங்றப்போ எட்டு ரூவாய் விகடுவோட கணக்குக்கு வரும், பத்தாயிரம் ரூவாய்க்கு நூறு ரூவாய் கமிஷன்ங்றப்போ எம்பது ரூவாய் விகடுவோட கணக்குக்கு வரும், லட்சம் ரூவாய்க்கு ஆயிரம் ரூவாய் கமிஷன்ங்றப்போ எண்ணூறு ரூவாய் விகடுவோட கணக்குக்கு வரும். பத்து லட்சம் ரூவாய்க்கு பத்தாயிரம் ரூவாய் கமிஷன்ங்றப்போ எட்டாயிரம் ரூவாய் விகடுவோட கணக்குக்கு வரும், கோடி ரூவாய்க்கு ஒரு லட்ச ரூவாய் கமிஷன்ங்றப்போ எண்பதினாயிரம் ரூவாய் விகடுவோட கணக்குக்கு வரும். இதுதாங் விகடுவோட ஆபீஸூ கமிஷன் கணக்கு.  மித்த அபீஸ்கள்ல இது அப்படியே நாப்பது சதவீதம் கொறையும். இதெ கணக்குப் பண்ணித்தாம் லாபம் தர்ற மாதிரி பங்குகள வாங்கி வெச்சிருந்து லாபம் தந்த பிற்பாடு விக்குறதுன்னு முடிவு பண்ணிருந்தாம் விகடு.
            மேற்படி அப்படி பண்ணணும்னு நெனைச்சா தினசரில்லாம் பங்குகள வாங்கியோ விக்கவோ முடியாது. ஒரு பங்கு வெலை கொறைஞ்சு வர்ற வரைக்கும் காத்திருந்துத்தாம் வாங்கியாவணும். அது போல வெலை ஏறுற வரைக்கும் காத்திருந்துத்தாம் வித்தாவணும். இடைப்பட்ட காலங்கள்ல எந்த வேலையும் இருக்காது. தினசரி ஆபீஸ்க்குப் போயி எந்த பங்கு வாங்குறதுக்குத் தகுந்தாப்புல வெலை எறங்கி வர்ருது, வாங்குன பங்குல எந்தப் பங்கு விக்கறாப்பு வெலை ஏறிப் போவுதுங்றதெ மட்டும் பாத்துக்கிட்டே இருக்கணும். சுருக்கமா சொல்லணும்னா ஏற்கனவே நாம்ம சொன்னபடி கொக்கு பெரிய மீனா வர்ற வரைக்கும் காத்துகிட்டு இருந்து பொட்டுன்னு போட்டுத் தள்ளுது இல்லையா. அது மாதிரி காத்துக்கிட்டு இருக்கணும் போட்டுத் தள்ள.
            பங்குச் சந்தையில இருக்குற யாருக்கும் காத்திருக்கிற அந்த மனநெலைத்தாம் இருக்காது. கொஞ்சம் வெலை எறங்குனாலும் ஒடனே வாங்கணும்னு நெனைச்சு வாங்குவாங்க. அது இன்னும் வெலை எறங்கிப் போவும். கொஞ்சம் வெலை ஏறுனாலும் ஒடனே வித்துப்புட்டு வேறொன்னுத்த வாங்குவோம்னு நெனைச்சு வித்துடத் தோணும். அப்பிடி வித்தா அது இன்னும் வெலை ஏறும். பொறுமையா காத்திருக்க தெரிஞ்சவங்க மட்டும்தாம் இங்க லாபம்  பண்ண முடியும். அது ஒண்ணுத்தாம் பங்குச் சந்தையில இருக்குறவங்களுக்கு தேவைப்படும். துரதிர்ஷ்டமா பாத்தா அந்த ஒண்ணுத்தாம் பங்குச் சந்தையில் இருக்குற யாருக்கும் இருக்காது. பங்கு வெலை ஏறுனாலும் சரித்தாம், எறங்குனாலும் சரித்தாம் ஒடனே பதற்றப்படுவாங்க.
            இப்படித்தாம் யேவாரம் பண்றதுன்ன முடிவு ஆனதுக்குப் பெறவு அதுல யேவாரம் சரியா நடக்குலன்னு அதுக்காக குஞ்சு கவுண்டரு என்னத்த திட்டுன்னாலும் சரித்தாம், எவ்வளவு கேவலமா பேசுனாலும் சரித்தாம் அதெ தாங்கிக்கிறதுங்றதுலயும் உறுதியா இருந்தான் விகடு. குஞ்சு கவுண்டரு இப்படித்தாம் திட்டுவாருன்னு எதிர்பாக்குற மாதிரியா திட்டுவாரு. ஒரு ஆம்பள பொம்பளய சந்தேகப்படறப்போ எவ்வளவு கேவலமா திட்டுவானோ அந்த மாதிரில்லா திட்டுவாரு. "கல்யாணம் ஆனாக்கா பத்து மாசத்துல புள்ளைய பெத்துக்கோணுமடா. இல்லேன்னா அந்தப் பொட்டப்பயெ சேலையல்லோ கட்டிக்கோணுமடா! அப்பிடித்தாம்டா ஆபீஸ்னா ஆரம்பிச்சு மூணு மாசத்துலேந்தே கமிஷனெ கொட்டோ கொட்டோன்னு கொட்டோணும். இல்லேன்னா அந்த ஆபீஸ இழுத்து மூடிட்டுப் போய்ட்டே இருக்கோணும்!"ன்னு அப்பிடில்ல பேசுவாரு. அதெ தாங்கிக்கலாம். அது ஒரு விசயமில்லன்னாலும்  ஆபீஸோட பிரான்சைஸ்ஸே போவுற மாதிரி நெலமைன்னா அதுக்கு எதாச்சிம் நடவடிக்கை எடுத்தாத்தானே ஆவணும்.
            குஞ்சு கவுண்டருக்கு மார்கெட்டுலேந்து கமிஷன் கொட்டிக்கிட்டே இருந்தாத்தாம் இரக்கம், கருணை, அன்புங்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் புரியும். ஆபீஸ்லேந்து கமிஷன் கொட்டலன்னா அவரோட அகராதியில அன்பு, இரக்கம், கருணைங்ற வார்த்தைக்கெல்லாம் அர்த்தமே கெடையாது. மாசா மாசம் கமிஷன அதிகம் பண்ணிக் கொடுக்காத ஆபீஸூ அவருக்குத் தேவையே இல்ல. மரப்படி மாட்ட கட்டிக்கிட்டு எதுக்கு அழுவணும்? அதெ கறிக்காரனுக்கு வித்துப்புட்டா கையில காசும் வந்தப்படியா இருக்கும், அதுக்கு ஆவுற செலவு மிச்சம்னு நெனைக்குற ஆளு அவரு.
            இப்போ இருக்குற நெலைய சமாளிச்சாவணுமே. விகடு ரொம்ப தீவிரமா யோசிக்க ஆரம்பிச்சான்.
*****


No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...