மேலும் எஸ்.கே. பேசுகிறார்,
"...
நான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள்
என்றால்... அவர்களின் முழு சுயநலத்தை மையமாக வைத்து அதற்கு ஏற்றாற்போல் நான் பேச வேண்டும்,
செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதற்கே விசுவாசமாக இருப்பேன் என்பது
போல இருக்கிறார்கள். அது எப்படி?
ஒவ்வொருவரும்
ஒவ்வொரு மன உலகில் வாழ்கிறார்கள். அவரவர்களுக்கு அவரவர் மனஉலகமே முக்கியம். அதன் அடிப்படைக்குத்
தகுந்தாற் போல் நம்மை மாற வேண்டும் என்பது போல நிர்பந்தம் செய்கிறார்கள்.
அவர்கள்
அப்படிப் போராடித் தங்கள் சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்வதில் மிகுந்த குறியாக இருக்கிறார்கள்.
இது தெரியாமல் நான் அவர்களிடம் மனிதாபிமானமாக நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு
மாட்டிக் கொள்கிறேன். இது போன்று எத்தனை நிகழ்வுகள்? அத்தனையிலும் நானே வசமாக சிக்கிக்
கொள்கிறேன்.
நாம் யாருக்கும்
எந்த நன்மையையும் செய்ய வேண்டியதில்லை. ஆனால் யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாமல்
இருக்க வேண்டும் என்று சொல்கின்ற நானே பிறருக்கு நல்லது செய்கிறேன் என்று நினைத்து
மாட்டிக் கொண்டிருக்கிறேன்.
அவர்கள்
விவரமானவர்களாகவே இருக்கிறார்கள். நன்கு சிந்தித்து காரியத்தில் சிக்க வைக்கிறார்கள்
என்பது புரியாமல், அவர்கள் காரியம் ஆகாமல் கஷ்டபடுகிறார்கள் என்று நினைத்து அவர்களுக்கு
உதவப் போய் வசமாக மாட்டிக் கொள்கிறேன். இனி எந்த மனிதாபிமான உதவிகளும் வேண்டாம் என்று
நினைக்கிறேன். எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொள்ள வேண்டியதுதான்.
அதுதான் எளிதானது. சூழ்நிலைக்கும் அதுதான் சரியாக அமையும். யாருக்கும் கருணை காட்ட
வேண்டியதில்லை. அவர்கள் எதிர்பார்ப்பது கருணையே இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பது சுயநலம்.
ஒரு வகையில்
அதுவும் நல்லதுதான். இனி இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது. ஒருவகையில் அவர்கள் தங்களுக்குத்
தாங்களே ரோஷபட்டு வைத்துக் கொண்ட ஆப்பு என்றும் அதைச் சொல்லலாம். இதையே காரணம் காட்டி
இனிவரும் காலங்களில் நடந்து கொள்ளலாம். காரணமற்று நடந்து கொள்வதைக் காட்டிலும் இதைக்
காரணம் காட்டி நடந்து கொள்வது என்பது எளிதானதே. இனி நிறைய விசயங்களைத் தடுக்க முடியும்.
அவ்வாறுதான் அப்படித்தான் செயல்படுத்தச் சொல்கிறார்கள் என்று சொல்லி மறுக்கலாம்.
மீறிச் செயல்படுவதாகச் சொன்னால் விளைவுகளை நீங்களே எதிர்கொள்ளுங்கள் என்று சொல்லி
நழுவிக் கொள்ளலாம்.
ஆகவே நடப்பது
நல்லதற்கே. எது நடப்பதோ அது நன்றாகவே நடப்பது.
இனிமேல்
அவர்களது எந்த வேண்டுகோளுக்கும் உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.
ஏனென்றால் அப்படி ஒரு நிகழ்வை நிகழ்த்திக் காட்டுகிறார்கள். ஒரு மோசமான நிகழ்வைக்
காரணம் காட்டியே எல்லாவற்றையும் தள்ளிப் போடலாம். எதையும் மறுக்கலாம். முறைப்படி செய்து
போட்டு போங்கள் என்று நழுவிக் கொள்ளலாம்.
அதே நேரத்தில்
மோசமான சம்பவம் பல நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கிறது. எப்படி பேச வேண்டும்,
இன்னும் எப்படி வார்த்தைகளைக் கவனமாகத் தொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் கற்றுக் கொடுக்கிறது.
எதற்கும் உடனடியாக பதில்வினை ஆற்றாமல் அதில் தெளிவுகளைப் பெற்றுக் கொண்டு, ஐயப்பாடுகளை
உறுதிபடுத்திக் கொண்டு மெதுவாகவே செயலாற்றலாம் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது.
எதையும்
உடனடியாக நிறைவேற்றிக் கொடுப்பதோ, எதற்கும் உடனடியாக பதில் சொல்வதோ சரியான ஒன்றில்லை
என்பதையும் காட்டுகிறது. எல்லாவற்றையும் ஆற அமர யோசித்து அதன்பின் செயல்படுத்துவதே
நல்லது. ஏற்கனவே செயல்பட ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால் புதிதாக வருபவைகளை அப்படித் தள்ளிப்
போட்டு செயல்படுத்துவதே நல்லதும் கூட. அதனால் மேலும் சில புரிதல்கள் கிடைக்கும். கால
தாமதத்தில் மேலும் சில நல்ல விசயங்கள் நடக்கும். எதையும் விரைவாகச் செயல்படுத்துவது
நல்லதல்ல. அது தேவையற்ற எதிர்வினைகளை ஏற்படுத்தும்.
ஒருவருக்கு
என்னைப் பிடிக்காவிட்டால் அவர் என்னுடைய எந்த இடத்திலும் தாக்குவார். நான் நேர்மையாக
நடந்து கொள்வதைக் கூட அவர் பரிகாசம் செய்வார். அவருக்குச் செய்த நல்லதையும் கெடுதலாகப்
பேசுவார். நான் நேர்மையாக நடக்க முயற்சிக்காததற்கு அது ஒரு காரணம் என்று இப்போது புரிகிறதா?
ஆனால்
நான் செய்யக் கூடாது என்ற நினைத்த சில காரியங்களை எப்படி என்னையும் அறியாமல் செய்தேன்
என்று யோசிக்கும் போது, மற்றவர்கள் முன் நான் விரைவாகவும், உறுதியாகவும் முடிவு எடுப்பவன்
என்பதைக் காட்டுவதற்காக அவ்வாறு செய்தேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. யாருக்காகவும்
என்னை எப்படியும் காட்ட வேண்டிய அவசியமில்லை. எவருக்காகவும் எந்த உதவியையும் செய்ய
வேண்டிய தேவையுமில்லை.
யாருக்கு
உதவி செய்கிறேனோ அவர்களே என் எதிரியாகிறார்கள். யாருக்காக என்னை விதவிதமாகக் காட்ட
வேண்டும் என்று நினைக்கிறேனோ அவர்களே என்னை தாக்குபவர்களாக மாறுகிறார்கள். ஆகவே இங்கு
யாருக்காகவும், எவருக்காகவும் எதையும் செய்ய வேண்டியதே இல்லை.
கற்றுக்
கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், மற்றவர்கள் விசயத்தில் மெதுவாக செயல்பட வேண்டும்.
மற்றவர்கள் விசயத்தில் மூக்கை நுழைப்பதே தவறானது. அவரவர் விதைத்ததை அவரவர் அறுப்பதை
யாரால் தடுக்க முடியும். அதைத் தடுத்து என்னால் உதவ முடியும் என்பது போல நினைக்கலாம்.
அதனால் தேவையற்ற பாதகங்களே விளையும்.
உலகத்தில்
இயல்பு இதுதான் என்று தெரிந்த பிறகு உலகிற்கு பளிச்சென்று தெரிய வேண்டும் என்று நினைத்து
எதையாவது செய்து சிக்கிக் கொள்ளக் கூடாது. நாம் பளிச்சென்று தெரிவதைக் காட்டிலும்
நம்முடைய இருப்பு முக்கியமானது. அந்த இருப்பைக் கேள்விக் குறியாக்கி பளிச்சென்று தெரிவது
பேதைமையானது, முட்டாள்தனமானது.
அவர்களிடம்
எல்லாம் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. நாம் நினைக்கிறோம் அதன் மூலம் ஒரு
நல்ல நட்பு உண்டாகும் என்று. அவர்கள் அதைப் பலகீனமாக்கி முதுகில் குத்த தயாராக இருப்பார்கள்.
அவர்களுக்கு அதெல்லாம் தேவையில்லை.
அவர்களிடம்
ஆறுதல் பெறலாம் என்று நினைக்கலாம். அதனால் விளைவது பெருந்துன்பமே என்பது அனுபவப்பட்ட
பிறகுதான் புரியும். அந்த ஆறுதலுக்குப் பின் ஆறுதலே இல்லாமல் இருப்பது எவ்வளவோ பரவாயில்லை
என்பது அனுபவப்பட்ட பிறகு தெரிய வரும்.
அவர்களுக்கு
என்று இருக்கிற பொதுமையான உரையாடல்களே, பொதுமையான சொற்களே போதும். அதில் மெனக்கெட்டு
உதவுகிறேன் என்ற பெயரில் நுணுக்கி நுணுக்கிச் சிந்தித்துச் சிரமப்பட வேண்டியதில்லை.
அவர்களை
வைத்து இந்தக் காரியத்தைச் செய்தால் சுலபமாக இருக்கும் என்று நம்பித்தான் இறங்குகிறேன்.
ஆனால் இறங்கிய பிறகுதான் தெரிகிறது அவர்களை வைத்து அந்தக் காரியத்தைச் செய்து அவ்வளவு
அல்லல் பட்டு இருக்க வேண்டியதில்லை என்பது. ஆகவேதான் சொல்கிறேன் கொஞ்சம் அலைச்சல்,
சிரமம் இருந்தாலும் அந்தந்த காரியங்களை நீங்களே செய்து விடுவது நல்லது.
இவர்களை
நம்பி சிரமம் குறையும் என்று எதிர்பார்ப்பது என்பது உங்கள் தலையில் நீங்களே பாரங்களைத்
தேவையில்லாமல் ஏற்றிக் கொள்வதைப் போன்றது. மேலும் அவர்களைக் கொண்டு செய்யும் காரியங்கள்
பலவும் இரட்டிப்பு வேலைகளை ஏற்படுத்தி விடக் கூடியவை.
நீங்களே
ஒவ்வொரு காரியமாக மெதுவாகச் செய்வது நல்லது. மேலும் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது
அவர்கள் காரியம் என்று வந்தால் அதை ஒன்றுக்கு நான்கு முறை நன்றாக யோசித்து அதன் பின்னே
பொறுமையாக நிறைவேற்றுவது நல்லது. விரைவாக எதையாவது ஒரு பதிலைச் சொல்லி, அல்லது விரைவாக
எதையோ ஒன்றை நிறைவேற்றி நீங்களாகப் போய் தன்னிசையாக மாட்டிக் கொள்வது நல்லதல்ல.
முடிந்த வரை தள்ளிப்போட்டு மிக மெதுவாக நிறைவேற்றுவது நல்லது.
நான் என்
கடமையிலிருந்து விலகப் போவதில்லை, செய்ய வேண்டிய கடமைகளை மறுக்கப் போவதும் இல்லை
எனும் போது நான் மெதுவாக நிறைவேற்றுவதைப் பற்றிக் கவலைப்படவே வேண்டியதேயில்லை.
எல்லாவற்றையும்
விட முக்கியமானது அவர்களுக்காக எல்லாம் எதையும் செய்ய வேண்டியதில்லை. அவர்களிடம் நன்றி,
விசுவாசம் போன்ற உயர்ந்த பண்புகளை எதிர்பார்க்க வேண்டியதில்லை. அல்பைகளிடம் தயாள குணத்தை
எப்படி எதிர்பார்க்க முடியும் சொல்லுங்கள்? அவர்கள் எல்லாம் அல்பைகளாக இருப்பவர்கள்.
அவர்களின் அந்தப் பண்புக்குப் போய் சப்பைக்கட்டு கட்டவும் வேண்டியதில்லை. அவர்கள்
அல்பைகளாக இருக்கிறார்களே என்று அதற்காக சிறுமை செய்ய வேண்டியதும் இல்லை.
வெகு முக்கியமாக
யாரைப் பற்றியும் பாசிட்டிவாகப் பேசுவது நல்லது. அதனால் தேவையற்றத் தொல்லைகள் ஏற்படாமல்
தடுத்துக் கொள்ள முடியும். பாசிட்டிவாகப் பேசுவது என்பது சூழ்நிலைகளைச் சுமூகமாக எதிர்கொள்வதற்கு
ஒரு வழிமுறை மட்டுமே தவிர, அவர்கள் பாசிட்டிவானர்கள் என்ற தாக்கத்தை உருவாக்குவதாகாது.
அதற்கேற்றற் போல் பாசிட்டிவாகப் பேசிக் கொண்டு மற்ற விசயங்களைக் கண்டு கொள்ளாமல்
விட்டு விட வேண்டும். பல விசயங்களுக்கு மெளனம் நல்ல பதில். அந்தப் பதில்களையே பலவற்றுக்கும்
ஏற்ற பதிலாகக் கொடுக்கலாம்.
அவர்களிடம்
இருக்கும் ஒரு முக்கியப் பிரச்சனையே எல்லா இடங்களிலும் சென்று ஒருவரைப் பற்றி என்ன
சொல்கிறார்கள் என்று செய்தி சேகரிப்பதுதான். அப்படிச் சேகரித்து பற்ற வைக்கும் வேலையை
நன்றாகச் செய்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைக் கூப்பிட்டு வைத்து அவர்களிடம்
தன்னிலை விளக்கம் அளிப்பது என்பது தன் தலையிலே தானே மண்ணெண்ணெய்யை ஊற்றிப் பற்ற வைத்துக்
கொள்வதைப் போன்றதாகும்.
எல்லாரையும்
பற்றி பாசிட்டிவாகப் பேசி விடுவது எல்லாரிடமிருந்தும் தப்பித்துக் கொள்ளும் அருமையான
வழிமுறையாகும். தப்பித்தலும், தப்பிப் பிழைத்தலும்தான் வாழ்க்கை எனும் போது அதற்குரிய
சரியான வழிமுறை இதுவேயாகும்.
நான் பாட்டுக்கு
என் வேலையைப் பார்த்துக் கொண்டு போகிறேன். அவர்கள் பாட்டுக்கு அவர்கள் வேலையைப் பார்த்துக்
கொண்டு போகட்டும். நீங்கள் பாட்டுக்கு உங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டுச் செல்லுங்கள்.
நீங்கள்
ஏன் அவர்களின் வேலைகளில் தலையிட்டீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். எல்லா பொறுப்புகளையும்
உங்கள் தலையில் ஏற்றிக் கொண்டால் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கி விடலாம் என்று நினைக்கிறீர்கள்.
நீங்கள் பொறுப்புகளை உங்கள் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை, சுற்றியுள்ளவர்களின் அதிருப்தியையும்,
எதிர்ப்புகளையும்தான் தலையில் ஏற்றிக் கொள்கிறீர்கள் என்பதை நாள்பட்டுதான் புரிந்து
கொள்வீர்கள். அதுவும் இல்லாமல் அவர்களின் வேலையை அவர்களைச் செய்ய விடாமல் உங்கள் தலையில்
சுமத்திக் கொள்வதைப் போன்றது அது. இதனால் அவர்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்யாமல்
ஹாயாக இருப்பார்கள். யாருக்கும் கருணை காட்ட வேண்டியதும் இல்லை. அதனால் அவர்களைச் சோம்பேறியாக்க
வேண்டிய அவசியமும் இல்லை.
நீங்கள்
பாட்டுக்கு உங்கள் வேலையுண்டு, உங்கள் வாழ்க்கையுண்டு என்று போய்க் கொண்டு இருப்பதுதான்
நல்லது. யாரையும் குறுக்கிட்டு, தலையிட்டுத் திருத்த முடியாது. அப்படி திருத்த நினைப்பதைப்
போன்ற முட்டாள்தனமும் வேறில்லை.
அதுவும்
இல்லாமல் ஒருவருக்கு எழுத வருதைப் போல, பேச வருவதில்லை. இன்னொருவருக்கு பேச வருவதைப் போல எழுத வருவதில்லை.
அதனால் ஒருவர் பேசுவதில் அதிக ஆர்வம் காட்டாமல் எழுதுவதில் ஆர்வம் காட்டாமல் அவரவருக்கு
ஆர்வம் உள்ளதில் ஆர்வம் காட்டுவதே நல்லது. அதனால் உங்களுக்குத் தேவையற்ற பிரச்சனைகள்
ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். பேசாமல் இருப்பதன் மூலம் உங்கள் சக்திகளைத் தேவையில்லாமல்
விரயம் செய்யாமல் தடுத்துக் கொள்ளவும் முடியும்.
அதே நேரத்தில்
உங்களால் ஒரு மேடைப் பேச்சாளரைப் போல பேச முடியவில்லை என்று நினைக்கவும் வேண்டியதில்லை.
உங்களுக்கு விருப்பானவர்களிடம், உங்களுக்கு அபிமானவர்களிடம் உங்களால் சரளமாகப் பேசத்தான்
முடிகிறது. அப்படிப் பேச விடாமல் உங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுபவர்களிடம் ஏன் அநாவசியமாக
முயற்சித்து அலட்டிக் கொள்ள வேண்டும்? ஆகவே முயற்சிக்காமல் எது இயல்பாக வருகிறதோ
அதில் மட்டும் இயல்பாக செயல்பட்டு, அதை மட்டும் பேசிக் கொண்டு இயல்பாக இருப்பதே நல்லது.
என்னைப் பொருத்த மட்டில் வேலை செய்வதை விட ஏய்ப்பதே இயல்பாக வருகிறது..."
*****
No comments:
Post a Comment