செய்யு - 320
ஒருத்தரோட மனசப் புரஞ்சிக்கிட்டு பரிவா
அணுகுறதுல ரித்தேஸ் கெட்டிக்காரரு. குஞ்சு கவுண்டரு அந்த விசயத்துல கறாரான ஆளு. அவருக்கு
ஒவ்வொரு மாச லாப நட்ட கணக்கு முக்கியம். இத்தினிக்கும் அவரு அதிகமாக இருக்குறது தொண்டாமுத்தூர்ல
இருக்குற அவரு பண்ணையிலத்தாம். அவரோட பண்ணையோட வித்து முதல்ன்னு பாத்தா வருஷத்துக்கு
முப்பது லட்சம் அளவுக்கு இருக்கும். அவரோட முழு நேரமும் அங்கத்தாம் செலவாவும். தொண்டாமுத்தூர்
கேப்பிடலோட வித்து முதல்ன்னு பாத்தா அது வருஷத்துக்கு அம்பது கோடியைத் தாண்டும்.
அவர்ரப் பொருத்த வரையில முப்பது லட்சமும் முக்கியம். அம்பது கோடியும் முக்கியம்.
அம்பது கோடிக்குக் கொடுக்குற அதே முக்கியத்துவத்தை முப்பது லட்சத்துக்கும் கொடுப்பாரு.
அதே நேரத்துல அவரு அம்பது கோடிக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை விட முப்பது லட்சத்துக்குக்
கொடுத்த முக்கியத்துவம் அதிகம். அங்க அவரு ஒரு தொழிலாளியப் போல வேலையில எறங்கிப்
பாடுபடுவாரு. தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்ல பொருத்த மட்டுல மாசத்துக்கு நாலு தடவை
அவரு சென்னையில இருக்குற ஹெட் ஆபீஸூக்கு வந்து பாத்தா பெரிசு. அந்த நாலு தடவையிலயே
அவரு கேக்குற கேள்வியிலயே கம்பெனியோட முழு நிலவரத்தையும் கம்ப்யூட்டரு இல்லாமலே கணிச்சிடுவாரு.
அவரு கேக்குற அத்தனைக் கேள்விக்கும் பதிலு
டாண் டாண்ணுன்னு வந்தாவணும். ஒவ்வொரு கேள்விக்கும் வர்ற பதிலு அவரோட விரல் நுனியில
இருக்கும். போன தடவெ வந்தப்போ அவருக்குக் கிடைச்ச பதிலையும் இப்போ கெடைக்கிற பதிலையும்
வெச்சி கம்பெனி எப்பிடி போயிட்டு இருக்கு? எந்தெந்த பிராஞ்ச்ல சுணக்கம் ஏற்பட்டிருக்குங்றதையெல்லாம்
கச்சிதமா சொல்லிடுவாரு. தொண்டாமுத்தூரு கேப்பிட்டலுக்கு இருந்த நூத்து எட்டு பிராஞ்சிலயும்
எந்த அளவுக்கு யேவாரம் ஆயிருக்குங்றதெ ஒவ்வொரு பிராஞ்சோட பேரைச் சொல்லி அவ்வளவு
துல்லியமா சொல்லுவாரு. அதெப்படி கவுண்டருக்கு அப்பிடி ஒரு ஞாபவச் சக்திங்றது ஹெட்
ஆபீஸ்ல வேலை பாக்குற அத்தெனைப் பேருக்கும் ஆச்சரியமாத்தாம் இருக்கும். கவுண்டரு காத
வெச்சிக் கேக்குறதையெல்லாம் கல்வெட்டு மாதிரி மனசுக்குள்ள எழுதிப்புடுவாரு.
அவரு ஒவ்வொரு பிராஞ்சும் ஒவ்வொரு மாசமும்
ஹெட் ஆபீசுக்கு இவ்வளவு லாவம் கொடுத்திருக்கணும்னு ஒரு மனக்கணக்கெ வெச்சிருப்பாரு.
அவரோட மனக்கணக்குக்கு எந்த பிராஞ்சு ஈடு கொடுத்து லாபம் கொடுக்கலையோ உடனடியா அந்த
பிராஞ்சுக்கு அவரே நேரடியாப் பேசுவாரு. பேசுவாருன்னா அவரு பேசுறதெ கேக்குறவென் ஒண்ணு
பிராஞ்சோட லாபத்த அடுத்த மாசமே அதிகம் பண்ணியாவணும். இல்லேன்னா அடுத்த மாசமே வேலையை
வுட்டுப்புட்டு ஓடிடணும். குஞ்சு கவுண்டரு எந்தத் தப்புக்காகவும் யாரையும் வேலைய விட்டுட்டுப்
போயிடுன்னு சொல்லிட மாட்டாரு. ஆனா அவரு பேசுற பேச்சுல வேலைய விட்டுட்டுப் போயிட
வேண்டியதாயிருக்கும். இல்லேன்னா பேசிப் பேசியே மானபங்கப்படுத்திடுவாரு. கிட்டத்தட்ட
பேச்சுலயே ஒரு கற்பழிப்புச் சமாச்சாரம்தாம் அது.
இந்த ஒரு விசயத்துலத்தாம் ரித்தேஸூக்கும்
குஞ்சு கவுண்டருக்கும் அடிக்கடி முட்டிக்கும். "கவுண்டரே நீஞ்ஞ பேசுறது மொறையில்ல!"ம்பாரு
ரித்தேஸ். "அப்பிடிப் பாத்தா ஒம்மட மாதிரி நீரு ஆரம்பிச்ச ஆபீஸ நீரே மூடிட்டுப்
போன மாதிரித்தேம் நாமளும் மூடிட்டுப் போவோணும். லாவத்த அதிகம் பண்ண என்ன யோஜனைன்னு
சொல்லுறத வுட்டுப்புட்டு நமக்கு மொறைதலைய கத்துக் கொடுத்து என்றா ஆவப் போவுது?
இந்த வயசுல நாம்ம எந்த மொறை தலைய கத்துக்கிட்டு என்றா பண்ணப் போறேம்? நாமென்ன சந்தை
மடமா வெச்சி நடத்துறோம்? லாவம் தர்றதா இருந்தா இஞ்ஞ இருக்கோட்டும். இல்லேன்னா ஓடிப்
போவோட்டோம். லாவம் தர்றாத எவனெப் பாத்தாலும் குஞ்சுக் கவுண்டனுக்குக் கோவம் வந்துப்புடும்.
அப்படிப்பட்டவன் இருந்தாலும் ஒண்ணுத்தாம், மண்ணாப் போனாலும் ஒண்ணுத்தாம்!" அப்பிடிம்பாரு
குஞ்சுக் கவுண்டரு.
குஞ்சு கவுண்டருக்கு அவரோட நேரடி பிராஞ்சா
இருந்தாலும் சரித்தாம், பிரான்சைஸ் எடுத்தா பிராஞ்சா இருந்தாலும் சரித்தாம் ரெண்டும்
ஒண்ணுத்தாம் அவருக்கு. ரெண்டுலேந்தும் லாபம் கொட்டிக்கிட்டு இருக்கணும் அவருக்கு.
இல்லேன்னா போன போட்டு சம்பந்தப்பட்ட பிராஞ்ச் மேனேஜர்ர மானங்காணியா திட்டிப்புடுவாரு.
அவரு அப்பிடி மானாங்காணியா திட்டுன பிற்பாடு அவருக்குத் தெரியாம ரித்தேஸ் அந்த மேனேஜர்ர
சமாதானம் பண்ணாலும் குஞ்சுக் கவுண்டரோட வார்த்தைக்குச் சமாதானமே கெடையாதுங்றதுதாம்
உண்மை. எந்தப் புளுத்தி மவனுக்குப் போறெந்தே? எவ்வே மசுரப் புடுங்கப் போனேடா?ன்னு
அவரு கேக்குற கேள்விக்கு யாரு என்ன சமாதானத்தச் சொல்ல முடியும் சொல்லுங்க. அதே நேரத்துல
லாவத்த தந்தா குஞ்சு கவுண்டரு தலையில தூக்கி வெச்சிக் கொண்டாடுவாரு. சலுகை மேல சலுகையா
அள்ளிக் கொடுப்பாரு. ஒண்ணுக்கு நாலா காசெ அள்ளி வீசுவாரு. ஆபீஸூங்றது பணத்த அள்ளிக்
கொட்டிக்கிட்டே இருந்தா சம்பந்தப்பட்ட பிராஞ்சும், அதுல வேல பாக்குற ஆளுங்களும் தப்பிச்சாங்க.
அப்படி இல்லாம போச்சுன்னா அந்த பிராஞ்சே இல்லாம போயிடும். அதுல கொஞ்சம் கூட தயவு
தாட்சண்யம் பாக்கா மாட்டாரு குஞ்சு கவுண்டரு.
கூத்தாநல்லூர்ல விகடு பிரான்சைஸ் போட்டு
ஆரம்பிச்ச தொண்டாமுத்தூர் கேப்பிட்டலோட பிராஞ்சு மூணு மாசம் ஆகியும் பெரிசா லாவத்தை
அள்ளிக் கொடுக்கல. லாவம்னு இல்ல, கம்பெனிய ஓட்டுற அளவுக்குக் கூட வருமானம் கொடுக்காம
அது இருந்துச்சி. ஒரு பிராஞ்சு ஆரம்பிச்சி ஆறு மாசம் வரைக்கும் ஒரு கணக்கு வெச்சிருப்பாரு
குஞ்சு கவுண்டரு. அது வரைக்கும் பெரிசா எதையும் கேட்டுப்புட மாட்டாரு. ஆறு மாசம் கழிச்சி
ஒரே அடியா வார்ததைய வுட்டுப்புட்டா கேக்குறவனால தாங்க முடியாம போயிடக் கூடாது இல்லையா?
அதால மூணாவது மாசத்திலேந்து கொஞ்சம் கொஞ்சம் வார்த்தைய வாழைப்பழத்துல ஊசிய ஏத்துறாப்புல
ஆரம்பிச்சிடுவாரு. பொதுவா தொண்டாமுத்தூரு கேப்பிட்டல்ல சம்பந்தப்பட்ட யாருக்கும்
குஞ்சுக் கவுண்டர்கிட்டேயிருந்து போன் வரக் கூடாது. அப்படி வந்தா சம்பந்தப்பட்டவன்
காலிங்றதுதாம் தொண்டாமுத்தூர் கேப்பிட்டலில்ல எழுதப்படாத விதி.
மூணு மாசம் வரைக்கும் பொறுமையா இருந்து,
நாலாவது மாசத்துலத்தாம் குஞ்சு கவுண்டர்ட்டேயிருந்து விகடுவுக்கு போன் வர்ருது.
"என்றா பண்ணுறெ வெகடு? பிராஞ்சு ஆரம்பிச்சி மூணு மாசத்த கடந்துப் போவுது. வித்துமுதலே
இல்லாம என்னத்தப் பண்ணிட்டு இருக்கே? ஒரு பிராஞ்சுன்னா ரண்டு டெர்மினலாவது இருக்கோணுமில்லே!
நீயி என்னான்னா ஒத்த டெர்மினல்ல போட்டுக்கிட்டு அநியாயம் பண்றே? என்றா நெனச்சிக்கிட்டு
இருக்குறே ஒன்ற மனசுலே? திருவாரூ பிராஞ்சுல ஒழுங்கா வேலயப் பாத்தேன்னுத்தாம்டா ஒனக்கு
பிரான்சைஸூ பிராஞ்சுப் போட வுட்டேம். ஒரு ஆபீஸ்ன்னா ஒரு மேனேஜரு ரண்டு ஆபரேட்டரு வேணுமா
இல்லியாடா? ரண்டு ஆபரேட்டர்ல ஒண்ணு பொட்டக் குட்டியால்ல இருக்கோணும். நீயென்னான்னா
ஆபரேட்டரையும் போடல ஒரு மண்ணுத்தையும் போடல. அவ்வேன் திருவாரூ பிராஞ்சு லெனினு என்னத்த
மசுரெப் புடுங்கிட்டு இருக்காம்? அவனெ வந்து ஒம்மட பிராஞ்ச பாக்கச் சொன்னோம்மா இல்லையா?
வந்துப் பாத்தானா இல்லியா? இந்தாருடா ஒழுங்கா நடத்துறதா இருந்தா நடத்து? இல்லன்னேக்கா
பிரான்சைஸ்ஸ காலிப் பண்ணிப்புட்டு நாமளே ஆளப் போட்டு நடத்துவேம் பாத்துக்கோ! ஒத்த
ஆளா நின்னு ஒன்ற சுன்னிய நீயே ஊம்பிக்கிட்டு நிக்க முடியாதுடா பாத்துக்கோ. இன்னொரு
ஆளப் போட்டுத்தாம் ஊம்போணும். மருவாதியா ஆப்பரேட்டர்ர போட்டு இன்னும் ஒரு டெர்மினல்ல
போட்டு யேவாரத்த அதிகம் பண்ணுப் பாத்துக்கோ!" அப்பிடின்னு கடகடன்னு பேசுனவரு
மேக்கொண்டு விகடுவைப் பேச விடாமல போனைக் கட் பண்ணிட்டாரு.
அந்த ஏ.சி. ரூம்ல இருந்தும் விகடுவுக்கு
குஞ்சு கவுண்டரு பேசுனப் பேச்சக் கேட்டதும் வேர்த்து விறுவிறுத்துப் போயிடுச்சி. குஞ்சு
கவுண்டர்கிட்ட ஒரு பழக்கம் என்னான்னா அவரு யாருகிட்டே எதெ போன் போட்டு பேசுனாலும்
அதெ அப்பிடியே ரித்தேஸ்க்குப் போன் போட்டுச் சொல்லிப்புடுவாரு. அதெ பொறுமையா கேட்டுக்கிட்டு
மறுநாளு ரித்தேஸ் போனைப் போடுவாரு. அதே போல மறுநாளு ரித்தேஸ் விகடுவுக்குப் போன் போட்டுப் பேசுறாரு.
"ந்தாரு வெகடு! இன்வெஸ்ட்மெண்ட் மட்டும்
பண்ற மாதிரி ஒரு பிராஞ்சை நடத்துறது கஷ்டம்டா. டிரேடிங்தாம் ஒரு பிராஞ்சுக்கு முக்கியம்.
அதுலத்தாம் நாலு காசு பாக்க முடியும். நாலு காசு பாத்தாத்தாம் லாபம் பாக்க முடியும்.
பிரியாணிக் கடைய ஆரம்பிச்சிட்டு ஆட்டை வெட்ட மாட்டேம்னு அடம் பிடிக்க முடியா. பலி கொடுத்தாத்தாம்
கடைய நடத்த முடியும். டிரேடிங் இல்லாம ஒரு பிராஞ்ச நடத்துறது தற்கொலைக்குச் சமம்டா.
போட்ட காசுக்கே மொதல எடுக்க முடியா. நீயி பண்ணிட்டு இருக்குற வேலைக்கு ஈபி பில்லக்
கூட கட்ட முடியாம நிக்கப் போறே. யாருடா ஒமக்கு இந்த மெத்தேட்ட சொல்லிக் கொடுத்தது?
குஞ்சுக் கவுண்டனுக்கு ஒன்னய பிரான்சைஸ் போட வுடுறதுல சம்மதமே இல்ல. ஹெட் ஆபீஸோட
பிராஞ்சாத்தாம் போடணும்னு ஒத்தக் கால்ல நின்னாரு. நாம்மத்தாம் ஒன்னய மேரி ஆளுக்குச்
செய்யணும்னு கவுண்டனோட மல்லுக்கு நின்னு போட வெச்சேம். போறப் போக்கப் பாத்தா பிராஞ்சு
கைய வுட்டுப் போவ வுட்டுப்புடுவே போலருக்கே. பிராஞ்சு கைய வுட்டுப் போனாக்கா எந்த
அமெளண்டும் நாட் ரிபண்டபிள் தெரியும்ல. பீ கேர்புல்! ஒடனே ஆபீஸ் லெவல்ல சின்னதா மீட்
ஒண்ணப் போடு. டிரேடிங் பண்ண கிளையண்ட்ஸ தூண்டி வுடு. நாம்ம லெனின்ன வந்துப் பாக்கச்
சொல்றேம். தேவைன்னா சொல்லு. நாமளே வர்றேம்!" அப்பிடிங்கிறாரு ரித்தேஸ் அகர்வால்.
"இல்லேங்கய்யா! யாரையும் நட்டம் பண்ண
வுடக் கூடாதுன்னு நெனைக்கிறேம். டிரேடிங்றது நிச்சயம் நஷ்டம்தாம்யா. இன்வெஸ்ட்மெண்ட்
ஒண்ணுத்தாம் ஷேர் மார்கெட்டுல லாபம். நமக்கு நம்பிக்கெ இருக்கு. கொஞ்சம் பொறுங்க."ங்றான்
விகடு.
"ஆறு மாசம் ஆச்சுன்னா லாவம் வர்றலேன்னா
ன்னா பண்ணுவே?"ங்றாரு ரித்தேஸ்.
"நீஞ்ஞ மாசா மாசம் எவ்வளவு லாவத்த
எதிர்பாக்குறீங்களோ அதெச் சொல்லுங்க. அதெ நம்மட கைக் காசிலேந்து போட்டுக் கட்டுறேம்."
அப்பிடிங்றான் விகடு.
"இந்தப் பிசினஸ் புரியாம வெளையாடுறே
நீயி? இந்தாரு குஞ்சுக் கவுண்டன் ஒம்மட பிராஞ்சை வுட்டுத் தூக்கணும்னு எல்லாம் கடுமையாப்
பேசல புரிஞ்சிக்கோ. இந்த பிசினஸ்ல அப்பிடி இல்லேன்னாக்கா நாம்ம பரதேசி மேரி அலைஞ்சே
கதை ஒமக்குத் தெரியும்ல. எத்தனெ தடவ சொல்லிருக்கேம் ஒங்களப் பாக்கையில. அத்து மாதிரி
அலையுறாப்புல ஆயிடும். எந்நேரம் எப்பிடியோ ஸ்மித்தாவால தப்பிச்சேம். அப்பிடில்லாம்
அல்லாருக்கும் நடக்காது. கத்திக்கு ஆரு தலைய சீவுறோம்னாலும் தெரியாதுடா. சீவுனா எவ்வேம்
தலைய வேணும்னாலும் சீவும். அவ்வளவுத்தாம் சொல்லுவேம். லெனின டென் டேஸ்க்கு பிராஞ்சை
வந்து பாத்துக்க சொல்றேம். அதுக்கு மட்டும் தனியா அவனுக்கு பைவ் தெளஸண்ட் சேலரி பண்ணிக்
கொடுத்துடு. வேற வழி நமக்குத் தெரியல." அப்பிடின்னு சொல்லிட்டு போனைக் கட்
பண்ணிடுறாரு ரித்தேஸ்.
பத்து நாளுக்கு அய்யாயிரமா?ன்னு வாயைப்
பொளந்துக்கிட்டு இதுக்குக் குஞ்சு கவுண்டரு திட்டுறதையே வாங்கிப்பேம்மேன்னு நெனைக்கிறாம்
விகடு. அது செரித்தாம்! சுடுற துப்பாக்கிக்குத் தெரியுமா யாரைச் சுடுறோம்னு? துப்பாக்கியிலேந்து
பாய்ற குண்டுக்குத்தாம் தெரியுமா யாரோட இதயத்தைத் தொளைக்கிறோம்னு? காந்தியடிகளயே
சுட்ட துப்பாக்கியாச்சே! காந்தியடிகளோட இதயத்தையே தொளைச்ச குண்டாச்சே. அவரு அகிம்சைவாதியா
இருந்ததால அதையும் தாங்கிக்கிட்டாரு. எல்லாராலயும் அப்படியா இருக்க முடியுது? யேவாரங்றது
ஒரு வகையில துப்பாக்கித்தாம் அல்லது கத்தித்தாம். அதுகிட்ட எப்படி இருக்கணுமோ அப்பிடி
இல்லேன்னா தலையைச் சீவுறதப் பத்தியோ, இதயத்தைத் தொளைக்கிறது பத்தியோ ரொம்ப யோசிக்காது.
ஒரே வெட்டுத்தாம். ஒரே டுமீல்தாம். கதெ முடிஞ்சிடும். யேவாரத்தைப் பொருத்த மட்டுல
லாவத்தைக் கொடுக்க முடியாதவன் அதுக்கு லாயக்கே இல்லாதவம்தாம்.
*****
No comments:
Post a Comment