7 Jan 2020

26.3



            பேசுவதன் முட்டாள்தனத்தைப் பற்றிப் பேச விழைகிறேன் என பேச ஆரம்பிக்கிறார் எஸ்.கே.

            "... பேசுவதன் முட்டாள்தனத்தை உணர்ந்து வருகிறேன். அது எல்லார் மனதிலும் தப்புத் தப்பான புரிதலையே உருவாக்குகிறது. பேச்சைச் சரியாக உள்வாங்கிச் செயல்படுபவர்கள் குறைவு. வழிகின்ற கோப்பையில் மேலும் ஊற்றுவதைப் போலத்தான் பேச்சு. அவர்களின் மனதில் ஏதோ ஒன்று இருக்கிறது. அவர்கள் அதைக் கேட்பார்களா அல்லது நான் சொல்வதைக் கேட்பார்களா? பேசாமல் இருந்தாலாவது அவர்கள் மனதில் தோன்றியதைச் செய்து கொண்டு ஏதோ இருப்பார்கள். பேசுவதனால் தப்புத் தப்பாக செய்து பிரச்சனைகளை உருவாக்கி விடுகிறார்கள். பேசுவது என்பது வீணானது. அதனால் விளையும் பயன் சுத்த பூச்சியம் அல்லது நெகடிவ் எண்களுக்கு நிகரானது அது. பேச வேண்டும் என்றால் பொதுவாக உள்ள அடிப்படையான விசயங்களை மட்டும் பேசலாம். அதுவும் பாசிட்டிவாக இருப்பது முக்கியம். பேச்சில் எக்காரணம் கொண்டு எதிர்மறை வேண்டாம். ரொம்ப ஆபத்தானது அது. கத்தியின் கூர்முனையோடு விளையாடும் விளையாட்டு அது.
            பேசியதன் மூலம் நான் மிகப்பெரும் மனச்சோர்வை அடைந்திருக்கிறேன். நான் இப்போது பேசியது எதையும் வாபஸ் பெற வேண்டாம் என்று கூறினால், அதை அப்படியே மாற்றி அனைத்தையும் வாபஸ் பெற வைக்கும் வகையில் நிலைமையை மாற்றி விடுகிறார்கள் சகாக்கள். பொதுவாக நான் சொன்னதற்கு நேர்மாறாக அப்படியே செய்வார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அப்படித்தான் ஆனால் செய்கிறார்கள். அதற்கு ஒரு விளக்கமும் பிறகு அவர்கள் தருகிறார்கள். மனிதர்கள் இப்படித்தான். அவர்களாக நினைப்பதைத்தான் செய்வார்கள். செய்து விட்டு அதற்கு ஒரு விளக்கம் சொல்வார்கள். என் நிலையும் அப்படியே ஆகிறது. அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கிட்டதட்ட இரண்டு மூன்று நாட்கள் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவியாய்த் தவிக்கிறேன். நான் சொல்லியிருக்கவே கூடாதோ? என்று நினைக்கிறேன். எனக்கு மிகப்பெரும் மனஉளைச்சலை அது ஏற்படுத்தி விடுவதாகக் கருதுகிறேன். பேசாமல் இருந்திருந்தால் கூட நிலைமை சரியாக இருந்திருக்கும் போல. பேசியதால் ஏற்பட்ட மோசமான விளைவு இது. இச்சம்பவம் எனக்குள் இறுக்கத்தை மிக அதிகமாக ஏற்படுத்தி விடுகிறது. எனக்குத் தெரிகிறது அப்படி இறுகுவது நல்லதல்ல என்று. ஆனால் இறுகிக் கொண்டு போகிறேன். நிலைமை அப்படி. நான் ஏன் டாஸ்மாக்கை நாடுகிறேன், சிகரெட்டை சிநேகிக்கிறேன் என்பது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.
            ஆனால் பாருங்கள்! பேச்சின் மூலம் ஒரு விசயத்தைப் புரிய வைத்து விட முடியும் என்று நினைக்கிறேன். ம்ஹூம்! அது சாத்தியமில்லாதது. புரிந்தாலும் புரிந்தது போல நடிப்பார்களே தவிர, அதைச் செயலாக்கம் செய்து விட மாட்டார்கள். சிலவற்றை உண்மையாகவே புரிய வைக்க முடியாது. அவர்களின் மனது அப்படி. ஆகவே புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபடுவது என்பது ஒருவகை முட்டாள்தனம். அதைப் பேச்சின் மூலம் சாதிக்க நினைப்பது மாபெரும் முட்டாள்தனம்.
            ஒரு வகையில் நான் வேஸ்ட் புராடக்ட் என்பதைச் சமீப காலமாகத்தான் உணரத் தலைபடுகிறேன். என்னால் ஆகக் கூடியது எதுவுமில்லை. என்னால் செய்ய முடிவதும் ஒன்றுமில்லை. ஏதோ அதுவாக நடக்கிறது. ஏதோ அதுவாக நிகழ்கிறது. அதில் என் பங்கு எதுவுமில்லை என்பதைச் சமீப காலமாகத்தான் உணரத் தலைபடுகிறேன். என்னால் எதையும் நகர்த்த முடியவில்லை. என்னால் எதையும் நிகழ்த்த முடிவதில்லை. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. ஆனால் செய்வதைப் போல, நிகழ்த்துவதைப் போல, நகர்த்துவதைப் போல பேச முடிகிறது என்பதை உணர்கிறேன். அந்த முட்டாள்தனப் பேச்சை நான் வெறுக்கிறேன். அப்படி ஒரு பேச்சு தேவையில்லை என்று நினைக்கிறேன். ஏதோ ஓட்டிக் கொண்டு இருக்கிறேன் என்ற அளவிலான பேச்சு மிகச் சரியானது என்று நினைக்கிறேன். உண்மை அதுதான். அப்படித்தான் ஓடிக் கொண்டு இருக்கிறது வாழ்க்கை..."
*****


No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...