6 Jan 2020

தூக்கம் தொலைந்த ராத்திரிகள்



செய்யு - 319

            யாரும் எதிர்பார்க்காத திசையில திரும்புறதுதாம் வாழ்க்கை. நல்ல வாழ்ந்துகிட்டு இருக்கிறவங்களோட நெலமை அப்படியே நல்லதாவே போயிடும்னும் சொல்லிட முடியாது. மோசமா போறவங்களோட வாழ்க்கை மோசமாவே போயிடும்னு சொல்லிட முடியாது. எந்த புள்ளியில வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் கட்ட வண்டியப் போல குடை சாய்ஞ்சித் திரும்புறது வாழ்க்கையோட கொணம். இந்தியாவுலேயே ஏம் உலகத்துலயே நம்பர் ஒன் ஷேர் டிரேடிங் புரோக்கிங் ஆபீஸா தன்னோடத உருவாக்கணும்னுத்தாம் ரித்தேஸூ அகர்வால் தன்னோட ஆபீஸ ஆரம்பிச்சாரு. அப்படி ஆரம்பிச்ச ஆபீஸ அவரே மூடிட்டு பரதேசி மாதிரி திரியுற நெலமை ஏற்படும்னு அவரே நெனைச்சுப் பாத்திருக்க மாட்டாரு. ஆனா வாழ்க்கை அப்படித்தாம் அவரைத் திரிய வெச்சது. அப்படிப் பரதேசியா திரிஞ்ச ரித்தேஸூ இனுமே இப்படியேத்தாம் இருந்து முடிச்சாகணும்னு நெனைச்சாரு. ஆனா அவரே நெனைக்காத அளவுக்கு அவரு ஸ்மிதாவைச் சந்திக்க வேண்டியதா போச்சுது. அதுக்கு அப்புறம் அவரோட வாழ்க்கையில நடந்ததெல்லாம் அதியமான மாத்தங்கள்னுத்தாம் சொல்லணும்.
            மனுஷனுக்கு மனசு பெசகினா அவனுக்குப் பைத்தியமா, பரதேசியா திரியுறதத் தவிர வேற வழி தெரியுறது இல்ல. கிட்டதட்ட அப்படியொரு நெலமைத்தாம் ஸ்மிதா பட்டேலுக்கும் ரித்தேஸூ அவங்களோட காதல ஏத்துக்காத போது ஏற்பட்டிருந்துச்சு. ரெண்டு பேருமே மும்பையில இருக்குற எம்.ஏ.எம். ஸ்கூல் ஆப் பிசினஸ்ல ஒண்ணா பங்குச் சந்தைப் பத்தி டாக்டரேட் படிப்புக்காக ஆராய்ச்சிப் பண்ணவங்க. ரித்தேஸூ 'Some Critical Aspects of Technical Analysis' ங்ற தலைப்புல ஆராய்ச்சிப் பண்ணா, ஸ்மிதா 'Some Critical Aspects of Fundamental Analysis' ங்ற தலைப்புல ஆராய்ச்சிப் பண்ணாங்க. ரித்தேஸோட வேகம், சுறுசுறுப்பு, அணுகுமுறைன்னு ஒவ்வொண்ணையும் பாத்து தன்னையுமறியாம அவர்ர நேசிக்க ஆரம்பிச்சிட்டாங்க ஸ்மிதா. ஏன்னா இந்த உலகத்துல ரித்தேஸ் மாதிரி ஒரு பொறுமையான ஆள பாக்க முடியாது. அணுகுமுறையில அவர்ர மாதிரி மென்மையான மனிதர பாக்க முடியாது. பெண்களுக்கு அவரு கொடுக்குற மரியாதைய மாதிரி ஒலகத்துல எந்த ஆம்பளையும் கொடுக்க முடியாது. எதையும் பக்குவமா எடுத்துச் சொல்லிப் புரிய வைக்குறதுல அவர்ர மாதிரி ஒரு ஆளு இனுமே பொறக்க முடியாது. மொத்ததத்துல அவர்ர இப்போ கூட ஸ்மிதா ஜென்டில்பாய்னுத்தாம் கூப்புடுவாங்க.
            ரெண்டு பேரும் தங்களோட ஆராய்ச்சிய சமர்ப்பிச்சி வைவாவுக்காகக் காத்திட்டு இருந்த நேரத்துலத்தாம் ஸ்மிதா அவங்களோட காதல ரித்தேஸ்கிட்ட சொல்லியிருக்காங்க. ரித்தேஸூ ரொம்ப மென்மையா மறுத்து தன்னோட காதல் இன்னொரு பொண்ணுகிட்ட இருக்கிறத சொன்னதும் மனசொடிஞ்சுப் போன ஸ்மிதா வைவாவ முடிச்ச கையோட யாருகிட்டேயும் சொல்லிக்காம கொள்ளாம மும்பையில இருக்கப் பிடிக்காம சென்னைக்கு வந்தவங்கத்தாம். பொதுவா மும்பையில் இருக்குற மாதிரியான ரிசர்ச் ஸ்காலரா இருக்குற டாக்டரேட் பண்ண அனாலிசிஸ்ட் சென்னையில இல்லாத நேரத்துல அவுங்க வந்ததால 'நார்மன் செக்யூரிட்டீஸ்'ங்ற ஷேர் டிரேடிங் புரோக்கிங் ஆபீஸ்ல பெரிய சம்பளத்துக்கு வேலையில சேந்துட்டாங்க. வேலைக்குச் சேர்ந்த ரெண்டே வருஷத்துல அடையாறுல அப்பார்ட்மெண்ட் வாங்கி, காரு வாங்குற அளவுக்கு பெரிசா வளந்துட்டாங்க. சென்னையில எத்தனையோ ஆம்பளைங்க அவுங்களோட ஆளுமை, தெறமையப் பாத்து புரபோஸ் பண்ணப்பயும் தனி மனுஷியாவே ரித்தேஸ்ஸ சந்திக்கிற காலம் வரைக்கும் இருந்துட்டாங்க.
            சம்பாத்தியம், சொத்துன்னு அவுங்க வளந்தாலும் அவங்களால நிம்மதியா இருக்க முடியல. அவுங்க மனசுல ரித்தேஸ்ஸ தவுர வேற யாரையும் நெனைச்சுப் பாக்க முடியல. அவுங்களோட பகல் நேரம் மார்க்கெட், அனாலிசிஸ் அப்பிடி இப்பிடின்னு எப்படியோ கழிஞ்சிச்சி. ஆனா ராத்திரி நேரம் கொடுமையா இருந்திச்சி. ஒவ்வொரு ராத்திரியும் அவங்களோட கழுத்தைப் பிடிச்சு நெரிக்காத அளவுக்கு அவுங்கள சித்திரவதைப் பண்ணியிருக்கு. எல்லா நேரமும் பகலாவே இருந்திடக் கூடாதா? ராத்திரிங்றது ஏன் வருது? அப்பிடின்னுல்லாம் அவுங்க யோசிச்சிருக்காங்க. பகல்ல பார்வைய தொலைக்குற வாழ்க்கையும், ராத்திரியில தூக்கத்தைத் தொலைக்குற வாழ்க்கையும் ஒரு வகையில ரொம்ப சித்திரவதையாவும், கொடுமையாவும்தாம் இருக்கும்.
            இந்தியாவுல ஷேர் மார்கெட் முடியுற நேரத்துல வெளிநாடுகள்ல இருக்குற ஷேர் மார்கெட் ஒவ்வொண்ணா ஆரம்பிக்கும். தூங்க முடியாத நிறைய ராத்திரிகள்ல அவுங்க வெளிநாட்டு மார்கெட்டுகளப் பாத்துக்கிட்டுக் கெடந்திருக்காங்க. அப்படிப் பாத்து பாத்து மார்கெட் பத்தின நகர்வுங்க ஒவ்வொண்ணும் அவுங்களோட மனசுல நூலறந்துப் போயி அவுங்க கணிக்கிற ஒவ்வொரு கணிப்பும் தொண்ணூறு சதவீதத்துக்கு மேல சரியா அமைஞ்சிப் போனது அவுங்களுக்குச் சம்பாத்தியத்துக்கு மேல சம்பாத்தியத்த அள்ளிக் கொடுக்க ஆரம்பிச்சிடுச்சி. என்னத்தாம் சம்பாத்தியத்த லட்சம் லட்சமாப் பாத்தாலும் ராத்திரி வந்தா போதும் அவுங்களால தூங்க முடியல. தூக்கத்துலேந்து திடீர் திடீர்ன்னு முழிச்சிக்கிறது, முழிச்சத்துக்குப் பெறவு தூங்க முடியாம தவிக்கிறது, தூக்கத்துல ஒரே மாதிரியா ரித்தேஸ் வர்ற மாதிரி கனவு வர்றதுன்னு ரொம்ப வருஷங்க கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்திருக்காங்க. ஒரு மனுஷப் பிறவி தூங்க முடியாம தவிக்குற கொடுமை இருக்கே, உலகத்துல அதெப் போல ஒரு நரகம் வேறொன்ணு கெடையாது. நெறைய சைக்காலஜிஸ்ட்ட பாத்து கெளன்சலிங் பண்ணியும், மாத்திரைகளச் சாப்பிட்டுப் பாத்தும் அவுங்களோட நெலமை சரியாவுல.
            கடைசியா அடையாறுல இருந்த கே.எப்.ஐ.ன்னு சொல்லப்படுற கிருஷ்ணமூர்த்தி பவுண்டேசன் ஆப் இண்டியாவுல எதேச்சையா ஒரு முறை போனதுக்கு அப்புறம்தாம் அவுங்களோட நெலமை கொஞ்சம் கொஞ்சமா சரியாக ஆரம்பிச்சி. அது ஜே.கிருஷ்ணமூர்த்தின்னு சொல்லப்படுற ஜே.கே.ங்ற தத்துவஞானி மனஅமைதிக்காவும், ஆழ்நிலை தியானம் செய்யுறதுக்காகவும் உருவாக்குன இடம். ‍
            ஜே.கே.வ்வ தியோசிபிகல் சொசைட்டி மரபுலேந்து வர்ற ஒரு தத்துவஞானின்னு சொல்றாங்க. அவர்ர அன்னிபெசன்ட் அம்மையாருதாம் உலக குருவா நெனைச்சி தியோசிபிகல் சொசைட்டி சார்பா தத்தெடுத்து வளக்குறாங்க. ஆனா ஜே.கே.வோட தம்பியோட மரணம் அவரோட மனசெ ரொம்ப பாதிச்சிடுது. அவரு அது குறித்து ரொம்ப யோசிச்சி ஆழ்நிலை தியானத்துக்குப் போயி நெறைய மனசு பத்தின விசயங்களப் புரிஞ்சிக்கிறாரு. அப்படிப் புரிஞ்சிக்கிட்ட பிற்பாடு அவரு உலக குருங்ற பட்டத்தையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு உலகம் முழுக்க பல இடங்களுக்குப் போயி தன்னோட மனம் பத்தின கருத்துகள சொற்பொழிவா நிகழ்த்துறாரு. அப்படி அவரு நிகழ்த்துன அவரோட சொற்பொழிவுங்கத்தாம் அவரோட புத்தகங்களா உருவாயி உலகெங்கிலும் பல பேருக்கு ஒரு தெளிவ கொடுக்கிறதா அவரோட வழியப் பின்பத்துறவங்கிறவங்க சொல்றாங்கன்னு ஜே.கே.வப் பத்தி ஸ்மிதா சொல்லுவாங்க.
            இந்தியாவோட முதல் பெண் பிரதமரா இருந்த இந்திராகாந்தி அம்மையாருக்குக் கூட அவரு வழிகாட்டியிருக்கிறதா ஜே.கே.வப் பத்தி ஸ்மிதா சொல்லுவாங்க. ஜே.கே.கிட்ட இந்திரா காந்தி அம்மையாரு அரசியல் நெருக்கடிக் காரணமா, "புலி வால பிடிச்ச கதையா இருக்கு என்னோட நெலமை!"ன்னு சொல்லப் போவ, ஜே.கே. சட்டுன்னு கேட்டுருக்காரு, "அப்போ அந்தப் புலியோட வாலு என்னான்னு ஒங்களுக்குத் தெரியும்தானே"ன்னு. ஏம் அப்படி அவரு கேட்டிருக்காருன்னா எப்போ ஒண்ணோட விசயம் என்னான்னு தெரியுதுவோ, அப்பவே அதுக்கான விடுதலை நிகழ்ந்துடுங்றது அவரோட வாதம்ன்னு அதுக்கான விளக்கத்தையும் ஸ்மிதா சொல்லுவாங்க. அதுக்கு மேல உள்ளதெல்லாம் மனசுங்ற பேர்ல நாம்ளா சுத்தி சுத்தி வெச்சிருக்கிற அக்கப்போருங்கத்தாம்ங்றது ஜே.கே.வோட நெலைப்பாடுன்னு அர்த்தத்துக்கு மேல அர்ததமா ஸ்மிதா சொல்றப்ப கேட்குறவங்களுக்கு ஜே.கே. மேல ஒரு பெரிய மரியாதையே உண்டாயிடம். அவரு பேசிப் பேசியே உருவான புத்தகங்கள் புரியுதோ, புரியலையோ படிக்கணும்ங்ற எண்ணம் ஸ்மிதா பேசுறப்போ உண்டாயிடும். விடுதலைங்ற மாத்தம் ஒவ்வொருத்தரோட மனசுல வரணும்னு எதிர்பார்க்குறவரு ஜே.கே. அதெ அவரு மாபெரும் புரட்சின்னு வேற சொல்றாரு. அதுக்கு அவரு வாழ்க்கை மற்றும் மனசுப் பத்தின புரிதலையும், ஆழ்நிலைத் தியானத்தையும் வலியுறத்துறாரு. இப்படியும் ஜே.கே.வப் பத்தி அடுக்கிக்கிட்டே போவாங்க ஸ்மிதா.
            அவரோட 'Freedom from the Known'ங்ற புத்தகம்தாம் ஸ்மிதாவோட வாழ்க்கையில பெரிய மாற்றத்த உண்டு பண்ணியிருக்கு. அதெ வாசிச்சப் பிற்பாடுதாம் ஸ்மிதா மனசுல தெளிவு உண்டாயிருக்கு. அத்தோட சைக்காலஜிஸ்டுகளப் போயிப் பாக்குறது, மாத்திரை எடுத்துகிறதுன்னு எல்லாத்தையும் வுட்டுப்புட்டாங்க. தொடர்ந்து ஜே.கே.வோட Beyond Violence, The First and Last Freedom, The Only Revolution மாதிரியான புத்தகங்கள் அவுங்களோட மனசுல நெறைய மாத்தங்கள உண்டு பண்ணிருக்கு. இந்தப் புத்தகங்கள் எல்லாம் உலகத்துல பல பகுதிகளுக்குப் போயி ஜே.கே. நிகழ்த்துன பிரசங்கங்கள்தாம். ஸ்மிதாவோட பேசுனா மார்கெட் பத்திப் பேசுறத விட ஜே.கே.பத்தி ரொம்ப சிலாகிச்சிப் பேசுவாங்க அவுங்க.
            வாழ்க்கையோட கேள்வியும் ஒண்ணுதாம், அதுக்கான பதிலும் ஒண்ணுத்தாம். அந்தப் கேள்வித்தாம் அந்தக் கேள்விக்கான பதிலுன்னு ஜே.கே. சொல்லியிருக்கிறதாவும் ஸ்மிதா அடிக்கடிச் சொல்லுவாங்க. அவங்களோட பேச ஆரம்பிச்சா ஜே.கே.வப் பத்தி நாளு முழுக்க பேசிக்கிட்டே இருப்பாங்க. ரொம்ப அழுத்தமான மனுஷி அவுங்க. எந்த விசயமா இருந்தாலும் அவுங்க தீர்க்க முடிவெடுக்கிற மாதிரி யாரும் முடிவெடுக்க முடியாது. அப்படித்தாம் ரித்தேஸ் அவுங்களோட அடையாறு வந்தப்போ தன்னோட வேலைய விட்டுப்புடறதுன்னு முடிவெடுத்துட்டாங்க. ரித்தேஸ் எவ்வளவோ கெஞ்சிப் பாத்திருக்காரு, வேலைய விட்டுப்புட வேணாம்னு. அதுக்கு அவுங்க சொன்ன பதிலு இருக்கே, "இத்தன நாளா ஒன்னயப் பாக்கணும், ஒங் கூட இருக்கணும்ங்றதுக்காத்தாம் உசுரெ வெச்சிக்கிட்டு இருந்ததா நெனைக்கிறேம். அதுத்தாம் இப்போ நடந்துட்டே. இனுமே இந்த வாழ்க்ககையில என்ன இருக்கு? ஒனக்கு விருப்பம் இருந்தா சம்பாதிச்சிட்டு வா. இல்லேன்னா சொல்லு ஒன்னய மாதிரியே ஒங்கூட பரதேசி மாதிரி சுத்துறதுக்கும் சம்மதம்தாம். என்னா ஜே.கே.வப் பத்தி படிச்சிட்டு, ஜே.கே.வ உள்வாங்கிட்டு இப்டில்லாம் பேசுறேன்னு நெனைக்காதே. மனசு அப்பிடித்தாம் சொல்லுது. அதி‍லேந்து என்னால விடுதலை ஆவ முடியல. அது அப்பிடித்தாம். அப்பிடி இருக்குறதால ஒண்ணும் தப்பில்லன்னு நெனைக்கிறேம். எப்போ இதுலேந்து விடுதலை ஆவ முடியலேன்னு நானு நெனைச்சேன்னோ அப்பவே இதுலேந்து விடுதலை ஆயிட்டேன்னுத்தாம் நெனைக்கிறேம்"ன்னு சொல்லியிருக்காங்க. அந்த நாளுக்குப் பிறவுத்தாம் தான் நிம்மதியா தூங்குனதாவும் ஸ்மிதா சொல்லுவாங்க.
            ஸ்மிதாவோட அந்தப் பதிலுக்கு அப்புறமா ரித்தேஸ் ரொம்ப ஸ்மார்டடா மாறிட்டாரு. டெக்னிக்கல் அனாலிசிஸ்ல பி.ஹெச்.டி. முடிச்ச ஒருத்தர எந்த ஷேர் டிரேடிங் ஆபீஸ் வேணாம்னு சொல்லும். அவர்ரப் பத்தித் தெரிஞ்ச பிற்பாடு டெக்னிக்கல் அனாலிசிஸ்ல கன்சல்டன்ட்டா வெச்சிக்க சென்னையில நெறைய நிறுவனங்கள் நான் நீயின்னு போட்டிப் போட்டதுல விட்ட எடத்தைப் பிடிக்க ஆரம்பிச்சாரு ரித்தேஸ். ரித்தேஸ் மார்கெட் பக்கம் புது மனுஷரா வந்தாரு. ஸ்மிதா புத்தகம் பக்கமா ஒதுங்கி அவுங்கள வேற ஒரு வகையில ஒரு புது மனுஷியா போயிட்டாங்க.
            வூட்டுக்கு வந்துட்டா ரித்தேஸ் மார்கெட் பத்திப் பேச மாட்டாரு. அன்னிக்கு ஸ்மிதா என்ன புத்தகம் படிச்சாங்க அதுல என்ன விசயம் இருந்துச்சுன்னுத்தாம் பேசுவாரு. அவங்களோட வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா போக ஆரம்பிச்சிது. அந்த சந்தோஷத்துல அவுங்களுக்குப் பொறந்த புள்ளை இப்போ அமெரிக்காவுல ஏதோ பிசினஸ் சம்பந்தமான படிப்புல ரிசர்ச் பண்ணிட்டு இருக்கிறதா எப்பயாச்சிம் குடும்பத்தப் பத்திப் பேசுறப்ப ரித்தேஸ் சொல்வாரு. இதுல ஒரு முக்கியமான விசயம் என்னான்னா அவுங்களுக்கு இப்போ கல்யாண வயசுல ஒரு பையன் இருந்தாலும் ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆவலங்றதுதாம். ஆனா ரித்தேஸ்ஸையும் ஸ்மிதாவையும் போல ஒரு ஆதர்சமான தம்பதிய இந்த ஒலகத்துல தேடுனாலும் கண்டுபிடிக்க முடியாது. கல்யாணம் ஆகாத ரெண்டு பேரை எப்பிடி நீ ஆதர்ச தம்பதின்னு சொல்லுவேன்னு கேட்டாக்கா, கல்யாணம் ஆனவங்கக் கூட அவுங்கள மாதிரி ஆதர்சமா இல்லேங்றதத் தவிர வேற என்ன பதிலச் சொல்லுறதுன்னு எனக்குத் தெரியுல.
            ரித்தேஸ் என்ன விசயத்த சொன்னாலும் அதெ ஸ்மிதா ஏத்துப்பாங்க. அதே போல ஸ்மிதா எதெ முடிவா சொன்னாலும் அதுல ரித்தேஸ் தலையிட மாட்டாரு. நாளைக்கே மார்கெட் வாணாம் வெளியில வந்துடுன்னு சொன்னாலும் ரித்தேஸ் மார்கெட்ட தூக்கிப் போட்டுட்டுப் போயிடுவாரு. ரித்தேஸ்க்காக எதெ வேணாலும் ஸ்மித்தா ஏத்துகிட்டாலும், ரித்தேஸ் சொந்தமா புரோக்கிங் ஆபீஸ் போடக் கூடாதுங்ற ஒரு விசயத்துல மட்டும் ஸ்மிதா கடெசி வரைக்கும் உறுதியா நின்னாங்க. அவங்களோட அந்த முடிவுல ரித்தேஸ் குறுக்கிட விரும்பல. அவரு கடைசி வரைக்கும் அனலிஸ்ட்டா இருக்குறதாவே முடிவும் பண்ணிட்டாரு. அப்பிடி இருக்குறப்பவே அவரோட வருமானத்துக்குக் கொறைச்சல் இல்லங்றது வேற விசயம். ஆனா யாரையாவது வெச்சி அவுங்க மூலமா புரோக்கிங் ஆபீஸ் ஆரம்பிக்க வெச்சி அவுங்களுக்குப் பக்கத் துணையா இருந்து தன்னோட கனவான நம்பர் ஒன் புரோக்கிங் ஆபீஸங்ற நிறைவேத்தணும்னு அவருக்குள்ள ஒரு எண்ணம் ஓடிட்டுத்தாம் இருந்துச்சி.
            அப்படி அவரு நெனைச்சிக்கிட்டு இருந்தப்ப அவருகிட்ட கோயமுத்தூர்ல நடந்த மீட்ல அகப்பட்டவருத்தாம் நம்ம குஞ்சு கவுண்டரு. அவரு மூலமா ரித்தேஸ் தன்னோட கனவுக்கான வெதையப் போட ஆரம்பிச்சாரு. ரித்தேஸ் பேச ஆரம்பிச்சார்ன்னா அவரு சொல்றத செய்யுற ரோபோட் மாதிரி நம்மள மாத்திப்புடுவாரு. அப்படித்தாம் குஞ்சு கவுண்டரு ரித்தேஸோட ரோபோட் போல ஆக ஆரம்பிச்சிட்டாரு. தான் முன்னாடி புரோக்கிங் ஆபீஸ் ஆரம்பிச்சி என்னென்ன தப்பு பண்ணோமோ அது திரும்ப நடக்கக் கூடாதுங்றதுல ரொம்பவே மெனக்கெட்டாரு ரித்தேஸ். அதெ வுட ஒரு பிசினஸ்ஸ எப்படி நடத்தணுங்றதுல குஞ்சு கவுண்டரு ரொம்பவே தெளிவா இருந்ததால ரித்தேஸோட யோசனையில உருவான தொண்டாமுத்தூரு கேப்பிட்டல் இன்னிக்கு தமிழ்நாடு அளவுல முதல் எடத்துல இல்லன்னாலும் ரொம்ப முக்கியமான விகடு ஆரம்பிச்ச பிராஞ்சோட சேர்த்து நூத்து எட்டு பிராஞ்சோட நல்ல நெலையில இருக்குதுன்னுத்தாம் சொல்லணும்.
            குஞ்சு கவுண்டருக்கு இப்பயும் ஷேர் மார்கெட்டப் பத்தி பெரிசா எதுவும் தெரியாது. ஆனா அன்னன்னிக்குக் கணக்கு வழக்கப் பாத்துக் கணக்க வெட்டுறதுலயும், ஒட்டுறதுலயும் அவர்ர மாதிரி கில்லாடி யாரும் கெடையாது. ஒரு பிராஞ்சை வெச்சிக்கிறதா மூடுறதாங்றதெ நிமிஷ நேரத்துல வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுங்ற மாதிரி முடிவெடுத்துருவாரு. மத்தபடி மார்கெட்டுல அவருக்கு ரித்தேஸ் சொல்றதுதாம் வேதம் மாதிரி. சுருக்கமா சொல்லணும்னா மார்கெட்டோட நிதி நிர்வாகம் சார்ந்த விசயங்கள்ல ரித்தேஸ் தலையிட மாட்டாரு. அதே போல மார்கெட்டுல எதெ வாங்கணும், எதெ விக்கணும்ங்ற மார்கெட்டுல டிரேடர்ஸ்ஸ, இன்வெஸ்டர்ஸ எப்படித் தக்க வைக்கணுங்ற விசயத்துல குஞ்சு கவுண்டரு தலையிட மாட்டாரு. தொண்டாமுத்தூர் கேப்பிடலுக்கு முதலாளி குஞ்சு கவுண்டர். அதோட டேரக்டர் ரித்தேஸ் அகர்வால்.
*****


No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...