நேர்மை சாகடிக்குமா? சாகடிக்காதா? என்பதைச்
சொல்லத் தெரியவில்லை. ஆனால் சாவு இருக்கிறதே அது நேர்மையாக இருப்பவர், நேர்மையாக இல்லாதவர்
என எல்லாரையும் சாகடித்து விடுகிறது. இதிலிருந்து அறிய வருவது சாவுக்குப் பேதம் தெரியாது
என்பதுதாம். மகத்தான மனிதர்களையும் சாவு சாகடித்திருக்கிறது என்பதை நீங்கள் வரலாற்றைப்
புரட்டிப் பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.
"ஒருவரின் சாவு விரைவாக நிகழ்ந்தால்
அதற்காக அவர் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். மேலும் இந்த உலகில் இருந்து வாழ வேண்டிய
சங்கடம் அவருக்குக் குறைகிறது." என்பார் எஸ்.கே.
தன்னுடைய சாவு விரைவில் நிகழாமல் இருப்பதே
தனக்கான தண்டனை என்பது எஸ்.கே.வின் வாதம். அவருக்கு என்ன வியாதி இல்லை என்பதற்காக அவர்
அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அத்தனை வியாதிகளின்
கட்டுமானமாகவும் அவர் இருக்கிறார். அதற்காக அவர் எதையும் நிறுத்துவதாக இல்லை. தேநீரில்
இனிப்பைத் தூக்கலாகப் போடச் சொல்லிக் குடிக்கிறார். ஒரு நாளைக்கு நான்கு பெட்டிச்
சிகரெட்டுகளை ஊதித் தள்ளுகிறார். ஒன்றரை லிட்டருக்கு மேல் டாஸ்மாக் சரக்கை அருந்துகிறார்.
பிரியாணி என்றால் ஒரு வெட்டு வெட்டுகிறார். அதற்குத் தகுந்தாற் போல் மாத்திரைகளையும்
போட்டுக் கொள்கிறார்.
எஸ்.கே. இப்போது முழு நேர எழுத்தாராக
இருக்கிறார். அதற்குக் காரணம் தன்னுடைய அத்தனை தீய குணங்கள்தாம் என்பதை அவர் உறுதியாக
நம்புகிறார். தன்னுடைய நல்ல குணங்கள் எதுவும் அவரை எழுதத் தூண்டவில்லை என்பதையும் அவர்
உறுதியாக நம்புகிறார்.
கெட்டவராக இருந்ததால்தாம் தன்னால் மனதளவில்
நிம்மதியாக இருக்க முடிந்ததாகவும், நல்லவராக இருந்திருந்தால் மனதளவில் நிம்மதியாக இல்லாமல்
என்றோ மாரடைப்பு வந்துப் போய்ச் சேர்ந்திருப்பேன் என்றும் அவர் அடிக்கடிச் சொல்கிறார்.
கொஞ்சம் நேர்மையாக இருந்திருந்தாலும் ஒழுங்காகப் பணிப்பட்டறையில் கலந்து கொண்டு பரலோகம்
போயிருப்பேன் என்றும் அவர் சொல்கிறார்.
பாவத்தின் சம்பளம் வியாதிகளுடன் கூடிய
வாழ்நாள் நீட்டிப்புத்தாம் என்பதில் எஸ்.கே. திடகாத்திரமான முடிவுடன் இருக்கிறார்.
நேர்மை சாகடிக்கத் தயங்காது. பாவம் வாழ
விட யோசிக்காது. நேர்மை முக்தியையும், பாவம் வாழ்நாள் நீட்டிப்பையும் வழங்குகிறது.
உலகில் இருக்கும் அத்தனை மருத்துவ முறைகளும் பாவத்தின் வாழ்நாள் நீட்டிப்புக்கான முயற்சிகளில்
தீவிரமாக இருக்கின்றன.
இந்த பூமி நேர்மையாக நீண்ட காலம் வாழ முடியாது
என்ற உலகியல் உண்மையை நேர்மையாக நின்று சொல்ல முடியாமல் இருபத்து மூன்றரை டிகிரி அச்சில்
சாய்ந்தபடி சுழன்று கொண்டே சொல்லிக் கொண்டு இருக்கிறது என்பது எஸ்.கே. எழுதிய தத்துவார்த்த
மொழிகளில் குறிப்பிடத்தக்கது.
*****
No comments:
Post a Comment