5 Jan 2020

பார்க்கக் கூடாத முகத்தைப் பார்த்த பின்பு...



செய்யு - 318

            ஏணியில ஒரு படியில ஏறுனவன் தடுமாறி வுழுந்தா சமாளிச்சிப்பான். அதே நாலு படிக்கு மேல ஏறுனவன் சறுக்கி வுழுந்தா லேசா அடிபடுவன். அதே ஏணியில உச்சிக்குப் போனவன் தடுமாறி வுழுந்தா கையி காலு முறிபடுவான். இப்போ ஏணியில ஏறுனவன விட்டுப்புட்டு மாடியில ஏறுனவன கணக்குல எடுத்துப் பார்த்தா பத்து மாடிக்கு‍ மேல ஏறுனவன் அங்கேயிருது விழுந்தா உசுரு மிஞ்சாது. அதே வானத்துல பறக்குறவன் அங்கேயிருந்தா வுழுந்தா ஒரு துண்டு எலும்புக்கு உத்தரவாதம் கெடையாது. எல்லாம் தெரிஞ்சித்தாம் இயற்கை வானத்துல பறக்குற பறவைய கனம் இல்லாம படைச்சிருக்கு. குறிப்பா மண்டை கனம் இல்லாம படைச்சிருக்கு. மண்டை கனம் இல்லாத பறவைகளுக்கு றெக்கையையும் கொடுத்திருக்கு. மனுஷப் பயலும் நெனைச்சா பறக்கலாம் பறவையைப் போல. அவனோட ஒடம்பு ஒண்ணும் பெரிசா எடை கெடையாது. ஆனா அவனுக்கு இருக்குற மண்டை கனத்துக்கு நிச்சயமா அவனால பறக்க முடியாது. மண்டை கனம் உள்ளவனுக்கு இயற்கை எப்படி றெக்கையைக் கொடுக்கும்?
            ஏழு வருஷம் ஒரு மனுஷன் பரதேசியைப் போல சுத்தித் திரிஞ்சா அவனுக்குள்ள இருக்குற திமிரு, கொழுப்பு, ஆணவம், மண்டை கனம், ஆசை, லட்சியம், வெறி எல்லாமும் வத்திப் போவும். அப்படித்தாம் தனக்கு எல்லாமே வத்திப் போயிட்டதா உணர்ந்திருக்காரு ரித்தேஸ் அகர்வால். வடமேற்கா ராஜஸ்தானோட தார் பாலைவனம், வடக்கால இமயமலை, வடகிழக்கால மணிப்பூரு, கல்கத்தாவுல ஹூக்ளி நதிக்கரை, விசாகப்பட்டணம், ஹைதராபாத்ன்னு சுத்திக்கிட்டு கடைசியா சென்னைக்கு வந்திருக்காரு. கூவத்துக் கரையில அவருக்கு ஏதோ ஒரு ஞானம் கெடைச்சாப்புல இருந்திருக்கு. ஒலகத்துலயே ஒரு சாக்கடை நதிக்கரையில மனசு தெளிஞ்சவன் நானாத்தாம் இருப்பேம்னு இதெப் பத்தியும் ரித்தேஸ் சிரிச்சிக்கிட்டே சொல்லுவாரு. கூவத்துல குளிச்சிக்கிட்டு ப்ளாட்பாரத்து ஓரத்துல படுத்துக்கிட்டு சிக்னல்ல பிச்சையெடுத்துக்கிட்டு உசுரு இருக்குற காலத்த ஓட்டிப்புடணும்ங்ற முடிவுக்கு வந்திருக்காரு ரித்தேஸ்.
            சிந்தாதரிப்பேட்டை சிக்னலாண்ட சிவப்பு வுழுந்த நேரத்துல வரிசையா நின்னுகிட்டு இருந்த கார்கள்ல ஒரு காரு கண்ணாடியைத் தட்டி பிச்சைக் கேட்டிருக்காரு ரித்தேஸ். காரு கண்ணாடியைத் தெறந்தவங்களோட மூஞ்சியைப் பார்த்ததும் பிச்சையும் வாங்காம ஒண்ணும் வாங்காம அந்த எடத்தை வுட்டு மரண வேகத்துல ஓட ஆரம்பிச்சிட்டாரு ரித்தேஸ். அதுக்குள்ள சிக்னல்ல பச்சை வுழுவ அந்த ஒரு காரு மட்டும் நகரல. அந்த காரு சிக்னல்ல செவப்பு வுழுந்தப்ப எப்படி நின்னுச்சோ அப்பிடியே பச்சை வுழுந்தப்பயும் நின்னதால சிந்தாதரிப்பேட்டை முழுக்க பின்னாடி நின்னுகிட்டு இருந்த வண்டிகளோட ஹாரன் சத்தம் அந்த நேரத்துல ஆலைச் சத்தம் மாதிரி சென்னை முழுக்க கேட்டு சென்னையோட காதே கிழிஞ்சிருக்கணும். இந்தச் சத்தத்தையெல்லாம் பொருட்படுத்தாம ரெண்டு பேரு ஓடிக்கிட்டு இருக்காங்க பாருங்க அதெச் சொல்லணும்.
            எந்த மூஞ்சியைப் பாத்து மூச்சிரைக்க ஓடி வந்தாரோ ரித்தேஸ் அதே மூஞ்சி கார்லேந்து எறங்கி இவரைத் தொரத்திக்கிட்டு வருங்றதை அவரு எதிர்பார்க்கல. அவரும் சிந்தாதரிப்பேட்டை சிக்னலேந்து ஒரு கிலோமீட்டருக்கு மேல ஓடி வந்திருக்காரு. அவர்ர தொரத்திக்கிட்டு வந்த அந்த மூஞ்சும் அவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கு. ஒரு கிலோ மீட்டர் ஓடி வந்து மூச்சிரைக்க நின்னவரு முன்னாடி அந்த மூஞ்சும் முன்னாடி வந்து மூச்சிரைக்க நின்னிருக்கு. இவரால அந்த மூஞ்சியை நிமுந்துப் பாக்க முடியல. அப்பத்தாம் அந்த மூஞ்சி இவர்ரப் பாத்து, "ரித்தேஸ்!"ன்னு சொல்லிருக்கு. சொன்னதோட வுடாம அவர்ர அப்படியே கட்டிப் பிடிச்சிக்கிட்டு.
            ரித்தேஸூக்கு ஆச்சரியம் தாங்க முடியல. ஆச்சரியத்த விட அதிர்ச்சி தாங்க முடியல. மண்டையெல்லாம் முடி. மொகம் முழுதும் தாடி முடி. எப்பிடி அந்த மூஞ்சி இந்த மூஞ்சியை அடையாளம் கண்டுபிடிச்சதுன்னு அவரால புரிஞ்சிக்க முடியல. பாக்குறதுக்கே அருவருப்பா இருந்த அவர்ர கட்டிப்பிடிக்கிறதுன்னா அந்த மூஞ்சியோட மனச அப்பத்தாம் முதன்முதலா புரிஞ்சிருக்கிறாரு ரித்தேஸ். அவரோட ஒடம்புலேந்து நாத்தம் வேற. அதெயும் பொருட்படுத்தாம அந்த மூஞ்சு அவர்ர கட்டிப்பிடிக்குதுன்னா? அவரு கண்ணுலேந்து தண்ணி தண்ணியா ஊத்தியிருக்கு. கிட்டதட்ட ஏழு வருஷ காலத்துக்குப் பெறவு முதன் முதலா அவரு அழுதிருக்காரு.
            "ரித்தேஸ்! யூ நோ? ஒன்னய மறுபடியும் பாப்பேன்னு எதிர்பாக்கல. இட்ஸ் எ மிராகிள்! சத்தியமா சொல்றேம் ஒன்னய மறக்கணும்னுத்தாம் மும்பையை வுட்டு சென்னை வந்தேன். பட் மறக்க முடியல. ஒன்னய மறுபடியும் பாப்பேன்னு கனவுல கூட நெனைக்கல. பட் கனவுல கூட ஒம் முகந்தாம் வருது தெரியுமா! எங்க மும்பை வந்தா தற்செயலாவது ஒன்னய பாத்திடுவேன்னு மும்பைக்கு நான் போறதில்ல. உன்னய சென்னையில பாப்பேன்னு நான் எதிர்பார்க்கல. டேய் ஒன்னய இந்தியாவோட வாரன் பப்பட்டாவோ இல்ல ஒரு ராஜேஸ் ஜின்ஜூவாலா மாதிரித்தாம்டா எதிர்பாத்தேம். ஒன்னயப் பத்தி அப்படித்தாம் ஒரு நாள்ல டி.வி.யிலயோ, பேப்பர்லயோ நியூஸ் வரும்னு எத்தினி நாளு எதிர்பாத்திருக்கேம் தெரியுமா? ஒன்னய இப்பிடிப் பாப்பேம்னு எதிர்பார்க்கல! என்னடா ஆச்சு? ஏம்டா இப்பிடி இருக்கே?"ன்னு அந்த மூஞ்சு உலுக்கி எடுத்திருக்கு ரித்தேஸை.
            ரித்தேஸூக்குப் பேச்சு வர மாட்டேங்குது. என்னத்தப் பேசுறது? எப்பிடிப் பேசுறதுன்னு ஒண்ணுமே புரியல. குரலு தழுதழுக்க ஆரம்பிக்கிது. ஒடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிக்குது.
            "என்னால லைப்பைப் புரிஞ்சிக்க முடியல. யெஸ் மிஸ் ஓ சாரி மிஸஸ் ஸ்மிதா பட்டேல்! என்னால புரிஞ்சிக்க முடியல."ன்னுருக்காரு ரித்தேஸ்.
            "இன்னும் மிஸ்தாம்டா ரித்தேஸ் நானு. ஒன்னய மிஸ் பண்ணிட்டு எப்பிடிடா நானு மிஸஸ் ஆவுறது?"ன்னுருக்கு அந்த மூஞ்சு.
            "ஆர் யூ மேட்? ஏஜ் ஒனக்கு முப்பதுக்கு மேல இருக்காது? ஏம்டி மேரேஜ் பண்ணிக்கல?"ன்னுருக்காரு ரித்தேஸ்.

            "என்னோட லைப்ல ஒரே சூரியன், ஒரே சந்திரன், ஒரே வானவில், ஒரே உலகம், ஒரே மை டியர் பாய் நீ ஒருத்தம்டா! லைப்னா ஒன்னோட மட்டுந்தாம். இல்லேன்னா தனியாவே ஒன்னோட நினைவுகளோடயே வாழ்ந்திடறதுன்னு முடிவு பண்ணிட்டேம்டா!" அப்பிடின்னிருக்கு அந்த மூஞ்சு.
            "அய்யோ! ஓ ஸ்மிதா! ஏம் என்னயப் போட்டு இப்பிடிக் கொல்லுறே? நானு யார்ர விரும்புனேனோ அத்து என்னய விரும்பவே இல்ல. நானு யார்ர விரும்பலேன்னு சொன்னேன்னோ அத்து என்னய விரும்புனா நானு ன்னா பண்ணுவேம்? ஏம்டி என்னய நெனைச்சிக்கிட்டு ஒன்னோட லைப்பையே ஸ்பாயில் பண்ணிக்கிட்டே? நாந்தாம் டென் இயர்ஸ் பேக் அப்பயே சொன்னேன்ல. எனக்கு அப்பிடி ஒரு பீல் ஒங்கிட்ட இல்லடி. ப்ளீஸ் நீயும் நம்மள போட்டுக் கொல்லாதடி. யாராச்சியும் மேரேஜ் பண்ணிக்கிட்டு நல்ல வெதமா இருந்து தொலையுடி. இந்த ஒலகத்துலயே மை மம்மி, டாடி மேல அவ்ளோ பாசமா இருந்தேம். நாம்ம யாரு மேல பாசமா இருக்கேன்னோ அவுங்க எல்லாத்தும் என்னய வுட்டுப் போயிட்டாங்க. எந்த பிசினஸ்ஸ விரும்பிச் செய்யணும்னு நெனைச்சோன்னோ அந்த பிசினஸ் என்னய தூக்கி அடிச்சிடுச்சி. இன்னிக்கு அந்த பிசினஸ்ல நானு இல்ல. நானு எதெ விரும்புறேன்னோ அத்து எனக்குக் கெடைக்காது. நானு எதயும் விரும்ப மாட்டேம். எது மேலயும் ஆசையோ, பாசமோ எதையும் வைக்க மாட்டேம். ஒன்னய மீட் பண்ணதுல ரொம்ப துயரத்த மறுபடியும் அனுபவிக்கிறேம். ப்ளீஸ் என்னோட வாழ்க்கைய என்னய வாழ விட்டுட்டு ஒன்னோட வழியப் பாத்துட்டு போயிட்டே இரு!" அப்பிடின்னிருக்காரு ரித்தேஸ்.
            "அன்னிக்கும் அப்பிடித்தாம் சொன்னே! இன்னிக்கும் அப்பிடித்தாம் சொல்றே! ஒன்னோட இந்த நேர்மைத்தாம்டா எனக்குப் பிடிச்சிருக்கு. அன்னிக்கு ஒன்னோட சொல்லுக்கு மதிப்புக் கொடுத்து விலகிப் போன மாதிரி இன்னிக்கு நானு போறதாயில்ல. ஏன்னா அன்னிக்கு நீயி ஒரு பொண்ண எனக்கு முந்தியே லவ் பண்ணிட்டு இருந்தே. இன்னிக்கு? ஒன்னய லவ் பண்றதுக்கு இந்த ஒலகத்துலயே, ஏன் இந்த பிரபஞ்சத்துலயே நானு ஒருத்தித்தாம் இருக்கேன்!" அப்பிடின்னு சொல்லியிருக்கு அந்த மூஞ்சு.
            "ஒனக்கு என்ன பைத்தியமா? என்னோட நெலமையப் பாரு? ஏஞ் சட்டையெல்லாம் கிழிஞ்சிப் பைத்தியம் மாதிரி இருக்கேம். என்னோட ஒடம்புலேந்து கெட்ட நாத்தம் வருது. இந்த நாத்தத்த இந்த ஒலகத்துல என்னயத் தவிர வேற யாராலயும் சகிச்சிக்க முடியாது. எங்கிட்ட ஒத்த பைசா இல்ல. ஒரு வாயி டீயக் குடிக்கணும்னா பிச்சையெடுத்துத்தாம் குடிக்கணும். இந்த உசுர ஒடம்பத் தவிர எங்கிட்ட என்ன இருக்குன்னு என்னய இன்னும் லவ் பண்றேம்னு சொல்றே?" அப்பிடின்னு கேட்டிருக்காரு ரித்தேஸ்.
            "லவ் பண்றதுக்குப் பெரிசா காரணம் ஒண்ணு தேவையில்லே. ஏம் லவ் பண்றேம்னு அதுக்கு விளக்கம் சொல்லணும்னு அவசியமில்லே. என்னவோ தோணுது. லவ் பண்றேம். இப்பவும் அப்பிடித்தாம் தோணுது. எப்பவும் அப்பிடித்தாம் தோணும். நீயி என்னய லவ் பண்ணாட்டாலும் என்னால ஒன்னய லவ் பண்ணாம இருக்க முடியாது. ஒன்னோட அந்த நடை. அந்தப் பார்வெ, ஒன்னோட பேச்சு, ஒன்னோட கை, கால் அசைவுன்னு ஒவ்வொண்ணும் என்னோட ஒவ்வொரு அணுவுக்குள்ளயும் ஊறிப் போயி உறைஞ்சிக் கெடக்குடா. நீயி என்னத்தாம் தாடி வளத்திருந்தாலும், பன்னாடை மாதிரி முடிய வெச்சிருந்தாலும், யில்ல இன்னொரு உருவத்துல கூடு வுட்டு கூடு பாஞ்சி வந்தாலும் ஒன்னய என்னால, என்னால மட்டும் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்டா!" அப்பிடின்னிருக்கு அந்த மூஞ்சு.
            "இப்ப என்னய ன்னா பண்ணச் சொல்றே?" அப்பிடின்னிருக்காரு ரித்தேஸ்.
            "ஒன்னய நாம்ம ஒண்ணும் பண்ணச் சொல்லல. நீயி எதுவும் பண்ண வாணாம். ஏம் எதாச்சிம் பண்ணணும்னு நெனைக்கிறே? வாழ்க்கையில எதுவும் பண்ணாம இருக்கக் கூடாதா? அப்பிடியே இரு. எதையும் பண்ண வாணாம் நீயி."
            "ஸ்மிதா! ப்ளீஸ் என்னயக் கொல்லாதே! ஏற்கனவே எதையும் என்னால தாங்க முடியாத நெலமையில இருக்கேம்! இப்போ வாட் நெக்ஸ்ட்? ஒண்ணுமே புரியல."
            ஸ்மிதா பட்டேல் ரித்தேஸின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு ஆட்டோவை கைதட்டி நிறுத்தி ஏறிக்கிறாங்க. அந்த ஆட்டோகாரனாலயும் ரித்தேஸ் ஒடம்பிலிருந்து வர்ற நாத்தத்தைத் தாங்க முடியல.
            "ன்னா கேஸூம்மா நீயி? இப்டி ஒரு ஆளப் பிடிச்சி நம்ம ஆட்டோவுல ஏத்திக்கிட்டு... ஒன்னோட பெரிய ரப்சரா போச்சு!" அப்பிடின்னிருக்காரு ஆட்டோகாரரு.
            "ஒண்ணும் பேசாத. அடையாறுக்கு வுடு. டூ தெளஸண்ட் ருபீஸ்."ன்னு சொல்லிருக்காங்க ஸ்மிதா பாட்டில். பெறவு ஒண்ணும் பேசல ஆட்டோக்காரரு.
            அப்பத்தாம் ரித்தேஸ் கேட்டிருக்காரு, "வேர் இஸ் யுவர் கார்? வட் அபெளட் தட்?" அப்பிடின்னு.
            "டாக்குமெண்ட்ஸைக் காட்டி இனுமே பைன் கட்டித்தாம் எடுக்கணும்!" அப்பிடினிருக்காங்க ஸ்மிதா பட்டேல்.
            "பாத்தியாடி எங் கூட சேந்த ஒடனே ஒன்னோட காரு ஒன்னய வுட்டுப் போயிடுச்சி. அதாங் சொல்றேம் எங் கூட சேர வாணாம்ங்றேன்!" அப்பிடின்னிருக்காரு ரித்தேஸ்.
            "நீயி என்னோட பொக்கிஷம்டா. ஒன்லி யூ ஆர் மை பிரைஸ்லெஸ் கிப்ட். ஒனக்காக எதையும் என்னால விட்டுட முடியும். பட் ஒன்னய வுட்டுட முடியாது." அப்பிடின்னிருக்காங்க ஸ்மிதா.
            ஒரு மாதிரியா பாம் பாம்ங்ற சத்தத்தோட குலுங்கிக் குலுங்கிக் போன ஆட்டோவுல இப்போ குலுங்கி குலுங்கி மறுபடியும் அழ ஆரம்பிச்சிருக்காரு ரித்தேஸ்.
*****


No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...