நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள். பணியில்
சரியாகச் செயல்படுகிறீர்கள். ஆனால் பணியின் போது மேற்கூரை இடிந்து விழுந்து இறந்து
போகிறீர்கள். இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
எஸ்.கே. நேர்மையற்ற மனிதர் என்பதில் எள்ளளவும்
சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அவர் சிறு குழந்தைகள் சேத்து வைத்திருக்கும் சிறுவாடைக்
கூட கடன் வாங்கியிருக்கிறார். ஆனால் திருப்பிக் கொடுத்ததில்லை. அவர் தன்னுடைய துறையில்
வரும் உதவித்தொகைகள் பலவற்றைக் கையாடல் செய்திருக்கிறார். அதற்காக சட்டப்படி அவர்
விளக்கம் கோரப்பட்டு கடைசி நேரத்தில் கெஞ்சிக் கூத்தாடி பலரின் கால்களில் விழுந்து
தப்பியிருக்கிறார்.
அந்த நாள் என்னவென்பதைத் தேதி குறிப்பிட்டு
எழுத முடியாமைக்கு நீங்கள் நாவலாசிரியரைச் சபித்து விடாதீர்கள். அந்த நாளைக் குறிப்பிட்டு
எழுதினால் நீங்கள் கூகுள் செய்து எஸ்.கே. யார் என்பதைக் கண்டுபிடித்து விடும் அபாயம்
இருக்கிறது. அந்த நாளில் பணிப்பட்டறைக்கான வகுப்பு நடக்கிறது எஸ்.கே.வுக்கு.
வழமையாக பணிக்கே சரியான நேரத்தில் வராத
எஸ்.கே. பணிப்பட்டறைக்கா சரியான நேரத்தில் வரப் போகிறார்? பணிப்பட்டறை ஒன்பது மணி
அளவில் தொடங்க, எஸ்.கே. பத்தரை மணி வாக்கில் வருகிறார். மிகச் சரியாக பதினோரு மணி
அளவில் தேநீர் இடைவேளையின் போது மீண்டும் பயிற்சிக்கு பதினொன்று இருபதுக்கு மீள வருமாறு
பணியாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
மிகச் சரியாக அரை மணி நேரம் மட்டுமே பணிப்பட்டறையிலிருந்த
எஸ்.கே. அதனால் உண்டான மன இறுக்கம் தாள முடியாமல் உள்ளே கொடுத்த தேநீரையும், கொண்டைக்
கடலை சுண்டலையும் விட்டு விட்டு வெளியே உள்ள தேநீர்க் கடைக்குச் சென்று சமோசாவை மென்று
தேநீரைப் பருகி ஒரு சிகரெட்டை வாங்கிப் பத்த வைத்திருக்கிறார்.
இவர் பத்த வைத்த நேரம் சரியாக பதினோரு
மணி இருபது நிமிடம். உள்ளே பணிப்பட்டறை வகுப்புகள் ஆரம்பமாகின்றன. ஐந்து நிமிடத்துக்கு
மேல் ஒரே சிகரெட்டைப் பிடித்துக் கொண்டிருக்கிறவர், அடுத்த பத்து நிமிடங்களுக்கு அதே
விகிதாச்சாரத்தில் மேலும் இரண்டு சிகரெட்டை ஊதித் தள்ளுகிறார். அவர் ஊதி முடிந்த அந்த
நேரத்தில் பணிப்பட்டறையில் கடமை தவறாத அத்தனைப் பேர் மீதும் மேற்கூரை இடிந்து விழுகிறது.
பணிப்பட்டறை வகுப்புப் பட்டியிலில் இருந்த நூற்று ஒன்பது பேரில் நூற்று எட்டு பேர்
சம்பவ இடத்திலேயே பலியாகிறார்கள். நூற்று ஒன்பதில் நூற்று எட்டுப் போக தப்பிய அந்த
ஒருவர் எஸ்.கே.
எஸ்.கே. முதன்முறையாக நேர்மையைக் கேள்விக்
கேட்க தொடங்குகிறார். எங்கே தன்னையும் அறியாமல் நேர்மையாகவும் சரியாகவும் இருந்து
அதன் காரணமாக பணிப்பட்டறையில் இருந்து, அதாவது மறுபடியும் எங்கே ஒரு பணிப்பட்டறை வகுப்பைப்
போட்டு மீண்டும் மேற்கூரை இடிந்து விழுந்து தன் உயிர் போய் விடுமோ என்ற பயத்திலேயே
அன்றைய தினமே எஸ்.கே. விருப்ப ஓய்வுக்கான படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்து விடுகிறார்.
*****
No comments:
Post a Comment