செய்யு - 317
வடநாட்டு ஆளுன்னு சொல்றதுக்கான அத்தென
அம்சமும் இருக்கும் ரித்தேஸ் அகர்வாலுக்கு. ஆனா ஆளு நல்லா தமிழ்நாட்டுலேயே பொறந்து
தமிழ்நாட்டுலேயே வளந்த கணக்கா தமிழப் பேசுவாரு. அவரு படிச்சது, டாக்டரேட் பட்டம் வாங்குனது
எல்லாமும் பங்குச் சந்தைச் சார்ந்த படிப்புலத்தாம். ஒரு பங்கை எப்படிப் பார்த்து வாங்கணும்,
என்ன விலையில வாங்கணும்னு சொல்லப்படுற பண்டமெண்டல் அனாலிசிஸ், ஒரு பங்கோட வெல ஏறுமா?
இறங்குமா?ன்னு கண்டுபிடிக்கிறதுக்கான வழிமுறைகளா சொல்லப்படுற டெக்னிக்கல் அனாலிஸ்ல
அவரு ஒரு கில்லின்னு சொல்லணும். பம்பாய் ஸ்டாக் எக்ஸேஞ்ச்ல கொஞ்ச காலம் வேல பாத்த
அனுபவம் வேற அவருக்கு இருந்துச்சி. அதெ வெச்சி அவரு மும்பையில ஒரு புரோக்கிங் ஆபீஸ்
போட்டுருக்காரு. படிப்புலயும், ஷேர் அனாலிஸிலயும் வெவரமா இருந்த ரித்தேஸூக்கு யேவாரத்துல
வெவரமா இருக்க முடியல.
அவரோட ஆபீஸ்ல கிளையண்ட்ஸா இருந்தவங்க
இஷ்டத்துக்கு டிரேட் பண்ணி நட்டம் ஆயிப் போயி ஆளாளுக்குப் பணத்தைக் கட்டாம கழண்டுகிட்டதால
எல்லாமும் சேர்ந்து புரோக்கிங் ஆபீஸ் பண்ணிக்கிட்டு இருந்த ரித்தேஸ் தலையில விழுந்திருக்கு.
பொதுவாக டிரேடர்ஸை இஷ்டத்துக்கு டிரேட் பண்ண எந்த புரோக்கிங் ஆபீஸ்லயும் வுட மாட்டாங்க.
அவுங்க கட்டியிருக்கிற பணத்துக்கு ஏத்தபடி ஒரு மார்ஜின் லிமிட் வெச்சிருப்பாங்க. இந்த
மார்ஜின் லிமிட்ங்றது புரோக்கிங் ஆபீஸூக்கு ஏத்தபடி மாறுபடும். கிளையண்டுங்க கட்டியிருக்குற
பணத்துக்கு ஏத்தபடி மூணு மடங்கு, அஞ்சு மடங்கு, பத்து மடங்குன்னு இந்த மார்ஜின் லிமிட்
ஆபீஸூக்கு ஆபீஸூ மாறுபடும்.
உதாரணத்துக்கு பத்தாயிரம் பணத்த ஒரு கிளையண்ட்
கட்டிட்டு அஞ்சு மடங்கு மார்ஜின் லிமிட் கொடுக்கற புரோக்கிங் ஆபீஸ்ல அம்பதாயிரம்
வரைக்கும் டிரேட் பண்ணலாம். அதாவது கையில இல்லாத நாப்பதாயிரத்துக்குச் சேத்து பங்குகள
விக்கலாம், வாங்கலாம். அப்படி வித்து வாங்குறதுல லாபம் எவ்வளவு வந்தாலும் பிரச்சனை
இல்ல. நட்டம் வந்தா அது பத்தாயிரத்துக்கு மேல வரக் கூடாது. ஏன்னா அவரு பத்தாயிரம் பணத்த
மட்டுந்தான கட்டியிருக்காரு. ஒருவேள அம்பதாயிரம் டிரேட் பண்ற இடத்துல அவரு கட்டியிருக்கிற
பத்தாயிரம் பணத்த தாண்டி நட்டம் வந்துப் போச்சுன்னா அந்த கிளையண்ட் பத்தாயிரத்த தாண்டி
வர்ற நட்டத்த மூணு நாளைக்குள்ள புரோக்கிங் ஆபீஸூக்கு செக் போட்டு கொடுத்துப்புடணும்.
இல்லேன்னா அந்தப் பணத்த புரோக்கிங் ஆபீஸூ வெச்சி நடத்துறவங்கத்தாம் கட்டியாகணும்.
ரித்தேஸூ அந்த எடத்துலத்தாம் தப்பு பண்ணிருக்காரு.
அவரு நிறைய கிளையண்ட்ஸ தன்னோட ஆபீஸூ பக்கம் கொண்டு வரணுங்றதுக்காக இந்த மார்ஜின்
லிமிட்ங்ற விசயத்துல அசால்ட்டா இருந்திருக்காரு. எந்த கிளையண்ட வேணாலும் எவ்வளவு வேணாலும்
டிரேட் பண்ணிக்குங்கன்னு சொல்லிருக்காரு. அதால அவரோட ஆபீஸூக்கு டிரேட் பண்ற ஆளுங்க
ஈசல் பூச்சிக் கணக்கா வந்து மொய்ச்சிருக்காங்க. ஈசலுக்கு ஒரு நாளு வாழ்வுங்ற மாதிரியே
அந்த டிரேட் பண்ண கிளைண்டுங்களோட டிரேடும் ஆயிப் போயி அவுங்கவங்களும் நட்டம் பண்ணிட்டு
மூணு நாளைக்குள்ள பணத்தெ கட்டுறதா சொல்லிப்புட்டு கட்டாம தலைமறைவு ஆயிட்டாங்க.
புரோக்கிங் ஆபீஸ் போடுற யாரும் அந்த
மாதிரியான தப்பெ பண்ண மாட்டாங்க. ஆனா ரித்தேஸ் பண்ணிருக்காரு. அதெ ஏம் பண்ணாருன்னு
அவரே பல இன்வெஸ்டர்ல மீட்ல சொல்லுவாரு. பொதுவா டிரேட் பண்ற கிளையண்ட்டுங்க டிரேடிங்
பண்றப்போ அதிகமான மார்ஜின் லிமிட்டெ எதிர்பார்ப்பாங்க. அதிகமான மார்ஜின் லிமிட் கொடுக்குற
புரோக்கிங் ஆபீஸ்ல கொய்ங்னு போயி மொய்ப்பாங்க. தன்னோட ஆபீஸ ரித்தேஸூ மும்பைல நம்பர்
ஒன் ஆபீஸா கொண்டு வரணுங்ற வெறியிலயும், அவரோட படிப்பும், அனாலிசிஸ் பண்ற தெறமையும்
நம்மள மீறியா பங்குச் சந்தைப் போயிடுங்ற அசால்ட்டான தைரியத்திலயும் ரொம்பவே ரிஸ்க்
எடுத்திருக்காரு. ஒருவேள கிளையண்ட்ஸ் நட்டம் பண்ணாலும் அவுங்களோட டிரேடை எப்படி லாபம்
பண்ண வைக்கணுங்றதெ தன்னோட மூளையால கண்டுபிடிச்சிட முடியுங்றதுல அவரு அளவுக்கு அதிகமான
தன்னம்பிக்கையோட வேற இருந்திருக்கிறாரு. ஆயிரம் ரூவாயக் கட்டுனா ஒரு லட்சம் வரைக்கும்
டிரேட் பண்ணலாம்னு அவரு அறிவிப்புக் கொடுத்திருக்காரு. கிட்டதட்ட கட்டுன பணத்துக்கு
நூறு மடங்கு அளவுக்கு மார்ஜின் லிமிட்டு கொடுத்திருக்காரு. மும்பைல இருந்த நெறைய புரோக்கிங்
ஆபீஸூங்க ஈயோட்டிக்கிட்டு இருக்க, இவரோட ஆபீஸ்ல ஈக்கள் வந்து மொய்க்குற கணக்கா டிரேடர்ஸ்ங்க
வந்து டிரேட் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.
படிப்புங்றது வேற. அனுபவங்றது வேற. அனுபவத்திலேந்துத்தாம்
படிப்பு வர்றதுன்னாலும் அனுபவப்படாத படிப்பு நெறைய மோசமான அனுபவத்தக் கத்துக் கொடுத்துடும்.
ரித்தேஸூக்கு அப்பிடித்தாம் ஆயிப் போச்சுது. அவரோட ஆபீஸ்ல இஷ்டத்துக்கு டிரேட் பண்ணி
நட்டம் பண்ணுன ஆளுங்க எல்லாம் கண்ணுல படாம ஜூட் வுட்டுருக்காங்க. ஒவ்வொரு கிளையண்ட்டுங்க
பண்ணுன நட்டமும் அவரு தலையில வுழுந்திடுச்சி. கிளையண்டுங்க தலைமறைவு ஆனாப்புல ரித்தேஸ்ஸூ
தலைமறைவு ஆவ முடியல. மும்பைல அவரோட குடும்பம் பெரிய பணக்கார குடும்பம். அப்படித் தலைமறைவு
ஆனாக்கா அது குடும்பத்துக்கேயில்ல கெட்டப் பேரா போயிடும். மும்பையில பேப்பர்கார குடும்பம்னு
அவரோட குடும்பத்தச் சொல்லுவாங்க. பல வெதமான பேப்பர்கள விற்பனெ பண்ற ஹோல் சேல் யேவாரிக்
குடும்பம் அவரோட குடும்பம். அதாலயோ என்னவோ பேப்பருக்கும், பேப்பர்ல இருக்குற ரூவாய்
நோட்டுக்கும் தனக்கு வித்தியாசம் தெரியாம போச்சோன்னு அவரே இந்தச் சம்பவத்தப் பத்திச்
சொல்றப்ப ரொம்ப வேடிக்கையா சொல்லுவாரு. அந்த பெரிய பணக்கார குடும்பத்தோட ஒத்த வாரிச
போயிட்டாரு ரித்தேஸூ. இது பத்தாதா? அந்த நேரத்துல தனக்கு பணத்தோட மதிப்புப் பத்தி
சரியாம புரியாம போச்சிடுச்சின்னு இதெப் பத்திச் சொல்றப்ப திரும்ப திரும்ப அவரு சொல்லுவாரு.
அவரு இன்னொரு விசயத்தையும் சொல்லுவாரு.
பொதுவா லாபம் வர்றப்போ கொஞ்சமாத்தாம் சிக்கனமா வரும், ஆனா நட்டம்னு வர்றப்போ ரொம்ப
பிரமாண்டமா ஆடம்பரமா வரும்னு. அவரு போட்ட புரோக்கிங் ஆபீஸூக்கு நட்டம் கோடிக் கணக்குல
வந்துப் போச்சு. இந்த விசயம் அவரோட ஏரியா முழுக்க தெரிஞ்சுப் போச்சு. அதிகபட்சம்
அவரு ஏழு நாளைக்குள்ள பணத்தெ கட்ட வேண்டிய நெலமை உண்டாயிப் போயிருக்கு. இந்த விசயத்த
தெரிஞ்சுப் போன பிற்பாடு இருந்த சொத்துப் பத்த விக்கலாமுன்னு பாத்தா அதெ அரை வெலைக்கும்,
கொறை வெலைக்கும் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. வேற வழியில்லாம போன பிற்பாடு பத்து ரூவா
மதிப்புள்ள சாமான நாலு ரூவாய்க்கு விக்குறாப்புல ஆயிடுச்சுன்னு அந்த நெலமையைப் பத்திச்
சொல்லுவாரு ரித்தேஸூ. தங்கிட்ட இருந்த பணம், சொத்து பத்து எல்லாத்தையும் வித்து எல்லாத்தையும்
அடைச்சிருக்காரு. ஒத்த புள்ளையா வேற போயிட்டாருல்ல. அதால அவுங்களோட அப்பாவுக்கும்,
அம்மாவுக்கும் ஒண்ணும் சொல்ல முடியல. புரோக்கிங் ஆபீஸூ போட்ட ரெண்டே மாசத்துல மாளிகையில
இருந்த குடும்பத்தெ நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துட்டாரு ரித்தேஸூ.
அவரு அப்பிடிப் பண்ணதெ அவரோட அப்பா பெரிசா
எடுத்துகிடாதது போல தெரிஞ்சாலும் அடுத்த ஒரு மாசத்துல மாரடைப்பு வந்து செத்துப் போயிட்டாரு.
அவரோட அப்பா போயிச் சேர்ந்த விரக்தியில அதெ தாங்க முடியாம அவரோட அம்மா அதுக்கு அடுத்த
வாரத்துல ஒரு நாள்ல தூக்குல தொங்கிட்டாங்க. ரித்தேஸ் இப்போ தனியாளா போயிருக்காரு.
இதுக்கு இடையில அவரு ஒரு பொண்ண வேற காதலிச்சிருக்காரு. அந்தப் பொண்ணுக்கு அவரோட
நெலமை தெரிஞ்சிப் போயி நாம்ம காதலிக்கவேயில்ல, பிரெண்ட்ஸாத்தாம் பழகுனோம்னு சொல்லிருக்கு.
ரித்தேஸூக்குக் கிட்டத்தட்ட மனசு நடுவானத்துல வெடிச்ச விமானம் போல ஆயிருக்கு. அத்தோட
அதுவரைக்கும் கூடிக் கொலாவுன சொந்தப் பந்தங்க யாரும் அவரோட அப்பா, அம்மா இறந்துப்
போன காரியத்துக்குக் கூட வரல. துக்கம் விசாரிக்கப் போனா அவரு ஏதும் பணம் கேப்பாரோன்னு
நெனைச்சிக்கிட்டு துக்கம் விசாரிக்கக் கூட சொந்த பந்தங்களும் வராம போனதுல மனசெ வுட்டுட்டாரு
ரித்தேஸூ.
தன்னோட அப்பாவோட மாரடைப்பும், அம்மாவோட
தற்கொலைக்கும் காரணம் தான்தாங்ற குற்ற உணர்வு அவரோட மனசெ உறுத்த ஆரம்பிச்சிடுச்சி.
அவரால அதெ தாங்க முடியல. அவரு பொறந்து வளந்த மும்பை அப்போத்தாம் அவருக்கு முதன் முதலா
பிடிக்காமப் போயிருக்கு. மும்பயைிலயே ஒரு பைத்தியம் மாதிரி சுத்த ஆரம்பிச்சிருக்காரு.
கடைசியா வாடகைக்குக் குடியிருந்த வூடு அதுல இருந்த கொஞ்சநஞ்ச சாமானுங்க எல்லாத்தையும்
வுட்டுப்புட்டு ப்ளாட்பாரத்துல படுத்துக்கிறது, பசிச்சா கையேந்திப் பிச்சையெடுத்துச்
சாப்புடுறதுங்ற நெலமைக்கு வந்துப்புட்டாரு. மும்பை எவ்வளவு பெரிசுன்னு தெரியுற அளவுக்கு
ஒரு எடம் வுடாம நடோடி போல, ஒரு பைத்தியக்காரனெ போல, ஒரு பிச்சைக்காரன போல அலைஞ்சிருக்காரு.
ஒரு கட்டத்துக்கு மேல மும்பையத் தாண்டியும் நடக்க ஆரம்பிச்சிட்டாரு.
எங்க தப்புப் பண்ணோம்? ஏம் இப்டி பண்ணோம்?ன்னு
அவரு மனசு கேக்குற கேள்விக்கு அவரால பதிலச் சொல்ல முடியல. அந்தப் பதில சொல்ல முடியாம
இந்தியா முழுக்க அவரு ஏழு வருஷம் அலைஞ்சிருக்காரு. இதெ பத்தி அவரு சொல்றப்ப ஒரு நாயைப்
போல இந்தியா முழுக்கச் சுத்துனேம்பாரு. "கிட்டதட்ட நாய்தாம். நாய்க்கிட்ட காசிருக்கா?
நாய்க்கிட்ட பிச்சை வாங்கித் தின்ன திருவோடு இருக்கா? ஏழு வருஷமா போட்டுகிட்டு இருந்த
கோட்டு, சூட்டைக் கூட கழட்டல. பல நாளு குளிக்கிறதெ கெடையாது. எங்காச்சிம் தண்ணியப்
பாத்தா விழுந்து எழுந்திரிக்கிறது. அதுலயே எருமெ மாட்டப் போல படுத்திருக்கிறது. அந்த
தண்ணி நல்ல தண்ணியா சாக்கடை தண்ணியான்னு கூட பாக்குறதில்ல. நல்ல நாத்தம், கெட்ட நாத்தம்
எதுவும் புரியல. ஒடம்பெல்லாம் சொரி சொரியாப் போயி, முடியெல்லாம் சிக்குப் பிடிச்சி
பன்னாடை போல ஆகிப் போயி முகத்தெ மறைக்குற அளவுக்கு தாடியுமா, மண்டையில முடியுமா தண்ணியப்
பாத்தா நாயி மாதிரியே நக்கிக் குடிக்கிறதுன்னு என்னெய அப்போ பாத்திருந்தீங்கன்னா மெண்டலு
ஆபீஸ்ல சேக்குற நெலமையிலத்தாம் இருந்தேம். நார் நாராய்க் கிழிஞ்சிப் போன பிற்பாடும்
வேற ஒரு ஆடைய மாத்தாம அதுலயே அலைஞ்சித் திரிஞ்சி என்ன நெலயில இருக்கேம்னு எனக்கே புரியாம..."ன்னு
அப்பிடித்தாம் அவரோட அந்தக் காலகட்டத்த பத்தி அவரு சொல்வாரு.
*****
No comments:
Post a Comment