எஸ்.கே. .........த் துறை ஒன்றின் முக்கிய
ஊழியர். எஸ்.கே. அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் பணியாற்றும் துறை எத்துறை
என்பதும் அது சார்ந்துள்ள துறையும் இங்கு மறைக்கப்படுகிறது.
எஸ்.கே.வுக்கு ஆண்டிற்கு பனிரெண்டு நாள்கள்
தற்செயல் விடுப்பும், மூன்று நாள்கள் வரையறுக்கப்பட்டு விடுப்பும், ஆறு நாள்கள் சிறப்பு
தற்செயல் விடுப்பும், பதினைந்து நாள்கள் மருத்துவ விடுப்பும் அனுமதிக்கப்படுகின்றன.
சனி, ஞாயிறு விடுமுறைகள் மற்றும் அரசு விடுமுறைகள் தனி. வருடத்துக்கு 52 வாரங்கள் என
கணக்கில் எடுத்துக் கொண்டால் 52 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளைச் சேர்த்தால்
104 நாட்கள், விடுப்புகள் வகையறாவில் 36 நாட்கள், அரசு விடுமுறை தினங்கள் குறைந்த பட்சம்
10 நாட்கள் எனவும் கொண்டால் சுமாராக 150 நாட்கள் அதாவது வருடத்தின் பாதி அளவில் விடுமுறையில்
கழிக்க வாய்ப்புள்ளவராவார் எஸ்.கே.
சுமாராக ஆண்டில் பாதியான அரை ஆண்டு மட்டும்
பணியாற்றும் எஸ்.கே. அவர்கள் பத்து மணிக்குச் செல்ல வேண்டிய பணிக்கு பதினோரு மணி வாக்கில்
செல்பவர் ஆவார். பதினொன்றரை மணி அளவில் தேநீர் மற்றும் சிற்றுண்டிக்காக சிற்றுண்டியகம்
பக்கம் வருபவர் பனிரெண்டரை மணி வாக்கில் திரும்புகிறார். மிகச் சரியாக ஒரு மணி வாக்கில்
மதிய உணவு இடைவேளைக்காக உணவகம் பக்கம் வருபவர் மதியம் இரண்டு மணி அளவில் திரும்ப வேண்டிய
வேலைக்கு இரண்டரை அல்லது இரண்டே முக்கால் வாக்கில் செல்கிறார். மூன்றரை மணி அளவில்
சிற்றுண்டியகம் பக்கம் செல்பவர் மீண்டும் பணிக்குத் திரும்பும் போது நேரம் நாலே கால்
ஆகி விடுகிறது. இது குறித்து அவர் பலமுறை கடிகாரத்திடம் முறையிட்டுக் குறை சொல்லி
இருக்கிறார். கடிகாரம் கேட்பதாக இல்லை. வேகமாக ஓடி விடுகிறது. ஐந்து மணி அளவில் பணியிலிருந்து
வீடு திரும்ப வேண்டிய எஸ்.கே. நாலரைக்கெல்லாம் அபிட் ஆகி டாஸ்மாக்கில் தஞ்சம் புகுந்து
ஒன்பது அல்லது பத்து மணி வாக்கில் எப்படியும் வீடு திரும்பி விடுகிறார்.
ஒரு நாளில் ஆறு மணி நேரம் பணியாற்ற வேண்டிய
எஸ்.கே. சுமாராக மூன்றே முக்கால் மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரம் வரை பணியாற்றுவதிலிருந்து எப்படியோ தப்பித்துக் கொள்கிறார்.
இடைபட்ட இரண்டு மணி நேரங்களிலும் சகாக்களிடம் உசாவுதல், அளவளாவுதல், ஊர்க் கதைகள்,
உலகக் கதைகள் பேசி அலசுதல், வெற்றிலைப் பாக்குப் போட்டு புளிச் புளிச் என்று துப்புவதற்கு
நேரம் எடுத்துக் கொள்ளுதல் என்று கணிசமான நேரத்தை மென்று விழுங்கி விடுவதில் அவர்
அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ பணியாற்றுவது அதிகமாக இருக்கிறது. எஸ்.கே.வின் ஒருநாள்
பொழுது இப்படியாகக் கழிகிறது. விடுமுறை நாட்கள் கர்ண கொடூரமாக டாஸ்மாக்கில் மட்டுமே
கழிகிறது. காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக்கில் கழிக்க முடியாததற்காக காந்தியடிகளைத்
திட்டித் தீர்த்து விடுகிறார் எஸ்.கே.
எஸ்.கே. 20 ஆண்டுகள் பணியாற்றுகிறார். அதாவது இருபது
ஆண்டுகளில் 10 ஆண்டுகள் பணியாற்றுகிறார். என்றாலும் அவர் ஒரு நாளில் பணியாற்ற வேண்டிய
ஆறு மணி நேரத்துக்கு ஒரு மணி நேரமே பணியாற்றுகிறார் என்பதை கணக்கில் எடுத்துக் கொண்டால்
அவர் பணியாற்றியதாகக் கணக்கில் கொள்ளப்படும் பத்தாண்டுகளில் அவர் பணியாற்றியது ஒன்றரை
ஆண்டுகள் வரை தேற கூடும். ஆனால் எஸ்.கே. இருபது ஆண்டுகளுக்கான ஊதியத்தைப் பெற்றிருக்கிறார்.
இருபது ஆண்டுகளுக்குப் பின் இருபது ஆண்டுகள் பணியாற்றியதற்காக அதாவது ஒன்றரை ஆண்டுகள்
பணியாற்றிய போதும் இருபது ஆண்டுகள் பணியாற்றியதற்காகத் தற்போது ஓய்வூதியம் பெறுகிறார்.
அதாவது அதாகப்பட்டது யாதெனில் இருபது ஆண்டுகளின் முடிவில் விருப்ப ஓய்வு மூலம் ஓய்வு
பெற்று தற்போது ஓய்வூதியம் பெறுகிறார்.
எஸ்.கே. விருப்ப ஓய்வு பெறுவதற்கான அந்தச்
சம்பவ நிகழ்வு முக்கியமானது. அடுத்த அத்தியாயத்தில் நாம் அதை நுகர்ந்தாக வேண்டும்.
நுகர்வோமாக!
*****
No comments:
Post a Comment