29 Jan 2020

வேட்டியில வட்ட திட்டு!



செய்யு - 342

            குமரு மாமாவுக்கு ரெண்டு குழந்தை ஆயிடுச்சு. ரெண்டுமே ஆம்பளைப் புள்ளைங்களா அமைஞ்சிடுச்சு. அது ஒரு ஒறுப்ப கொடுத்திருக்கு குமரு மாமாவோட போக்குல. "நமக்கென்னடா ரண்டும் ஆம்பளைச் சிங்கம்ங்க. பொட்ட புள்ளையையா பெத்துப் போட்ருக்கேம்? எவங் கையி காலுல்ல வுழுந்து கட்டிக் கொடுக்குறதுக்கு? நம்ம பொண்ண கட்டிக்கோன்னு ரண்டு பேரு கையிலு காலுல்ல வுழுந்து கட்டிக்கிறாப்புல ரண்டுல்ல கெடக்குதுங்க." அப்பிடின்னு குமரு மாமா எதிருபடுற ஆளுங்ககிட்ட சலம்பிக்கிட்டுத் திரியுறதாவும் கேள்வி. பெத்த ரெண்டு புள்ளைங்கள்ல மூத்தப் புள்ளைய அருவாமணியில மாமனாரு வூட்டுல தூக்கிட்டுப் போயிட்டாங்க. ரண்டாவது புள்ளைய வளக்குற பொறுப்புத்தாம் குமரு மாமாவுக்கும் மேகலா மாமிக்கும். அந்தப் புள்ளையை ரெண்டரை வயசு ஆனவுடனே தூக்கி நர்சரி பள்ளியோடத்துல தூக்கிப் போட்டதுல அந்தப் புள்ளையை வளக்குற செரமம் இல்லாம போயிடுச்சு அவுங்களுக்கு. காலையில எட்டு மணி வாக்குல வர்ற வேன்ல தூக்கிப் போட்டாக்க சாயுங்காலம் நாலு மணி வாக்குலத்தாம் அந்தப் புள்ளை வூடு வந்து சேரும். திங்கட் கெழமை ஆரம்பிச்சா சனிக் கெழமை வரைக்கும் அதே பாடுதாம். ஞாயித்துக் கெழமை ஒரு நாளுதாம் புள்ளைய அவுங்க பாத்துக்க வேண்டிய பொறுப்பு.
            குமரு மாமாவோ, மேகலா மாமியோ சனங்கள யாரையும் வூட்டுக்குள்ள அண்ட வுடறதில்ல. சொந்தக்கார சனங்களோ, அக்கம்பக்கத்து சனங்களோ யாரா இருந்தாலும் மூஞ்சு முறிஞ்சிப் போயிடுறாப்புல பேசிப்புடுறாங்க அல்லது அப்படி ஆயிடுறாப்புல நடந்துக்கிடுறாங்க. குமரு மாமா வூட்டுப்பக்கம் அதால யாரும் பழக்கம் கெடையாது. யாரும் அதோட வூட்டுக்கு வந்துப் போறது கெடையாது. வூட்டுக்கு எதுக்கே பக்கத்துல இருக்குற பாஞ்சாலம்மன் கோயிலுக்கு வர்றவங்க போறவங்க குமரு வூட்டுல பேசுனா பொழங்குனாத்தாம் உண்டு. பாஞ்சாலம்மன் கோயிலுக்கு வர்ற சனங்க எல்லாம் பெருங்கைகதாம். அவுங்களோட மட்டுந்தாம் மேகலா மாமி பேசுறது. மித்தபடி, உள்ளூர்லேந்து போற சனங்க யாரும் பாஞ்சாலம்மன் கோயிலுக்குப் போறதோட சரி, குமரு மாமா வூட்டுப்பக்கம் அண்ட மாட்டாங்க. வைத்தி தாத்தாவும் சாமியாத்தாவும் கொழந்தை குட்டிகளோட ஜே ஜேன்னு இருந்த வூட்டுல இப்போ அவுங்க ரெண்டும் கொழந்தை ஒண்ணும்னு மூணு பேருதாம் இருக்காங்க. சாமியாத்தா இருந்த வரைக்கும் வூட்டுக்கு சனங்க வந்துகிட்டேதாம் இருக்கும்ங்க. அதுகிட்ட குறி கேக்குறதுக்கும், துன்னூறு போட்டுகிட்டுப் போறதுக்கும். இப்போ நெலமை அப்படியே தலைகீழா ஆயிப் போச்சு.
            குமரு மாமா வூட்டுக்கு வெளியே கிரில் கேட்டுப் போட்டு எந்நேரம் பூட்டியேத்தாம் கெடக்கு. அந்த கேட்டு குமரு மாமா வர்றப்போ, போறப்போ திட்டம் பண்ணி வெச்ச மாதிரி தொறந்துக்குது, மூடிக்குது. ஒரு கம்ப்யூட்டர்ர வெச்சி திட்டம் பண்ணி வெச்சா கூட அம்மாம் துல்லியமா தொறக்குமா? மூடுமான்னு தெரியல. அம்மாம் துல்லியமா தொறக்குறதும், மூடுறதும் நடக்குது.
            வடவாதியில குமரு மாமா பட்டறைக்குத்தாம் நல்ல ஓட்டம். குமரு மாமா வேலைகளப் பிடிக்கிறதுல்ல கெட்டிக்கார ஆளு. ஆளுங்களுக்குத் தகுந்தாப்புலத்தாம் வேல. காசைக் கொறைச்சுக் கொடுத்தா அதுக்குத் தகுந்த வேல. அதிகமா கொடுத்தா அதுக்குத் தகுந்த வேல. எந்த வேலையையும் வுட்டுப்புடாது, தட்டைக் கழிச்சிப்புடாது. இந்தக் காசுக்கு வேலைய முடிக்க முடியாதுன்னு சொல்லாது. அந்தக் காசுக்கு எந்த அளவுக்கு ஒட்டி ஒப்பேத்த முடியுமோ அதெ செஞ்சுக் கொடுத்துப்புடும். இந்த ஒத்த காரணத்தாலயே அதோட பட்டறையில கூட்டம் இருந்துகிட்டே இருக்கு.
            மின்னாடியெல்லாம் வேலைன்னா வேலை கொடுக்குறவங்க வூட்டுக்குப் போயி வேலையப் பாத்துட்டு இருந்த குமரு மாமா இப்போ எந்த வேலைன்னாலும் பட்டறையில கொண்டாந்து போடுங்கன்னு சொல்லிப்புடறதா கேள்வி. இதெ பாத்துப்புட்டு, "எந்த தச்சுவேலக்காரம்டா இப்போ வூட்டுல வந்து வேலயப் பாக்குறாம்? அவனவனும் ஒரு பட்டறையப் போட்டுக்கிட்டு அஞ்ஞ கொண்டாந்து சாமானுங்களப் போட சொல்றானுவோ! அஞ்ஞயே போட்டுக்கிட்டு செஞ்சி முடிச்சி எடுத்துட்டுப் போங்கங்கறானுவோ! நாட்டுல அநியாயம் பெருத்துப் போயிக் கெடக்கு! சாமானுங்களக் கொண்டு போயி போடுறதுக்கு டாட்டா ஏஸ்காரனுக்கு ஒரு கூலி. அதெ எடுத்தாந்து வூட்டுக்கு வாரதுக்கு ஒரு கூலின்னு ஆயிப் போயிடுது. தச்சுக்கார பயலுகளுக்கும், டாட்டா ஏஸ்கார பயலுகளுக்கும் ஏதோ கனெக்சன் இருக்குப் போலருக்கு. மின்னாடியெல்லாம் வூட்டுக்குக் கட்டுச்சோத்த கட்டிக்கிட்டு வந்து வேலய செஞ்சுகிட்டு கெடந்து பயலுகளுக்கு இப்படி ஆயிப் போச்சு கொடுப்பனையே!"ன்னு அது ஒரு பேச்சா கெடக்குது ஊருக்குள்ள.

            குமரு மாமா பட்டறைக்கு எதுத்தாப்புல நாலு கடை தள்ளித்தாம் வீயெம் மாமாவும் இப்போ பட்டறையப் போட்டிருக்கு. கூட்டம்னு பாத்தா குமரு மாமாவுக்குத்தாம். அதுகிட்ட ரெண்டு தச்சு ஆசாரிங்க எந்நேரத்துக்கும் வேல பாத்துக்கிட்டு கெடக்குறாங்க. அப்படியும் வர்ற வேலைங்கள அதால சரியான நேரத்துக்கு முடிச்சிக் கொடுக்க முடியாம போயிடுது. வேலையும் ராப்பகலா நடந்துகிட்டு கெடக்குது. குமரு மாமாவுக்கு ரண்டு மணி நேரம் வேலை பாத்தாக்கா ஒரு மணி நேரத்துக்கு வூட்டுக்கு வந்தாவணும். வூட்டுக்கு வந்து டீயோ, பட்சணமோ சாப்பிட்டுட்டுப் போவும். அப்படி அது வூட்டுக்கு வர்றப்போ, போறப்போ பட்டறையில இல்லன்னு வூட்டுல போயி பாத்துடக் கூடாது. அப்படி வூட்டுக்கு வந்தா, போனா அதுக்குக் கெட்ட கோவம் வந்துப்புடுது. "சித்த நேரம் பட்டறையில நின்னா கொறைஞ்சாப் போயிடுவீங்க! வூட்டுக்கு ஒரு கறி காயி சாமானுங்கள கூட வாங்கியாந்து போட வுட மாட்டேங்றீங்களே!"ன்ன சத்தம் போடுறதா சொல்லிக்கிறாங்க. பட்டறையில எம்மாம் நேரம் வேணாலும் பாத்துக்கலாம், பேசிக்கலாம், வூட்டுல மட்டும் ம்ஹூம் ஆகவே ஆகாது.
            குமரு மாமா வூட்டுக்கு எதுத்தாப்புலத்தான வீயெம் மாமா வூடு. வீயெம் மாமா வூட்டு சன்னலேந்து பாத்தாக்க குமரு மாமா வூட்டோ பெட்ரூம் நல்லா தெரியும் போலருக்கு. இது வீயெம் மாமா வூட்டுல இருக்குற கோகிலா மாமிக்குத் தெரியுது. இதெ குமரு மாமாவும், மேகலா மாமியும் எப்பிடி கவனிக்காம வுட்டாங்களோ தெரியல. ஊரு முழுக்க சங்கதி தெரிஞ்சி சந்திச் சிரிச்ச பிற்பாடுதாம் பெட்ரூமுக்குத் திரைச்சீலையப் போட்டு கதவச் சாத்த ஆரம்பிச்சிதுங்க குமரு மாமாவும், மேகலா மாமியும்.
            குமரு மாமாவுக்கு ரண்டு புள்ளைங்க ஆன பிற்பாடும், வீயெம் மாமாவுக்குக் கொழந்தைங்க ஒண்ணும் ஆவல. அது ஒரு ஆவலாதியா போச்சுது வீயெம் மாமாவுக்கும் கோகிலா மாமிக்கும். ரெண்டு பேரும் போவாத ஊரில்ல, கும்புடாத சாமியில்ல, பாக்காத டாக்கடருங்கயில்ல. என்ன பண்ணியும் ஒரு புழு பூச்சி உண்டாவுல கோகிலா மாமி வவுத்துல. வீயெம் மாமா இதுக்காக டாக்கடருங்ககிட்ட அலைஞ்சி என்னென்னம்மோ சோதென அது இதுன்னு பண்ணி ரண்டு லட்சத்து பாஞ்சாயிரத்துக்கு ரூவாய்க்கு மேல செலவாயிடுச்சுன்னு அதுக்கான ரசீதுகள பக்காவா வெச்சி ஆளாளுங்ககிட்ட காட்டிக்கிட்டு கெடந்து அலையுது.
            அந்த ஏக்கமோ என்னவோ தெரியல, கோகிலா மாமி மாடு வளர்க்க ஆரம்பிச்சுச்சு. பூனை வளர்க்க ஆரம்பிச்சுச்சு. வூடு பூரா பூனை குட்டிகளா அலையுற அளவுக்கு நெலமை ஆயிச் போச்சு. வூட்டுக்கு வெளியில வந்தா மாடுகளா இருந்திச்சு. ஒரு நேரத்துல வைத்தி தாத்தா வூடு அப்படித்தாம் இருந்துச்சு கொல்லை பூராவும் மாடுகளா. அப்பிடி இப்போ இருக்கு வீயெம் மாமா வூடு. ஆனா அப்போ வைத்தி தாத்தா வூட்டுல இருந்த அளவுக்குப் புள்ளைங்கத்தாம் இல்ல. மாடுகள்ள ஒரு காளைக் கண்ண வளத்ததுல அது இப்போ காளைக்குப் போடுற அளவுக்கு வந்து நின்னு அது ஒரு வருமானம் பாத்துக் கொடுக்குது கோகிலா மாமிக்கு. பசு மாடு செனைப் புடிக்கிறதுக்கு செனை ஊசி போடுறவங்களும் இங்க இருக்காங்க. அத்தோட காளைக்குப் போடுறவங்களும் இங்க இன்னும் கொறைஞ்சிடல. அவுங்க எல்லாம் வீயெம் மாமா வூட்டுக்கு காலங்காத்தால‍ படையெடுக்குறாப்புல கெளம்பி வந்து காளைக்குப் போட்டுட்டு நூத்து ரூவா தாள கையில திணிச்சிட்டுப் போறாங்க. காளைன்னா அதுவும் பெருங்காளையா நிக்குது. கொழந்தை இல்லாத ஏக்கமோ என்னவோ தெரியல. அவுங்க ரெண்டு பேரும் காளை மாட்டை அப்படிப் பாத்துப் பாத்து வளக்குறாங்க. ஊருல அது ஒரு பேச்சாவும் ஆவுது பாருங்க, "இந்த வீயெம் பயெ வூட்டுக் காளை ஊருக்கே கன்னுக்குட்டிகளா போட்டு வுடுது. அவ்வேம் வூட்டுல ஒரு கொழந்தை குட்டி ஆவுதா பாருங்க!" அப்பிடின்னு.
            நாளுக்கு நாளு கொழந்தை இல்லாத ஏக்கம் கோகிலா மாமிக்கு அதிகமாப் போச்சுது. பக்கத்து வூடுதானே குமரு மாமா வூடு. கட்டுன புருஷனோட அண்ணங்காரரு வூடுன்னாலும், கொழுந்தனாரு வூடுன்னாலும் பேசிப் பொழக்கம் இல்லாத வூடு. கட்டுன கொஞ்ச நாள்லயே முட்டிக்கிட்டு எதிரும் புதிருமா ஆன வூடு. இருந்தாலும் பள்ளியோடம் விட்டு கொழந்தை வந்த பிற்பாடு அதோட சத்தம், அழுகை, சிரிப்பு இதெல்லாம் கோகிலா மாமிய குமரு மாமா வூட்டைக் கவனிக்க வைச்சுது, ஒட்டுக் கேக்க வைக்குது. ஆரம்பத்துல கொழந்தை இருந்த நேரத்துல மட்டும் கவனிச்சிக்கிட்டும், ஒட்டு கேட்டுகிட்டும் இருந்த கோகிலா மாமிக்கு இப்போ அது ஒரு பழக்கமா போயி எந்நேரமும் குமரு மாமா வூட்ட கவனிக்கிறதும், ஒட்டுக் கேக்குறதும் வேலையா போயிடுச்சு.
            அன்னிக்கு ஒரு நாளு வூட்டு ஹால்லேந்து பாக்குறப்ப குமரு மாமா வூட்டு பெட்ரூமோட சன்னலு கதவு தொறந்து கெடக்குறதும், இங்கேயிருந்து பாக்குறப்போ பெட்ரூமு நல்லா தெரியுறதும் கோகிலா மாமி கண்ணுல படுது. அது வீயெம் மாமா வேலைக்குப் போன பிற்பாடு ஒத்த ஆளால்ல வூட்டையும், வூட்டுல இருக்குற மாடு கண்ணுகளையும், பூனைகளையும் பாத்துக்கிட்டு கெடக்கு. அத்தோட மனசுல கொழந்தை இல்லாத ஏக்கம் வேறயா. அதெ பாக்கப் பாக்கத்தாம் சில விசயங்கள் அதுக்குப் புரியுது.
            சரியா ரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவெ குமரு மாமா வருது. வெளியில கிரில் கேட்டு தொறக்குது, மூடுது. குமரு மாமா உள்ளார வந்ததும் நெலைக்கதவு தாழ்பாளு திறந்து மூடுது. அப்புறம் பெட்ரூமு கதவு தொறக்குறது, மூடுறது எல்லாமும் நடக்குது. குமரு மாமாவும் மேகலா மாமியும் முயங்கிக்கிட்டுக் கெடக்குறது நல்லாவே தெரியுது கோகிலா மாமிக்கு இங்க அதோட வூட்டு ஹால்லேந்து பாக்குறப்போ. எத்தனை நாளு அதெ பாத்துப் பாத்து அதுல ஒரு திருப்திய கண்டுகிட்டு அது கெடந்துச்சோ தெரியல. ஒரு நாளு அதெ மனசுல வெச்சிக்க முடியாம மேக்கால பக்கத்துல இருக்குற சயிப்புனிசாகிட்ட சொல்லப் போயி, சயிப்புனிசா அதோட புருஷங்காரங்கிட்ட சொல்லப் போயி விசயம் ஊரு சுத்தி வந்துப்போச்சு. விசயம் குமரு மாமா பட்டறையில வேலை பாக்குற தச்சு ஆசாரிங்க வரைக்கும் வந்து அப்பத்தாம் அவுங்க ரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவே வூட்டுக்குப் போயிட்டு வர்ற குமரு மாமாவோட வேட்டிய கவனிக்கிறாங்க. வேட்டியில திட்டு திட்டா வட்டமா தெரியுது. அதெ பாத்துப்புட்டு அவுங்களும் கமுக்கமா சிரிச்சிக்கிறாங்க. என்னத்தாம் சொந்தப் பொண்டாட்டிக்காரிகிட்ட படுத்துட்டு வந்தாலும் விசயம் வெளியில தெரியுறப்ப அது ஒரு மாதிரியாத்தானே போவுது. அவுங்களும் இந்த விசயத்த ரொம்ப நாளு வரைக்கும் குமரு மாமாகிட்ட சொல்லாம கொள்ளாம சிரிக்கிறதும், அமுக்குறதுமா இருந்திருக்காங்க.
            நம்ம மாடக்கண்ணு மளிகைக் கடையில ஒரு நாளு சாமாஞ் செட்டுக வாங்குறப்பத்தாம் மாடக்கண்ணு மூலமா விசயம் இதுன்னு தெரிஞ்சிருக்கு குமரு மாமாவுக்கு. அதுக்குப் பெறவுதாம் பெட்ரூமு சன்னலு தொறந்து கெடக்கறதெ கவனிச்சி அதெ சாத்தி அதுக்கு உள்ளார திரைச்சீலையப் போட்டு ஏற்பாடு பண்ணியிருக்கு குமரு மாமா. அதுக்குப் பெறவும் அந்தப் பழக்கத்த குமரு மாமா  வுட்ட பாடாயில்ல. ரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவே போறதெ மூணு மணி நேரத்துக்கு ஒரு தடவெயா போறதா மட்டும் மாத்தியிருக்கு. மேகலா மாமி பட் பட்டுன்னு பெட்ரூமு சன்னலு கதவெ மூடியிடறதால, கோகிலா மாமி இப்போ மூடிக் கெடக்குற சன்னலு கதவெ ஏக்கத்தோட பாத்துக்கிட்டுக் கெடக்கு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...