28 Jan 2020

சங்கு சக்கர சாமி வந்து சிங்கு சிங்குன்னு ஆடிச்சாம்!



செய்யு - 341

            சின்னமுத்து வாத்தியாருக்கு ஒடம்பு தெம்புல்லாம் வத்திப் போச்சி. அந்தாண்ட இந்தாண்ட நகர்ந்துப் போறது கூட அவருக்கு செரமமாப் போச்சி. அவ்வளவு செரமத்துலயும் அவரால சரக்கு அடிக்காம இருக்க முடியல. அப்பிடி இப்பிடின்னு எப்படியோ போயி சரக்க அடிச்சிட்டுப் போதை தாங்க முடியாம ஆர்குடியில அங்கங்க விழுந்து கெடக்க ஆரம்பிச்சாரு. தெரிஞ்சவங்க, பாத்தவங்க அவர்ர தூக்கி ஆட்டோவுல போட்டு வுட்டு வீட்டுக்கு அனுப்பி வுடுவாங்க. வூட்டுல இருக்குறவங்களுக்கு இது ஒரு ரோதனையாப் போச்சுது. பாத்தாங்க வூட்டுல இருக்குறவங்க, அவர்ர வூட்டுக்குள்ள போட்டு பூட்டி வெச்சும் பாத்தாங்க. அப்படியும் அவருக்கு இருந்த லேவிடியான ஒடம்புக்கு எப்படியோ மாடியேறி அங்கயிங்க குதிச்சி வெளியில வந்து சரக்க அடிக்கிறதெ அவரால விட முடியல.
            அவரு வூடு நல்ல மாடி வூடு. வூட்டுக்கு மின்னாடி நாலு வூடுகள கட்டி வாடகைக்குல்லாம் வுட்டுருக்காரு. நல்ல பணக்கார குடும்பத்துல பொறந்தவருதாம் சின்னமுத்து வாத்தியாரு. அதாலயே ரொம்ப செல்லமா வளர்ந்தவரு. பேருக்கு ஒரு வேலையில இருக்கணும்னு வாத்தியாரு வேலைக்குப் படிச்சாதாவும், தன்னோட நேரம் படிச்சு முடிச்சு நாலஞ்சு வருஷம் ஊரு சுத்த கூட வாய்ப்பு இல்லாம, ஒடனே வேலை கெடைச்சி வேலைக்கு வர்ற மாதிரி ஆயிட்டதாவும் வாத்தியாரு வேலைக்கு வந்ததெ பத்தி வேடிக்கையா சொல்லுவாரு.
            ஆர்குடி பக்கம் போனாக்கா விகடு சின்னமுத்து வாத்தியார்ர வூட்டுல போயிப் பாக்காம வர்றதில்ல. அப்பிடிப் போயி பாக்குறப்பல்லாம் அவருக்கும் அவரோட பொண்டாட்டிக்காரவங்களுக்கும் சண்டைன்னா சண்டெ இதுவரைக்கும் நடந்திருக்கிற ரெண்டு உலகப் போருங்க தோத்துப் போயிடும் போலருக்கு, அப்பிடிச் சண்டெ பிடிச்சிட்டு நிக்குறாங்க. சமயத்துல ஏம்டா போயிப் பாக்குறோமோன்னும் தோணுது விகடுவுக்கு. சின்னமுத்து வாத்தியாரு அவரோட பொண்டாட்டிக்காரவுங்க மேல கொறையச் சொல்றாரு. அவரோட பொண்டாட்டிக்காரவுங்க தங்கம்மா இருக்காங்களே அவுங்க, சின்னமுத்து வாத்தியாரு மேல கொறையச் சொல்றாங்க. யாரு சொல்ற கொறைக்கு என்ன பதிலச் சொல்றதுன்னு அவுங்க பேசப் பேச பேசாம உக்காந்திருப்பாம் விகடு. "ன்னப்பா அப்பிடியே உக்காந்திருக்க எதாச்சிம் ஒரு பதிலெச் சொல்லு!"ம்பாரு சின்னமுத்து வாத்தியாரு. "எங் கூட பொறக்காத யம்பீ போல இருக்கீங்க! நீஞ்ஞத்தாம் இதுக்கு ஒரு ஆக்கினைய சொல்லணும்!" அப்பிடிம்பாங்க தங்கம்மா.
            விகடு யோசிச்சு யோசிச்சுப் பாத்து, "கல்யாண வயசுல ஒரு பொண்ணு, புள்ளே இருக்காங்க. நமக்குக் கல்யாணமே ஆவல. ஒங்களுக்கு நாம்ம என்னாத்தெ பதிலச் சொல்றது? நீஞ்ஞத்தாம் நமக்கு எதாச்சிம் சொல்லணும்!" அப்பிடிம்பாம்.
            "யப்பா! அந்தக் கதெயெ வேற ஞாபவம் பண்ணிட்டீயே?"ன்னு அதுக்கு ஒரு அலுப்பு அலுத்துப்பாரு சின்னமுத்து வாத்தியாரு. விகடு ஒண்ணுந் தெரியாம முழிச்சா, "அத்தெ ஏம்ப்பா கேக்குறே? ஒரு வாரமா வூட்டுலயே யாரும் இல்லப்பா! எல்லாம் வூட்டுப் பூட்டிட்டுத் தலைமறைவா ஆயிட்டோம்பா! போலீஸூ தேட ஆரம்பிச்சிடுச்சு. பெறவு அங்க இங்க ஆளெ பாத்து ஒரு வெதமா சமாதானமாப் போயி இப்பத்தாம் ரண்டு நாளா வூட்டுல இருக்கேம். போன வாரம் வந்திருந்தே, எஞ்ஞள வூட்டுல பாத்திருக்க முடியாது. பூட்டித்தாம் கெடந்திருக்கும்!" அப்பிடின்னு ஒரு பகீர்ர கெளப்பி வுடுவாரு.
            "ம்ஹூம்! அந்தக் கரும கன்றாவிக் கதெயே சொல்றப்பல்லாம் நாம்ம இஞ்ஞ இருக்க முடியாது. யம்பீ வேற முழிக்கிறாப்புல. ஒண்ணும் புரியாம மண்டெய பிய்ச்சிப்பாப்புல. நீஞ்ஞ சொல்லுங்க. நாம்ம கெளம்புறேம்!"ன்னு கெளம்பிடுவாங்க தங்கம்மா.
            "நம்ம பய இருக்கானே அவ்வேம் நாம்ம வாலிபத்துல இருந்ததெ வுட நாலு மடங்கு இருக்காம்ப்பா! செட்டு சரியில்லே. அஞ்ஞ இஞ்ஞ சுத்திக்கிட்டு பெரச்சனைய கெளப்பிட்டு வர்றாம். ஆம்பள புள்ளைங்க கூட அடிதடின்னு கெடந்தவேம் இப்போ பொம்பளைங்க வெவகாரத்துலயும் எதாச்சிம் பண்ணிட்டு வந்திடுறாம். ஒண்ணுந் பண்ண முடியல. நாமளே முடியாம கெடக்கிறேம். இதுல அவ்வேம் வேற படுத்துறாம். ஒரு பத்து நாளிக்கு மின்னாடி ஆர்குடி பஸ் ஸ்டாண்டுல ஒரு பொம்பள புள்ளயோட பட்டக்ஸ்ல அடிச்சிப்புட்டாம் போலருக்கு. அந்தப் புள்ள போலீஸ்ல போயி கம்ப்ளெய்ண்ட் பண்ணிப்புட்டு. வெவரம் தெரிஞ்ச பய அவ்வேம் பாட்டுக்குத் தப்பிச்சிப் போய்ட்டாம். வெவரத்து வூட்டுல சொல்லணும்ல. நாஞ்ஞ என்னத்தெ கண்டோம். வூட்டுல போலீஸூ வந்து நிக்கிது. வெசாரணைக்கு வரணும்னு சொல்லிப்புட்டாங்க. நாஞ்ஞ என்ன பண்ணோம்ன்னா நைசா வெசாரணைக்கு வர்றோம்னு சொல்லிப்புட்டு போலீஸூ அந்தப் பக்கமா போவ, நாஞ்ஞ கெளம்பி வூட்டைப் பூட்டிக்கிட்டு இந்தப் பக்கமா போயி தலைமறைவா ஆயிட்டோம். ரொம்ப அசிங்கமா போயிருக்கப் பாத்திச்சி. பெறவு அந்தப் பொண்ணு வூட்டுக்குப் போயி அதோட கையில காலுல வுழுந்து கம்ப்ளெய்ண்ட்ட வாபஸ் வாங்க வெச்சி இப்பத்தாம் வூட்டுப்பக்கம் வந்து வெவகாரம் வெளியில தெரியாம அமுக்கி வெச்சி நடமாடிட்டு இருக்கேம்! பொண்ணு ஒண்ணுந்தாம்ப்பா நல்ல வெதமா மெட்ராஸ்ல இன்ஜினியரிங் படிச்சிட்டு இருக்கே. மித்த ஒண்ணாலயும் நமக்கு எந்தப் பிரயோசனமும் இல்லே." அப்பிடிங்கிறாரு சின்னமுத்து வாத்தியாரு.

            விகடுவுக்கு ஏம்டா அவரோட வூட்டுப்பக்கம் வந்தோம்ங்ற மாதிரித்தாம் இருக்கு. ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கொரு தரம் பள்ளியோடம் வர்றாரு சின்னமுத்து வாத்தியாரு. பள்ளியோடத்து பெரிய வாத்தியார்ங்ற முறையில சில விசயங்கள அவருகிட்ட கலந்துக்காம செஞ்சிடக் கூடாதுங்றதுக்காக இப்பிடி ஆர்குடி பக்கமா வர்றப்ப அவரு வூட்டுப் பக்கம் போற மாதிரி ஆயிடுது. அப்படிப் போயி பள்ளியோடத்து வெவகாரத்த ஒண்ணு கூட பேச முடியாம, அவரோட வூட்டு வெவகாரங்கள அவரு பேச, அதெ கேட்டுப்புட்டு வர்ற மாதிரித்தாம் நெலமை ஆயிப் போயிடுது. கொடுமெ கொடுமென்னு கோயிலுக்குப் போனாக்க அங்க ஒரு பிடாரி கடவுளெ பிடிச்சிக்கிட்டு சிங்கு சிங்குன்னு ஆடிச்சாம்னு சொல்லுவாங்க யில்ல, அப்பிடி ஆயிப் போயிடுது நெலமெ. அவரு அவரோட வூட்டு வெவகாரங்கள சொல்ல சொல்ல பள்ளியோடத்து சமச்சாரங்களே விகடுவுக்கு மறந்து போயிடுது.
            இப்போ சின்னமுத்து வாத்தியார்ர பள்ளியோடத்துக்குக் கொண்டு வர்றதுக்கு ஒரு கார்ர வெச்சித்தாம் கொண்டு வர்றாங்க அவர்ர. இருந்த அத்தனெ விடுப்புகளயும் அவரு எடுத்துட்டாரு. மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்புன்னு எல்லாத்தையும் போட்டு கடைசியில ஊதியமில்லா விடுப்பு வரைக்கும் எடுத்தாச்சி. ஒரு நாளைக்குப் பள்ளியோடம் வந்தார்ன்னா தொடர்ச்சியா நாளைஞ்சு நாளுக்கு வருவாரு. அதுவும் கார்லத்தாம். அப்பிடி வர்றதக்குத்தாம் அவரோட ஒடம்பு ஒத்துழைக்குது. வந்தா அவரு பாட்டுக்கு நாற்காலியப் போட்டு உக்காந்திடுவாரு. பெறவு ஒரு மாசம், ரெண்டு மாசம் வரைக்கும் ஆளெ பாக்க முடியாது.
            இப்போ அவருக்கு நல்ல வெதமா பாடத்த நடத்தணும்னு ஆசையா இருக்கு. ஆனா நடத்த முடியல. ஒரு வாயித் தண்ணிக் குடிக்கணும்னாலும், ஒரு வேள சாப்பாடு சாப்பிடணும்னாலும் மத்தவங்களோட உதவி அவருக்குத் தேவைப்படுது. ஒண்ணுக்கு ரெண்டுக்கு போவணும்னாலும் அவர்ர தூக்கி வெச்சிக் கொண்டாந்து வுட வேண்டியதா இருக்கு. இதுக்கே இவ்வளவு கஷ்டப்படுற ஆளுக்கு சரக்குன்னா மட்டும் எப்படியோ ஒடம்பு வேலை செஞ்சி யாருக்குத் தெரியமா, எப்படியோ ஓடிப் போயி ஒரு குவார்ட்டர்ர அடிச்சிடுறார்தா அவரோட பொண்டாட்டிக்காரவுங்க தங்கம்மா சொல்லிச் சொல்லி அழுவுறாங்க.
            வூட்டுல இருக்குற புள்ளைங்க, பொண்டாட்டிங்க அழுவ அழுவ தான் பண்ணுன தப்புத்தாம் தன்னெப் போட்டு இப்பிடி அமுத்துதோன்னு அவருக்குத் தோண ஆரம்பிச்சிடுச்சி. பாத்தாரு சின்னமுத்து வாத்தியாரு விகடுவெ கூப்புட்டு, "கடெசி காலத்துல பேர்ரு வெளங்கச் சாவணும்னு நெனைக்கிறேம். எளந்தாரிப் பயலா இருக்கீயா நீயி! பள்ளியோடத்த நல்ல வெதமா கொண்டு வாரணும். நம்மால ஆவுறதுக்கு ஒண்ணுமில்ல. பள்ளியோடத்த நீயி நிமுத்திப்புட்டீன்னா நம்மோட கெட்ட பேரெல்லாம் அதுல அடிச்சிட்டுப் போயிடும். யப்பா பாத்து அதெ மட்டும் பண்ணு. ஒன்னோட இஷ்டத்துக்குப் பள்ளியோடத்தெ நீயி ன்னா வேணாலும் பண்ணி மேலுக்குக் கொண்டு வா. நாம்ம இன்னும் ஒரு மாசமோ, ரண்டு மாசமோத்தாம் உசுரோட இருப்பேம்னு நெனைக்கிறேம். ஒடம்புல உசுர தாங்கி வைக்கிற அளவுக்கு தெம்புயில்ல. இன்னிக்கே உசுர வுட்டுப்புட்டு போனாக்கா தேவலாம்னு இருக்கு." அப்பிடின்னாரு.
            அப்பத்தாம் விகடு சொன்னாம், "அரசாங்கத்துல ஒதுக்குன பணமெல்லாம் எடுக்காம கெடக்குங்கய்யா. நீஞ்ஞ கையெழுத்து போட்டுக் கொடுத்தீங்கன்னா எடுத்துப்புடலாம். அதெ எடுத்தாத்தாம் இப்போ இருக்குற முறைக்குத் தகுந்தாப்புல சில ஏற்பாடுகள பண்ணலாம்!" அப்பிடின்னு.
            "எஞ்ஞ எத்தனெ கையெழுத்தப் போடணும்னு சொல்லு. போட்டுத் தர்றேம்ப்பா!" அப்பிடின்னாரு சின்னமுத்து வாத்தியாரு. சொன்னதோட இல்லாம இவ்வேன் சொல்ற எடமெல்லாம் கையெழுத்த போட்டுத் தந்தாரு. அதுக்கு ஒரு நாளு பேங்குல போயி நின்னு பணத்தெ எடுத்து வந்தாம் விகடு.
            அட்டைகள வைக்க டிரேங்கத்தாம் நெறைய வாங்க வேண்டியிருந்திச்சி. அதெ கணக்குப் பண்ணி தேவையான டிரேங்கள வாங்குனாம். அந்த டிரேய்கள வைக்க அடுத்ததா ஷெல்ப்ப தயாரு பண்ண வேண்டியதா இருந்திச்சி. மித்த மித்த பள்ளியோடத்துலப் போயி பாத்தப்போ அவுங்க ராக்கை மாதிரி அடிச்சி வெச்சி அதுல டிரேய்கள வெச்சிருந்தாங்க. அதெ பாத்ததும் இவனுக்கு வேற மாதிரியான யோசனை தோணுச்சி. பழக்கடைகள்ல பழங்கள அடுக்கி வெச்சிருப்பாங்க யில்ல வரிசையா படிக்கட்டுல வெச்சிக்கிற மாதிரி. அந்த மாதிரி ஷெல்ப்பா செஞ்சி வெச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சி. அந்த மாதிரி செஞ்சி வெச்சா புள்ளைங்களுக்கும் பாக்க அம்சமா இருக்குன்னு விரும்பி வந்து அட்டைகள எடுக்க தோதா இருக்கும்னு அவ்வேம் நெனைச்சாம். அதுக்கு அடிக்கிற செல்ப்ப கொஞ்சம் சாய்ச்சி வெச்சி அடிச்சி பின்னால தாங்கலுக்கு பலகையையோ, சட்டத்தையோ வெச்சி அடிக்கணும். அப்பிடி அடிச்சிட்டா ஷெல்ப்பு சாயும்ங்ற பயம் கூட இருக்காது. ஒரு வேளை ஷெல்ப்பு சாய்ஞ்சி புள்ளைங்க மேல வுழுந்துடுமோன்னோ, புள்ளைங்க தள்ளி வுட்டுப்புடுமோன்னு பயப்படல்லாம் வேணாம். அப்படி ஒரு செளகரியமும் இருக்கு அதுல. அதால அப்பிடிச் செய்யுறதுதாம் சரின்னு முடிவு பண்ணிக்கிட்டாம். அதுக்குத் தோதா செஞ்சித் தர்ற ஆளெ பிடிக்கணுமே.
            இவனுக்குக் குமரு மாமாவோட ஞாபவம்தாம் வந்திச்சி. அவரோட பேசி நாளாச்சி, தவிரவும் இப்போ பேச்சு வார்த்தையும் இல்லாம கெடக்குதுன்னே ஒரு யோசனையில இவ்வேம் தயங்கி நின்னாம். இந்தச் சங்கதியெ அவரோட வூட்டுல போயிப் பேசுறதா? பட்டறையில போயிப் பேசுறதா?ன்னு அது ஒரு கொழப்பமா வேற இருந்திச்சி. மொதல்ல பட்டறைக்குப் போவோம், அங்க யில்லன்னா நேரா வுட்டுக்கே வுட்டுப்புடுவோம்ங்ற முடிவுல கெளம்பிப் போனாம் விகடு. பட்டறையில போயிப் பாத்தா குமரு மாமா காங்கல. "அவரு வர்ற நேரந்தாம் சித்தே இப்பிடி உக்காருங்க! வந்துடுவாப்புல! அடிக்கடி இப்பிடித்தாம் வூட்டுக்கும் பட்டறைக்கும் அலைஞ்சிட்டுக் கெடப்பாப்புல்ல. வூட்டுக்குப் போனாக்கா கடுப்பு அடிப்பாப்புல. வூட்டுக்குப் போவா வாணாம். அப்பிடி அந்த பலவ மேல குந்துங்க!" அப்பிடிங்கிறாரு அங்க வேலை பாத்துட்டு உளிய வெச்சி சுத்தியல தட்டிக்கிட்டு இருக்குற ஒரு ஆளு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...