27 Jan 2020

எங்கிட்டே வெளக்கம் கேட்பே?



செய்யு - 340

            தலைமையாசிரியர்ர பெரிய வாத்தியார்ன்னும், மத்த வாத்தியார்மார்கள சின்ன வாத்தியார்கள்ன்னும் சொல்றது இங்க ஒரு பழக்கம். ஒரு வாத்தியாரு ஒண்ணு பெரிய வாத்தியாரா இருப்பாரு, இல்ல சின்ன வாத்தியாரா இருப்பாரு. ரெண்டு வாத்தியாராவும் ஒரே வாத்தியாரு இருக்குங்றது ஓராசிரியர் பள்ளியோடத்துல நடக்குற சங்கதி. அங்க அந்த ஓராசிரியர்தாம் பெரிய வாத்தியார்ராவும் இருந்தாவணும், சின்ன வாத்தியார்ராவும் இருந்தாவணும். இரண்டாயிரமாவது வருஷத்துக்குப் பின்னாடி ஓராசிரியர் பள்ளியோடமே இருக்கக் கூடாதுன்னு அரசாங்கம் முடிவெடுத்து அதெ செயல்படுத்துனாலும் கோட்டகம் மாதிரியான பள்ளியோடங்கள் ஓராசிரியரு பள்ளியோடம் போல ஆயிடுது. கோட்டகத்துல பெரிய வாத்தியார்ன்னு ஒருத்தரு இருந்தாலும் அவரால பள்ளியோடம் வந்து போவ முடியாத நெலமை ஆயிப் போச்சு. சின்ன வாத்தியார்ன்னு விகடு இருந்தாலும் பெரிய வாத்தியாரு இல்லாததால அவனே பெரிய வாத்தியாராவும் இருந்து பள்ளியோடத்த பாத்துக்க வேண்டியதாகிப் போச்சு. மொத்தத்துல அந்தப் பள்ளியோடத்துக்கு அவந்தாம் பெரிய வாத்தியாரும், சின்ன வாத்தியாரும்னும் ஆயிடுச்சு.
            விகடு வாத்தியாரு டிரெய்னிங்க்ல பாடம் சொல்லிக் கொடுக்குற முறைப் பத்தி படிச்சது வேற. அவ்வேம் இப்போ வேலைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுக்குற முறை வேற. எல்லா முறையும் புள்ளைங்களுக்காகப் பாடம் சொல்லிக் கொடுக்குற முறைதான்னாலும் ஒவ்வொண்ணோட தத்துவமும், கருத்துப்பாடும் கொஞ்சம் வேறுபடத்தாம் செய்யுது. அடிப்படையில சின்ன சின்ன வேறுபாடுகள் ஒவ்வொண்ணுத்துக்கும் இருக்குது. அப்போ அரசாங்கம் செயல்வழிக் கற்றல்ங்ற முறையில பாடங்கள நடத்துற முறைய கொண்டு வந்திருச்சு. புள்ளைங்க படிக்கிற பாடங்க எல்லாத்தையும் அட்டைகளா மாத்தி வைச்சிருந்தாங்க. ஒவ்வொரு பாடத்தையும் அறிமுகப்படுத்துறதுக்கு ஒரு அட்டை. அந்தப் பாடத்தை செயல்பாடா மாத்தி நடத்துறதுக்கு ஒரு அட்டை. அந்தப் பாடத்தைப் புள்ளைங்க சரியா படிச்சிருக்காங்றத சோதிக்கிறதுக்கு ஒரு அட்டை. அந்தப் பாடத்துக்கு வீட்டுப்பாடம் கொடுக்குறதுன்னா அதுக்கு ஒரு அட்டைன்னு எல்லாம் அட்டைதாம். ஒவ்வொரு பாடத்தையும் ஏணியாவும், பாடத்தோட தலைப்பு ஒவ்வொண்யைும் ஏணியோட படி போல ஒரு படத்தை வரைஞ்சி அந்தப் படிக்குள்ள பாடத்தலைப்புக்கான அத்தனை அட்டைகளும் வரும்.
            அந்த அட்டைகள வாத்தியாரு எடுத்து வந்துல்லாம் சொல்லிக் கொடுக்கக் கூடாது. புள்ளைங்கத்தாம் ஏணிப்படியோட படத்தைப் பார்த்து அதுங்க படிக்க வேண்டிய அட்டைகள எடுத்தாந்து அந்த அட்டைக்கு உக்கார வேண்டிய குழுவுல போயி உக்காந்துக்கும். இதுக்குன்னே ஆறு வகையான குழுக்களுக்கு ஆறு பாய்களப் போட்டு வெச்சிருக்கணும். மொதல் ரெண்டு குழுக்கள் இருக்குப் பாருங்க அதுக்குப் பக்கத்துலத்தாம் வாத்தியாரு உக்காந்துக்கணும். அந்த ரெண்டு குழுக்களுக்கான அட்டைகள வெச்சிருக்கிற புள்ளைங்களுக்குத்தாம் வாத்தியாரோட உதவி அதிகம் தேவைப்படும். மத்த மூணாவது நாலாவது குழுக்கள்ல இருக்குற புள்ளைங்களுக்கு தேவைக்கு ஏத்தாப்புல வாத்தியாரு உதவி பண்ணா போதும். பெரும்பாலும் அஞ்சாவது ஆறாவது குழுக்கள்ல இருக்குற புள்ளைங்க அதுவா செய்யுற அளவுக்கு முதல்லேர்ந்து நாலாவது வரை இருக்குற குழுக்கள்ல இருந்து தயாராயிடும்ங்றதால வாத்தியாரோட உதவி அதிகம் தேவைப்படாது.
            ஒரு நாளைக்கு எவ்வளவு படிக்கலாம்ங்றது புள்ளைங்களோட கையிலத்தாம் இருக்கு. அதுங்க ஆர்வமா எத்தனை அட்டைகள வேணாலும் எடுத்துப் படிச்சிட்டுப் போவாலாங்றதுதாம் இந்த முறை. ஒரு அட்டைய முழுசா முடிக்காம அடுத்த அட்டைக்குப் போவக் கூடாதுங்றதுதாம் இதுல உள்ள விதி. ஒவ்வொரு அட்டையையும் முழுசா முடிச்சிட்டா அடுத்தடுத்த அட்டைக்குப் போய்ட்டே இருக்கலாம். ஒவ்வொரு அட்டையையும் புள்ளைங்க முடிக்க முடிக்க அதுக்கு ஒரு நோட்டைப் போட்டு அதுல அதைக் குறிச்சிக்கணும். அப்படி இதுல முடிச்சிட்டுப் போறப்பவே காலாண்டு பரீட்சை, அரையாண்டு பரீட்சை, முழு ஆண்டு பரீட்சைக்கான அட்டைகளும் வரும். அந்த பரீட்சைக்கான அட்டை வர்றப்பத்தாம் அந்த புள்ளை பரீட்சையை எழுத முடியும். எல்லா புள்ளைங்களுக்கும் ஒரே நேரத்துல பரீட்சை நடக்காது. சம்பந்தப்பட்ட புள்ளை பரீட்சைக்கான அந்த அட்டையை நெருங்குறப்பத்தாம் பரீட்சை நடக்கும்.
            இந்த முறையோட ஒரு நல்லது என்னான்னா மெதுவா படிக்கிற புள்ளைங்க மெதுவா படிக்கலாம். வேகமா படிச்சிட்டுப் போற புள்ளைங்க வேகமா படிச்சிட்டுப் போவலாம். இந்த முறையில இருந்த கெட்டதும் அதுவாத்தாம் இருந்துச்சு, எப்பவும் நல்லதும் கெட்டதும் பக்கத்துப் பக்கத்துலத்தாம் இருக்குங்ற மாதிரி. புள்ளைங்க அதுவோட வேகத்துல படிக்கலாங்றதால ஒண்ணாப்பு படிக்க வேண்டிய வருஷத்துல ஒண்ணாப்புல உள்ள அட்டைகள படிச்சி முடிக்கணுங்ற அவசியம் இல்ல பாருங்க. மெதுவா படிக்கிற பய புள்ள ஒண்ணாப்புல படிக்க வேண்டிய அட்டைகள்ல பாதியப் படிச்சிட்டு, ரெண்டாப்பு படிக்க வேண்டிய வருஷத்துல ரெண்டாப்புக்கான அட்டைக்குப் போவாம ஒண்ணாப்பு அட்டையப் படிச்சிட்டுக் கெடக்கும். இத போல மூணாப்புல கெடக்குற பய புள்ள ரெண்டாப்புக்கான அட்டைகள முடிக்கலன்னா வெச்சிக்குங்க, அது மூணாப்பு படிக்க வேண்டிய வருஷத்துல ரெண்டாப்பு அட்டைகள படிச்சிட்டுக் கெடக்கும். இப்படி ஒவ்வொரு வகுப்பையும் எடுத்துக்கிட்டீங்கன்னா அவ்வேம் இருக்குறது ஒரு வகுப்பாவும், படிச்சிட்டு இருக்குற அட்டைக ஒரு வகுப்பாவும் இருக்கும். கேக்குற ஒங்களுக்கே கொழப்பமா இருக்குன்னா முப்பத்தெட்டு புள்ளைகள வெச்சிக்கிட்டு ஒத்த ஆளா பாடத்தெ நடத்திட்டு இருக்குற விகடுவோட நெலமைய நெனைச்சிப் பாருங்க.
            எல்லா புள்ளைங்களும் ஒரே வேகத்துல படிச்சதுன்னா இதுல எந்தப் பிரச்சனையும் இருக்காது. அந்த வருஷத்துல அந்தந்த வகுப்புக்கான அட்டைகள முடிச்சிட்டு அதுங்க இருக்க வேண்டிய வகுப்பும், படிக்க வேண்டிய வகுப்பும் சரியா இருக்கும். புள்ளைங்கள அதது வேகத்துக்கு வுட்ட பெறவு அட்டென்டன்ஸ்ஸ எடுத்துப் பார்த்தா அதுக இருக்குற வகுப்பு ஒண்ணாவும், அதுக அட்டைகள படிச்சிட்டு இருக்குற வகுப்பு ஒண்ணாவும் இருக்கும். முப்பத்தெட்டு பய புள்ளைகளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அட்டையோட வரும். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அட்டைய வெச்சிக்கிட்டு ஆறு குழுக்கள்ல ஒண்ணுத்துல போயி உக்காந்துக்கும். நாலு புள்ளைகளுக்கும் நாலு வெதமா அட்டைகளச் சொல்லிக் கொடுத்துட்டு, அதுங்க முடிக்கிற அட்டைகள நோட்டுல குறிச்சிக்கிட்டு வேலைக்குச் சேர்ந்த ஆரம்பத்துல ரொம்பவே தடுமாறிப் போயிட்டாம் விகடு.

            இந்த மொறைக்கான ஏற்பாடுங்க ரொம்ப இருக்கு. அட்டைகள ஒவ்வொரு பாடத்துக்குமா வகைப் பிரிச்சி அதுக்கான டிரேய்கள்ல வைச்சிருக்கணும். ஒவ்வொரு பாடத்துக்கும் அந்த டிரேய்கள வைக்கிறதுக்கு ஒரு செல்ப் இருக்கணும். ஒண்ணாப்புக்கு சிவப்பு நெறத்துல பார்டர் போட்ட அட்டை, ரெண்டாப்புக்கு பச்சை நெறத்துல பார்டர் போட்ட அட்டை, மூணாப்புக்கு மஞ்சள் நெறத்துல பார்டர் போட்ட அட்டை, நாலாப்புக்கு நீல நெறத்துல பார்டர் போட்ட அட்டைன்னு நாலு வகுப்புக்குமான அட்டைக பத்து பதினைஞ்சி வெதமா பிரிச்சிஞ்சிருக்கும். உதாரணத்துக்கு ஒரு பாடத்தை அறிமுகம் பண்றதுக்கான அட்டைன்னா வெச்சிக்குங்க அதுக்கு ஒரு லோகோவ கொடுத்திருப்பாங்க. அந்த லோகோவுக்கான நாலு வகுப்புக்குமான அட்டைகளையும் ஒரு டிரேய்ல வெச்சிருக்கணும். இப்பிடி ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் ஏத்த மாதிரி ஒரு லோகோ. அதுல நாலு வகுப்புக்கான அட்டைகளும் இருக்கும். ஒவ்வொரு வகுப்புக்கான வெவ்வேறு பாடத் தலைப்புக்கான அட்டைகளும் வகுப்பு மாறி கலந்துடாம அந்த டிரேய்ல தனித்தனியா இருக்கறதுக்கு ரப்பர் பேண்டு போட்டு வெச்சிருக்கணும்.
            இப்பிடி ஒரு பய புள்ள நாலு வகுப்புக்கான அட்டைகள முடிச்சாத்தாம் அஞ்சாப்புக்கு வர முடியும். அஞ்சாப்புலத்தாம் புத்தகத்த வெச்சி கருத்து வரைபட முறையில பாடத்தை நடத்தலாம். இது அப்போ இருந்த முறை. கோட்டகத்துல எந்தப் பய புள்ளையும் நாலாப்பு வரையுள்ள அட்டைகள முடிக்காததால எல்லா பய புள்ளையும் அதுக்குள்ளத்தாம் இருந்தாம். அஞ்சாப்பு படிக்கிற பய புள்ளையும் நாலாப்பு வரை உள்ள அட்டைக்குள்ளத்தாம் இருந்தாம். உண்மையைச் சொல்லணும்னா இப்பிடி ஒரு முறையில பாடத்தெ கொண்டு போவணுங்றதெ பத்தியெல்லாம் கவலைப்படாம சின்னமுத்து வாத்தியாரு அவரு பாட்டுக்கு பள்ளியோடத்துக்கு பதினொண்ணு, பன்னெண்டு மணி வாக்குல வர்றதும், வாய்ப்பாட சொல்லச் சொல்றதும், இல்லாட்டி போர்ட்டுல எதையாச்சிம் எழுதிப் போட்டு வாசிக்க வைக்கிறதும், மூணு மணி வாக்குல கெளம்புறதுமுன்னு இருந்துட்டாரு.
            சின்னமுத்து வாத்தியாரு வாங்கியாந்த அட்டைக அத்தனையும் பேருக்கு பத்து பதினைஞ்சு டிரேய்ல கண்டமேனிக்கு அடுக்கிக் கெடந்துச்சு. மித்ததையெல்லாம் அப்படியே அட்டைப் பொட்டிகள்ல கட்டைக் கூட பிரிக்காம ரொம்ப பாதுக்காப்பா வெச்சிருந்தாரு. அதெ பய புள்ளைங்க கண்ணால பாத்தானுங்களான்னு கூட தெரியல. பய புள்ளைங்க புத்தகத்துல படம் பாக்குறதும், அந்தப் படத்து மேல எதாச்சிம் கிறுக்கி வைக்கிறதும், வாத்தியாரு எதாச்சிம் சொல்லிக் கொடுத்தா அதெ திருப்பிச் சொல்றதும்னும் வந்துக்கிட்டும் போய்கிட்டும் கெடந்திருக்குதுங்க.
            இப்போ மொத்த பள்ளியோடத்தையுமே மறுகட்டுமானம் செய்யுறாப்புல ஆயிப் போச்சு நெலமை. இன்னும் நெறைய டிரேய்கள வாங்க வேண்டியிருந்துச்சு. அந்த டிரெய்கள வைக்கிறதுக்கு செல்ப்புகள செய்ய வேண்டியிருந்துச்சு. அதுக்கான பணத்தையும் ஒதுக்கி ஒவ்வொரு பள்ளியோடத்துக்கும் பேங்குல அக்கெளண்ட் பண்ணியிருந்தாங்க அரசாங்கத்துல. நல்லவேளையா சின்னமுத்து வாத்தியாருக்குக் குடிக்கவும் அதுல கவனம் செலுத்தவும் நேரம் சரியா இருந்ததால அதெ கவனிக்காம விட்டுப்புட்டாரு. இல்லாட்டி அதுல இருந்த பணத்தையும் எடுத்து சரக்கா வாங்கி ஊத்தியிருப்பாரு. இது தொடர்பாவும் பள்ளியோடத்துக்கு ஒதுக்குன பணத்தெ எடுக்கல, அதெ ஒழுங்கா செலவழிக்கலன்னு அவருக்கு மெமோ மேல மெமோவா ஆபீஸ்லேந்து ரிஜிஸ்தரு தபால்ல அனுப்பிச்சிருந்தாங்க. எல்லா மெமொவையும் வாங்கி வெச்சிருப்பாரு சின்னமுத்து வாத்தியாரு. எந்த மெமோவையும் படிச்சுப் பாக்க மாட்டாரு. ஆனா வெளக்கத அனுப்புவாரு.
            அந்தக் கதெய கேளுங்க இப்போ. ஒருவேளை தப்பித் தவறி அவரு மெமோவே படிச்சிப் பாத்திருந்தார்ன்னா பணத்தெ எடுத்து போதையில மெதந்துக்கிட்டுப் பஞ்சா பறக்க விட்டுருப்பாரு. அவருக்கு மேமோ வர்றதுங்றது வருஷம் தப்பா பத்து தடவே மழை வர்ற மாதிரி. அது எப்படியும் அப்பயோ இப்பயோ வந்துட்டுப் போயிடும் தப்பவே தப்பாதுங்ற மாதிரி. அதால வழக்கமா வர்ற மெமோன்னு நெனைச்சிட்டு அவரு வழக்கமா என்னத்தெ பண்ணுவாரோ அதெ பண்ணாரு.
            வர்ற மெமொ ஒவ்வொண்ணுத்துக்கும் அவரும் விளக்கத்த ரிஜிஸ்தரு தபால்ல அக்னாலேட்ஜ்மெண்ட்டு கார்டோட அனுப்பிச்சிட்டு, அந்த தபாலு ஆபீஸூக்குப் போயி அங்கேயிருந்து அந்த அக்னாலெட்ஜ்மெண்ட்டு கார்டு இவரு கைக்கு வந்ததும் இவரு அதெ பத்திரமா வெச்சிப்பாரு. மெமொவுக்கான பதில அனுப்புனதுக்கு அதுதான ஆதாரம். ஆனா, இவரோட  வெளக்கத்துக்கு ஆபீஸ்ல எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
            அதெப்படி அம்மாம் சாமர்த்தியமா வெளக்கத்தைக் கொடுப்பாரான்னா கேட்டாக்கா அங்கத்தாம் சின்னமுத்து வாத்தியாரு தன்னோட வேலையக் காட்டியிருப்பாரு. வெளக்கத்தைக் கொடுத்தாத்தான்ன நடவடிக்க எடுக்க முடியும்? அதால காயிதத்துல வெளக்கம்லாம் எழுதாம எம்ப்டி கவரைத்தாம் அக்னாலெட்ஜ்மெண்ட் கார்டோட அனுப்புவாரு. ஆபீஸ்ல பிரிச்சுப் பாத்தா எம்ப்டி கவர்தான இருக்கும். என்னய்யா இப்பிடி இருக்குன்‍னு ஏயிய்வோ ஆளெ கூப்புட்டு வுட்டாக்கா ஆபீஸூ பக்கமே போவ மாட்டாரு. ரிஜிஸ்தரு தபால்ங்றதால ஆபீஸ்ல கடுதாசிக்கான பதிவையெல்லாம் மொறையா போட்டு வெச்சிருப்பாங்க. சின்னமுத்து வாத்தியாரும் அக்னாலெட்ஜ்மெண்டு கார்டை கையில வெச்சிருக்காரா? ஏயிய்வோக்கு தலைவலியா போவும்.
            வெளக்கக் கடுதாசியில வெளக்கத்துக்கான காயிதம் இருந்தாத்தான்ன அதெ படிச்சிப் பாத்துட்டு அதுக்கு தக்காப்புல நடவடிக்கைய எடுக்க முடியும். ஒண்ணுமே இல்லாத வெத்து கவர்ல எதெ வெச்சி நடவடிக்கை எடுக்குறது? ஏயிய்வோ சின்னமுத்து வாத்தியார்ர தேடி வர்றாப்புல ஆயிடும். தேடி வந்தா "நாந்தாம் வெளக்கத்த கடுதாசி வந்த அன்னைக்கே படிச்சிப் பாத்துட்டு அனுப்பிப்புட்டேன்னே. இந்தப் பாருங்க கடுதாசி அனுப்புனதுக்கான அத்தாட்சி கார்டு!"ன்னு எடுத்து நீட்டுவாரு சின்னமுத்து வாத்தியாரு.
            "கவர்ல ஒண்ணுமே இல்லைய்யா! வெத்துக் கவருய்யா! என்ன வெளக்கத்த எழுதி அனுப்புனே! அதாச்சிம் சொல்லித் தொலைய்யா!"ன்னு ஏயிய்வோ கெஞ்சாத கொறையா கேட்டாக்கா, "நீஞ்ஞ எத்து மாதிரியான வெளக்கத்த கேட்டு காகிதத்த அனுப்பினீங்களோ அது மாதிரியான வெளக்கத்தத்தாம் கொடுத்தேம்பாரு!" சின்னமுத்து வாத்தியாரு.
            "அதத்தாம்யா தெரியாம கேக்கிறேம். மறுக்கா ஒரு காயிதத்துல எழுதிக் கொடும்யா!"ன்னு ஏயிய்வோ கேட்டாக்கா, "நீஞ்ஞ காயித்த அனுப்பி வெளக்கத்த கேட்டீங்க. நாமளும் காயிதத்த அனுப்பி வெளக்கத்த கெடுத்தேம். அம்மாம்தாம் முடிஞ்சிப் போச்சி. மறுக்கா மறுக்கா கேட்டாக்கா எப்பிடி? ஒஞ்ஞளுக்கு நாம்ம வெளக்கத்த ஆபீஸூக்கு அனுப்பிச்சத காட்டி, அதெ நீஞ்ஞ ஆபீஸ்ல தொலைச்சிப்புட்டீங்கன்னு எழுதி மறுக்கா வெளக்கத்த தான்னு ஒரு காயிதத்த எழுதி நீட்டுங்க! நாமளும் மறுக்கா காயிதத்த எழுதி நீட்டுறேம். நீஞ்ஞ காயிதத்த நீட்டாம நாம்ம காயிதத்த நீட்ட மாட்டேம்!"பாரு சின்னமுத்து வாத்தியாரு.
            சொல்லிட்டு அத்தோட வுட மாட்டாரு, "அரசாங்கத்து ஆவணத்த பாதுகாக்க தவறுனதா கோர்ட்டுல அக்னாலெட்ஜ்மெண்ட் கார்ட வெச்சி ஒரு கேஸப் போட்டாத்தாம் சரியா வரும். இஞ்ஞ வந்து நின்னுக்கிட்டு அதெ எழுதிக் கொடு, இதெ எழுதிக் கொடுன்னு கழுத்தறுத்தா எப்பிடி?" அப்பிடின்னு ஏயிய்வோ காதுக்கு கேக்குற மாதிரியும் கேக்காத மாதிரியும் ஒரு விதமா சாடையா சொல்லுவாரு பாருங்க, அதெ கேக்குறப்ப ஏயிய்வோக்கு தலையச் சுத்துறாப்புல ஆயிப்புடும். பெறவு என்ன அவருக்கு எந்த வெதமான பாதிப்பும் வர்றாத போல ஒரு வெளக்கத்த ஏயிய்வோ எழுதி அதுல அவருகிட்டு கெஞ்சிக் கூத்தாடி கையெழுத்த மட்டும் வாங்கியறாப்புல ஆயிடும். அதுக்குப் பெறவு சின்னமுத்து வாத்தியாருக்கு நோட்டீஸ் கொடுக்கணும்னு யாருக்காவது தோணும்ங்றீங்க?
            அதே நேரத்துல பாத்தீங்கன்னா... அவரு இவ்வளவு பண்ணதுக்குத்தாம் சேர்த்து வெச்சி இப்போ நடமாட கூட முடியாம படுத்தப் படுக்கையா கெடந்து அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவிக்கிறார்ன்னு அவரோட நெலமையைப் பாத்துட்டு சொல்றவங்களும் இருக்காங்க.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...