26 Jan 2020

நூத்துல ஒண்ணு கணக்குல வராது!


செய்யு - 339

            பொண்டாட்டிக்காரி அமையுறதுங்றது ஆண்டவன் கொடுத்த வரம்பாங்க. ஒரு பள்ளியோடத்துக்கு வாத்தியாருமாருக அமையுறதும் அப்படித்தாம் போலருக்கு. ஒரு வூட்டுல என்ன இருக்கு பெரிசா? வூடுங்றது கல்லும், சிமெண்டும் கலந்து கட்டுன கலவைதானே. அந்த வூட்டுக்கு வர்ற மவராசிதான அதெ வூடா மாத்துறா. அதெ போலத்தாம் ஒரு பள்ளியோடங்றது நாலு சுவத்தால ஆன கட்டடம்தான். அதெ பள்ளியோடமா மாத்துறது அங்க வர்ற வாத்தியாருமாருங்கத்தான.
            ஒரு கிராமம் பனிஷ்மெண்டு கிராமமா போயி, அங்க இருக்குற பள்ளியோடம் பனிஷ்மெண்டு பள்ளியோடமா ஆயிடுச்சுன்னா அந்தப் பள்ளியோடத்தப் பத்தி சொல்ல வேண்டியதில்ல. ஒரு பொட்டணம் நிலக்கடலை வாங்கிச் சாப்புடுறப்போ எல்லா கடலையுமா நல்ல கடலையா இருக்கு? ஒண்ணு ரெண்டு சொத்தையோ, பூச்சியோ இருக்கத்தான செய்யும். எப்பவுமே நூத்துல ஒண்ணு கணக்குல வராது. அதெ போலத்தாம் வாத்தியார்மார்களயும் ஒண்ணு ரெண்டு பேரு இருப்பாங்க. அவுங்க ஒழுங்க பள்ளியோடம் போவ மாட்டாங்க. போனாலும் பாடத்தெ நடத்த மாட்டாங்க. ஊருல இருக்குற அத்தென கெட்ட பழக்கங்களையும் குத்தகைக்கி எடுத்திருப்பாங்க. அப்படிப்பட்டவங்களால உதவித் தொடக்கக் கல்வி அலுவலங்கிற ஏயிய்வோ ஆபீஸூக்கு தலைவலியா இருக்கும். அவுங்களப் பத்தின புகாருங்களும் அடுக்கடுக்கா போயிட்டு இருக்கும். அந்த மாதிரியான வாத்தியார்மார்கள ஏயிய்வோ ஆபீஸ்ல இருக்குற ஏயிய்வோ என்ன பண்ணுவாருன்னா இந்த மாதிரியான பனிஷ்மெண்டு பள்ளியோடத்துல தூக்கிப் போட்டுடுவாரு. ஆளும் பனிஷ்மெண்டு பண்ண வேண்டிய ஆளு, பள்ளியோடமும் பனிஷ்மெண்டு பள்ளியோடமா போச்சுன்னா அந்தப் பள்ளியோடத்தோட நெலமைய நெனைச்சுப் பாருங்க.
            சின்னமுத்து வாத்தியாரு அப்பிடித்தாம் குறுவைகுண்டு பள்ளியோடத்திலேந்து நிர்வாக மாறுதலுங்ற பேர்ல கோட்டகம் பள்ளியோடத்துக்குத் தூக்கி அடிக்கப்படுறாரு. குறுவைகுண்டுங்றது கோட்டகத்திலேந்து மேற்கால இருபத்து நாலு கிலோமீட்டரு தள்ளியிருக்கிற ஊரு. அதாவது ஆர்குடி டவுனுக்குப் பக்கத்துல இருக்குற ஊரு. சின்னமுத்துவும் ஆர்குடியில இருக்குற ஆளுங்றதால அவருக்குக் குறுவைகுண்டு போயிட்டு வர்றது எல்லாம் சுலுவு. சின்னமுத்து மேல குறுவைகுண்டு கிராமத்திலேந்து ஏகப்பட்ட புகாரு. ஒழுங்கா பள்ளியோடம் வர்றதில்ல, வந்தாலும் டாஸ்மாக்குச் சரக்கப் போட்டுப்புட்டு பள்ளியோடத்துலயே சாஞ்சிடுறார்னு அவருமேல ஏகப்பட்ட புகாருங்க. அவரு மேல நடவடிக்கை எடுக்கலன்னா பள்ளியோடத்து மின்னாடி போராட்டம் பண்ணப் போறதாவும், அந்தக் கிராமத்துலேந்து காகித்த ஏயிய்வோ ஆபீஸூக்கு அனுப்பிப்பிட்டாங்க. பார்த்தாரு ஏயிய்வோ! சின்னமுத்துவ தூக்கி கோட்டகத்துல போட்டுட்டாரு. கோட்டகத்துல இருந்த பெரியவாத்தியார்ர தூக்கிக் குறுவைகுண்டுல போட்டுட்டாரு.
            சின்னமுத்து வாத்தியாருக்கு சரக்கு அடிக்கிறதோட சபல புத்தியும் வேற அதிகம். இப்போ கால மாத்தத்துல வாத்தியாருமாருக சம்பளத்த பேங்க் அக்கெளண்ட்டு கணக்குல சேத்துப்புடறாங்க. இதுக்கு ஒரு அஞ்சு வருஷத்துக்கு மின்னாடி எப்படின்னா பத்து பள்ளியோடம் அல்லது பதினைஞ்சுப் பள்ளியோடத்துக்குச் சேர்த்து ஒரு பள்ளியோடம் சம்பளப் பட்டுவாடா பண்ற பே சென்டர்ரா இருக்கும். அந்தப் பள்ளியோடத்தோட பெரிய வாத்தியாருதாம் ஆர்குடியில போயி பத்து பதினைஞ்சு பள்ளியோடத்து வாத்தியார்மார்களோட சம்பளத்த வாங்கியாருவாரு. அந்தப் பள்ளியோடத்து பெரிய வாத்தியார்கிட்ட போயித்தாம் மித்த பள்ளியோடத்து பெரிய வாத்தியாருங்க சம்பளத்த வாங்கியாந்து பள்ளியோடத்துல இருக்குற சின்ன வாத்தியாருங்களுக்குக் கொடுப்பாங்க.
            அப்படிக் கொடுக்குறப்போ சின்னமுத்து வாத்தியாரு என்ன பண்ணுவாருன்னா ஆம்பளை வாத்தியார்ன்னா சம்பளத்தெ கொடுத்துப்புட்டு கண்டுக்கிடாம இருந்திடுவாரு. அவுங்களே பொம்பளையா போச்சுன்னா சம்பளத்தெ கொடுக்க மாட்டாரு. ஆர்குடியில வந்து வாங்கிப்புடுங்கன்னு சொல்லிடுவாரு. அதுவும் ஆர்குடிக்கு எதாச்சிம் ஒரு லாட்ஜோட பேர்ர சொல்லித்தாம் வர்றச் சொல்லுவாரு. இது பெரிய பிரச்சனையா போயி அது தொடர்பாவும் அவர மேல ஏகப்பட்ட புகாருங்க காகிதம் காகிதமா ஏயிய்வோ ஆபீஸூல குவிஞ்சுக் கெடக்கும் அது பாட்டுக்கு. ஏயிய்வோ அதெ பாத்துப்புட்டு ஒண்ணு இவர்ர தூக்கி வேற பள்ளியோடத்துல போடுவாரு. இல்லேன்னா பொம்பளை வாத்தியார்ர தூக்கி வேற பள்ளியோடத்துல போடுவாரு. அதால சின்னமுத்து வாத்தியாரு வேலை பார்த்துட்டு வர்ற பள்ளியோடமெல்லாம் ஆம்பளை வாத்தியாரு பள்ளியோடமாவே அமைஞ்சிப் போச்சுது.
            அப்பவம் சரி இப்பவும் சரி கோட்டகம் பள்ளியோடம் ஈராசிரியரு பள்ளியோடம். சின்னமுத்து வாத்தியாரு கோட்டகத்துப் பள்ளியோடத்துக்குப் பெரிய வாத்தியார்ர வந்தப்போ அங்க சின்ன வாத்தியார்ரா இருந்தவங்க ஒரு பொம்பளெ வாத்தியாரு. இவரு கோட்டகத்து மாத்தலாகி வர்றார்ங்ற சேதி தெரிஞ்சதுமே அந்தம்மா மெடிக்கல் லீவ்வ போட்டுட்டு ஏயிய்வோ ஆபீஸே கதியா கெடந்து மாத்தல வாங்கிட்டு வேற ஒரு பள்ளியோடத்துக்குப் போயிட்டாங்க. அதால சின்னமுத்து வாத்தியாரு வந்தப்போ கோட்டகம் பள்ளியோடம் ஓராசிரியரு பள்ளியோடமா ஆயிப் போயிடுச்சு.

            அவரு ஆர்குடியிலேந்து கோட்டகத்துக்கு வரணும்னா கூத்தாநல்லூரு வந்து, காடுவெட்டி வழியா வடவாதி வந்து, வடவாதியிலேந்து ஓகையூரு போயி, ஓகையூர்லேந்து கெழக்கால கோட்டகம் வரணும். காடுவெட்டியில ஒரு டாஸ்மாக்கு இருக்கு. அதெ கடந்து வர்றப்ப அவரோட டிவியெஸ் வண்டி அங்க நிக்கும். காலையில டீயக் குடிக்கிறாப்புல வாங்கி ஒரு குவார்ட்டர்ர உள்ள தள்ளிக்குவாரு. இன்னும் ரண்டு குவார்ட்டர்ர வாங்கி பள்ளியோடம் போயி எறங்குறதுக்கு மின்னாடி மதுவாங்கட்டையில உக்காந்து ஊத்திக்க ஒண்ணு, மத்தியானத்துக்கு மேல மூணு மணிக்கு ஊத்திக்க ஒண்ணுன்னு பத்திரம் பண்ணிக்கிவாரு. அப்படிப் பள்ளியோடம் வர்றப்பவே புல் மப்புலத்தாம் வருவாரு. மனுஷன் உசுரு வாழ்றதுக்கு வேற எதையும் சாப்புடறாரா? யில்லே சரக்க மட்டுந்தாம் சாப்புடுறாரான்னு கேட்டாக்கா அதுக்கு ஒரு பதில சொல்ல முடியாது. அவரு ஒடம்புல ரத்தம் ஓடுதா? யில்லே சரக்கு ஓடுதான்னு கேட்டாக்கா அதுக்கும் பதிலச் சொல்ல முடியாது. இந்த சரக்கு மனுஷன்  பள்ளியோடம் வந்து சேர்றப்போ எப்படியும் பதினோரு மணி, பன்னெண்டு மணி ஆயிப் போயிடும். இவரோட டிவியெஸ் வண்டிச் சத்தத்த கேட்டுப்புட்டு ஆத்துலயும், கொளத்துலயும் குளிச்சிக்கிட்டுக் கெடக்குற பய புள்ளைங்க விழுந்தடிச்சி ஓடி வரும்ங்க.
            சின்னமுத்து வாத்தியாரு வந்து உக்காந்து வாய்பாட்ட "ஓரெண்டு ரெண்டு, ரெண்டிரண்டு நாலு"ன்னு வரிசைக்கா ராகம் போட்டு படிக்கச் சொல்லுவாரு. பெறவு அ, ஆ, இ, ஈ,... க, ங, ச, ஞ... சொல்ல சொல்லுவாரு. ஒரு பத்து வார்த்தைய போர்டுல எழுதிப் போட்டுச் சொல்லிக் கொடுப்பாரு. அதுக்குள்ள மணி பண்ணெண்டே காலு ஆயிப் போயிடும். அப்பவே மணி அடிச்சி வுட்டார்ன்னா மதியானச் சாப்பாட்ட போடச் சொல்றார்னு அர்த்தம். புள்ளைங்கள சாப்புடச் சொல்லிட்டு வெளையாட வுட்டுடுவார்ன்னா அவரு தூங்கப் போறார்ன்னு அர்த்தம். எப்படியும் ரெண்டு ரெண்ட‍‍ரை வரைக்கும் தூங்குவாரு. பெறவு எழுந்திரிச்சார்ன்னா ஏ,பி,சி,டி... ன்னு அரை மணிக்கு நேரத்துக்கு ஓடுச்சுன்னா, பெறவு இங்கிலீஷ்ல ஒரு பத்து வார்த்தைய எழுதிப் போட்டார்ன்னா மணி மூணு ஆயிடும். மணி மூணு ஆயிடுச்சுன்னா மணிய அடிச்சிட்டு வுடப் போறாரு ஜூட்டுன்னு அர்த்தம். 
            பள்ளியோடத்து வுட்டு கெளம்புறப்ப பத்திரம் பண்ணி வெச்சிருக்கிற ஒரு குவார்ட்டர்ர உள்ள தள்ளிட்டுத்தாம் டிவியெஸ்ஸ கெளப்புவாரு. கோட்டகத்துலேந்து காடுவெட்டிப் போறதுக்கு அவருக்கு அதுதாம் பெட்ரோலு மாதிரி. காடுவெட்டிப் போனார்ன்னா அங்க ஒரு குவார்ட்டர்ர வாங்கி உள்ள வுட்டுக்கிட்டு, ராத்திரிக்கி ஒண்ண வாங்கி பத்திரம் பண்ணிக்கிட்டு அவரு பாட்டுக்குப் போயிக்கிட்டே இருப்பாரு. எப்பவும் தண்ணியில மிதக்குற ஆளு, தண்ணியில நடக்குற ஆளு, தண்ணியிலயே கெடக்குற ஆளுன்னா அது சின்னமுத்து வாத்தியாருதாம். இப்படித்தாம் சின்னமுத்து வாத்தியாரு கோட்டகத்துப் பள்ளியோடத்த ஒத்த ஆளா ஓட்டிக்கிட்டு இருந்தாரு. அந்தப் பள்ளியோடத்துக்குத்தாம் விகடு சின்ன வாத்தியார்ரா வந்தாம். விகடு வந்து கோட்டகம் பள்ளியோடத்துல சேந்தப்போ, சின்னமுத்து வாத்தியாருக்கு இன்னும் அஞ்சு வருஷம் சர்வீஸூ இருந்துச்சு.
            விகடு வந்து சேர்ந்து ஒரு மாசம் வரைக்கும் பள்ளியோடம் வந்துட்டும் போயிட்டும் இருந்தவரு ஒரு நாளு பள்ளியோடத்துச் சாவிய கையில கொடுத்து, "எங் கண்ணையே ஒங் கையில ஒப்படைக்கிறேம். இத்த நல்லபடியா பாத்துக்கோணும் யம்பீ! நமக்கு வவுறு கொடலு எல்லாம் சல்லடைச் சல்லடையா ஆயிடுச்சுங்ற மாதிரித் தெரியுது. குவார்ட்டர்ர ஊத்துனா எல்லாம் பொத்துட்டு வழிஞ்சிப் போயி போதை ஏற மாட்டேங்குது. ஆஸ்பிட்டலு போயி பெட்ல கெடந்து அதெ சரிபண்ணத்தாம் குவார்ட்டர்ர ஏத்துறப்போ போதை தெரியும் போலருக்கு. ரொம்ப சடவா இருக்கு. வவுறு முழுக்க வேக்கலாம இருக்கு. கால தாமசம் பண்ண முடியா. நீயி பள்ளியோடத்த நல்ல வெதமா பாத்துப்பேன்னு இப்பவே எந் தலையில அடிச்சிச் சத்தியத்தெ பண்ணு"ன்னு சொல்லி விகடுவோட கைய அவரே பிடிச்சி அவரோட தலையில அடிச்சிக்கிட்டு ஆர்குடியில ஒரு ஆஸ்பத்திரியில சேர்ந்தவருதாம். அங்க அவருக்கு ஒரு ஆபரேஷன வவுத்துல பண்ணுனாங்க. அந்த ஆபரேஷன சரியாமப் பண்ணாமப் போயி, அதுல வயித்துக்குள்ள ஏதோ செப்டிக் ஆகிப் போயி சின்னமுத்து வாத்தியார்ர தஞ்சாவூருக்குக் கொண்டு போகுற மாதிரி ஆயிடுச்சு. அங்க ஒரு பிரைவேட்டு ஆஸ்பிட்டல்ல வெச்சு வைத்தியம் பார்த்தா, அந்த ஆஸ்பிட்டலுகாரங் அந்த ஆபரேஷன பண்ணுறேன், இந்த ஆபரேஷன பண்ணுறேன்னு சின்னமுத்து வாத்தியாரோட குடல எடுத்து வெளியில போட்டுட்டு, கறக்க முடியுற வரைக்கும் பணத்தெ கறந்துப்புட்டு, கடைசியா தஞ்சாவூரு மெடிக்கலு காலேஜூக்கு அனுப்பிப்பிட்டாம்.
            தஞ்சாவூரு மெடிக்கலு காலேஜ்ல வெச்சு சின்னமுத்து வாத்தியார்ர பரிசோதன பண்ணா அவருக்குக் குடலு இருக்கா? இல்லையாங்ற அளவுக்குச் சந்தேகமாப் போயிடுச்சு. தஞ்சாவூரு மெடிக்கலு காலேஜ்ல எட்டு மாசம் வரைக்கும் வெச்சித்தாம் சின்னமுத்து வாத்தியார்ர சரிபண்ண முடிஞ்சிடுச்சு. அவர்ர சரிபண்ணி முடிக்கிறதுக்குள்ள ஆளு பொம்மை போல ஆயிட்டாரு. தாட்டிகமா ஆஜானுபாகுவா இருந்தவரு எலும்புக்கூடே மெலிஞ்சுப் போனா எப்பிடி இருக்குமோ அப்பிடி ஆயிட்டாரு.  உடம்புல எலும்பும் தோலும்தாம் இருந்துச்சு. கண்ணு உள்ள சொருவிப் போச்சு. நெத்தியில தோளு இருந்தாலும் பாக்குறதுக்கு மண்டையோடு மாதிரித்தாம் தெரியுது. எப்படியோ ஆளு பொழைச்சிக்கிட்டாரே தவுர நடைபிணமாத்தாம் இருந்தாரு. எப்பயாச்சும் பள்ளியோடம் வருவாரு, போவாரு. இவ்வளவு ஆன பின்னாலும் அவருக்கு டாஸ்மாக்குச் சரக்கு உள்ள போயிட்டுத்தாம் இருக்குன்னு அவரோட பொண்டாட்டி தங்கம்மா சொல்லிட்டு அழுவுறாங்க. சரக்க வாங்கியாந்து வாயில ஊத்தலன்னா சின்னபுள்ள கணக்கா கையையும் காலையும் ஒதைச்சிக்கிட்டு அழுது கத்த ஆரம்பிச்சிடுறாரு சின்னமுத்து வாத்தியாரு.
            "இவரு பண்ண பாவம். அவரு தலையிலயே விடிஞ்சிப் போயிடுச்சே யம்பீ!"ன்னு சொல்லி தங்கம்மா அழுவுறாங்க.
            "சர்தாம் போடி! சரக்க வாங்கியாறாம ஏம்டி இப்பிடி ஒப்பாரி வைக்குறே? ஏம்டா உசுரோட இருக்குறே? சீக்கிரம் போயித் தொலையுங்றீயா? ம்ஹூம்! இன்னும் பத்தாயிரம் லிட்டரு சரக்க உள்ள வுடாம உசுரு பிரியாதடி நமக்கு!" அப்பிடிங்கிறாராம் சின்னமுத்து வாத்தியாரு. ஒடம்பு ஒடைஞ்சிப் போனாலும் அவரோட குரல்ல இருக்குற கம்பீரம் மட்டும் ஒடையல.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...