25 Jan 2020

பனிஷ்மெண்ட் கிராமம்



செய்யு - 338

            அனுமாரு சஞ்சீவி மலையைத் தூக்கிக்கிட்டு இங்கேயிருந்து அங்கேயும், அங்கேயிருந்து இங்கேயும் தாவுனாரே, அப்பிடி ஒரு தாவு தாவுற தெம்பு இருந்தா களிமங்கலத்துக்கும், கோட்டகத்துக்கும் போறதுக்கு எந்தச் செரமும் பட வேணாம். அம்மாம் தெம்பு இருந்தா நாம்ம ஏம் மனுஷப் பொறவிகளா பொறந்து கஷ்டப்பட போறோம்?
            பிப்ரவரி மாசம் வந்தா வெள்ளையாறு வத்திப் போயிடும். ஜனவரி கடைசிக்கே நடந்து போறாப்புல முழங்காலுக்குக் கீழத்தாம் தண்ணிக் கெடக்க ஆரம்பிக்கும். அப்படி ஆயிட்டுன்னா களிமங்கலத்துக்கும், கோட்டகத்துக்கும் போயி வர்றதுல எந்தப் பிரச்சனையும் இருக்காது. ஆத்துல எறங்கியே இந்தாண்டயிலேர்ந்து அந்தாண்டைக்கும், அந்தாண்டையிலேர்ந்து இந்தாண்டைக்கும் போயிட்டு வந்திடலாம். சைக்கிளலயும் அதுல வுட்டே தள்ளிப்புடலாம்.
            மின்னாடியெல்லாம் ஆடிப் பெருக்குக்கு மின்னாடியே வந்த ஆத்துத் தண்ணி இப்போ ஆகஸ்ட்டு, செப்டம்பரு, அக்டோபருன்னு எந்த மாசம் வேணாலும் மேட்டூரு அணையைத் தொறக்கிறதப் பொருத்து வரும். அப்பிடி தண்ணி வந்துட்டுன்னா களிமங்கலத்திலேந்து கோட்டகத்துக்கும், கோட்டகத்திலேந்து களிமங்கலத்துக்கும் வர்ற போவ இருக்குறது ஒரு மூங்கிலுப் பாலம்தாம். மூங்கிலுப் பாலம்னா அத்து எப்படி இருக்குன்னா கடெசி காலத்துல நடக்க முடியாம கஷ்டப்படுற கெழட்டுப் பய தள்ளாடுற மாதிரித்தாம் எப்பவும் இருக்கு. பாலத்துல ஏறி அந்தாண்ட இந்தாண்ட போனாக்க அத்து ஊஞ்சலு தாலாட்டுமே அப்படித் தாலாட்டு‍து. அதுல ஏறித்தாம் நம்ம சனங்க சந்தோஷமா ஊஞ்சலாடுற மாதிரி ஆடிகிட்டு இப்பிடிக்கும் அப்பிடிக்கும் போய்ட்டு வர்றதுங்க. தொட்டி மாதிரி ஆடுறதால அதெ தொட்டிப் பாலம்னு சொன்னாலும் தப்புல்ல. தப்பித் தவறி ஆத்துல வுழுந்தாலும் சனங்க அதெ பத்தி கவலைப்படாது. குளிச்சி முடிக்கிற வேல மிச்சம்ன்னு ஒரு நீச்சலப் போட்டுப்புட்டு எழுந்திரிச்சி வந்துப்புடுதுங்க. இங்க கெடக்குற அத்தனெ சுடுகுஞ்சிலிருந்து கெழடு கட்டைக வரைக்கும் அத்தனைக்கும் நீச்சலு அத்துப்படி. ஆத்துல வுழுந்து குளிக்குறதுல அம்மாம் சுகம்.
            எத்தனையோ வருஷம் அங்க இருக்குற மனுஷங்களும், இங்க இருக்கற மனுஷங்களும் மூங்கிலு பாலத்த நல்ல வெதமா மாத்திப் போட்டு பக்கா பாலமா போட்டுக் கொடுங்கன்னு போட வேண்டியவங்களுக்கு எல்லாம் மனு போட்டுப் பாத்தாச்சு. பாலம் மட்டும் வந்த பாடாயில்ல. அதுக்காக யாரும் கவலெபடுறதாயும் இல்ல. அந்த பாலத்துலயே ஸ்ப்ளெண்டரு வண்டிகளும், சி.டி.ஹண்டரட் வண்டிகளும், ப்ளாட்டின்னா வண்டிகளும், சைக்கிள்களும் ஏறிப் போயிட்டு இறங்கி வந்துட்டுத்தாம் இருக்கு. பாலத்துல போட்டுருக்குற பலகைகளும், மூங்கிலுகளும் ஒவ்வொண்ணா கழல ஆரம்பிச்சின்னா அதுக்காகவும் சனங்க கவலெ படுறதா தெரியல. ஒவ்வொண்ணா நாந் நீயின்னு போட்டிப் போட்டுக்கிட்டு அவித்து எடுத்துட்டுப் போயிடுதுங்க. தண்ணிப் போற ஆத்துல பாலம் போயிடுச்சேன்னு சனங்க எதுக்கும் யோசிக்காது. அதுங்க பாட்டுக்கு ஆத்துல வுழுந்து நனையாம எடுத்துட்டுப் போற சாமானுங்கள தலைக்கு மேல கைய நீட்டி அதுல எடுத்துக்கிட்டு அந்தாண்டயும் இந்தாண்டயும் யாத்திரையப் போயிட்டுத்தாம் கெடக்குதுங்க.
            மழைக்காலம் வந்தா சேத்துல வுழுந்து எழுந்திரிச்சி சேத்துல பூட்ஸ்கால்ல போட்டுகிட்டு நடக்குறதும், ஆத்துல தண்ணி வந்துப்புட்டா பாலம் இருந்தாலும் சரித்தாம் இல்லாட்டியும் சரித்தாம் அதுல வுழுந்து எழுந்திரிச்சி எழும்புறதும் இங்க இருக்குறவங்களுக்கு சகஜமாப் போயிடுச்சு. அது பத்தின பிரக்ஞைன போயி நாளாச்சுது.
            காலையில எட்டு இருவதுக்குத் திட்டையிலேந்து சைக்கிள எடுத்தான்னா விகடு எட்டு நாப்பதுக்குல்லாம் கோட்டகம் பள்ளியோடத்துல போயி நின்னுடுவாம். இது கோடைக்காலத்துக்கு. மழைக்காலம்னா காலையில எட்டு மணிக்கெல்லாம் நடையக் கட்டிடுவாம். கைலிய கட்டிக்கிட்டு, பைக்குள்ளயே பேண்ட்டை வெச்சிக்கிட்டு நடந்தான்னா நடந்துப் போயி கோட்டகத்துக்குச் சேர்றதுக்கு எட்டே முக்காலுக்கு மேல ஆயிடும். பள்ளியோடத்துக்கு ஒரு தெருவுக்கு மின்னாடியே இருக்குற பைப்புல சேத்தையெல்லாம் நல்லா அலம்பிக்கிட்டுப் பள்ளியோடம் போயி கைலிய அவுத்துப்புட்டு பேண்டைப் போட்டுக்கிறது. முட்டிக்குக் கீழே வரைக்கும் சேத்த அள்ளிப் பூசுற பூமியில பேண்டைப் போட்டுக்கிட்டு நடக்க முடியாதுன்னு அப்பிடி ஒரு ஏற்பாடு.
            இதென்ன கைலிய அவுத்துப்புட்டு பேண்டை மாட்டிக்கிட்டு செரமமா இருக்கேன்னு வேட்டியக் கட்டிட்டுப் போனாக்கா வெள்ளை வேட்டியில அங்கன இங்கனன்னு எங்காச்சிம் சேத்து கறைப் பட்டு அதெ தொவைச்சி கறைய எடுக்குறதுக்குள்ள பெரும்பாடா போறதால இதுக்குன்னே ஒரு கைலிய எடுத்து வெச்சிக்கிட்டுப் போவ ஆரம்பிச்சாம்.  எந்நேரத்துக்கும் பள்ளியோடம் எடுத்துட்டுப் போற பையில ஒரு கைலிய எடுத்து வெச்சிப்பாம். சில மழை நாட்கள்ல நாலு நாளைக்கு நல்லா வெயிலு அடிக்குதுன்னு பள்ளியோடத்துக்குச் சைக்கிள எடுத்துட்டுப் போனாக்கா, பள்ளியோட போற வரைக்கும் சும்மா இருந்த வானம் போனதுக்குப் பிற்பாடு மழைய கொட்டோ ‍கொட்டுன்னு கொட்டி துவம்சம் பண்ணிப்புடும். அது மாதிரியான நாட்கள்ல எடுத்துட்டுப் போன சைக்கிள சாயங்காலத்துல பள்ளியோடத்துலயே போட்டுட்டு, பேண்டை அவுத்துப்புட்டுக் கைலிய கட்டிக்கிட்டு நடைய கட்டிப்புடுவாம் விகடு.

            ஆரம்பத்துல புள்ளைங்க இவ்வேன் வர்றதப் பாத்துட்டுப் பெறவுதாம் பல்ல வெளக்கிக்கிட்டு, ஆத்துல வுழுந்து குளிச்சிப்புட்டு, வூட்டுல சாப்பாடு இருந்தா தின்னுபுட்டு, இல்லன்னா வெத்து வவுத்தோட பத்து மணி வாக்குல, பதினோரு மணி வாக்குல பள்ளியோடத்துக்கு வரும்ங்க. இப்படியும் ஒரு பள்ளியோடம் இருக்குமான்னு கேட்டாக்கா... அப்பிடித்தாம் இருந்துச்சு கோட்டகம் பள்ளியோடம். அது ஏன்னா கேட்டாக்கா... இந்த ஊராட்சி ஒன்றியத்துல கோட்டகம் பள்ளியோடங்றது ஒரு பனிஷ்மெண்டு பள்ளியோடம். நான் இந்த ஊரப் பத்திச் சொன்னப்பவே இந்த கிராமமே பனிஷ்மெண்டு கிராமம்னு ஒங்களுக்குப் புரிஞ்சிப் போயிருக்கும். பெறவு பள்ளியோடத்தப் பத்தி என்னத்தெ சொல்ல! இந்தப் பள்ளியோடத்துக்கு விகடு வந்த கதையெ சொல்லல பாருங்க.
            திருவாரூ மாவட்டத்துல இருக்குற மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரோட ஆபீஸ்ல வேலைக்கான ஆணைங்க தயாராயிட்டு இருக்குறப்போ சங்கத்து ஆளுங்களோட போயிருக்காரு விநாயகம் வாத்தியாரு. வூட்டுக்குப் பக்கத்துல போயிட்டு வர்றாப்புல விகடு பயலுக்கு ஒரு பள்ளியோடம் இருந்தா தேவலாம்னு அவரு ஆளங்கள வெச்சி முயற்சிப் பண்ணாக்கா, ரோட்டுப்பாக்கமா இருக்குற அத்தென பள்ளியோடங்களும் அவுங்க சிபாரிசு, இவுங்க சிபாரிசுன்னு யாரு யாருக்கோ நிரம்பிப் போயிடுச்சு. கோட்டகம் பள்ளியோடம் ஒரு வகையில பனிஷ்மெண்ட் பள்ளியோடங்றதால யாரும் அந்த பள்ளியோடத்துக்கு ட்யூட்டி கேக்கல. அந்த ஒரு பள்ளியோடத்த தவுர மித்த மித்த ட்யூட்டிப் போடுற பள்ளியோடங்க எல்லாம் ரொம்ப தூரத்துல இருந்திருக்கு. இதெ பாத்துப்புட்டு விநாயகம் வாத்தியாரு விகடுவோட செல்போனுக்கு போனைப் போட்டுப் பேசுனாக்கா, இவ்வேன் இருந்த வெசனகடுப்புக்கு போனைக் கொண்டு போயி சுப்பு வாத்தியார்ட்ட கொடுத்து எதாச்சும் பேசிக்குங்கங்ன்னு இருந்துட்டாம்.
            விநாயகம் வாத்தியாரு போன்ல கோட்டகம் பள்ளியோடம்தான் பக்கத்துல இருக்குன்னு சொல்லிருக்காரு. அதுக்கு சுப்பு வாத்தியாரு,  "வூட்டுக்குப் பக்கமா போவுது! சைக்கிள்ல போனாக்கா கால் மணி நேரத்துல போயிடலாம். நடந்து போனாக்கா அரை மணி நேரத்துல போயிடலாம். நல்லதாப் போச்சுது. நம்ம சங்கத்து ஆளுங்ககிட்ட சொல்லி அந்த எடத்தையே எடுத்துப்புடுங்க!"ன்னு சொல்லிருக்கிறாரு.
            அப்பவும் விநாயகம் வாத்தியாரு, "அந்தப் பள்ளியோடம் மழைக்காலத்துல போயிட்டு வர்ற கொள்ள செரமமாவுது. அந்தப் பள்ளியோடத்து ஹெட் மாஸ்டரு வேற சரியில்ல. வேற எடம் பாத்துப்போம். கொஞ்சம் தூரமா இருந்தாலும் பரவாயில்ல!"ன்னுருக்காரு.
            அதுக்குச் சுப்பு வாத்தியாரு, "இந்தப் பயெ அந்த மாதிரி பள்ளியோடத்துல போயி வேல பாத்தாத்தாம் செரிபட்டு வருவாம். அந்த மாதிரி பள்ளியோடத்துல வேலயும் பாக்கணும். நல்லா இருக்குற பள்ளியோடத்துக்கு யாரு வேணாலும் வேலைக்கி வருவாங்க போவாங்க. இந்த மாதிரி பள்ளியோடத்துக்குத்தாம் வர மாட்டாங்க. வந்தாலும் அங்க இங்க பாத்து நாலே மாசத்துல மாத்தல வாங்கிட்டுப் போயிட்டே இருப்பாங்க! இல்லாட்டி லீவு அடிச்சி வுட்டுப்புட்டு உக்காந்துப்புடுவாங்க. அவ்வேம் வேல பாக்க வேண்டிய பள்ளியோடமே அதாம்! எப்பிடியாச்சும் அந்த பள்ளியோடத்துல நம்ம பயல திணிச்சிப்புடுங்க!"ன்னு சொல்லிருக்காரு.
            "ம்ஹூம்! அந்தப் பள்ளியோடத்துல யார்ரப் போயி திணிக்கிறதுன்னு இஞ்ஞ யோஜனெ ஓடிட்டுக் கெடக்கு. இதுல நம்ம சங்கத்து ஆளுங்கள வெற வெச்சி சொன்னா சிரிப்பா சிரிச்சிப் போயிடும். அந்த எடத்துக்கு அவ்வேம் விகடுவ போடுங்கன்னா மவராசனா போட்டுக் கொடுத்துட்டு தாரை தப்பட்டைய வெச்சி பரிவட்டமே கட்டி அனுப்பிச்சி வுடுவாங்க!"ன்னுருக்காரு விநாயம் வாத்தியாரு.
            "ரொம்ப நல்லதாப் போயிடுச்சி. நம்ம ஆளுங்க சிபாரிசு இல்லாமலே காரியம் ஆன வரைக்கும் சந்தோஷம். அவுங்களுக்கும் ஒரு வேல மிச்சம். அஞ்ஞயே பயல போடச் சொல்லிப்புடுங்க பாத்துப்பேம்!" அப்பிடின்னிட்டாரு சுப்பு வாத்தியாரு. இப்பிடித்தாம் கோட்டகம் பள்ளியோடத்துக்கு வாத்தியாரானாம் விகடு.
            இப்போ காலையில இவ்வேன் எட்டே முக்கால் வாக்குல பள்ளியோடம் வர்றதப் பாத்துப்புட்டு, புள்ளைங்க எட்டரைக்கெல்லாம் பள்ளியோடம் வர்ற ஆரம்பிச்சிட்டுதுங்க. பள்ளியோடத்துக்கு வெளியிலயே நின்னுகிட்டு வாத்தியாரு வர்றதெ பாத்துக்கிட்டு நிக்குற புள்ளைங்க, விகடு சைக்கிள்ல வர்றதப் பாத்துட்டா போதும் சைக்கிள நோக்கி ஓடியாந்து, சைக்கிளுப் பின்னாடியே ஓன்னு சத்தத்தத போட்டுட்டு ஓடியாறுதுங்க. சொன்னா கேக்காதுங்க. பள்ளியோடத்துக்கு மின்னாடியே சைக்கிள நிப்பாட்டிப் புடணும். அதெ ஒரு பயெ புடுங்கிக்கிட்டு பள்ளியோடத்துக்குள்ள தள்ளுவாம். இன்னொரு பயலோ, பொண்ணோ ஓடியாந்து சைக்கிள்ல மாட்டியிருக்கிற பைகள தூக்கிக்கிட்டு உள்ளார ஓடும். பள்ளியோடத்த ஆரம்பிக்கிற வரைக்கும் அதுகளோட ராஜ்ஜியமாத்தாம் இருக்கும் பள்ளியோடம் ஆரம்பம் ஆனாத்தாம் புள்ளைங்க ஒரு கட்டுக்குள்ள வரும்.
            ஒம்போது மணிக்கு வுட்டு வுட்டு பத்து தடவெ பெல்லை அடிக்க வைப்பாம் விகடு. அதுக்குள்ள பள்ளியோடத்து ஒரு சுத்து சுத்தி வந்து, நாலு புள்ளைங்களோட சேந்துகிட்டு ஒரு வட்டாவுலயும், நாலு வாளியிலயும், ஒரு குடத்துலயும் தண்ணிய கொண்டாந்து வெச்சிடுவாம். தண்ணிக்காக புள்ளைங்க வெளியில இருக்கற பைப்புக்கு ஓடக் கூடாதுங்றதுக்காக இந்த ஏற்பாடு. அந்த பைப்பு பள்ளியோடத்துலேந்து ஒரு தெரு தள்ளி இருக்குல்லயா. தண்ணிக்காக புள்ளைங்கள வெளியில வுட்டாக்கா அதுங்க பாட்டுக்கு வூட்டுக்கும் ஒரு ஓட்டமா ஓடிப் போயிட்டு அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ கழிச்சித்தாம் வரும்ங்றதால இந்த ஏற்பாடு.
            ஒம்போது இருவதுக்கு கடகடன்னு பிரேயரு பெல்ல அடிச்சா எல்லா புள்ளைங்களும் இப்போ சரியா வந்துப்புடுதுங்க. ஒண்ணாப்புலேந்து அஞ்சாப்பு வரைக்கும் முப்பத்தெட்டு புள்ளைங்க.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...