22 Jan 2020

அடிச்சுத் தொரத்து ஆள!



செய்யு - 335

            முன்ன மாதிரி மனசு குதியாளம் போடுறதும், அப்பிடிக்கு இப்பிடி தாவுறதும், இப்பிடிக்கு அப்பிடித்  தாவுறதும் நின்னு போச்சு விகடுவுக்கு. மின்னாடியெல்லாம் ஒரு பிரச்சனைன்னா உலையில போட்ட அரிசியா அங்கிட்டும் இங்கிட்டுமா அலையுற அவனோட மனசு இப்போ அகண்டுப் போச்சு. மனசு ஸ்திரமா நிக்க ஆரம்பிச்சிது. இதாங் பிரச்சனை, அதுக்கு இதாங் தீர்வு, அதுக்கு மேல இதுல யோசிக்க ஒண்ணுமில்லங்றது போல சிந்திக்க ஆரம்பிச்ச பெறவு அவனெப் பத்தி இனுமே பேச என்ன இருக்கு? ஒண்ணுமில்லத்தாம். ஆனா, அதுக்குப் பெறவு சில சம்பவங்கள் நடந்துப் போச்சுது ஒரு சினிமாவுக்கு கிளைமாக்ஸ் இருக்குமே அதெ போல. அதெ பத்தி பேசாம இருக்க முடியாது. அதெ பேசித்தான ஆவணும்.
            மாலிக் ரெண்டு நாளு இவனுக்கு யோசிக்க அவகாசம் கொடுத்திருந்தார்ல. அந்த ரெண்டு நாளும் மனசுல எதாச்சிம் மாத்தம் வருதான்னு அவனும் யோசிச்சுத்தாம் பாக்குறாம். ஒண்ணும் வர்ற பாடா தெரியல. மனசு சிந்திக்கிறதெ வுட்டுப்புட்டான்னு அவனுக்கே சந்தேகமாப் போயிடுச்சி. இந்த ரெண்டு நாளும் பேருக்கு ஆபீஸூ வந்து உக்கார்றது. ஒரு மணி நேரம் ஆச்சுன்னா கெளம்பிப் போறதுன்னு போயிக்கிட்டு இருந்தான். மூணாவது நாளு ஆபீஸோட சாவிக் கொத்த கொண்டு போயி மாலிக்கிட்ட கொடுத்தாம். வேற ஒண்ணும் பேசல.
            "முடிவே பண்ணிட்டியா?"ங்றாரு மாலிக்.
            அதுக்கும் அவ்வேம் ஒண்ணும் பேசல.
            "நம்மள நட்டாத்துல வுட்டுப்புட்டு போறேடா!"ங்றாரு மாலிக்.
            அதுக்கும் ஒண்ணும் பேசாமத்தாம் நிக்குறாம்.
            "உக்காரு!"ங்றாரு மாலிக் இப்போ.
            பெரம்பு நாற்காலியில உக்கார்றாம் விகடு.
            பெரம்பு டீப்பாயில ரோஸ் மில்க்க கொண்டாந்து வெச்சிட்டுப் போறாங்க ஆயிஷா நாச்சியா. அதெ குடிங்ற மாதிரி கண்ண காட்டுறாரு மாலிக். அப்பிடிக் காட்டிக்கிட்டே குஞ்சு கவுண்டருக்குப் செல்போன போடுறாரு. மாலிக்குகிட்டே செல்போன்ன பேசுறதுல ஒரு கொணம் என்னான்னா ஸ்பீக்கர்ல போட்டுத்தாம் பேசுவாரு. கேட்டாக்க சமயத்துல பேசுறவங்க குரலு சரியா வுழுந்து தொலைய மாட்டேங்குது, சிக்னலு வேற அப்பைக்கப்போ சொணங்கிப் போயிடுதும்பாரு.
            "நாம்ம கூத்தாநல்லூர்லேந்து மாலிக் பேசுறேம். இஞ்ஞ ஒங்க ஆளு ஆபிஸ வுட்டுப் போவணும்னு கெதியா நிக்குறாம். நமக்கு ன்னா பண்றதுன்னு ஒரே கொழப்பமா இருக்கு!"ங்றாரு மாலிக்.
            "அடங் கொன்னியாம்! வுடு கழுதே! நல்லதாப் போச்சு!"ன்னு சொல்லிட்டுச் சிரிக்கிறாரு குஞ்சு கவுண்டரு.
            "ன்னா இப்பிடிச் சொல்லுதீரு? ஒங்களுக்காக ஞாயமா ஒழைச்சப் பெய அவ்வேம். போவணும்னு நிக்குறாம்னு சொல்றேம். அவனெ தடுத்து நிப்பாட்டா ஒரு யோஜனையெ சொல்லுவீயேள்னு பாத்தாக்கா அவ்வேம் எப்போ இதெ வுட்டுக் கழண்டு போவானுன்னு காத்திட்டு நின்னது போலல்ல பேசுறீயே?"ங்றாரு மாலிக்.
            "இப்போ இன்னிய தேதிக்கு தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட பிராஞ்சுக நூத்து இருவது ஆயிருக்கு. இதுல நம்ம கண்டிஷனே இல்லாம நடக்குற ஒரே பிராஞ்சு அவ்வேம் பண்ணிட்டு இருக்குற பிராஞ்சுத்தாம். அப்பிடில்லாம் யேவாரம் பண்ணக் கூடாதல்லோ. மொறதல தெரியாத பயெ. சொன்னாலும் கேக்குறதில்ல. முந்நூத்து எம்பது சொச்சம் கிளையண்ட்ஸ வெச்சிக்கிட்டு ன்னா மசுத்தப் புடுங்குறாம் அவ்வேம்? திருவாரூரு பிராஞ்சுலயே அம்மாம் போரு கெடையாது நூத்து பத்து சொச்சம்தாம். அதெ வெச்சிக்கிட்டு என்னமா யேவாரம் பண்ணணுங் தெர்யுமோ? ஒலகம் தெரியாத பயெ. அவனும் சம்பாதிக்கலெ. நம்மளயும் சம்பாதிக்க வுடல. முந்நூத்து எம்பது பேருக்கு அவ்வேம் மாசம் சம்பாதிச்சுக் கொடுக்குற கமிஷனும் ஒண்ணுத்தாம், திருவாரூ பிராஞ்சுலேந்து வர்ற கமிஷனும் ஒண்ணல்லோ. இத்துல அவ்வேம் போறேம்ன்னா சனியேம் தொலைஞ்சிதுன்னுத்தாம் நெனைச்சிப்பேம். மொதல்ல கழட்டி வுட்டுப்புட்டு மறுவேல பாப்பேம். அக்ரிமெண்டு பிராஞ்சைஸூல்லாம் அவுங்க யம்மா பேர்ல போட்டிருக்காம்னு நெனைக்கிறேம். பேசி முடிச்சிப்புடலாம். பிராஞ்சைஸ்ஸ நீஞ்ஞ எடுத்துக்கிட்டாலும் செரித்தாம், இல்லே நம்மோட பிராஞ்சு ஆபீஸ்ஸா மாத்திகிட்டாலும் செரித்தாம் எப்பிடி வாணாலும் பண்ணிக்கிடலாம். ஒரு நல்ல சேதி சொல்லிருக்கீயே! இஞ்ஞயிருந்தே சர்க்கரெயே அள்ளி வாயில போடுறேம்னு நெனைச்சுக்கோங்க!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.

            "நீஞ்ஞ பேசுறது மொறையில்லே. ஏத்தோ நெலமெ சரியில்லாம அவ்வேம் இதெ வுட்டுப்புட்டுப் போறதாச் சொல்றாம். நீஞ்ஞல்லாம் பேசி செரி பண்ணி வுடணும்!"ங்றாரு மாலிக்.
            "என்னத்தெ சரி பண்றதாக்கும்? அவ்வவ்வேம் சுழியாக்கும் இதல்லாம். இதுல நாம்ம ன்ன பண்றது? ஒஞ்ஞ கூத்தாநல்லூரு பிராஞ்சு இருக்கே, அத்து பொன்முட்டைப் போடுற வாத்து. அதெ வெங்கல முட்டைப் போடுற வாத்தா வெச்சிருக்காம் வெனை தெரியாத வெங்காரிப் பயெ! ஒரு மீட்டைப் போட்டேன்னாக்கா சம்பாதிக்குறதுல கூத்தாநல்லூரு பிராஞ்செ நம்பர் ஒன் பிராஞ்சா மாத்திப்புடுவேம்ல்லோ. இதுல ஒங்களுக்கு ன்னா பெரச்சனெ? இத்தெ வுட்டுப்புட்டு அந்தப் பயெ சோத்துக்கு சிங்கியடிக்கப் போறானாக்கும்? போறான்னா போவோட்டும். அடிச்சுத் தொரத்து ஆள!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            "யில்லே! அவனுக்கு கவர்மெண்டு உத்தியோவம் தாக்கலாகப் போவுது. அதாங்."ங்றாரு மாலிக்.
            "அத்து செரி! கவர்மெண்டு உத்தியோவம் தாக்கலாயிருக்குறப் பயலெ நாம்ம இஞ்ஞ வெச்சிக்கிட்டு ன்னா பண்றதாக்கும்? போயித் தொலையட்டும். அத்தோட ஒழிஞ்சுத் தொலையட்டும். பிராஞ்சாவது உருப்போட்டுத் தொலையட்டும். அவனுக்குல்லாம் அதாங் லாயக்கு. பொழைக்கத் தெரியாத பயெ அஞ்ஞ கெடந்தாத்தாம் செரி. மாசக் காசிய வாஞ்ஞி நக்கித் தின்னு தொலையோட்டும்!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            "அவ்வேம் போயிட்டா நாம்ம இஞ்ஞ பிராஞ்ச எப்பிடிங்க கவுண்டரே நடத்துறது?"ங்றாரு மாலிக்.
            "இத்து கேள்வி. இப்பிடில்லா கேக்கோணும். இதுக்கு அந்த லெனினு பயெத்தாம் சரிபெட்டு வருவாம். அவனெ தூக்கி இஞ்ஞ மானேஜரா போட்டுப் போடுவேம். நாம்ம திருவாரூ பிராஞ்சுக்கு வேற ஆளெ மேனேஜரா ஏற்பாடு பண்ணிக்கோணும். அதெ நாம்ம பாத்துக்குறேம். கம்ப்யூட்டரு தெரிஞ்ச ஒரு ஆம்பளெ பயலயும், ஒரு பொட்ட குட்டியையும் போட்டுட்டா போச்சல்லோ. ஆபீஸூ பாட்டுக்கு ஆபீஸூ. கமிஷன் பாட்டுக்குக் கமிஷன். சொகமால்லோ ஓடும்."ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            "ஒண்ணும் பெரச்சனை அது இதுன்னு..." இழுக்குறாரு மாலிக்.
            "அவ்வேம் லெனினு இவ்வனெ வுட எக்ஸ்பீரியன்ஸாக்கும். இவ்வேம் ன்னா நேத்து வந்த பயெ. அவ்வேம் இதுலயே கெடந்து ஊறுனவ்வேம். அது கெடக்குது அந்தாண்ட. ஆபீஸ்ஸூ பிராஞ்சைஸ்ஸ நீஞ்ஞ மாத்திக்கிறிகளாக்கும்? யில்லே நாம்ம பிராஞ்சாபீஸ்ஸா போடுறதாக்கும்? இதுக்குப் பதிலெ மொதல்ல சொல்லுங்கோ? நாளைக்கி ரித்தேஸ்ஸ வந்துப் பாக்கச் சொல்றேம்."ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            "யோஜித்துத்தாம் சொல்ற மாரி இருக்கு. நாம்ம கொஞ்சம் குடும்பத்துல கலந்துக்கிட்டாவணும்!"ங்றாரு மாலிக்.
            "நல்லா யோஜிக்கோங்க. நல்லா கலந்துக்கோங்க. எந்தப் பதிலுன்னாலும் நமக்கு செரித்தாம். ஆபீஸூ இப்போ தொறந்திருக்கா? பூட்டுப் போட்டு மூடிருக்கா? ஒடனே சொல்லிப் போடுங்க! நாம்ம லெனின் வாரச் சொல்றேம்! யேவார நாள்ல ஆபீஸ்ஸ மூடிக் கெடக்கக் கூடாதுங்கோ! வார்ற லெட்சுமி வாராம போயிடுவா! செரி அந்தப் பயலே எங்கிட்டப் பேசச் சொல்லுங்கோ!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            "இஞ்ஞ பக்கத்துலத்தாம் இருக்காம். போனெ கொடுக்கவா?"ங்றாரு மாலிக்.
            "அந்தப் பயலே பக்கத்துல வெச்சிக்கிட்டுத்தாம் பேசுறீயளாக்கும்? நாம்ம பேசுனது அவ்வேம் காதுல வுழுந்திருக்குமாக்கும்! வுழுந்தா வுழுந்துட்டுப் போவட்டும். ஆபீஸ்ஸ வுட்டுப்புட்டு ஓடப் போற பயத்தானே. கொடுங்க போனெ அவ்வேங்கிட்டே!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            மாலிக் போனைக் கொடுத்ததும் விகடு, "வணக்கங்கய்யா! விகடு பேசுறேம்!"ங்றான்.
            "இந்த கருமத்துக்கெல்லாம் ஒண்ணுங் கொறைச்சலு இல்ல. ஏம்டா ஆபீஸ்ஸ வுட்டுப் போவப் போறேம்னு அலம்ப கட்டி அடிக்கிறீயாம், சலம்புலு வுட்டுப்புட்டுத் திரியுறீயாம்? ஏம்டா ன்னடா மெரட்டலு வுடுறீயாக்கும்? ஒன்னய வுட்டா ஆபீஸ்ஸ நடத்த முடியாதுன்னு நெனைச்சப்புட்டியாக்கும்? என்னம்டா நெனைச்சிட்டு இருக்கறே ஒன்ற மனசுல? என்னம்டா பெரச்சனெ ஒனக்கு?"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            "வேல தாக்கலு ஆவப் போவுதுங்கய்யா கவருமெண்டுலேந்து. வூட்டுல ஆபீஸ்ஸ வாணாங்றய்யா!"ங்றான் விகடு.
            "அதாங் இம்மாம் தெனாவெட்டா பேசுறீயாக்கும்? அப்பிடி உள்ள பயெ எதுக்குடா அக்கிரிமெண்டு போட்டு ஆபீஸ்ஸ எடுத்‍தே? இப்பிடிப் பாதியிலயே வுட்டுப்புட்டு ஓடவாக்கும்? ஏம்டா கவர்மெண்டு வேலக்காரனா போவப் போறவனாடா நீயி? செரி போயித் தொலைஞ்சிக்கோ. அக்ரிமெண்ட ன்னா பண்றதா உத்தேசம் பண்ணியிருக்கோடா? அதெச் சொல்லுடா மொதல்ல."ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            "ஒங்க இஷ்டம் போல பண்ணி வுடுங்கய்யா!"ங்றான் விகடு.
            "பாதியில வுட்டுப்புட்டு போனா ன்னா அர்த்தம்? ஒரு கிளையண்டுக்கு ஆயிரத்து மசுரெயெல்லாம் கணக்குப் பண்ணிக் அழுவ முடியாது பாத்துக்கோ. அதுல பாதி தலைக்கு ஐநூத்துத்ததாம் தருவேம். அத்தே வாங்கிட்டுப் போறதுன்னா போ. யில்ல ச்சும்மா போயிக்கோடா!"ங்றாரு குஞ்சு கவுண்டரு.
            விகடு எதாச்சிம் பதிலச் சொல்லுவாம்னு எதிர்பாக்கறாரு குஞ்சு கவுண்டரு. அவ்வேம் பதிலேதும் சொல்லாம அப்பிடியே இருக்காம்.
            "ன்னடா இத்து பேச்சு மூச்சக் காணோம்? அதாங் அதுக்கு மேல ஒத்த பைசாவ எதிருபாக்காதே. ஒஞ்ஞ யம்மாள கூப்டாந்து அக்கிரிமெண்ட முடிச்சு வுட்டு மாத்தி வுட்டுப்புட்டுப் போ! நமக்கு வேற சோலி கெடக்குடா. ‍வைக்குறேம் போனெ!"ன்னு சொல்லிட்டு வெச்சிடுறாரு குஞ்சு கவுண்டரு.
*****


No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...