22 Jan 2020

30.2



            கடைசியாக விகடு பேச அழைக்கப்படுகிறான். கூட்டம் அதன் நிறைவைத் தேடிக் கொண்டிருக்கிறது. இரவு சொட்டு சொட்டாய்ச் சொட்டித் தன்னை விடிய வைப்பதற்கான பிரயத்தனத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. அது நீண்ட நேரம் ஒழுகி நடுராத்திரியைக் கடந்திருக்கிறது. கடைசியாகப் பேசும் ஆட்கள் பிரபலமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பேசாமல் முடிவதில் கூட்டத்திற்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது. ஆனால் வில்சன் அண்ணன் உறுதியாக இருக்கிறார், விகடு பேசிய பிறகுதான் கூட்டம் முடிய வேண்டும் என்பதில்.இந்தக் கூட்டங்களில் அவன் கூட்டாஞ்சோறு மாதிரியான ஒரு பேச்சு நடைக்கு மாறியிருக்கிறான்.

            "கட்டணும் என்பதால்தான் கட்டணம். கட்டாயமாக கட்டி ஆக வேண்டியிருப்பதாலும் அது கட்டணமாக ஆகியிருக்கலாம்.
            பேருந்துக் கட்டணம், பால் கட்டணம் என்று இப்போது மின் கட்டணம். இவைகளெல்லாம் எவ்வளவு என்றாலும் வேறு வழியில்லை, கட்டித்தான் ஆக வேண்டும். அதுதான் கட்டணம். அதோடு ஆஸ்பிட்டல் செலவும் சேர்ந்து விட்டால் அது விஷேஷ கட்டணம்.
            ஆஸ்பிட்டல் என்றால் உடனே ஸ்கேன் எடுக்க வேண்டும் என்கிறார்கள், ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஸ்கேன் பார்க்க ஒரு கட்டணம், பிரசர் பார்க்க ஒரு கட்டணம், எக்ஸ் ரே எடுக்க ஒரு கட்டணம், ஆபரேஷன் போட ஒரு கட்டணம், அதற்கு மயக்க ஊசி போட ஒரு கட்டணம் என்று எல்லாவற்றிற்கும் ஒரு கட்டணம். அந்தக் கட்டணங்களைக் கேட்க கேட்க மயக்க ஊசியைப் போடாமலே ஆபரேஷனைச் செய்யலாம் போலிருக்கிறது, கட்டணங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே மயக்கம் வந்து விடுகிறது.
            அது ஒரு சங்கதி என்றால், ஆஸ்பிட்டலுக்குப் போய் பெரிய அளவில் செலவு பண்ணாமல் வந்தால் நம் மக்களுக்கும் என்னவோ போல ஆகி விடுகிறது. ஒரு திருப்தி இல்லாமல் போய் விடுகிறது. "போன மாசந்தாம் எங்க அத்தை மவனுக்கு கை ஒடைஞ்சுப் போச்சுன்னு எழுபதாயிரம் செலவு பண்ணி ஆபரேஷன் பண்ணோம், போன வாரந்தாம் எங்க பெரியப்பாவுக்கு சுகருன்னு கால் விரலை எடுக்க இருபதாயிரம் செலவு பண்ணோம், நாலு நாளு இருக்கும் எங்க சின்னத்தாவுக்கு ஆஞ்சியோ பண்ணோம் ரெண்டு லட்சம் செலவு பண்ணி" என்று செலவு பண்ணி ஆபரேஷன் பண்ணுவதை ஒரு சமூக கெளரவம் போல சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
            போகிறப் போக்கைப் பார்த்தால் சுகருக்கு மாத்திரை போடாதவனும், பிரசருக்கு மாத்திரை போடாதவனும் கெளவரமில்லாத மனிதனாக ஆகி விடுவார்கள் போலிருக்கிறது. சாப்பிட்ட உடனே வெற்றிலைப் பாக்கு தாம்பூலம் தரிப்பதைப் போல மாத்திரைப் போடுவதைப் பெருமையாகக் கருதும் ஒரு சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை வேதனையாகப் பார்ப்பதா? சாதனையாகப் பார்ப்பதா? இல்லை சோதனையாகப் பார்ப்பதா என்ற குழப்பம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
            இது ஒரு வகை சமூக கெளரவம் என்றால் பெண் பிள்ளைகளைப் பெற்று வைத்திருப்பவர்களிடம் லட்சக் கணக்கில் செலவு செய்து நகை போட வைப்பதையும், சீர்சனத்திச் செய்ய வைப்பதையும், ஆடம்பரமாகக் கல்யாணம் செய்து கொடுக்க வைப்பதையும் அடுத்த சமூக கெளரவமாகவும், அதற்கு ஏற்றாற் போல டெளரி கேட்க வைப்பதையும் கண்டிப்பான சமூக கெளரவமாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
            ஒவ்வொரு பெண் பார்க்கும் படலத்திலும் கேட்கப்படும் டெளரிகள் வகை வகையானவை. வழங்கப்படும் பஜ்ஜிகளும் வகை வகையானவை பெண் பார்க்கும் படலத்திற்கென தயாரிக்கப்பட்டவை போல. வகை வகையான பஜ்ஜிகளை ரசிக்க முடிகிறது. டெளரி வகைகளைத்தாம் ரசிக்க முடியவில்லை. டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டூ வீலர் வரிசையில் கம்ப்யூட்டர் வரை வந்து நிற்கிறது டெளரியின் பட்டியல் கொண்ட சமூக கெளரவம். மகளின் கல்யாணத்துக்காக சம்பாதித்து மகளின் கல்யாணத்தில் சம்பாதிப்பதையெல்லாம் அழிப்பதாக இருக்கிறது மகளைப் பெற்றோரின் நிலைமை. பஜ்ஜி சாப்பிடுவதற்காகப் பிறப்பெடுத்து, பஜ்ஜியை ஊர் ஊராகச் சுற்றிப் பார்த்துச் சாப்பிட்டுக் கொண்டு அதற்கேற்ற சட்டினி இல்லை என்று அலுத்துக் கொள்வதாக இருக்கிறது மகனைப் பெற்றோரின் நிலைமை. பேசாமல் அந்தக் காலத்தில் இருந்ததைப் போல இளவெட்ட கல்லைத் தூக்கினால்தான் பெண், காளையை அடக்கினால்தான் பெண் என்ற நிலை திரும்பி வந்தால் தேவலாம் போலிருக்கிறது. ஒரு பெண்ணை ஆண் கட்டிக் கொள்வது என்பது அவ்வளவு சுலபமா என்ன? டெளரியைக் கொண்டு வந்து இளவெட்டக் கல்லைச் சுக்குநூறாக்கி, காளையைக் காயடித்து டெளரியைக் கெளரவமாக்கிக் கொண்டு அலைகிறது நம் அகெளரவமான சமூகம்! இப்போது நிலவி வரும் சமூக கெளரவங்களை அழிக்காமல் ஆண் - பெண் பாகுபாட்டையோ, சாதிய வேறுபாட்டையோ அவ்வளவு சீக்கிரத்தில் அழித்து விட முடியாது என்று நினைக்கிறேன். நேரம் கடந்து கொண்டிருப்பதால் இந்த அளவோடு நிறுத்திக் கொள்கிறேன்" என்று பேசி முடிக்கிறான் விகடு.
            "சரிதாம்! செலவு பண்றதுல கெளரவத்த தேடுற சமூகம்!" என்கிறார் தமிழய்யா. கூட்டம் முடிக்கப்படுகிறது. நள்ளிரவில் நீந்தி வீடு எனும் கரையை நோக்கி நீந்த ஆரம்பிக்கிறார்கள் கூட்டவாதிகள்.
            இனி நாம் அடுத்த ஆறாவது கூடலில் சந்திக்க இருக்கிறோம்.
... ... ... சந்திப்போம் ... ... ... ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ... ... ...
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...